'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
மார்ச் 2006 இதழ் 75 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
இங்கே விளம்பரம் செய்ய வேண்டுமா? 
ads@pathivukal.com
Amazon.Ca
In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான ணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் ணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் முரசு அஞ்சலின் latha, Inaimathi, Inaimathitsc அல்லது ஏதாவது தமிழ் tsc எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று ணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, ணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
இலக்கியம்!
மீள்பிரசுரம்: அ.ந.க நினைவு தினக்கட்டுரை (14-02-2006):

தொடரும் தேடல்: அ.ந.க.வின் படைப்புகள்!

- வ.ந.கிரிதரன்-

A.N.Kanthasamiஈழத்துத் தமிழ் இலக்கிய உலகு தமிழக இலக்கிய உலகிலிருந்து சில பாடங்களைப் படிக்க வேண்டியுள்ளது. தமிழகத்தில் இலக்கிய உலகு பல்வேறு கூறுகளாகப் பிரிந்து கிடந்தாலும் இயலுமானவரையில் எழுத்தாளர்களின் படைப்புகளை அவ்வப்போது தொகுத்து வெளியிட்டு விடுவார்கள். இதன் மூலம் அனைவரும் பல்வேறு படைப்பாளிகளின் படைப்புகளையும்  அடிக்கடி நினைவு கூர்வதற்கும், படிப்பதற்கும் இயலக்கூடியதாகவுள்ளது. இலங்கையின் தமிழ் இலக்கிய உலகைப் பொறுத்தவரையில் நிலைமை வேறாகவுள்ளது. பொதுவாக எழுத்தாளர்கள் இருக்கும்வரையில் கோலோச்சிக் கொண்டிருந்தாலும், அவர்களது மறைவுக்குப் பின்னர் அவர்களை அவர்களது நிழல்களில் குளிர் காய்ந்து கொண்டிருந்தவர்கள் கூட மறந்து விடுவார்கள். ஆளுக்காள் தத்தமது பெருமைகளை நிலைநிறுத்துவதில் அதிகக் கவனம் செலுத்தத் தொடங்கி விடுவார்கள். இருந்தாலும் அண்மைக்காலமாக செங்கை ஆழியான் போன்றவர்கள் அன்றைய ஈழத்துப் படைப்புகள் பலவற்றைத் தொகுத்து வெளியிட்டு வருவது பாராட்டுதற்குரியது. 

ஈழத்தில் நிலவும் இந்நிலைக்கு முக்கிய காரணங்களில் சிலவாகப் பின்வருவனவற்றைக் கூறலாம். ஈழத்தில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தச் சூழல், ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகை ஆதிக்கம் செலுத்தும் தமிழக இலக்கியம், மற்றும் தமிழகத்தைப் போல் அதிகமான எண்ணிக்கையில் வாசகர்களோ அல்லது படைப்பாளிகளோ இல்லாததொரு சூழல். இதனால்தான் வசதியுள்ளவர்கள் தமது படைப்புகளை அவ்வப்போது வெளிக்கொணர முடிகிறது. அதே சமயம் ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகின் ஜாம்பவான்கள் பலரின் படைப்புகள் நூலுருப் பெறாமல், இன்றைய தலைமுறை அதிகம் அறியமுடியாமலுள்ளதொரு நிலை நிலவுகிறது. இன்றைய இலக்கியச் சூழலில் தமிழகத்திலிருந்து பரந்த அளவில் ஈழத்துப் படைப்புகள் வெளிவர ஆரம்பித்துள்ளன. இத்தகைய சூழலில் ஈழத்து இலக்கிய முன்னோடிகள் பலரது படைப்புகளை, குழு வேறுபாடின்றித் தமிழகத்திலிருந்து வெளிக்கொணர முயல்வது ஆக்கபூர்வமானது என்பது என் கருத்து. தமிழகத்திலிருந்து படைப்புகள் வெளிவருவதிலுள்ள நன்மைகளில் சில: பதிப்பகத்தார் அவற்றை உலகளாவியரீதியில் விற்கும் வசதிகள் பெற்றுள்ளார்கள். தமிழக நூலகங்கள் அவற்றை வாங்கும் வசதியுண்டு. ஈழத்து வாசகர்கள் தவிர மற்றும் ஏனைய நாட்டுத் தமிழ் வாசகர்கள் பலரையும் அவை சென்றைடையும் வாய்ப்புகளுண்டு.

ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகைப் பொறுத்தவரையில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் பங்களிப்பு அளப்பரியது. அவரது பன்முகப் பார்வைகளையும் வெளிக்கொணரும் வரையில் படைப்புகள் நூலுருப் பெறவேண்டிய தேவையுள்ளது. இதுவரையில் அவரது இரு படைப்புகள் மாத்திரமே நூலுருப் பெற்றுள்ளன. அதுவும் அவரது இறுதிக் காலத்தில் தமிழகத்தில் வெளிவந்த 'வெற்றியின் இரகசியங்கள்'. அடுத்தது 'மதமாற்றம்' மதமாற்றம் கூடத் தனிப்பட்ட ஒருவரின் நிதியுதவியின் மூலம் தேசிய கலை இலக்கியப் பேரவையின் பெயரில் வெளிவந்ததொரு நூல். 

அ.ந.க தான் வாழ்ந்த காலத்தில் பல இளம் படைப்பாளிகளைப் பாதித்தவர். பலர் உருவாகக் காரணமாகவிருந்தவர். அவர்களிலொருவர் அந்தனி ஜீவா. அந்தனி ஜீவா 'கலசம்' சஞ்சிகையில் (மாசி 1974) 'நினவின் அலைகள்' என்னும் கட்டுரையில் பின்வருமாறு நினைவு கூர்வார்:

