- எழுத்தாளர் 'நந்தலாலா' ஜோதிகுமாரின் '23ஆம் வயதில் பாரதி' நூல் பற்றிய , கணையாழி சஞ்சிகையின் அக்டோபர் 2025 இதழில் வெளியான எனது கட்டுரை.- 

பகுதி ஒன்று

தன் குறுகிய வாழ்வில் மகாகவி பாரதியின் சிந்தனை வளர்ச்சியை வெளிப்படுத்தும் அவரது எழுத்துகள் (கவிதைகள், கட்டுரைகள்) என்னை மிகவும் வியப்புக்குள்ளாக்குபவை.  அவரது எழுத்துகள் மானுட பருவங்களின் வளர்ச்சிக்கேற்ப அர்த்தங்களிலும் புது அர்த்தங்கள் தருபவை.  குழந்தைக்கும் பாரதியைப்பிடிக்கும்.  சிந்தனை முதிர்ச்சியுற்ற , தேடல்மிக்க முதிய மானுடருக்கும் பிடிக்கும்.  இருப்பை நன்கு உணர்ந்து கொண்ட , முதிர்ச்சியுற்ற சிந்தனையாற்றல் மிக்க ஒருவரின் எழுத்துகளுக்கே காலத்துடன் ஈடுகட்டி, இவ்விதம் எழுந்து நிற்கும் வல்லமை உண்டு. ஏனைய ஒற்றைப்பரிமாணம் மிக்க தட்டை எழுத்துகள் மானுடப் பருவமொன்றுடன் தேங்கி, அப்பருவத்துக்குரிய அழியாக கோலங்களாக நிலைத்து நின்றுவிடும் பண்பு மிக்கவை. ஓர் எழுத்தாளராக, தேசிய, மானுட வர்க்க . சமூக விடுதலைப் போராளியாக அவர்தம் ஆளுமையின் பரிணாம வளர்ச்சியினைச் சாத்தியமாக்கியவை எவை, சாத்தியமாக்கிய ஆளுமைகள் எவர் என்ற் கேள்விகள் அடிக்கடி எனக்குள் எழுவதுண்டு.  

அண்மையில் பதிவுகள் இணைய இதழில் தொடராக வெளியாகி , நூலுருப்பெற்ற 'நந்தலாலா' எல்.ஜோதிகுமாரின்  ' 23ஆம் வயதில்  பாரதி' (23 - 24ஆம் வயதில் பாரதி, இருபத்து நான்காம் வயதில் பாரதி, இருபத்து மூன்றாம் வயதில் பாரதி, '23-24 வயதில் பாரதி : வேல்ஸ் இளவரசரை வாழ்த்திய கவிதையும் - கட்டுரையும்' என்னும் தலைப்புகளில் பதிவுகள் இணைய இதழில் வெளியான கட்டுரைகளை உள்ளடக்கிய நெடுங்கட்டுரை) கட்டுரையில் இக்கேள்விகளுக்கான சில  பதில்கள் இருப்பதை வாசித்தபோது அறிய முடிந்தது. இந்நெடுங் கட்டுரை ஜோதிகுமாரின் தர்க்கச்சிறப்பு மிக்க சிந்தனை முதிர்ச்சியின் வெளிப்பாடு என்பதைக் கட்டுரையை வாசிக்கும் எவரும் எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.  பாரதியின் அனைவராலும் அறியப்பட்ட அவரது ஆளுமையின் அடிப்படைக்கூறுகளைந் நிர்ணயிக்கும் முக்கிய அவரது வயதாக 23 - 24 ஐக் குறிப்பிடலாம் என்பதை ஆய்வுபூர்வமாக எடுத்துரைக்கின்றது இக்கட்டுரை. கூடவே அப்பருவத்தில் அவரது ஆளுமையில் , சிந்தனையில் ஏற்பட்ட பரிணாம மாற்றங்களைக் கவனத்திலெடுத்து ஆராய்கின்றது.

நூலுக்கான முகவுரை கவித்துவமானது. அதில் ஜோதிகுமார் பின்வருமாறு கூறுவார்: 

"பாரதியின் சித்திரமானது இன்றுவரை இன்னமும் முழுமையாகத் தீட்டப்பட்டதாக இல்லை. கூடினால் ,அவனது ஆளுமையில் ஒரு இருபத்தைந்து வீதத்தைக் கீறினார்களே தவிர அவனது மொத்த ஆளுமையையும் வெளிப்படுத்தும் ஓவியங்கள் இல்லை எனலாம். அவனைப் பொறுத்த தகவல்கள் போதாது என்பது ஒருபுறமிருக்க தத்தமது வர்க்க நலன்களின் செல்வாக்குகள் சிதைவினை ஏற்படுத்துவது. மறுபுறம் , பாரதி குறித்த திரைப்படத்தில் இருந்து பல்வேறு ஓவியங்கள் வரை இந்தக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவையே. அவனது ஆளுமையை  முற்றாகப் படம்  பிடிக்கத் தற்போதுள்ள திரைகள் தாங்கப்போவதில்லை என்பது வெளிப்படை. இனி  ஒரு திரையைக் கட்டுவிக்காமல் , பாரதியை முழுமையாக எம்முன் கொண்டுவந்து நிறுத்துவது முடியாத காரியமாகின்றது.  இப்பின்னணியில் கைலாசபதியின் பாரதி குறித்த பார்வைகள் விதந்துரைக்கத்தக்கவை. அவரது காலத்தில் சீனி.விஸ்வநாதன் அவர்களின் தேடல்கள் யாவும் வெளிவராதது துரதிஸ்டமே. அபப்டி இருந்திருந்தால்  அது தமிழுக்குக் கிடைத்த பெரும் பொக்கிஷமாகவே இருந்திருக்கும்."

இவ்வாய்வுக் கட்டுரை பினவரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: 

பகுதி 1 - 'வேல்ஸ் இளவரசரை வாழ்த்திய கவிதையும் கட்டுரையும்.
பகுதி 2 -  இருபத்திநான்காம் வயதில் பாரதி:: ஆன்ம உணர்ந்திறன்
பகுதி 3 - இருபத்திநான்காம் வயதில் பாரதி:  பாரதியின் முகங்கள்
பகுதி 4 - இருபத்திநான்காம் வயதில் பாரதி: திலகரின் அரசியலை பாரதி அறிமுகப்படுத்தும் முறைமை.
பகுதி 5 -  இருபத்திநான்காம் வயதில் பாரதி: பாரதியின் அணுகுமுறை

'வேல்ஸ் இளவரசரை வாழ்த்திய கவிதையும் கட்டுரையும்.

மதுரை சேதுபதி கல்லூரியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருந்த பாரதியாரின் வாழ்க்கையின் மிக முக்கியமான திருப்புமுனையாக அவர் சுதேசமித்திரன் பத்திராதிபராகப் பணியாற்றச் சென்றதைக் குறிப்பிடுவார் ஜோதிகுமார். பாரதி என்னும் இளைஞனை , அவனது ஆளுமையை இனங்கண்டு , சுதேசமித்திரனில் கொண்டு சேர்க்கின்றார் திரு.ஜி.சுப்ரமணிய ஐயர். இது நாமறிந்த பாரதி என்னும் ஆளுமையை உருவாக்கிய முக்கியமான திருப்புமுனையாக ஜோதிகுமார் கருதுவார்:

"கிட்டத்தட்ட இருபத்திரண்டு வயதே அரும்பியிருக்கக்கூடிய பாரதி என்ற இந்த இளைஞனை இனங்கண்டு, அவனை மதுரை சேதுபதி கல்லூரியிலிருந்து, சென்னை சுதேசமித்திரனிற்கு இட்டுவந்த பெருமை, திரு.ஜி.சுப்ரமணிய ஐயரையே சாரும்.  மதுரை சேதுபதி கல்லூரியில் தமிழாசிரியனாய் இருந்த இவ் இளைஞன், தனது தமிழாசிரியர் பதவியை விட்டுவிட்டு, விடுதலைப்போர் மோகம் சூழ்ந்த காலத்தில் ஓர் பத்திரிகை தொழிலில் - அதுவும் பதவி இன்னதெனச் சரியாக நிர்ணயிக்கப்படாத ஒரு சூழலில் சென்று சேர தீர்மானம் கொண்டது – அவனது வாழ்வில், அவன் எடுத்து வைத்த முதல் திருப்புமுனை படிகளில் ஒன்றாகின்றது (1904 – நவம்பர்). இம்முடிவு, இவ் இளைஞனை ஒரு பரந்த உலகத்தை நோக்கி உந்தித்தள்ளி இருந்திருக்க வேண்டும். குறுகிய காலத்துள், பல்வேறு திறமைகளால் தன்னை நிரூபித்துவிடும் இவ் இளைஞன், அப்பத்திரிகையின் உபபத்திராதிபராய், சில மாதங்களிலேயே நியமிக்கப்படுகின்றான். திரு.ஜி.சுப்ரமணிய ஐயரின் வியப்பையும், விநோதத்தையும், வாஞ்சையையும், சம்பாதித்துக்கொள்ளும் இப்புதிய இளைஞனை அவர் மிகுந்த பிரியத்துடன் பார்க்கின்றார் - அதிசயத்துடன்."

