- தமிழறிஞர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் -
முன்னுரைதமிழில் முத்திரை பதித்த மூத்த தமிழறிஞர். பள்ளி சென்று கல்வி கற்காமலே கற்றவரை வியப்பிலாழ்த்தியவர். முந்தைய தலைமுறையினருக்கு செந்தமிழ்ப் பற்றினை ஊட்டியவர். முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் அவர்கள் திருச்சியைச் சார்ந்தவர். இவர் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்ப் போராளி ஆவார். தமிழுக்கு இவர்ஆற்றிய பணிகள் அளப்பரியன. 23 தமிழ் நூல்களை தமிழிலக்கிய உலகுக்கு வழங்கியுள்ளார்.
கி.ஆ.பெ அவர்களின் நூல்கள்
கி.ஆ.பெ அவர்கள் 1899ஆம் ஆண்டு திருச்சியில் பிறந்தவர். இவரது பெற்றோர் பெரியண்ணபிள்ளை, சுப்புலட்சுமி ஆவர். கி.ஆ.பெ.விஸ்வநாதம் அவர்கள் அறிவுக் கதைகள், அறிவுக்கு உணவு, ஆறு செல்வங்கள், எண்ணக்குவியல், எது வியாபாரம்?எவர் வியாபாரி?, எனது நண்பர்கள், ஐந்து செல்வங்கள், தமிழ் மருந்துகள், தமிழ்ச்செல்வம், தமிழின் சிறப்பு, திருக்குறள் கட்டுரைகள், திருக்குறள் புதைபொருள்-பாகம்1, திருக்குறள் புதைபொருள்-பாகம் 2, திருக்குறளில் செயல்திறன், நபிகள் நாயகம், நல்வாழ்வுக்கு வழி, நான்மணிகள், மணமக்களுக்கு, மாணவர்களுக்கு, வள்ளலாரும் அருட்பாவும், வள்ளுவரும் குறளும், வள்ளுவர் உள்ளம், வானொலியிலே ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
விசாலமான பார்வை
‘அகர முதல எழுத்தெல்லாம்’ என்ற குறளுக்கு விளக்கம் கூறும் கி.ஆ.பெ அவர்கள் இது தமிழ் எழுத்துக்களை மட்டும் குறிப்பதல்ல. மலையாளம், கன்னடம், தெலுங்கு, இலத்தீன், கிரீக், ஆங்கிலம், பிரெஞ்சு, உருது, சமஸ்கிருதம், இந்தி போன்ற எல்லா மொழிகளின் எழுத்துக்களையும் குறிக்கும் என்கிறார்.
“‘அகர முதல எழுத்தெல்லாம்’ என்பது தமிழ் எழுத்துக்களை மட்டும் குறிப்பதல்ல. மலையாள எழுத்திலும் முதல் எழுத்து ‘அ’, கன்னடத்திலும் முதல் எழுத்து ‘அ’, தெலுங்கிலும் முதல் எழுத்து ‘அ’, இலத்தீன், கிரீக், ஆங்கிலம், பிரெஞ்சு முதலிய மேல்நாட்டு மொழிகளிலும் முதல் எழுத்து ‘அ’. உருதுவிலும் முதல் எழுத்து ‘அ’. சமஸ்கிருதத்திலும் முதல் எழுத்து ‘அ’.நேற்று முளைத்து நடமாட வந்திருக்கும் இந்தியிலும் முதல் எழுத்து ‘அ’. ஆகவே ‘அகர முதல எழுத்தெல்லாம்’ என்பதற்கு ‘தமிழ் எழுத்தெல்லாம்’ என்று பொருள் கொள்ளாமல் எழுத்து என்று எழுதப்பெறுகிற எழுத்தெல்லாம் என்று பொருள் காண்பதே சிறப்பாகும்”(தி.புதைபொருள்முதல்பாகம்-:பக்.37).
என்று குறளுக்குக் கூறும் விளக்கம் அவரது விசாலமான ஆய்வுப் பார்வையை முன்வைக்கிறது. தமிழ் மொழியை மட்டும் எடுத்துக் கொள்ளாது இந்திய அளவில் கொண்டு செல்லும் பரந்த நோக்கு குறிப்பிடத்தக்கது.
பரிமேலழகரை மறுத்தல்
“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு”
என்ற குறளுக்கு விளக்கம் கூறும் கி.ஆ.பெ அவர்கள் “பரிமேலழகரும் அவரைத் தழுவிய பிறரும் எடுத்த எடுப்பிலேயே செய்த தவறெல்லாம், ‘பற்றற்றான்’ என்பதற்கு ‘இறைவன்’ என்று பொருள் கண்டதேயாகும். அதன் பொருள் ‘இறைவன்’ அல்ல. ‘துறவி’ என்பதே.
