
[அண்மையில் யாழ்ப்பாணக் கோட்டையில் நடந்த அகழ்வாய்வுகள் பற்றிய ஆங்கிலக் ஆய்வுக்கட்டுரையையும் (Recent Excavations and Survey at Jaffna Fort in 2017 and Reflections on the Antiquity of Indian Ocean Trade”), அதன் உள்ளடக்கத்தையும் கூகுள் நனொ பனானா மூலம் பெற்றுப் படித்தேன். இது வெளிப்படுத்தும் தகவல்களை இக்கட்டுரையில் பாவித்துள்ளேன். தகவற் பிழையெவையாவது தென்பட்டால் அறியத்தாருங்கள் ]
1. யாழ்ப்பாணம் பற்றிய வரலாற்றறிஞர்களின் சந்தேகங்களும், புரிதல்களும்!
யாழ்ப்பாணம் தமிழர்களின் புகழ்பெற்ற நகரங்களில் ஒன்று. இருந்தாலும் இதன் சரித்திரம் பற்றிய கேள்விகளும்,, சந்தேகங்களும் இன்னும் வரலாற்று அறிஞர்களுக்கு உண்டு., யாழ்ப்பாணச் சரித்திரம் பற்றிய நூல்கள் பல வெளிவந்திருக்கின்றன. இவற்றின் அடிப்படையில் பொதுவாக இந்நகர்பற்றிய வரலாற்றுத் தகவல்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம். இவை எனது நூலான 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலில் குறிப்பிடப்பட்டுள்ளவை:
.கலாநிதி சி.க.சிற்றம்பலம், சுவாமி ஞானப்பிரகாசர் போன்றவர்களின் கருத்துப்படி யாபாபட்டுன எனக் கூறுவது நல்லூரையே. "...யாழ்ப்பாணப் பட்டினம் (சிங்கள நூல்கள் யாபாபட்டுன எனக் கூறுவன) என்பதும் நல்லூரையே குறித்தது எனலாம்". ('யாழ்ப்பாண இராச்சியம்', கலாநிதி சி.க.சிற்றம்பலம்).
மேலும் சுவாமி ஞானப்பிரகாசர், எஸ்.டபிள்யு.குமாரசுவாமி போன்றவர்களின் கருத்துப்படியும் சிங்களவர் நல்லூருக்கு வைத்த 'யாப்பநே', 'யாப்பா பட்டுநேயே' பின்னர் யாழ்ப்பாணமாக மருவியதென்பதையறியலாம்:
"..வண. ஞானப்பிரகாச சுவாமியவர்களும் இடப்பெயர் ஆசிரியராகிய திரு.எஸ்.டபிள்யு.குமாரசுவாமியவர்களும் யாழ்ப்பாடியின் கதை புனைந்துரையெனவும் இது போன்ற கதைகள் வையாபாடலிலும், தஷிண கைலாய புராணத்திலும் மலிந்து கிடக்கின்றனவெனக் கூறியதோடு, அந்தகக் கவி வீரராகவன் உண்மைச் சரிதையை யாழ்ப்பாடி தலையில் வைபவமாலைக்காரர் கட்டி வைத்தாரெனவும், அப்படியொருவன் இருக்கவுமில்லை, யாழ்ப்பாணம் பரிசிலாக ஒருவருக்குக் கொடுக்கப் படவில்லையெனவும், சிங்களவர் நல்லூருக்கு வைத்த 'யாப்பநே', 'யாப்பா பட்டுநே'யென்னும் பெயரே பிற்காலத்தில் யாழ்ப்பாணமென மருவியதெனவும், யாழ்ப்பாணன் கதையை எமது புலவர்கள் உருவகப்படுத்தி வைத்தார்களெனவுங் கூறுவர்.."('யாழ்ப்பாணச் சரித்திரம்', செ.இராசநாயகம்; பக்கம் 253).
முதலியார் இராசநாயகம் , கலாநிதி க.செ.நடராசா போன்றவர்களின் கருத்துகள் மேலுள்ள கருத்துக்கு முற்றுமெதிரானது. யாழ்ப்பாணப்பட்டினம் என்ற தமிழ்ப் பெயரின் சிங்களத் திரிபே 'யாப்பாபட்டுநே' என்பதே இவர்களது கருத்து.
"...சிங்களப் புலவரொருவர் தங்காலையில் எழுதி வைத்த நூலில் கண்ட 'யாப்பாபட்டுநே'யென்னும் பெயரை யாழ்ப்பாணவாசிகள் எவ்விதமாயறிந்தமைத்துக் கொண்டனரென்பது ஆச்சரியம். 'யாப்பாபட்டுநே'க்கும், நல்லூருக்கும் கருத்துப் பொருத்தமிருந்தாலும் முந்திய பெயரை நல்லூருக்கிட்டு வழங்கவேண்டிய அவசியமில்லை. நல்லூரென முற்காலத்தில் தமிழர் சிங்கள நாட்டிலிட்டு வழங்கிய ஊர்ப்பெயர்களை இன்றும் அவ்வண்ணமே நல்லூரென அழைக்குஞ் சிங்களவர், யாழ்ப்பாணத்திலிருக்கும் நல்லூரென்னும் பெயரைச் சிங்களமாக மாற்றி வைத்தாரென்பது விந்தையே. யாழ்ப்பாணத்திலுள்ள சிங்களப் பெயருடைய ஊர்களையுங் காணிகளையுந் தமிழர்தமிழ்ப் பெயராக்காது விட்டது அதினும் விந்தையே. இனிப் 'பட்டுந' என்பது சிங்கள மொழியா? பட்டினமென்னுந் தமிழ் மொழியின் சிதைவென்பதைப் பள்ளிச் சிறுவருமறிவாரே. ஆகையால் யாழ்ப்பாணப் பட்டினம் என்னுந் தமிழ்ப் பெயரையே 'யாப்பாபட்டுநே'யென்ச் சிங்களவர் சிதைத்து வழங்கினர் என்பது தெளிவாகும்.." (யாழ்ப்பாணச்சரித்திரம்'-முதலியார்.செ.இராசநாயகம்; பக்கம் 254).
இப்பிரச்சினைபற்றிய கலாநிதி க.செ.நடராசாவின் கருத்தும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. இவர் இது பற்றி நல்லதொரு விளக்கத்தைத் தந்துள்ளார்.