பாரதியாரின் வாழ்வில் ஜி.சுப்பிரமணிய ஐயரின் பங்களிப்பு முக்கியமானது. மேலும் ஆய்வுக்குரியது.  

இக்காலகட்டத்தில் . (1905 செப்டெம்பர் - டிசம்பருக்கும் இடைப்பட்ட காலம்) வெளியான பாரதியின் எழுத்துகளூடு அவரது தமிழ்ச் சமூகத்தில் நிலவிய பிற்போக்கு அம்சங்களை, காலனித்துவ அடிமைத்தன மனநிலையை, தேசியச் சிந்தனைகளை ஆராய்வார் ஜோதிகுமார். குறிப்பாக ' 'வேல்ஸ் இளவரசரை வாழ்த்திய கவிதையும் கட்டுரையும்' பற்றிக் குறிப்பிடுகையில்  "இவ் இளைஞன், தமிழர்களின் பின்னடைந்த நாகரிகங்களை வெறுப்பவனாகவும், அதன் உள்ளூர ஓடும் காலனித்துவ அடிமைத்தனத்தைக் கண்டிப்பவனாகவும், இதனையே உள்ளூர மெச்சிக்கொள்ளும் ஆங்கிலேயரின்பால் கடும் விரோதம் பூண்டவனாகவும் இருப்பது அவனின் இளைமைக்காலத்து குணாதிசயங்களில் ஒன்றாக இருக்கின்றது (23 வயது). அதாவது சிங்கத்தின் சீற்றத்தைப்போல் இக்குணாதிசயங்கள் இவ் இளைஞனின் உடன்பிறப்பாகின்றன." என்பார் .

இக்காலத்தில் பாரதியார் எழுதிய முக்கிய படைப்புகளாக 'வங்கமே வாழிய' (செப்டம்பர் 1905 –பக்கம் 62), 'எங்கள் நாடு' (24.10.1905), 'வந்தே மாதரம் '(நவம்பர் 1905), 'பாரத குமாரிகள்' (ஜனவரி 1906), 'வேல்ஸ் இளவரசனுக்கு பாரத கண்டதாய் நல்வரவு கூறுதல்' (29.01.1906) ' ஆகியவற்றைச் சுட்டிக்காட்டும் ஜோதிகுமார் . பங்கிம் சந்திர சாட்டர்ஜீயின்,  'ஆனந்தமடம்' நாவலில் இடம் பெறும் வந்தே மாதரம் பாடலை  பாரதி மொழிபெயர்த்திர்ப்பது அவரது மொழி பெயர்க்கும் ஆற்றலுடன் அவரது மத்ததுடன் கூடிய தேசிய விடுதலைப்போராட்டச் சிந்தனைகள் மீதான ஈடுபாட்டையும் வெளிப்படுத்துகின்றது என்பார். பாரதியார் வந்தே மாதரம் பாடல் பற்றி கூறிய கருத்துகளின் அடிப்படையில் ஜோதிகுமார் பின்வருமாறு குறிப்பிடுவார்: 

"இவ்இளைஞனின் மேலே, கூறப்பட்ட கூற்றுக்களில், இரண்டு விடயங்கள் முக்கியத்துவப்படுகின்றன. ஒன்று, மதத்துடன் இணைந்த தேசியத்தை அவன் விதந்துரைப்பது (அல்லது மதத்தைப் புனர்நிர்மாணம் செய்துக்கொள்வது). மற்றது, இவ்இளைஞனின் மொழிப்பெயர்க்கும் லாவகமும், தனிச் சிறப்பும்."

'ஆனந்தமடம்' நாவல் சந்நியாசிகள் சிலர் ஒன்றிணைந்து ஆங்கிலேய, மகம்மதியப் படைகளுக்கு எதிராகப் போராடியதை விபரிக்கும் நாவல். அதில் விபரிக்கப்படும் சந்நியாசிகளில் ஒருவரான  பாபாநந்தன் என்பவர்  'வந்தேமாதரம்'  என்ற பாடலைப் பாடுவதாக அந்நாவலில் வரும். இப்பாடல் பாரதியாரை ஈர்த்திருக்கின்றது, அந்த வயதில் அவரை அப்பாடல் ஈர்த்திருப்பதன் விளைவே அவரை அப்பாடலைத் தமிழாக்கம் செய்ய வைத்திருக்கின்றது. இது பற்றி ஜோதிகுமாரின் மேற்படி கட்டுரையும் வினாவெழுப்பியிருக்கின்றது:

 “ஆனந்தமட” சந்நியாசிகள் முன்னெடுத்த கலகங்களை இவன் வழிமொழிந்து, இந்து புனருத்தாரண நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கின்றானோ என்ற நியாயமான சந்தேகம் இங்கு ஏற்படுவதாகும்."

இவ்விதம் கேள்வி எழுப்பும் ஜோதிகுமார் கலாநிதி கைலாசபதியின் பாரதி பற்றிய கூற்றுகளில் ஒன்றான “தேசபக்தியையே தெய்வபக்தியாக மாற்றிக்கொண்டார்"  என்பதைக் குறிப்பிடுகையில் "கைலாசபதி, தனது நூலான இருமகாகவிகளில் இவ்விதம் கூ.' என்று குறிப்பிடும் ஜோதிகுமார் ஒரு விடயத்தில் உறுதியாக நிற்கின்றார். அது - பாரதியார் தேசபக்தி, தெய்வபக்தி ஆகிய எண்ணங்களில் ,அவற்றின் வேறுபாடுகளில் , அவற்றைத் தெளிவாகப் பிரித்தறியும் ஆற்றல் மிக்கவராக இருந்திருக்கின்றார் என்பதுதான். 'மேற்படி எண்ணங்களில் உள்ளடங்கும் வேறுபாடுகளை வேறுபடுத்தியும் பிரித்து அறிந்துகொள்ளும் திறனும் இவ் இளைஞனில் அன்றே அடி எடுத்து வைப்பதாக உள்ளது என்பதுவே முக்கியமாகின்றது' என்கின்றார்.

 'வேல்ஸ் இளவரசரை வாழ்த்திய கவிதையும் கட்டுரையும்' என்னும் இம்முதலாம் பகுதியில் ஜோதிகுமார் கவனத்திலெடுத்திருக்கும் இன்னுமொரு முக்கிய விடயம் - பாரயாரின் தாதர்கள் பற்றிய சிந்தனைகள். யார் தாதர்கள்?  இதற்கான விடையினை அவர் , கலாநிதி கலைசபதியின் கூற்றினூடு, பின்வருமாறு குறிப்பிடுவார்:

"துரைத்தன உத்தியோகத்தர்களை, 'தாதர்கள்', (என்றும்) 'சேவகர்கள்' என்று (ம்) அலட்சியமாக (பாரதி) குறிப்பிட்டார் (ஒப்பியல் இலக்கியம் : சிந்துக்குத் தந்தை : பக்கம் 161)".  

