இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஜூன் 2008 இதழ் 102  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
இலக்கியம்!

நினைவுகளின் தடத்தில் - 13

- வெங்கட் சாமிநாதன் -


வெங்கட் சாமிநாதன்மாமாவிடம் ட்யூஷன் படிக்க வந்தவர்கள், ஏழெட்டுப் பேர் இருப்பார்கள். எங்கள் பள்ளியின் இறுதி வகுப்பாகிய எட்டாம் வகுப்புக்கு தேர்வை அரசு நடத்தும் பொதுப் பரிட்சையே தீர்மானிக்கும் என்ற காரணத்தால் ட்யூஷன் படிக்க வந்து சேர்ந்தவர்கள் அவர்கள். இரவு இரண்டு மணிநேரம் படிப்பார்கள். இது ஒரு மூன்று நான்கு மாதங்களுக்கே நடக்கும். பெற்றோர்களுக்கு தம் பையன்கள் எப்படியாவது கவர்ன்மெண்ட் பரிச்சையில் பாஸ் செய்யவேண்டும். பள்ளிப் பரிட்சையாக இருந்தால் கவலை இல்லை. ஒரு வருஷத்திற்கு இரண்டு வருஷன் ஒரு வகுப்பில் படித்துவிட்டுப் போகட்டும் கவலை இல்லை. பெரும்பாலானவர்கள் பக்கத்துப் பட்டி தொட்டிகளிலிருந்து வருபவர்கள். விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவரகள். உள்ளூர் பையன்களோ, சிறு வியாபாரிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். வத்தலக்குண்டுக்கு அனுப்பி ஹைஸ்கூலில் சேர்த்து அவன் படித்து என்ன கிழிக்கப்போகிறான். உள்ளூர்ப் படிப்பே போதும் என்று நினைப்பவர்கள். ஆனாலும் பாஸ் செய்து விடவேண்டும் என்று ஆசைப்படும் பெற்றோர்கள். இந்த மூணு நாலு மாச ட்யூஷனை வைத்துக்கொண்டு மாமா படும் அவஸ்தை மிக பரிதாபமானது. இப்போது நினைத்துப் பார்க்கும் போது தான் அதன் பரிதாபம் மனதில் படுகிறது. என் ஞாபகத்தில் ட்யூஷன் சம்பளம் மாதம் ஒரு ரூபாய். அதை மாமா வாங்கப் பட்ட பாடு பெரும்பாடாக இருக்கும்.

ஒவ்வொரு மாதமும் ட்யூஷன் படிக்கும் மாணவனிடம், "போய் உங்கய்யா கிட்டேயிருந்து ட்யூஷன் சம்பளம் கேட்டு வாங்கிட்டு வாடா," ன்னு சொல்லி அனுப்புவார் மாமா. ஆனால் அந்த ட்யூஷன் சம்பளம் ஒரு ரூபாய் தானாவும் வராது. சொல்லியும் வராது. "என்னடா உங்கய்யா கிட்டே கேட்டியாடா, ஏன் சம்பளம் வாங்கீட்டு வரலே?" என்று மாமா கேட்பார். "கேட்டேன் சார், தரேன்னு சொல்லச் சொன்னாங்கய்யா," என்பது எல்லோரிடமிருந்தும் வரும் ஒரே பதிலாக இருக்கும். பள்ளிக்கூடச் சம்பளம் எட்டணா வாங்குவதே பெரும்பாடாக இருக்கும். அதில் ட்யூஷன் சம்பளம் ஒரு ரூபாய் என்ன சுலபமாகவா வந்துவிடும்? பக்கத்து பட்டி தொட்டிகளிலிருந்து வரும் விவசாயக் குடும்பங்களுக்கு கஷ்டமாக இருக்கலாமோ என்னவோ. ஆனால் உள்ளூரில் ஜவுளிக்கடையும், மளிகைக் கடையும் வைத்திருக்கும் வியாபாரிகளுக்கு அரையணாவோ ஒரு ரூபாயோ படிப்பிற்கு என்று கையை விட்டுப் போக விடுவது என்பது அவ்வளவாக மனம் சுலபத்தில் இடம் தரும் விஷயமாக இருந்ததில்லை. கடைகளில் வேலை பார்க்கும் பையன்களிடமும் இதே விவகாரம்தான். சம்பளம் கேட்டால், "வேலையைக் கவனி, சம்பளம் எங்கே போயிடுது. நீயும் இங்கேதான் இருக்கே, நானும் எங்கேயும் ஒடிடப் போறதில்லை. சம்பளத்துக்கு என்ன அவசரம் இப்போ?" என்ற கதை வசனம் ஒவ்வொரு மாதமும் ஒழுங்காகக் கேட்கும். ஆனால், மாமா பள்ளிக்கூடம் போகும் வழியில் கடையிலிருந்தே மாமாவுக்குக் குரல் போகும், " ஐயா பத்திலே துண்டு விழுந்தது அப்படியே நிக்கிதே? பாத்து செய்யுங்க" என்று. அவர் பையன் பள்ளிக்கூடச் சம்பள பாக்கி, ட்யூஷன் சம்பளப் பாக்கி பற்றி பேச்சே வராது. மாமாவும் அந்த சமயத்தில் அதைச் சொல்ல மாட்டார். "சம்பளப் பாக்கி வரவேண்டியிருக்கு. அது வந்ததும் கொடுத்து அனுப்பறேன்" என்று கடையின் அருகே வந்து பதில் சொல்லி விட்டு பள்ளிக்கு நடப்பார். உள்ளூரில் எல்லோரும் தெரிந்தவர்கள். யாருடனும் சண்டை போடமுடியாது. பாக்கி வைப்பவர்கள், கடைசியில் கொடுக்காமலேயே காலம் தள்ளிவிடுகிறவர்கள் அவர்களாகவே இருந்தாலும் கூட. நாலு மாச ட்யூஷன். இப்படியே போய்விடும். பரி¨க்ஷ முடிந்ததும் ஸ்கூல் மூடிவிடும். அப்புறம் யார் கண்டார்கள் ட்யூஷன் சம்பள பாக்கியை?

