தொடர் நாவல்: கலிங்கு! - தேவகாந்தன் -
2009 - 5
கிளிநொச்சியிலிருந்து வந்து சுமார் ஒன்றரை வருஷத்தை வடமராட்சியில் கழித்த பரஞ்சோதி பாதியாக சுருங்கிப் போனாள். எலும்பும் உருகிச் சிறுத்துப் போயிருந்தாள். துயரத்தின் வேர்கள் அவளுள் ஆழமாய் இறங்கியிருந்தன. சாந்தமலருக்கு தாயைப் பார்க்கவே முடியவில்லை. அவளால் செய்ய எதுவுமிருக்கவில்லை. வன்னியில் யுத்தம் நடந்துகொண்டிருந்தது. அது தொடங்குகிற காலத்தில், போன வருஷம் ஜுன் மாதமளவில், ஏ9 பாதை மூடப்பட்டது. யுத்தம் முடிந்து ஒரு ஸ்திரமான நிலைமை தோன்றும்வரை அது மீண்டும் திறக்கப்போவதில்லை. அம்மாவுக்கான கதவுகள் அடைத்தே இருக்கும். யுத்தம் எப்போதும் நடந்துகொண்டிருந்தது. அது வெளிவெளியாய் நின்றிருந்தால், உள்ளுள்ளாய் நடந்தது. சமாதான காலத்திலும் நடந்தது. எப்போதும் நடந்தது. கிழக்கு மாகாணத்தில், வன்னியின் எல்லைகளில் குறிவைத்த தாக்குதல்களாய் அது வடிவங்கொண்டிருந்தது. துல்லியமான விமானக் குண்டு வீச்சினால் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் போன்றவர்கள் அழிக்கப்பட, ஆழ ஊடுருவும் படையினரின் கிளைமோர் தாக்குதல்களால் புலிகளுக்கு ஆதரவான ‘கிளி பாதர்’ கனகரத்தினம் அடிகள்போன்ற கத்தோலிக்க மதகுருமாரும் இல்லாமல் ஆக்கப்பட்டதற்கான முன்னெடுப்பும் யுத்தம்தான். நாடாளுமன்ற அங்கத்தவர்கள் சந்திரநேரு, ஜோசப் பரராஜசிங்கம் போன்றவர்களும் கொலைக் குறியில் மறைந்தனர். அரசாங்கத்தின் யுத்த முன்னெடுப்பிற்கு எதிரானதும், புலிகளின் செயற்பாட்டுக்கு ஆதரவுமான நிலைப்பாடு கொண்டிருந்த தராகி சிவராம்போலவே, லசந்த விக்ரமதுங்கபோன்ற பத்திரிகை ஆசியர்களும் காட்சியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். சிங்கள ஊடகவியலாளர்களே நாட்டைவிட்டு தப்பித்து ஓடுமளவு நிலைமை பயங்கரம்கொள்ள வைக்கப்பட்டிருந்தது. புத்துயிர் பெற்றிருந்த தேசப் பாதுகாப்புக்கான ஊடக மையம் ஊடகத் துறையிலுள்ள மாற்றுக் கருத்தாளரை முற்றாக அழித்தது. அவையெல்லாம்கூட யுத்தத்தின் உபகூறுகளே.