
நெறியாளர்: முனைவர் மு.சுதா, பேராசிரியர்,தமிழ்த்துறை, அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி-3
முன்னுரை
“வருணன் மேய பெருமணல் உலகமும்” (தொல்.அகம்.5)
என்று வருணனைக் கடவுளாகக் கொண்ட பெருமணல் பரப்பினையுடைய கடலும், கடல்சார்ந்த இடத்தையும் உடைய நெய்தல் நிலத்தினை மையமாகக் கொண்டு எழுந்தது ‘அளம்’ என்னும் புதினமாகும். இந்நிலத்தின் முக்கியத் தொழிலாக மீன்பிடித்தல், உப்புவிளைவித்தல், முத்து எடுத்தல் மற்றும் கடல் வணிகம் போன்றவை காணப்படுகின்றன. அவற்றில் உப்புவிளைவித்தல் பற்றிய செய்திகளைப் பற்றிப் பேசக்கூடிய சு.தமிழ்ச்செல்வியின் இரண்டாவது படைப்பான ‘அளம்’ புதினத்தில் காணலாகும் பெண்மாந்தர் படைப்புகள் குறித்தும் அவற்றின் வழியாக அறியலாகும் பெண்களைச் சுற்றிய சமூகச்சூழல்களையும் எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகிறது.
படைப்பாளர் அறிமுகம்
“அளம்” புதினத்தின் ஆசிரியரான சு.தமிழ்ச்செல்வி திருவாரூர் மாவட்டம் கற்பகநாதர்குளம் என்ற ஊரைச் சேர்ந்தவர். “தி.ஜானகிராமனின் படைப்புகள் தஞ்சைமாவட்டத்தையும், ஆர். சண்முகசுந்தரத்தின் கதைகள் கொங்குநாட்டையும் பின்னணியாகக் கொண்டவை. மு.வ.வின் கதைகளை கொங்குநாட்டுப் பின்னணியிலும், தி.ஜானகிராமனின் கதைகளை நெல்லை மாவட்டப் பின்னணியிலும் சொல்லமுடியாது. எனவே, குறிப்பிட்ட கதைமாந்தர்களின் கதையைச் சொல்லும்போது அவர்கள் வாழும் அவர்களுக்கே உரிய பின்னணியில்தான் சொல்லமுடியும். ஏனெனில் மனிதவாழ்க்கை அந்த அளவுக்கு அவர்கள் வாழும் மண்ணிலேயே வேர்கொண்டிருக்கிறது. மண்ணின் மணமே புதினத்தின் பின்னணியில் நின்று படிப்போரை ஈடுபடுத்துகின்றது.”(மா.இராமலிங்கம், நாவல்இலக்கியம், ப,28) என்று மா.இராமலிங்கம் படைப்புகளின் பின்னணி குறித்துக் கூறுவதற்கேற்ப சு. தமிழ்ச்செல்வியின் படைப்புகளும் கீழ்த்தஞ்சைமக்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும் விதமாக அந்தந்த நிலமக்களின் வாழ்க்கை முறையோடு மண்மணம் கமழ அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

- சு.தமிழ்ச்செல்வி -
அளம் கதைக்கரு
கணவன் இன்றி வாழும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் மற்றும் அவர்கள் மீதான சமூகக் கட்டுப்பாடுகளையும், வலிமிகுந்த துயர்களையும், பொருளாதாரத் தேவைக்காக உப்பளத்தில் வேலைபார்த்து அவர்கள் வாழ்வை எதிர்கொண்டு போராடுவதையும் கூறுவதாக ‘அளம்’ புதினம் அமைந்துள்ளது.
