* ஓவியம் - AI
நான் நினைவில் வைத்திருப்பது இன்றுள்ள
குருமணகாடு அல்ல.
அது ஒரு கனவுலகம் போல்தான்
இப்போது தோன்றுகின்றது.
உண்மையில் அது இருந்ததா என்றும்
சில வேளைகளில் நான் ஐயுறுகின்றேன்.
ஆனால் அவ்விதமான சந்தேகங்களுக்கான
தேவை இல்லையென்பதையும் கூடவே
நான் உணர்கின்றேன்.
அது இருந்ததா அல்லது இருக்கவில்லையா
என்பது எனக்கு முக்கியமல்ல.
அது பற்றிய நினைவுகள் இன்றும்
என் உணர்வுகளில் விரவிக்கிடக்கின்றன.
அவை முக்கியமானவை.
மாபெரும் டைனோசர்கள் ஒரு காலத்தில்
இப்புவியுலகை ஆட்சி செய்தன அல்லவா.
அவற்றை நாம் பார்த்ததில்லை.
பார்க்கப்போவதுமில்லை அல்லவா.
ஆனால் அவற்றின் தடங்கள் இன்னும்
இம்மண்ணில் புதைந்து கிடக்கின்றன.
என் நினைவுத் தடங்களில் குருமண்காடும்
புதைந்துதான் கிடக்கின்றது.
அத்தடங்களிலிருந்து அவ்வப்போது அது
உயிர் பெறுகிறது. அவ்வளவுதான்.
அது போதுமெனக்கு.
குருமண்காடெங்கும் விருட்சங்கள்
நிறைந்து கிடந்தன.
குருமண்காடெங்கும் புட்கள் இசை பாடின.
குருமண்காடெங்கும் வானரங்கள் சஞ்சரித்தன.
இயற்கையின் தாலாட்டில் மெய்ம்மறந்து கிடந்தது
குருமண்காடு.
மனத்தைத் தாலாட்ட,
மனத்தை ஓய்வாக்கக்
குருமண்காடு எனக்குச் செய்யும் உதவி
இருக்கிறதே. பேருதவி அது.
கால ஓட்டம் இழப்புகளையும்
காவியே ஓடுகின்றது. ஆனால்
மறக்காமல் தடங்களையும் விட்டே
அது ஓடுகின்றது.
குருமண்காட்டில் என் பொழுதுகள்
கழிந்த தருணங்களில்
இரவு வானம் எனக்குப் போதித்த உண்மை
அது.
காலத்தின் தடங்களை அவ்விரவுப் பொழுதுகளில்
நானுணர்ந்தேன்.
நட்சத்திரச் சுடர்களில் முதன் முறையாக
நானுணர்ந்தேன்.
குருமண்காடு எனக்குப் போதித்தவை
அதிகம்.
அறிவியலை முதன்முதலில் போதித்த
குருமண்காட்டு இரவுகளை
நான் எப்போதும் மறப்பதில்லை.
நன்றியுடன் நினைவு கூர்கின்றேன்.
கூர்வேன்.