முன்னுரை

- பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம் – 632 521 -உலகில் வழிபாடு இல்லாத மனித சமூகம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. சுமார் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னதாகக் கணிக்கக்கூடிய குகை ஓவியங்களில் தொன்மையான வழிபாட்டு கூறுகள் காணப்படுவதாக அறிஞர்கள் கூறியுள்ளனர். இத்தகைய தொல் பழங்கால வழிபாட்டு முறைகள் பின்னர் சமயங்களாக வளர்ச்சி பெற்று வந்துள்ளன. மனித வாழ்க்கையில் வழிபாடு இன்றியமையாத இடத்தைப் பெறுகிறது. வழிபாட்டிற்குரிய தெய்வங்கள் எவ்வாறு தோற்றம் பெறுகின்றன ? அவை எவ்வாறு வழிபடப்படுகின்றன ? வழிபாட்டிடங்கள் எவ்வாறு கோயில்களாக வளர்ச்சி பெறுகின்றன ? வைதீகத் தெய்வங்களோடு எவ்வாறு ஒன்று கலக்கின்றன ? போன்ற வினாக்களுக்கு விடை தேடும் பொழுது 'நடுகல் வழிபாடு' முதன்மையான இடத்தைப் பெறுகின்றது. பண்டையகால தமிழ்மக்கள் பண்பாட்டுடனும் நாகரிகத்துடனும் வீரச்செயலுடனும் வாழ்ந்து வந்தமை புறநானூறு வெளிப்படுத்துகிறது. மேலும் மக்களின் வாழ்வியல் போர்முறை, வழிபாட்டு முறைகளைப் பற்றி விரிவான செய்திகளைச் சங்க நூல்களில் காணமுடிகின்றது. புறநானூற்றில் நடுகல் வழிபாட்டு முறைகளைப் பற்றிய செய்திகளை இக்கட்டுரையில் விரிவாக காண்போம்.

தமிழர் பண்பாட்டில் நடுகல்

பண்டைத் தமிழ் மக்களிடம் வேரூன்றி இருந்த வழிபாடுகளில் மிகவும் குறிப்பிடத்தக்கது இறந்தார்க்கு நடப்பட்ட கற்களை வணங்கும் நெறியாகும். போரில் இறந்துபட்ட வீரர்களின் நினைவினைப் போற்றும் வண்ணம் அவர்களின் பெயரையும், பெற்ற வெற்றியையும் அவர்களின் பெருமைகளையும் பொறித்துக் கல்நட்டு வணங்கும் மரபு தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே இருந்துள்ளது. வெட்சித்திணையின் ஒரு கூறாக இதனை அவர் குறித்துள்ளார்.

காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்
சீர்த்தகு மரபில் பெரும்படை வாழ்த்தலென்று
இரு மூன்று மரபிற்கல்(தொல் : புறத்-5)


என்று ஆறு நிலைகளை தொல்காப்பியர் குறித்துள்ளமைக் காணலாம். இதனை ஒட்டியே சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகள் தமது வஞ்சிக் காண்டத்தை உருவாக்கியுள்ளமை கருத்தாகும். இறந்தார்க்குக் கல் நட்டு வழிபடும் முறை கி.பி. 11ஆம் நூற்றாண்டு வரை இருந்துள்ளது என அறிஞர்கள் கண்டுள்ளனர்.

 

