இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
நவம்பர் 2010  இதழ் 131  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் ...
மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம் – (3 & 4 )

- வெங்கட் சாமிநாதன்


அத்தியாயம்
3

நினைவுகளின் சுவட்டில் ....  வெங்கட் சாமிநாதன்தமிழ் சினிமா உலகில் பெரிய மேதைகளாகக் கருதப்படுபவர்கள், விமர்சகர்கள், சினிமா ‘கலைஞர்’ கள், எல்லோரும் பேசுவதைக் கேட்கும் போது, அவர்கள் பேசும் வார்த்தைகளுக்கு நாம் புரிந்து கொள்ளும் அர்த்தம் ஒன்றாகவும், அவர்கள் தர நினைக்கும் அர்த்தம் முற்றிலும் வேறாகவுமே இருப்பது இப்போதெல்லாம் வெகு சகஜமாகிவருகிறது. என்னென்னமோ பெரிய பெரிய வார்த்தைகளில் ஒரு காரக்டரைப் பற்றி, மேதை மணி ரத்தினமும், விக்ரமும், அபிஷேக் பச்சனும் ரொம்பவும் சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு பேசினாலும், நமக்கு அடுத்துக் காட்டப்படும் காட்சி, உடம்பு பூராவும் மண்ணைப் பூசிக்கொண்டு, வெறிபிடித்தமாதிரி இருபது பேர் ஆடுவதைத் தான் நமக்குக் காட்டுகிறார்கள் இப்படி ஆடுவது ஒரு புத்தி பிறழ்ந்த மனிதக் கூட்டமாக்த் தான் இருக்கமுடியுமே தவிர, எந்த ஒரு குறிப்பிட்ட குணச்சித்திரமும் கொண்ட மனித ஜீவனாக இருக்க முடியாது. சினிமா பற்றி ஃபில்ம் இன்ஸ்டிட்யூட்டில் படித்து வந்துள்ள சுஹாசினி, எந்த ஒரு பட்த்தைப் பற்றிப் பேசும் போதும், அவர் அந்த படத்தில் வரும் பிரச்சினைகளையும் கதா பாத்திரங்களைப் பற்றிம் அவை எந்த வகைப்பட்டவை(genre) என்று வகைப்படுத்தலிலும் ரொம்ப சீரியஸாக பகுத்தாராய்வ தாகக் காட்டிக்கொண்டாலும், அடுத்து நமக்கு பார்க்கக் கிடைப்பது ஒரு கூட்டம் டான்ஸ் பண்ணுவதைத் தான். எப்போதுமே அப்படித்தான். அவர் விமர்சிக்கும் படத்தில் வரும் டப்பாங் குத்துக்கள் என்ன என்பதைக் காட்டினால் தான் அந்த படம் விலை போகும் என்று தான் எல்லோரும் நினைப்பதாகத் தோன்றுகிறது. அதை இவர்கள் பாஷையிலியே டான்ஸ் என்று தான் சொல்லவேண்டும். அது நடனம் என்றோ, நாட்டியம் என்றோ சொல்ல அருகதையற்றது. அருகதையுள்ளதோ அல்லவோ, அது என்ன குணச்சித்த்ரத்தை வெளிப்படுத்த் அல்லது நடக்கும் சம்பவத்திற்கான சம்பந்தத்தைச் சொல்ல வந்தது என்பது தெரியாது. திடீரென் முப்பது நாற்பது பேர் என்னவோ உடறபயிற்சி செய்வது போல தெருவை அடைத்துக் கொண்டு கூத்தாட்டம் ஆட ஆரம்பித்து விடுகிறார்க்ள். அதற்கு ரஹ்மான ’சார்’ இசை. வாலி ’சாரோ’ இல்லை, வைரமுத்து ’சாரோ’ பாடல், யாரோ பிருந்தாவோ அல்லது யாரோ, இவர்களுக்கு ’சாரும்’ இல்லை மேடமும் இல்லை, பெயரெல்லாம் யாருக்கு நினைவிலிருக்கிறது, அவருக்குக் கூட ஏதோ ராணி, கலை ராணியோ, அல்லது ஏதோ அரசியோ என்னவோ ஒரு பட்டம், அந்த அரசி/ராணி அம்மையாரின் நடனம்...