"....சிங்களப் பெயராகக் கருதப்பட்ட 'யாப்பாபட்டுன' என்பது 'யாபா' என்ற பதமும், 'பட்டுன' என்ற பதமும் இணைந்த சொற்கூட்டாகும். 'பட்டுன'வென்பது தமிழிலே பட்டினம் என்று வழங்கும் துறைமுக நகரத்தைக் குறிக்கும் சொல்லின் திரிபாகும். அச்சொல் தமிழிலேசங்ககால இலக்கியத் தொகுதிகளுள் ஒன்றான பத்துப்பாட்டில் பட்டினப்பாலை என்ற பாடலில் உபயோகிக்கப்பட்டுள்ளது. இது கிறிஸ்துவுக்கு முற்பட்ட சிங்களச் சொல் என்று கொள்ள எள்ளளவும் இடமில்லை... ..யாவா என்பது யாபா என மருவி வந்தது என்ற கருத்தும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாயில்லை. அதனால் யாபா என்பது ஜாவா என்பதன் தமிழ் உருவம் என்று கருதமுடியாது. அன்றியும் அது ஜாவா என்பதன் சிங்கள வடிவமுமன்று. ஏனெனில் சிங்கள இலக்கியங்களில் ஜாவாவை யாபா என்று குறிப்பிடும் வழக்கம் என்றும் இருந்ததில்லை...அதனால் யாழ்ப்பாணப்பட்டினம் என்ற பெயரைக் கொண்டே சிங்களப் பெயரான 'பாப்பாபட்டுநெ' என்ற பெயர் புனையப்பட்டிருக்கிறது என்பதே பொருத்தமான முடிவாகும்." ('யாழ்ப்பாணம் என்ற பெயரின் காரணங்கள்' - கலாநிதி.க.செ.நடராசா;' 'தமிழோசை' 11-11-1993).
மேற்படி கட்டுரையில் க.செ.நடராசா தந்து முடிவிற்காதாரமாக இன்னுமொரு காரணத்தையும் முன்வைக்கிறார்.
"..மேலும் ஊர்ப்பெயர்களை மற்றொரு மொழியிற் பெயர்த்து அவ்வூரவர்களால் உபயோகிக்கப்படும் வழக்கம் நடைமுறையில் இருப்பதில்லை. யாழ்ப்பாணத்து நல்லூரை அதன் சிங்கள மொழி பெயர்ப்பு என்று கருதப்படும் 'யாபனே' என்ற பதத்தால் வழங்காது ஏன் 'நல்லூருவ' என்று வழங்கி வழங்கி வருகின்றார்கள் என்பது விளங்கிக் கொள்ள முடியாததாகி விடும்... எனவே 'யாபனே' என்பது தமிழில் யாழ்ப்பாணம் என்று கூறும் பெயரின் சிங்களத் திரிபென்றே கொள்ள வேண்டும்..." ('தமிழோசை'; 11-11-1993).
மயில்வாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை (முதலியார் குல.சபாநாதன் பதிப்பித்தது) அந்தகக் கவி வீரராகவனென்னும் யாழ்ப்பாணன் யாழ்பாடிப் பரிசு பெற்றதால் ஏற்பட்ட பெயரே யாழ்ப்பாணம் என எடுத்துச் சொல்லும்.
"..அக்காலத்திலே சோழ நாட்டிலிருந்து இரண்டு கண்ணுங் குருடனாகிய கவி வீரராகவன் என்னும் யாழ்ப்பாணன் செங்கடக நகரிலிருந்து அரசாட்சி செலுத்தும் வாலசிங்கமகராசன் பேரிற் பிரபந்தம் பாடிக்கொண்டு போய் யாழ் வாசித்துப் பாடினான். அரசன் அதைக் கேட்டு மிக்க சந்தோஷம் கொண்டு அவனுக்குப் பரிசிலாக இலங்கையின் வடதிசையிலுள்ள மணற்றிடல் என்னும் இந்நாட்டைக் கொடுத்தான். யாழ்ப்பாணன் இதற்கு யாழ்ப்பாணம் என்ற பெயரிட்டு..." ('யாழ்ப்பாண வைபவமாலை'; பக்கம் 25).
மயில்வாகனப் புலவர் கூறும் 'செங்கடகநக'ரென்பது சிங்கை நகரைக் குறிக்குமென்பதே முதலியார் இராசநாயகத்தின் கருத்தாகும்.
"..சிங்கைநகர் என்னும் பெயரை மயில்வாகனப் புலவரோ அவருக்குப் பின் ஏடெழுதியவர் எவரோ, 'செங்கடகநகர்' என்று வைபவமாலையில் மாற்றி விட்டனர். உக்கிரசிங்கன் காலத்தில் 'செங்கடகநகர்' என்னும் நகர் கனவிலும் அறியப்படாததொன்று." ('யாழ்ப்பாணச்சரித்திரம்'; பக்கம் 29).
"..பின்வந்த யாழ்ப்பாணத்தரசர் காலத்தில் எழுதப்பட்ட நூல்களிலெல்லாம் அவ்வரசர்கள் சிங்கை நகரிலிருந்து அரசாண்டார்களெனக் கூறியிருப்பதால், உக்கிரசிங்கன் தன்னிராசதானியைச் சிங்கைநகருக்கு மாற்றினானென்று கூறுவதே பொருத்தமுடைத்தாம். சிங்கை நகரே பிற்காலத்தில் 'செங்கடக நக'ரெனத் திரிந்திருக்க வேண்டும்" ('யாழ்ப்பாணச் சரித்திரம்'; பக்கம் 235).
'யாழ்ப்பாண சரித்திரம்' என்ற மற்றுமொரு நூலினைத் தந்த ஆசிரியர் ஆ.முத்துதம்பிப்பிள்ளை என்பவரின் கருத்துப்படி கி.மு.2 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஏலேலசிங்கனென்ற மன்னன் அந்தகனான யாழ்ப்பாடி என்பவனிற்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலமே யாழ்ப்பாணம் என்பதாகும். அதற்காதாரமாக அவர் தனிப்பாடற் திரட்டில் கானப்படும் பின்வரும் பாடலைக் காட்டுவார்:
"..நரை கோட்டிளங்கன்று
நல்வளநாடு நயந்தளிப்பான்
விரையூட்டு தார்ப்புயன்வெற்
பீழமன்னனெ தேவிரும்பிக்
கரையோட்ட மாக மரக்கலம்
போட்டுனைக் காணவந்தாற்
திரை போட்டிருந்தனை யேலேல
சிங்க சிகாமணியே.."