"இன்று நான் கலை, இலக்கியம், அரசியல் ஆகிய முத்துறைகளிலும் ஈடுபாடு கொண்டுள்ளேன். இன்று நான் கலை, இலக்கியம் , அரசியல் ஆகிய மூன்று துறைகளிலும் புகழும் பெயரும் பெற்றவர்களால் மதிக்கப்படுகின்றேன். தலை சிறந்த கலா விமர்சகர்களால் எனது பங்களிப்புகளும், படைப்புக்களும் விமர்சிக்கப்படுகின்றன. இதற்கெல்லாம் மூல காரணம் யார்? அ.ந.க என்ற மூன்றெழுத்து. அ.ந.க என்ற மூன்றெழுத்தில் பிரபல்யம் பெற்ற அமரரும் அறிவுலக மேதையுமான அ.ந.கந்தசாமி முற்போக்கு எழுத்தாளர்களின் முன்னோடி எனப் போற்றப்படுகின்றார். அந்த ஒளியிலே நடை பயின்றவர்கள் கணக்கற்றோர். அவரின் பின்னால் அணி திரண்டோர் ஆயிரம், ஆயிரம். என்னைப் போன்ற எத்தனையோபேரை அவர் வளர்த்துவிட்டுச் சென்றுள்ளார். இன்று அவர் மறைந்து ஆறு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இதுவரைக்கும் நாம் அவருக்கு என்ன செய்தோம்? இனி வரும் இளைய தலைமுறைக்குக் கந்தசாமியை இனங்கண்டுகொள்ளுமளவுக்கு இலக்கியப் படைப்புகளை அச்சில் வெளியிட்டோமா? அ.ந.க.வுடன் பழகுவதைப் பெருமையாகக் கருதியவர்கள், அவருடன் உறவாடியவர்கள், நண்பர்கள் எனப் பெருமைப்பட்டவர்கள் இன்று காரும், பணமுமாக, வீடும் வளவுமாக அரச துறைகளில் அதிபதிகளாகத் திகழ்கிறார்கள். அந்த நண்பர்கள் நினைத்தால் கந்தசாமி என்ற இலக்கிய மேதையின் படைப்புகளை அச்சில் போட்டிருக்கலாமே?"
தமிழமுது என்னுமோர் சிற்றிதழ் சரவணையூர் மணிசேகரனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது. அது அறிஞர் அ.ந.க மறைந்தபொழுது அவரது படத்தினை அட்டையில் பிரசுரித்து ஆசிரியத் தலையங்கமும் ('அ.ந.க.வும் அவர் சிருஷ்டிகளும்' என்னும் தலைப்பில்)எழுதியது. அதில் ஆசிரியர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
"அவர் சாகும்போதும் இலக்கியப் பெருமூச்சு விட்டுத்தான் இறந்தார். அவரைச் சந்திக்கப் போனால் எந்த நேரமும் எங்களோடு பேசிக்கொள்வது தமிழ் இலக்கியம்தான். அவர் தமிழ் இலக்கியத்துக்காக தன் உடல், பொருள், ஆவி அத்தனையும் அர்ப்பணித்தார்....  ஏ குளிகைகளே! சமூகத்துக்காக அவர் சிருஷ்டித்தவர். அவர் சிருஷ்டிகளை புத்தக உருவில் கொண்டுவர முயற்சிக்காத இந்த நன்றி கெட்ட சமூகம் போலவா நீ அவர் உயிரைப் பிடித்து வைக்காது துரோகம் செய்து விட்டாய்? 'தமிழமுது' அழுகின்றாள். அவள் கண்களில் நீர் துளிக்கின்றது. அவர் படத்தை (அமரர் அ.ந.கந்தசாமி) முகப்பில் தாங்கியபின்புதான் அவள் மனம் கொஞ்சம் சாந்தியடைகின்றது."
அ.ந.க.வின் வாழ்நாள் பாரதியின் வாழ்நாளைப் போலக் குறுகியது. பாரதி 39 வருடங்களே வாழ்ந்திருந்தார். 8-8-1924 பிறந்த அ.ந.க. 44 ஆண்டுகள் வாழ்ந்திருந்தார். பெப்ருவரி 14, 1968 அன்று மறைந்தார். அ.ந.கவின் தந்தையாரான நடராஜா யாழ் வண்ணார்பண்ணையில் வாழ்ந்திருந்தவர். சிறைச்சாலையில் வைத்திய அதிகாரியாக விளங்கியவர். தாயார் பெயர்: கெளரியம்மா. ஒரு சகோதரர்: நவரத்தினம். சகோதரி: தையல்நாயகி. நடராஜா பல சொத்துக்களின் அதிபதியாக விளங்கியவர். அ.ந.கவுக்கு ஐந்து வயதாயுள்ளபோது தந்தை இறந்து விட்டார். தாயாரும் தந்தை இறந்து 41ஆம் நாள் இறந்து விட்டார். குழந்தைகள் மூவரையும் நீதிமன்றம் சட்டரீதியான பாதுகாவலர் ஒருவர் பொறுப்பில் விட்டது.
[உண்மையில் கொழும்பிலிருந்த உறவினரொருவர் மூன்று குழந்தைகளையும் தன் பாதுகாப்பில் எடுத்துசெ சென்றதாகவும், அ.ந.க.வி பாட்டி நீதிமன்ற உதவியின் மூலம் தன்வசம் எடுத்துக் கொண்டதாகவும் அறியப்படுகிறது.]
இந்தச் சொத்துக்கள் பல பாதுகாவலர், அதற்குப் பொறுப்பான சட்டத்தரணி ஆகியோரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு அழிக்கப்பட்டதாக அறிகின்றோம். [ அ.ந.க. தனது கல்வியை மேலும் தொடர முடியாமல் போனதற்கு இது முக்கிய காரணம். அல்லாவிடில் அ.ந.க. நிச்சயமொரு கலாநிதியாகக் கூட வந்திருப்பார். இந்நிலையில் குறுகிய காலத்தில் அவர் நிறைய நூல்களைக் கற்று, இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் வெற்றிகரமாகக் கால் பதித்ததோடு, செயல்வீரராகவும் விளங்கியது அவரது ஆற்றலைத்தான் காட்டுகிறது. அதனால்தான் அவர் வாழ்ந்த காலத்திலேயே அறிஞர் அ.ந.கந்தசாமியென அனைவராலும் அழைக்கப்பட்டார்.] இச்சமயத்தில் ஆரம்பக் கல்வியை யாழ் இந்துக் கல்லூரியில் கற்ற அ.ந.க. சிறிதுகாலம் அளவெட்டி சென்று உறவினர் சிலருடன் வாழ்ந்து வந்தார். அளவெட்டியிலிருந்த காலத்தில் அ.ந.க. தனது கல்வியினைத் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியில் தொடர்ந்தார். பின்னர் மீண்டும் யாழ் இந்துக் கல்லூரியில் எஸ்.எஸ்.எல்.சி கல்வி கற்று பின்னர் கொழும்பு சென்றார்.

அ.ந.க. பதினாலு வயதிலிருந்தே எழுதத் தொடங்கி விட்டார்.  ஈழகேசரி சிறுவர் பகுதியில் எழுத ஆரம்பித்தார்.  அச்சமயம் ஈழகேசரி நடத்திய பேச்சு, கதை, கட்டுரைப் போட்டிகளில் பங்குபற்றியுள்ளார். கதைப்போட்டியில் முதற்பரிசும் பெற்றுள்ளதாக அறிகின்றோம். மறுமலர்ச்சிக் குழுவின் உருவாக்கத்துக்கு காரணகர்த்தாக்களில் ஒருவர். ஏனையவர்கள்: தி.ச.வரதராசன், பஞ்சாட்சர சர்மா, நாவற்குழியூர் நடராசன். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தோற்றத்துக்கு முக்கியமானவர்களிலொருவர் அ.ந.க. அதன் சங்கக் கீதத்தை இயற்றியவரும் அவரே.

பாரதியைப் போல் அ.ந.க.வும் தனது குறுகிய காலகட்ட வாழ்வில் சாதித்த சாதனைகள் அளப்பரியன. சிறுகதை, கவிதை, நாடகம், நாவல், மொழிபெயர்ப்பு, விமர்சனம், உளவியல், சிறுவர் இலக்கியம் என இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளிலும் காத்திரமான பங்களிப்புச் செய்தவர் அ.ந.க. தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் மிகுந்த புலமை வாய்ந்தவர்.

1943இலிருந்து 1953வரை இலங்கைத் தகவற் திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணிபுரிந்தார். அச்சமயம் பல ஆங்கில நூல்களைப் பணிநிமித்தம் மொழிபெயர்த்துள்ளார். (அந்தனி ஜீவா தனது 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' என்னும் கட்டுரையில் அ.ந.க இலங்கை அரச தகவற் துறையில் 12, 13 வருடங்கள் பணியாற்றி ஓய்வு பெற்றதாகக் குறிப்பிடுவார். தகவற்துறையில் பணிபுரிந்த் காலகட்டத்தில் தகவற்துறையினால் வெளியிடப்பட்ட 'ஸ்ரீலங்கா' இதழாசிரியராகவும் அ.ந.க.வே விளங்கினார்). அதன் பின்னர் தோட்டத் தொழிலாளர் சங்கத்தில் முழுநேர ஊழியராகப் பணியாற்றினார். தனியார் நிறுவனங்களுக்கு ஆங்கில நூல்களை மொழிபெயர்க்கும் பணியினையும் செய்து வந்தார். ஒப்சேவரில் புரூவ் ரீடராகவும் சில காலம் வேலை பார்த்துள்ளார். வீரகேசரி ஆசிரியர் குழுவில் பணியாற்றியுள்ளார்.  கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராக விளங்கிய அ.ந.க தேசாபிமானி பத்திரிகையின் ஆரம்பகால ஆசிரியர்களில் ஒருவர். பின்னர் அக்கட்சியிலிருந்து வெளியேறினார். அக்காலகட்டத்தில் சுதந்திரன் பத்திரிகையில் சேர்ந்து அதன் ஆசிரியராகச் சிறிது காலம் பணியாற்றினார். ஆங்கிலப் பத்திரிகையான டிரிபியூனில் சிலகாலம் பணியாற்றினார். அச்சமயம் நிறைய திருக்குறள் பற்றிய ஆங்கில ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். எமிலி சோலாவின் 'நானா' (நாவல்'- , பெர்ட்ராண்ட் ரசலின் 'யூத அராபிய உறவுகள்', 'பொம்மை மாநகர்' என்னும் சீன நாவல், ஓ ஹென்றியின் சிறுகதைகள் மற்றும் பல படைப்புகளை மொழிபெயர்த்தவரிவர். 

அ.ந.க சிறிதுகாலம் கொழும்பு கறுவாக்காட்டுப் பகுதியில் மணமுடித்து வாழ்ந்திருந்ததாக அறிகின்றோம். இவரது குடும்பவாழ்க்கை நீடிக்கவில்லை. திருமணத்தில் ஏற்பட்ட ஆள்மாறாட்டமே இதற்குக் காரணம். பார்த்த பெண் ஒருத்தி. மணந்ததோ அவரது சகோதரியை. இதனால் தான் போலும் அ.ந.க.வின் பல படைப்புகளில் ஆள்மாறாட்டமுள்ள சம்பவங்கள் காணப்படுகின்றன போலும்.