நடுகல் பற்றிய பொதுச்செய்திகள்

பண்டையத் தமிழ் மக்கள் இறந்தவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் எழுப்பி போற்றுவதும், பாராட்டுவதும் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து வந்தப் பழக்க வழக்கங்களாகும். பழைய கற்காலத்தில் இறந்தவர்களை இயற்கையாக விட்டுவிட்டனர். ஆனால் அவர்கள் இறந்தோரின் வாழ்க்கை அனுபவங்களை இயற்கையான கற்குகைகளின் சுவர்களில் ஓவியமாகத் தீட்டி வைத்தனர். புதிய கற்காலத்தில் இறந்தவர்களைத் தங்கள் குடியிருப்பு பக்கத்தில் புதைத்தனர். அத்துடன் இறந்தவர்கள் வாழ்நாளில் பயன்படுத்திய பொருட்களை அவர்களுடன் வைத்து குழியிலிட்டுப் புதைத்தனர். இவ்வாறு இறந்தவர்களுக்கு நினைவுச் சின்னம் எடுக்கும் மரபு வளர்ச்சி பெற்றது. தமிழர் வீரர்கள் இறந்த இடத்தில் கல்பதுக்கைகள் அமைத்து அதன்மேல் 'நெடுங்கல்லை நட்டனர். இந்நெடுங்கல் மக்கள் நாகரிக வளர்ச்சியினால் உயரம் குறைந்து நடும் அளவுக்கு நடுகல்லாக மாறியது. நடுகல் என்பது வீரன் இறந்த இடத்திலோ அல்லது வேறு இடத்திலோ அவன் நினைவாக எடுக்கும் கல் நடுகல் ஆகும். இதனை வீரக்கல் என்றும் அழைக்கின்றனர். பண்டையத் தமிழர்கள் வீரத்தைப் போற்றினார்கள். வீரனாக வாழ்வதைச் சிறப்பாகக் கருதினர். வீரர்கள் ஊரைக் காக்கவோ, நாட்டைக் காக்கவோ, மானம் காக்கவோ, ஆநிரை கவரவோ (அ) மீட்கவோ ஏற்படும் போரில் பங்கு பெற்ற பகைவருடன் போரிட்டு வீர மரணம் அடைந்த வீரர்களின் நினைவாக எடுக்கப்பட்ட கற்களையே நடுகற்கள் என அழைத்தனர். இவ் வீரர்கள் நினைவாக ஊர்மக்களோ உறவினர்களோ, அரசனோ, தலைவனோ, நடுகற்களை எடுத்தனர். இந்நடுகற்களில் வீரனின் பெயரும் பீடும் எழுதுவதோடு இல்லாமல் வீரனின் குடும்பத்தாருக்கு நிலக்கொடை வழங்கியதையும் குறிப்பிடுகின்றனர்.

நடுகல் - சொற்பொருள்

நடுகல் என்றால் நட்டகல் என்று பொருள். நடுகல் என்ற வினைத்தொகை இலக்கண இலக்கியங்களில் பேசப்படுகிறது. நடுகல்லை நட்டகல், நடப்பட்டகல் எனப் புறநானூறும், நாட்டியகல் என இளம்பூரணரும் நடுங்கல் எனச் சிலப்பதிகாரமும், நாட்டப்படுங்கள் தொல்காப்பியமும் குறிக்கின்றன.

நடுகற்கல் காணப்படும் இடங்கள்

நடுகற்கள் ஏரிகரையிலும் ஆற்றங்கரையின் அருகிலும் ஊரின் புறத்தேயும் காட்டுப்பகுதியிலும் காணப்படுகின்றன. இலக்கியங்களில் சுட்டப்படுவது போன்று நடுகற்கள் பாலை நிலத்தின் கண் மரத்தின் நிழலில் அச்சம் தரக்கூடிய வகையில் தனிமையான இடத்தில் அமைந்துள்ளன என்பதை அறியமுடிகிறது. நடுகற்கள் இருந்த இடங்களைப் பற்றி சங்க இலக்கியத்தில் சில சான்றுகள் கிடைக்கின்றன. பாலை நில வழிகளில் நடுகற்கள் நடப்பட்டன என்ற செய்தியைச் சங்க இலக்கியங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

வெண் நுனை அம்பின் விசை இட வீழ்ந்தோர்
எண்ணு வரம்பு அறியா உவல்இடு பதுக்கை (அகம் : 109)


செத்தாடை பிழைய வன்கணாடவர்
அம்புபடி வீழ்ந்தோர் வம்பப் பதுக்கை (புறம் : 3)


பாலை நிலத்தின் வழியில் செல்பவரைக் கொன்று பொருள் பறிப்பது மறவர்களது வழக்கமாக இருந்தது. அவ்வாறு கொல்லப்பட்டோரின் உடல்களைத் தழையிட்டு முடி அதன்மேல் கற்களைக் குவித்து மேடு செய்து வைப்பர் என்று மேற்கண்ட அகம், புறப் பாடலின் வழியாக அறியமுடிகிறது.

