* ஓவியம் - AI
எங்கே போயின எல்லாமே?
வீட்டைச்சுற்றி
வாழ்ந்த தென்னை மரங்கள்.
வீட்டு வாசலைப் பார்த்தபடி
காவல்நின்ற பலா.
கிணற்றடியில் நின்ற வாழைகள்.
தென்மேற்குப் பருவக்காற்றில்
மோகங்கொண்டு எம்மை மயக்கிய
முற்றத்தில் நிலைத்து நின்ற
வேம்பும், கறி வேப்பிலை மரமும்.
கூடிவந்து குந்தியிருந்து
'குசாலம்'விசாரித்த பறவைகள்.
கோடிக்குள் குடியிருந்த பப்பாளி.
வாசம் பரப்பிய மல்லிகை.
பின் தோட்டத்தில்
செழித்து நின்று சுவைதந்த
பாண்டியும்,அம்பலவியும்.
வீட்டைச் சுற்றிச்
சோடிச்சு நின்ற பூமரங்கள்!"
அங்கேதான் நாம் வாழ்ந்தோம் என்ற
எம் அடையாளங்கள்
அனைத்தையும் புதிதாக வந்தவர்கள்
முற்றாக அழித்துவிட்டு
காற்றும் வராதபடி புதிதாக
அடுக்குமாடி வீடொன்றைக் கட்டிவிட,
இப்போது அது
இயற்கையைத்தடுத்துத்
துரத்திவிட்டு உயர்ந்து நிற்கின்றது.
எவருமே அங்கில்லை.
கானல் நீராய் நினைவுகள்
மட்டுமே மனசுக்குள்
காட்சிப் படிமங்களாய்
வந்து வந்து மாயமாய் மறைந்துவிட,
முதுமையில் மனம் தளர்ந்து
உடல் தளர்ந்து போகும்போதும்
உயிர் மூச்சில் மிஞ்சியிருப்பது
எம்மைப்பெற்ற,
எம்மோடு கூடி வாழ்ந்தவர்களின்
நினைவுகள் மட்டுமே!
நினைவுகளே கடைசிவரை
நிலைத்து நிற்கும்
காலச்சுவடுகள்.