மேனேஜ்மெண்ட் ஸ்கூல் அல்லவா? பள்ளிக்கூட வாத்தியார்கள் சம்பளத்திலும் அனேகமாக இந்த கதை தான். ஒன்றாம் தேதி சம்பளம் கொடுத்தது என்பது அனேகமாக நடந்ததில்லை. பத்து பனிரெண்டு தேதி ஆகிவிடும். இதற்குள் மாமா பள்ளிக்கூடம் இருக்கும் ரோடிலேயே, தன் பெரிய விட்டின் முகப்பு திண்ணியில் உட்கார்ந்து கொண்டு பஞ்சாயத்து செய்து கொண்டிருக்கும் சுப்பய்யரிடம் மாமா எத்தனை தடவை கும்பிடு போட்டு "முதலாளி, இன்னும் சம்பளம் போடலையே, வாத்தியார்களுக்கெல்லாம் கஷ்டமா இருக்கும், சொற்ப சம்பளக்காரங்கல்லியா? என்பார். சுப்பயரும் சிரித்துக்கொண்டே தான் ":அதுகென்ன போட்டுடறது," என்பார். அவ்வளவு தான் மாமாவுக்கு பதில் கிடைத்துவிட்டது. இனி அவர் பஞ்சாயத்துக்கு குறுக்கே நிற்கக்கூடாது. "என்ன சார், மானேஜர் கிட்டே கேட்டீங்களா?", என்று வாத்தியார்கள் எல்லாம் கேட்க்கும் கேள்விகளுக்கு மாமா தான் பதில் சொல்லியாக வேண்டும். இது நான் நிலக்கோட்டையில் இருந்த வரை அனேக மாக ஒவ்வொரு மாதமும் தவறாது நிகழும் கதை.

