தொண்டைமண்டலம் தொல்பழங்காலம் தொட்டே ஒரு வரலாற்றுப் பின்னணியைக்கொண்டு இயங்கிவருகிறது. இது பழையகற்காலம், புதியகற்காலம், பெரும்கற்காலம் என்று அதன் தொன்மையினை வரையறுத்துக் காட்டுகிறது. இப்பகுதிகளில் தொல்லுயிர்ப்படிமங்கள், தொல்மரப்படிமங்கள், கல்திட்டை, கல்பதுக்கை, கற்கிடை, ஈமத்தாழி, ஈமப்பேழை எனப் பல்வேறு வரலாற்றுச்சான்றுகள் காணக்கிடக்கின்றன.
தொல்லுயிர்ப்படிவுகள்
தொன்மைச்சிறப்பு வாய்ந்த தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி அழிந்துபோன உயிரினங்கள் மற்றும் தாவர இனங்களின் தொல்லுயிர் படிவுகள் அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாகத் தொண்டைமண்டலப் பகுதிகளில் பெருமளவில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், வேலூர் போன்ற மாவட்டங்களில் இவைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இருங்காட்டுக்கோட்டை, கண்ணன்தாங்கல், சிவன்கூடல் போன்ற ஊர்களில் தாவரப் படிமங்கள், பழங்கற்காலக் கருவிகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன (நடன.காசிநாதன்,2010:10-11).
பழையகற்காலப்பண்பாடு
இந்தியாவில் ஏறத்தாழ ஐந்து இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நிலவிய பிளைஸ்டோசின் (Pleistocene) காலத்தில் பழையகற்காலப்பண்பாடு தோன்றியது. இக்காலத்தில் வாழ்ந்தமனிதன் காடுகளிலும் மலைகளிலும் நாடோடியாக வாழ்ந்தான். அவன் கொடியமிருகங்களிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவும் தம்வாழ்வின் பல உபயோகங்களுக்கும் குவார்ட்சைட் (Quartzite) எனப்படும் கூழாங்கற்களிலிருந்து செய்யப்பட்ட கடினமான கற்கருவிகளைப் பயன்படுத்தினான். இந்தியாவில் இப்பழையகற்காலமானது கற்கருவிகளின் பொதுத் தன்மைகளையும் தொழில்நுட்பங்களையும் அடிப்படையாகக் கொண்டு மூன்று காலக்கட்டங்களாகப் பிரிக்கப்பட்டன. அவற்றுள் முதற் பழங்கற்காலம் (Early or Lower Palaeolithic Age) எனப்படும் காலம் ஏறத்தாழ 5,00,000 - 50,000 ஆண்டுகளுக்கு இடைப்பட்டதாகும். இக்காலத்தில் வாழ்ந்த மனிதன் கூழாங்கற்களினாலான கைக்கோடாரி (Hand Axe), வெட்டுக்கருவி (Chopper), கூர்முனைக்கருவி (Points), வட்டுக்கருவி அல்லது தட்டுவடிவக்கருவி (Discoids), கிழிப்பான் (Cleavers) போன்ற பெரியவகை கற்கருவிகளைப் பயன்படுத்தினான். இதற்கடுத்துவரும் இடைப் பழங்கற்காலமானது (Middle Palaeolithic Age), சுமார் 50,000 - 20,000 ஆண்டுகளுக்கு இடைப்பட்டகாலத்தில் நிலவியதாகும். இக்காலத்தில் வாழ்ந்தமனிதன் சிறிது அறிவுத்திறன் வளர்ச்சி பெற்றவனாகமாறி இருந்தான். இக்காலத்தில் பயன்படுத்தப் பட்ட கற்கருவிகள் அளவில் சிறியவையாகவும் நேர்த்தியானவையாகவும் செய்யப்பட்டிருந்தன. கூழாங்கற்களுடன் செர்ட் எனப்படும் இளம்பச்சைநிற வகைக்கற்கள் ஆயுதங்களைச் செய்யப்பயன்படுத்தப்பட்டன. இக்காலத்தில் கைக்கோடாரி, கூர்முனைக்கருவி, வட்டுகள், கிழிப்பான்கள், சுரண்டிகள், ஈட்டிகள், வாய்ச்சிகள் போன்ற பலவகை கற்கருவிகள் பயன்படுத்தப்பட்டன. கடைப் பழங்கற்காலம் (Later or Upper Palaeolithic Age) எனப்படும் சுமார் 20,000 – 10,000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட மூன்றாவது காலக்கட்டத்தில் சில்லுக்கருவிகளை (Flake tools) பயன்படுத்தியதோடு, குவார்ட்ஸ் (Quartrz), செர்ட் (Chert) போன்ற வகைக்கற்களினால் செய்யப்பட்ட சிறிய அளவிலான கூர்மையான, நேர்த்தியான ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. பிளேடு (Blade), துளைப்பான் (Borer), கத்தி (Knife), சுரண்டி (Scrapper), கிழிப்பான் (Cleaver) போன்ற வகையான கற்கருவிகள் குறிப்பிடத்தக்கவைகளாகும். மேற்குறிப்பிட்ட மூன்று பழங்கற்காலப் பண்பாடுகளும் நிலவிய தற்கான சான்றுகள் தமிழகத்தின் வடமாவட்டங்களில் குறிப்பாகக் காஞ்சிபுரம், திருவள்ளுர், வேலூர் மாவட்டங்களில் பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன (நடன. காசிநாதன்,2010:12).