தாதர்களைப்பற்றிய பாரதியாரின் 'ஒரு பஞ்சாபி மாது'  கட்டுரையில் வரும் "இங்கிலாந்து சென்று உயர் பரீட்சை தேறிவருவோர்களிற் பெரும்பாலர் சுதேசபிமானம் சிறுதேனும் இல்லாமல் இத்தேச சனங்கள் ஏதோ தாழ்ந்த நிலையில் உள்ளவர்கள் போலவும், தாம் ஏதோ இங்கிலாந்து சென்று திரும்பியதும்… தெய்வப்பிறவி எடுத்துவிட்டது போலவும் பாவனை செய்துக்கொண்டு இருப்பதை நாம் கண்டிருக்கின்றோம்'' என்பதைச் சுட்டிக்காட்டும் ஜோதிகுமார் "இவ்வரிகளில் தென்படும், உக்கிரமான விமர்சனமானது காலனித்துவ அடிமைதனத்துக்கு எதிரான வன்மம் கொண்டது என்பது மாத்திரமல்லாமல், இவ்இளைஞனின் ஓர் இருபத்து மூன்று வயதில், இப்படி, ஆழமான ஆங்கிலேய எதிர்புணர்வைக் காட்டுவது அதிலும், தேடிச் சோறு தின்பர்பால் ஆத்திரம் கொள்வது, ஆச்சரியப்படவைப்பது." என்கின்றார்.

அடுத்தது பெண்களின் தாழ்வு நிலை பற்றியும் பாரதியாரின் சிந்தனை அப்பருவத்திலேயே திரும்பியிருக்கின்றது என்பதை அவரது 'பாரதகுமாரிகள்'' கட்டுரை, துளசிபாய் சிறுகதை ஆகியவற்றின் மூலம் எடுத்துக்காட்டுகின்றார். துளசிபாய் சிறுகதை மகம்மதிய வீரன் உடன் கட்டை யேறவிருக்கும் இராசபுத்திரப் பெண்ணொருத்தியைக் காப்பாற்றுவதை மையமாகக் கொண்டதுடன் , அவள் மீதான அவனது காதலையும் விபரிப்பது.  இது பற்றிக் குறிப்பிடுகையில் 'பெண் விடுதலையைக் கோரி, உடன்கட்டை ஏறுதலை வெட்கமுற செய்து, இந்து – முஸ்லீம் அன்பை உயர்த்தி கதை எழுத எத்தகைய திராணியை இவ்இளைஞன் அன்று கொண்டிருக்க கூடும் என்பது கேள்வியாகின்றது.' என்கின்றார். அத்துடன் பாரதகுமாரிகள் என்னும் கட்டுரையில் வரும் பாரதியின்   "ஆதார சக்திகளாகிய, மாதர்களின் ஹிருதயமும் அவர்களது ஆன்மாவும் இருளடைந்து போக விட்டு விடுவதைக் காட்டிலும் பாதக செயல்வேறில்லை. ஞானகிரணங்கள் அவர்களது ஆன்மாவில் தாக்குமாறு செய்தாலன்றி நமக்கு வேறு விமோசனம் கிடையாது” என்னும் கூற்றினைச்  சுட்டிக்காட்டும் ஜோதிகுமார் , "சுருக்கமாகக் கூறினால், "ஞானகிரணங்கள், அவர்களது ஆன்மாவைத் தாக்குமாறு' செய்யும் வகையில் ஓர் எழுத்து உருவாக வேண்டும் என அவன் விரும்புவதாய் உள்ளது. ஆனால் இவ்விருப்பமானது, நிறைவேற்றப்பட வேண்டுமெனில், முதலில், அத்தகைய எழுத்தை உருவாக்கும் ஓர் ஆன்மா உருவாக வேண்டும் என்கின்றது." என்று கூறுவார்.  அவ்வயதிலேயே பாரதியார் பெண்களின் உயர்நிலைக்குக் குரல் கொடுக்கும் அதே சமயம் , எழுத்தின் நோக்கம் எவ்வகையில் அமைந்திருக்க வேண்டும் எனபதையும் உணர்ந்திருந்தார் என்பதையே ஜோதிகுமார் இவ்விதம் சுட்டிக்காட்டுகின்றார்.

அடுத்து இப்பகுதியில் ஜோதிகுமார் கவனத்திலெடுத்திருக்கும் இன்னுமொரு முக்கிய விடயம் - காசி காங்கிரஸில் பாரதியார் பங்கு பற்றும் நிகழ்வாகும்.  அக்காங்கிரஸ்  கூட்டத்தில் பங்கு பற்றும் பாரதியார் திலகரின் தீவிரப் போக்கினால் ஈர்க்கப்படுகின்றார். அதே சமயம் அக்காலகட்டத்தில் காங்கிரஸை வழி நடத்திக்கொண்டிருந்த நெளராஜி போன்றவர்கள் சீர்திருத்தங்களுடன் கூடிய ஆங்கிலேயரின் ஆட்சியை விரும்பியதாகக் கருதப்பட்டது. 

இது பற்றி ஜோதிகுமார் 'இது ஒருபுறம் இருக்க நௌரோஜி மக்கள் ஆர்ப்பாட்டங்களையும், எதிர்ப்புகளையும் ஆட்சேபித்தார் என்பதும் இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆட்சி நீடித்தாக வேண்டும் - சிற்சில திருத்தங்களோடு – என அபிப்பராயப்பட்டதும் அவரே என்றும் கூறப்படுவதுண்டு.' என்று குறிப்பிடுவார். 

அதே சமயம் பாரதியாரைச் சுதேசமித்திரனுக்கு அழைத்து வந்தவரான ஜி.சுப்ரமணிய ஐயர் அவர்கள் காசி காங்கிரஸிற்கு (1905) வேல்ஸ் இளவரசரும் பார்வையாளர்களாக பங்கேற்க வேண்டும் எனச் சுதேசம் மித்திரன்  பத்திரிகையில் பரிந்துரை செய்கின்றார்.  அத்துடன் வேல்ஸ் இளவரசர் காசி மகாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்ற தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது அதனை ஆதரிக்கின்றார். இவற்றைச் சுட்டிக்காட்டும் ஜோதிகுமார் அச்சமயம் பாரதியார் இருதலைக்கொள்ளி எறும்பாகத் தத்தளிக்கின்றார் என்கின்றார். 'இவை அனைத்துமே பாரதி என்ற காட்டாற்றை எத்தகைய இக்கட்டில் தள்ளியிருக்கும் என நிதானிப்பது ஏற்புடையதே' என்கின்றார். அத்துடன் "அதாவது, நௌரோஜின் அரசியல், பாரதி என்ற இவ்இளைஞனுக்கு ஏற்புடையதாய் இருக்க முடியாது என்பது தெளிவு. இவனது அரசியல் ஒரு தீப்பற்றி எரியும் அரசியல். சாதியம் பொறுத்த அவனது எண்ணபாடும், மாதர்கள் பொறுத்த அவனது சிந்தனையும், தாதர்களை அவன் நோக்கிய விதமும், சர்வதேச விவகாரங்கள் தொடர்பில் அவன் காட்டிவரும் அக்கறையும் அவனுள் குமுறும் அரசியலை வெளிக்கொணர்வதாக உள்ளன.'' என்கின்றார்.

மதுரை சேதுபதி கல்லூரியில் ஆசிரியனாகவிருந்த பாரதியை இனங்கண்டு ,அவரைச் சுதேசமித்திரனுக்கு அழைத்து வருகின்றார் ஜி.சுப்பிர்மணிய ஐயர். பாரதியின் திலகர் மீதான ஈர்ப்பு அவரைச் சுதேசமித்திரனிலிருந்து 'இந்தியா' பத்திரிகைக்குக் கொண்டு செல்கின்றது. இவற்றை விபரிக்கும் இப்பகுதி  ஜோதிகுமாரின்  பாரதி பற்றிய தேடலையு,  அவரது தெளிவு மிக்க தர்க்கத்தையும் வெளிப்படுத்துகின்றது.

