'பழைய நினைவுகள் அதிலும் பால்ய , பதின்ம வயது நினைவுகள் அழியாத கோலங்களாக வாழ்வில் நிலைத்து வருபவை...' - வ.ந.கிரிதரன் -
என் பால்ய, பதின்மப் பருவத்தில் எதிர்பட்ட அழியாத கோலங்களாக நிலைத்து விட்ட ஆளுமைகளில் ஒருவர் விஜயன் சிதம்பரப்பிள்ளை (வண்ணார்பண்ணை) . கொரோனாப் பெருந்தொற்றின் ஆரம்பத்தில் பிரான்ஸில் அதற்குப் பலியானவர்களில் ஒருவர். முன்னாள் வடகிழக்கு மாகாண அமைச்சரும், அரசியல் அறிஞருமான வரதராஜா பெருமாளின் முகநூற் பதிவொன்றின் மூலமே அவரது மறைவு பற்றியும், அவர் பிரான்ஸில் வசித்தது பற்றியும் அறிந்துகொண்டேன். அப்பொழுது 'அஞ்சலி: விஜயன் சிதம்பரப்பிள்ளை (பிரான்ஸ்)' என்னும் முகநூற் பதிவொன்றினையும் இட்டிருந்தேன். அண்மையில் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் அவரது சகோதரர் யோகநாதன் சிதம்பரப்பிள்ளை (Yoganathan Sithamparapillai) விஜயனின் நினைவு மலரை அனுப்பியிருந்தார். சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள நினைவு மலர்.
அம்மலரை கூகுள் டிரைவில் பகிர்ந்துள்ளேன். அதற்கான இணைப்பு
இம்மலரில் முகநூலில் விஜயன் அவர்கள் பற்றிய என் பதிவினையும் 'பழைய நினைவுகள் அதிலும் பால்ய , பதின்ம வயது நினைவுகள் அழியாத கோலங்களாக வாழ்வில் நிலைத்து வருபவை. அக்கோலங்களில் ஒன்றாக நிற்பவை..' என்னும் தலைப்பில் உள்ளடக்கியுள்ளார்கள். அதற்காக விஜயன் குடும்பத்தினருக்கு நன்றி. அக்கட்டுரையில் எனக்குத் தெரிந்த அக்கால விஜயனின் தோற்றத்திலிருக்கும் புகைப்பட,மொன்றினையும் உள்ளடக்கியுள்ளார்கள்.அத்துடன் அப்பதிவுக்குரிய மேலும் சில புகைப்படங்களையும் உள்ளடக்கியுள்ளார்கள். அதனைப் பார்த்ததும் மீண்டும் நினைவுகள் யாழ் நகரில் அலைந்து திரிந்த எழுபதுகளுக்கே சென்று விட்டது.
விஜயன் பற்றிய என் முகநூற் பதிவினை மீண்டுமொரு தடவை பகிர்ந்துகொள்கின்றேன்.
(முகநூற் பதிவு) அஞ்சலி: விஜயன் சிதம்பரப்பிள்ளை (வண்ணார்பண்ணை)
ஒவ்வொருவருவருக்கு அவரவர் பால்ய, பதின்ம வயதுப் பருவங்களில் வந்து போன மறக்க முடியாத ஆளுமைகள் சிலர் இருப்பார்கள். சந்தித்திருப்பார்கள். அவ்வாளுமைகள் அவர்கள் வாழ்வில் வந்து போயிருப்பார்கள். ஆனால் பல்வேறு காரணங்களினால் அவர்கள் மறக்க முடியாதவர்களாக தடம் பதித்துச் சென்றிருப்பார்கள். என் வாழ்விலும் அவ்விதமான ஆளுமைகள் பலர் இருக்கின்றார்கள். அவர்களில் ஒருவர்தான் இவர்.