சிறுவயதிலேயே வீட்டை விட்டுத் தனியாகக் கொழும்பு சென்ற அ.ந.க பட்டதாரியல்ல. ஆனால் கலாநிதிகள் தமது நூல்களை அவருக்கு அர்ப்பணிக்குமளவுக்குப் புலமை வாய்ந்தவர். கலாநிதி கைலாசபதி தனது 'ஓப்பியல் இலக்கியம்' என்னும் நூலினை அறிஞர் அ.ந.கந்தசாமிக்கு அர்ப்பணித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கவீந்திரன், பண்டிதர் திருமலைராயர், கலையரசன், சிப்பி, புரூனே என்னும் புனைபெயர்களிலும் எழுதிக் குவித்தவர். மரபுக் கவிதை எழுதுவதில் மிகுந்த பாண்டித்தியம் மிக்கவர் அ.ந.க. ஆனால் இவரது மரபுக்கவிதைகள் ஏனைய பண்டிதர்களின் மரபுக்கவிதைகளைப் போன்றவையல்ல. துள்ளு தமிழ் கொஞ்சுபவை. நெஞ்சினை அள்ளுபவை. வள்ளுவர் நினைவு' என்னுமவர் கவிதையில்வரும் பின்வரும் வரிகளே அதற்குச் சான்று:

'கடலெழுந்து விம்மியது காவிரியின் நீரில் 
கடல்வெள்ளம் கலக்கின்ற புகாரென்னுமூரில் 
கடலுண்ட தய்யாநம் கற்கண்டுத் தமிழை 
கணக்கில்லா நூல்களெல்லாம் கடலோடு போச்சு! 
கடலுக்குத் தமிழினிமை தெரிந்ததனால் வந்த 
காரியமோ யாமறியோம்! செந்தமிழர் நாட்டுக் 
கடலன்றோ கவியமுதின் சுவைதெரிந்த தென்று 
கவிராயர் சொலக்கூடும்! சத்தியமும் அதுவோ? '
அன்றொருநாள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வள்ளிப்பிள்ளை என்பவரின் பிரேதத்தை நகரசபைக்குச் சொந்தமான வில்லூன்றிமயானத்தில் புதைப்பதற்காகத் தலைமை தாங்கிச் சென்ற ஆரியகுளத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி என்பவர் சாதி வெறியர்களால் கொல்லப்பட்ட நிகழ்வை இவரது 'வில்லூன்றி மயானம்' என்னும் கவிதை சாடுகிறது. இச்சம்பவம் நிகழ்ந்த காலத்தில் ஏனைய கவிஞர்கள், எழுத்தாளர்களெல்லாம் அதனை விமர்சிக்கப் பயந்திருந்த நிலையில் அறிஞர் அ.ந.க அதனை வன்மையாகக் கண்டித்தார். தீண்டாமைக்கெதிராக வெடித்திட்ட புரட்சித்தீயாக அதனைக் கண்ட அ.ந.க. 'வில்லூன்றி மயானம்' கவிதையில்
'நாட்டினர்நீர் அறிவீர் வில்லூன்றி தன்னில் 
நாம் கண்ட  ஈமத்தீ வெறுந்தீ அன்று 
கேட்டினிலே உளபிணத்தை உண்பதற்குக் 
கிளர்ந்தெழுந்த தீயன்று நெடுநா ளெங்கள் 
நாட்டினிலே கிளைபரப்பும் சாதி என்னும் 
நச்சுமர வீழ்ச்சியினைக் காண்பதற்காய்க் 
வாட்டமுற்ற மக்களுளம் கனன்று பொங்கும்
வல்லதொரு புரட்சித்தீ  வாழ்க வஃது' என்று அறைகூவல் விடுத்தார்.
அ.ந.க 'நான் ஏன் எழுதுகிறேன்?' என்னுமொரு  அற்புதமான கட்டுரையொன்றினைத் தனக்கேயுரிய துள்ளு தமிழ் நடையில் எழுதியுள்ளார். அதில் அவர் தனது இளமைக்கால அனுபவங்களையெல்லாம், தான் எழுதுவதற்குரிய காரணங்களையெல்லாம் குறிப்பிட்டுள்ளார். இக்கட்டுரையை அவரது மறைவுக்குப் பின்னர் 'தேசாபிமானி' பத்திரிகை அவருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக வெளியிட்டிருந்த சிறப்பிதழில் வெளியிட்டிருந்தது. அப்பதிப்பில் 'போர்ச்சுவாலை அமரச் சுடராகியது' என்று நல்லதொரு ஆசிரியத்தலையங்கத்தினையும் தேசாபிமானி வெளியிட்டிருந்தது. மேற்படி கட்டுரையினை மொறட்டுவைப் பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்க வெளியீடான 'நுட்பம்' சஞ்சிகையும் மீளப் பிரசுரித்திருந்தது. அக்கட்டுரையிலிருந்து சில பகுதிகள் கீழே தரப்பட்டுள்ளன அ.ந.க.வைப் புரிந்து கொள்வதற்கு அவை உதவுமென்பதால்.
"....அப்பொழுது எனக்குப் பதினேழு வயது நடந்து கொண்டிருந்தது. உள்ளத்திலும் உடம்பிலும் சுறுசுறுப்பும், துடிதுடிப்பும் நிறைந்த காலம். உலகையே என் சிந்தனையால் அளந்துவிட வேண்டுமென்று பேராசைகொண்ட காலம். காண்பதெல்லாம் புதுமையாகவும், அழகாகவும், வாழ்க்கை ஒரு வானவில் போலவும் தோன்றிய காலம்.  மின்னலோடு உரையாடவும், தென்றலோடு விளையாடவும் தெரிந்திருந்த காலம். மின்னல் என் உள்ளத்தே பேசியது. இதயத்தின் அடியில் நனவிலி உள்ளத்தில் புகுந்து கவிதை அசைவுகளை ஏற்படுத்தியது. பலநாள் உருவற்று அசைந்த இக்கவிதா உணர்ச்சி ஒருநாள் பூரணத்துவம் பெற்று உருக்கொண்டது. எழுத்தில் வடித்தேன். "சிந்தனையும் மின்னொளியும்" என்ற தலைப்பில் இலங்கையின் ஓப்புயர்வற்ற இலக்கிய ஏடாக அன்று விளங்கிய 'ஈழகேசரி'யில் வெளிவந்தது.

இக்கவிதை ஒரு காரியாலயத்தில் மேசை முன்னுட்கார்ந்து என்னால் எழுதப்பட்டதல்ல. இயற்கையோடொன்றிய என் மனதில் தானே பிறந்த கவிக்குழதை இது. எனினும் பல ஆண்டுகளுக்குப் பின்னர் இலக்கிய சித்தாந்தங்கள் பலவற்றை ஆராய்ந்து நான் என்ம்னதில் ஏற்றுக் கொண்ட அதே கருத்துகளின் சாயலை இக்கவிதையில் என்னால் இன்று காண முடிகிறது.

மனோதத்துவ அறிஞர் மனதை நனவிலி மனம், நனவு மனம் என்று இரு கூறுகளாகப் பிரிக்கின்றனர். ஆங்கிலத்தில் இவற்றை முறையே Sub Conscious Mind, Conscious Mind என்று குறிப்பார்கள். "நான் ஏன் எழுதுகிறேன்?" என்ற கேள்விக்கு நனவு மனத்திடம் பதில்பெற முடியாது. ஏனெனில் நனவு மனத்தைவிட சக்திவாய்ந்தது நனவிலி மனம் என்பதே மன இயல் அறிந்தவர் முடிவு. கவிதை பெரும்பாலும் நனவிலி மனதில் உருவாகி நனவு மனத்தின் வழியாகப் பிரவாகிக்கும் ஒன்றாகும். பின்னால் நான் ஏற்றுக்கொண்ட கருத்துகள் இக்கவிதையை எழுதிய நாளில் என் நனவிலி மனதில் துளிர்த்திருந்தவை தாம் என்பதையே இக்கவிதையில் நான் வலியுறுத்தும் தத்துவங்கள் இன்று எனக்குணர்த்துகின்றன.

இக்கவிதை எனது முதலாவது கவிதையல்ல. இதற்கு முன்னரே கல்லூரிச் சஞ்சிகையில் ஒன்றிரண்டு கவிதைகளை நான் எழுதியிருந்தேன். இருந்தாலும் இது என் ஆரம்ப இலக்கிய முயற்சிகளில் ஒன்று.  எனவே 'நான் ஏன் எழுதுகிறேன்?, எழுதினேன்?' என்பதற்கு இக்கவிதையில் பதில் காண முயற்சிப்பது பொருத்தமானதேயாகும்.

இக்கவிதையின் சில வரிகள் நினைவில் மிதந்து வருகின்றன. 

'.கொட்டும் இடித்தாளம் இசைய நடம் செய்யும்
மட்டற்ற பேரழகு வான் வனிதை போல் மின்னல்
தோன்றி மறைந்ததுவே.
சிந்தனையின் தரங்கங்கள் ஊன்றி எழுந்தன. 
இவ் ஒளி ம்ின்னல் செயல் என்னே! 
வாழ்வோ கணநேரம்!
கணநேரந்தானும் உண்டோ?
சாவும் பிறப்பு அந்தக் கணநேரத்தடங்குமன்றோ?....'
மின்னலின் வாழ்வு கணநேரம். ஆனால் அக்கண நேரத்தில்:

'.சூழம் இருள் நீங்கும்.
சுடர் விளக்குப் போலிங்கு
சோதி கொழுத்திச் 
சோபிதததைச் செய்து விட்டு
ஓடி மறைகிறது...'

இம்மின்னல் எனக்குணர்த்தும் செய்தி என்ன? 'சில நாட்களே நீ இவ்வுலகில் வாழ்ந்தாலும் மக்களுக்கும், உலகுக்கும் பயனுள்ளவனாக வாழ். இன்று நீ இருக்கிறாய். நாளை இறந்து விடலாம். ஆகவே நன்றே செய்க. அதையும் இன்றே செய்க'இது தான் மின்னல் சொல்லித் தரும் பாடம்.