சங்க இலக்கியங்களில் நடுகல்

சங்கச் செய்யுட்களில் காணப்படும் நடுகல் பற்றிய குறிப்புகளில்பல வெட்சித்திணையின் தொடர்புடையனவாகவே உள்ளன. ஆநிரை மீட்டு அம்முயற்சியில் உயிர் துறந்த வீரர்களே பாராட்டப்பட்டுள்ளனர். ஆக்கள் நாட்டின் பொருளாதாரத்தில் பெற்றிருந்த சிறப்பிடத்தையே இது குறித்தது எனலாம். நாட்டின் பொருளாதாரத்திற்குப் பகைவரால் ஏற்பட்ட தீங்கிலிருந்து காப்பாற்றுவதற்கு உயிர்விட்ட வீரர்களைப் போற்றியது வியப்புக்குரிய செய்தியன்று. நடுகற்கள் ஊருக்குப் புறத்தே தொலைவில் இருந்த திடல்களில் நடப்பட்டன. ஓங்கி வளர்ந்த வேங்கையின்மலர்களை வெள்ளிய பனந்தோட்டோடு விரவித் தொடுத்த மாலையாகச்சூட்டினர். இச்செய்தியை புறநானூற்று பாடல் ஒன்று தெரிவிக்கின்றது.

ஊர் நனியிறந்த பார்முதிர் பந்தலை
ஓங்குநிலை வேங்கை ஒள்ளிணர் நறுவீர்
போந்தையத் தோட்டில் புனைந்தனர் தொடுத்துப்
பல்லான் கோவலர் படலை சூட்டக்
கல்லாயினையே கடுமான் தோன்றல் (புறம். 265 : 1 - 5)

நடுகற்களில் வீரனுடைய பெயரும் பீடும் எழுதப்பட்டன. அணி மயிற் பீலியும் மலர் மாலைகளும் சூட்டப்பட்டன என்ற செய்தியை அகநானூறு கூறுகின்றது.

நல்லமர்க் கடந்த நாணுடை மறவர்
பெயரும் படும் எழுதி அதர்தொறும்
பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல் (அகம் :67)


பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி
மரல் வருத்துத் தொடுத்த செம்பூங் கண்ணியொடு
அணிமயிற் பிலிசூட்டிப் பெயர் பொறித்து
இனி நட்டனரே கல்லலும் (புறம் : 264)


என்னும் சான்றுகளால் அறியலாம். நடுகற்கள் அமைந்த இடத்தைச் சுற்றி வேலை நட்டுக் கேடயங்களையும் நிறுத்தி வைத்தனர் என்ற செய்தியை,

கிடுகு நிரைத்து எஃகூன்றி
நடுகல்லின் அரண்போல (பட்டினப் : 78-79)

என்று குறிப்பாலும்,

பிலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்

வேலூன்று பலகை வேற்றுமுனை கடுக்கும் (அகம் : 131 )

என்ற பகுதியாலும் அறியலாம். இக்கற்களுக்கு வேங்கை மலரை மட்டுமின்றி செம்மையான கரந்தை மலரையும்சூட்டினர் என்பதை அகநானூற்றின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. இத்தகைய வரிசை வுரிசையாகவும் மிகப் பலவாகவும் சில இடங்களில் காணப்பட்டன.

