முன்னுரை
சங்க மருவிய காலத்தில் தமிழ் நாட்டை ஆண்டவர்கள் களப்பிரர்கள்.இக்காலம் இருண்ட காலம் என அழைக்கப்படுகின்றன.இக்காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் பதினெட்டு நூல்கள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இதில் அறநூல்கள் பதினொன்று, அகநூல்கள் ஆறு, புறநூல் ஓன்றாக அமைந்துள்ளன. இந்நூல்கள் எவை என்பதை பற்றி,
நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப்
பால் கடுகங் கோவை பழமொழி –மாமூலம்
இன்னிலை சொல் காஞ்சியோ டேலாதி என்பதூஉம்
கைந்நிலையு மாம்கீழ்க் கணக்கு
என்ற தனிப்பாடலின் வழி அறியமுடிகிறது.இந்நூல் குறித்த விளக்கம் கூறும் தொல்காப்பியர்,
வனப்பியல் தானே வகுக்கும் காலை
சின்மென் மொழியால் பனுவலோடு
அம்மை தானே அடிநிமிர் பின்றே (தொல்.பொருள்.547)
என்று கூறுகின்றார். அறம்,பொருள்,இன்பம் எனும் மூன்றையோ அல்லது ஒன்றையோ ஐந்து அல்லது அதனினும் குறைந்த அடிகளால் வெண்பா யாப்பால் இயற்றுவது கீழ்க்கணக்கு நூல்கள் ஆகும்.இதனை,
அடிநிமிர் பில்லாச் செய்யுள் தொகுதி
அறம் பொருள் இன்பம் அடுக்கி யவ்வந்
திறம்பட உரைப்பது கீழ்க்கணக்காகும் (பன்.பாட்.348)
என்று பன்னிருப் பாட்டியல் கூறுகிறது.இவ்வற இலக்கியங்கள் பல நெறிகளை நவில்கின்றன.இவ்வகையில் செய்ந்நன்றிதல் என்ற நெறியைக் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
சமுதாயத்தியத்தில் வாழும் மக்கள் ஒவ்வொருவரும் தனக்கு முன் செய்த நன்மையை மறக்காமல் நினைவில் வைத்து கொள்வது நன்றி உணர்வு.வாழும் வாழ்க்கையில் தாய்,தந்தை,குரு,தெய்வம்,அரசன்,பெரியோர் முதலானவர்கள் செய்த நன்றியை எந்நாளும் மறவாமல் ஒழுகுதல் வேண்டும் என்பதை மேலைச்சிவபுரி முத்துராமன் தமது நூலொன்றில்
முன்னம் நீ என்னை முலையூட்டி மையிட்டு மூக்குச்சிந்தி
கன்னமும் கிள்ளிய நாளல்ல காண் என்னைக் காப்பதற்கே
அன்னமும் மஞ்சையும் போலிரு பெண்கொண்ட ஆண்பிள்ளை நீ
இன்னமும் சின்னவன் தானே செந் தூரிலிருப்பவனே
என்ற பாடலில் தாயானவள்,பத்து மாதம் கர்ப்பத்திற் சுமந்து,வருந்திப் பெற்று பல துன்பங்களை அனுபவித்து,வளர்த்து தாய்க்கு பிள்ளை என்றும் நன்றியுடன் இருக்கக் கடமைப் பட்டவன் என்று குறிப்பிடுகிறார்.இதன் மூலம் நன்றி உணர்வின் சிறப்பை அறிந்து கொள்ள முடிகிறது.
சங்க காலத்திலும் செய்ந்நன்றியறிதல் சிறந்த அறநெறியாகக் கூறப்படுகின்றது.அறமற்ற செயலாக,ஒருவர் செய்த நன்மை மறத்தலாகும்.அவ்வாறு செய்தவர்க்கு உய்தி இல்லை என்பதை
நிலம்புடை பெயர்வ தாயினு மொருவன்
செய்தி கொன்றோர்க் குய்தி யில்லென
அறம்பா டிற்றே (புறம்.34:4-5)
என்ற புறநானூறு பாடலடியால் அறியலாம்.