இருளை விரட்டி ஒளியைப் பரப்பும் மின்னல் சமுதாயத்தில் சூழ்ந்துள்ள மடமை,வறுமை முதலான இருள்களை நீக்கி, அறிவையும் ஆனந்தத்தையும் பரப்பும்படி எனக்குப் பணித்தது. வாழ்க்கையையே இதற்காக அர்ப்பணிக்கவேண்டும் என்ற ஆசை மேலிட்ட நான் என் எழுத்தையும் அத்துறைக்கே பயன்படுத்த வேண்டும் என்று நினைத்ததில் வியப்பில்லை அல்லவா?

மனிதன் சமுதாயத்தின் ஒரு அங்கம். அவனுக்கு சமுதாயப் பொறுப்பொன்று உண்டு. வெறுமனே உண்ணுவதும், உறங்குவதும், புலனுகர்ச்சிகளில் ஈடுபடுவதும் வாழ்க்கையாகாது. அறிவு வளர்ச்சி பெற்ற மனிதன் இவற்றோடு வேறு சில காரியங்களையும் செய்ய விரும்புவான். மற்றவர் முகத்தின் புன்னகை தோட்டத்தில் பூத்துக் குலுங்கும் முல்லைமலர் போல் அவனுக்கு இன்பத்தையூட்டும். "இன்று நாம் வாழும் சமுதாயத்தில் நாம் புன்னகையைக் காணவில்லை. துன்பமும், துயரமும், அழுகையும், ஏக்கமும், கண்ணீரும், கம்பலையுமாக நாம் வாழுமுலகம் இருக்கிறது. ஏழ்மைக்கும், செல்வத்துக்கும் நடக்கும் போரும், அடிமைக்கும், ஆண்டானுக்கும் நடக்கும் போரும், உயர்சாதியானுக்கும் தாழ்ந்த சாதியானுக்கும் நடக்கும் போரும், அசுரசக்திகளுக்கும், மனித சக்திகளுக்கும் நடக்கும் போரும் இன்று உலகையே கலங்க வைத்துக் கொண்டிருக்கின்றன. இப்போர்களினால் வாழ்வே ஒரு சோககீதமாகிவிட்டது. இப்போர்களை எவ்வளவு விரைவில் ஒழிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் ஒழித்துவிட வேண்டும். அதன்ப பின்தான் போரொழிந்த சமத்துவ சமுதாயம் பூக்கும். அதைப் பூக்க வைக்கும் பணியில் எழுத்தாளன் முன்னோடியாகத் திகழ வேண்டும் என்ற கருத்தை உலகின் புகழ்பெற்ற பேனா மன்னர்கள் என் மனதில் தோற்றுவித்தனர். 

பிரெஞ்சுப் புரட்சி கண்ட ரூசோ, வால்டயர் தொடக்கம் மார்சிம் கோர்க்கி, எஹ்ரென்பேர்க் வரைக்கும் எல்லா நல்ல எழுத்தாளர்களும் இந்தச் செய்தியையே எனக்குக் கூறினர். பேர்னாட் ஷாவின் எழுத்துகளும் இன்றைய பேட்ரண்ட் ரசல் எழுத்துகளும் கூட சமுதாய முன்னேற்றத்துக்குரிய பிரச்சினைகளுக்குத் தீர்ப்பு காணும் பணியை அலட்சியம் செய்துவிடவில்லை. வங்கக் கவிஞர் தாகூரும், தமிழ்க் கவிஞன் பாரதியும் தாம் வாழ்ந்த சமுதாயத்தின் உடனடிப் பிரச்சினைகளைத் தீர்க்கும் பணிக்குத் தமது பேனாக்களை அர்ப்பணம் செய்ய மறக்கவில்லை....உலகப் பண்பாட்டுப் பாடிய பாரதிதாசனும் சமுதாய ஊழல்களைச் சுட்டெரிக்கும் பணிக்குத் தன்னாளான சேவையைச் செய்திருக்கின்றான்.

'மக்கள் இலக்கியம்' என்ற கருத்தும் 'சோஷலிஸ்ட் யதார்த்தம்' என்பனவுமே என் மனதைக் கவர்ந்த இலக்கிய சித்தாந்தங்களாக விளங்குகின்றன. எழுத்தாளன் வாழ்க்கையை விமர்சிப்பதுடன் நின்று விடக்கூடாது. அந்த விமர்சனத்தின் அடிப்படையில் வாசகர்களுக்கு எதிர்காலத்தில் நம்பிக்கை ஊட்டவேண்டும். அவ்வித நம்பிக்கையில்லாவிட்டால் முன்னேற்றமில்லை. வாழ்வே இல்லை. இவ்வித பிரக்ஞையில் பிறக்காமல் வெறுமனே யதார்த்தத்தை ஒரு சுத்த இலட்சியமாகக் கொண்டு எழுதும்போது நம்பிக்கைக்குப் பதில் அவநம்பிக்கையின் தொனிகளே கேட்க ஆரம்பிக்கலாம். நைந்த உள்ளத்தின் சோகக்குரலாகக் கேட்கும் எழுத்தால் பயனில்லை. நொந்த உள்ளத்தின் செயல் துணிவுகொண்ட வேகக் குரலாக அது ஒலிக்க வேண்டும். வாழ்வதற்கு நேரடியாகவோ, குறிப்பாகவோ, மெளனமாகவோ வழிகாட்டும் எழுத்தே எழுத்து. இந்தக் கருத்துகள் என்னை உந்துகின்றன. அவற்றுக்காகவே நான் எழுதுகின்றேன்.

எழுத்தில் பலவகை உண்டு. நேரடிப் பிரச்சார எழுத்து ஒருவகை. கதை, கவிதை, நாடகம் என்ற உருவங்களில் வாழ்க்கையின் படமாகவும் வழிகாட்டியாகவும் எழுதப்படுபவை வேறொருவகை. இந்த இரண்டாவது வகை எழுத்தே இலக்கியம். அதுவே நிலைத்து நிற்கும் தன்மை வாய்ந்தது. ஆகவே அதைப்பற்றியே நான் இங்கு அதிகமாகக் கூறியிருக்கிறேன்.

ஆனால் சோஷலிஸ யதார்த்தப் பாதையில் இலக்கியப் பணிபுரிவோர் வெறும் அழகையே நோக்காகக்கொண்ட கருத்துகள் இயற்கையாக மனதில் தோன்றும்பொழுது அவற்றை எழுதாது விட்டுவிட வேண்டுமா? நல்ல கருத்துகளைக் கருக்கிச் சாகவிட்டு விடவேண்டுமா என்று கேட்கப்படுகிறது.

பாரதி முற்போக்குக் கவிஞன். ஆனால் மக்கள் பிரச்சினைகளைப் பாடிய  அதே வாயால் 'கண்ணன் என் காதலனை'யும் பாடினான். ஆம், தோட்டக்காரன் கத்தரிக்காயையும், கீரையையும், தக்காளியையும் பயிரிடுகிறான். ஆனால் வீட்டு வாசலிலே மல்லிகைக் கொடியைப் படர விடுவதில்லையா? கத்தரித் தோட்டத்து வேலையின் களைப்புப் போக, மல்லிகைப் பந்தலின் நறுமணத்தை மகிழ்ச்சியோடு உறிஞ்சி மகிழ அதன் கீழ்ச் சென்று உட்காருவதில்லையா?

எமக்கு நெல்லும் வேண்டும். கோதுமையும் வேண்டும். காய்கறிகளும் கிழங்குகளும் வேண்டும். ஆனால் ரோசா மலர்களும் வேண்டும். ரோசாமலர்களை மனநிறைவுக்காக நடும் தோட்டக்காரன் ரோசா மலர் நடுபவன் என்று சொல்லப்படமாட்டான். தோட்டக்காரன் என்றுதான் அழைக்கப்படுவான்.

பிள்ளையைத் தூங்க வைக்கத் தாலாட்டுப் பாடுவோம். ஏற்றமிறைக்கையில் ஏற்றப்பாட்டுப் பாடுவோம். அணிவகுப்பில் புரட்சிக் கீதம் பாடுவோம். ஆனால் குளிக்கும் அறையில் வெறும் ஸ்வரங்களை நாம் வாய்விட்டு இசைப்பதில்லையா?

சோஷலிச யதார்த்தப் பாதையில் முற்போக்கு இலக்கியம் சமைப்பவனைக் கடும் விலங்குகளால் கட்டிவிடக்கூடாது. பொதுவாக ஒரு எழுத்தாளன் எத்துறைக்குத் தன்னை அர்ப்பணிக்கிறான் என்பதைப் பார்க்க வேண்டும். அதில் அவன் சரியாக இருந்தால், மற்ற விஷயங்கள் சம்பந்தமாக நுணுக்கமாகச் சட்டதிட்டங்களை உண்டாக்குதல் அவன் கலைச் சுதந்திரத்தில் தலையிடுவதாகும்.