வில்லீண்டு அருஞ்சமம் ததைய நூறி
நல்லிசை நிறுத்த நாணுடை மறவர்
நிரை நிலை நடுகல்(அகம் : 387)

என்பதை அகநானூற்றின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. நடுகற்களின் மேல் துணியினால் பந்தலிடுவதும் வழக்கமாக இருந்துள்ளது. இதனை,

உயிரிசை வெறுப்பத் தோன்றிய பெயரே
மடஞ்சால் அணிமயிர் சூட்டி
………………………………………………………………..
படஞ் செய் பந்தர்க் கல் விசை யாதுவே(புறம்.260)

என்று புறநானூறு குறிப்பிடுகின்றது.

புறநானூற்றில் நடுகல் செய்திகள்

புறநானூற்றில் நடுகல் பற்றிய பல செய்திகள் காணப்படுகின்றன. பாலை நில வழிபாடுகளில் நடுகல் நடப்பட்டன என்ற செய்தியைக் காட்டுகிறது.

சொந்தாடை பிழையா வன் கணாடவர்
அம்புபடி வீழ்ந்தோர் வம்பப் பதுக்கை (புறம் 20:20 21)


பாலை நிலத்தின் வழியில் செல்பவர்களைக் கொன்று பொருள் பறிப்பது மறவர்களது வழக்கம் இருந்தது. அவ்வாறு கொல்லப்பட்டோரின் உடல்களைத் தழையிட்டு மூடி அதன்மேல் கற்களைக் குவித்து மேடு செய்து வைப்பர் என்று மேற்கண்ட புறப் பாடல்களின் வழியாக அறிய முடிகிறது. இறந்தவர்கள் நினைவாக அமைக்கப்பட்ட கற்களே நடுகல் எனப்படும். நடுகற்கள் பல்வேறு காரணங்களுக்காக வீரர்களுக்கு வைக்கப்பட்டுள்ளன “நிரை கவர்தல் சண்டையில் இறந்த வீரன், நிரை மீட்டல் சண்டையில் இறந்த வீரன், ஊரழிவைத் தடுத்து நிறுத்தின் தன் உயிரை ஈந்த வீரல், பன்றி குத்தி இறந்த வீரன், புலிசரடன் சண்டையிட்டு இறந்தவீரன், அரசன் வெற்றி பெறத் தன் தலையைத் தந்த வீரன், யானைக் குத்திப்பட்டான் கல், வடக்கிருந்து உயிர் துறந்தவர்கள் கல்” என நடுகற்களின் வகைகளாக (ச.கிருஷ்ணமூர்த்தி, நடுகற்கள், ப.32) கூறுகின்றார்

வீரர்கள் என்று போற்றப்பட்ட மனிதர்களின் வரலாற்றை எடுத்துக் காட்டுவதே நடுகற்களாகும்

“வைகம் வம்மோ வாய்மொழிப் புலவீர்
நனந்தலை யுலக மிரந்தை தூங்கக்
கெடுவி னல்லிசை சூடி
நடுகர லாயினன் புரவல னெனவே” (புறம். 221)

என்ற பொத்தியாரின் பாடல் கோப்பெருஞ்சோழனுக்கு நடுகல் எடுத்தச் செய்தியை அறிவிக்கிறது.

“பலர்க்கு நிழலாகி யுலக மீக் கூறித்
தலைப்போ கன்மையிற் சிறுவழி மடங்கி
நிலைபெறு நடுக லாகியக் கண்ணும்
இடம் கொடுத் தளிப்ப மன்றவுடம்போ" (புறம், 223)

சோழன் இறந்தபின்பு தாமும் வடக்கிருந்து உயிர்விடத் துணிந்த பொத்தியாருக்கு நட்பின் காரணமாக அருகிலேயே இடமளித்ததோடு நடுகல் நடுவதற்கும் இறந்தப் பின்பு கூட தமிழர்களால் நட்புமுறை பின்பற்றப்பட்டுள்ளதையும் மனித வாழ்வோடு இரண்டுற கலந்த நிலையையும் பொத்தியாரின் பாடல் முலம் அறியமுடிகிறது. இறந்த பின்பு நடுகல்லாயும் இடத்தைக் கொடுத்த கோப்பெருஞ்சோழனின் பெருமையையும் உணர முடிகிறது

பலியும் வழிபாடும்

இத்தகு நடுகற்களைத் தெய்வமாகவே வழிபட்டு நாள்தோறும் பலியிடுதல் அன்றைய மரபாயிருந்துள்ளது.