பகுதி  இரண்டு - ஆன்ம உணர்ந்திறன்

இப்பகுதியின் ஆரம்பத்தில் ஜோதிகுமார் 'மனிதனது இதய தாபங்கள் அனைதையும் சரியாக உள்வாங்கி, அவற்றை நல்ல முறையில் எதிரொலிக்கக் கூடியதாக, தன் ஆன்மாவை நுண் உணர்வுமிக்கதாய் மாற்றி அமைத்துக்கொள்ள உண்மைக் கலைஞன் வேண்டப்படுகின்றான். ஆனால், இத்தகைய ஆன்மாவை வடிவமைப்பதென்பதும், அதனைத் தக்கவைத்துக்கொள்வது என்பதும் கடின செய்கையே.'  என்று குறிப்பிடுகின்ரார்.  இது ஒரு கேள்வியை எழுப்புகிறது. அது - ஜோதிகுமார் ஆன்மா என்னும் கருதுகோளை ஏற்றுக்கொள்கின்றாரா என்பதுதான். மார்க்சியவாதிகள் ஆன்மா என்னும் கருதுகோளை ஏற்பதில்லை. அவர்கள் பொருள்முதல்வாதிகள்.  ஆன்மா என்று ஒன்றிருப்பதை ஏற்றுக்கொள்வதில்லை.  உண்மையில் ஆன்மா என்று இங்கு ஜோதிகுமார் கருதுவது எதனை?

ஆன்மா என்று ஜோதிகுமார் கருதுவது , பொருள்முதல்வாதிகள் கருதுவது போல் , உடலிலிருந்து தனித்து இயங்குமொன்றினை அல்ல , மாறாகச் சிந்தையைத்தான். அதனைத்தான் இந்நெடுங்கட்டுரையில் மூன்றாம் ப்குதியில் வரும் இவ்வரி புலப்படுத்துகின்றது: "ஓன்று அவனது ஆன்மாவில் (சிந்தையில்) தட்டுப்படக் கூடிய முரண்''

இங்கு பாரதியார் ஆன்மாவுக்கு இன்னுமோர் அர்த்தமாகச்  சிந்தை என்று கருதுவதையும் அறிய முடிகின்றது.  சிந்தை என்பது மார்க்சியவாதிகளின் கருத்துப்படி பொருள்வயமான மூளையின் செயற்பாடு. மூளையில்லையேல் சிந்தையில்லை என்பது அவர்கள் கருத்து.மாறாகக் கருத்துமுதல்வாதிகளோ ஆன்மா என்பது உடலிலிருந்து வேறானது என்று கருதுவர்.

இப்பகுதியில் பாரதியார் மதம், கடவுள் பற்றிய தேடல்கள் விரிவாக ஆராயப்படுகின்றன.  கடவுள்கள் பலர் இருப்பதை விவேகானந்தரைப் போல் பாரதியும் நிராகரிக்கின்றான்.  பாரதியார் மீதான சுவாமி விவேகானந்தரின் தாக்கம் விரிவாக ஆராயப்படுகின்றது.  பிரம்மம் என்னும் ஒன்றே அனைத்துக்கும் அடிப்படை . அதே சமயம் இவ்விதமான கடவுள், மதம் பற்றிய தேடல்கள் மானுட சமுதாயத்திலிருந்து விலகி,  தனித்து , தவங்களில் ஈடுபடுவதாக இருக்கக் கூடாது. அது அங்கிருந்து இறங்கி வந்து மக்களுடன் கலந்து நிகழ்வதாக இருக்க வேண்டுமென்பது பாரதியின் நிலைப்பாடு.  இதனை அவர் எவ்வாறு வந்தடைந்தார்?

இது பற்றிய தனது தேடலில் ஜோதிகுமார் , பாரதியாரின் மேற்படி கடவுள், மதம் பற்றிய நிலைப்பாட்டுக்கு சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகள் காரணமாக அமைந்திருந்தன என்பதை விவேகானந்தர் பற்றிய பாரதியாரின் கட்டுரை வரிகளையே ஆதாரங்களாகச் சுட்டிக்காட்டுவதன் மூலம் எடுத்துக் காட்டுகின்றார். அதே சமயம் விவேகானந்தரின் தாக்கம் பலமாக இருந்தபோதும், இவ்விதமான சிந்தனைகள்  பாரதிக்கு விவேகானந்தரைச் சந்திப்பதற்கு முன்னரே இருந்துள்ளது என்பதை அவரது மலையாள நம்பூதிரிகளுக்கிடையிலான சீர்திருத்தம் பற்றிய எழுத்துகளூடு சுட்டிக்காட்டுகின்றார்.

விவேகானந்தர் பற்றிய கட்டுரையில் பாரதியார் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

“18ம் வயதில் நரேந்திரர் (விவேகானந்தர்) பி.ஏ பரீட்சை தேறினார். 12 வயதான உடனே நரேந்திரர் கடவுளர் அநேகர் என்ற கொள்கையை நம்பாமல் நிறுத்திவிட்டார். .."இந்த ஜகத்திலே ‘பிரமத்தை யொழிய வேறொன்றுமில்லை’ யென்ற பெருங்கொள்கையை உலகத்தாருக்கு எடுத்துப்போதனை செய்யவந்த இம்மஹான், "

அத்துடன் , விவேகானந்தரின், வாழ்க்கை தரிசனம் குறித்து பின்வருமாறு கூறுகின்றான், இவ்இளைஞன் எனக் குறிப்பிட்டு,  விவேகானந்தர் பற்றிய பாரதியின் பின்வரும் கூற்றினை எடுத்துக்காட்டுகின்றார் ஜோதிகுமார் : “பிரம கள்ளுண்டு… பல இடங்களில் யாத்திரை புரிந்து… இமயமலைக்கு சென்று… வாழ்ந்து… இதற்கப்பால் லேகோபாகாரம் செய்ய வேண்டும் எனத் திருவருள் இவருக்கு உண்டாகிவிட்டது… இந்திய தேசத்தில் ஆண்களெல்லாம்… சரீர பலம், மனோ பலம், ஞான பலம் என்ற மூன்றுமல்லாது அற்ப வாழ்க்கையை வாழ்கின்றார்கள்… அதன் பேரில் இமயமலை சாரலில் இருந்து இந்த மகாரிஷி இறங்கி வந்து… பல இடங்களில் சுற்றிவிட்டு… சென்னை வந்து சேர்ந்தார்…”

இந்திய ஆண்கள் சரீர பலம், மனோ பலம், ஞான பலம் அற்று வாழ்கின்றார்கள். அவர்கள்தம் வாழ்க்கையை  உயர்த்த வேண்டுமென்ற எண்ணத்துடன் சுவாமி விவேகானந்தர் இமயமலைச் சாரலிலிருந்து கீழிறங்கி மக்களை நோக்கி வ்ருகின்றார். இது இளைஞான பாரதியாரை ஈர்க்கின்றது. இவர்கள் இருவரினதும் இவ்விதமான எண்ணப்போக்குக்குக் காரணம் இருவருமே மானுடரின் அடித்தளமாய் இருக்கும் மதத்தினை உய்ர்த்த வேண்டுமென்ற நோக்கமே என்கின்றார் ஜோதிகுமார்:

"இப்பின்னணியில், பாரதி முயன்றது எதனை என்பது கேள்வியாகின்றது. இருவருமே மனிதனை மாத்திரமன்றி, அதனது அடித்தளமாய் அன்று இருந்திருக்கக்கூடிய, மதத்தினையும் நிமிர்த்த முற்படுகின்றார்கள் எனக் கூறுவதே பொருத்தமானது."

மதம் பற்றிய , கடவுள் பற்றிய பாரதியாரின் தேடலை , அதனால் விளைந்த அவனது சிந்தை மாற்றங்களை 'ஆன்ம உணர்திறன்' என்னும் இப்பகுதியில் ஆராயும் ஜோதிகுமார் , கட்டுரையின் இறுதியில் இறுதியில் அக்காலகட்டத்து மாதரின் நிலை பற்றிய  பாரதியாரின் எண்ணங்களையும் குறிப்பிடுகின்றார். குறிப்பாக மிகவும் ஆக்ரோசமாகப் பெண்களை உடன் கட்டையேற்றும் பழக்கத்தைக்கண்டிக்கும் பாரதியின் எழுத்துகளைக் குறிப்பிடுகின்றார். 'மாதர் கோரிக்கைகள்' என்று இவ்வுப பிரிவுக்குத் தலைப்புமிட்டிருக்கின்றார்.