'சிந்தனையும் மின்னொளியும்' தொடக்கம் 'எதிர்காலச் சித்தன் பாட்டு 'வரை என் கருத்தோட்டம் ஒன்றாகவே இருந்திருக்கிறது. ஆனால் இடையிடையே ரோசாக்களையும் நான் நட்டதுண்டு. 'புரட்சிக் கீதம்' பாடாத வேளையில் 'காதல் கீதம்' பாடியதுமுண்டு. வெறும் சுவரங்களை இசைத்ததுமுண்டு. என்றாலும் என் பொதுவான இலட்சியம் ஒன்று. என் எழுத்துக்கள் மக்களை உயர்த்த வேண்டும். அவர்களின் போராட்டங்களில் எந்த அம்சத்தோடாவது அவை சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். இந்த இலட்சியத்துக்காகவே நான் எழுத ஆசைப் படுகிறேன்...." ('நான் ஏன் எழுதுகிறேன்?' கட்டுரையில் அ.ந.க.)

அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை எவ்விதம் தமிழ் இலக்கியப் பரப்பினை ஆட்கொண்டிருந்ததென்பதை அவர் மறைவுக்குப் பின்னர் பத்திரிகைகள், சஞ்சிகைள் ஆகியவற்றில் வெளிவந்த அவர் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள், 'நினைவலைகள்' ஆகியன புலப்படுத்துகின்றன. அ.ந.க. மறைவைத் தொடர்ந்து வெளிவந்த அன்றைய ஈழத்துத் தமிழ்த் தினசரிகளைப் பார்த்தால் தெரியும் எவ்வளவுதூரம் அவர் ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகின் தூணாக அன்று விளங்கினாரென்பதை. இந்நிலையில் இதுவரையில் அ.ந.க. வின் பன்முக ஆளுமையைனைப் புலப்படுத்தும் வகையிலான தொகுப்புகளெதுவும் வெளிவராதது துரதிருஷ்ட்டமானது.

Young A.N.Kanthasamyஇந்நிலையில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் படைப்புகளைத் திரட்டும் பணியில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டுக் கொண்டு வருகின்றேன். அவற்றைத் தேடும் பணியில் இதுவரையில் பெரிதாகப் பலன் ஏற்பட்டதென்று கூறுவதற்கில்லை. இருந்தாலும் ஓரளவு முன்னேற்றம் கண்டிருக்கின்றேன் என்றுதான் கூறவேண்டும். இதுவரையில் அவரது இருபதுக்கும் சற்று அதிகமான கவிதைகள், ஐந்து சிறுகதைகள், 'மதமாற்றம்' நாடகம், 'மனக்கண்' நாவல் (அத்தியாயம் 30இனை இதுவரையில் பெற முடியவில்லை), ஏழெட்டுக் கட்டுரைகள், அவரது தாஜ்மகால் என்னும் ஓரங்க நாடகமொன்று, 'வெற்றியின் இரகசியங்கள்' எனக் குறைந்த அளவு ஆக்கங்களையே பெறமுடிந்துள்ளது. மனக்கண் நாவல் சுவடிகள் திணைக்களத்துக்கு நேரில் தொடர்பு கொண்டு பெறப்பட்டது. அதனைப் பிரதிகளெடுத்து அனுப்பிய அதன் இயக்குநருக்கு எனது நன்றிகள். மேலும் அ.ந.க பற்றிய ஏனையவர்கள் சில எழுதிய கட்டுரைகள், , அந்தனி ஜீவாவின் 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' என்னுமொரு தொடர் கட்டுரை போன்ற படைப்புகள் சிலவற்றையும் பெறமுடிந்துள்ளது. அண்மையில் கே.எஸ்.சிவகுமாரன் கூட 'டெய்லி நியூஸ்" பத்திரிகையில் அ.ந.க பற்றிய தனது அனுபவங்களைப் பகிர்ந்து கட்டுரையொன்று எழுதியிருந்தது குறிப்பிடத் தக்கது. அ.ந.க பற்றி இந்நிலையில் பல முதிய எழுத்தாளர்களுடன் அ.ந.கவின் படைப்புகள் தொடர்பாகத் தொடர்பு கொண்டபொழுது அவர்களாலும் அவர்களது வயது காரணமாகப் பெரிதாக உதவ முடியவில்லை. இந்நிலையில் கொழும்பிலுள்ள சில பதிப்பகங்களுடன் தொடர்பு கொண்டபொழுதும் பெரிதாக அவர்களும் ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் பதிவுகள் இதழில் இதுபற்றி அறிவித்தலொன்று வெளியிட்டிருந்தோம். கொழும்பிலிருந்து பேரின்பநாயகம் மயூரன் என்னுமொரு இளைஞர் என்னுடன் தொடர்பு கொண்டு தன்னால் முடிந்த உதவிகளைச் செய்வதாக முன்வந்தார். அவரது ஒத்துழைப்புக்கு எனது தனிப்பட்ட நன்றிகள். அதன் முதற்படியாக அவர் திருமதி கமலினி செல்வராசனுடன் தொடர்புகொண்டு அவரிடமிருந்து பெற்ற அறிஞர் அ.ந.கந்தசாமியின் இளைமைக்காலப் புகைப்படமொன்றினை எமக்கு அனுப்பியிருந்தார். அதனையே நீங்கள் இங்கு காண்கின்றீர்கள். இதற்காக திருமதி கமலினி செல்வராசனுக்கும் எமது நன்றிகள். அ.ந.க.வின் 'மதமாற்றம்' நூல் வெளிவருவதற்கு முக்கிய காரணமே கவிஞர் சில்லையூர் செல்வராசன் தான். அவருக்கும் அ.ந.கவுக்குமிடையிலிருந்த நட்பு நீண்டது. அவர்களது இளமைக்காலத்திலிருந்தே தொடர்ந்ததொன்று. இதுபற்றி அவர் மறைவதற்கு முன்னர் வீரகேசரியில் கூடக் 'கந்தனுடன் சில கணங்கள்' என்னுமொரு கவிதை கூட எழுதியிருந்தார். அதனைப் பதிவுகளில்கூடப் பிரசுரித்திருந்தோம். அதன் இணையத்தள முகவரி: http://www.geotamil.com/pathivukal/sillaiyuuronANK.html அதனை இக்கட்டுரையின் இறுதியிலும் நீங்கள் காணலாம். அவரிடம் மதமாற்றம் மூலப்பிரதியிருந்ததால்தான் அது நூலுருப் பெற முடிந்தது. அது போல் அவரிடம் அ.ந.கவின் .மனக்கண்' மூலப்பிரதியும் இருந்தது. ஆனால் அவற்றைக் கமலினி செல்வராசன் மட்டக்களைப்புப் பல்கலைக் கழகத்துக்கு வழங்கி விட்டதாக அறிகின்றோம். 'மனக்கண்' நாவலின் அத்தியாயம் 30ஐத்தவிர அனைத்து அத்தியாயங்களும் எம்மிடமுள்ளன. எனவே யாராவது அந்த 30வது அத்தியாயத்தை வைத்திருந்தால் எமக்கு அனுப்பி வைத்து உதவினால் நன்றியாகவிருப்போம். மயூரனும் இது விடயத்தில் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்வதாகக் கூறியுள்ளார். 

அ.ந.க. தனது இறுதிக்காலத்தில் 'களனி வெள்ளம்' என்னுமொரு நாவலினையும் தோட்டத்தொழிலாளர்களை மையமாக வைத்து எழுதிக் கொண்டிருந்தார். அவர் இறந்ததும் எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடமிருந்த அப்பிரதி 1983 கலவரத்தில் எரியுண்டு போனதாக அறிகின்றோம். செ.கணேசலிங்கன் அ.ந.க.வின் இறுதிக் காலத்தில் அவரைப் பராமரித்தவர்களிலொருவர். அதுபற்றித் தனது குமரன் சஞ்சிகையில் அ.ந.க.வின் இறுதிக்காலம் பற்றிய தொடர் கட்டுரையொன்றினையும் எழுதியுள்ளார். இக்கட்டுரைத் தொடரினை யாராவது வைத்திருப்பின் எமக்கு அனுப்பி வைத்தால் நன்றியுடையவர்களாகவிருப்போம். அ.ந.க.வின் படைப்புகளை வைத்திருக்கும் எழுத்தாளர்கள் அவற்றை எமக்கு அனுப்பி வைத்தால் நன்றியாகவிருப்போம். அ.ந.கவுடன் பழகிய எழுத்தாளர்கள் அவருடனான தமது அனுபவங்களைப் பதிவுகளுடன் பகிர்ந்து கொண்டால் அவற்றை நாம் பதிவுகளில் பிரசுரிப்போம். அத்துடன் எதிர்காலத்தில் அ.ந.கவின் போதுமான படைப்புகள் கிடைத்ததும், அவற்றைத் தமிழகத்தில் வெளியிடும் எண்ணமுண்டு. அப்போது இத்தகைய கட்டுரைகளையும் சேர்த்துக் கொள்ளலாம். இது போல் ஈழத்தின் ஏனைய இலக்கிய முன்னோடிகளின் படைப்புகளையும் எவ்விதமான பாகுபாடுமின்றிச் சேகரித்து வெளியிட வேண்டுமென்பதும் எம் அவா. நேரம், காலம் கூடி வந்தால் எல்லாம் நன்கு நடக்குமென்ற நம்பிக்கை எமக்குண்டு. அ.ந.க வின் படைப்புகள் வைத்திருப்பவர்கள், அவருடனான தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள நினைப்பவர்கள் எம்முடன் பின்வரும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்: Pathivukal ,P.O.Box 22088 ,45 Overlea Blvd ,Toronto, Ontario ,Canada M4H 1N9 அல்லது ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம்.

ngiri2704@rogers.comமீள்பிரசுரம்:அ.ந.க நினைவு தினக்கட்டுரை 2!
எழுத்துக்காக வாழ்ந்த 
அ.ந.கந்தசாமி!

