முன்னுரைகாலத்தைக் காட்டும் கண்ணாடியாகத் திகழ்வது இலக்கியங்கள் ஆகும். மனித வாழ்வியலுக்குத் தேவையான நல்லறங்களை இலக்கியங்கள் காட்டக் கூடியதாக அமைந்துள்ளது. வாழ்க்கை நெறிமுறைகளை விளக்கினால் தான் அவ்விலக்கியம் வாழும் இலக்கியமாகக் காலத்தையும் வென்று நிலைத்து நிற்கும். இத்தகைய காப்பியப் படைப்பே பாஞ்சாலி சபதம், பாரதியாரின் முப்பெருங் கவிதைகளில் ஒன்றான பாஞ்சாலி சபதம் வாயிலாக வாழ்வியல் நெறிகளாகப் பாரதியார் குறிப்பிடுவனவற்றை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது. பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு இம்மூன்றும் முப்பெரும் கவிதைகள் என போற்றப்படுகின்றன.
மகாகவி
பதினெட்டாம் நூற்றாண்டில் இந்திய நாட்டின் அரசியல், சமுதாயப் பொருளாதார சமயச்சூழலில் அந்நியரின் வருகையாலும், ஆட்சி அதிகாரத்தாலும் கட்டுண்டு இருக்க வேண்டிய கட்டாயம் உருவானது என்பது வரலாறு. இக்காலச்சூழலில் உலகம் அதிரப்பாட வந்த பாவலன். புதிய அறத்தையும், வடிவத்தையும் இலக்கிய உலகிற்கு வழங்க வந்த அக்னிக் குஞ்சாய் எட்டயபுரத்தில் 'சுப்பையா' தோன்றினார். பாரதியார் பன்முக ஆளுமை புதிய யுகம் கண்ட புதுமை கவிஞன். பாரதியார் தேசவிடுதலை, சமூகம், தத்துவம், பக்தி என அனைத்து நிலைகளையும் பாடியுள்ளார்.
பாஞ்சாலி சபதம்
திருநெல்வேலியில் பாரதியும் அவரது நண்பர்களும், "துரோபதை துகிலுரிதல்" என்ற நாடகத்தைக் காணச் சென்றனர். துரோபதையாக வேடம் தரித்தவர் திரு. கவியாணராமன் அவர்கள். அவர் மிகவும் சாமர்த்தியம் வாய்த்தனர். கலியாண ராமனின் வாக்குச் சாதுரியம் துரோபதை பாத்திரத்தின் அழுத்தத்துக்கு மேலும் ஒரு சக்தி அளிக்கிறது. அண்ணனுக்காகத் தம்பியர் செய்யும் தியாகமும். பெண்மையின் சிறப்பை வெளியிடும் துரோபதையும் பாரதியாரின் நெஞ்சிலே ஆழப்பதித்தன. பிற்காலத்திலே உலகப்புகழ் பெற்ற பாஞ்சாலி சபதம் எழுதுவதற்கான வித்தாக அமைந்தது.
மகாபாரதத்தின் ஒரு பகுதியைப் (குறுங்காவியமாக) பாஞ்சாலியாக படைத்துள்ளார். பாஞ்சாலியைப் பாரதமாதாவாகக் குறிப்பிடுகிறார். பாரதி வாழ்ந்த காலத்தில் பாரத நாடு ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு டந்தது. இவற்றை மனத்தில் கொண்டு மகாபாரதத்தில் உள்ள சூதாட்டத்தில் பாஞ்சாலியை வைத்து சூதாடியதைப் புரட்சி கரமாகப் படைத்துள்ளார். நாட்டின் விடுதலையை மையமாகக் கொண்டு பாஞ்சாலியினை இந்தியத்தாயின் நிலைப்பாடாக உருவகித்தது பாஞ்சாலி சபதம். மக்களின் "சபதமே" என நாட்டின் விடுதலையினை உணர்த்த உருவானதே பாஞ்சாலி சபதம்.