செய்ந்நன்றியறிதல் என்பதைத் தனக்குப் பிறர் செய்த நன்மையை மறவாமை என பரிமேலழகரும் பிறர் செய்த நன்மையை மறவாமை என மணக்குடவரும் விளக்குவர்.ஒருவர் காரணமின்றிச் செய்த உதவி,காலத்தினாற் செய்த உதவி என முந்நிலைகளை பிரித்து அவற்றின் பெருமையை வானகமும் ஆற்றலரிது,ஞாலத்தின் மாணப் பெரிது என வரையறுக்கிறார்.(கு.101,102,103)
நன்மை செய்தவர்களுக்கு செலுத்தும் மாற்றுதவி,ஒருவர் செய்த உதவியை மதித்தல் என்பன உதவி செய்யப்பட்டவர்களின் உணர்வு,சால்புடைமை போன்றவற்றைப் பொறுத்தது என்பதை இரு குறள்கள் செப்புகின்றன.(கு.104,105)
துன்பத்தை நீக்கி நன்மை செய்தவர் நட்பு எப்போதும் மறக்கற்பாலது அன்று என்பதை நட்பு துறவற்க என்றும் குறிப்பிடுகிறார்.பிறர் செய்த தீமை மறக்கப்பட வேண்டியது என்ற கருத்தை இரு குறள்களில் பதிவுசெய்துள்ளார்.(கு.108,109).இறுதி குறளில் செய்ந்நன்றி கொள்ளாமையின் தீமையை,
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு (கு.110)
என்று குறிப்பிடுகிறார்.நாலடியாரில் செய்ந்நன்றியறிதல் எனும் அதிகாரம் அமைக்கப்பெறவில்லை.ஆனால் இவ்வறத்தை மெய்ம்மை,புல்லறிவாண்மை,கீழ்மை,கயமை போன்ற அதிகாரங்கள் எடுத்துரைக்கின்றன.தம்மால் தரமுடியாத ஒரு பொருளை இரப்போர்க்கு இல்லை என்று சொல்வது செய்ந்நன்றி கொன்றாரின் குற்றம் உடைத்து (கு.111) என ஒரு பாடல் விளக்குகின்றது.
நாலடியார் கீழ்மை எனும் அதிகாரத்தில் சான்றோர் நன்றியறிவார்,கீழோர் நன்றி உணர்வில்லாதவர்கள் என்பதைக் கூறுகின்றது.
தினையனைத்தே யாயினும் செய்தநன் றுண்டால்
பனையனைத்தா உள்ளுவர் சான்றோர் - பனையனைத்து
என்றும் செயினும் இலங்கருவி நன்னாட
நன்றில நன்றறியார் மாட்டு (344)
இதுப்போன்ற கயவரும் நன்றியில்லாதவர்கள் என்பதை இரு பாடல்கள் மூலம் அற இலக்கிய ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.(355,357)
பழமொழி நானூறும் கீழ்மக்கள் இயல்பு,நன்றியில் செல்வம்,இல்வாழ்க்கை, எனும் தலைப்புகளில் செய்ந்நன்றியறிதல் பற்றிய செய்திகள் இடம்பெறுகின்றன.
இல்வாழ்க்கை எனும் தலைப்பில் செய்ந்நன்றியறிதல் குறித்துத் தம் சுற்றத்தான் என்று நினைத்து நமக்கு நாழி அரிசி கொடுத்தவன் கோபப்பட்டாலும் அதற்காக அவனை இகழாமல் அவன் செய்த உதவியை நினைத்து நன்றியுடன் இருக்க வேண்டும் (345) என்று கூறுகிறது.
மற்றொரு பாடல்களில் உதவி செய்தவர்கள் என்பதை மறந்து அவனைப் போற்றாமல்,அவனைப் போற்றாமல்,அவன் மீது கோபப்படக்கூடாது என்றும் 346 செய்த உதவியை மறந்து தீமை செய்பவன் பற்றுக் கோடின்றி அழிவது விதி 347 என்றும் கூறுகிறது.நன்றியணர்வு இன்றி உதவி செய்தவரை அவருடைய பகைவருடன் சேர்ந்து கொண்டு புறங்கூறுதல் கூடாது.கீழ்மக்கள் இயல்பு எனும் தலைப்பில் கொடியவர்க்கு நன்;மை செய்தாலும் அவர்கள் நன்றி உணர்வு அற்றவர்கள் என்ற கருத்தை கூறுகிறது.97
நன்றியில் செல்வம் எனும் தலைப்பில் உறவினர்களாலும்,நண்பர்களாலும் நேருமானால் அவர்களுக்கு உதவி செய்து வாழ்வோர் இல்லை உதவி செய்ததை நன்றியுடன் போற்றாதவர்க்கு உதவிகள் செய்தால் அவற்றால் ஒரு பயனும் இல்லை,நன்றி கொன்றவர்க்கு உதவுவதால் நன்மை இல்லை என்பதை,
தமராலும்,தம்மாலும் உற்றால், ஒன்று ஆற்றி
நிகராகச் சென்றாரும் அல்லர் - இவர் திரை
நீத்த நீர்த் தண் சேர்ப்ப செய்தது உதவாதார்க்கு
ஈத்ததை எல்லாம் இழவு (227)
நான்மணிக்கடிகையில் செய்நன்றியறிதல் பற்றி செய்திகள் இடம்பெறுகின்றன.பிறர் செய்த நன்றியை நன்றாக கொளல் (11:1) என்றும் பிறர் செய்த நன்மையை மறந்த காலத்து செய்ந்நன்றி கெடும் என்பதை நன்றி சாம் நன்றறிய தார் முன்னர் (47:1) என்றும்,நன்மை செய்தாரைவிடப் பிறர் செய்த நன்றியை மறவாதவர் மிக மேலானவர் (70:3-4) என்று குறிப்பிடுகிறது.
திரிகடுகம் நன்றிப் பயன் தூக்கா நாணிலி எச்சம் இழந்து வாழ்வார் (திரி.62) என்று செய்ந்நன்றியறிதலைக் குறிப்பிட்டமைகின்றது (1:1),இனியவை நாற்பது நன்றிப் பயன் தூக்கி வாழ்தல் நனியினிது (30) என்று ஒரிடத்தில் மட்டும் செய்ந்நன்றியறிதலை வலியுறுத்துகிறது.சிறுபஞ்சமூலத்தில் அமையும் நல்ல வெளிப்படுத்தி இயல்புடைவன் இனத்தைக் காப்பவனாகவும்,பழிவந்த விடத்து உயிர்விடுபவனாகவும் காணப்படுகின்றனர்.மேலும் அவர்கள் தீயதை மறக்க வேண்டும் என்ற கருத்தை சிறுபஞ்சமூலம் நவில்கிறது.
முதுமொழிக்காஞ்சி உள்ளொன்று வைத்து புறமொன்று பொய்யாக நடித்து செய்யப்படும் உதவி கீழ்மையிலும் கீழ்மையானது என்பதை,
பொய் வேளாண்மை புலைமையின் துவ்வாது (முது.4:6)
என்ற பாடலடியில் அறியலாம்.இன்னா நாற்பது,ஏலாதி போன்ற நூல்கள் செய்ந்நன்றியறிதல் எனும் நெறியைக் கூறவில்லை.மேற்கூறப்பட்ட கருத்திற்கு அரண் சேர்க்கும் வகையில் பிற்காலத்தில் தோன்றிய நீதி இலக்கியங்களும் இக்கருத்தைக் குறிப்பிடுகின்றன.இந்நெறியை ஒளவையார்,
நன்றி மறவேல் (ஆத்தி.21)
என்றும் மேலும் கைமாறு கருதாமல் பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்பதை,
நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் என வேண்டா – நின்று
தளரா வளர்தெங்கு தாள் உண்ட நீரைத்
தலையாலே தான் தருத லால் (மூது.1)
என்ற பாடலில் வேர் மூலம் உண்ட நீரிலை உச்சியிலே இளநீர்க் காய்களாகத் தந்து நன்றியை வெளிப்படுத்துகிறது தென்னை.அது போல நல்லவர்களும் தாங்கள் பெற்ற உதவியைத் தக்க சமயத்தில் திருப்பிச் செய்வார்கள் என்று குறிப்பிடுகிறார்.செய்த நன்றிi மறக்க வேண்டாம் என்று உலகநீதியும் இயம்புகிறது இதனை,
செய்த நன்றி ஒரு நாளும் மறக்க வேண்டாம் (உலக.8:1)
என்ற பாடலடி உணர்த்துகிறது.
முடிவுரை
இக்கட்டுரையின் வழி செய்நன்றிஉணர்வு மானிடராய் பிறந்த ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதது என்பதை அறஇலக்கியங்களின் வழி அறியமுடிகிறது.இக்கால சமுதாயத்தினரும் இந்நெறியினை உணர்ந்து செயல்படுவது சாலச் சிறந்ததாகும்.
துணைநூற்பட்டியல்
1.இராமசுப்பிரமணியம்,எம்.ஏ (உ.ஆ) பதினெண் கீழ்க்கணக்கு தொகுதி 1 செல்லப்பா பதிப்பகம், மதுரை -625001 முதற்பதிப்பு -2009
2.இராமசுப்பிரமணியம்,எம்.ஏ (உ.ஆ) பதினெண் கீழ்க்கணக்கு தொகுதி 2 செல்லப்பா பதிப்பகம், மதுரை -625001 முதற்பதிப்பு -2009
3.இராமசுப்பிரமணியம்,எம்.ஏ (உ.ஆ) பதினெண் கீழ்க்கணக்கு தொகுதி 3 செல்லப்பா பதிப்பகம், மதுரை -625001 முதற்பதிப்பு -1999
4.பத்மதேவன்,தமிழ்ப்பிரியன் (உ.ஆ) நீதி நூல் களஞ்சியம் கொற்றவை வெளியீடு சென்னை -600017 முதற்பதிப்பு -2014
5. அகராதி தமிழ் - தமிழ் அகரமுதலி சென்னைப் பல்கலைக்கழக அகராதி
6. கௌமாரீஸ்வரி .எஸ் (ப.ஆ) இனியவை நாற்பது மூலமும் உரையும் சாரதா பதிப்பகம் சென்னை – 600014 முதற்பதிப்பு -2014
7.இராசாராம்.துரை பதினெண் கீழ்க்கணக்கு (தெளிவுரை) மூன்றாம் பகுதி முல்லை நிலையம் சென்னை 17 முதற்பதிப்பு - 1995
8 நாமக்கல் கவிஞர் திருக்குறள் சாரதா பதிப்பகம் சென்னை-600014 முதற்பதிப்பு -2002
9 மாணிக்கம் .அ திருக்குறள் தெளிவுரை தென்றல் நிலையம் சிதம்பரம் -608001 முதற்பதிப்பு -1999
10 நாராயணசாமி .இரா திருக்குறள் இனிய உரை நீயூ செஞ்சுரி புக் ஹவுஸ் சென்னை -600098 முதற்பதிப்பு -1997
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
*கட்டுரையாளர்: - சு.ஜெனிபர், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி -24 -