பஞ்சாபியிலுள்ள மாரிப்பூர் என்ற ஊரில், 1905களில் நடந்தேறிய, சதி தகனம் பற்றிய அவனது கடுமையான கோபத்தை வெளிப்படுத்துவதாக ' சக்கரவர்த்தினி'யில் பாரதியார் எழுதிய பின்வரும் கூற்று அமைந்திருக்கின்றது:

“…அவள் முகத்திலே துணி ஒன்றைக் கொண்டு மூடினதின் பேரில் அவளது கழுத்துவரை வரட்டிகளை அடுக்கி, நெருப்பைக் கொளுத்திவிட்டு, அந்நெருப்பிலே மூடபக்தி கொண்ட மகாபாதக மிருக ஜனங்கள், எண்ணெய், நெய் முதலியவற்றைக் கொண்டு சொரிந்தார்கள்… மத்தளங்கள் அடித்தும், ராம் ராம் என்று கூக்குரலிட்டும் அவளது அழுகை குரல் வெளியே கேளாதப்படித் தடுத்துவிட… (அவள்)… சிறிது நேரத்துக்கெல்லாம் சாம்பராகிவிட்டாள்....... “20 வயது கன்னிகையை ஆவலுடன் கொளுத்தி பாத்துவிட்டு, தமது நீச உயிர்களுக்கு, கஷ்டம் வரும்போது பொய் ஓலமிடுகின்ற இந்த ஈனர்களை கோட்டார் இலேசாக விடமாட்டார்களென்று நம்புகின்றோம்…” (பக்கம்:192).

பாரதியாரின் இக்கோபம் அவரது கோபத்தை மட்டுமல்ல, மேற்படி பெண்ணின் படுகொலைக்கு அடிப்படைக்காரணமான  அன்று நிலவிய  மத நிலையினையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கின்றது  என்பது ஜோதிகுமாரின் முடிவு. அத்துடன் நிவேதித்தாவுடனான சந்திப்பும் பாரதியாரின் பெண்கள் நிலை பற்றிய எண்ணங்களுக்குக் காரணமாகக் கருதப்படுகின்றதென்று  குறிப்பிடும் ஜோதிகுமார் , கூடவே , பாரதியார் அச்சந்திப்புக்கு முன்ரே எழுதிய 'துளசிபாய்' சிறுகதையும் சதி தகனத்தை வன்மையாகச் சாடுகின்றது என்றும் கூறுகினறார். இது பாரதியாருக்கு நிவேதித்தாவுடனான சந்திப்புக்கு முன்னிருந்தே பெண்கள் நிலை பற்றிய தெளிவான புரிதல் இருந்துள்ளதாக ஜோதிகுமார் நம்புவதை எடுத்துக்காட்டுவதாகவுள்ளது.


 பகுதி  மூன்று - பாரதியின் முகங்கள் !

இப்பகுதியின் ஆரம்பத்தில் ஜோதிகுமார் பாரதியின் மூன்று முரண்கள் பற்றிக் குறிப்பிடுகின்றார். அவையாவன்;  அவனது சிந்தையில் காணப்படும் முரண், அவன் அரசியலில் தென்படும் முரண், அவன் எழுத்தில் புலப்படும் முரண்.  இவ்விதம் ஆரம்பமாகும் கட்டுரையில் கட்டுரையாசிரியர் தொடர்ந்து இம்முரண்கள் பற்றி விரிவாகத் தர்க்கம் செய்வார் என்றே வாசிக்கும் எவரும் உணர்வர், ஆனால் 'இம்முரண்கள் ஒவ்வொன்றும் , தனித்தனி உதாரணங்களோடு அவனது வாழ்க்கை நகர்வுகளுக்கு ஏற்ப விவாதிக்கப்படுவது விரும்பத்தக்கது' என்பதுடன் மேலும் அம்முரண்கள் பற்றி விவாதிப்பதைத் தவிர்த்து விடுகின்றார் ஜோதிகுமார். 'இதன் காரணத்தினாலேயே ,இக்கட்டுரைத்தொடரின் முடிவுகளும் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட முடியாதவையாகின்றன' என்றும் கூறுகின்றார்.  இம்முரண்களைப்பற்றி விரிவாகத் தர்க்கத்தைத் தொடர்ந்திருந்தால் அது மிகவும் பயனுடையதாகவிருந்திருக்கும். பாரதியின் முரண்கள் எல்லாம் அவனது தேடலையும், வளர்ச்சியையும் , அவ்வளர்ச்சியினூடு அவனிடம் ஏற்பட்ட முதிர்ச்சியினையும், தெளிவினையும் வெளிப்படுத்துவதாக அத்தர்க்கம் அமைந்திருக்கும். அதற்கான சந்தர்ப்பத்தைத் தவற் விட்டுவிட்டார் ஜோதிகுமார். பிறிதொரு சந்தர்ப்பத்தில் , விரிவாக இம்முரண்கள் பற்றிய தர்க்கத்தை அவர் தொடர்வார் என்று எதிர்பார்ப்போம்.

அடுத்து அவர் கவனம் 24 வயது இளைஞனான பாரதியின் மானுட  இருப்பு, மரணம், சிறை, ஆங்கிலேயரின் மத ரீதியிலான பிரித்தாளும் தந்திரம், மிதவாதப் போக்கில் செயற்பட்டுக்கொண்டிருந்த இந்திய காங்கிரஸின் அம்மிதவாதப் போக்கிற்கு எதிரான விமர்சனங்கள், அவன் மீதான திலகரின் தீவிரவாதப் போக்கின் தாக்கங்கள், அக்கால உலக அரசியலில் அவனுக்கிருந்த் அறிவு, தெளிவு, ருஷய புரட்சியின் அடித்தளம் பற்றிய புரிதல் போன்றவற்றில் திரும்பி விடுகிறது. அவை பற்றிய விபரிப்புகளிலும், கேள்விகளிலும் மூழ்கி விடுகின்றது.  இவை பல தகவல்களை அறிமுகப்படுத்தவும் செய்கின்றன. 

உதாரணமாக அந்தமானில் அப்போது அமைக்கப்படடிருந்த செலூலர் சிறைக்கூடம் பற்றிய தகவல் முக்கியத்துவம் மிக்கது.  இந்திய தேசிய விடுதலைப்போரில் குதித்த போராளிகளை அடைத்து வைப்பதற்காகக் கட்டப்பட்ட சிறைக்கூடம் அது. மதப்பிரிவுகளை வைத்து மக்களைப் பிரித்தாளும் தந்திரத்தை ஆங்கிலேயரின் அரசு அரசியலில் மட்டுமல்ல , சிறைக்கூடக் கட்டமைப்பிலும் கையாள்கிறது. இது பற்றிக் குறிப்பிடுகையில் "இருவேறு மதக் குழுக்களுக்கிடையே ,நிலவக்கூடிய வேறுபாடுகளை, தூபமிட்டு வளர்க்கும் இச்செய்முறையை , சிறையிலும் ஆங்கிலேயர் பின்பற்றுகின்றனர்'  என்று குறிப்பிடும் ஜோதிகுமார் மலையகத்திலும் ஆங்கிலேயர்களால் சாதிரீதியாக அமைக்கப்பட்டன லயன்கள் என்று சுட்ட்டிக்காட்டவும் செய்கின்றார். இது முக்கியமானதோர் அவதானிப்பு. 

அத்துடன்  ஆங்கிலேயரின் இவ்விதமான பிரித்தாளும் தந்திரமானது 'பொதுவில் ஆதிக்கச்சகதிகளின் நகர்வுகள் நுண் அரசியல் திட்டங்களுடன் முன் கூட்டியே , ஆழச் சிந்திக்கபப்ட்டு அமுல்படுத்தப்படுவது என்பதைக் கூறியே ஆகவேண்டும்' என்று சுட்டிக்காட்டவும் அவர் தவறவில்லை.

