நூல் அறிமுகம்: பொருளியல் அறிஞர் அ.வரதராஜா பெருமாளின் 'எழுந்து முன்னேற முடியாமல் இறுகிப்போயிருக்கும் இலங்கையின் பொருளாதாரம்' நூல் பற்றிய கருத்துகள்! - ஜேம்ஸ் சிவா முருகுப்பிள்ளை (ஈஸ்வரமூர்த்தி) -
நூலின் பெயர் - 'எழுந்து முன்னேற முடியாமல் இறுகிப்போயிருக்கும் இலங்கையின் பொருளாதாரம்'
வெளியீடு - சமூகம் இயல் பதிப்பக, 317 பெரிந்தெரு வடக்கு, ஈஸ்ட்ஹோம், இலண்டன், ஐக்கிய இராச்சியம்
முதற்பதிப்பு - ஆகஸ்ட் 2022
- வரதராஜப் பெருமாள் புத்தக அறிமுக வெளியீடு: (கனடாவில் டிசம்பர் 04, 2022 மாலை நடைபெற்ற நிகழ்விற்கு தலைமைத் தொகுப்புரை ஆற்றிய சமூக, அரசியற் செயற்பாட்டாளர் ஜேம்ஸ் சிவா முருகுப்பிள்ளை (ஈஸ்வரமூர்த்தி) ஆற்றிய உரையின் எழுத்து வடிவம். அவரது முகநூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சமூக, அரசியல் செயற்பாட்டாளர் அ.வரதராஜா பெருமாள் பொருளியல் துறை அறிஞர்களில் ஒருவர். இலங்கையின் பொருளாதாரம் பற்றிய அவரது கருத்துகளை அனைவரும் அறிவதும் அவசியம். இலங்கைப்பொருளாதாரம் பற்றிய நல்லதொரு புரிதலை இந்நூல் தருவதால் இது போன்ற நூல்களின் வருகை தற்போதுள்ள சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழலில் அவசியம். - பதிவுகள்.காம் -
ஆதிப் பொதுவுடமை, ஆண்டான் அடிமை, நிலப்பிரவுத்துவம், முதலாளித்துவம், கம்யூனிசம் என்று மனித குல வரலாற்றை பொருளாதாரக் கட்டுமானங்களின் அடிப்படையில் பிரிந்து ஆராய்ந்து உருவாக்கிய நூலின் இறுதி வடிவமாக மூலதனம் என்று புத்தகத் திரட்டு பொருளாதாரம் பற்றி ஒரு முழுமையான ஆய்வை எமக்கு கொடுத்திருக்கின்றது. இதுவரை கால மானுட வர்க்கத்தின் சமுதாய அமைப்பின் பரிணாம வளர்ச்சிப் போக்கினை அவதானிப்போமாயின், ஆதி காலத்து மானுடர் அறியாமையில் வாழ்ந்த காலகட்டத்தில், அவரது மனம் பூரணமாகத் தொழிற்பட ஆரம்பிக்காதவொரு காலகட்டத்தில் நிலவிய தாய்வழி மரபினையொட்டிய பொதுவுடமைச் சமுதாய அமைப்பாக இருந்தது. பின்னர் அது உற்பத்திக் கருவிகளின் பரிணாம வளர்ச்சிப் போக்கிற்கேற்ப மாறுதலடைந்து வந்த ஆண்டான், அடிமை, அதாவது அடிமை - உடைமை சமுதாய அமைப்பாக மாற்றம் பெற்றது. பின்பு நிலப்பிரபு - பண்ணையடிமை அல்லது நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பு பெரும் நிலப'பரப்புகளை வழங்களை தமக்கானது என்று ஒரு சிறு பகுதியினர் ஆக்கிரமித்து வைத்திருந்து சமூக அமைப்பாக ஆட்சியதிகாரமாக மாற்றம் பெற்றது. இதன் வளர்ச்சியில் மூலதனத் திரட்சி ஓரிடத்தில் குவிந்ததாக உருவான முதலாளித்துவ சமுதாய அமைப்பு, நவீன முதலாளித்துவ சமுதாய அமைப்பு இதில் தான் பாட்டாளி வர்க்கம் என்ற உழைக்கும் வர்க்கமும் அவர்களின் உழைப்பைச் சுரண்டி பெரும் மூலதனத்திற்கு அதிபதியான முதலாளி வர்க்கமும் பகை வர்க்கங்களாக பரிணாமம் பெற்ற சமுதாய் அமைப்பு உருவானது. இப்படியான ஒரு காலகட்டத்தில் நாம் தற்போது வாழ்ந்து வருகின்றோம்.
இப்படியாகப் பரிணாம வளர்ச்சிப் போக்கினைக் கொண்டுள்ள சமுதாய வரலாற்றுப் போக்கில், அடுத்ததாக நிச்சயம் இன்னுமொரு மாற்றம் ஏற்பட்டே தீரும் என்ற சமூக விஞ்ஞானப் பார்வை ஆய்வாளர்களிடம் உள்ளது. இன்னுமொன்றையும் இச்சமுதாய அமைப்பின் வளர்ச்சிப் போக்கில் அவதானிக்கலாம். அதாவது, எண்ணற்ற வர்க்கங்களாகப் பிரிந்து கிடந்த மானுட வர்க்கத்தினை, இச்சமுதாய அமைப்பின் பரிணாம வளர்ச்சிப்போக்கு மேலும் மேலும் எளிய வர்க்கங்களாகப் பிரித்து, இறுதியில் முதலாளி, தொழிலாளி என்னுமிரு வர்க்கங்களை உள்ளடக்கியதொரு சமுதாய அமைப்பாக மட்டும் மாற்றி விட்டுள்ளது.