வாழ்வியல் நெறி
மனிதன் எப்படியும் வாழலாம் என்றில்லாமல் இப்படிதான் வாழ வேண்டும் என்ற முறையில் தனக்கு மட்டும் நன்மை பயப்பது என்று சிந்திக்கும் மனமாக இல்லாமல் தாய்மை உள்ளத்தோடு அனைவரின் நலம் நாடும் சான்றோனாக உருவாகத்துணை செய்பவை வாழ்வியல் நெறி சார்ந்த கருத்துக்களாகும். எத்தகைய சிந்தனையும், செயலும் எங்கு நிலை நிறுத்தும் என்பதைக் காலந்தோறும் தோன்றும் இலக்கியங்கள் பல்வேறு களங்களில் மாந்தர்களின் வாயிலாகப் புலப்படுத்தி நிற்கின்றன.
பாஞ்சாலி சபத காப்பிய மாந்தர்களில் திருதராட்டிரன், விதுரன், தருமன், துரியோதனன் அவரவர் எண்ணங்களின் உறுதி தன்மைக்கேற்ப விளக்கம் பெறுகின்றனர்.
போற்றுதல் பண்பு
திருதராட்டிரன், தன் மகன் துரியோதனனுக்கு அறிவுரை கூறுகிறான். நான் என்னும் செருக்கை நீக்குதலும், இந்த உலகைத் தான் என்று கொள்ளுதலும், மூவகை காலங்களைக் கடந்து செல்லுதலும் தகுதியான வினைகளைச் செய்தலும், உயிரினங்களுக்கும் நல்ல அருளைச் செய்தலையும், முயற்சியால் பெற முடியாத அரிய பேறு ஞானியர்கள் பெறுவர். அதாவது மனித வாழ்வின் ஒவ்வொரு நிலைகளிலும் நற்பண்புகள் ஒவ்வொன்றினையும் பேணிப்பாதுகாத்தும், பின் அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் போது தான் மனிதன் தெய்வ நிலைக்கு உயர்த்தப் பெறுகிறான். பின்பு போற்றப்படுகின்றான். இத்தகைய போற்றுதல் பண்பு வாழ்விற்குத் தேவை துரியோதனனுக்கு மட்டுமல்ல வாழ்கின்ற அனைத்து மனிதர்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டிய அடிப்படை நெறியாகும் என்பதை,
நான் எனும் ஆணவத் துள்ளும் – இதை
ஞாலத்தினெனக் கொள்ளும் – பர
மோன நிலையின் நடத்தலும் ஒரு
மூவகைக்காலங் கடத்தலும் நடு (பாஞ்.சப. 82)
என்னும் பாடலடிகள் வழி வாழ்வியல் விளக்கத்தைப் பாரதியார் படைத்துள்ளார். மேலும் திருதராட்டிரன், தம்முடைய கடமைகளில் நாள்தோறும் தளர்ச்சியற்ற முயற்சி, மற்றவர்கள் பொருளினை இம்மியளவும் கவரக்கருதாமை, தம்மைச் சார்ந்தோரை நல்ல முறையில் பாதுகாத்தல் ஆகியவையே செல்வத்தின் இலக்கணம் என்று மூதறிஞர் கூறுவதாகத் திருதராட்டிரன் குறிப்பிட்டுள்ளதைத்,
தம்மொரு கருமத்திலே-நித்தம்
தளர்வறு முயற்சி, மற்றோர் பொருளை
இம்மியுங் கருதாமை – சார்ந்
திருப்பவர் தமை நன்கு காத்திடுதல் (பாஞ்.சப. 95)
என்னும் பாடலடிகளின் மூலம் உணர்த்தியுள்ளார்.
விதுரன்
விதுரன். தமையன் திருதராட்டிரனிடம் பாண்டவர்களைச் சூதுக்கு அழைத்து அவலத்திற்கு உள்ளாக்குதல் ஏற்புடையது அல்ல என்று கூறும் பொழுது, கற்றகல்வியும், கேள்வியறிவும் கடலில் பெருங்காயம் கரைத்த செயலுக்கு ஒப்பாகுமோ? என்பதனைக்,
கற்ற கல்வியும் கேள்வியும் அண்ணே
கடலிற் காயங் கரைத்தது ஒப்பு ஆமே? (பாஞ்.சப. 200)
என்னும் வரிகள் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும் அற நெறியை இழந்த பிறகு வாழ்க்கையில் இன்பம் உண்டாகும் என்று எண்ண கூடாது. சிறுமையுடையோர் பாதகர்கள் என்று உலகில் உள்ள உயர்ந்தோர் அனைவரும் சீ என இகழ. மகிழ்ச்சிகொண்டு அரசாட்சி புரியும் வறுமையான வாழ்க்கையை விரும்பலாமா? என வினவுகிறார் இதனை,
நெறி இழந்தபின் வாழ்வதி லின்பம்
நேருமென்று நினைத்திடல் வேண்டா
சிறியர் பாதகர் என்றுல கெல்லாம்
சீ என் றேச உகந்தர நாளும்
வறிய வாழ்வை விரும்பிடலாமோ?" (பாஞ்.சப. 204)
என்னும் பாடலடிகள் உணர்த்துகின்றன. மேலும் பால், தேன் போல இனிமையான சொற்களைக் கொண்டோர் துன்பத்திற்கு வழி சொல்பவர்கள் நன்மையைக் காணக்கூடிய சொற்களைக் கூறமாட்டார்கள் என்பதைப்.
பால்போலும் தேனேத் போலும் இனிய சொல்லோ
இடும்பைக்கு வழி சொல்வார்; நன்மை காண்பரர்
இளகு மொழி கூறார் (பாஞ்.சப. 214)
என்று உலகியல் நெறியை உணர்த்துகிறார்.
விதுரன் துரியோதனனிடம்
மனம் நோகும் படி உரைத்தல் நேர்மையாகாது. நல்லோரின் உள்ளம் வாடும்படி செயல்பட்டால் புழுவைப்போல மடிவர். கெட்டவர்களின் வாயில் முளைத்திடும் சொற்கள் நல்லோர் மனத்தில் காயத்தை உண்டாக்கி விடும். மனம் அறியாமல் செய்யும் தவற்றை மன்னிக்கும் படிவேண்டுதல் ஏற்புடையது. பேராசையினால் பிழை செய்தல் கூடாது போன்ற உலகியல் அறத்தையும் எடுத்துரைக்கிறார்.
தருமனின் வாழ்க்கை
தருமன், திருதராட்டினனின் அழைப்பை ஏற்றுக் கொண்டு அத்தினாபுரம் செல்ல வேண்டிய சூழலில் அது தங்கள் கடமையாகும் என்று பெரியோரின் விருப்பத்தினை நிறைவு செய்வதால் துன்பம் உண்டானாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அறத்தை வலியுறுத்துவதோடு வாழ்க்கை என்பதை.
தோன்றி அழிவது வாழ்க்கை தான்- இங்கு
துன்பத்தோடு இன்பம் வெறுமையாம்
இவை (பாஞ்.சப. 140)
என்னும் அடிகளில் உணர்த்துகின்றார். மேலும் தருமன் முன்னோர் வழி நடத்தல், அவர் கூறும் பணியை ஏற்றல் மக்களின் கடமை என்ற வாழ்வியல் நீதியைத் தெளிவாக எடுத்து விளக்கியுள்ளார்.
தொகுப்புரை
பாஞ்சாலி சபதத்தில் காப்பிய மாந்தர்களின் வழி வாழ்வியல் நெறியை உலகில் உயர்ந்த நிலைக்குரிய மதிப்பீடுகளாகக் கொண்டு பாரதியார் படைத்துள்ளார். வாழ்வியல் நெறியின் மூலம் அவரவரின் மனோதர்மம் கட்டாயம் பங்கு பெறும் என்பதனை உணர்ந்து நாம் பின்பற்றுவோம்.
பாஞ்சாலி சபதத்தில் வாழ்வியலின் மதிப்பீடுகளாகக் காப்பிய மாந்தர்களின் பண்பு நலன்களை உணர்த்துவதோடு இக்காவித்தைக் கற்போரும். சிந்தனை செய்வோரும் வாழ்வியல் நெறிகளை உள்வாங்கிக் கொண்டு நல்வழியில் வாழ வேண்டும். அங்ஙனம் வாழ்வதோடு பிறர்க்கும் நன்னெறிகளை எடுத்துச்சொல்லி நல்ல சமுதாயமாக மாற்றுவது நம் கடமையாகும்.
துணை நின்ற நூல்
சுப்பிரமணிய பாரதி, பாரதி புத்தக நிலையம், மதுரை.
சுப்புரெட்டியார்.ந,பாஞ்சாலி சபதம் ஒரு நோக்கு, சர்வோதய இலக்கியப் பண்னை, மதுரை.
பாரதியின் பாஞ்சாலி சபதம், பாரதியார், காலச்சுவடு
:இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.