இன்னுமோரிடத்தில் மானுட வாழ்வு பற்றிய பாரதியின் சிந்தனை மானுடக் காதல் பற்றியும் கவனத்திலெடுக்கத்தவறவில்லை என்பதை எடுத்துக்காட்டுவதுடன், அதனை கார்க்கியின் 'ஒரே முத்தம்' சிறுகதையுடன் ஒப்பிட்டு 'உலகச் சுமையைச் சுமப்பதற்கு இரண்டு ஜீவன்கள் ஒன்றிணைவது முக்கியமென்பதுடன், இவ்வுறவானது சிறப்பான , விதிவிலக்கான ஓர் உறவு என்ற ரீதியிலும் முக்கியத்துவப்படவே செய்கிறது என்றும் குறிப்பிடுவார் ஜோதிகுமார்.  அத்துடன் 'இந்தியச் சுதந்திரப் போர் , தன் தீச் சுவாலையை வீசி எரிய ஆரம்பித்துள்ள  இவ்வேளையில் காதலைப்பற்றிக் கதைக்க வரும் இவ்விளைஞ்ன அத்தீயிலிருந்து அந்நியப்படாமல் அதன் முளைகளை, தன் எழுத்துகளில் தேக்கித்தர முற்படுகின்றான்' என்றும் கூறுவார்.

பாரதியார் மானுடக் காதல் மீது எத்தகைய கருத்தினைக் கொண்டிருந்தார் என்பதற்கு அவனது கவிதைகள் பலவும் சான்று. 'காதல் காதல் காதல்,. காதல் போயில் சாதல்'' என்னும் அவனது குயில்பாட்டு வரிகள் நினைவுக்கு வருவதுடன் அவனை ஆட்டி வைத்த முதற்காதலும், அது பற்றிய அவனது கவிதை வரிகளும் நினைவுக்கு வருகின்றன. அதே சமயம் காதல் போன்ற மானுடத்  தனிமனித உணர்வுகளைப் பாடிய பாரதி அவற்றிலேயே மூழ்கிப்போய்விடவில்லை. தான் வாழ்ந்த மானுட சமுதாயத்தின் மானுட, வர்க்க, தேசிய, சமூக (மாதர் விடுதலையுட்பட) விடுதலைபற்றிய சமூக, அரசியற் செயற்பாடுகளை எழுத்திலும், வாழ்விலும் தொடர்ந்தான் என்பது முக்கியமானது, அதுவே அவனது வாழ்வின் , எழுத்தின் முக்க்யமானதோர் அம்சம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் அவனது எழுத்தில் , வாழ்வில் காணப்படும் முரண்பாடுகள் எல்லாம் அவனது தேடலின் , வளர்ச்சியின் அறிகுறிகளே. 

பகுதி நான்கு
 
அடுத்த இரண்டு பகுதிகளும் ('திலகரின் அரசியலை, பாரதி அறிமுகப்படுத்தும் முறைமை' , 'சுருக்கம்' & அணுகுமுறை) இருபத்து நான்கு வயது இளைஞனான பாரதி வரலாற்றில் எந்தப் புள்ளியில் நிறகின்றான் என்பதை ஆராய்வதுடன், அவனது சரியான ஆளுமையை முடிவு செய்வதுமாகும்.  அவன் மதவாதியா, தீவிரவாதியா, ஆங்கிலேயருக்கெதிரான் தேசிய விடுதலைப்போரில் அவனது நிலைப்பாடும், செயற்பாடும் எவையெவை என்பவை பற்றித் தர்க்கபூர்வமாக ஆராய்வதாகும்.  அவற்றை ஆராய்வதற்கு முதல் ஜோதிகுமார் பாரதியாரின் எழுத்தின் நோக்கம், எழுத்தின் தன்மை பற்றிச் சிறிது கவனம் செலுத்துகின்றார். 

பாரதியிம் எழுத்தும் நோக்கமும், தன்மையும்

பாரதியாரின் எழுத்தின் முக்கிய பண்பாக அவதானிக்கக்கூடியது அவரது ஆழமும், எளிமையும் கூடிய மொழி நடை.  உதாரணத்துக்கு 'நிற்பதுவே நடப்பதுவே' கவிதையைக் கூறலாம். பொருள் முதல்வாதம், கருத்து முத்ல்வாதம் பற்றிய தர்க்கமே அதன் அடிநாதம். ஆனால் அதனைக்கண்டடைவது முறையான, தர்க்கமொன்றின் மூலமே சாத்தியம். ஆனால் அவர் அக்கவிதையில் பாவித்துள்ள மொழி நடை என்பது மிகவும் எளிமையானது. எல்லாருக்கும் மிக இலகுவாகப் புரிந்து கொள்ளக்கூடியது. அதனால் விளையும் முக்கிய நன்மைக்களிலொன்று - வாசிப்பின் பல்வேறு படி நிலைகளிலுள்ள வாசகர்களாலும் இக்கவிதையை எளிதாக வாசிகக் முடியும். ஆனால் , புரிதல்தான் அவரவர் வாசிக்கும், சிந்திக்கும் திறன் மற்றும் அனுபவத்திற்கேற்ப வேறுபடும். 

இவ்விதமாக பாரதியார் தன் எழுத்து நடையைப் பாவித்ததற்கு ஒரு நோக்கம் இருந்ததா என்பது பற்றித்  தன் கவனத்தைச் செலுத்துகின்றார் ஆய்வாளர் ஜோதிகுமார்.  பாரதியாரின் 'பாரதகுமாரிகள்' கட்டுரையையே இதற்கும் ஆதாரமாகக்கொண்டு அவர் பின்வருமாறு கூறுவார்: 

“நமது தேசத்தின் ஆதார சக்திகளாகிய மாதர்களின் ஹிருதயமும், அவர்களது ஆன்மாவும் இருளடைந்துபோக விட்டுவிடுவதைக் காட்டிலும் பாதகச் செயல் வேறில்லை. ஞானக் கிரணங்கள் அவர்களது ஆன்மாவில் தாக்குமாறு செய்தாலன்றி நமக்கு வேறு விமோசனம் கிடையாது "

இது பற்றி மேலும் கூறுகையில் "எழுத்தின் நோக்கத்தை, இதைவிட நேர்த்தியாகச் சொல்வது கடினம். இவ் இளவயதில், இவ் இளைஞன் தனது எழுத்தின் நோக்கத்திற்கான மேற்படி தாரக மந்திரத்தை இப்படியாக வரையறுத்துக் கொள்வது மாத்திரம் இல்லாமல், மேற்படி எழுத்தானது மக்களை அதிலும் குறிப்பாக, மாதரைச் சென்றடைய வேண்டிய தேவைப்பாட்டினையும் இவன் நன்கு உணர்வதினை, மேற்படி வரிகள் எமக்கு எடுத்தியம்புவதாக உள்ளன" என்று கூறுவார்.  

பாரதிக்குத் தன் எழுத்துகள் மக்களை, பெண்களைச் சென்று சேர வேண்டும் என்னும் தெளிவான நோக்கம் இருந்தது.  அவ்விதம் சென்றடைந்தாலே அவ்வெழுத்துகளால் பயனுண்டு என்பதில் அவனுக்கு மிகுந்த தெளிவிருந்தது. அதற்காக அவன் அதற்குரிய மொழியினைத் தேடி அடைந்தான். இவ்விதமானதொரு முடிவுக்கே ஜோதிகுமார் வருகின்றார். அவரது முடிவு தர்க்கச்சிறப்பு மிக்க , பாரதி பற்றிய அவரது அவதானிப்புகளில் ஒன்றாக அமைந்துமிருக்கிறது. இதனை வெளிப்படுத்தும் அவரது 'இதற்காக, ‘சொல்’ ஒன்றைத் தேடி அலையும் இவ் இளைஞன், இப்பயணத்தின் போது, மக்கள் விரும்பக் கூடிய ‘எளிய பதங்களை’ தேடுவதும் தர்க்கப்பூர்வமாகின்றது.' என்னும் கூற்று.