சரி, இவர்களுக்கு என்ன ஆயிற்று, எல்லோருமே கூட்டாக் ஊமத்தங்காயைத் தின்று தொலைத்து விட்டார்களா என்று நமக்கு தோன்றும். இன்னொரு தொலைக்காட்சியில் அபிஷேக் ’சார்’ கேட்பார். அதற்கு பதில் அளிப்பவர், டைரக்டரோ இல்லை தயாரிப்பாளரோ தெரியாது, சொல்வார் அவர்: ”நம்ம கிட்ட ஒரு ப்ராஜெக்ட் இருக்கு. அதை மக்களுக்கு எடுத்துட்டுப் போகணும். அது முக்கியம். நம்ம கதையை வச்சிக்கிட்ட மக்கள் பாக்கலைன்னா அதிலே அர்த்தம் இல்லை. அதுக்கு மக்களைக் கவரும்படியா அதை மக்கள் கிட்டே எடுத்துட்டுப் போகணும்” என்றார். விஷயம் சந்தைக்கு சரக்கை தயார் செய்வது பற்றி அவர் பேசுகிறார். ஒரு மேதை கூட அந்த டான்ஸ்ங்கற சமாசாரம் எப்படி சினிமாவின் கதைக்கோ, குணச் சித்திர த்திற்கோ, உதவுகிறது என்பதையோ, எப்படி அது சம்பந்தமும் அர்த்த்மும் உள்ளதாகிறது என்பதையோ சொல்வதில்லை. .இது போலத் தான் ஒரு ஹீரோ பத்து பேரை விளாசித் தள்ளுவதும். இதில் ஒவ்வொருவராக முறை வைத்து அடிவாங்கிக் கொண்டு போவார்கள். அதுவும் ஒரு ச்ர்க்கஸ் வித்தை மாதிரி இருக்குமே தவிர நிஜ சண்டையாக இராது. பத்து பேர் இருந்தாலும், வாழ்க்கையில் நடப்பது போல எல்லோரும் சேர்ந்து ஹீரோவை ஒரே மொத்தாக மொத்திவிட்டு காரியம் முடிந்தது என்று போக மாட்டார்கள். ஒவ்வொருத்தரும் தனியாக வந்து தான் ஹீரோவுடன் மோதி அடி வாங்கிக்கொண்டு எங்கோ உருண்டு விழுவார். அதுவும் மிக அழகாக சர்க்கஸ் காட்சி மாதிரி ஆகாயத்தில் படுக்கைவாட்டில் உருண்டு கொண்டே விழுவார். நாம் அப்படி விழ்வும் மாட்டோம். விழுந்தால் எலும்பு முறிந்து தரையில் கிடப்போம். ஆனால் இவர்கள் மறுபடியும், மறுபடியும் ஹீரோவிடம் அடிவாங்கிக் கொண்டு சுருண்டு விழ்ப் போவார். எத்தனை நிமிடங்களுக்கு இந்த சண்டைக் காட்சி என்று முன்னதாகத் தீர்மானிக்கப் பட்டிருக்கிறதோ, அவ்வளவுக்கு இந்தக் காட்சி நீளும். இதெல்லாம் என்ன பேத்தல் என்று ஒருவர் கூட சினிமா உலகில், பத்திரிகை உலகில், கேட்டது கிடையாது. நம் உலக நாயகர்களும், சுப்ரீம் ஸ்டாரும், ஃப்ராங்க் பர்ட், இல்லை டோரண்டோ தெருக்களில் பித்துக்குளித் தனமாக டான்ஸ் பண்ணுவது அவர்களுக்கே வெட்கமாக இராதா? அங்கு பார்க்கிற வர்கள் இவர்களைப் பார்த்து எதுவும் சொல்லமாட்டார்கள் தான். ஆனால் கேலியாக சிரிக்க மாட்டார்களா? இவர்களுக்கு என்ன காக்கா வலிப்பா, இல்லை பைத்திய்மா? பைத்தியமானால் அவர்கள் வீட்டுக்குள் இருந்து கொண்டு அடுத்தவருக்குத் தெரியாமல் பாயைச் சுரண்டக் கூடாதா? இவ்வளவு பணம் செலவழித்து, இங்கு வந்து தான் இந்த கூத்து அடிக்கணுமா? என்று தம்க்குள் உதட்டில் கேலிப்புன்னகை வழிய பேசிக்கொள்ள மாட்டார்களா? சாதாரண பொதுப் புத்திக்கு இது ஏற்கிறதா? ஏன் நம் சினிமா சம்பந்தப்பட்ட எதுவும் பொதுப்புத்திக்கு ஏற்காத துமாக, பித்துக்குளித்தனமாகவுமே இருப்பது ஏன்? “ஓடினாள், ஓடினாள், வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்” என்ற 15 நிமிடமா, இல்லை அரை மணி நேரமா, வசனம் பேசி ஒரு புது திராவிட கழ்க மாடல் கோர்ட்டையும் விசாரணயையும் வாக்கு மூலங்களையும் தமிழ் சினிமாவுக்குக் கொண்டுவந்ததிலிருந்து அவ்வப்போது ந்ம் சினிமாக்கள் புதுப்புது ரக பித்துக்குளித் தனங்களையே முன் வைத்து அதைப் புரட்சிகர மாற்றங்கள் என்றும், நம் சினிமா பெரிய பெரிய மாற்றங்களைக் கொணர்ந் துள்ளதாகவும், நாம் தொழில் நுட்பத்தில் எங்கேயோ உச்சத்துக்குப் போய் விட்ட தாகவும் பெருமைப் பட்டுக்கொள்வ தெல்லாம், வேடிக்கையாகத் தான் இருக்கிறது. வித விதமான பித்துக்குளி த்தனங்களையே நாம் கண்டுபிடிப்பதில் முனைந்து வருவதாகத் தோன்றுகிறது.

நம் சினிமாவும், நம் கதைகளும், நம் சினிமா மனிதர்களும் ஏன் தம் இயலபில் இருப்பதில்லை?. ஏன் அவர்கள் நாம் அடையாளம் காணக்கூடியவர்களாக இருப்பதில்லை?. ஏன், என்ன செய்தாலும் என்ன பேசினாலும் பித்துக்குளிகளாகவே தம்மை ஆக்கிக் கொள்கிறார்கள்?

வேடிக்கை என்னவென்றால், எவரும் தாமாக்த் தம் இயல்பில் இருப்பதும், நம் வாழ்க்கையின் அர்த்தங்களைத் தேடுவதும், நம்மை நாமே கேள்விக்குள்ளாக்குவதும், வாழ்க்கையின் உண்மை யான், நம்மை வருத்தும் பிரசினைகளைச் சொல்வதும் இவர் களுக்கு சினிமா இல்லை இவர்கள் பார்வையில், இவையெல் லாம் ஆர்ட் சினிமா, விருதுக்காக எடுக்கப்படும் சினிமா, மக்களைப் பற்றிக் கவலைப்படாத, அவர்கள் சந்தோஷத்துக் கல்லாது, ரச்னைக்கல்லாது, தங்கள் மகிழ்ச்சிக்காக, தாமே படம் எடுத்து, தாமே பார்த்து திருப்திகொள்ளும் ரகங்கள் என்றெல்லாம் பேசப்படுகிற விஷயமாகிவிட்டது. இயல்பாக இருப்பது மக்கள் விரோதமான ஒன்றாகவும், இயல்பற்ற வேண்டுமென்றே செய்துகொள்ளப்படும் பித்துக்குளித்தனங்கள் தான் ரசிக்கத் தகுதியான விஷய்ங்கள் ஆகிவிட்டன. இதற்கு அரசியல் பிரசாரம், கோடிக்கணக்கில் செல்வழியும் பணம், பத்திரிகைகள், அறிஞர் குழாம் எல்லாம் ஏகோபித்து த்ம்மையும் ஏமாற்றிக்கொண்டு மக்களையும் சீரழித்த காரியமாகிவிட்டது, தொடர்ந்து ஒரே குரலில், செய்து வந்த ஒரே ரகப்பட்ட காரியத்தால்.

எல்லா ஊர்களிலும், இந்தியாவின் எல்லா பிராந்திய மொழி களிலும் இந்த ரக பைத்தியக்காரத்தனங்கள் நடந்து வருகிறது உண்மைதான். ஒரு காலத்தில் சாந்தா ராம் என்றால் என்னவோ ஏதோ என்று புகழ்ந்து பேசப்பட்டது. இன்று அந்த சாந்தா ராமை எந்த விவேகமுள்ளவனும் சினிமா என்று சொல்ல மாட்டான். ராஜ் கபூர் பேசப்பட்டது, செல்லுமிடமெல்லாம் பரவசப்பட்டுப் போனது வாஸ்தவம் தான். இன்று ராஜ் கபூர் ஒரு showman தான். வெறும் showman தான். இவையெல்லாம் ஒரு பக்கம் என்றும் நிரந்தரமாக வியாபாரமே குறியான ஒரு பிரவாஹமாக ஓடிக் கொண்டிருக்க, அதை ஒட்டி அதன் பக்கத்தில் சின்ன சின்ன ஓடைகளும் ஓடிக்கொண்டிருக்கின்றன தான். ஒரு சேகர் கபூர், ஒரு ஷாப்னா ஆஸ்மி, ஒரு ஷ்யாம் பெனெகல், ஒரு நாசருதீன் ஷா என்று. ஆனால் கலைஞர்கள் நிறைந்த தமிழ் நாட்டில் இங்கு ஓடுவது ஒன்றே ஒன்று தான் பெரும் பிரவாஹமாக. கூவம் மாதிரி. சூப்ப்ர் ஸ்டார், உலக நாயகன், இளைய தளபதி இத்யாதி எல்லாம் அந்த சிறிய பெரிய கூவத்தில் மிதப்பவர்கள தான். இவற்றிலிருந்து மாறி ஒரு வித்தியாசமான, தனித்து ஓடும் சிறு ஓடை கூட இங்கு கிடையாது. தோட்டா தரணி இங்கு ஒரு அர்த்தமற்ற படாடோபமான செட் போடத் தான் வேலைக்கு அமர்த்தப் படுவார். ஒரு ரஹ்மான் வெகு எளிய, காலகள் தாளம் போடுவதற்கேற்ற இசை அமைத்துத்தருவதாக இருந்தால் தான் கடை பரத்தலாம். வெகு எளிய சொறகளில் சொல்வதாக இருந்தால் எந்த பெரிய கலைஞனும் சொன்ன வேலையைச் செய்து தரும் ஒரு வேலையாளாகத் தான் சம்பளத்துக்கு அமர்த்தப்படுவார். அந்தத் தாளக் கட்டமைப்பு வேலை முடிந்ததும், ஒரு கவியரசர் அதற்கேற்ற பாட்டெழுதுவார். இந்த ரக வேலைகள் சமூக மதிப்பு பெறுவது அதன் உள்ளார்ந்த கலையால் அல்ல. அவை சந்தையில் பெறும் கோடிக்கண்க் கிலான சம்பளத் தால் தான். எல்லாம் சந்தையில் விலை போகும் கணக்கால் அளக்கப்படுகிறதே தவிர, சினிமா என்ற சாதனத்தைப் புரிந்து கொண்டதாலோ செயல்படும் தரத்தின் சிறப்பாலோ, அல்லது, சொல்ல வந்த வாழ்க்கை சுட்டும் அர்த்தத்தின் ஆழத்தாலோ, அல்ல்து கதையை நம் முன் காட்சிப்படுத்திய நடிகர்களின் இயக்குனரின் திறத்தாலோ அல்ல். இவை எதுவும் எப்படி இருந்தாலும் கவலை இல்லை. கடைசி யில் இவையெல்லாம் மக்களைப் போதைக்கு ஆளாக்கி, அவர்கள் துய்ப்பது கலை என்று ஏமாற்றி அவர்களை நம்ப வைத்து, எத்தனை கோடிகள் தம் முயற்சியில் அவர்களிடமிருந்து கறக்க முடிகிறது என்னும் கணக்கே, இதைக் கலையென்றும், மக்கள் ரசனை என்றும் விளம்பரப் படுத்திக் கர்வம் கொள்ளும் வழியையும் தீர்மானிக்கிறது. இது பங்குச் சந்தையில் ஆடும் சூதாட்டம் போலத் தான்.

