-ஊர் களைகட்டும்.மண் வாசனை வாயூறும். அதுவே எங்களின் அன்றைய தீபாவளி! அம்மாவை இப்பவே அன்பாக நச்சரிக்கத் தொடங்கினால்தான் நான் விரும்பியது நடக்கும்."அம்மா இந்த முறைத் தீபாவளிக்கு
புதுசா 'ரௌச'ரும் 'சேட்டு'ம் வாங்கவேணும் எப்ப காசு தருவீங்கள்?'சேட்‘எப்பவும் வாங்கலாம்.ஆனால்,ரௌசருக்கு துணியை இப்பவே வாங்கிக் கொடுத்தால்தான் ரெயிலர் தச்சுத் தருவார் அம்மா ".
' அப்பா மத்தியானம் சாப்பாட்டுக்கு வாற நேரத்தில,அதுவும் ஈர அடுப்பில கறியை வைச்சிட்டு அவதிப்பட்டு ஓடிக்கொண்டு நான் இருக்கேக்க,இப்ப என்னால முடிவு சொல்லேலாது.கொஞ்சம் பொறு'.
" என்னம்மா,நான் என்ன கேட்டாலும், உங்களுக்கு எப்பவும் அவசரம்தான்!கடைசியில நான்தான் ரெயிலர் தச்சு முடிக்க மட்டும்,அங்கேயே இருந்து சண்டைபிடிச்சு,அவரும் தச்சு முடிக்க இரவாகிவிடும்.அதற்குப்பிறகு வீடுவந்து சேர இரவு பத்து மணியாகிவிடும்.இப்படித்தான் போனவருசமும் "செல்ரன்"கடத்தி,கடத்தி என்ர ரௌசர கடைசியில அவர் தைச்சு முடிக்க நல்லா இருண்டுட்டுது."
' சரிசரி.எனக்கு எல்லாம் விளங்குது.அந்த மனிசன் நல்ல பசியில வரும்.கொஞ்சம் பொறுத்துக்கொள்.அவர் வந்து போன பிறகு எல்லாருமா சாப்பிட்டிட்டு கதைப்பம்.இந்தா உனக்குப் பிடிக்குமெண்டு இப்ப வடிச்ச கஞ்சியிருக்கு.அந்தச் சிரட்டையை எடுத்து,தலைப்பாலும் பிளிஞ்சு வைச்சிருக்கிறன்.அதிலயும் கொஞ்சத்தை விட்டுக்குடி'.
ரியூப் லைட்டும், பெட்ரோல் மாக்ஸ் வெளிச்சத்திலயும் ஒருமாதிரி ரீயையும் குடிச்சு சிகரெட்டையும் மாறிமாறி மூட்டிப் பத்தவைச்சு,பகிடிகளும் விட்டபடி இந்தமுறையும் வடிவா தைச்சுத்தந்தார் செல்ரன்.பொறுமையை நான் இழந்திட்டன்.என்றாலும்,கடைசியில அவரின்ர கட்டிங்கும்,ரௌசரின்ர ஒழுங்கான தையலையும் பார்த்திட்டு அப்படிச் சந்தோசப்பட்டன்.
கந்தர்மடத்தில இருந்து சைக்கிள் உழக்கி, கண்டி வீதியிலுள்ள டொக்டர் பிலிப்பரின்ர இடத்துக்கு பக்கத்தில வரவேணும்.அப்படி வந்தாலும் சீமான் 'செல்ரன்ர' தையல்போல நான் கண்டதேயில்ல.’பெல் பொட்டம்’தைச்சாலும் மனமாத்தைச்சு தருவதிலேயே அவரின்ர நல்ல குணம் வாடிக்கையாளர்களை அப்படியே கட்டிப்போட்டிடும்.டவுனிற்குள்ள போனால் நியூ மாக்கட்டிற்குள்ள எத்தனை ரெயிலர் கடைகள் இருந்தாலும்,வன் ஒவ் த பெஸ்ட் என்றால் எங்கட செல்ரன்தான் !ஆரம்பத்தில மாட்டின் ரோட்டில வீட்டில இருந்தபடியேதான் தைச்சுக்கொடுத்தவர்.இப்ப நல்ல வேமஸ் ஆகி புதுசா கடையெடுத்து தனியா நடத்திறார்.
அப்பா மத்தியான சாப்பிட்டையும் முடிச்சு,வெத்திலையும் போட்டுக்கொண்டு சொண்டும் சிவக்க,கண்களும் சிரிச்சபடி ஒன்று சொன்னார்." நாளைக்கு வேலை முடிஞ்சு பங்கிறைச்சியோடதான் வீட்ட வருவன்".அதைக்கேட்டதும் மனசு துள்ளிக்குதிச்சுது.ஆட்டிறைச்சிப்பிரட்டல்,எலும்பும் போட்டு ஆட்டிறைச்சிக் குளம்பு.காரமா ரசம்.’ப்பா,தீபாவளி அந்தமாதிரி களைகட்டப்போகுது.நல்ல முழுக்கொன்றும் அடிச்சு,புதுசா உடுப்பும் போட்டு,தலைவாழையிலயும் விரித்து பந்தியில குந்தினால்;ஆட்டிறைச்சிக்குளம்பும்,பிரட்டலும் போட்டுப் போட்டுச் சாப்பிட்டுக்கொண்டேயிருக்கலாம். அம்மாவின் கைவண்ணம்;அத்தனை ருசி.
" தீபாவளியென்றால் கள்ளடிச்சு,ஆடடிச்சுக் கறிவைத்து,புத்தாடை கட்டிப்புதுப் படம்பார்த்துக் கொண்டாடவேண்டும்.இன்னும் இரண்டு நாளில இப்படித்தான் இருக்கப்போகுது" என்று அன்று குதூகலித்த மனம் இன்றும் நினைத்து வாயில் தேன் வார்த்தது.
அப்பா பங்கிறைச்சியைப் போட்டு காவிக்கொண்டு வந்த அந்தக் 'குடலை'என்ற பனை ஓலைச்சுருள்தான் (ஓலைப்பாத்திரம் ) அன்றைய கிராமத்து மண்வாசனையின் முதற்சாட்சி!அடுப்பிலிருந்து கொதிக்க கொதிக்க கறிகளையும் இறக்க,இறைச்சி வாசம் மூக்கைத்துளைக்க,ஊர் களைகட்டும்.மண் வாசனை வாயூறும்.அதுவே எங்களின் அன்றைய தீபாவளி.
அடுத்து வந்த தீபாவளியானது, அதன் அடிப்படைக் காரணிகளை இழந்து, தீபம் போன்ற அடையாளங்களைத் தாங்கிய வர்த்தக ரீதியான கொண்டாட்டங்களே நிஜமென வகுத்துக்கொண்டது.
:இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.