அத்துடன் அவர் நிற்கவில்லை. பாரதியாரின் மதரீதியிலான அம்சங்களை உள்ளடக்கிய அவரது  எழுத்துகளுக்கும்  ஏதாவது முக்கிய காரணம் இருக்கக் கூடுமோ என்பதிலும் அவரது கவனம் செல்கின்றது.  'வேறு வார்த்தையில் கூறினால், சொல் ஒன்றைத் தேடியும் எளிய பதங்களை நாடியும் நகரக் கூடியவன், மக்களின் தேசப்பற்றை மதப்பற்றாக மாற்றும் எண்ணக்கருவிற்கு (அல்லது மதப்பற்றைத் தேசப்பற்றாக மாற்றும் ஒரு எண்ணக்கருவிற்கு,) இக்காலப்பகுதியில், அதாவது தனது 24ம் வயதில், வந்து சேர்ந்துவிட்டானா என்பதுவே கேள்வியாக உருவெடுக்கின்றது.'என்னும் அவரது இக்கூற்று அதனைத்தான் புலப்படுத்துகின்றது. 

உண்மையில் தேசப்பற்றை மதப்பற்றாக மாற்றும் எண்ணக்கருவிற்கு என்பதற்கு மாறாக மதப்பற்றைத் தேசப்பற்றாக மாற்றும் எண்ணக்கருவிற்கு பாரதியார் வந்தாரா என்பதுவே சரியானதொரு கேள்வியாக இருக்கக்கூடுமென்று தென்படுகின்றது. ஏனென்றால் பாரதியார் தன் எழுத்துகளில் மதங்களில் உள்ள மூட நம்பிக்கைகளைக் கடுமையாகச் சாடியிருக்கின்றார். 'ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி   அலையும் அறிவிலிகள் -- பால் லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்   டாமெனல் கேளீரோ?' என்று பாடியிருக்கின்றார்.  'செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம் சேர்ந்திடலா மென்றே எண்ணி யிருப்பார் பித்த மனிதர்,அவர் சொலுஞ் சாத்திரம் பேயுரை யாமென்றிங் கூதேடா சங்கம்' என்று அறைகூவல் விடுக்கின்றார். அறிவே தெய்வம். பிரம்மம் என்பது அவரது தெளிவான நிலைப்பாடு.  இதனால்தான் 'அறிவொன்றே தெய்வமுண்   டாமெனல் கேளீரோ?' என்றும், 'இத்தரை மீதினி லேயிந்த நாளினில் இப்பொழு தேமுக்தி சேர்ந்திட நாடிச் சுத்த அறிவு நிலையிற் களிப்பவர் தூயவ ராமென்றிங் கூதேடா சங்கம்!' என்றும் அவரால் பாட முடிகின்றது. 

இவ்விதம் மதப்பற்றைத் தேசப்பற்றாக மாற்றும் எண்ணக்கருவே பாரதியாருக்கிருந்தது என்னும் முடிவுக்கே இறுதியில் ஜோதிகுமாரும் வருகின்றார், அதையே இக்கட்டுரைத்தொடரின் இறுதியாக அவர் வந்தடையும் ' தன்னைச்சுற்றி எழக்கூடிய நான்கு விதமான அழுத்தங்களை ஆழ உணரும் பாரதி, இவற்றுக்கு மத்தியில், திலகரின் அரசியலைக் களமிறக்க வேண்டியதன் அவசியத்தினையும், ஆனால் ஆயிரம் வருஷங்கள் பழைமைவாய்ந்த  ஒரு  சமூகத்தில் தான் பிறந்து வாழநேர்ந்துள்ள யதார்த்தத்தையும், இதற்கொப்ப, மக்களின் மதப்பற்றைத் தேசப்பற்றாக மாற்ற வேண்டிய தேவைப்பாட்டினையும், நன்கு உணர்ந்து, தன் வியாசத்திற்கு, பிரஞ்ஞையுடன் மதமூலாம் பூசமுனையும், ஒரு  விதிவிலக்கான இளைஞனின் அணுகுமுறையை, எடுத்துரைக்க முனைந்திருந்தோம். இவனது செயற்பாடுகள் அல்லது புரிதல் இலகுவில் ஒருவருக்குக் கைவரக்கூடியதொன்றல்ல என்பது தெளிவு. பல்வேறு நூல்களைக் கற்று, ஆழ சிந்தித்து, தெளிந்து, அதேவேளை மக்களின்பால் அபரிவிதமான பரிவையும் தன்னுள் பெருமளவில் வளர்த்துக்கொள்ளும் ஓர் இளைஞனால் மாத்திரமே இத்தகைய முன்னெடுப்புகள் சாத்தியப்படக் கூடும்.' என்னும் நிலைப்பாடும் தெளிவாகப் புலப்படுத்துகின்றது. 

இங்கு ஜோதிகுமார் குறிப்பிடும் நான்கு விதமான அழுத்தங்கள் எவை? அவரே பிறிதோரிடத்தில் பின்வருமாரு  பட்டியலிடுவார்:

"எந்த ஒரு ஆதிக்கச் சக்தியினரின் கழுகுக் கண்களைப் போலவே, ஆங்கில உளவு படையினரின் கழுகுக் கண்கள் பொறுத்த நியாயமான எச்சரிக்கையும், இவனில் அடங்குகின்றது. அதே அளவில், G.சுப்பிரமணிய அய்யர் போன்றோரின் அரசியல் நேசங்களையும் இவன் கணக்கில் எடுத்தாக வேண்டியவனாகின்றான். மொத்தத்தில் :

1. ஜனங்கள் அன்று இன்று இருந்த யதார்த்த நிலை.
2. அவர்களை அணுகி, பயிற்றிப் பல கல்வித் தர வேண்டிய ஒரு நடைமுறை யதார்த்தம்.
3. கூடவே பிரிட்டிசாரின் கழுகுக் கண்கள்.
4.  இதனுடன், அரவணைக்க வேண்டிய ஏனைய ஸ்நேகப்பூர்வ அரசியல் நேசங்கள்.

இவற்றின் மத்தியிலேயே திலகரின் அரசியலும், அன்றைய இந்தியாவில் அரங்கேறுகின்றது. இதன்போது, தனது நிலைப்பாட்டையும், இவ் இளைஞன் தெளிவுப்படுத்த வேண்டிய கடமைக்கு உட்படுத்தப்படுகின்றான்."

இவ்விதமான அழுத்தங்களுக்கு மத்தியில், திலகரின் தீவிரவாதக் கொள்கையினால் ஆட்கொள்ளப்பட்டிருந்த பாரதியார் கவனமாகச் செயற்பட வேண்டியிருந்தது.  அதே சமயம் , நாட்டரசியலி மென்போக்கு மிக்க சுப்பிரமணிய ஐயர் போன்ற அரசியல் நேச சக்திகளுக்குத்  தன்னால் இடர்கள் ஏற்பட்டுவிடக்கூடாதென்பதிலும் எச்சரிக்கையாகவிருக்க வேண்டுமென்பதிலும் அவன் கருத்துடையவனாகவிருந்தான்.  இவ்வழுத்தங்களை நன்கு உணர்ந்திருந்த பாரதியார், 'ஆயிரம் வருஷங்கள் பழைமைவாய்ந்த'  ஒரு  மத ஆதிக்கம் மிக்க சமூகத்தில் தன் கருத்துகளைத் தாக்கத்துடன் செலுத்துவதற்கு எளிமையும், தெளிவும் , ஆழமும் மிக்கதொரு மொழியில், மதப்பற்றைத் தேசப்பற்றாக மாற்ற வேண்டிய தெளிவான சிந்தனை மிக்கவராகச்  செயற்பட்டார்.  இதுதான் ஆய்வாளர் ஜோதிகுமார் இறுதியாக வந்தடைந்த தெளிவான  முடிவு.  