 - வ.ந.கிரிதரன் -

Nana novelநண்பர் மயூரன் பேரின்பநாதன் இலங்கைச் சுவடிகள் திணைக்களத்திலிருந்து அ.ந.க.வின் 'நானா' நாவலின் பிரதிகளை எடுத்து அனுப்பியிருந்தார். அத்துடன் சுதந்திரனில் வெளிவந்த அ.ந.க.வின் 'பண்டிதர் திருமலைராயர்' என்னும் பெயரில் வெளிவந்த சிலப்பதிகாரம் சம்பந்தமான கட்டுரைகள் சில, சுதந்திரனின் 'புதுமை இலக்கியப் பூங்கா' பகுதியில் 'கவீந்திரன்' என்னும் பெயரில் அ.ந.க. எழுதிய இலக்கியக் கட்டுரைகள் சில, 'கலையரசன்' என்னும் பெயரில் 'நானா' பற்றிய அ.ந.க.வின் கட்டுரை,  சுதந்திரனில் வெளிவந்த 'ஐந்தாவது சந்திப்பு' சிறுகதை, 'நகரம்', 'கைதி', மற்றும் 'துறவியும் குஷ்ட்டரோகியும்' ஆகிய கவிதைகள், எஸ்.பொ.வின் 'தீ' நாவல் பற்றிய அ.ந.கந்தசாமியின் நூல் மதிப்புரை,  அ.ந.க. மறைந்து ஒரு மாதம் கழித்து தினகரனில் காவலூர் ராசதுரை எழுதிய 'எழுத்துக்காக வாழ்ந்த கந்தசாமி' கட்டுரை, அதே தினகரனில் வெளிவந்த கவிஞர் முருகையனின் 'கந்தசாமியைக் காண நேர்ந்தது (ஒரு சிறு கனவு)' என்னும் கவிதை, 1968இல் தினபதியில் அ.ந.க. நினைவு தினக் கட்டுரையாக வெளிவந்த அவரது கவிதை பற்றிய கட்டுரையொன்று என அ.ந.க.வின் ப்டைப்புகள் சிலவற்றைத் தேடியெடுத்து அனுப்பியுள்ளார். அத்துடன் திருமதி கமலினி செல்வராசனுடன் தொடர்புகொண்டு Tribuneஇல் வெளிவந்த அ.ந.கந்தசாமியின் ஆங்கிலக் கட்டுரைகள் நான்கினையும் பெற்று அனுப்பியுள்ளார். இவற்றிலொன்றே  இம்மாத பதிவுகள் இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. சுதந்திரனில் அ.ந.க.வின் படைப்புகள் 1951/1952 காலகட்டத்தில் வெளிவந்திருக்கின்றன. அ.ந.க என்னும் கிணறினைத் தோண்டத் தோண்டப் பெருகிவரும் இலக்கிய ஊற்று எம்மைப் பெரிதும் பிரமிக்க வைக்கின்றது. எழுத்தாளர் காவலூர் ராசதுரையையும் பிரமிக்க வைத்திருக்க வேண்டும். அதனால் தான் அவர் 'எழுத்துக்காக வாழ்ந்த கந்தசாமி' என்னும் தினகரன் கட்டுரையில் (தினகரன்; மார்ச் 14, 1968) பின்வருமாறு கூறுகின்றார்:

'ஈழத்து இலக்கிய வரலாற்றிலே 1967ம் ஆண்டு "கந்தசாமியின் ஆண்டு" என்று சொவது தவறாகாது. 1967இல்

1. சாகித்திய மண்டல ஒழுங்கு செய்த கருத்தரங்குகளிலே கந்தசாமியின் ஆய்வுரைகள் சிறப்பிடம் பெற்றன. நாடகத்துறை பற்றியும் நாவல் பற்றியும் அவர் வாசித்த கட்டுரைகள் முற்போக்கு இலக்கியவாதிகளை மட்டுமல்லாமல், கொள்கை அடிப்படையில் முற்போக்காளர்களைச் சாடியவர்களையும் கவர்ந்தன. தேசிய இலக்கியத்தின் கர்த்தாக்களில் ஒருவரான கந்தசாமி சிறுகதை, நாவல் முதலிவற்றிலே எத்தகைய வசன நடை கையாளப்பெறல் வேண்டுமென்பதுபற்றி வெளியிட்ட கருத்து பலருக்கு வியப்புண்டாக்கிய போதிலும், எவராலும் எதிர்க்கப்படவில்லை. அவருடைய கருத்து வெளியானதன் பின்னர், பிரதேச மொழி வழக்கிலே உரையாடல்களை அமைத்து உருவக்கப்பெற்ர தொடர் நவீனமொன்று, செந்தமிழ் நடையில் புதுக்கி எழுதப்பெற்றதை இக்கட்டுரையாளர் அறிவார். [இதனால்தான் போலும் அ.ந.க. தனது நாவலான 'மனக்கண் 'உட்படக் கதைகளிலெல்லாம் துள்ளுதமிழ் நடையொன்றினைக் கையாண்டார் போலும்.- ஆசிரியர்]

2. சாகித்திய மண்டலத்தின் "பா ஓதல்" கவி அரங்கிலும் கந்தசாமியின் குரல் ஒலித்தது. "கடவுள் என் சோர நாயகன்" என்னும் தலைப்பில் அவர் ஓதிய பா, அவரே குறிப்பிட்டதுபோல, தமிழுக்கே புதியது. "நாயகனாகவும், நாயகியாகவும், குழந்தையாகவும் மற்றும் பலவாறாகவும் கடவுளைத் தமிழ்க் கவிஞர் பலர் பாவித்திருக்கின்றார்கள். ஆனால் எவராவது சோர நாயகனாகப் பாவித்ததிண்டோ?" என்றார் கந்தசாமி. [இக்கவிதையை யாராவது வைத்திருந்தால் எமக்கு அனுப்பி வைத்துதவவும். எம்முடன் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம்.- ஆசிரியர்]

3. தினகரனில் 'மனக்கண்' என்னும் தொடர் நவீனம் சுமார் ஒன்பது காலம் வெளிவந்து பல்லாயிரக்கணக்கானோரை பரவசத்தில் ஆழ்த்தியது.

4. "மதமாற்றம்" என்ற நாடகம் (மூன்றாவதுமுறையாக) அரங்கேற்றப்பட்டதும், "நாடகவிளக்கு" என்று கந்தசாமி வர்ணிக்கப்பட்டதும் 1967ஆம் ஆண்டிலேயாகும்.

5. வானொலியில் "கலைக்கோல" நிகழ்ச்சியில் மாதந்தோறும் கந்தசாமியின் விமரிசினங்களும், "உலக நாடகாசிரியர்கள்" பற்றிய அறிமுகவுரைகளும் ஒலித்தன. (மொழிபெயர்ப்பு) நாடகம் (கந்தசாமியின் கடைசிப் படைப்பு) ஒலிபரப்பாயிற்று.

6. "வெற்றியின் இரகசியங்கள்" என்ற மனத்தத்துவ நூல் வெளியாயிற்று.

ஆக, நாடகம், கவிதை, நாவல், கட்டுரை யாவற்றிலும் 1967இல் கந்தசாமி தமது ஆற்றலைக் காட்டினார். இவ்வாறு இலக்கியத்துறையின் சகல கிளைகளையும் ஆக்கிரமித்தவரைப்போலக் காட்சியளித்த கந்தசாமி வாழ்ந்தது எழுத்துக்காக; எழுதியது வாழ்க்கைக்காக.'

இவ்விதம் அக்கட்டுரையில் காவலூர் ராசதுரை குறிப்பிட்டுள்ளார். மேற்படி கட்டுரையில் அ.ந.க எவ்விதம் நோய்களுடன் மல்லுக்கட்டியபடியே எழுதிக் குவித்தாரென்பதையும், அவரது எதிர்கால இலக்கிய முயற்சிகள் பற்றியும் மற்றும் அ.ந.க.வின் இறுதிக்கால வாழ்வு பற்றியும் காவலூர் ராசதுரை விபரித்திருக்கின்றார். 

