சிறுகதை: ஒரு கிராமம் உறங்கிக்கொண்டிருந்தபோது….. - ஸ்ரீராம் விக்னேஷ் , நெல்லை வீரவநல்லூர் -
“பாருவதி….. இனிக்காலத்தில ஓம்மூஞ்சீல முழிக்கவே கூடாதிண்ணுதான் நெனைச்ச்சுக்கிட்டிருந்தேன்….. என்னபண்ண…. ஊருக்கு நாட்டாமைப் பொறுப்பில இருக்கிறதால, யாருகிட்டயும் மானரோசம் பாக்க முடியாத வெறுவாகெட்ட பொழைப்பாயெல்லா போச்சு ஏம்பாடு… சரிசரி… நம்ம எல்லைச்சாமி கோயில் கொடைக்கு குடும்பத்துக்கு நூத்தியொரு ரூவா குடுத்திடணும்னு ஊர்க் கூட்டத்தில முடிவுபண்ணினது தெரியுமில்லே…. ஒரு வாரமாகியும் துட்டு ஏதும் குடுக்காம இருந்தா என்ன அர்த்தம்….”
கேட்டுக்கிட்டே நாட்டாமை நாச்சிமுத்து ஐயா எங்கவீட்டு குச்சி வாசல் ஓரமா ஒக்காந்துகிட்டாரு.
எங்கம்மா மொகத்த பாக்கவே ரொம்பவும் பாவமா இருந்திச்சு. அழுகை ஒண்ணுதான் வராத கொறை.
“தப்பா நெனையாதீரும் நாட்டாமை ஐயா…. வர்ர வெள்ளிக்கிழமைதான் பீடிக்கடையில சம்பளம் போடுவாங்க…. வாங்கின கையோட குடுத்துப்புடுறேன்…..”
கெஞ்சிற மாதிரி பேசிச்சு எங்கம்மா.
நாட்டாமை நாச்சிமுத்து விடல்ல.
“ ஒன்னய மாதிரி ஆளுங்க கஷ்டப்படக் கூடாதுண்ணுதான், நாம நூத்தி ஒண்ணுண்ணு வரிய பிரிச்சோம்…. இல்லேன்னா போனமாசம் தெற்கு ஊர்க்காரனுக நடத்தின கொடையில, அவங்க போட்ட ஆட்டத்துக்கும், காசைக் கொட்டி ரொம்ப ஜோரா பண்ணின திருவிழாவுக்கும், நாம பதிலுக்குப் பதிலு பண்ணிக் காட்டணும்னு, வீட்டுக்கு வீடு இருநூத்தம்பதோ, முன்னூறோன்னு பிரிச்சிருப்போம்…. பரவாயில்ல…. ஏற்கனவே ஊர்ப்பணம் கொஞ்சம் இருக்கு…. அதையும் போட்டு இந்தத் தடவை நம்ம சாமிக்கு, கொடைய ஜாம்ஜாம்னு நடத்திப்புடலாம்…. பாட்டுக் கச்சேரிக்கெல்லாம் டவுண்லயிருந்து ஆளு வருது…. தெரியுமா…..”
“பாட்டுக் கச்சேரியும், வாண வேடிக்கையும் வெச்சுக் கூத்தடிச்சாத்தான் சாமி வரங்குடுக்குமா ….. காசை கொட்டிக் கரியா ஆக்கித்தான் சாமி கும்பிடணும்னு நெனைக்கீரா நாட்டாமை ஐயா ….”
இப்ப கொஞ்சம் அம்மாகிட்ட துணிவு தெரிஞ்சிச்சு. நாட்டாமை ஐயாக்கு கோவம் வந்திருக்கணும்போல.
“இந்த எடக்குப் பேச்சுத்தான் வேண்டாங்கிறது…. தெற்கு ஊர்க்காரனுகளை விட , நாம ஒண்ணுங் கொறைஞ்சவங்க இல்லைங்கிறத காட்டிக்க, வேற என்னதான் வழி இருக்கு…. மனுசனுக்கு கவுரவம்னு ஒண்ணு இருக்கில்லையா…. இதப்பத்தியெல்லாம் நீ எங்கே நெனைச்சுப் பாக்கப்போறே…. நீ இதுமாதிரி நடந்துக்கப் போயிதான், காளிமுத்து ஒன்னையையும், ஓம் புள்ளைங்க ரெண்டையும் விட்டுப்பிட்டு அவ பின்னாடியே போய்ட்டான்…..”
இன்னும் என்னமோ எல்லாம் பேசினாரு. எங்கம்மா மெதுவாத்தான் பதில் சொல்லிக்கிட்டிருந்திச்சு. ஆனா என்னாலதான் முழுசா புரிஞ்சிக்க முடியல்ல.