இவ்வுலகப் பற்றைத் துறந்த துறவியை முதலிற் பற்று. பிறகு அவன் பற்றியிருக்கிற இறைப்பற்றைப் பற்று. அப்போது இவ்வுலகப் பற்று எளிதில் விடும் என்பது இக்குறளில் புதைந்து கிடக்கும் பொருளாகும். இப்பொருள்தான் சரி என்பதற்கு நமக்குக் கிடைத்த புறச்சான்று ஒன்று உண்டு. அது சைவ சமய நூல்களும் பிற சமய நூல்களும் ஞானசிரியனைப் பற்றியே இறைவனைப் பற்ற வேண்டும் எனக் கூறி இருப்பதேயாம்” (தி.புதைபொருள்முதல்பாகம்:பக்.42) என்று குறிப்பிடுகிறார்.
பரிமேலழகர் உரையை மறுத்து மிகவும் ஆழமாக ‘பற்றற்றான்’ என்பது துறவியையே குறிக்கும் என்பதற்கு இக்குறள் துறவி என்ற தலைப்பில் அமைந்துள்ளது. மற்ற ஒன்பது குறள்களும் துறவியைப் பற்றியே அமைந்துள்ளன என்பதால் இக்குறளும் துறவியைப் பற்றியதாகும் எனவும் விரிவாக ஆராய்கிறார்.
ஆழமாகப் பொருள் காணுதல்
“உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு”
என்ற குறளைப் பற்றி ஆய்வு செய்யும் கி.ஆ.பெ அவர்கள் ‘இழந்த’என்ற சொல்லுக்கு ‘நழுவிய’ என்று பொருள் காணும் பரிமேலழகரை மறுத்து ‘பறிகொடுத்த’ என ஆழமான பொருள் கொள்ளுகிறார்.
“ஆடை நழுவியபோது மனிதன் தன் கைகளுக்கு விண்ணப்பம் செய்து கொள்வதில்லை. அவன் கேளாமலேயே அவனது கைகள் விரைந்து சென்று நழுவிய ஆடையைப் பிடித்து இடையிற் கட்டி விடுகின்றன. அது போல நண்பனுக்கு இடையூறு ஏற்பட்ட பொழுது அவன் கேளாமலேயே வலியச்சென்று, அவனது இடரைப்போக்கி, உதவி செய்ய வேண்டும் என்பதாம்.
பரிமேலழகரும் பிறரும் இவ்வாறே பொருள் கண்டிருக்கிறார்கள். கருத்திற் பெரும்பிழை இல்லை. எனினும் பொருளிற் பெரும்பிழை காணப்படுகிறது. ‘இழந்த’ என்ற சொல்லிற்கு ‘நழுவிய’ என்று பொருள் கண்டவர் எவ்வளவு பெரியவராயினும் அவர் தவறு செய்தவரேயாவார். உண்மையில் ‘இழந்த’ என்பதற்குப் ‘பறிகொடுத்த’ என்பதே பொருள். இழவு, இழப்பு, இழத்தல் என்பனவும் இப்பொருளையே குறிப்பனவாம்” (தி.புதைபொருள்முதல்பாகம்:பக்.43)
கி.ஆ.பெ அவர்களின் விளக்கத்திலிருந்து ஆழமான பொருள் காணும் அவரது நுட்பமும், பிறர் உரைகளை ஆழக்கற்ற அறிவும் புலப்படுகிறது.
