தற்கால சிறுகதை, புதினங்களில் காலத்தின் சுவடுகள்! - (மாலினி அரவிந்தன் – பீல்பிரதேச கல்விச்சபை, கனடா) -
- தமிழ்நாட்டில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்ப்பண்பாட்டு மையம் நடத்திய 11 ஆவது பன்னாட்டுக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்டு, ‘தற்கால இலக்கியங்களில் காலத்தின் சுவடுகள்’ என்ற பன்னாட்டு ஆய்வு நூல் - 2020 இல் இடம் பெற்ற கட்டுரை. -
சிறுகதை என்பதை மையக்கருவினைக் கொண்ட, திருப்பங்கள் உடைய அனுபவங்களை, நல்ல நடையில் சுருக்கமாக சொல்லும் உரைநடை இலக்கிய புனைவென்று எடுத்துக் கொள்ளலாம். வாசகரின் மனதில் சிறிய தாக்கத்தையாவது ஏற்படுத்தினால் அது நல்ல சிறுகதைக்கு அடையாளமாகும். புதினம் என்ற இலக்கிய வடிவத்தை எடுத்துப் பார்த்தால் உரைநடையில் அமைந்த நீண்டபுனைகதை என்று சொல்லலாம். அனேகமான புனைவுகளில் தளத்தையும், காலத்தையும் ஓரளவு அறிந்து கொள்ள முடியும்.
முன்பெல்லாம் வெளிநாட்டுக் கதைகளைத் தமிழில் மொழி மாற்றம் செய்தால்தான் அனேகமான வாசகர்களால் வாசிக்க முடியும். ஆனால் தற்போது அந்த நிலை மாறி, அதுபோன்ற தரமான கதைகளைத் தங்கள் அனுபவம் மூலம் தமிழில் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களே தருவதற்குத் தொடங்கி விட்டார்கள். இதனால் ‘புலம்பெயர் இலக்கியம்’ என்னும் இலக்கியத்தை தமிழ் உலகுக்குத் தந்தார்கள். தற்கால இலக்கியத்தில் காலத்தின் சுவடுகளை எடுத்துக் காட்டுவதற்காக, தீவிரவாசகி என்ற வகையில் இங்கே எழுத்தாளர் குரு அரவிந்தனின் சிறுகதைகள், புதினங்களில் இருந்து காலத்தின் சுவடுகளைக் காட்டும் சில சிறுகதைகளையும், புதினங்களையும் எடுத்துக் காட்ட விரும்புகின்றேன்.
தமிழ் இலக்கிய உலகிற்கு யுத்த காலச் சூழலில் எழுந்த கதைகள் மிகக் குறைவாகவே இருக்கின்றன. அந்தக் குறையை நிவர்த்தி செய்யும் வகையில் குரு அரவிந்தனின் புனைவுகள் பல பிரபல ஊடகங்களில் வெளிவந்துள்ளன. இந்தியா நாட்டுக்குத் தெற்கே அமைந்துள்ள இலங்கைத் தீவில் 1983 ஆம் ஆண்டு யூலை மாதம் ஏற்பட்ட இனவொழிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட போர்ச்சூழல் காரணமாக ஈழத்தமிழர்கள் பலர் தங்கள் பாரம்பரிய மண்ணான வடக்குக், கிழக்குப் பிரதேசங்களை விட்டுப் பல்வேறு நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தார்கள். அப்படிப் புலம் பெயர்தவர்களில் எழுத்தாளர் குரு அரவிந்தனும் ஒருவராவார். போர்ச் சூழலில் அவர் தாய் மண்ணில் வாழ்ந்த காலத்தையும், கனடா நாட்டுக்குப் புலம்பெயர்ந்த பின், 2009 ஆண்டு மே மாதம் இலங்கையில் போர் ஓய்ந்தபின் நடந்த சில சம்பவங்களையும் தனது அனுபவங்களைக் கருப்பொருளாகக் கொண்டு புனைவுகள் மூலம் பதிவு செய்திருக்கின்றார். தமிழகத்தில் இருந்து வெளிவரும் லட்சக்கணக்கான பிரதிகள் விற்பனையாகும் விகடன், கல்கி, குமுதம், கலைமகள், கணையாழி, இனிய நந்தவனம், யுகமாயினி மற்றும் இலங்கை, கனடா போன்ற நாடுகளில் இருந்து வெளிவரும் இதழ்களில் வெளிவந்த இவரது ஆக்கங்கள் மூலம் லட்சக்கணக்கான வாசகர்களைத் தனக்கென உருவாக்கிய இவரது சிறுகதைகள், நாவல்கள் சிலவற்றையும் எடுத்துப் பார்ப்போம்.