கிடைக்கப்பெற்றோம் - எழுத்தாளர் ஜோதிகுமாரின் 'அசோகமித்திரனின் 18ஆவது அட்சக்கோடு: ஓர் கலை தரிசனம்? இன்னும் சில எழுத்துக்கள்' - வ.ந.கிரிதரன் -
பதிவுகள் இணைய இதழில் வெளியான 'நந்தலாலா' ஜோதிகுமாரின் கட்டுரைகள் சில தொகுக்கப்பட்டு, 'அசோகமித்திரனின் 18ஆவது அட்சக்கோடு: ஓர் கலை தரிசனம்? இன்னும் சில எழுத்துக்கள்' என்னும் தலைப்பில் தொகுப்பு வெளிவந்துள்ளது. இத்தொகுப்பினை சவுத் விஷன் புக்ஸ் (சென்னை) , நந்தலாலா (இலங்கை) ஆகிய பதிப்பகங்கள் இணைந்து வெளியிட்டுள்ளன. நூலின் அட்டை ஓவியத்தை வரைந்திருப்பவர் சதானந்தன். நந்தாலா படைப்புகளை வெளிவர் உதவி செய்யும் திரு.சி.ராதாகிருஷ்ணன் இந்நூல் வெளிவருவதற்கும் உதவியுள்ள விபரத்தை ஜோதிகுமார் முன்னுரையில் தெரிவித்துள்ளார். ஜோதிகுமார் தனது முன்னுரையில் கட்டுரைகளை வெளியிட்ட பதிவுகள் இணைய இதழுக்கு மறக்காமல் நன்றி தெரிவித்துள்ளார். அதற்காக பதிவுகள் சார்பில் நன்றி.
இந்நூலில் ஜோதிகுமார் தான் சந்தித்த முக்கிய ஆளுமைகள் சிலரைப்பற்றிய அனுபவங்களை விபரித்துள்ளார். தான் வாசித்த நூல்கள் சிலவற்றைப்பற்றி, அவற்றுக்குப்பின்னால் மறைந்துள்ள அரசியல் பற்றிய தன் பார்வைகளை வெளிப்படுத்தியுள்ளார். இலக்கியவாதிகளைப்பற்றி எழுதியிருக்கின்றார். மலையகம் தந்த முக்கிய இலக்கியவாதியான ஸி.வி.வேலுப்பிள்ளையின் சமரசமற்ற போக்கினைப்பற்றி எடுத்துரைத்திருக்கின்றார். பேராசிரியர் கா.சிவத்தம்பியின் ஆளுமையின் மறு பக்கத்தை பேராசிரியரின் உரையாடல்களூடு எடுத்துக் காட்டுகின்றார். வாதப்பிரதிவாதங்களை எழுப்பக்கூடிய விபரிப்புகள். 'அசோகமித்திரனின் 18ஆவது அட்சக்கோடு, ஜெயமோகனின் ரப்பர் நாவல்களைப் பற்றிய இவரது விமர்சனங்கள் ஆழமான தர்க்கங்களை வேண்டி நிற்கின்றன.