வள்ளுவர் உள்ளம்
வள்ளுவர் உள்ளம் என்ற நூலில் கி.ஆ.பெ அவர்கள் திருவள்ளுவரின் உள்ளம் திருக்குறளில் வெளிப்படும் தன்மைகளை ஆய்வு செய்கிறார். ஒவ்வொரு குறளிலும் அவரது மனம் என்னென்ன சிந்தனைகளை வெளியிட்டுள்ளது என்பது சிறப்பாக உள்ளது. அவரது உண்மையுள்ளம் பற்றிக் கூறும்போது ,
“வள்ளுவர் பொய் நிறைந்த உள்ளத்தைப் பார்த்து ஒரே இருட்டாக இருக்கிறது என்கிறார். அந்த இருட்டைப் போக்க ஒரு விளக்குத் தேவை என்கிறார். இப்பொழுதுள்ள குத்துவிளக்கோ, மின்சார விளக்கோ பொய் சொல்லும் உள்ளத்தில் இருட்டைப் போக்க முடியாது என்கிறார். பொய்யுள்ளம் எப்போதும் இருட்டாகவே இருக்குமாம். உண்மை பேசுவோர் உள்ளமே ஒரு நல்ல விளக்காம். இந்த விளக்கு இருப்பதனால் அவர்கள் உள்ளத்தில் இருட்டு எப்போதும் வருவதில்லையாம். இக்கருத்துக்கள் அடங்கிய குறள் ஒன்று,
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்கு
பொய்யா விளக்கே விளக்கு
என்பது. என்ன ஆராய்ச்சி! எவ்வளவு பக்குவப்பட்டது வள்ளுவர் உள்ளம் பாருங்கள்! பொய் சொல்லாதவருடைய உள்ளம் வெளிச்சமாக இருக்கின்றதாம். சூரிய வெளிச்சம், சந்திர வெளிச்சம், குத்து விளக்கு வெளிச்சம், மின்சார விளக்குகளின் வெளிச்சம் ஆகியவைகள் ஊடுருவி ஒளிபெறச் செய்ய முடியாத உள்ளத்தை உண்மை எனும் விளக்கு ஒன்று ஒளிபெறச் செய்கிறதாம்.”(வள்ளுவர் உள்ளம்:பக்.23)
திருவள்ளுவரின் உள்ளம் உண்மையுள்ளத்தை விளக்காகவும் பொய்யுள்ளத்தை இருட்டாகவும் காண்கிறது. உண்மையிருப்பவர்களிடமே ஒளியிருக்கும். உண்மையில்லாதவர்களிடம் இருளே நிறைந்திருக்கும் என்பது வள்ளுவரின் உள்ளம்.
திருக்குறள் கட்டுரைகள்
திருக்குறள் கட்டுரைகள் என்ற நூலில் சான்றாண்மை என்ற சொல்லுக்கு விளக்கம் கூறும்போது “திருக்குறளில் சான்றாண்மையானது, அவ்வதிகாரத்தில் மட்டுங் கூறப்படவில்லை; அந்நூல் முழுவதுமே சான்றாண்மையாகக் காட்சியளிக்கிறது. சான்ற, சான்று, சான்றவர், சான்றோர், சான்றோரான் என்ற சொற்களைப் பலவிடங்களிற் காணலாம். நாட்டாண்மை, நகராண்மை, ஊராண்மை, வாளாண்மை, வேளாண்மை, போராண்மையெல்லாங் கண்ட வள்ளுவர், அவற்றைச் சிறிதாக்கிப் பிறர்மனை நோக்காத பேராண்மை என்று ஒரு பெரிய ஆண்மையைக் கூறியிருப்பது ஆணுக்கு அறமும், ஆண்மைக்கு இலக்கணமும் ஆகும். எந்தக் குற்றஞ் செய்தாலும் பொறுக்கின்ற தாய் முன்பு கூடக் குடிகாரன் வெறுக்கப்படுவானெனில், ஒரு சிறு குற்றமும் பொறாத சான்றோர் முன்னே அவன் என்னாவான்? என்று வள்ளுவர் நம்மிடம் வந்து கேட்கிறார். அது மட்டுமன்று; குடிகாரனிடம் சென்று ‘தம்பி நீ சான்றோரால் வெறுக்கப்பட வேண்டுமானால் குடி; என்றுங் கூறுகிறார். எத்தனையோ விளக்குகளைக் கண்டும், அவன் சிறந்த ஒளிகளைப் பார்த்தும் வள்ளுவர் அவற்றைப் போற்றாமல் , சான்றோர் உள்ளத்தே தோன்றும் பொய்யா விளக்கே விளக்கு என வியந்து கூறுகிறார். தன் மகனை ஈன்ற பொழுதைவிடச் ‘சான்றோன்’ எனப் பிறருங் கூறக்கேட்ட பொழுதுதான், ஒரு தாய் பெருமகிழ்ச்சியடைவாளாம். இதைக் கூறும்பொழுது தாயின் மகிழ்ச்சியை விட வள்ளுவர் அடையும் மகிழ்ச்சியே நமக்குப் பெருமகிழ்ச்சியை அளிக்கிறது”(திருக்குறள் கட்டுரைகள்:பக்.15) என்கிறார். இதிலிருந்து எந்தச் செய்தியையும் நூல் முழுதும் அலசிப்பார்க்கும் கி.ஆ.பெயின் நுட்பமும், சொற்களை வள்ளுவர் கையாண்ட திறனையும் நூலில் தெளிவாக வெளியிடுகிறார்.
திருக்குறளில் செயல்திறன்
திருக்குறளில் செயல்திறன் நூலில் வள்ளுவர் செயல்திறன் பற்றிக் கூறியுள்ள சொற்கள், அதிகாரங்கள் பற்றியும் விரிவாக ஆராய்கிறார். திருவள்ளுவர் செய்திகளைக் கூறியுள்ள முறைமைகளைக் குறிப்பிடும்பொழுது “திருவள்ளுவர் கருத்துக்களைக் கூறும் முறை ஒரு தனிமுறை, அது ஒன்றை மிக மிக உயர்த்திக் கூறி மற்றொன்றால் அதை அழித்துக் காட்டுவது; இராவணனின் வீரத்தைப் புகழ்வதெல்லாம் இராமனின் வீரத்தை உணர்த்தவே என்பது போல,
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும் (குறள்.380)
வள்ளுவர் ஊழின் வலிமையை மிக மிக உயர்த்திக்காட்டியிருப்பதெல்லாம் முயற்சியின் அருமையையும் பெருமையையும் காட்டுதற்கே இவ்வுண்மையை,
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாளாது உஞற்று பவர் (குறள்.620)
என்ற குறளால் அறியலாம்”(தி.செயல்திறன்:பக்.9) என்ற கி.ஆ.பெயின் கருத்துகள் வள்ளுவர் செய்திகளை வெளியிடும் முறைகளில் ஒன்றை உயர்த்த மற்றொன்றை அழித்துக்காட்டுவதாகிய உத்தியைப் பயன்படுத்தியுள்ள முறைகள் படித்து இன்புறத்தக்கன.
பெரிய செயல் செய்யவேண்டும் என்பதை வள்ளுவர் விரும்பியிருக்கிறார். “முயலை வென்று வெற்றி பெறுவதை விட யானை வேட்டைக்குப் போய்த் தோல்வி அடைந்தாலும் சிறப்பே என்று வள்ளுவர் கருதுகிறார். ஒருவன் யானை வேட்டைக்குப் போய், யானையையும் கண்டு, குறிபார்த்து வேலையும் வீசி எறிந்து , குறிதவறி, யானையும் பிழைத்தோடிப்போய் , வேலையும் இழந்துவிட்டு வெறுங்கையோடு திரும்பி வருகிறவனைப் பார்த்து ‘வீரன்’ என்று வள்ளுவர் கூறுகிறார்.
‘கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது’ (772)
இக்குறள் சிறு செயல்களிலே முயன்று வெற்றி பெறுவதை விட, பெரிய செயல்களிலே முயன்று தோல்வி அடைவது சிறந்தது என்ற புதுக்கருத்தை விளக்குகிறது”(தி.செயல்திறன்:பக்.13) கி.ஆ.பெ அவர்களின் இக்கருத்திலிருந்து குறளை ஆழக்கற்றறிந்த அவரது நுட்பமும், சிறுசெயலைச் செய்வதைவிட பெரிய செயலைச் செய்து தோல்வியடைவதே மேல் என்ற வள்ளுவரின் மனப்பாங்கினையும் தெரிவிக்கிறது.
வள்ளுவரும் குறளும்
வள்ளுவரும் குறளும் என்ற நூலில் வள்ளுவரின் கொள்கைகளை ஆராயும் கி.ஆ.பெ அவர்கள் குறளின் கருத்துகளை ஆத்திசூடி போல மிகச்சுருக்கமாக எடுத்துரைக்கிறார். “சூதாடாதே! பொய் சொல்லாதே! புலால் உண்ணாதே! கள் குடியாதே! களவு செய்யாதே! வஞ்சகம் கொள்ளாதே! தீயன எண்ணாதே!”இது ஒரு தொகுப்பு.
“நட்புத் தேவை; அதை ஆராய்ந்து கொள்! தீயவர் உறவை நோயென விலக்கு! பெரியோரைத் துணைக்கொள்! பிறரோடும் அன்பாயிரு! மனைவியை மதி! மக்களைப் பெறு! அறிவை அடை! சொல்வதெல்லாம் நல்லதாக இருக்கட்டும்! செய்வதெல்லாம் திறமையாக இருக்கட்டும்! அறத்தின் வழி நின்று, பொருளைத் தேடி, இன்பத்தைப் பெறு! வீடு உண்டானால் அது உன்னைத் தேடி வரும்! என்பதே. இவைதான் வள்ளுவருடைய கொள்கை. அதைத்தான் திருக்குறளில் பார்க்க முடியும். இது எந்த நாட்டிற்கு, எந்த மக்களுக்கு, எந்த நிறத்தினருக்கு, எந்த மொழியினர்க்கு, எந்த சமயத்தினருக்கு வேறுபாடு உடையது? இராது! அவ்வளவு பெரிய உயர்ந்த கருத்துகளைக் கொண்டவர் வள்ளுவர்” (வ.குறளும்;பக்.21) கி.ஆ.பெயின் இந்தக் கருத்துகள் மாணவர்கள் எளிதில் குறளைக் கற்றுணரும் அளவு எளிமையாக, சுருக்கமாக, தெளிவான நடையுடன் வள்ளுவரின் கொள்கைகளையும் பகர்கிறது.
நிறைவாக
கி.ஆ.பெ.விஸ்வநாதம் அவர்களின் பணியினைப் பாராட்டி 1956 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி தமிழ்ச்சங்கம் இவருக்கு ‘முத்தமிழ்க் காவலர்’ விருது வழங்கியது. 1975 ஆம் ஆண்டு தமிழ்நாடு நல்வழி நிலையம் இவருக்கு ‘வள்ளுவ வேல்’ என்னும் விருதினை வழங்கிப் பாராட்டியது. தமிழுக்கு எதிரான இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சிறை சென்ற பெருமைக்குரியவர் கி.ஆ.பெ அவர்கள். வள்ளுவத்தின் சிறப்பறிந்து வகுத்துரைத்த பெருமகனார். கி.ஆ.பெயின் திருக்குறள் ஆய்வுகளிலிருந்து தெரிய வரும் முடிவுகள்,
1. எளிய நடையில் அவரது மனப்பாங்கினைத் தெரிவித்தல் ,
2. அகரத்தைப் பற்றிக் கூறும்போது எல்லா மொழியையும் பற்றி ஆய்வுசெய்தல்
3. பரிமேலழகரை மறுத்துப் பொருள் கூறும் திறன்
4. சொற்களுக்கு ஆழமாகப் பொருள்காணும் நுணுக்கம்
5. ஒன்றை உயர்த்த மற்றொன்றின் தாழ்வினைக் கூறும் வள்ளுவரின் உத்தி முறைகள்
6. பெரிய செயலைத்தான் செய்ய வேண்டும் என்ற வள்ளுவரின் பிடிவாதம்; அதற்கு உவமையாக யானையைக் குறிப்பிடுவது
7.ஒரு சொல்லைப் பற்றிக்கூற முழுமையாக நூலினை ஆராய்தல்
முதலியவையாகும். கி.ஆ.பெ பற்றிக் கூற வரும் ஒளவை துரைசாமிப் பிள்ளை அவர்கள் ‘இனிய மொழிநடையும் இடையிடையே நகைநலமும் கலந்து, தெளிந்த ஆறுபோல் ஓடுவது அவரது சொற்பெருக்கு’ என்று வள்ளுவரும் குறளும் நூலில் அணிந்துரையில் பாராட்டுகிறார். அது போல கி.ஆ.பெ அவர்கள் இனிய மொழிநடையும் சொற்சிறப்பும் பெற்றவர் என்றால் மிகையில்லை.
துணைநின்ற நூல்கள்
1. கி.ஆ.பெ.விஸ்வநாதம், திருக்குறள் புதைபொருள் முதல்பாகம், பாரிநிலையம், சென்னை, பதினொன்றாம் பதிப்பு 1990
2. கி.ஆ.பெ.விஸ்வநாதம், திருக்குறள் புதைபொருள் இரண்டாம் பாகம், பாரிநிலையம், சென்னை, நான்காம் பதிப்பு திசம்பர் 1988
3. கி.ஆ.பெ.விஸ்வநாதம், வள்ளுவர் உள்ளம், பாரிநிலையம் , சென்னை, ஏழாம் பதிப்பு ஆகத்து 1994
4. கி.ஆ.பெ.விஸ்வநாதம், திருக்குறள் கட்டுரைகள், ஸ்ரீ ராஜேஸ்வரி பிரிண்டிங் ஒர்க்ஸ், சென்னை, பதினோராம் பதிப்பு திசம்பர்1999
5. கி.ஆ.பெ.விஸ்வநாதம், திருக்குறளில் செயல்திறன், பாரிநிலையம், சென்னை, இரண்டாம் பதிப்பு 1993
6. கி.ஆ.பெ.விஸ்வநாதம், வள்ளுவரும் குறளும், ஸ்ரீராஜேஸ்வரி பிரிண்டிங் ஒர்க்ஸ், சென்னை, பதினைந்தாம் பதிப்பு 1999
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.