இன்று இரண்டு செய்திகள், இரு வேறு தரப்பிலிருந்து: ஒன்று, பத்திரிகைகள் கொணர்ந்த செய்தி. கர்நாடகாவில் திரையிடப் படும் வேற்று மொழிப் படங்கள கன்னடப் படங்கள் தோல்வி யடைகின்றன என்று வேற்று மொழிப்படங்கள் திரையிடப் படுவதை மட்டுப் படுத்த கர்நாடக திரையுலகம் முயல்கிறது. இதற்கு முன்னாள் கர்நாடக முதல் அமைச்சர் குமாரஸ்வாமி மறுப்பு தெரிவித்துச் சொல்கிறார். கன்னட படங்கள மற்ற மொழிப்படங்களை விட தரம் தாழ்ந்து இருப்பதால் தான் அவை மக்கள் ஆதரவைப் பெறவில்லை. தரமான கன்னட பட்ங்கள் தயாரியுங்கள். மக்கள் ஆதரவு பெறும். என்று மற்ற மொழிப்படங்கள் தடை செய்யப்படுவதை எதிர்த்திருக்கிறார். கன்னட படத் தயாரிப்பாளர்களின் தடையோ கலப்படமற்ற மொழி வெறியில் பிறந்தது, குமாரஸ்வாமி அதைக் கண்டனம் செய்தது சரி என்று வரவேற்றாலும் அவர் படங்களின் தரம் பற்றிப் பேசியது வேடிக்கை.

வாஸ்தவம் பெரும்பாலான் கன்னட படங்கள் தமிழ்ப்படங்கள் மொத்தத்தையும் போலவே தரம் தாழ்ந்தவை தான் என்றாலும், அங்கும் நம்மூர் சிவாஜி கணேசன், அச்சில் ஒரு ஜூனியர் சிவாஜி யாக, ராஜ் குமார் கோலோச்சினாலும், இந்த காரிருளிலும் மின்னல் கீற்றுக்களாக கிரீஸ் காஸரவல்லி, கிரீஷ் கர்னாட், பி.வி.காரந்த் போன்றோர் தனித்து இயங்க முடிகிறது, கன்னட திரை ப்படத்தை உலக அரங்கிற்கு கொண்டு செல்ல முடிந்தி ருக்கிறது. தமிழ் நாட்டின் திரை உலகம், வெறும் பருத்தி புளி, பருப்பு மொத்த வியாபாரிகள் அடங்கியது தான். மணி ரத்தின த்தையும் சேர்த்து. அவரும் திரைப்பட பங்கு மார்க்கெட்டில் விளையாடுகிறவர்தான். அவருடைய ராவணன், ( picture postcard போன்று அழகாகக் காட்சி தரும் இடங்களில் ஷூட்டிங், மழை யில் கூத்தாட்டம், சண்டை என்று எல்லா மசாலாக்களும் சேர்த்து தயாரிக்கப்பட்டது தான்) பங்கு மார்க்கெட்டில் சரிந்து விட்டதாக இன்னொரு ஊடக செய்தி வந்துள்ளது. ஆக, குமாரஸ்வாமியின் பார்வையில், கன்னட திரையுலகம் தடை செய்ய விரும்பும் ராவணன் ( பட வெளியீட்டூக்கு முன் பெரும் சந்தை வெற்றி யைத் தரும் என் எதிர்பார்த்த) தரமான தமிழ்ப் படமா, அல்லது (வெளியீட்டுக்குப் பின் இப்போது தெரிந்து விட்ட) மக்கள் ஆதரவில்லாத காரணத் தால் தரமற்ற படமா?

இதை இன்னொரு வகையில் கூடச் சொல்லிப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. சன் தொலைக்காட்சி, சன் பிக்சர்ஸ் அதிபர்களைக் கேட்டால், அவர்கள் தம் தாத்தாவைப் பற்றி வெகு உயர்வாக, அலங்கார வார்த்தைகளில் தான் பேசுவார்க்ள், அவர் எவ்வளவு பெரிய கலைஞர். அவர் கதை எழுதிய படங்கள் என்ன் புரட்சியைச் சாதித்தன, எத்தகைய காலத்தால் அழியாத வரலாறு படைத்தன என்றெல்லாம் பரவசத்தோடு பேசுவார்கள் தாம். ஆனால் அவர்கள் தயாரிப்புச் செலவுகளை ஏற்பதோ, அல்லது வினியோகத்துக்கு வாங்குவதோ, அல்லது டாப் டென் மூவீஸில் தொடர்ந்து முதல் இடத்தில் இருப்பதாகச் சொல்வதோ, அந்த மகா கலைஞர் தாத்தாவின் படமாக, கதையாக இருப்பதில்லை. அத்தைகைய பெரிய கலைஞர் தம் தாத்தாவாகவே இருக்கும் அதிர்ஷ்டத்தைப் பெற்றவர்கள், ஏன், பெண் சிங்கம் பட்த்தையோ, உளியின் ஓசை படத்தையோ “நாங்கள் தான் தயாரிப்போம்” என்று முன் வரவில்லை. அவை ஏன் டாப் டென்னில் ஒரு தடவை கூட டாப் மூவியாக வரவில்லை? காரணம், சந்தை, சந்தை, சந்தை. கலைஞர் என்று உரக்கப் பேசுவது வேறு. சந்தை வேறு. மக்கள் ரசனை அந்தப் பக்கம் திரும்ப மறுக்கிறது. கழகத் தவர்களையும், பள்ளிச் சிறுவர்களையும் கட்டாயமாகப் பார்க்கச் செய்தும் கூட அது ’வெற்றிப் படமாக’ வில்லை சந்தையில். சந்தை வெற்றிக்கும், படத்தின் கலைத் தரத்திற்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி நியாயமாக எழ்வேண்டும், ஒரு ஆரோக்கியமான சமூகத்தில்தான் அந்தக் கேள்வி எழும்.. ஆனால், தமிழ் சமூகமும், அதன் அறிஞர், கலைஞர் கூட்டமும் அந்த எண்ணமோ, நம்பிக்கையோ கொண்டவர்கள் இல்லை,. சந்தை வெற்றி தான் எந்தத் துறையிலுமான, எந்த செய்ல்பாட்டுக்குமான அளவு கோல் என்று ஸதாபிக்கப்பட்டுள்ளது.

ஆக, எந்த பித்துக்குளித் தனமும், வாழ்க்கைக்கும், இயல்புக்கும், முரணான எதுவுமே மக்களுக்கு கிளுகிளுப்பூட்டும் எதுவுமே தான் நம் செயலாகும் போது, நம் சினிமா வாழ்க்கையோடும், கலை உணர்வுகளோடும், எந்த அர்த்த தேடலோடும் விரோதப்பட்டுப் போகின்றன். சாதாரண வாழ்க்கையும், தன் இயல்பில் வாழும் மனிதனும், ஏதோ அன்னிய கிரஹ ஜீவனாக பார்க்கப் படும் அவலம் தமிழ் சினிமாவின் குணமாகிப் போயிற்று.

சினிமா என்ற சாதனத்தை கலையாகப் பார்த்து நம் தமிழ் திரையுலகத்துடன் பேசத் தொடங்கினால், ஃபில்ம் இன்ஸ்டிட்யூட்டில் படித்து வந்தவர்கள் கூட, “ஓ, கலைப் படக் காரரா?” என்று ஒரு ஏளனப் புன்னகை வெளிப்படும். இந்த மசாலாக் கலவைகளையே சந்தைக் கொண்டு போகும் பழ்க்க்ம் திரைப்பட ஆரம்ப காலத்திலிருந்தே தமிழ் சமூகத்தில் வேரூன்றி விட்டது. அந்த ஆரம்ப கால படங்களை இன்றும் பார்க்கத் தகுந்ததாகச் செய்தது, அவை நமக்குத் தந்த கர்நாடக இசை தான். ஸ்டுடியோ கதை இலாக்கா சம்பளக்காரர்களும், ‘நான் ஒரு ப்ராஜெக்ட் வச்சிருக்கேன்” என்று இன்ஷ்யூரண்ஸ் ஏஜெண்ட் பாணியில் கதை எழுதி ஸ்டுடியோக் கதவுகளைத் தட்டுபவர் களும், இளைய தளபதிக்கும், சூப்பர் ஸ்டாருக்கும், உலக நாயகர்களுக்கும் கதை தயாரிப்பவர்க்ளும் பின்னர் வந்து குளறுபடி செய்ய ஆரம்பித்த காலத்திலிருந்து, திரையுலக மேதைகள், கலைப் படங்கள் என்று பொதுப்புத்தியை கேவலப் படுத்தாத், , சாதர்ரண அன்றாட வாழ்க்கை பற்றி, தெருவில் தோளுரசிச் செல்லும் மனிதர்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தாலே, ”ஓ நீங்க கலைப் பட ஆள் இல்லையா, யதார்த்தம் வேண்டுபவர் இல்லையா?” என்று நாம் ஏதோ ஸ்பீல்பர்க் பட்த்திலிருந்து வந்த விநோத பிறவிகள் போல நம்மை ஏளனமாகப் பார்ப்பார்கள்.

****************

அத்தியாயம் – 4

நினைவுகளின் சுவட்டில் ....  வெங்கட் சாமிநாதன்நான் இங்கு பலர் சினிமாத்துறையின் வல்லுனர்கள் பெருமையுடன் சொல்லக் கேட்டிருக்கிறேன். தமிழ் சினிம தொழில் நுடபத்தில் பம்பாயைக் கடந்து முன் சென்று விட்டதாக். ஹாலிவுட் சினிமாவுக்குக்கூட டிஜிட்டல் க்ராஃபிக்ஸ் வேலைகள் இங்கு தான் செய்து தரப்படுகின்றன, அத்தைகைய தொழில் நுட்ப திறமை தமிழ் நாட்டில் இருப்பதாக. நமது சினிமாடோக்ராஃபியைப் பற்றி மிகவும் பெருமைப் பட்டுக்கொள்வதையும் நான் பல முறை கேட்டிருக்கிறேன். இதே போல் ஒரு சில காட்சிகளுக்கு டான்ஸ்க்கும் போடப்பட்டிருக்கும் செட்களைப் பார்த்து மக்கள் வாய் பிளந்து வியப்பதும், பத்திரிகைகளும் தயாரிப்பாளர்களும், செட் போட்ட கலைஞர்களும் தாம் செய்துள்ள மாயத்தைப் பற்றி மெய்சிலிர்த்துப் பேசுவதும் மிக ச்கஜமாக நாம் பார்க்கும், படிக்கும் விஷயங்கள். எனக்கு இந்த அறியாத்தனத்தைப் பார்த்து சாதாரண மக்கள் வாய் பிளப்பது பற்றி ஆச்சரியபடுவதற்கு ஏதும் இல்லை தான். “பார் பார் பட்டணம் பார்” பயாஸ்கோப் பார்த்து இந்த அதிசயத்தைப் பற்றி அந்தக் காலத்தில் பேசிய காட்சி தான் இன்று நாம் காணும் காட்சியும். இரண்டும் ஒரே குணத்த்வை. அதே அறியாமையை வெளிப்படுத்துபவை. பார் பார் பட்டணம் பார் வெற்றுக் காட்சியாக இருந்த காரணத்தால் அந்த வாய் பிளப்பு மன்னிக்கத்தக்க அறியாமை. ஆனால் இன்றைய செட் வாய் பிளப்புகள் சினிமாடோக்ராஃபி வாய் பிளப்புகள் மன்னிக்கத் தக்க அறியாமை அல்ல.

சினிமா பற்றிய எதுவுமே, முக்கியமாக அதன் தொழில் நுட்பம், நம்மை மாற்றி விடுவதில்லை. ஒரு தொலைக்காட்சிப் பெட்டி, உலகின் சிறந்தது அனைத் தையும் நம் முன் கொண்டு வைக்கும் திறன் கொண்டதாக இருந்தாலும் அதன் அதிக பட்ச் சாத்தியம் தொலைக்காட்சிப் பெட்டி நம்மிடம் இருக்கும் ஒரே காரணத்தாலேயே அந்த சாத்தியம் நம்க்குக் கிடைத்து விட்டதாகக் கொள்ளக் கூடாது. குடிசையில் வாழும் தமிழ்னாக இருந்தாலும், பெரிய மாளிகையில் வாழும் தமிழ்ப் பெருமகனாக இருந்தாலும் கடைசியில் அந்தத் தொலைக் காட்சிப் பெட்டியின் அவன் பெற்றுக் கொள்வது, மானாட மயிலாட் வோ அல்லது வருடக்கணக்கில் ஓடும் சீரியலாகவோ தான் இருக்கிறது. 1890-களில் எப்போதோ ஒரு வருடம் லூமியேர் சகோதரர்கள் மனித சலனத்தை படம் பிடிக்கமுடியும் என்று கண்டபோது, அவர்கள் படம் பிடித்தது ஒரு ரயில் என்சின் நம்மை நோக்கி விரைவதைத் தான். அதற்கு முப்பது வருட்ங்களுக்குப் பின் தமிழ்ன் கையில் அந்த காமிரா கிடைத்ததும் அவன் படம் பிடித்தது, காளிதாஸ் என்னும் நாடகத்தை. ஒருவன் வாழ்க்கையின் ஒரு காட்சியைப் படம் பிடிக்க இன்னொருவன் ஒரு நாடகத்தைப் படம் பிடித்தான்.

சினிமாடோக்ராஃபியோ, அல்லது செட் அமைப்போ, வாழ்க்கையைப் பதிவு செய்யத்தான். நமது வர்த்தகமே ஆகிப்போன சினிமா உலகத்தில், வித்தியாசமாக சிந்திப்பவராக செயபடுபவராக் தன்னைக் காட்டிக்கொள்ளும், பறையறிவித்துக்கொள்ளும், தங்கர் பச்சான், தொடக்கத்தில் ஒரு நல்ல எழுத்தாளராக எனக்கு அறிமுகமானார். ஒன்பது ரூபாய் நோட்டு என்ற அவரது நாவல் எனக்கு வித்தியாசமாகச் சிந்திக்கும், சுரணையுள்ள ஒரு எழுத்தாளரைக் காட்டியது. ஒரு சினிமாக காரர் இப்படி எழுதுகிறாரே என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் தன்னை ஒளிச் சிற்பி எனச் சொல்லிக் கொண்டார். அவ்வாறு தனக்கு ஒரு பட்டத்தை அவர் சூட்டிக்கொண்ட போதே இது டிபிகல் தமிழ் மனமும் சிந்தனையுமாக அல்லவா இருக்கிறது என்று நான் ஒரு நிரடலை உணர்ந்தேன். இவருக்கும் முன்னால், ‘என்னா காமிரா வொர்க்குங்கறேன், அசத்தறாரையா இந்த ஆள்” என்று வின்செண்ட் என்ற காமிராக் காரரைப் பற்றி வியந்து வாய் பிளந்தது, முன் பெஞ்ச் காரர்கள் மட்டுமில்லை. பத்திரிகைகளும், விமர்சகர்களும், அறிஞர் பெருமக்களும் தான். அததோடு மூக்கில் விரலை வைத்து போஸ் கொடுத்தால் அது தன்னை சிந்த்னையாளராகக் காட்டும் என்ற ரக சிந்தனை கொண்ட ஸ்ரீதர் என்ற புதுமை இயக்குனர் அறிமுகப்படுத்திய காமிராக காரராக்கும் வின்ஸெண்ட் என்றால் அது இன்னமும் கொஞ்சம் அதிகமாகவே வாய் பிளக்க உத்வேகமாயிற்று

அந்த வின்செண்ட் பெருமகனின் காமிரா மேதையின் முத்திரை, சாவித் துவாரத்தின் வழியாக காட்சிப்படுத்தலும், மேஜையின் அடியில் காமிராவைக் கொண்டுபோதலுமான காரியங்களில், தமிழ் சினிமா முன் பெஞ்ச் ரசிகப் பெருமக்களையும் தமிழ் கலை மேதைகளையும் வியக்க வைத்தது. எதற்கு இந்தக் கஷ்டம் என்று யாரும் சொன்னதில்லை. ஒரு மண் குடிசையின் அறைகுள்ளே நிழல் விழாத் மிருதுவான வெளிச்சம் இருக்க காட்சிப்படுத்துவது எப்படி என்ப்து ஒரு சவால். அதன் பின் இருந்த யோசனைகளும், சோதனைகளும், முயற்சிகளும் படம் பார்ப்பவர்களுக்குத் தெரியாது. இதற்கெலலாம் போகவேண்டாம். அந்த குடும்பம் இருக்கும் அறையில் அந்த அறைக்கும் நேரத்துக்கும் பொருந்தாத் பளிச்சிடும் வெளிச்சத்தையும், நிழலையும் தவிர்த்திருக்கிறார்கள், இயற்கையில் அந்த அறையின் வெளிச்சம் எவ்வாறு இருக்குமோ அவ்வளவே இருக்கச் செய்திருப்பது சினிமா காமிராக் காரரின் தொழில் நுடப்மும் திறமையும் என்பது பார்ப்பவர்களுக்குத் தெரியாது. இப்படி ”பார் பார், என்னெல்லாம் மாயம் செய்திருக்க்றேன் பார் என்று தம்பட்டம் அடிக்காத காமிராக் காரன் தான் திற்மையானவரும் ஒரு கலைஞனுமாவான் என்பது நம்மில் யாருக்கும் புரிந்ததில்லை.

இதே தான் ஒரு சிறந்த செட் அமைப்பாளரை அடையாளம் காட்டுவதும். ஒரு செட் போட்டிருப்பது தெரியாது அதை செட் எனத் தோன்றவைக்காது செய்யும் திறன் தான், திறன். அத்தைகைய செட் தான் செட். செட் தன்னை மறைத்துக்கொள்ளவேண்டும். திரும்பவும் என்னமா நடிச்சிருக்கார்ய்யா நம்ம ஜிவாஜி, கொன்னுட்டார் என்ற சொல்ல வைப்பது, “பார் பார் பட்டணம் பர்ர் சமாச்சாரம் தான். நம் ரசனைகளை இப்படியே தான் ஆபாசப் படுத்தி, கொச்சைப் படுத்தி வளர்த்துக்கொண்டிருக்கிறோம். இதையே தான் திரும்ப வசனத்துக்கும், காட்சி அமைப்புக்களுக்கும். எங்கு அதீதமும், இரைச்சலும் செய்ற்கையும் நுழைந்து விடுகின்றனவோ அங்கு ஒரு ஆபாச இரைச்சல் மிகுந்த விளம்பரம் முன் நிற்கும். கலை அல்ல. தமிழ் சினிமாவின் குணத்தையே ஒரு நிமிடக் காட்சியில் அடையாளப் படுத்தவேண்டுமானால், நாம் சுமார் இருபது வருடங்களாகக் தினமும் சில நிமிடத்துக்கொரு முறை கேட்டுக்கொண்டிருக்கும், “உலக்த் திரைப்பட வரலாற்றிலேயே முதன் முறையாக,திரைக்கு வந்து சில நாட்களே ஆன......” என்ற ஆண்குரலையும் “குங்குமம்......” என்ற பெண்குரலையும் ஆபாசத்துக்கும் இரைச்சலுக்கும் தமிழ் சினிமா குணத்துக்குமான முத்திரைகளாகக் காணவேண்டும். இந்த இரண்டும் தமிழ் ரசிகர்களுக்குப் பிடித்துப் போன காரணத்தாலும், விளம்பரமாக அவை பெரிதும் வெற்றி பெற்றதன் அடையாளமாக இதே குரலும், இதே இரைச்சலும் பல இடங்களில் விரும்பி வரவேற்கப்படுகிறது போலும்.

ஐம்பது வருடங்களுக்கு முன் பார்த்த ஒரு படம், ஒரு காட்சி. வேண்டுமென்றே தான் ஐம்பது வருட்ங்களுக்குப் பின் போகிறேன். ஒரு ஆற்றின் கரையில், புல் வெளியில் ஒரு பெண் உட்கார்ந்திருக்கிறாள். மடித்த முழங்கால்களைக் கட்டியவாறு, மடித்த கால்களின் மேல் சாய்த்த தலை சற்றுத் தள்ளி மல்லாக்கப் படுத்திருக்கும் இளைஞ்னைப் பார்த்திருக்கிறாள். அவன் ஒரு கை தலைக்கடியில் மற்றொரு கை ஒரு புல் இதழைக் கடித்துக் கொண்டே ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றின் மிகமெல்லிய இரைச்சல். ஓரிரு பட்சிகளின் கூவல். அவள் முகத்தில் கவலையும் பாசமும். யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. நேரம் கடக்கிறது. பின் அவள் கேட்கிறாள், மெல்லிய குரலில், “போல்பே நா துமி பாபாகே” (அப்பா கிட்டே பேசித் தான் பாரேன், மாட்டியா?) .அவன்றபேசவில்லை. நேரம் கட்க்கிறது. பின் சொல்வான் “கிச்சு ஹோபே நா” ( பேசி ஒண்ணும் நடக்காது) என்றோ அல்லது “கீ ஹோபே” (என்ன பிரயோஜனம்?) என்றோ, சரியாக ஞாபகமில்லை. “கதை வசனம் இன்னார் என்று விளம்பரம் செய்து கூட்டம் கூட்டும் குணம் கொண்டதல்ல இந்த வசனம். ஆனால் இந்த காட்சியின் கவிந்திருக்கும் ஆதங்கமும், பாசமும், அது உணர்த்தும் சோகமும் அவர்களிடையே இருக்கும் காதல் பிணப்பும் அவ்வளவின் ஆழமும் அதை உணர்த்தும் நிசப்தங்களும் இன்னமும் நினைவிலிருக்க் வைத்திருக்கின்றன. கவித்துவமான் உணர்வுகள் கவித்துவம் நிறைந்த காட்சியாக்கத்திற்கு இது ஒரு எளியதும் சிறந்ததும் வெற்றிகரமானதுமான இதன் எளிமையும் இயற்கையும் தான் கவிதையும் சினிமாவும் ஆகும். உதாரணம். இம்மாதிரியான கணங்கள் நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் யுகம் யுகமாக திருபத் திரும்ப பலவேறு இடங்களில், பல்வேறு ரூபங்களில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் நமது 70-80 வருட சினமா வ்ரலாற்றில் இத்தனை பத்தாயிரக்கணக்கில் குவிந்து கூளமாகிக்கிடக்கும் தமிழ் படங்களில், ஒரு படத்தில் கூட, ஒரு முறை கூட ஒரு க்ஷணம் கூட நாம் பார்த்த்தில்லை.அந்த மெல்லிய சோகமும் பாசப் பிணைப்பும் நிறைந்த சங்கீத இழையாக.

ஒரு பெண் வேகமாக பல மாடிகள் படியேறி வருவாள். அந்த வேகத்தில் துடிப்பும் இரைப்பும். அவள் முகத்தில் தெரியும் கலைந்த தலையும் துளித்த வேர்வையும். ஒரு கதவின் முன் நின்று தட்டுவாள். கதவைத் திறந்த பெண், “ஷே தோ சொலே கலோ”(அவன் போய் விட்டான்) என்பாள். ”கொதாய்?” (எங்கே?) என்று இவள் கேட்பாள். அவள் பதில் சொல்லும் முன் காட்சி மாறும். கல்கத்தாவின் தெருக்களும், கடைகளும், வேகமாக விரையும் திரையில். அரை நிமிடம் விரையும் திரையில் அடுத்து உடனே காட்சி வெட்டுப்பட்டு நாம் காண்பது விரைந்து கொண்டிருக்கும் ரயில் பெட்டி ஒன்றில் ஒரு இளைஞன் அவன் ஜன்னலுக்கு வெளியே பார்த்துக்கொண்டிருக்கிறான். முன்னர் ஒரு கணத்தின் கவிதை காட்சிப்படுத்தப்பட்டுள்ளதைச் சொன்னேன். இது ஒரு கணத்தின் உணர்வுப் பெருக்கத்தின் நாடகம், காட்சிப்படுத்த ப்பட்டதற்கு ஒரு சிறந்த உதாரணம. நாடகம் என்றால் கூச்சலையும் வசனப் பெருக்கத்தையும் தான் நாம் கற்றுக்கொண்டிருக்கிறோம்.

இம்மாதிரி கதை சொல்லலையும் நான் தமிழ் சினிமாவில் பார்த்தது கிடையாது. எந்த இயக்குனர் சிகரமும், மேதையும் சினிமாவை இப்படிப் பார்த்ததோ உணர்ந்ததோ கிடையாது.

நம்து தொடக்கமே தவறான, செயகையான, ஒரு புதிய சாதனத்தைப் புரிந்து கொள்ளாத தொடக்கம். ஒருவன் அதன் ஆரம்ப கட்டத்திலேயெ விரையும் ரயிலின் விரையும் சலத்தைப் பதிவு செய்கிறான். இங்கு நாம் முப்பது வருடங்களுக்குப் பின்னும் ஒரு நாடகத்தை, நாடகமாகவே பதிவு செய்தால், அந்தப் பாதை எங்கு இட்டுச் செல்லும். அவன் ராமனோ, ராவணனோ, சேற்றைப் பூசிக்கொண்டு, நாற்பது பேருடன் டான்ஸ் பண்ணச் சொல்லும். அருவியின் பின்னணியில் காதலையோ பிணக்கையோ பிக்சர் போஸ்ட் கார்டு மாதிரி படம் எடுக்கச் சொல்லும். “என்னா போடோக்ராஃபி? என்னா போடோக்ராஃபி, சும்மாவா சொல்றாங்க, மேதைன்னு? என்று வாய் பிளக்க வைக்க்த் தான் அது பயன் படும். இதெல்லாம் என்ன இழவுக்கு என்று யாரும் தன்னையோ கேட்டுக்கொண்டதுமில்லை. யாரும் அந்த மேதைகளை, சிகரங்களை கேட்டதுமில்லை.

நம் தொடக்கமும் சினிமா இல்லை. பின் இன்று நிற்கும் இடமும் சினிமா இல்லை. இடைப்பட்ட நீண்ட பாதையும் சினிமா இல்லை. நாம் கற்றது அனைத்தையும் மறந்து, புதிதாகத் தொடங்கவேண்டி இருக்கிறது. ஆனால் அது நடக்கும் என்றோ, அந்த விவேகம் நம்மிடம் இருப்பதாகவோ எனக்குத் தோன்றவில்லை.

நாம் திரும்ப வேண்டுவது நம் இயல்புக்கும் எளிமைக்கும். நாம் நாடகமும் கவிதையும் நம்மைச் சுற்றியே இருக்கின்றன. அதை நாம் எந்த வசன கர்த்தாவிட்முமோ, எங்கடா மலைச் சாரல் இருக்கிறது காதலைச் சொல்ல, எங்கே அருவி கிடைக்கும் கூடி கும்மாள் கூத்தாட் என்று தேடும் மேதையிமுமோ காணமுடியாது. நம்மைச் சுற்றியிருக்கும் நாடகத்தையும் கவிதையையும் திரும்பக் காட்சிப் படுத்துதலில் தான் நம் மேதையும் கலைத்துவமும் இருக்கிறது.

(தொடரும்).
vswaminathan.venkat@gmail.com


 
aibanner

 ©© காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்