அ.ந.க.வின் மொழிபெயர்ப்பில் 'நானா'!
Young A.N.Kanthasamiஎமிலிசோலாவின் நாவலான 'நானா'வைச் சுதந்திரனில் மொழிபெயர்த்து அ.ந.க. வெளியிட்டபோது அது பெரும் வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பியதை சுதந்திரனில் பிரசுரிக்கப்பட்டுள்ள கடிதங்களிலிருந்து அறியமுடிகின்றது. அ.ந.க.வின் மொழிபெயர்ப்பில் எமிலி சோலாவின் 'நானா' சுதந்திரனில் 21-10-51தொடக்கம் -28-8-1952 வரையில் மொத்தம் 19 அத்தியாயங்கள் வெளிவந்துள்ளன. முதலாவது அத்தியாயம் 'முதலிரவு' என்னும் தலைப்பிலும், பத்தொன்பதாவது அத்தியாயம் 'போலிஸ்' என்னும் தலைப்பிலும் வெளிவந்துள்ளன. பத்தொன்பதாவது அத்தியாயம் , தொடரும் அல்லது முற்றும் என்பவையின்றி, ஓசையின்றி முடிந்துள்ளதைப் பார்க்கும்போது ' நானா' நாவல் அத்துடன் முடிவு பெற்றுள்ளதா அல்லது நடுவழியில் வாதப்பிரதிவாதங்கள் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதா என்பதை மூல நூல் பார்த்துத்தான், நாவலை வாசித்துப் பார்த்துத்தான் முடிவு செய்யவேண்டும். நாவல் வெளிவந்தபோது வெளிவந்த வாசகர் கடிதங்களிலிருந்து பெரும்பாலான வாசகர்களை நானா அடிமையாக்கி விட்டாளென்றுதான் தெரிகின்றது. எதிர்த்தவர்கள் கூட அ.ந.க.வின் மொழிபெயர்ப்பினைப் பெரிதும் பாராட்டியிருப்பதையும் அவதானிக்க முடிகிறது. நாவலை அ.ந.க தனக்கேயுரிய  அந்தத் துள்ளுதமிழ் நடையில் மொழிபெயர்த்துள்ளார். நாவல் காரணமாகச் சுதந்திரனின் விற்பனை அதிகரித்துள்ளதையும், நானாவை வாசிப்பதில் வாசகர்களுக்கேற்பட்ட போட்டி நானா வெளிவந்த சுதந்திரனின் பக்கங்களைக் களவாடுவதில் முடிந்துள்ளதையும் அறிய முடிகிறது. . மூத்த எழுத்தாளர் டொமினிக் ஜீவாவும் ஒரு கடிதம் எழுதியிருகின்றார். 'நானா' பற்றி வெளிவந்த வாசகர் கடிதங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்.

'"நானா" கதை சுதந்திரனில் வெளிவரத்தொடங்கிய பின்பு மார்க்கெட்டில் சுதந்திரன் பத்திரிகைக்கே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பலர் கடைகளுக்குச் சென்று பத்திரிகை கிடைக்காமல் வெறுங்கையுடன் திரும்பிச் சென்றுள்ளதை நான் கண்ணாரக் கண்டேன். அதனால் பலர் சேர்ந்து ஒரு பத்திரிகையை வாசிக்க வேண்டிய நிர்ப்பந்தமும் ஏறபட்டுள்ளது. தமிழாக்கம் அபாரம்' இவ்விதம் தனது கருத்தினை எழுதியிருக்கின்றார் செம்மாதெரு, யாழ்ப்பாணத்திலிருந்து டொமினிக் ஜீவா. 

கொள்ளுப்பிட்டியிலிருந்து எம்.மாதவன் என்பவர் பின்வருமாறு குமுறியிருக்கின்றார்: 'நானா' கதையைத் தொடர்ச்சியாகப் படித்து வருகின்றேன். ஆனால் அந்தப் பிரதிகளைக் கூட அற்பத்தனமாகக் களவெடுத்துவிடும் கயவர்கள் உலகில் இல்லாமலில்லை. ஒரு நண்பன் 'நானா' பக்கங்களைப் பார்த்தே திருடி எடுத்து விட்டான். என் குறையை வேறு யாரிடம் சொல்லி அழுவது? இவ்வளவுக்கும் காரணமான உங்களிடமே கூறிவிட வேண்டுமென்று இதை எழுதுகிறேன்.'

சென்னையிலிருந்து 'செங்கோல்' பதிப்பகத்தைச் சேர்ந்த வே.கணபதி என்பவர் பின்வருமாறு எழுதியுள்ளார்: 'எமிலி ஸோலாவின் அற்புதமான கதையை அழகான தமிழில் தந்து வருகின்றீர்கள். தமிழறிந்தோரிடையே ஸோஸாவின் நூலைத் தங்கள் பத்திரிகைதான் அறிமுகம் செய்து வைக்கிறது என்று நினைக்கின்றேன். இந்த முயற்சியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.'

'சமுதாயப் பதிப்பகம்', சென்னையிலிருந்து சம்பந்தன் என்பவர் பின்வருமாறு எழுதியிருக்கின்றார்: 'சுதந்திரனில் தொடர்ந்து வெளியாகும் 'நானா' வின் முதற் பகுதியைப் படித்தேன். கதையின் சுவையில் ஆழ்ந்து போனேன். அது ஒரு மொழிபெயர்ப்புக் கதையாகவே தோன்றவில்லை... நானா ஒரு வெற்றிகரமான மூலத்தின் சுவை குன்றாத அற்புத மொழிபெயர்ப்பு என்பதில் சந்தேகமில்லை'. இவர்களுடன் இன்னும் பலரின் கடிதங்கள் 'அருமையான கதை- சுவை குன்றாத் தமிழாக்கம்' என்னும் தலைப்பில் 18-11-51 சுதந்திரன் இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இது போல் 30-12-51 சுதந்திரன் இதழிலும் 'நானா திசையிலிருந்தும் 'நானா'வுக்குப் பாராட்டு' என்னும் தலைப்பில் பல வாசகர் கடிதங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. நானாவை வரவேற்றும், எதிர்த்தும் வாசகர்கள் தம் கருத்துகளைத் தெரிவித்திருக்கின்றார்கள். [அ.ந.க.வின் மொழிபெயர்ப்பில் வெளிவந்த மேற்படி 'நானா'வுட்பட எமக்குக் கிடைக்கும் அவரது படைப்புகள் அனைத்தும் பதிவுகளில் வெளியாகும். -ஆசிரியர்]

இதுபோல் பண்டிதர் திருமலைராயர் என்னும் பெயரில் அ.ந.கந்தசாமி எழுதிய 'கண்ணகிப் பாத்திரம் பெண்மையின் சிறப்பைக் காட்டுகிறதா? பெண்ணடிமையின் சிகரம் என்பதே சாலப் பொருந்தும்' என்னும் கட்டுரையும் பலத்த வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பி விட்டுள்ளதை அன்றைய சுதந்திரன் இதழின் பக்கங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன.

அ.ந.க.வின் ஏனைய ஆக்கங்கள் சிலவற்றை, அவைபற்றிய விபரங்களைக் கீழுள்ள முகவரியிலும் காணலாம்: http://www.geotamil.com/pathivukal/ANKANTHASAMI.html
அறிஞர் அ.ந.கவின் நினைவு தினம் பெப்ருவரி 14. அதனையொட்டி இக்கட்டுரை வெளிவருகிறது.

ngiri2704@rogers.com

கந்தனுடன் உள்ளம் 
கலந்த சுவைக் கணங்கள்!

