சாகாத இலக்கியத்தின்
சரித்திர நாயகன் - 6
அந்தனி ஜீவா
['சாகாத இலக்கியத்தின் சரித்திர
நாயகன்' என்னும் அ.ந.க பற்றிய அந்தனி ஜீவாவின் இக்கட்டுரைத் தொடர் ஈழத்தில் தினகரன் வாரமஞ்சரியில்
12-02-1984 அன்றிலிருந்து தொடராக வெளிவந்த கட்டுரைத் தொடராகும்.]
நாடகத்துறை....
நாவல்
துறையில் மாத்திரமின்றி நாடகத் துறையிலும் அ.ந.க.வின் விசேட கவனம் சென்றது. வீழ்ச்சியுற்றுக்
கிடக்கும் நாடகத்துறையில் ஏதாவது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்று நினைத்தார். 'மதமாற்றம்'
என்ற நல்லதொரு நாடகத்தை தந்தார். 'மதமாற்றம்' நாடகத்தைப் போல் அந்தக் காலகட்டத்தில் ஈழத்து
நாடக மேடையைப் பாதித்தது வேறு எந்த நாடகமும் இல்லை எனலாம்.கொழும்பில் தற்போது அரங்கேற்றப்படும்
சில நாடகங்களைப் பார்க்கும் பொழுது பார்வையாளர்கள் 'ஆகா' எனக் கைதட்டிச் சிரிப்பதைக் காண்கின்றோம்.
நாடகத்தைப் பார்த்து விட்டு வெளியே வந்ததும் எதுவும் மனதில் தங்கும்படியாக இல்லை. இப்படிப்பட்ட போலி
இரசிகத்தன்மையை வளர்க்கும் நாடகங்களில் மாறுபட்டு நின்றது 'மதமாற்றம்'.
பேராசிரியர் கைலாசபதி அவர்கள் 'ஒப்சேவர்' ஆங்கிலப்
பத்திரிகையில் தமிழ் நாடகங்களைப் பற்றி எழுதியபொழுது 'இதுவே தமிழில் எழுதப்பட்ட நாடகங்களில்
ஆகச் சிறந்த நாடகம்' எனக் குறிப்பிட்டார். ஆமை வேகத்தில் இயங்கிய ஈழத்துத் தமிழ் நாடகமேடை
அ.ந.க. 'மதமாற்றம்' ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக சிறிது துரித வேகத்தில் இயங்க ஆரம்பித்தது
என்பது நாடக அபிமானிகள் ஒத்துக் கொண்ட உண்மையாகும்.
'மதமாற்றம்'
முதன் முதலில் அரங்கேற்றப்பட்டதும் அதைப் பற்றிய காரசாரமான விவாதங்களும், விமர்சனங்களும் இலக்கிய
உலகில் பெரும பரபரப்பை ஏற்படுத்தின. சில விமர்சகர்கள் அ.ந.க. முற்போக்குவாதி என்ற
காரணத்தினால், அவரை வைத்தே நாடகத்தை எடை போட்டு, நடுநிலை நின்று உண்மை கூறாது 'மதமாற்றத்'தைக்
குறை கூறினார்கள். 'மதமாற்றத்'தைப் பிரசாரபலத்தினால் பிரபலப்படுத்த முனைகிறார்கள் என ஒரு விமர்சகர்
நாடகத்தைப் பார்க்காமலே விமர்சனம் பண்ணினார். ஆனால் கண்டனத்திற்கு எல்லாம் கலங்காத கந்தசாமி
'மதமாற்றம்' தலை சிறந்த நாடகம் என்பதை நிரூபித்தார். [அ.ந.க.வே 'மதமாற்றம்'
பற்றியதொரு விமர்சனக் கட்டுரையினை எழுதியுள்ளார். இது யூலை 3, 1967இல் வெளிவந்த 'செய்தி'ப்
பத்திரிகையில் வெளிவந்துள்ளது. அக்கட்டுரை பின்னர் 'பதிவுகள்' இதழில் வெளியாகும். அக்கட்டுரையில்
காணப்படும் புகைப்படத்தினையே இங்கும் காண்கின்றீர்கள். - ஆசிரியர்]
எதிர்காலத்தில் ஈழத்து நாடகத்தைப் பற்றி விமர்சகர்கள்
விமர்சிக்கும் பொழுது அ.ந.க.வின் மதமாற்றத்தை மைல்கல்லாக வைத்துத் தான் கணக்கிடுவார்கள். நாடகத்தை
ஆங்கில அறிஞர் பெர்னாட்ஷாவின் நாடகங்களோடு ஒப்பிடலாம் என்று சில இலக்கிய விமர்சகர்கள் அபிப்பிராயம்
தெரிவித்தனர். 'அமரவாழ்வு' என்ற இன்னொரு நாடகத்தையும் அவர் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
[தாஜ்மகால்
உதயம் பற்றிய 'கடைசி ஆசை' என்றொரு குறு நாடகத்தையும் அ.ந.க. எழுதியுள்ளார். - ஆசிரியர்]
'மனக்கண்'
நாவலை நாடகமாக எழுதித் தருவதாக என்னிடம் குறிப்பிட்டார். அவரது ஆசையை நாடகக் கலைஞர்களாவது
நிறைவேற்றுவார்களா? [அ.ந.க.வின் நெருங்கிய நண்பரான சில்லையூர் செல்வராஜன்
அ.ந.க.வின் 'மனக்கண்' நாவலை வானொலி நாடகமாக வழங்கியதை மறந்து விட்டீர்களா? - ஆசிரியர்]
இலக்கிய விமர்சனம்
இலக்கிய விமர்சனத் துறையில் 'தேசிய இலக்கியம்' என்ற
கருத்தைப் பற்றி அந்த இயக்கம் ஈழத்தில் வலுவடைந்த காலத்தில் அ.ந.கந்தசாமி பல அரிய கட்டுரைகள்
எழுதியுள்ளார். அத்துடன் 'சிலப்பதிகாரம்', 'திருக்குறள்', 'எமிலிஸோலா' போன்ற பரபரப்பான
கட்டுரைகள் எழுதினார்.
அறிவுலகவாதியான அ.ந.கந்தசாமி எழுதும் கட்டுரைகள் புதுமை
நோக்குடன் இருக்கும். சிலப்பதிகாரத்தைப் பற்றி எழுதிய கட்டுரைகள் பண்டிதர் முதல் பட்டதாரிவரை பெரும்பாலோரிடையே
பெரும் சர்ச்சைக்குள்ளாகின. 'தினகரன்' வாரமஞ்சரியில் வெளிவந்த 'நான் விரும்பும் நாவலாசிரியர்'
என்ற கட்டுரைத் தொடரில் எமிலிஸோலாவைப் பற்றி அ.ந.கந்தசாமி எழுதிய கட்டுரை திறனாய்வு மிக்க
கட்டுரை என்று எல்லோருடைய பாராட்டையும் பெற்றதுடன் எமிலிஸோலாவைப் படம் பிடித்துக் காட்டியது.
தகவல்பகுதியினரால் வெளியிடப் பெற்ற 'ஸ்ரீலங்கா' சஞ்சிகையிலும்
ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் சரித்திர நிகழ்ச்சிகளையும் நிலைக்களனாகக் கொண்ட கதைகள் எழுதியுள்ளார்.
வானொலியில் மேல் நாட்டு நாடக ஆசிரியர்களைப் பற்றிச் செய்த விமர்சங்கள் தினகரனில் தொடராக
வெளிவந்த பொழுது நாடகத்துறையிலீடுபட்டவர்கள் அதனைவிரும்பிப் படித்தார்கள். ஹென்றிக் ஹிப்சனின்
அமர நாடகமான 'பொம்மை வீடு' (The Doll House) நாடகத்தைத் தழுவிப் 'பெண்பாவை' என்ற
பெயர் (நாடகத்திற்குத் தமிழ் வடிவம் கொடுத்தவர் தேவன் - யாழ்ப்பாணம்) கொடுக்கப்பட்டது.
வானொலியில் இப்ஸனின் பொம்மை வீட்டைப் பற்றி அறிஞர் அ.ந.கந்தசாமி செய்த நாடக விமர்சனம்
'பெண்பாவை'யைப் பார்த்த நாடக அபிமானிகளுக்கு இப்ஸனின் 'பொம்மை வீட்டை'ச் சரியாக இனம் கண்டு
கொள்ள உதவியது.
அறினர் அ.ந.கந்தசாமி இலக்கிய விமர்சனத்துடன் நில்லாது
ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். அவர் மகாகவி பாரதியாரின் ஞானகுருவாகிய யாழ்ப்பாணத்துச்
சாமியார் யார் என்பதை ஆராய்ந்து பாரதியாரின் ஞானகுரு யாழ்ப்பாணத்துச் சாமியார் அல்வாயூர் அருளம்பல
தேசிகர் என்ற உண்மையை நிலைநாட்டினார். அருளம்பல தேசிகர் பற்றிய விரிவான நூல் எழுதுவதற்குரிய
குறிப்புகளைச் சேகரித்துக் கொண்டிருந்தார். மகாகவி பாரதியாருக்கு 'பாரதி' பட்டம் கொடுத்த இலங்கையர்
யார் என்பதை மரணமடைவதற்குச் சில மாதங்களுக்கு முன்னால் ஆராய்ந்து கொண்டிருந்தார். உலகப் பேரழகி
கிளியோபறாவைப் பற்றிப் பல ஆங்கில நூல்களை ஆராய்ந்து அரியதொரு கட்டுரையை 'ராதா' வார இதழில்
வரைந்தார். ஆறுமுக நாவலரைப் பற்றி விரிவானதொரு நூல் எழுதப் போவதாகக் குறிப்பிட்டதுடன் அவ்வப்போது
பல நாளிதழ்களில் எழுதிய கட்டுரைகளையும் ஒழுங்காகச் சேகரித்து வைத்திருந்தார்.
மேல்நாட்டு எழுத்தாளர் ஓ ஹென்றியின் சிறுகதை உத்திகளையும்,
திருப்பங்களையும் பாராட்டும் அ.ந.க. அவற்றை இளம் எழுத்தாளர்கள் படித்துப் பயனடைய வேண்டும் என்று அவற்றை
மொழிபெயர்த்து வெளியிட்டார். அ.ந.க. அறிஞர் பெர்னாட்ஷா முதல் பேரறிஞர் பெட்ரண்ட் ரஸ்ஸல் வரை
அறிந்து வைத்திருந்தார். பெட்ரண்ட் ரஸ்ஸலின் 'யூத அராபிய உறவுகள்' என்ற கட்டுரைத் தொடர்
ஒன்றை 'இன்ஸான்' வார இதழில் தொடர்ந்து எழுதினார். எப்பொழுதும் தன் எழுத்துக்களால் பிறர்
பயன் அடைய வேண்டும் என்று விரும்பும் அ.ந.கந்தசாமி 'வெற்றியின் இரகசியங்கள்' என்ற தத்துவ
நூல் ஒன்றினையும் எழுதியுள்ளார். இது தமிழகத்தில் பாரி நிலையத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. இஃது
எல்லா வகையிலும் சிறந்து வாழ்க்கையைப் படிப்பிக்கும் நூலாகும்.[இதே பாரி நிலையத்தினர்
பின்னர் வெளியிட்ட அகிலனின் நூலொன்றிற்கும் 'வெற்றியின் இரகசியங்கள் என்னும் பெயரினை வைத்துள்ளதானது
நேர்மையற்ற வெட்கங்கெட்ட செயலாகும். - ஆசிரியர் -]
சாகாத இலக்கியத்தின்
சரித்திர நாயகன் - 7
சீர்திருத்தத் துறை
அ.ந.கந்தசாமி
இலக்கியத் துறையோடு நிற்காது சமுதாயச் சீர்திருத்தத்துறைகளிலும் பகுத்தறிவுச் சிந்தனையைப் பரப்புவதிலும்
நெடுங்காலமாக ஈடுபட்டு வந்தார். சுயமரியாதைக் கருத்துகளால் கவரப்பட்ட கந்தசாமி, சுயமரியாதை
இயக்கத்தின் தலைவருமாயிருந்தார். இவற்றை எல்லாம் எண்ணிப் பார்க்கும்பொழுது தமிழ் எழுத்தாளர்களிடையே
அ.ந.கந்தசாமி பன்முகங்கொண்ட விஸ்வரூபனாகக் காட்சியளித்தார். இவரின் திறமையையும் இலக்கிய
ஆளுமையையும் மதித்த பேராசிரியர் கைலாசபதி தனது 'ஓப்பியல் இலக்கியம்' என்ற நூலை அ.ந.கந்தசாமி
அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்துள்ளார்.
அ.ந.க.வெற்றியின் இரகசியம்
இலக்கிய உலகில் ஈடு இணையற்ற ஜாம்பவானாக அ.ந.க
திகழ்வதற்குக் காரணமென்ன? புதுமைச் சமுதாயத்தைக் காணத் துடித்த புதுமையாளனாக விளங்கினார். உழைக்கும்
தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைக்காகக் போராடினார். அந்தத் தொழிலாளர் வர்க்கத்துடன் தனனை இணைத்துக்
கொண்டார். தான் படைக்கும் இலக்கியத்தைக் கூட அந்தக் கண்ணோட்டத்துடன் தான் படைத்தார்.
கடும் நோயின் பாதிப்புக்குள்ளாகிய அ.ந.கந்தசாமி அதைப்
பற்றியே கவலைப் படவில்லை. சிறூவயதிலிருந்தே 'எக்ஸிமா' என்ற நோய்க்கு ஆளாகிய அவர், அந்த
நோயைக் குணப்படுத்துவதற்குப் பல முயற்சிகள் செய்து தோல்வி கண்டு, தமிழ் நாட்டில் வேலூர் வைத்தியசாலையில்
சில காலம் தங்கியிருந்து சுகப்படுத்த முடியாமல் மற்றும் பல்வேறு வைத்தியங்கள் செய்தும் சில புதிய நோய்களின்
பாதிப்புக்கு ஆளானார். ஆனால் மனத் தைரியத்தை மட்டும் விடவில்லை.
வாழவேண்டும், வாழ்ந்து கொண்டு பேனா முனை கொண்டு பெரும்
போராட்டம் நடத்த வேண்டும் என்ற வர்க்க உணர்வின் காரணமாக நம்பிக்கை இழக்காமல் ஊசிகளாலும் மருந்துக்
குளிகைககளாலும் உயிர் பெற்று வாழ்ந்து கொண்டு, அவர் எழுத்துலகில் பல சாதனைகளை நிலை நாட்டியது
வியப்பிலும் வியப்புக்குரியதாகும்.
அ.ந.க. 'வெற்றியின் இரகசியம்'
அ.ந.கந்தசாமி அவரது 'வெற்றியின் இராக்சியங்கள்'
என்ற நூலில் 'உங்களுக்கு இருக்கக் கூடிய நோய்களைப் பற்றி எண்ணுவதில் நேரத்தை செலவிட வேண்டாம்.
ஏனெனில் உங்களிடம் உண்மையான நோய்கள் இல்லாவிட்டால் அவைகள் உங்கள் எண்ணத்தின் சக்தியால் தோன்றி
விடக்கூடும்' என்ற எமில் கூ அவர்களின் கருத்தை எமக்கு எடுத்துச் சொல்கிறார். இது போன்ற அரிய கருத்துகளைத்
தேடிப் படித்ததால் தான் தனது நோயைப் பற்றிச் சிந்திக்காமல் தன்னால் முடிந்த அளவு சாதித்தார். தன்னைப்
போல் மற்றவர்களும் இலட்சியத்துடன் வாழ வேண்டும் எனக் கருதியே 'வெற்றியின் இரகசியங்கள்' என்ற
நூலையும் தந்தார்.
சரித்திர நாயகன்!
'எழுதுகோல் தெய்வம்- இந்த எழுத்தும் தெய்வம் என்ற் அப்பாட்டுகொரு
புலவன் பாரதியின் வாக்குப் படி எழுத்தைத் தெய்வமாகப் போற்றி வந்தார் அ.ந.க. அந்த இலக்கியத்தின்
சரித்திர நாயகனாக, அறிவுலக மேதையாகத் திகழ்ந்த அ.ந.கந்தசாமி 'புதுமை இலக்கியம்' என்ற
முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வெளியிட்ட மாத ஏட்டில் 'நான் ஏன் எழுதுகிறேன்?' என்ற தலைப்பில் தான்
எழுத ஆரம்பித்த கால சூழ்நிலையைப் படம் பிடித்துக் காட்டினார். அதில் சில வரிகளைக் கீழே தருகிறேன்:
"..இன்று நாம் வாழும் சமுதாயத்தில் நாம் புன்னகையைக்
காணவில்லை. துன்பமும், துயரமும், அழுகையும், ஏக்கமும்,கண்ணீரும், கம்பலையுமாக நாம் வாழும் உலகம் இருக்கிறது.
ஏழ்மைக்கும் , செல்வத்துக்கும் நடக்கும் போரும், உயர்ந்த சாதியாருக்கும், தாழ்ந்த சாதியாருக்கும் நடக்கும்
போரும், அசுர சக்திகளுக்கும், மனித சக்திகளுக்கும் நடக்கும் போரும் இன்று உலகையே கலங்க வைத்துக்
கொண்டிருக்கின்றன. போர்களினால் வாழ்வே ஒரு சோக கீதமாகி விட்டது. இப்போர்களை எவ்வளவு விரைவில்
ஒழித்து விட முடியுமோ அவ்வளவு விரைவில் ஒழித்து விட வேண்டும். அதன் பின் போரொழிந்த சமத்துவ
சமுதாயம் பூக்கும். அதனைப் பூக்க வைக்கும் பெரும் பணியில் எழுத்தாளன் முன்னோடியாகத் திகழ வேண்டுமென்ற
கருத்தைப் புகழ் பெற்ற பேனா மன்னர்கள் என் மனதில் தோற்றுவித்தனர்."
இவ்வாறு கூறியது மாத்திரமின்றி அ.ந.கந்தசாமி
சமுதாயச் சுரண்டலை ஒழிக்க , சமூகத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வு போன்ற கொடுமைகளைப் பேனா முனைகொண்டு
சாடினார். அவரின் கனவை நனவாக்க அவரைச் சார்ந்த அணியினர் இயக்கமாக இயங்கினார்கள்.
அ.ந.கந்தசாமியின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட எமக்கு
அவரின்பாடையைப் பார்த்தபொழுது புதுமைப் பித்தனின் பாடலொன்றுதான் நினைவிற்கு வந்தது. இதை அருகிருந்த
எழுத்தாள நண்பரிடம் தெரிவித்தேன்.
"பாரதிக்குப் பின் பிறந்தார்.
பாடை கட்ட வைச்சிட்டார்.
ஆரதட்டிச் சொல்வார்.
அவரிஷ்ட பாரதனே!"
இந் நான்கு வரிகளையும் கேட்ட நண்பர் அ.ந.க.வின் இடத்தை
நிரப்ப நீண்ட காலம் பிடிக்கும் என்றார். சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகனாக அ.ந.க. என்ற
அந்த ஆளுமைமிக்க படைப்பாளி திகழ்கிறார் என்ற உண்மையை யாரும் மறக்க முடியாது.
முற்றும்
[இத்துடன் அந்தனி ஜீவா அறிஞர் அ.ந.கந்தசாமி
பற்றித் தினகரனில் எழுதி வெளிவந்த 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' என்னும் கட்டுரைத்
தொடர் முற்றுப் பெறுகிறது. அடுத்த 'பதிவுகள்' இதழிலிருந்து அறிஞர் அ.ந.கந்தசாமியின் உளவியல்
நூலான 'வெற்றியின் இரகசியங்கள்' என்னும் நூல் தொடராக வெளிவருமென்பதை வாசகர்களுக்கு மகிழ்ச்சியுடன்
அறியத் தருகின்றோம்.]
சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்
-1...உள்ளே
சாகாத இலக்கியத்தின் சரித்திர
நாயகன் -2...உள்ளே
சாகாத இலக்கியத்தின் சரித்திர
நாயகன் -3...உள்ளே
சாகாத இலக்கியத்தின் சரித்திர
நாயகன் -4...உள்ளே
சாகாத இலக்கியத்தின் சரித்திர
நாயகன் -5...உள்ளே
[தொடரும்]
|