இப்பாடலின் யாப்பைக் கொண்டு இது கி.பி.3 ஆம் நூற்றண்டிற்குப் பிற்பட்டதென்று க.செ.நடராசா கருதுவார். இலங்கையின் வடபுறத்துலிருந்து மணற்றிடரினைத் திருத்தி வளமாக்கியவன் விபீடணனிடம் யாழ்வாசிக்குமொருவனே என்பதை வையாபாடல் கூறும்.
ம.க.அந்தனிசிலும் யாழ்ப்பாணம் பற்றி வீரகேசரியில் எழுதியுள்ளார். அதில் அவர் மூவகைப் பாணர்களில் ஒருவரான யாழ்ப்பாணர் வாழ்ந்த இடமே யாழ்ப்பாணமாயிற்று என்று சொல்வார். ",,தமிழருள் பழைய சாதியினரான பாணர் மூவகையினராவர். அவர்களுள் ஒரு பிரிவினரே யாழ்ப்பாணர் என்பதாம். தமிழரின் பழைய இசைக்கருவிகள் மூன்று. அவை யாழ்,குழல், முழவு என்பன. இவற்றில் யாழ் மீட்டிப் பாடிடும் பாணரே யாழ்ப்பாணர் என்ற பெயரைப் பெற்றனர். காலப்போக்கில் அது சாதிப்பெயராக மாறியது. எனவே யாழ்ப்பாணர் என்பது சாதிப்பெயராகும்....அவ்வாறு தமிழ்ப் பெருங்காப்பியங்களிலும் இலக்கியங்களிலும் சொல்லபப்ட்டிருக்கும் யாழ்ப்பாணர் என்னும் சாதியினரில் ஒரு பகுதியினர் இலங்கைத் தீவின் வடபகுதியில் வாழ்ந்த இடமே யாழ்ப்பாணம் என்ற பெயரைப் பெற்றது." ( 'வீரகேசரி; 9-12-1990).
இது பற்றி முதலியார் குலசபாநாதனும் கருத்துத்தெரிவித்துள்ளார். "..யாழ்ப்பாணம் எனும் பெயர் 15-ஆம் நூற்றாண்டுச் சிங்கள நூலிற்றான் முதன் முதற் காணப்படும். 14-ஆம் நூற்றாண்டிறுதியில் இருந்தவராகக் கருதப்படும் அருணகிரிநாதர் 'யாழ்ப்பாணாயன் பட்டின மருவிய பெருமாளே' எனக் குறிப்பிட்ட இடம் யாழ்ப்பாணத்தையே குறித்ததென்றும், அதனால் யாழ்ப்பாணம் எனும் பெயர் தமிழ்ப் பெயரெனவுங் கொள்வர் ஒரு சாரார். அருணகிரிநாதர் குறித்த இடம் எருக்கத்தம்புரியூர் என்பாருமுளர். எங்னனமாயினும், அருணகிரிநாதர் குறிப்பிட்ட தலம் ஈழநாட்டின் கண்ணதேயென்பது வலியுறின், யாழ்ப்பாணம் எனும் சொல் சிங்களப் பெரடியாகப் பிறந்ததெனுங் கொள்கை வலியிழந்துபடும்." [முதலியார் குலசபாநாதன் பதிப்பித்த 'யாழ்ப்பாண வைபவமாலை'; பக்கம் 24 , அடிக்குறிப்பு.
இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது பின்வரும் முடிவுக்கே வர முடிகிறது. நல்லூர் என்பதன் சிங்கள மொழிபெயர்ப்பான 'பாப்பாபட்டுநே' என்பதிலிருந்து வந்த பெயரே யாழ்ப்பானம் எனப்திலும் பார்க்க , யாழ்ப்பாணம் என்ற தூய தமிழ் சொல்லின் சிங்களத் திரிபே 'யாப்பாபட்டுநே' என்பதே பொருத்தமுடையதாகப் படுகின்றது. 'பாப்பாப் பட்டுநேக்கும் நல்லூருக்கும் கருத்துப் பொருத்தமிருந்தாலும், முந்திய பெயரை நல்லூருக்கிட்டு வழங்க வேண்டியதில்லை' என்ற முதலியார் இராசநாயகத்தின் கூற்றே ஏற்கக் கூடியதாகவிருக்கின்றது. மேலும் அவரே பிறிதோரிடத்தில் சுட்டிக் காட்டும் '..மேலும் கி.பி.9 ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டுக்கிடையே இத்துறையில் வந்திறங்கிய மேலைத்தேய முஸ்லீம் பிரயாணிகளும் 'ஜப்பா', 'ஸ¤ப்பா'வென அத்தொனிப்படவே கூறியிருக்கின்றனர்..."( 'யாழ்ப்பாணச் சரித்திரம்'; பக்கம் 255) என்ற கூற்றும் கவனத்தில் கொள்ளப்படவேண்டியதே.
மேலும் கைலாயமாலையில் வரும் பின்வரும் பாடலும் யாழ்ப்பாணைத்தையும் நல்லூரையும் பிரித்துக் கூறுவதும் கவனிக்கத் தக்கது.
"..மார்ப்பனாம் புவனேகவாகு
நலமிகும் யாழ்ப்பாண நகரி
கட்டுவித்து, நல்லைக்குலவிய
கந்தவேட்குக் கோயிலும்
புரிவித்தானே..."
இவற்றிலிருந்து இறுதியாக நாம் வரக் கூடிய முடிவு இதுதான். நல்லூரும் சிங்கை நகரும் இரு வேறு வேறான இராஜதானிகள். இரு வேறான நகரங்கள். 'யாப்பாப்பட்டுநே'யென்பது யாழ்ப்பாணத்தின் சிங்களத் திரிபே. நல்லூரின் சிங்கள மொழிபெயர்ப்பான 'யாப்பாப்படுனே'யினின்றும் யாழ்ப்பாணம் என்னும் பெயர் வந்ததென்பது பொருத்தமற்றதாகவே படுகின்றது.
யாழ்ப்பாணப் பட்டினம் பற்றிப் பேசும் போர்த்துகேயரின் ஆவணமொன்று!
பதினாறாம் நூற்றாண்டுப் போர்த்துக்கேயரின் நூல் 'The Temporal And Spiritual Conquest Of ceylon என்னும் நூலை எழுதியிருப்பவர் Fernao De Queyroz. ஆங்கில மொழிபெயர்ப்பு - S.G.Perera. இந்நூலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆதாரமான நல்லூரும் , யாழ்ப்பாணமும் வேறு வேறான நகர்கள் என்னும் உறுதி செய்யும் கூற்று இந்நூலின் 27ஆம் அத்தியாயத்திலுள்ள 353ஆம் பக்கத்திலுள்ளது.
".. ...... the other half a league from the city of Nelur, called patanao, where there was less danger,.. ." (The Temporal And Spiritual Conquest of ceylon; பக்கம் 353)
மேற்படி அத்தியாயத்தின் தலைப்பு - Chapter 27 Other Successes of this war and the expedition of the Viceroy to Jafanapatao (Page 347)
பதினேழாம் நூற்றாண்டின் ஆரம்பக் காலகட்டத்தில் நிகழ்ந்த , பதினாறாம் நூற்றாண்டில் நிகழ்ந்த போர்த்துகேயரின் யாழ்ப்பாணப் படையெடுப்புகள் பற்றியெல்லாம் இந்நூலில் விரிவாக விபரிக்கப்பட்டுள்ளன. பதினாறாம் நூற்றாண்டின் நிகழ்வுகள் ஏனைய போர்த்துகேயரின் குறிப்புகளின் அடிப்படையில் விபரிக்கப்பட்டுள்ளன. இக்குறிப்பின்படி Nelur (நல்லூர் நகர்) நகரிலிருந்து அரை லீக் தொலைவிலுள்ள Patanao ( Jafanapatao - யாழ்ப்பாணப் பட்டினம்) என்பதை அறிய முடிகின்றது. இது முக்கியமான வரலாற்றுக் குறிப்பு. இதன்படி யாழ்ப்பாணப் பட்டினம் என்பது நல்லூர் நகரிலிருந்து அரை லீக் தொலைவிலுள்ள பட்டினம். யாழ்ப்பாணம் வேறு. நல்லூர் வேறு என்பதைத் தெளிவாக்கும் கூற்று இது. போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்துக்கு வந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பட்டினம் இருந்திருக்கின்றது என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டும் வரலாற்றுக் கூற்றாக இதனைக் கருதலாம்.
2. யாழ்ப்பாண நகரின் வளர்ச்சி வரலாறு (1621- 1948) நூலில் வரலாற்றறிஞரும், கட்டடக்கலைஞருமான் மயூரநாதன் பார்வையில் யாழ்ப்பாணப் பட்டினம்!
மயூரநாதன் குடியேற்றவாதக் காலத்துக்கு முன்பிருந்த யாழ்ப்பாணம் பற்றிப் பின்வருமாறு மேற்படி நூலில் கூறுவார்:
""யாழ்ப்பாணம் அல்லது அதையொத்த யாழ்ப்பாணயன் பட்டினம் (தமிழ்நாட்டிலுள்ள திருமேணிக்குழிக் கல்வெட்டு) , யாப்பா பட்டுன போன்ற பெயர்கள் குடியேற்றவாதக் காலத்துக்கு முன்பே புழக்கத்தில் இருந்துள்ளன. இப்பெயர்கள் எதைக் குறித்தன என்ற கேள்விக்குத் துல்லியமாக விடையளிக்கும் வகையிலான சான்றுகள் இதுவரை கிடைக்கவில்லை. .. முந்திய காலங்களில் இப்பெயர்கள் குறித்த இடம் அல்லது இடங்களைக் குறித்த போதிய தெளிவு இல்லை. ...அருணகிரிநாதர் திருப்புகழிலும் இதே பெயர் வருகின்றது. 15 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியைச் சேர்ந்த கோகில சந்தேசய என்னும் சிங்களத் தூது நூலில் (* குயில் விடு தூது நூலில்) முதன் முதலாக யாப்பா பட்டுன என்னும் பெயர் உள்ளது. இதைத்தொடர்ந்து பல்வேறு சிங்கள மூலங்களில் இப்பெயரைக் காண முடிகின்றது.....தமிழில் தற்போது புழங்கும் யாழ்ப்பாணம் என்னும் பெயரைக் கைலாயமாலை, வையாபாடல் ஆகிய ஐரோப்பியருக்கு முந்திய காலத்தைச் சேர்ந்த யாழ்ப்பாணத்துத் தமிழ் நூல்களில் காணக்கூடியதாக உள்ளது. வையாபாடல் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. கைலாயமாலை இதற்கு முந்தையது எனவும், பிந்தியது எனவும் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.
மேலே எடுத்துக்காட்டிய மூலங்களில் யாழ்ப்பாணம் அல்லது அதையொத்த பெயர்கள் நாட்டையோ அதன் தலைநகரத்தையோ அல்லது இரண்டையுமே குறிப்பதற்குப் பயன்பட்டுள்ளன. கோகில சந்தேசய ஓரிடத்தில் யாப்பா பட்டுன நாடு என நாடாகவும், இன்னோரிடத்தில் குபேரனுடைய நகரத்தைப் போன்ற யாப்பாப் பட்டுன என நகரமாகவும் குறிப்பிடுகின்றது. அத்துடன் கோகில சந்தேசயவில் உள்ள யாப்பாப் பட்டுன குறித்த வர்ணனை, அது மிகையானதெனினும் ஒரு நகரத்தைக்குறிக்கின்றது. பிற்காலத்தமிழ் மூலங்களும் யாழ்ப்பாணம் என்பதை இரண்டு விதமாகவும் குறிப்பிடுவதைக் காண முடிகின்றது. பேராசிரியர் இந்திரபாலாவும் யாழ்ப்பாணம் என்னும் பெயர் நாட்டையும் அதன் தலைநகரத்தையும் குறிக்கப்பயன்பட்டிருக்கலாம் என்கின்றார். ....யாழ்ப்பாணயன் பட்டினம், யாப்பாப் பட்டுன போன்ற பழைய பெயர்களின் பகுதியாக , நகரத்தைக் குறிக்கும் பட்டினம் அல்லது அதையொத்த ஒரு சொல் இருப்பதால் இப்பெயர்கள் அவை தோன்றிய காலத்தில் நகரமொன்றைக் குறித்துப் பின்னர் நாட்டுக்கும் வழங்கின எனக்கொள்ளுதலே பொருத்தமாக இருக்கும். சமகாலத்தில் இலங்கையிலிருந்த கோட்டே இராச்சியம், கண்டி இராச்சியம் ஆகியவற்றுக்கும் அவற்றின் தலைநகரங்களின் பெயர்களே வழங்கின. எனவே ஒரு காலத்தில் யாழ்ப்பாணப் பட்டினம் அல்லது அதையொத்த மேற்குறிப்பிட்ட பெயர்களைத் தாங்கிய ஒரு நகரம் இருந்தது என்று ஓரளவு உறுதியாகச் சொல்ல முடியும்."
குடியேற்றவாதக் கால யாழ்ப்பாணம் பற்றிக் குறிப்பிடுகையில் பின்வருமாறு குறிப்பிட்டிருப்பார்:
"போர்த்துக்கேயர் 'ஜஃப்னாபட்டவ்' என்னும் பெயரைப் பயன்படுத்தினர். இலங்கைத் தீவில் உள்ளூர்த் தமிழ் மன்னர்களின் ஆட்சியின் கீழிருந்த ஆட்சிப்பகுதி முழுவதையும் அவர்கள் இப்பெயரால் அழைத்தனர். அக்காலத்தில் இருந்த ஒரு நகரத்தையோ குறிப்பிட்ட ஒரு இடத்தையோ இப்பெயரால் அவர்கள் குறிப்பிட்டதாகத் தெரியவில்லை. நாட்டின் தலைநகரத்தை அவர்கள் எப்போதும் 'நல்லூர்' என்றே குறிப்பிட்டனர். 'ஜஃப்னாப் பட்டவ்' ஒல்லாந்தரின் எழுத்துமூல ஆவணங்களில் 'ஜஃபனாபட்டம்' அல்லது 'ஜஃப்னாபட்டம்' என்றும், சில நிலப்படங்களில் 'ஜஃப்பெனபட்ணம்' எனவும் வழங்கியது. ஆங்கிலேயர் காலத்தில் இது 'ஜஃப்னா' எனச் சுருங்கியது. ... "
மேலும் இப்பெயரைப் போர்த்துகேயர் சிங்களப் பெயரான 'யாப்பா பட்டுன', தமிழ்ப்பெயர்களான 'யாழ்ப்பாணப் பட்டினம்', யாழ்ப்பாணயன் பட்டினம்' போன்றவற்றிலிருந்து பெற்றிருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டிருப்பார். மேலும் அவர் விரிவாகப் பட்டினம் என்னும் சொல் பற்றியும், அது துறைமுக நகரை மயமதம் குறிக்கும் என்பது பற்றியும் விரிவாக விபரித்திருப்பார்.
இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டும் மயூரநாதன் இறுதியில் குடியேற்றவாதத்துக்கு முன்பிருந்த யாழ்ப்பாணம் பற்றி வந்தடைந்திருக்கும் இருக்கும் இறுதிக்கருத்துகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:
1. 'யாழ்ப்பாண இராச்சியக் காலத்தில் யாழ்ப்பாணம் என்னும் பெயர் அங்கிருந்த ஏதோவொரு நகரத்தைக் குறித்தது எனச் சொல்வதற்கான நேரடிச் சான்றுகள் இதுவரை கிடைக்கவில்லை. ' இவ்விதம் குறிப்பிடும் மயூரநாதன் தொடர்ந்து முதலியார் இராசநாயகம், கைலையாமாலையில் சேர்க்கப்பட்டுள்ள தனிப்பாடல் ஆகியவற்றையும் சுட்டிக்காட்டுவார்.
2. 'யாழ்ப்பாணப் பட்டினம் பிற்காலத்தில் போர்த்துக்கேயரின் யாழ்ப்பாணநகரம் அமைந்த பண்ணைத்துறைப் பகுதியில் இருந்தது என்று 1970களின் தொடக்கத்திலேயே பேராசிரியர் இந்திரபாலா கருத்து வெளியிட்டிருந்தார். அண்மையில் கோட்டைப் பகுதியில் கிடைத்த அகழ்வாய்வுத் தகவல்கள் மேற்படி கருத்துக்கு வலுச்சேர்ப்பனவாக அமைந்துள்ளன. இப்பகுதியில் மேலும் விரிவான அகழ்வாய்வுகள் நடத்தப்பட்டால் , இந்தக் கருதுகோளை உறுதி செய்வதற்கும் , நகரின் துல்லியமான அமைவிடத்தை அறிந்து கொள்வதற்கும் தெளிவான சான்றுகள் கிடைக்கக்கூடும்.' இது மயூரநாதன் இவ்விடயத்தில் வந்திருக்கும் இறுதி நிலைப்பாடு.
3. நல்லூரும் யாழ்ப்பாணம், கொழும்புத்துறையும் பற்றைக் காடுகளும் , சதுப்பு நிலமும் பற்றி...
இந்நூலில் மயூரநாதன் வந்திருக்கும் முடிவுகள் சில
- '... மேற்குறிப்பிட்ட துறைகளுக்கும் நல்லூருக்கும் இடையே பற்றைக்காடுகளும் சதுப்பு நிலங்களும் இருந்தமையால் , அவை தனித்தனியே பிரிந்தே இருந்தன. நல்லூரும், கொழும்புத்துறையும், பண்ணைத்துறையும் அவற்றுக்கிடையே அமைந்த நிலப்பகுதி முழுவதையும் உள்ளடக்கிய ஒரே நகரத்தின் பகுதிகள் அல்ல என்றே கருத முடியும்.'
'முற்காலத்தில் கரையோரத்தில் அமைந்திருக்கக்கூடியதாகக் கருதக்கூடிய பண்டைய யாழ்ப்பாண நகரத்தையும் , பிற்காலத்தில் உருவான உருவான நல்லூர் நகரத்தையும் இரு வேறு நகரங்களாகக்கொள்வதே பொருத்தம். அது போல நல்லூரும், பிற்காலத்தில் போர்த்துக்கேயர் அமைத்த யாழ்ப்பாண நகரமும் ஒரே நகரமோ ஒரே நகரத்தின் பகுதிகளோ அல்ல என்பதும் விளங்கியிருக்கும்.'
இங்கு மயூரநாதன் யாழ்ப்பாணத்தையும் நல்லூரையும் இருவேறு நகரங்களாகப் பிரித்துப்பார்ப்பதற்கு முக்கிய காரணம் அவற்றைப் பிரித்திருக்கும் பற்றைக் காடுகளும், சதுப்பு நிலங்களும். அடுத்தது நல்லூருக்கு கொழும்புத்துறை, பண்ணைத்துறையிலிருந்து செல்ல அமைந்திருந்த பிரதான பாதை ஒன்று என்பதுமே. காட்டினூடு செல்லும் குறுக்கு வழியைப்பற்றியும் போர்த்துக்கேயரின் வரலாறு ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. அதனையும் மயூரநாதன் இந்நூலின் இன்னுமோரிடத்தில் சுட்டுக்காட்டியிருப்பார்.
மயூரநாதன் இன்னுமொரு கோணத்தில் இச்சந்தேகத்தைக் கையாண்டிருந்தால் இன்னுமொரு முடிவுக்கு வந்திருக்கலாமோ என்று கருதுகின்றேன். அது பண்டைத்தமிழர் காடுகளையும் தம் தலைநகர்களின் அரண்களில் ஒன்றாக உருவாக்கியிருக்கும் சரித்திரக் குறிப்புகள்தாம்.
பெரும்பாலான சங்க இலக்கியப் பாடல்கள் ஒரு நகரத்தின் பாதுகாப்பை விவரிக்கும்போது, அகழிகள் (நீர் நிரம்பிய பள்ளங்கள்), உயர்ந்த மதில்கள் (கோட்டைச் சுவர்கள்), அடர்ந்த காடுகள் ஆகிய மூன்றையும் ஒன்றாகக் குறிப்பிடும். புறநானூறு 395: 'கடுங்கண் மள்ளர் கணைத்துஞ்சும் இஞ்சி நெடுமதில் கொண்ட கல்லதர் புறத்த' - இப்பாடலில் கோட்டை மதில்கள், கல்லாலான வழிகள் ஆகியவற்றைக் கடந்து வரும் எதிரிகளுக்குக் கடினமான காடுகள் அமைந்திருப்பதைப் பார்க்கலாம்.
சங்க இலக்கியப் பாடல்களில் ஒரு மன்னனின் கோட்டை மதில்களைச் சுற்றி உள்ள காடுகள், முட்புதர்கள், யானைகள் புக முடியாத அடர்ந்த மரங்கள் ஆகியவை எதிரிகளுக்குப் பெரும் சவாலாக இருந்ததாகப் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. நகரங்களுக்கு இயற்கையான அரண்களாக காடுகள் எவ்வாறு உதவின என்பதைத் தெளிவாகக் காட்டும் சரித்திரக் குறிப்புகளாக இவற்றைக் கருதலாம்.
இந்நோக்கில் வைத்து நல்லூருக்கும் , யாழ்ப்பாணப்பண்ணைத்துறை, கொழும்புத்துறை ஆகியவற்றுக்குமிடையில் காணப்பட்ட பற்றைக்காட்டையும், சதுப்பு நிலங்களையும் பார்த்தால் யாழ்ப்பாண அரசர்கள் தலைநகரான நல்லூரின் பாதுகாப்பு அரண்களாக இக்காட்டுகளையும் சதுப்பு நிலங்களையும் அமைத்திருந்ததைப் புரிந்து கொள்ள முடிந்திருக்கும். இவ்விதம் பார்த்தால் நல்லூர் , கொழும்புத்துறை, பண்ணைத்துறை ஆகிய பகுதிகள் யாழ்ப்பாணப் பட்டனத்தின் பல்வேறு பகுதிகள் என்ற முடிவுக்கே என்னால் வர முடிகின்றது.
4. 2017 இல் யாழ்ப்பாணக் கோட்டையில் நடைபெற்ற அகழாய்வுகள் யாழ்ப்பாணப்பட்டினத்தைப் பற்றிக் கூறுவதென்ன?
"2017 இல் யாழ்ப்பாணக் கோட்டையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் மற்றும் ஆய்வுகள் மற்றும் இந்தியப் பெருங்கடல் வர்த்தகத்தின் தொன்மை குறித்த பிரதிபலிப்புகள்" என்னும் தலைப்பில் எழுத்ப்பட்ட ஆங்கில ஆய்வுக்கட்டுரையை சி.இ. டேவிஸ், பி. குணவர்தன, ஆர்.ஏ.இ. கொனிங்ஹாம், பி. புஷ்பரத்தினம், ஏ. ஸ்மிட், எம்.ஜே. மானுவல், எச். நாமல்கமுவ, ஜே. சேனநாயக்க & கே.ஜி.ஒய். பண்டார ஆகியோர் எழுதியிருக்கின்றனர். அதில் இவ்வகழ்வாய்வுகள் பற்றி விபரிக்கப்பட்டுள்ளது. (Recent Excavations and Survey at Jaffna Fort in 2017 and Reflections on the Antiquity of Indian Ocean Trade” by C.E. Davis, P. Gunawardhana, R.A.E. Coningham, P. Pushparatnam, A. Schmidt, M.J. Manuel, H. Namalgamuwa, J. Senanayaka & K.G.Y. Bandara)
இக்கட்டுரை 2017ஆம் ஆண்டு யாழ்ப்பாணக் கோட்டை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளையும் நில ஆய்வுகளையும் அடிப்படையாகக் கொண்டு, யாழ்ப்பாணத்தின் தொன்மையான கடல்சார் வர்த்தகப் பின்னணியை ஆராய்கிறது. இலங்கை மத்திய பண்பாட்டு நிதியம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், Durham University தொல்லியல் துறை ஆகியவை இணைந்து இவ்வய்வௌச் செய்தன.
ஆய்வின் நோக்கம் - “யாழ்ப்பாணக் கோட்டை பகுதி வெறும் போர்த்துக்கேயர்/ஒல்லாந்தர் கால கட்டட வரலாறா? அல்லது அதற்கு அடியில் இன்னும் தொன்மையான நாகரிக அடுக்குகள் உள்ளனவா?”
நவீன அறிவியல் முறைகள் பயன்படுத்தப்பட்டன:
(a) UAV / Drone Survey - வானிலிருந்து கோட்டைப் பகுதியின் நிலவடிவம் படமாக்கப்பட்டது. மேற்பரப்பின் அமைப்பு, புதைந்த கட்டட வடிவங்கள், நிலத்தடிப் பாதைகள் கண்டறியப்பட்டன.
(b) GPR – Ground Penetrating Radar - நிலத்தடியில் என்ன இருக்கிறது என்பதைத் தரையைக் கிழிக்காமல் காணும் ரேடார் முறை.
சதுர / செவ்வக கட்டட அமைப்புகள், புதைந்த சுவர்கள், பழைய தேவாலய கட்டடத் தடயங்கள் கண்டறியப்பட்டன.
c) Stratigraphic Excavation - அடுக்கு அடுக்காக மண் அகற்றிப் புரியப்பட்ட ஆய்வு. 
ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட முக்கிய சான்றுகள்:
அகழாய்வுகளில் பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன:
ரூலெட்டட் வேர் (Rouletted Ware) - இது பொதுவாக கி.மு. 2ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்த பானைப் பொருள் வகை. இது தென்னிந்தியா, இலங்கை, ரோமப் பேரரசு ஆகியவற்றுடன் இருந்த பழைய வணிகத் தொடர்புகளுக்குச் சான்றாகக் கருதப்படுகிறது.
கரும்-சிவப்பு மண் பானைகள் (Black and Red Ware) - சுமார் கி.மு. 1000 முதல் நிலவிய பண்டைய தென்னாசிய நாகரிகங்களுடன் தொடர்புடையவை.
ஆரம்ப இஸ்லாமிய களிமண் பானைகள் - அரபு வர்த்தகத் தொடர்புகளின் அடையாளங்கள். யாழ்ப்பாணம் இந்தியப் பெருங்கடல் இஸ்லாமிய வணிக வலையமைப்பிலும் இருந்தது.
சீனாவின் மிங் வம்சப் பீங்கான் பொருட்கள் - கிழக்காசிய வர்த்தக வலையமைப்புடன் யாழ்ப்பாணம் இணைந்திருந்ததை காட்டுகின்றன. காலகட்டம் - 14–16ம் நூற்றாண்டு.
யாழ்ப்பாணக் கோட்டை பகுதி, போர்த்துக்கேயர்/ஒல்லாந்தர் காலத்திற்கு முற்பட்டே மனித குடியேற்றம், வணிகம், கடல்சார் தொடர்புகள் கொண்ட இடமாக இருந்திருக்கின்றது. யாழ்ப்பாணம் இந்தியப் பெருங்கடல் வர்த்தக வலையமைப்பின் முக்கிய மையமாக இருந்திருக்கின்றது. தென்னிந்தியா, அரபு உலகம், தென்கிழக்காசியா, சீனா போன்ற பகுதிகளுடன் தொடர்பு கொண்டிருந்திருக்கின்றது.
தமிழர் வரலாற்றின் அடிப்படையில் இது இலங்கைத் தமிழர் வரலாற்றுக்கு வலிமையான தொல்லியல் ஆதாரமாக அமைகிறது.
யாழ்ப்பாணத் தீபகற்பம் தொன்மையான நாகரிகத் தொடர்ச்சி கொண்ட நிலம் என்பதை இது வலுப்படுத்துகிறது. கடல் வழி வர்த்தகம், பண்பாட்டுப் பரிமாற்றம், நகரமயமாக்கல் போன்றவை மிகத் தொன்மையானவை என்பதை உணர்த்துகிறது.
மேற்படி அகழ்வாராய்ச்சி யாழ்ப்பாணப் பட்டினத்தின் தொன்மை பற்றி எடுத்துக்காட்டுகின்றது. காவிரிப்பூம்பட்டினம் போல் புகழ்பெற்ற துறை முக நகரே யாழ்ப்பாணப்பட்டினம் என்பதை எடுத்துக்காட்டும் முக்கியமான ஆய்வு இவ்வாய்வு. இது இலங்கைத் தமிழரின் வரலாற்றில் தெளிவை ஏற்படுத்தும் முக்கியமான சான்று. இவ்வகழ்வாய்வுகள் மேலும் தொடரப்பட வேண்டும். அவ்வாய்வுகள் மேலும் பல உண்மைகளை எடுத்துக்காட்டும்.
5. முடிவாக
யாழ்ப்பாணப் பட்டினம் அந்நியர் நாட்டில் அடியெடுத்து வைத்திருக்கும் வரையில் முக்கிய பட்டனமாகவே இருந்து வந்திருக்கின்றது என்பதையே அது பற்றிய வரலாற்றுக் குறிப்புகளும், அண்மையக் கோட்டை அகழ்வாய்வுகளும் புலப்படுத்துபவையாகவே எனக்குப் படுகின்றது. இவ்விதம் நோக்கும்போது பல யாழ்ப்பாணம் பற்றிய பல சந்தேகங்களுக்குத் தர்க்கச்சிறப்புள்ள பதில்கள் கிடைக்கின்றன.
காவிரிப்பூம்பட்டினம் எவ்விதம் மிகவும் புகழ்பெற்ற துறைமுக நகராக விளங்கியதோ அவ்விதமே சங்க காலத்திலிருந்து புகழ்பெற்ற துறைமுக நகராக யாழ்ப்பாணப் பட்டினமும் விளங்கியிருக்க வேண்டும். சங்ககாலத்தில் புகழ்பெற்றிருந்த யாழ்ப்பாணப் பட்டினம் காலப்போக்கில் மாந்தைதன் புகழ்மிக்க துறை முக அந்தஸ்தினை இழந்திருந்தது போல் இழந்திருந்தாலும் முக்கியமான துறைமுக நகராக இருந்து வந்திருக்கின்றது. அதனால்தான் யாழ்ப்பாண இராச்சியத்தைப்பற்றிக் குறிப்பிடுகையில் யாழ்ப்பாணம் என்னும் பெயர் தொடர்ந்தும் பலராலும் பாவிக்கப்பட்டு வந்துள்ளது. யாழ்ப்பாணம் என்னும் பெயர்தான் இந்தியக் கல்வெட்டுகளில், திருப்புகழில் பாவிக்கப்பட்டிருக்கின்றது.
போர்த்துக்கேயர் வந்தபோதும் வடக்கிலிருந்த தமிழர் இராச்சியத்தை யாழ்ப்பாணப் பட்டினத்தின் பெயரைப்பாவித்துத்தான் அழைத்தார்கள். ஏன்? அப்போதும் யாழ்ப்பாணம்தான் முக்கிய நகராக, தமிழர் இராச்சியத்தை வெளிப்படுத்தும் பெயராக வழக்கில் இருந்திருக்கின்றது. அதனால்தான் அவர்கள் யாழ்ப்பாணப் பட்டனம் என்பதைத் தம் மொழியில் ஜாஃப்னா பட்டவ் எனக் கொச்சையாக உச்சரித்து அழைத்திருக்கின்றார்கள்.
ஒல்லாந்தரும் யாழ்ப்பாணப் பெயரைத்தான் பாவித்திருக்கின்றார்கள். கைலாயமாலையும் யாழ்ப்பாணம் என்று குறிப்பிட்டிருக்கின்றது. மயில்வாகனப்புலவரும் யாழ்ப்பாண வைபவமாலை என்றுதான் குறிப்பிட்டிருக்கின்றார். ஏன் நல்லூர் வைபவமாலை என்றோ அல்லது வேறு பெயரோ அச்சரித்திர நூலுக்குக் குறிப்பிடப்படவில்லை?
யாழ்ப்பாண வைபவமாலையை விடச் சபுமல் குமாரயா யாழ்ப்பாண வெற்றியைச் சிறப்பித்துப்பாடும் கோகில சந்தேசய அதன் சமகால வரலாற்றைப் பற்றிக் கூறும் நூல். அதனால் நகரைப்பற்றிக் கூறும் தகவல்கள் ஓரளவு உண்மைக்குச் சமீபமானவையாக இருக்கும் சாத்தியங்கள் உண்டு. அதில் யாழ்ப்பாண நகரத்தை யாப்பா பட்டுன என்று விபரிக்கும் பகுதிகள் அந்நகரின் சிறப்பான நகர அமைப்பை எடுத்துக்காட்டுகின்றன. குபேரபுரியுடன் ஒப்பிடுகின்றது. இது யாழ்ப்பாணப் பட்டினத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன.
மேலும் சபுமல் குமாரயா யாழ்ப்பாண அரசரை வென்றபோது தலைநகர் சிங்கைநகரில் இருந்தது. அது வல்லிபுரம் என்பது சுவாமி ஞானபிரகாசர், முதலியார் செ.இராசநாயகம் ஆகியோரின் கருத்து. இக்கட்டுரையாசிரியரின் கருத்தும் அதுவே. அங்கு தலைநகர் போரில் அழிந்ததும் மீண்டுமொரு தலைநகரை நல்லூரில் அவனே உருவாக்கினான் என்பது முதலியார் செ.இராசநாயகம் போன்றோரின் கருத்து. இக்கட்டுரையாசிரியரின் கருத்தும் அதுவே. அந்நகரை மீண்டும் கைப்பற்றித் தமிழர் அரசு மீண்டும் உருவானபோது சிங்கைப்பரராசசெகரன் காலத்தில் அதன் நகரமைப்பு தமிழர்தம் நகரமைப்புக்கோட்பாடுகளுக்கமைய புனரமைக்கப்பட்டது. இது இன்று வரலாற்றறிஞர் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது. சபுமல் குமாரயா யாழ்ப்பாண அரசை வென்ற காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பட்டினம் புகழ்பெற்ற துறைமுகப் பட்டினமாக இருந்திருக்கின்றது. அதனால்தான் யாழ்ப்பாண வெற்றியைக் குறிப்பிடும் கோகில சந்தேசய நூலும் யாப்பாப் பட்டுன என்று யாழ்ப்பாணப் பட்டினத்தைப் பற்றிப் புகழ் பாடுகின்றது.
யாழ்ப்பாணப்பட்டினத்தின் புகழ் காரணமாகத்தான் அன்று யாழ்ப்பாண இராச்சியம் என்று தமிழர்களின் இராச்சியம் அழைக்கக்கப்பட்டிருப்பதற்கான சாத்தியமே அதிகமுண்டு. இன்றும் யாழ்ப்பாணம் என்னும் நகரின் வரலாற்று முக்கியத்துவம் காரணமாகத்தான் யாழ் மாவட்டம் என்று அப்பகுதி முழுவதும் யாழ்ப்பாணத்தின் பெயரை வைத்து அழைக்கப்படுகின்றது. அதுபோல்தான் அன்றும் யாழ்ப்பாணப்பட்டினத்தின் புகழ் முக்கியத்துவம் காரணமாகத்தான் அப்பகுதியில் ஆட்சியிலிருந்த இராச்சியத்தின் பெயரைக்குறிப்பிடுகையில் யாழ்ப்பாண இராச்சியம் என்று குறிப்பிட்டிருக்கின்றார்கள். மேலும் யாழ்ப்பாண இராச்சியத்தின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த , சிலப்பதிகாரக் காலத்தில் புகழ்பெற்று விளங்கிய காவிரிப்பூம்பட்டினம் போன்ற துறைமுகப் பட்டினமாக யாழ்ப்பாணம் அந்நியரின் ஆதிக்கத்தில் யாழ்ப்பாணம் விழும் வரையில் இருந்திருக்கின்றது. அதன் காரணாமாகத்தான் அந்நியராலும் யாழ்ப்பாணப் பட்டினம் என்னும் பொருள்படும் 'ஜாஃப்னாப் பட்டவ்', ஜாஃப்னப் பட்டம்' போன்ற பெயர்களால் அழைக்கப்பட்டிருக்கின்றது. கோகில சந்தேசயவும் யாப்பாப் பட்டுன என அழைக்கின்றது. அதே சமயத்தின் யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகர்களாக கந்தரோடை, சிங்கைநகர் & நல்லூர் ஆகியவை இருந்திருக்கின்றன. அந்நியராதிக்கத்துக்குப் பிற்பட்ட யாழ்ப்பாண நகரத்தின் நகர அமைப்பு போர்த்துக்கேயர் பண்ணைத்துறையில் கட்டிய கோட்டையை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்டது. அந்நகரமைப்பு ஒல்லாந்தர், ஆங்கிலேயர் காலத்தில் புனரமைப்பு செய்யப்பட்டு வந்துள்ளதை அண்மையில் வெளியான இ.மயூரநாதனின் 'யாழ்ப்பாணநகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 - 1948) விரிவாகவே , ஆதாரபூர்வமாக எடுத்துரைக்கின்றது.
உசாத்துணை நூல்கள்
1. யாழ்ப்பாணச் சரித்திரம் - முதலியார் செ.இராசநாயகம்
2. யாழ்ப்பாணச்சரித்திரம் - ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை
3. கைலையமாலை
4. யாழ்ப்பாண வைபவமாலை
5. நல்லூர் இராஜதானி நகர அமைப்பு - வ.ந.கிரிதரன்
6. யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1821 - 1948) - கட்டடக்கலைஞர் இ.மயூரநாதன்
7. ம.க.அ அந்தனிசிலின் வீரகேசரிக் கட்டுரை 'யாழ்ப்பாணம் என்னும் பெயர் தோன்றியது எவ்வாறு? '
8. Recent Excavations and Survey at Jaffna Fort in 2017 and Reflections on the Antiquity of Indian Ocean Trade”
by C.E. Davis, P. Gunawardhana, R.A.E. Coningham, P. Pushparatnam, A. Schmidt, M.J. Manuel, H. Namalgamuwa, J. Senanayaka & K.G.Y. Bandara) - இந்த ஆவணத்தை கூகுள் நனோ பனானா மூலம் தேடியெடுத்துப் படித்தேன். இதில் தவறுகள் இருந்தால் அறியத்தரவும்.
9.ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி - கலாநிதி க.செ.நடராசா
10. யாழ்ப்பாண இராச்சியம் - கலாநிதி சி.க.சிற்றம்ப்பலம்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
*டிஜிட்டல் ஓவியங்கள் சாட் ஜிபிடி.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









