உண்மை உரைக்கும் ஊடகவியலாளர் நந்தன வீரரத்ன! - நந்திவர்மப் பல்லவன் -
இலங்கை சுதந்திரமடைந்து சென்ற ஆண்டு அநுர குமார திசாநாயக்க ஆட்சியில் அமரும் வரையிலான காலகட்டம் பாரம்பரிய இலங்கை அரசியல்வாதிகளால் இனவாதம், மதவாதம், தேசியவாதம் ஆகியவற்றைப் பாவித்து அதிகாரத்தைக் கைப்பற்றும் காலகட்டமாக இருந்துள்ளது. பிரதான ஊடகங்களின் சூத்திரதாரிகளாக மேற்படி அரசியல்வாதிகளே இருந்து வந்தனர்.அதனால் நாட்டு மக்களுக்கு, குறிப்பாகத் தென்னிலங்கை மக்களுக்கு நாட்டின் வடகிழக்கில், மலையகத்தில் , தமிழ், முஸ்லிம் மக்கள் சம்பந்தப்பட்ட அரசியல் இவையெல்லாம் பற்றிய உணமை நிலை தெரியாததொரு சூழல் நிலவியது. இன்று முதன் முறையாக அந்தச் சூழல் மாறியுள்ளது. இது வரவேற்கத்தக்க, ஆரோக்கியமானதொரு சூழல். இச்சூழல் தொடர்ந்தும் நிலைத்திருப்பதே நாட்டின் நல்லதோர் எதிர்காலத்துக்கு அவசியம்.
இதன் விளைவே முக்கியமான சிங்கள ஊடகவியலாளர்களில் ஒருவரான நந்தன வீரரத்தினவின் , அண்மையில் வெளியான, இரு நூல்கள்: யாழ்ப்பாணத்தை தீயிடுதல் 1981 - ஒரு வன்முறை அரசின் ஆரம்பம், கறுப்பு ஜூலை - வன்முறை அரசின் ஏழு நாட்கள். இவை சிங்கள மொழியில் வெளியான நூல்களின் தமிழ் மொழிபெயர்ப்புகள். தமிழ் மொழிபெயர்ப்பாளர் - செல்லையா மனோரஞ்சன்.