பெயர் மருங் கறியார் கல்லெறிந்து எழுதிய
நல்லரை மராஅத்த கடவுள் (மலைபடு. 394 - 95)

என்று கூறுவதன் மூலம் மரத்தின் கீழ் இருந்த நடுகற்கள் கடவுளாகவே கருதப்பட்டமை தெளிவாகின்றது. நடுகல் வழிபாட்டின் பொழுது நடுகல்லின் முன் கண்ணைக் கலங்களில் வைத்து படைத்தனர். செம்மறியாட்டுக் குட்டியை பலி கொடுத்தனர். துடிபடித்து ஒலியெழுப்பினர் என்ற செய்தியை,

நடுகற் பீலிசூட்டித் துடிப்படுத்தத்
தோப்பிக் கள்ளொடு துரூஉப்பிலி கொடுக்கும் (அகம். 35)

என்ற அகநானூற்றின் மூலம் அறிந்து கொள்ளமுடிகிறது. கடவுள் வழிபாட்டில் பலி கொடுக்கும் பக்கம் அன்றைய மக்களிடையே இருந்துள்ளது என்பதற்கு சான்றாகவும் இவ்வரிகள் காணப்படுகின்றன. சிற்றூர் வாழ்மக்கள் தம் ஊர்ப்புறத்தே இருந்து நடுகற்களை நன்னீராட்டினர், நெய்யூற்றி விளக்கேற்றினர், நறுமணப் புகை போட்டனர். அதன் புகை தெருக்களில் கமழ்ந்து,

இல்லடு கள்ளின் சில்குடிச் சீறூர்ப்
புடைநடு கல்லின் நாட்பலி யூட்டி
நன்னீராட்டி நெய்ந் நறைக் கொளீஇய
மங்குன் மாப்புகை மறுகுடன் கமமும்
அருமுனை இருக்கை (புறம். 329)


நடுகற்கட்கு நாள் வழிபாடு செய்து வணங்கியுள்ளனர்.

சிலையே நட்ட கணைவீழ் வம்பவர்
உயர்பதுக் கிவர்ந்த ததர்கொடி அதிரல்
நெடுநிலை நடுகல் நாட்பலி கூட்டும் சுரன்(அகம். 289)


என்பது சான்றாகும். கள் உகுத்துப் பரவுதலும் வழக்கமாக இருந்தது. அதியமான் இறந்தபோது ஔவையார்,

இல்லா கியரோ காலை மாலை
அல்லா கியர்யான் வாழும் நாளே
நடுகற் பீலி சூட்டி நாரரி
சிறுகலத் துகுப்பவும் கொள்வன் கொல்லே (புறம் : 232)


என்று வருந்தியுள்ளார். மறக்குடிப் பிறந்த மக்கள் நெல்லை உகுத்துப் பரவும் கல்லைத் தொழுவதன்றி வேறு தெய்வத்தினை வணங்காத இயல்புடையோராவர் என்று,

ஒன்னாந் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளிறேந்து மருப்பிற் களிறெறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவி னல்லது
நெல்லுகுத்துப் பரவும் கடவுளும் இலவே (புறம் : 335)


புறநானூறு கூறுகிறது.

என்னைமுன் நிலவனமின் தெவ்விர் பலர் என்னம
முன்நின்று கல்நின் றவர் (குறள்.771)

என்று வள்ளுவர் கூறுவதால் அவர் காலத்தில் பல நாட்டப்பட்டிருந்தமை புலனாகின்றது.

முடிவுரை

சிலப்பதிகாரத்தின் உச்சநிலை கண்ணகியை நடுகல் தெய்வமாகக் கொண்டு வழிபடுவதாகும். நடுகற்கெனக் கோவிலமைத்து அதன் பெருமை பாடும் தனிப் பெருங்காப்பியமாக சிலப்பதிகாரம் அமைகிறது. கண்ணகியின் நடுகற்கோவிலுள் நின்ற செங்குட்டுவனுக்கு காட்சி தந்து தந்தேன் வரம் என்று வரம் கொடுத்த நிகழ்ச்சியை அறிகிறோம். பழங்காலத்தில் தோன்றிய நடுகல் வழிபாடு இன்று தமிழ்நாட்டில் வணங்கப் பெறும் வீரத்தெய்வ வழிபாடாக மாறியுள்ளது என்பதில் ஐயமில்லை எனலாம். மனித இறப்போடு தொடர்புடையது பதுக்கைகள் நடுகற்களாக இவை பழந்தமிழ் மக்களின் வாழ்வியலையும் வழிபாட்டு முறையை வெளிப்படுத்தும் ஆவணங்களாக உள்ளன. புறநானூற்றுப் பாடல்களில் வெட்சி, கரந்தை வீரர்களுக்கும், யானைப்போரில் உயிரிழந்த வீரர்களுக்கும், அரசர்களுக்கும் மக்கள் நடுகலெடுத்து வழிபாடு நடத்தி வந்த பண்பாட்டுச் செய்தியை அறியமுடிகிறது. பழந்தமிழர்கள் இறந்தவர்களை அடக்கம் செய்ய ஆரம்ப நிலையில் பதுக்கைகள், திட்டைகள், கற்குவியல்கள், பதுக்கைகளுடன் கூடிய நடுகற்கள், நடுகற்களில் பெயர் பொறித்தல் என்ற நிலையில் வளர்ந்துள்ளதையும் இறந்தப் பிறகும் முன்னோரை வணங்கும் பண்பாட்டு மரபையும் புறநானூற்றுப் பாடல்களின் மூலம் அறியமுடிகிறது.

துணைநின்ற நூல்கள்

புலியூர் கேசிகன், புறப்பொருள் வெண்பாமாலை (மூலமும் உரையும்), சாரதா பதிப்பகம், சென்னை 14. பதி.2009.

இளம்பூரணர் (உரை), தொல்காப்பியம் பொருளதிகாரம், கௌரா பதிப்பகம், சென்னை-14. பதி.2017.

தமிழண்ணல், சுப. அண்ணாமலை (உரை), அகநானூறு (களிற்றியானை நிறை), கோவிலூர் மடாலயம், கோவிலூர்-630 307. பதி.2004.

தமிழண்ணல், சுப. அண்ணாமலை (உரை), அகநானூறு (மணிமிடை பவளம்), கோவிலூர் மடாலயம், கோவிலூர்-630 307. பதி.2004.

தமிழண்ணல், சுப. அண்ணாமலை (உரை), அகநானூறு (நித்திலக்கோவை), கோவிலூர் மடாலயம், கோவிலூர்-630 307. பதி.2004.

திருக்குறள், பரிமேலழகர், கழகம், சென்னை. பதி. 1979.

குருநாதன் (ப.ஆ) (2003), புறநானூறு மூலமும் உரையும், வடிவேல் பதிப்பகம், தஞ்சாவூர்-4.பா. 183

சிதம்பரனார். சாமி (உரை), பட்டினப்பாலை, அறிவுப்பதிப்பகம், பதி.2008.

கதிர்முருகு, மலைபடுகடாம், சாரதா பதிப்பகம், சென்னை-14. பதி.2016.

கிருஷ்ணமூர்த்தி .ச, நடுகற்கள், மாணிக்கவாசகர் பதிப்பகம், சென்னை. பதி. 2013.


மின்னஞ்சல் - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

* கட்டுரையாளர்: - முனைவர் பீ.பெரியசாமி, தமிழ்த்துறைத்தலைவர், டி.எல். ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம், இராணிபேட்டை  மாவட்டம் -632521, தமிழ்நாடு, இந்தியா -


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R