இதே சமயம் ஆங்கிலேயரின் அரசோ தம் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காகப் பாரத மக்களை மதரீதியில் பிரித்தாளும் தந்திரத்தைக் கைக்கொண்டு வந்தது. இது பற்றிக் குறிப்பிடும் ஜோதிகுமார் "இந்திய மக்களிடை வளர்ந்துவரக்கூடிய தேசிய உணர்வை, திசைத்திருப்ப அல்லது அதனை இடம்பெயர்த்து, அங்கே, குறுகிய அரசியல் சித்தாந்தத்தை விதைத்துவிட, 1905களில் கர்ஸ்ஸன் பிரபு (வைஸ்ராய்) வங்காள மாகாணத் துண்டிப்பை அமுல்படுத்துகின்றான்: கொழுந்துவிட்டெரியும். இந்தியத் தேசிய உணர்வினை இந்நடைமுறையானது, சிதைத்து, மத அடிப்படையில், மக்களைப் பிரிந்து நிற்கச்செய்துவிடும் என்பது அன்றைய ஆங்கில சக்திகளின் எதிர்பார்ப்பாய் இருந்தது. முஸ்லீம்களாகவும், இந்துக்களாகவும் இந்தியர், கச்சைக்கட்டிக் கொள்வர் என்ற ஓர் எதிர்பார்ப்பின் அடிப்படையில், மேற்படி அரசியல் நகர்வானது, பல்வேறு சமாதானங்களுடன் அன்றைய ஆதிக்கச் சக்தியினரால் நகர்த்தப்பட்டது. " என்று கூறுவார். 

ஆங்கிலேயரின் இத்தந்திரத்தைப் பாரதியார் நன்கு உணர்ந்திருந்தார். இது பற்றிய பாரதியாரின் அணுகுமுறை குறித்து ஆய்வாளர் ஜோதிகுமார் மேலும் தன் ஆய்வில் பின்வருமாறு  விபரித்திருப்பார்:

"பத்திரிக்கைகளின் அரசியல் நோக்கங்கள், அவற்றின் கருத்துருவாக்கங்கள் என்பனவற்றை அவன் மதிப்பிட்டு வைத்துள்ளதைப்போலவே அன்றைய ஆதிக்கச் சக்தியினரின் நரித்தனமிக்க தந்திரம் மிகுந்த நகர்வுகளை, முக்கியமாக, இவ்வாதிக்கச் சக்தியினரின் (நண்பர்கள்) எனப்படுவோர் முன்நகர்த்தும் அரசியலின் ஆழ-அகலங்களை, நன்கு உள்வாங்கி அவற்றை மக்களின் மேடையில் அம்பலப்படுத்துவது தன் கடமை எனக் கருதி நிற்கின்றான் இவ்இளைஞன். ... கைலாசபதி குறிக்கும்; 'உணர்ச்சிப் பிழம்பாகக்' காட்சியளிக்கும் இவன், அதேவேளை, அதனையும் மீறி தேர்ந்த ஒரு அரசியல் ஞானம் கொண்ட அரசியல் வாதியாகவும் காட்சித்தருகின்றான்..... மொத்தத்தில், ஆதிக்கச் சக்தியினரின் அரசியல் நகர்வுகளின் சூட்சுமத்தையும், அவற்றை அடிப்படையாகக் கொண்டு, மக்களின் அரசியலை மாற்றி கட்டமைக்க முனையும் அடிவருடி பத்திரிகைகளையும், மறுபுறத்தே, ஆங்கில உளவுத்துறையைச் சாந்தப்படுத்த வேண்டிய தேவைப்பாட்டையும், ஆனால் இதன்போது அறிமுகம் செய்யவேண்டிய சிற்சில தத்துவவாதிகளின் பலவீனமிக்கப் பக்கங்களையும் ஒருங்கே உணர்ந்தவனாக, இவ்இளைஞன் காட்சி தருகின்றான் என்பதிலேயே, பாரதி என்ற மகாகவியின், மேதவிலாசம் முளை விடுவதாக இருக்கின்றது."

இவ்விதம் வரலாற்றில் பாரதி என்னும் இளைஞனின் நிலையினை, எந்தப்புள்ளியிலிருந்து அல்லது புள்ளிகளிலிருந்து அவன் செயற்பட்டான் என்பதை வெளிப்படுத்தும் சிறந்ததோர் ஆய்வுக்கட்டுரையே ஜோதிகுமாரின்    'இருபத்து நான்காம் வயதில் பாரதி'  என்னும் நெடுங்கட்டுரை.  இதனையே ஜோதிகுமாரின் இந்நெடுங்கட்டுரையின் இறுதி வரிகளான 'அன்றைய ஆங்கிலேயரின், இஸ்ரேலிய படுகொலைகளை ஒத்த, சாத்திரங்களை தின்று தீர்க்கும், காட்டுமிராண்டி ஆட்சியை, அம்பலப்படுத்தும் போது, வெறுமனே ஒரு அரசியல் கோதாவில் எடுத்தெறிந்து பேசாமல், சட்ட வலுவேறாக்கம் குறித்து வாதிக்க முற்படுவது, இவ்இளைஞன் எத்தகைய ஓர் தளத்தில் இயங்க முற்படுகின்றான் என்பதை கூறுவதாகின்றது. அதாவது, இவனது அரசியலானது, மேலோட்டமான அரசியல் அல்ல என்பதும், அது ஆழமும் நுணுக்கமும் நிறைந்தது, என்பதும் குறிக்கத்தக்கதாகின்றது. இந்தப் புரிதலிலேயே, வரலாற்றின், எப்புள்ளியில் இவ்இளைஞன் நிற்கின்றான் என்ற கேள்வி அணுகப்பட வேண்டியுள்ளது.' என்னும் வரிகளும் புலப்படுத்துகின்றன.

பாரதியாரின் ஆளுமையின் முக்கிய கூறுகளை அவரது 23, 24 வயதிகளில் தென்பட்டிருக்கின்றன என்பதைத்தான் அக்காலகட்டத்து அவரது எழுத்துகள் புலப்படுத்துகின்றன என்பது ஜோதிகுமார் வந்தடைந்திருக்கும் முடிவு.ம் அதே சமயம் அக்காலகட்டத்தில் 'உணர்ச்சிப் பிழம்பாக'த் சுடர்விட்ட பாரதியின் அவ்வுணர்ச்சியின் வேகம் அவரது பிற்காலத்தில் சிறிது நீர்த்துப்போய்விட்டதா என்னுமொரு கேள்வியும் ஆய்வுக்குரியது என்று என்னுடனான தனிப்பட்ட உரையாடலொன்றில் அவர் கூறியது நினைவுக்கு வருகின்றது.  23, 24 வயதில் பாரதி பற்றி விரிவானதொரு கண்ணோட்டத்தைச் செலுத்திய ஜோதிகுமார் அது பற்றியும் தன் கவனத்தைச் செலுத்தி , இன்னுமொரு விரிவான ஆய்வுக்கட்டுரையொனைத் தருவாரென்று எதிர்பார்ப்போம்.

அதே சமயம் இன்னுமொரு விடயத்தையும் சுட்டிக்காட்டாமல் இவ்விமர்சனக் குறிப்பு பூர்த்தியாகாது. அது பாரதியார் பற்றிய தேடலையே தன் வாழ்நாட் பணியாகக்கொண்டு , பாரதியார் எழுத்துகளைத்தேடித்  தொகுத்து வெளியிட்ட  திரு. சீனி விசுவநாதன் அவர்களின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க பங்களிப்பு.  அப்பங்களிப்பு இல்லாமல் ஜோதிகுமாரால் இவ்விதமானதொரு விரிவான, தர்க்கச்சிறப்பு , தெளிவு மிக்க நெடுங்கட்டுரையொன்றினைத் தந்திருக்க முடியாது. அதற்க்காக திரு.சீனி விசுவநாதனின் தன்னலங் கருதாத பாரதி பற்றிய தேடல் விதந்துரைக்கப்பட வேண்டியது.


[ நூல்: 23ஆம் வயதில் பாரதி - எல். ஜோதிகுமார் . பதிப்பகம் - ஸ்ரீ பப்ளிகேஷன்ஸ் | 23ம் வயதில் பாரதி | விலை: ரூபா 300 ]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
 
வ.ந.கிரிதரன் பக்கம்
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். இது இலாப  நோக்கற்று இயங்கும் இதழ். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. It operates on a not-for-profit basis. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்