இந்த மாதிரியான நிலக்கோட்டை வாழ்க்கையில் மாமாவுக்கு சந்தோஷம் தரும் கணங்கள் இருந்தனவோ என்னவோ, தெரியாது. எனக்கு சில மகிழ்ச்சிதரும் கணங்களாக இருந்தன. அவை நிலக்கோட்டையை விட்டு நகர்ந்த நாட்கள். எட்டாம் வகுப்பு அரசு பொதுப் பரிட்சை எழுத வத்தலக்குண்டு போன நாட்கள் அவற்றில் ஒன்று. வத்தலக்குண்டு கவர்ன்மெண்ட் ஹைஸ்கூலில் தான் பரிட்சை நடந்தது. அந்த ஒரு சமயம் தான் நிலக்கோட்டையிருந்து ஆறே ஆறு மைல் தூரத்திலிருந்த வத்தலக்குண்டுக்கு நான் போனது. அந்த பெரிய பள்ளிக்கட்டிடமும், எத்தனையோ சுற்று வட்டார பள்ளிகளிலிருந்து வந்த மாணவர்கள் பெரிய பெரிய ஹால்களில் நூற்றுக் கணக்கில் உட்கார்ந்து பரிட்சை எழுதுவதும், எனக்கு பதிய காட்சிகளாக இருந்தன. எனக்கு அவையெல்லாம் பார்க்க மிகவும் பிடித்துப் போயிற்று. பரிட்சை எழுதினோம். என்ன எழுதினேன் என்றெல்லாம் ஞாபகமில்லை. பரிட்சை எல்லாம் ஒரே நாளில் காலையிலும் மாலையிலுமாக முடிந்தது என்று தான் நினைக்கிறேன். ஏனெனில் நாங்கள் எங்கும் இரவு தங்கியிருந்ததாக நினைவில் இல்லை. அன்று மாலை எங்கள் எல்லோரையும் சுற்றி உட்காரவைத்து, பரிட்சைக் கேள்விகளை ஒவ்வொன்றாகக் கேட்டு நாங்கள் எழுதிய பதிலைச் சொல்லச் சொல்லி ஒவ்வொருவருக்கும் கிடைக்கக்கூடும் மார்க்குகளைக் குறித்துக்கொண்டார்கள். என்னைக் கேள்விகேட்கும் வாத்தியாராக வந்தவர் அம்பி வாத்தியார் தான். கடைசியில் மாமாவிடம் அம்பி வாத்தியார் சொன்னார். "கணக்கில் பயல் அறுபது மார்க் வாங்கிடுவான் சார்," மாமா சந்தோஷப்படுவார் என்று தான் அம்பி வாத்தியார் நினைத்தார். நானும் அப்படித்தான் நினைத்தேன். இரண்டு பேரும் பரிதாபகரமாக தோற்றோம். மாமாவுக்கு கடும் கோபம். "ஏண்டா கழுதை, நீ 60 மார்க் வாங்குவதற்காடா வருஷம் பூரா உயிரைக் கொடுத்து சொல்லிக் > கொடுத்தேன்?" என்று மாமா திட்ட ஆரம்பித்தார். திட்டினாரே ஒழிய அடிக்கவில்லை. எல்லோரும் பரிட்சை முடிந்த சந்தோஷத்தில் காராபூந்தியும் லட்டுவும் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அதனிடையே தான் இந்த இரண்டாம் கட்ட பரிட்சையும் மார்க்கு போடலும், கடைசியில் காராபூந்தி லட்டுவோடு அர்ச்சனையும்.

என்னவானாலும் வத்தலக்குண்டு பிரயாணம் சந்தோஷமாகத் தான் இருந்தது. நான் பரிட்சையில் பாஸ் செய்துவிட்டேன். மார்க் என்னவாக இருந்தால் என்ன? அடுத்த வருடம் ஜூன் மாதம் மதுரையில் படிக்கப் போகிறேன். அது வத்தலக்குண்டுவை விட மிகப் பெரிய ஊர். 32 மைல் டி.வி.எஸ் பஸ்ஸில் பிரயாணம் செய்யலாம். இதற்கு முன் ஒரு முறை மதுரை போயிருக்கிறேன். மேற்குக் கோபுர வாசலில் வழியாக அதன் கடைசியில் இருக்கும் ஒரு தியேட்டர் (அங்கு எப்போதும் ஆங்கிலப் படம் தான் காட்டுவார்கள். பெயர் மறந்து விட்டது, ரீகல் என்று நினைக்கிறேன்), அது நோக்கிப் போகும் பாதையில் கொஞ்ச தூரம் நடந்தால் ஒரு பார்க் வரும். அதன் எதிரே ஒரு சந்து போகும். அந்த சந்தில் இரண்டாம் வீட்டில் மாமியின் அப்பா இருந்தார். அந்த வீட்டிலிருந்து கொஞ்ச தூரம் நடந்தால் செண்டிரல் சினிமா வந்துவிடும். அப்போது ஸ்ரீவள்ளி ஒடிக்கொண்டிருந்தது என்று நினைவு. கோமல் ஸ்வாமிநாதன் 1995லோ என்னவோ மதுரையில் நாடக/இலக்கிய விழா நடத்தியபோது என்னையும் அதற்கு அழைத்திருந்தார். அப்போது மதுரை காலேஜ் ஹாஸ்டலில் தங்கி இருந்தோம். அந்த சமயம் என் மாமியின் குடும்பம் இருந்த(வாடகைக்குத் தான்) அந்த பழைய வீட்டைப் பார்க்கும் ஆர்வம் எழுந்தது. என்னால் அந்த பழைய சந்தைக்கூட கண்டு பிடிக்கமுடியவில்லை.

மாமாவின் வசதிக்குறைவினாலும், அழுத்தும் வறுமை காரணமாகவும், நிலக்கோட்டையை விட்டு எங்கும் அதிகம் சென்றதில்லை. ஆறு மைல் தூரத்திலிருக்கும் வத்தலக்குண்டு பயணம், அங்கிருந்த 13 வருடங்களில் கிடைத்த அந்த ஒரே பயணம் சந்தோஷமளித்ததென்றால் பயணங்கள் எனக்கு எவ்வளவு அபூர்வமாகக் கிடைத்தன, அதன் காரணமாகவே அவை எனக்கு எவ்வளவு சந்தோஷமளித்தன என்பதை யூகிக்கலாம். என் சந்தோஷத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறேன். மதுரையிலேயே, ஒரு பெரிய பட்டணத்தில் தங்கி படிக்கப் போகிறேன் என்ற எண்ணமே என்னை வானத்தில் பறக்கும் பிரமையைத் தந்தது. ஆனால் மாமாவுக்கு அது ஒரு பெரிய சுமையாக இருந்தது. சாதாரணமாக நிலக்கோட்டியில் அன்றாட பொழுது கழிவதே பெரிய பிரயத்தனமாக இருந்தது மாமாவுக்கு. இதில் நான், சின்ன மாமா, பாட்டி மூவரையும் மதுரையில் ஒரு தனிக்குடித்தனம் அமைத்து என்னையும் சின்ன மாமாவையும் ஹைஸ்கூலில் படிக்கச் சேர்ப்பது என்பது மாமாவுக்கு தாங்க முடியாத சுமை. என் சின்ன மாமா வத்தலக்குண்டு ஹைஸ்கூலில் படித்த ஹைஸ்கூலில் அந்த வருடம் பெயில் ஆகிவிட்டதால் அங்கு படிக்க மாட்டேன் என்று பிடிவாதம் செய்ய என்னையும் ஹைஸ்கூலில் சேர்க்க வேண்டியிருந்ததால் இரண்டு பேரையும் மதுரையில் சேர்த்து படிக்க வைப்பது என்று முடிவாயிற்று. பாட்டி எங்களுக்கு சமைத்துப் போடுவாள். மாமா? மாமி அப்போது நிலக்கொட்டையில் இல்லை. சண்டை போட்டுக்கொண்டு மதுரைக்கு வந்துவிட்டாள் மாமி. "நான் சமைத்துச் சாப்பிட்டுக்கொள்கிறேன், ஒரு வருஷம் தானே, இவன் ஸ்கூல் ·ப்னல் பாஸ் பண்ணட்டும் போறும்," என்று தீர்மானித்துவிட்டார் மாமா. இதற்கு தன் கடைசி பிள்ளை (என் சின்ன மாமா) யின் சார்பில் பாட்டியின் வற்புறுத்தலும் ஒரு காரணம்.
21.11.07

நினைவுகளின் தடத்தில் - 14

வெங்கட் சாமிநாதன்வீட்டு வாசலில் மாமாவுடன் பேசிக்கொண்டிருந்தார் அம்பி வாத்தியார். தற்செயலாக நான் அங்கு வந்து சேர்ந்தது, என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே, "மாப்பிள்ளை டவுனுக்குப் போய் படிக்கப் போறாராக்கும்! இனிமேல் அவர் டவுன் வாசிதான்." என்றார். அது சும்மா தமாஷாகப் பேசுவதாகவும் இருக்கும். கொஞ்சம் கிண்டலும் கலந்திருக்கலாம். நிச்சயமில்லை. ஆனால் எனக்கு அது சந்தோஷமான சமாச்சாரம் தான். நான் மதுரைக்குப் போய் படிக்கப் போகிறேன் என்பது எல்லோரும் பேசும் ஒரு விஷயமாகியிருந்தது, எனக்குச் சந்தோஷம் தான். அது என்னை முக்கியப்படுத்தி இல்லை. சின்ன மாமா மதுரைக்குப் போய் படிப்பது என்பது நிச்சயமானதும், எனக்கும் நிலக்கோட்டையில் எட்டாம் வகுப்புப் படிப்பு முடிந்ததும் மேலே படிக்க வெளியே தான் போக வேண்டும் என்ற நிலையில், சின்ன மாமாவோடு ஒட்டிக்கொண்டு விட்டேன். ஆனால் எப்படியானால் என்ன, நான் மதுரையில் படிக்கப் போகிறேன். பெரிய நகரம் அது. நிறைய சுத்தலாம். வருஷம் பூராவும் சுத்திக்கொண்டிருக்கலாம். அப்படியும் மதுரை அலுத்துவிடாது, அது பார்த்துத் தீர்ந்துவிடாது, என்ற எதிர்பார்ப்பும் பரபரப்பும் என்னில் பரவியிருந்தது. அத்தோடு, இன்னும் ஒரு பெரிய விஷயம். மதுரையில் பாட்டியும் சின்ன மாமாவும் தான் இருப்பார்கள். மாமா இல்லை. அவரது கட்டுப்பாட்டில் இருக்கும் நிர்ப்பந்தமும் இல்லை. நான் என் இஷ்டம் போல இருக்கலாம். ஒரு சுதந்திர பிறவியாக. எல்லாவற்றையும் விட இப்போது முதலில் அனுபவிக்க இருப்பது 30 மைல் பஸ் பிரயாணம். அதை நினைக்க நினைக்க மனத்தில் ஒரே பூரிப்பு. ஆனால் 2 மணி நேரம் தான் நீடிக்கும் அந்த சுகம். அது பற்றி அப்போது கவலை இல்லை.

வெகு அரிதாகவே கிடைத்தன எனக்குப் பிரயாண சந்தோஷங்கள். இந்த 13 வருஷங்களில் பக்கத்தில் இருக்கும் வத்தலக்குண்டுக்கு ஒரே ஒரு முறை தான் போக வாய்த்தது. அதுவும் பரிட்சை எழுத. சின்ன மாமாவுக்கு எவ்வளவு அதிர்ஷ்டம்!. வத்தலக்குண்டுக்கு கவர்ன்மெண்ட் போர்டு ஹைஸ்கூலில் படிக்க சேர்ந்த பிறகு மூன்று வருஷங்கள் தினம் காலையில் போனால் சாயந்திரம் வந்தால் போதும் அவ்வளவு நேரமும் வத்தலக்குண்டில் கழிக்கலாம் என்றால் எவ்வளவு அதிர்ஷ்டம் சின்ன மாமாவுக்கு மாத்திரம்! பக்கத்தில் இருக்கும் அணைப்பட்டி கூட பார்த்ததில்லை. இவ்வளவுக்கும் மாமா சுவாமிநாத ஸ்வாமி பக்தர், அவர் குல தெய்வம். பின் ஏன் ஒரு தடவை கூட ஏன் மாமா அங்கு போனதில்லை? அவர் போயிருந்தால் என்னையும் கட்டாயம் அழைத்துச் சென்றிருப்பார். ஆனால் இப்போது அதைப் பற்றியெல்லாம் கவலை இல்லை. இப்போது ஒரு வருஷம் பூராவும் மதுரையில் இருக்கப் போகிறேன். அதுவும்
சுதந்திரமாக.

இதற்கு முன்னால் ஒரு நீண்ட பிரயாணம், அதுவும் ரயிலில் போகும் அதிர்ஷ்டம் எனக்கு இருந்திருந்தது. இரண்டு வருஷம் இருக்குமா? அல்லது மூன்று வருஷங்கள் ஆயிடுத்தா? எனக்கு பூணூல் போட்டாகணும். வயசாயிண்டிருக்கிறது. அப்பாவிடமிருந்து லெட்டர் வந்தது. எல்லோரும் உடையாளூர் போகணும். உடையாளூரில் அப்பாவும் அம்மாவும் இருக்கிறார்களே. அந்த பிரயாணம் தொடங்கிய பிறகு தான் எவ்வளவு புது விஷயங்கள் அதில் அனுபவிக்க இருந்தன என்று தெரிந்தது. ஒரு பகல் பூராவும் ரயிலில் பிரயாணம் செய்யலாம். அவ்வளவு தூரம் உடையாளூர்.முதலில் ஐந்து மைல் தூரத்தில் இருக்கும் அம்மையநாயக்கனூருக்குப் போகவேண்டும், அங்கு போய்த்தான் ரயில் ஏறவேண்டும். அம்மையநாயக்கனூர் ரயில் ஸ்டேஷனுக்குப் பேர் கொடைரோடு. மதுரையிலிருந்தோ, அல்லது வடக்கே சென்னையிலிருந்தோ கொடைக்கானல் போகிறவர்கள், கொடைரோடு ஸ்டேஷனில் இறங்கி அங்கிருந்து ரோடு வழியாக கொடைக்கானல் போகவேண்டும். அந்தக் காலத்தில், பிரிட்டீஷார் ஆட்சி நடந்த காலத்தில், சென்னை கவர்னர், கோடை காலத்தில் ஊட்டிக்கோ அல்லது கொடைக்கானலுக்கோ தான் போய்த் தங்குவார்களாம்.

கொடை ரோடிலிருந்து செங்கோட்டா பாஸஞ்சர் வண்டியை பிடிக்க வேண்டும். அது காலை 5.30 மணிக்கோ என்னவோ வரும். அது ஒரு வண்டிதான் கும்பகோணம் போகும். அந்த வண்டியைப் பிடிக்க வசதியாக நிலக்கொட்டையிலிருந்து பஸ் ஏதும் கிடையாது. குதிரை வண்டியில் தான் போகவேண்டும். காலை நாலு அல்லது நாலரை மணிக்கு குதிரை வண்டி எங்கிருந்து கிடைக்கும்.? மாமா முதல் நாள் சாயந்திரம் போய் நாடார் ஹைஸ்கூலுக்கு 10-15 வீடு தள்ளி இருக்கும் குதிரை வண்டிக்காரருக்குச் சொல்லி வைக்கவேண்டும். காலையில் 4 மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துவிடவேண்டும், ரயிலைப் பிடிக்கவேண்டும் என்று. வீட்டில் 3 மணிக்கே எழுந்து எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படும். ரயிலில் சாப்பிடுவதற்கு இட்லி, புளியஞ்சாதம், தயிர் சாதம் எல்லாம் தயாராகும். வீடு ஒரே ரகளையும், கோலாகலமுமாக இருக்கும்.

1942-லோ 1943-லோ சரியாக ஞாபகமில்லை. உபநயனத்திற்காக உடையாளூர் போக ரயிலில் போனது. அது தான் எனக்கு ஞாபகமிருக்கும் முதல் ரயில் பிரயாணம். முதல் நாளிலிருந்து வீடு அல்லோகப் பட்டுக்கொண்டிருக்கும். அதைச் செய்யக்கூடாதா, இதைச் செய்யக்கூடாதா, மக்கு மாதிரி இப்படி நின்னுண்டேயிருக்கியே, என்ற திட்டுக்கள் மாமாவிடமிருந்தும், பாட்டியிடமிருந்தும் வந்துகொண்டேயிருக்கும். அதையெல்லாம் தாண்டி காலையில் நாலு நாலரைமணிக்கு குதிரை வண்டியில் உட்கார்ந்துவிட்டால் முதல் நாள் கேட்ட திட்டுக்களெல்லாம் மறந்து விடும். சில்லென்று இருக்கும் அந்த முன் காலை இருட்டில் குதிரை வண்டி சவாரி சந்தோஷமாக இருக்கும். அது மட்டும் என்ன? பின் தொடர்வது எல்லாமே சுகமான விஷயங்கள் தான். முதல் தடவையாக சிறு பையனாக, ஒரு பகல் முழுதும் ரயில் பிரயாணம் செய்வது என்பது ஸ்வர்க்க அனுபவம் தான். அப்போதெல்லாம் முன் பதிவு என்பதெல்லாம் இருந்ததில்லை. வெகு வருஷங்களுக்கு இருந்ததில்லை. டிக்கட் வாங்கிக் கொண்டு கிடைத்த காலி இடத்தில் உட்கார்ந்து
கொள்ள வேண்டியதுதான்.

அந்த புதிய அனுவத்தை நான் வெகுவாக ரசித்தேன். ஒவ்வொரு சின்ன நிலயத்திலும் ரயில் நின்றது. கொடை ரோடைத் தாண்டியதும், திண்டுக்கல் வரை, பின் அதைத் தாண்டியும் கொஞ்ச தூரம் வரை, ரயில் பாதையின் இருபக்கங்களிலும் வெகு தூரத்திற்கு ஜவந்தி மலர்ந்திருக்கும். அல்லது திரா¨க்ஷ பயிர் செய்திருப்பார்கள். பந்தல் பந்தலாக படர்ந்திருக்கும் அந்த வெளியில் திரா¨க்ஷப் பழ்ங்கள் கொத்துக் கொத்தாகத் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். இப்போது என்ன செய்கிறார்களோ தெரியவில்லை. அதன் பிறகு அந்த வழியில் பிரயாணம் செய்ததெல்லாம் ஓரிருமுறை இரவு நேரங்களில் ரயில் அந்தப் பகுதியைக் கடந்து விடும். இம்மாதிரி கண்ணுக்கெட்டும் தூரம் வரை ஜவந்திப் பூக்களாக பார்த்தது முதல் அனுபவம்.மிக சந்தோஷம் தந்த அனுபவம். உலகம் இப்படியெல்லாம் கூட அழகாக இருக்கிறதே, எல்லாமே நிலக்கோட்டைக்கு அப்பால் தானா? என்று நினைத்தேன். இம்மாதிரியான மலர்ப்பரப்பை ஹாலந்து தேசத்தில், செய்திப் படங்களிலும், இந்நாட்களில் நம் சினிமாக் காட்சிகளில் தான் டூயெட் பாட ஹாலந்து போவதால் பார்க்கக் கிடைக்கிறது. ஹாலந்தில் காணுவது போன்று அடிவானம் வரை விஸ்தாரமான மலர்ப் பரப்பல்ல, திண்டுக்கல்லைச் சுற்றிக் காணப்பட்டது.

ஒவ்வொரு நிலையத்திலும் நின்று நின்று சென்று கொண்டிருந்தது வேடிக்கையாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது. எத்தனைபேர்கள், இறங்குவதுன் ஏறுவதுமாக. வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில், அதாவது இரண்டு மூன்று நிலயங்களில் அடுத்தடுத்து நின்றதும், மாமாவிடம் எப்போது ஊருக்குப் போகும் என்றுகேட்டேன். "சாயந்திரமாத்தாண்டா போகும். அதான் சாப்பிடறதுக்கெல்லாம் எடுத்துண்டு வந்திருக்கே" என்றார். நான் இடைப்பட்ட எண்ணற்ற ரயில் நிற்கும் நிலயங்களை எண்ணத் தொடங்கினேன். முப்பத்திஒன்றோ, முப்பத்தி இரண்டோ எண்ணினேன் என்று ஞாபகம். இது அந்த 1942 அல்லது 1943 வருடத்தில் எண்ணிய கணக்கின் நினைவு தான். இன்னமும் இந்த எண்ணிக்கை எனக்கு நினைவில் பதிந்திருக்கிறது. சரிதானா, இவ்வளவு ரயில் நிலயங்கள் இருக்கின்றனவா என்று சரிபார்க்க ரயில்வே கால அட்டவணைப் புத்தகத்தைப் பார்த்தேன். அதில் வேக வண்டிகள் நிற்கும் நிலயங்கள் மாத்திரமே குறிப்பிடப்பட்டிருந்தன. ஆக, இந்த எண்ணிக்கை சரிதானா என்பது இப்போது தெரியாது. அந்த வயதில், முதல் அனுபவத்தில் எண்ணத் தோன்றிற்று. அது வேடிக்கையாகவும் இருந்தது.

பெரிய நிலயங்களில், அதாவது ரயில் சந்திப்புகளில் வண்டி அதிக நேரம் நின்றது. என் ஞாபகத்தில் திருச்சி வந்ததும் மாமா எங்களையெல்லாம் சாப்பிடச் சொல்லிவிட்டு, "இதோ வந்து விடுகிறேன்" என்று சொல்லிவிட்டு ரயிலை விட்டு இறங்கி வெளியே போனார். வண்டி கிளம்புவதற்குள் திரும்பி வந்துவிட்டார். வந்த பிறகு தான் அவர் சாப்பிட ஆரம்பித்தார். பின்னர் நான் அவர் இறங்கிப் போனது எதற்கு என்று கேட்டுத் தெரிந்து கொண்டேன். அக்காலங்களில் நீண்ட தூர ரயில் பிரயாணங்களுக்கு கட்டணம் அதிகம் என்றும் அதனால் தான் கொடைரோடிலிருந்து திருச்சிக்கு ஒரு முறையும், பின்னர் திருச்சியில் இறங்கி கும்பகோணத்திற்கு மறுபடியும் எல்லோருக்கும் டிக்கட் எடுத்து வந்தார் என்றும் தெரிந்தது. எனக்கு அவர் திருச்சியில் இறங்கியது தான் தெரியும். இடையில் திண்டுக்கல்லிலும், பின்னர் தஞ்சாவூரிலும் ரயில் நிற்கும் நேரம் அதிகம் என்ற போதிலும், இப்படி அடிக்கடி இறங்கி டிக்கட் எடுப்பது சிரமம் என்றா, இல்லை, இந்த சிரமத்திற்கு ஏற்ற பணம் மிச்சம் அதில் இல்லை என்றா என்பது தெரியாது. இப்போது எங்கும் அந்தமாதிரி சலுகைகள் கிடையாது அப்போது அந்த சலுகை இருந்தது இப்போது நினைத்துப் பார்க்க வேடிக்கையாகத் தான் இருக்கிறது. சலுகைகள் கொஞசம் தலைகீழாகத் தான் தோன்றுகிறது. ஒரு வேளை அந்தக் காலத்தில் ஏழை மக்கள் ரயிலில் நீண்ட தூர பிரயாணங்களை மேற்கொள்வதில்லை என்றோ, அல்லது நீண்ட தூரம் பிரயாணம் செய்பவர்கள் கொஞ்சம் கூட கொடுத்தால் சௌகரியமாக பயணம் செய்யலாம் என்றோ, என்ன தர்க்க நியாயமோ தெரியவில்லை. அப்போது கொடைரோடிலிருந்து கும்பகோணத்திற்கு ஒரு டிக்கட்டுக்காண கட்டணம் ஒரு ரூபாய் பத்தணா தான். இதில் மாமா திருச்சியில் இறங்கி டிக்கட் மறுபடியும் வாங்கி மிச்சம் பிடித்திருக்கக்கூடியது எவ்வளவு அணாக்கள் என்று எனக்குத் தெரியாது. அது சில அணாக்கள் அல்லது ஒரு ரூபாய்க்குக் கிட்டத்தட்ட இருக்கலாம். ஆனால் இங்கு நான் இதைச் சொல்லக் காரணம் ஒன்று, இந்த மாதிரியான வேடிக்கையான சலுகைகள் அன்று இருந்தன. இரண்டு, என் மாமாவின் வருவாயில், இப்படி மிச்சம் பிடிக்கும் சில அணாக்களோ,அல்லது ஒரு ரூபாய் சொச்சமோ, பெரிய கணிசமான தொகையாக இருந்திருக்கிறது என்பதும் தான். இப்படி அணா அணாவாக கணக்கிட்டுச் செலவழிக்கும் நிலையில் இருந்த மாமா தான் என்னை இரண்டு வயதிலிருந்து மதுரையில் 9-வது படிப்பு முடியும் வரை படிப்பித்தார். பின்னர் என் இடத்தை என் அடுத்த தம்பி எடுத்துக் கொண்டான். அவன் எஸ்.எஸ் எல்.ஸி வரை படித்தான். அவன் படித்து தேர்ந்ததும், அவனுக்கு அடுத்த தமபியும் மாமாவிடம் தான் படிக்கச் சேர்ந்தான். அவனுக்கு மதுரையோ வத்தலக்குண்டோ போகத் தேவை இருந்திருக்கவில்லை. அவன் காலத்தில் நிலக்கோட்டையிலேயே ஒரு போர்டு ஹைஸ்கூல் தொடங்கப்பட்டு விட்டது.

வெங்கட் சாமிநாதன்/16.12.07
vswaminathan.venkat@gmail.com


© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner