ஆய்வுக்கட்டுரை வாசிப்போமா?சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த பெருமைக்கு உரிய மதுரையில் பிறந்த இவர், இளம் வயது முதற்கொண்டே தன்னுடைய தாத்தா, தந்தையார் வழியில் தமிழ்ப்பற்றை வரித்துக் கொண்டார். பாத்திமா கல்லூரியில் சிறப்பு தமிழ்ப்பயின்றார். மதுரை தியாகராசர் கல்லூரியில்  அ.கி.பரந்தாமனார், சுப.அண்ணாமலை போன்றோரிடமும், மதுரைப் பல்கலைக்கழகத்தில் தெ.பொ.மீ., மொ.துரையரங்கனார், விஜயவேணுகோபால் முதலான தமிழ் அறிஞரிடம் தமிழ் பயின்றதால் தமிழுணர்வும், தனித் தமிழ்ப்பற்றும் இவருக்குள் ஆழமாக ஏற்பட்டன. அரசுக்கல்லூரிகளில் தமிழ்ப்பேராசிரியராகப் பல்லாண்டுகள் பணிபுரிந்தார். 1965இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும், சாதி எதிர்ப்புப் போராட்டத்திலும் பங்கு பெற்றார். ஈழத்தமிழர்கள் பால் அன்பு கொண்ட இவர் 1980இல் ஈழத்தமிழர் ஆதரவுப்போராட்டத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். மிகச் சிறந்த படைப்பிலக்கியவாதியான இவரது சிறுகதை, நாடகம், கவிதை, கட்டுரை போன்றவை பல்வேறு இதழ்களில் வெளியாகியுள்ளன.

ஆசிரியர்ப்பணி:
தமிழறிவும் தமிழ்ப்பற்றும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே தமிழ் தழைக்கும் என்பது இவரது கருத்து. விளைநிலங்களாகிய மாணவர் சமுதாயத்திற்கு, தமிழ்ப்பற்று, தமிழறிவு எனும் உரமிட்டு செழித்து வளம் பெறவேண்டும் என்பது இவரது நிலைப்பாடு. கற்பித்தல் பணியில் முழுமையாக ஈடுபட்ட பல ஆசிரியருள் இவரும் ஒருவர். வழக்கமான ஒரு தமிழ்ப்பேராசிரியர் போல் அல்லாமல் தனக்கென ஒரு பாதை வகுத்துக்கொண்டு, மாணவர்களிடம் நேசமும் தமிழ்உணர்வைத் தட்டியெழுப்புவதுமாய் இவரது தமிழ்ப்பணி அமைந்தது. காலங்காலமாய் ஒடுக்கப்பட்டு வந்த தமிழ்த்துறைக்கும் தமிழ் மாணவர்களுக்கும் தமிழ் என்பது உரிமையுணர்வு, தன்மதிப்புமிக்கது என்பதைப் புரிய வைத்து செயல்படுத்தினார் (த.நே.41.ப.26)

மாணவர்கள் புதியவற்றைப் படிக்கும் வகையில் ஆண்டுக்கொருமுறை  பாடத்திட்டத்தை மாற்றியமைத்தார். இதழியல், இலக்கியத் திறனாய்வு, படைப்பிலக்கியம் போன்ற பாடப்பகுதிகளைக் கற்பித்ததோடு செய்முறைப் பயிற்சியும் கொடுத்து மாணவியர்களை ஊக்குவித்தார் இதனால் மாணவியர் படைப்பாக்கத்தில் திறன்பெற்றனர். மாணவர்களைக் கொண்டு சிற்றிதழ் நடத்தினார். தாழ்த்தப்பட்ட மாணவியருக்காகவே பெரிதும் செயலாற்றினார். முத்தமிழ் விழாவை அனைத்துறையினரும் பங்கேற்கும் பொதுவிழாவாக நடத்தினார். கல்லூரி மாணவர்களும் பொதுமக்களும் இவரது தமிழ்ப்பணியைப் போற்றினர். புதுக்கோட்டை தமிழ் இலக்கியப் பேரவை இவரைப் ‘புதுக்கோட்டையின் புகழ்மாமணி’ களுள் ஒருவர் எனச் சிறப்பித்து  ‘தமிழ்த்தென்றல்’ எனும் விருதளித்து மரியாதை செய்தது. (மேலது, ப.35)

ஆய்வுப்பணி:
கல்லூரியில் பணிபுரியும் காலத்திலேயே ‘இராஜம் கிருஷ்ணனின் புதினங்களில் சமுதாய மாற்றம்’ (1991)பற்றியும், சு.சமுத்திரத்தின் ‘சிறுகதை இயக்கம்’ (1998) பற்றியும் ஆய்வுநூல் வெளியிட்டார். இவர் காலத்தில் இவர்கள் புகழ்மிக்க எழுத்தாளர்களாக இருந்தனர் என்பது மட்டுமல்லாமல் பிற எழுத்தாளர்களிடமிருந்து வேறுபட்டும், முற்போக்குச் சிந்தனையும் கொண்டிருந்தனர் என்பதன் காரணமாக அவர்களைத் தெரிவு செய்து எழுதினார். பெண்ணிய விடுதலையே சமன்மைச் சமுதாயத்துக்கு வழிவகுக்கும் என்பதை இராஜம் கிருஷ்ணன் புதினங்கள் தெளிவாக்கியுள்ளது. பெண்விடுதலை என்ற பெயரில் குடும்பங்களின் சீரழிவும், சிதைவும் சமன்மை ஆகாது என்ற கருத்து ராஜம் கிருஷ்ணன் புதினங்களின் வாயிலாக வலியுறுத்தப்பட்டுள்ளது.  திருமண உரிமை பெண்களின் அடிமைத் தளையைச் சற்று தளர்த்தியதெனக் கொள்ளலாம். பெண் விடுதலை வேண்டிய பாரதியும் அதை அடைவதற்கு உரிய வழிகளுள் ஒன்றாகப் பெண்களுக்குத் திருமண உரிமையை வற்புறுத்துகின்றார்.

ஒரு கருத்தைச் சொல்வதற்காகத்தான் கதை எழுதுகிறேன் என்ற சு.சமுத்திரத்தின் படைப்பு, சமுதாயச்சிந்தனையுடன், சிக்கல்களையும், தீர்வுகளையும் வெளிபடுத்தும் முறையில் அமைந்துள்ளன. இவரது ஆய்வு குறித்து சு.சமுத்திரம் கூறுவதாவது: “என் படைப்புகள்  குறித்து, இவர் (நளினிதேவி) எழுதிய இந்த நூலை  எனக்குக் கிடைத்த பெரும் இலக்கிய மரியாதையாகக் கருதுகிறேன். (சு.சமுத்திரதின் சிறுகதை இயக்கம், என்னுரை) என்கிறார். சு.சமுத்திரம் படைப்புகள் பற்றி, நா.வானமாமலை, வல்லிக்கண்ணன். எஸ்.ராமகிருஷ்ணன். கா.சிவத்தம்பி, செந்தில்நாதன்,  கோவை ஞானி முதலானோர் ஆய்ந்துரைத்துள்ள நிறைகளையும், குறைகளையும் நூல் மதிப்பீடு செய்துள்ளது.  இதனைப் படைப்பாளரே நூலின் என்னுரையில் பின்வருமாறு கூறுகின்றார்.  முனைவர் நா.நளினிதேவி அவர்கள் அயராது உழைத்து உருவாக்கிய இந்நூல் என் படைப்புகளின் நிறைகுறைகளை நான் அறிந்து கொள்ளப் பெரிதம் உதவியிருக்கிறது.  எனவே பேராசிரியை நளினிதேவி அவர்களுக்குப் பெரிதும் நன்றிக் கடன் பட்டுள்ளேன்.

பணிநிறைவிற்குப் பின்பு வெளிவந்துள்ள ‘தமிழ்இலக்கியம் மரபும் புதுமையும்’, படைப்பிலக்கியப் பார்வையில் ‘தமிழ் இலக்கிய வரலாறு’ எனும் நூல்கள் தமிழ்இலக்கிய ஆய்வுலகில் குறிப்பிடத்தக்கவை.

‘மரபும் புதுமையும்’ (2008) என்பது இவரது சிறந்த ஆய்வுநூல். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, ‘உண்டாலம்ம இவ்வுலகம்’, ‘உண்பது நாழி’, ‘உடுப்பவை இரண்டே’ முதலிய பேரறங்கள் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றன. இத்தகைய அறஉணர்வு காலந்தோறும் எல்லாத் தமிழிலக்கியங்களிலும் நீரோட்டாமாய் நிலவுகின்றன. இந்தத் தமிழ் மரபு, புதுமைகளையும் பெற்றுத் திகழ்கிறது. இத்தகைய ஆய்வு கருத்தை முன்வைத்து எழுதப்பட்ட இந்த நூல் ‘மரபும் புதுமையும்’ இன்றைய சூழலில் தமிழைக்காத்து வளர்க்கும் பொறுப்பில் தமிழியல் ஆய்வாளர்களுக்கு இந்த நூல் ஒரு கைவிளக்காகப் பயன்படும் என்பதில் ஐயமில்லை” (மரபும் புதுமையும், அணிந்துரை) என்கிறார் கோவை ஞானி.

‘படைப்பியல் நோக்கில் தமிழிலக்கிய வரலாறு’ (2012) என்பது இவரது தலைசிறந்த ஆய்வுநூல். வழக்கமான தமிழிலக்கிய வரலாறு போல் அல்லாமல் தமிழ்ப்படைப்பிலக்கிய வரலாறாக இந்தநூல் திகழ்கிறது. தமிழகத்தில் மூன்று சங்கங்கள் இருந்தன என்ற கருத்தில் இவருக்கு உடன்பாடில்லை. ஆகவே சங்கஇலக்கியம் என்பதை இயற்கைநெறி இலக்கியம் என்று குறிப்பிடுகிறார். அதுபோலவே, பக்திஇலக்கியம் என்பதைத் தனித்தமிழில், இறைநெறி இலக்கியம் என்று கூறுகிறார் இயற்கைநெறி இலக்கியம் போலவே இறைநெறி இலக்கியமும் தமிழுக்கு வளம் சேர்ப்பவை. படைப்பிலக்கியத்தை முன்வைத்து எழுதப்பட்ட தலைசிறந்த நூலாக இந்த நூல் திகழ்கிறது. இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கிய பேராசிரியர் மருதநாயகம் இந்த நூல் ஆங்கிலத்தில் வரும் தகுதியுடையது என்று எழுதியுள்ளார்.

இருபதாம் நூற்றாணடில் புதுமைகள் எனக்கொள்ளப்படும் தலித்தியம், பெண்ணியம், பின்நவீனத்துவம், இருத்தலியம் போன்றவை பழந்தமிழ் இடைக்கால இலக்கியங்களில் காணப்படுவதை இந்த நூல் சுட்டிக்காட்டியுள்ளது. பெண்ணியப்பார்வையாகவும், விளிம்புநிலை மக்கள் பார்வையாகவும், படைப்பிலக்கியப்பார்வையாகவும் விரிகின்ற நா.நளினிதேவியின் தமிழ் இலக்கியவரலாறு இதுவரை வெளிவந்துள்ள தமிழ்இலக்கிய வரலாறுகளிலிருந்து வேறுபட்டுத் தனித்து நிற்பதோடு, இனி இலக்கிய வரலாறுகள் தமிழில் எவ்வாறு எழுதப்படவேண்டும் என்பதற்கு முன் மாதிரியாகவும் திகழ்கிறது. (படைப்பியல் நோக்கில் தமிழிலக்கிய வரலாறு, அணிந்துரை) என்கிறார் மருதநாயகம்.

ஈழத்தமிழ் எழுத்தாளரும் இலக்கியப் போராளியுமான எஸ்.பொவின் (எஸ்.பொன்னுத்துரை) அனைத்துப் படைப்புகள் பற்றி நளினிதேவி எழுதிய ஆய்வுநூல் - ‘இலக்கியப் போராளி எஸ்.பொ – படைப்பும் பன்முகப் பார்வையும்’  - (2016) என்பதாகும். எஸ்.பொ.வின் படைப்புகளில் முக்கியமாக ஈழமும், ஈழத்தமிழர் வாழ்க்கையுமே அடங்கியுள்ளன. என்றாலும் அவை மனிதம் பற்றியவை என்றவகையில் தமிழ் மண்ணின் பொதுச்சொத்து  என்கிறார்.  எஸ்.பொ. என்ற ஒதுக்கப்பட்ட உதைக்கப்பட்ட மனிதனின் ‘வரலாற்றில் வாழ்தல்’ நூல் வழியே வரலாற்றில் வாழும் மாமனிதராய் இமாலய வெற்றியைப் பெற்றுவிட்டார் என்பதாக இவரது ஆய்வு அமைகிறது. இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிய தமிழறிஞர் ஞானி: “நளினிதேவி அவர்களின் பெயரைத் தமிழிலக்கிய வரலாறு இந்த நூல் மூலமும் பதிவுசெய்து கொள்ளும் என நம்புகிறேன். தமிழ் அறிஞர்ப் பெருமக்களும் இந்த நூலைப் பயில்வதன் மூலம் எஸ்.பொ. அவர்களைப் பற்றி மேலும் சிறப்பாக அறிந்து கொள்வார்கள் என்றும் நம்புகிறேன்” முற்றிலும் திறனாய்வு நோக்கில் அமைந்துள்ள இந்த நூல் தமிழுக்கு ஒரு புது வரவாக அமையும். மேற்கண்ட மூன்று நூல்களும் காவ்யா வெளியீடாகும்.

இதே போல இன்னொரு நூல் ‘நெஞ்சக்கதவை மெல்ல திறந்து’ – ஒரு பேராசிரியரின் தன் வரலாறு (2016)– நளினிதேவியின் தமிழுணர்வும் வாழ்வியல் சிக்கலும் குறித்த ஒரு புதினம் இந்த நூல். தமிழ்ப்பேராசிரியர் என்ற முறையில் தமிழோடு வாழ்ந்தவர். சுமார் 500பக்க அளவில் அமைந்த இப்புதினம் அண்மையில் வெளியீடாக வந்துள்ளது. தற்பொழுது வெளிவந்துள்ள இன்னும் ஒரு நூல் ‘ஞானியின் கவிதைக்கொள்கை’ (2016) பற்றியது. ஞானியின் கவிதை இலக்கியம் பற்றிய கட்டுரைகளிலிருந்து ஞானியின் கவிதைக்கோட்பாட்டை எடுத்து விளக்கும் நூல். மேற்கண்ட இவ்விரு நூல்களும் புதுப்புனல் வெளியிடாகும்.

இவரால் எழுதப்பட்டு இன்னும் அச்சில் வராத சில நூல்கள் பற்றிக் குறிப்பிடுவதில் தவறில்லை என்று கருதுகிறேன். ‘தமிழின் ஒரு பேரிலக்கியம்  புறநானூறு’(2017) என்பதைக் கருத்துச்செறிவுடன்  எளிய தமிழில் அழகிய நடையில் நிறுவும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். மேலும் சில நூல்கள் வெளிவரலாம். ஐம்பதிற்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளையும் வழங்கியுள்ளார். இவை மட்டுமன்றி  ‘தாமரை’, ‘பெண்ணியம்’, ‘தமிழ்நேயம்’, ‘சிற்றேடு’, ‘புதுப்புனல்’ போன்ற இதழ்களிலும் இவரது கட்டுரைகள்  இடம்பெற்று வருகின்றன. இவர் தமது வாழ்வில் கண்ட அசாத்தியமான துணிச்சல் கொண்ட  பெண்களின் வாழ்வியலை  கதையாக புதுப்புனலில் அக்கம் பக்கம் என்ற பகுதியில் எழுதி வருகிறார்.  இப்பகுதி அனைவராலும் விரும்பி படிக்கப்படுகிறது.

பெண்ணிய சிந்தனை:-
இவரது பெண்ணிய பார்வை தனிச்சிறப்பானது. பெண்கள் அழகு பதுமைகள் அல்ல. ஆணின் காமஉணர்வுக்குப் பலியாகும் பேதைகளும் அல்ல. ஆணைப்போலப் பெண்ணும் ஒரு மனிதன் / மனு. காதல் உணர்வு ஆணுக்கு மட்டும் உரியதன்று. பெண்ணுக்கும் உரியது. அதைச் சுதந்திரமாக வெளியிடும் உரிமையும் பெண்ணுக்கு உண்டு. சங்க இலக்கியங்களில் கூறப்படும் பரத்தையர் இத்தகைய சுதந்திரம் உடையவர் காரைக்கால் அம்மையார், அவ்வையார், மணிமேகலை போன்ற மகளிர் தமிழ்வரலாற்றைச் செழுமைப்படுத்தியவர்கள். இலக்கியப் படைப்புகளினுள் மறையுண்ட இவர்களது வாழ்க்கையை வெளிப்படுத்தும் முயற்சி தேவை என்கிறார்.  இவரது குடும்ப உறவுகளில், அக்கம் பக்கங்களில்  ஆண்துணையின்றி தனியொருவராய் நின்று சிக்கல்களை எதிர்கொள்ளும் பெண்களின் வாழ்க்கைச் சூழலை இவரது எழுத்துகள் மூலம்  காத்திரமாக  வெளிப்படுத்தியுள்ளார்.  “பெண்கள் தம் அடிமை நிலையை உணர்ந்து தம் அளப்பரிய ஆற்றலைப் பயன்படுத்தினால் மட்டுமே சமநிலை பெறஇயலும். பெண்நோக்கு, பெண்மொழி, தற்சிந்தனை, தெளிவு, துணிவு, உறுதி ஆகிய கருவிகளுடன் பெண்கள் களத்தில் இறங்கவேண்டும்” என்கிறார். (www.penniyam.com/2010/02/blog-post-21.lit. பா.நாள்.23.02.2016).  இவர் எழுதி பல்வேறு இதழ்களில் வெளிவந்த ஆய்வுக்கட்டுரைகள் சில தனித் தொகுதிகளாக வெளிவரும் தகுதியுடையவை. மேலும் இவர் எழுதிய கவிதைகள், சிறுகதைகள், நாடகங்கள் முதலியனவும் இன்னும் அச்சில் வெளிவரவில்லை.

தனித்தமிழ்ப்பற்று:
தமிழே நீ ஓர் பூக்காடு, நான் அதிலோர் தும்பி எனும் தமிழ்ப்பற்று மிக்க பாரதிதாசனைப் போன்று தமிழுணர்வு கொண்டு, தமிழுக்கு ஆக்கம் சேர்க்கும் பணிகளைச் செய்ய வேண்டும் என்று செயலாற்றும் பலருள் நா.நளினிதேவி அவர்களும் ஒருவர்,  தமிழ் எங்கள் உயிர் எனக் கொள்ளும் அதேசமயம் ஆய்வு நெறிமுறைகள் வகுக்கப்படாத காலத்தில் கொள்ளப்பட்ட தமிழின் தொன்மை குறித்த அறிவுக்கும் ஆய்வுக்கும் பொருந்தாத செய்திகளைக் கைவிட்டுத் தமிழின் பழைமையை நிறுவ வேண்டும் என்ற கொள்கையாளர்களில் ஒருவர் இவர்.  தமிழ் இலக்கியத்தின் தொன்மையை வரலாற்றில், அகழ்வியல், நிலவியல், நீரியல் முதலிய சான்றுகளுடன் நிறுவினால் தான் ஆய்வுலகு ஏற்றுக் கொள்ளும் என்ற இன்றைய நிலையை அறிந்து அதற்கேற்ற வகையில் ஆய்வுகளும் மீளாய்வுகளும் தேவை என்பாருள் இவரும் ஒருவராவார்.

தமிழறிஞர் ஞானி, “நா.நளினிதேவியின் தமிழ்நடை எளிமையும் செறிவும் மிக்கது. அன்றியும் முழுமையும் தனித்தமிழ்நடை அவருக்கு மட்டுமே வாய்ந்த தமிழ்நடை” என குறிப்பிடுகிறார். (தமிழிலக்கிய மரபும் புதுமையும், அணிந்துரை)

முத்து சீனிவாசன், இவர் பேசும் தமிழ் குறித்து குறிப்பிடுவதை இங்குச் சுட்டுவது தகும்: “இவர் மேடையில் பேசும்போது தமிழ் கொஞ்சி விளையாடும். அவரது தமிழ் வர்ணனைகள் மாணவியரை வசப்படுத்தும். பெண்ணியம் காக்கப்பட எண்ணயபடியே இருக்கும். இக்கண்ணியம் மிக்கப் பேராசிரியையின் தமிழ்ப்பணி தொடரட்டும் அவரது தமிழ் இலக்கியப்படைப்புகள் தமிழுக்குப் பெருமை சேர்க்கட்டும்.” (மேலது, v,xi).

கடந்த 2015ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் மலாயாப் பல்கலைக்கழக இந்தியவியல் துறையும் இணைந்து வாழ்ந்த, வாழும் தமிழறிஞர்களின் சிறப்புமிக்க பணியினை ஒரு வரலாற்று ஆவணமாகப் பதிவு செய்து, இன்றைய மற்றும் வருங்கால தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் பணியினை மேற்கொண்டன. இதில் ‘தமிழறிஞர் நா.நளினிதேவி’ அவர்களின் வாழ்வும் பணியும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பன்முகத்திறன் மிக்கவர். தனித்தமிழில் இவரது படைப்புகள் அனைத்தும் எழுதப்பட்டுள்ளன. பாராட்டுகள், விருதுகள் என்பனவற்றை இவர் விரும்புவதில்லை. இவரது தமிழ் வாழ்வும், படைப்பிலக்கியங்கள் பால் கொண்ட  அக்கறையும் பிற தமிழ்ப்பேராசிரியமிருந்து இவரைப் பிரித்துக் காணும் தன்மையுடையவை. தமிழ் வாழ்வாகவே தன் வாழ்வை அமைத்துக் கொண்ட திறம் பாராட்டுக்குரியது. காது அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் மேற்கொண்ட தவறானசிகிச்சையினால் இவருக்கு கேட்கும் திறனும் பேசும் திறனும் குன்றியது. சோர்ந்து போகாமல் தொடர்ந்து மருத்துவம் மேற்கொண்டு வந்தாலும் தமிழ்ப்பணியாற்றுவதில் தம்மை முழுமையாக இணைத்துக் கொண்டு மகிழ்ச்சியடைகிறார். வாழும் தமிழறிஞரான இவரது பணிகளை உலக தமிழர்களும் அறிந்து கொள்ளும் வகையில் இவரைப் பற்றிய அறிமுகமாக இக் கட்டுரை அமைகிறது.

துணைநின்ற நூல்கள்:

1. தமிழிலக்கிய மரபும் புதுமையும், காவ்யா, 2008.
2. தமிழ்நேயம் இதழ் -  41, 2011.
3. படைப்பியல் நோக்கில் தமிழிலக்கிய வரலாறு , காவ்யா, 2012.
4. இலக்கியப் போராளி எஸ்.பொ - படைப்பும் பன்முகப் பார்வையும், காவ்யா 2016.
5. தமிழறிஞர் நா.நளினிதேவி, ர.ஜோதிமீனா, 2015.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

* அருள்செல்வன் வைரமுத்து.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R