- சில்லையூர் செல்வராசன் -

A.N.K and Sillaiyuur Selacraasan
நேற்றுத் தான் போல் என் நினைவில் தெரிகிறது...
சோற்றுக் கவலை, துணிக்கவலை, அன்றாட
வீட்டுக் கவலை, கல்விவித்தை தொடர வழி
காட்டித்துணை செய்து கொடுக்க யாரேனும்
இல்லாக் கவலை, இவற்றைச் சுமந்த சிறு
பிள்ளையாய், இந்தப் பெரிய கொழும்பு நகர்க்
கோட்டையிலே வந்திறங்கி குறுகி மனம் பேதலித்து,
வேட்டி, சட்டையோடு வெளிக்கிட்டுத், தட்டார
வீதியில் என்றன்று விலாசம் இடப்பட்ட
சேதித்தாள்க் கந்தோரைச் சென்றடைந்த அந்த நாள்..
நேற்றுத் தான் போல் என் நினைவில் தெரிகிறது...
மாற்றில் உயர்ந்து மதிப்புக்குரித்தான
நல்ல சிறுகதையை நான் எழுதிப் போட்டியிலே
வெல்ல முதற்பரிசை விடலைப் பருவத்திற்
சித்தித்த வெற்றிக்கென் சிந்தை பலியாக
தித்திப்பை ஊட்டிய அத்திக்கில் தொடர்ந்து மனம்
போக்கி, எழுத்தே என் போக்கிடமாய் கொள்வதெனும்
ஊக்கம் மிகுதுறவே, ஒரு கோடி கற்பனைகள்
பேதைக் கனாக்கள் பிடித்தாட்டும் மொய்வெறிபோற்
போதையுடன் புறப்பட்டு மூ பத்து ஐ
வருடங்களின்  முன்னால் வந்து, கொழும்பில் இளம்
பருவத்திற் போய் அந்தப் பத்திரிகைக் கந்தோரின்
'கேற்றை'த் திறக்க கிடைத்த வரவேற்பு,
நேற்றுத் தான் போல் என் நினைவில் தெரிகிறது...
'நீங்களா?' என்று நிமிர்ந் தென்றன் சிற்றுருவம்
தாங்கா வியப்பைத் தனக்களித்த சங்கதியைச்
சொன்னான் ஒருவன்; அந்தச் சொல் ஒன்றினை குழைவாய்
கண்ணியமாய்,கச்சிதமாய்,கனமாய், நிதானமுமாய்
வெட்டியளந்து விறுத்தமாய், கனிவூற
ஒட்டுறவாய், பிறரை உருவு கண்டு எள்ளாத
பண்போடு மரியாதைப் பன்மை விகுதியிட்டுச் 
சொன்ன விதத்தில், அதைச் சொன்னவனின் ஆளுமை என்
சின்ன மனதிற் செறிந்து பதிந்துறையப்,
பின்னர் அவனுடன் பின்னிப் பிணைந்தெனது
வாழ்வின் செம்பாதி வளைந்து நடக்கின்ற
சூழ்வுற்ற தென்று நான் சுதாரித்த அந்த நொடி,
நேற்றுத் தான் போல் என் நினைவில் தெரிகிறது...
கூற்றுப் பிரித்து அவனைக் கொண்டோடிப் போய்விட்ட
ஈற்று வருடம் வரை பின் நிகழ்ந்ததெல்லாம்
நேற்றுத் தான் போல்  என் நினைவில் தெரிகிறது..
'சப் எடிட்டர்'ப் பட்டம், அனுபவங்கள் தந்த தழும்பு
ஏறித் தழும்பேறி எழுதுகோல் கொண்டு மனத்து
ஊறிக் குதிர்ந்த உணர்வு அறிவு மாக்கடலை
மத்துக் கடைந்து, மதுரக்கலை அமுதைப்
பொத்தி எடுத்துப் புதுமை விருந்து படைத்து,
'ஆ'னா வரிசை அடைந்து எழுத்தர் முன்னணியிற்
பேனா நிமிர்த்திப் பிடிக்கின்ற வல்லமையைத்
தானும் பெறுகின்ற தருணத்தில், தன்னோடு
நானும் பெறுமாறு நல்வழிகள் காட்டியவன்
'கந்தன்' எனச் செல்லக்கனிவுப் பெயர் கொண்டு
பந்தமுடன் நான் அழைத்த பரிவு மனமுடையான்.
எந்தக் கணமும் இலக்கியத்துக்கே உயிரைச்
சொந்தம் கொடுத்துச் சுகம் அழித்துக் கொண்டமகன்!
வாழ்வு முழுவதையும் வைத்தான் கலைக்கென்றே!
தாழ்வென்று மற்றோர்கள் தள்ளும் பழக்கங்கள்
ஒழுக்க வழக்கங்கள் என்கின்ற வேறுபாடான நெறித்
தடங்கள் அவன் சிந்தனைக்குத் தடங்கல் புரிந்ததில்லை!
சடங்கு முறையான சம்பிரதாயங்கள் எல்லாம்
தூக்கியெறிந்து, துணிந்து,புதுவேக
நோக்கும், நடப்பும், நுணுகிப் பொருள் ஆய்ந்து
பார்த்துச் 'சரி இந்தப் பார் உயர' என்றுணர்ந்த
நேர்த்திக் கருத்தை, நின்று நெற்றிக்கு நேராக
ஓங்கி எறிந்து அடித்தே உறைப்பாகச் சொல்திறனும்
ஆங்காரம் இன்றி உண்மை அறிவு நெறிமாணவனாய்
எந்தக் கணமும் இருக்கின்ற தன்னிறைவும்
நிந்தை கலவாமல் நேர்மையுடன் கண்டிப்புச் 
செய்கின்ற போதும் திகழ்கின்ற கண்ணியமும்
வைகின்ற பேர்களையும் வாசாலகமாக
வாதாடி நா மடங்க வைக்கின்ற வல்லமையும்
தீதாடிச் சமூகத்தில் திரியும் பிற்போக்குகளைக்
கண்டால், உளம் உயிர் மெய்க் கரணங்கள் அத்தனையும்
விண்டு ஆடிப்போனது போல் வெந்து வெந்து போராடும்
உண்மை உளக்கலப்பும் ஒருங்கே திரண்ட பெரும்
திண்மை, அவன் 'நடத்தை'- கலைச்சிருஷ்டி இரண்டினிலும்
தோய்ந்திருக்கக் காணக்கொடுத்து வைத்த பாக்கியன் நான்.
ஓய்ந்திருக்கான். வாடி, உடல் நோயில் ஆழ்ந்திருந்த
வேளையிலும் நோய்க்கட்டில் மீதிருந்து கால் மீது
தாளை வைத்து நூலெழுதித் , தாழாதுஎம் நாட்டெழுத்து
மேன்மை விளங்க விடாமல் உழைத்தவன்! செந்
தேன் போற் கருத்துத் தெறிக்கும் அவன் படைப்பில்!
'ஸோலா'வின் 'நானா' சுவைத் தமிழில் தந்தநாள்;
மேலானதென்று ஈ.வே.ரா.பெரியார் பாராட்டி,
'விடுதலை'யிலே தொடராய் வெளியிட்ட ஆய்வு சுடர்
விடும் 'சிலம்புக் கட்டுரைகள் விநோதப் புனை நாமம்
பண்டிதர் திருமலைராயர் என்று பூண்டெழுதிக்
கண்டாய் அளித்திட்ட காலம்; திருச்சியிலே
வானொலியில் இலக்கண வரம்பு முறை பற்றித்
தேனொலிகள் செய்த தினம்; என்றிவ்வாறாக
'எதிர்காலச் சித்தன்' எனும் பாடல்; சிந்தனைகள்
முதிரக் கடவுளையே முந்த முந்தத் தன்னுடைய
'சோர நாயகன்' என்று சொல்கின்ற தீம்பனுவல்;
வேறதிக மேதகைமை மிளிரும் படைப்புகளும்,
'மனக்கண்', 'களனிவெள்ளம்'; மற்றும் வெளியாகாப்
புனைப்புகள் பற்பலவும் புத்தறிவு போதிக்கும்
'வெற்றியின் இரகசியங்கள்' விளக்கும் நூல் 'மதமாற்றம்'
முற்றிலும் நாடகத்துறை முதிர்விக்கக் கூர்தமிழில்
செய்தளித்துச் சென்ற திருக்கலைஞன் கந்தனது
மெய்யாம் திறமைகளை மிகவும் தெரிந்தவன் நான்.
பந்தமுடன் ஒன்றாய்ப் பணியாற்றிப் பல்லாண்டு
சிந்தைகலந்து ஒரே விட்டிற் சேர்ந்திருந்தும் வந்ததனால்
கந்தன் எழுதாத காவியங்கள் நானறிவேன்!
சிந்தையுடன் கொண்டு சென்ற செய்திகளும் நானறிவேன்.
முற்போக்கா, பிற்போக்கா, முதுதமிழா ஊர்வழக்குத்
தற்காலப் பேச்சு நடைதானா தகுந்ததென்றும்
,கலை கலைக்கா, மக்களுக்கா கதை முன்பிருந்ததுண்டா,
தொலை நாட்டுப் பண்புகளும் தொல்தமிழுக்கேற்றதுவா
உருவமா உள்ளடக்கம் தானா உயர்ந்ததென்றும்
'அரிவரி மாணாக்கர்களுக்கான வெறும் ஆரம்பச் 
சில்லறை வாதங்களிலே சிக்கித் தடுமாறி
செல்லரிசி விட்டு வெறும் நெற்பதரைச் சோறாக்கிக்
கொண்டிருக்கும் எங்கள் குறுமதி சூழ் கூட்டத்தார்க்கு
எண்டிசையும் போற்றவல்ல எண்ணங்கள் ஏற்காதென்று
எண்ணிச் சிறிதளவே எடுத்தும் படைத்துத், தன்
எண்ணக் கலத்துள்ளே எத்தனையோ அற்புதங்கள்
கொண்டு சென்றான் கந்தன்! அவன் கூடக் கலந்துஅறிவு
மண்டும் அரியமதி விருந்து சாப்பிட்ட
நூற்றுக் கணக்கான நொடிகள்-சுவைக் கணங்கள்
நேற்றுத் தான் போல் என் நினைவில் தெரிகிறது.

[ஈழத்துப் பிரபல எழுத்தாளர்களில் ஒருவரும் கவிதையுலகில் 'தான் தோன்றிக் கவிஞரா'க அறியப்பட்டவருமான சில்லையூர் செல்வராசன் அறிஞர் அ.ந.கந்தசாமியின் உற்ற நண்பராக விளங்கியவர். இவர் தனது அ.ந.க. பற்றிய உணர்வுகளைக் 'கந்தனுடன் உள்ளம் கலந்த சுவைக் கணங்கள்!' என்னும் கவிதையாக வீரகேசரியில் தந்தவர். இக்கவிதை வீரகேசரியின் வாரவெளியீட்டில் 16-2-1986 அன்று வெளிவந்தது.]


© காப்புரிமை 2000-2005 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner