* ஓவியம் - AI
எம் மண்ணழகு.
என் தாய்மொழியழகு.
ஊரைக் கடந்தால்
உயர்ந்து நிற்கும் கோபுரங்கள் அழகு.
நாலடி எடுத்துவைத்து
மனம்மகிழ வீட்டுப்
படலையைத் திறந்தால்,
காவல் தெய்வமாய் நின்றுகொண்டு,
எங்கே போன ராசா?உள்ளே வா"
என்றொரு ஜீவன்
கூப்பிடுமே!
அதுதான் எங்களின் பூவரசு.
அதுவே என்றும் எனக்குப் பேரழகு.
சொந்த பந்தம் வந்துவிட்டால்,
பெரிசுகள் வேம்புக்குக்கீழே கூட,
சின்னஞ் சிறிசுகள் நாம்
கூடிச் சேர்ந்து விளையாடியது
பூவரசுடன்தான் !
பூவரசிலை பிடுங்கி
'பிப்பீ' ஊதினோம்.
பப்பாக் குழலுக்குள்
பூவரசம் இலை வைத்து
நாதஸ்வரம் வாசித்தோம்.
பூவரசம் பூப்பிடுங்கி
காதில் செருகி
சாமி கும்பிட்டு,
தகர டப்பாவும்,
வேப்பம் குச்சியும் கொண்டு
தவில் வாசித்து
பூவரசைச் சுத்தி வலம் வந்தோம்.
ஆடுகள் 'மே'என காட்டல் (கத்தல்) கொண்டாலும்,
மாடுகள் 'மூ' என மூசல் (கத்தல்) செய்யினும்,
இலங்கை வானொலியில்
இதமான மெட்டுக்களுடன்
பாட்டுக்கள் கேட்ட போதும்,
எங்கள் கூத்துக்கள் ஓய்ந்த பாடில்லை.
எங்கள் விளையாட்டுக்களைக்
கூடிநின்று பார்க்கும் காகங்களும்
கா கா வென்று கரைந்தும்,
வாலை அசைத்து அசைத்து
கீக் கீக்கென்று அணில்கள்
தாவித்தாவி பாய்வதுமாய், மட்டுமன்றி
வேடிக்கை பார்த்துக் கொண்டே
கெக்கட்டம் விட்டுச்
சிரித்த சொந்தங்களின்
சிரிப்பொலிகளும்
என்று..அப்பப்பா,
என்ன வாழ்க்கை,
எத்தனை சந்தோசம்?
பொன்னான வாழ்க்கைக்கு
பூவரசம் மரமொன்றே போதும்
என்ற பொற்காலம் அன்றிருந்ததே!
"பிறந்து,தவழ்ந்து,உருண்டு,புரண்டு
மண் அளைந்து,'
பெரும்பாலும் களைத்துத் தூங்கிய இடம்
இந்தப் பூவரசின் மடிதான்"
என்று என்
அம்மாவின் அம்மா 'ஆச்சி' சொல்லுவா.
"ஆச்சி"என்றால் உருகிப்போவேன்.
அப்பு, ராசாவென்று அவாவும் எப்போதும்
உருகித்தான் கூப்பிடுவா.
கொஞ்சுவா.
ஆச்சியின் பாசம்,
ஆச்சியின் வாசம்,
ஆச்சியின் மூச்சில்
கலந்து வரும் வட்டார வழக்கின் நீட்சி.
அதுபோதும் எனக்கு.
பார்த்தீர்களா,
ஆச்சி' என்பது ஆணி வேரின் வாசம்போல
அற்புதமான தமிழ் வார்த்தை!
நினைவுகள் மெல்ல மெல்ல
நினைவிழந்து மங்கிப்போனாலும்
இந்த ஒரு சொல் மட்டும்
உயிரிழந்து,
எரிந்து சாம்பலாகிவிடினும்,
கடலில் என்
கதையைக் கரைக்கும்போதும்
கரையாத உயிரென்றால்
'ஆச்சி'எனும்
உள்ளத்தை உருக்கும்
இந்தத் தமிழ் அமிர்தம்தான்.
இல்லையா?
உயிருக்குள் இசைக்கும்
அந்த ஒலியின் இசைவடிவம் ஆச்......சி எனும்போது
உருகாத மனமும் உருகுமல்லவா?
சட்டென்று சிறு ஒலிதான். '
ஆனால்,அது 'ஓம்' என்ற
மந்திரத்தின் பிரணவப் பொருள்போல
மனமுருகும் தருணங்களை
நானுணரர்ந்திருக்கின்றேன்.
என்
ஆச்சியும் அப்படித்தான்.
எனக்குக் கிடைத்த வரம்
என் ஆச்சி.
ஒருநாள் பூராக
அப்பா,அம்மாவைக் கூப்பிட்டதை விடவும்
ஆச்சியைக் கூப்பிட்ட பாச ஒலிதான்
அதிகம்.
சுத்திச்சுத்தி அவாவின் மடிக்குள்ளேயே
என் வாழ்வு நித்தம் பூத்துக்கிடந்தது.
ஆச்சி சொன்ன கதைகள் ஏராளம்.
அதிலொன்றுதான் எங்கட பூவரசு.
என்ர தங்கம் இதைக்கேள்,
"இந்தப் பூவரசுக்கு கிட்டத்தட்ட என்ர வயசிருக்கும்.
என்ர ஐயா வைச்ச மரமிது.
நல்லாச் சடைச்சு நிற்கும்.
பருவம் தப்பாமல் பூவும்
அந்த மாதிரிப்
பூத்துக்கொட்டும்.
முற்றத்தில ஒதுக்குப்புறமா நின்றாலும்,
கொட்டிக்கிடக்கின்ற அழகில
எங்கட மண்ணுக்கும் ஒரு மவுசையா.
வெயிலுக்கு அதில குந்தியிருக்கலாம்.
நல்லா நிழல் விழும் ராசா.
ஆடுகளை அதில கட்டிவிட்டாலும்
அந்த இடமும் நல்ல வடிவாத்தானிருக்கும்.
இடைக்கிட நான்தான் குறுக்கால போற கிளைகள
உன்ர அப்பரைக்கொண்டு வெட்டிவிடப்பண்ணினான்.
இப்பவும்பார்,எல்லைக் காப்பாளன்மாதிரி,
நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு
காவல் தெய்வமாய் நிற்கிறதைப் பார்த்தியே!
சொன்னால் நம்பமாட்ட.
விடிஞ்சா அதிலபோய் ஒருக்கா
அவரையும் தொட்டுக் கும்பிடுவன்.
இருளேக்கையும் விளக்கு வைக்கேக்க
எங்கட பூரவசையும் நினைச்சுத்தான் கும்பிடுவன்.
இதுகள உனக்கு ஏன் சொல்றேன் என்றால்;
நாளைக்கு நல்லது கெட்டது என்று ஏதாவது
நடந்துதென்றால் எங்களோட வாழ்ற இதுகள மறந்திடக்கூடாது.
அதுதான்!
எனக்கும் வயசுபோகுது.இன்னும்
எவ்வளவு காலத்துக்குத்தான்
இந்த உசிரும் ஊசலாடிக் கொண்டிருக்கப் போகுதோ தெரியாது.
கட்டையில போகிற காலமும் சொல்லிக் கொண்டில்லை.
எல்லாம் விதிப்படிதான் நடக்கும் ராசா.
என்றாலும்,உன்ர ஆச்சி
எண்டைக்காவது ஒருநாள் போறது நிச்சயம்.
அப்படி ஏதாவது நடந்தால்,
இந்தப் பூவரசை மட்டும்
எந்தக் காரணத்தைக் கொண்டும்
தறித்துப் போடக்கூடாது.
அதுமட்டுமல்ல;
முப்பத் தொண்டுக்கு நினைவு மலரில
வம்சாவளியின்ர பெயர்கள் பட்டியலில
எங்கட காவல் தெய்வமான பூவரசையும்
பதிஞ்சிடுங்கோ.அதுபோதும்.
' அப்படியொன்றும் நடக்காது.
அப்படி நடந்தாலும்,'
நிச்சயமா உங்கட ஆசையை
நிறைவேற்றுவேன் ஆச்சி'
என்று அன்று சொன்ன வார்த்தைகள்,
என் மனக்கதவை மறுபடியும் திறந்து
இன்று என் ஆச்சியையும்,
அந்தப் பூவரசையும்
நினைவேந்தி வணங்கியது!
['ஆச்சி' என்ற சொல் நடுநிலைத் தமிழ் (சுமார் 12–15ஆம் நூற்றாண்டு) காலத்திலிருந்து தான் பயன்பாட்டில் வந்ததாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். குறிப்பாக தென்னிந்தியப் பாண்டியர், சோழர் காலத்திற்குப் பிந்தைய இலக்கியங்களில், மக்கள் வழக்கில் “ஆச்சி” என்ற வடிவம் பரவி,அது 12–15ஆம் நூற்றாண்டுகளில் தோற்றம்பெற்றிருந்தாலும், பொதுமக்கள் வழக்கில் நிலைத்த காலம்: 16ஆம் நூற்றாண்டிலிருந்துதான் என்ற குறிப்பையும்அறிந்துகொண்டேன்.]