மாந்தர்படைப்பு
மாந்தர்படைப்பு என்பது ஒரு புதினத்தின் உயிர்நாடி போன்றது. ஆசிரியர் எண்ணம் மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்த இம்மாந்தர் படைப்புகளே உதவும். மாந்தர்படைப்பின் வழியாகவே ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் கலாச்சாரம், பண்பாடு, பழக்கவழக்கம், வாழ்க்கைமுறை போன்றவற்றை அறிவிக்கவும், அறியவும் முடியும். ஒரு புதினத்தின் இன்றியமையாதகூறு மாந்தர்படைப்பு ஆகும். இதனை, “ஒரு புதினத்திற்கு கரு இன்றியமையாததேதாயின் அது கதையின் எலும்பேஆகும். கருவினும் சிறப்பு வாய்ந்த ஒன்று உண்டு. அதுவே பாத்திரம் ஆகும்”, என்று இராமோகனும், “புதினங்களில் வெற்றி, ஆசிரியர் தேர்ந்தெடுக்கும் பாத்திரங்களைப் பொருத்தே அமைகிறது. கதைமாந்தர்கள் பெரும்பாலும் நடமாடும் மனிதர்களின் படப்பிடிப்பாகவும், அவர்களின்குண இயல்புகளில் தேர்ந்தெடுக்கும் சிறப்பியல்புகளைக் கொண்டவர்களாகவும் அமையவேண்டும்” என்று ந.பிச்சமூர்த்தியும் குறிப்பிடுவது மாந்தர்படைப்பு எவ்வாறு அமையவேண்டும் என்று எடுத்துக்காட்டுவதாக அமைகிறது.மேலும் “ஒரு பாத்திரத்தை உயிருள்ளதுபோல படைத்துக்காட்ட வேண்டுமென்றால் (1)புறத்தோற்றம், (2)அசைவுகள் ஜானைகள் நடத்தைமுறை பழக்கம், (3)மற்றவர்களோடு நடந்துகொள்ளும் முறை, (4)பேச்சு, (5)தனக்குத்தானே நடந்துகொள்ளும் முறை, (6)சுற்றுப்புறச் சூழ்நிலை, (7)பாத்திரத்தின் கடந்தகால நிகழ்வு, (8)பாத்திரத்தின் பெயரமைதி முதலான விவரங்கள் ஆசிரியரால் தரப்பட வேண்டும்” என்று மா. இராமலிங்கம் கூறுவதிலிருந்து மாந்தர் படைப்பு என்பது ஒரு படைப்பின் முக்கியமான கூறு என்பதை அறியலாம். இத்தகைய சிறந்த மாந்தர்படைப்புகளை சு.தமிழ்ச்செல்வியின் ‘அளம்’ புதினத்தில் காணமுடிகின்றது.
முதன்மைமாந்தர்
கதைமாந்தர்களில் தலைமையாய் விளங்கி, கதைக்கு இன்றியமையாத படைப்பாக விளங்குபவர்களே ‘முதன்மை மாந்தர்கள்’ அல்லது ‘தலைமை மாந்தர்கள்’ என்று கூறுவர். இவர்களைச் சுற்றியே புதினத்தின் கதையானது நகரும். முதன்மை மாந்தர்களைச் சுற்றிய வாழ்வியலே புதினத்தில் பேசப்படும்.
“தலைசிறந்த உலகத்துப் பெருநாவல்கள் எல்லாம் நாம் நினைக்கிறபோது நம் நினைவுக்கு வருவது அவற்றை படைத்த ஆசிரியர்களோ, கருவோ, கதைப்பின்னலோ, பிறவோ அல்ல; கதைமாந்தர்களே ஆவர்”(மா.இராமலிங்கம், நாவல் இலக்கியம், ப.69) என்று மாந்தர்கள் வாசகனின் மனதில் பெறும் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுகிறார் மா.இராமலிங்கம்.அதுபோல
“கதை யாரைப் பற்றிச் சிறப்பாக அமைகின்றதோ அவர்களை முதன்மைப் பாத்திரங்கள் என்று கூறலாம். கதைமுழுவதும் நடைபெறுவதற்கு இன்றியமையாத நிகழ்ச்சிகள் யாவும் பெரும்பாலும் முதன்மைப் பாத்திரங்களைப் பற்றியனவாக இருக்கும்” என்று முதன்மை மாந்தரே கதை நிகழ்வுகளின் மையமாய் அமையும் தன்மை குறித்து க.வெள்ளி மலையும் குறிப்பிடுவதும் முதன்மை மாந்தர்களின் முக்கியத்துவத்தைக் குறிக்கும். (க.வெள்ளிமலை,வில்லிபாரதம்,ப.67)
முதன்மை மாந்தர்களின் இயல்பைப் பற்றிக் குறிப்பிடுகையில், “தலைமை மாந்தர் புதினம் முழுவதும் நிறைந்த நிற்பவராக இருக்கவேண்டும். அறிமுகம் செய்யும் இடத்தில் இருந்து வளர்ச்சிபெற்று ஒரு முழுநிலைமை அடைதல் வேண்டும். தலைமைப்பாத்திரம் என்பது ஒரு பெரும்செயல்களைச் செய்பவராகவும் இருப்பர்”(கா.சிவத்தம்பி, நாவலும் வாழ்க்கையும்,ப.66) என்ற கா.சிவத்தம்பியின் கருத்தும் முதன்மை மாந்தர்களின் அமைவு குறித்து கூறப்பட்டதேயாகும்
ஆய்வுக்குரிய ‘அளம்’ புதினத்தில் பெண்மாந்தர்கள் நால்வர் முதன்மை மாந்தர்களாகத் திகழ்கின்றனர். சுந்தராம்பாள், வடிவாம்பாள், ராசாம்பாள், அஞ்சம்மாள் ஆகிய நான்கு பெண்கள் புதினம் முழுதும் நிறைந்திருப்பதோடு, அவர்கள் அவர்களைச் சுற்றிய சமூகத்தை எடுத்துகாட்டும் மாந்தர்களாகவும் படைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சுந்தராம்பாள்
சுந்தராம்பாள் சுப்பையனின் மனைவி மற்றும் மூன்று பெண்குழந்தைகளின் தாயாவாள். தன் கணவனிடம் பொறுப்பில்லாத காரணத்தால் தானே உழைத்துக் குடும்பத்தைப் பார்த்துக் கொள்கிறாள். கப்பலேறிச் சென்ற கணவன் திரும்பிவராததால் குடும்பத்தின் அனைத்துத் தேவைகளையும் ஏற்கவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறாள். சுந்தரம்பாளின் பிள்ளைகள் மூவரும் கருப்பாய் இருப்பதனால் திருமணம் செய்து கொடுக்கமுடியாமல் தவிக்கிறாள். வறுமையின் காரணமாகவும் இயற்கைச் சீற்றதினால் ஏற்படும் அவலச்சூழலின் காரணமாகவும் அடுத்தவீட்டுக் கொல்லைகளில் வேலைசெய்வது, தண்ணீர்பாய்ச்சுவது, அளத்திற்கு வேலைக்குச் செல்வது எனச் செல்வதோடு, மகள்களையும் உடன்வேலைகளுக்கு அழைத்துச் செல்கிறாள். உணவிற்கு வழியின்றித் தெம்மாட்டிப்பழங்களையும், கோரைக்கிழங்கு மற்றும் கொட்டிக் கிழங்குகளையும் பறித்து உண்டு நாள்களைக் கழிக்கும் வறுமையின் உச்சத்தில் வாழ்வு நடத்துபவள் சுந்தராம்பாள்.
“சிட்டுக்குருவியளா… செமலோரத்துபச்சிளா…
சீமைக்கு போனியளா? செவந்தகனி தின்னியளா?
செடியெறக்கம் கொண்டியளா? யாஞ் சீமான பாத்தியளா…?
பச்ச குருவியளா பட்டிணம்தான் போனியளா
பழுத்தபழம் தின்னியளா…? பசிஎறக்கம் கொண்டியளா…?
யாம் பழிகார பாவிய பாத்தியளா…?” (அளம்.ப.33)
என்று பொறுப்பில்லாத கணவன் என்றாலும், அவன்மீது அளவற்ற அன்புகொண்டவளாகக் காட்டப்படுகிறாள். இது பெண்களின் அன்பினால் தவறென்றாலும் மன்னித்து ஏற்கும் அன்புள்ளத்தை, ஏக்கஉணர்வைச் சுட்டுகிறது. புயலின் காரணமாக அனைவரும் இடம்மாறி செல்லும்போது சுந்தராம்பாள் மட்டும் போகமறுக்கிறாள்.
“புள்ளக் குட்டிவொளோட இந்த வூட்டுலதாங் ஒங்கப்பாரு என்ன உட்டுட்டுப் போனாவோ. இன்னக்கு இல்லாட்டியும் என்னக்காவுது ஒருநாளு அவ்வொவந்து பாத்துட்டு, ‘எங்கபோயிருப்பா நம்ம பொண்டாட்டின்னு தெவச்சிநிக்கக்கொடாது”, “செத்தாலும் கெட்டாலும் இந்தவூரவுட்டு நாவரமாட்டங்”(அளம்.ப.119)
என்று சுந்தரம்மாள் கூறுகிறாள். எத்தகைய சூழலிலும், ஆயிரம் பிரச்சனைகள் வந்தபோதிலும் ஒருவருக்கொருவர் கொண்ட அன்புவாழ்வையும் கணவனை நேசிக்கும், அவனுக்காகக் காத்திருக்கும் நேசத்தையும் சுந்தராம்பாள்வழி அறிய முடிகின்றது. கணவனே கண்கண்ட தெய்வம் என்ற வழக்கு இன்று ஏற்கப்படாவிட்டாலும், எவ்வாறாயிருந்தாலும் அவனுக்காகக் காத்திருப்பேன் என்று கூறும் பெண்களும் சமூகத்தில் உண்டு என்பதற்கு அடையாளமாய் சுந்தரம்பாளைக் காணமுடிகிறது.
வடிவாம்பாள்
சுந்தராம்பாளுக்கும், சுப்பையனுக்கும் பிறந்தமுதல் மகள் வடிவாம்பாள். சமூகத்தில் தோற்றத்தினால் ஒதுக்கப்படும் அவலம் இன்றும் உண்டு என்பதற்கான உதாரணமாய் இம்மாந்தர் படைப்பினைக் காணமுடிகின்றது.
“கட்டையாய் கன்னங்கரேலென்று மேல்சட்டை போடாமல் வயிற்றைக் காட்டிக்கொண்டு பரட்டைத்தலையோடு வந்துநின்றாள்” (அளம்.ப.4)
என்ற வரிகள் வடிவாம்பாளைச் சமூகம் ஒதுக்கக்காரணம் என்ன என்பதை அறிவிக்கிறது. கட்டையாய், கருப்பாய், வறுமை மீதுறக் காணப்படும் சூழல் சமூகத்தின் ஒதுக்குதலுக்குக் காரணமாய் நிற்கும் அவலம் போன்றனவற்றை ஆசிரியர் இம்மாந்தர் படைப்பின் வழிசுட்டிச் செல்கிறார். தோற்றம் எவ்வாறாயினும் உள்ளம் அன்பின் வயப்பட்டது என்பதையும், அவள் உழைப்பின்வழி அவளின் பொறுப்பான குணத்தையும் எடுத்துக்காட்டும் ஆசிரியர், புறத்தோற்றம் விரும்பப்படும் அளவிற்கு அகத்தின் தூய்மை அறியப்படாத அவலத்தை இப்படைப்பின் வழி எடுத்துக் காட்டுகிறார்.
அதுபோல பருவம் எய்தவுடனேயே திருமணம் செய்துவிடும் சமூகச் சூழலையும் வடிவம்பாள் வழியே காட்டுகிறார். பிற பெண்களுக்கெல்லாம் ஓராண்டில் திருமணம் ஆக, மூன்று ஆண்டுகளாகியும் திருமணம் நடக்காமல் இருப்பது தோற்றத்தினால் எனக் குறிப்பிட்டுச்செல்வது, இன்றும் சமூகத்தில் நடக்கும் நிறவேறுபாடு, வறுமைநிலை, புறத்தோற்ற மதிப்பைச் சுட்டுவதாய் உள்ளது. பெண்களின் உள்ள உணர்வுகளை விட உருவத் தோற்றத்திற்கு மதிப்பளிக்கும் சமூகத்தை கண்முன் நிறுத்துகிறார் சு.தமிழ்ச்செல்வி.
திருமணம் நடக்கவில்லையென்றால் பரிகாரம் செய்தல் போன்றன பெண்களுக்கே உரியனவாக இருப்பதையும் இப்பாத்திரம்வழி அறிவிக்கிறார். இந்தச் சமூக ஒதுக்குதலில், சிறிய அகவையுடைய வடிவாம்பாள் சமூகத்தில் உள்ள துன்பம் மட்டுமே வாழ்க்கை எனவாழும் சில பெண்களின் அடையாளமாகப் படைக்கப்பட்டுள்ளார்.
ஒருகதையில் கதைமாந்தரின் தோற்றத்தினை முதலில் மையமிட்டு உரைப்பதே சமூகத்தில் அவனுக்கான இடத்தையும், அம்மாந்தர்படைப்பு குறித்து புரிதலையும் உணர்த்துவதற்காகவே. ஆசிரியர் வடிவாம்பாளின் பாத்திரப்படைப்பு நோக்கத்தைத் தோற்ற வருணனையிலேயே உணர்த்தியுள்ளார். சமூகத்தால் ஒதுக்கப்படும் தோற்றத்தில் அவளுக்குள் உள்ள பாசத்திற்கான ஏக்கம், பலவித கனவுகளை மட்டுமே கொண்டு வாழும் வாழ்வியலையும் சுட்டுகிறார். பொறுப்பும் சுறுசுறுப்பும் கொண்டு அனைத்து வேலைகளையும் செய்யும் வடிவாம்பாள் போன்ற பெண்கள், நிறத்தோற்றத்தால் சமூகத்தின் அங்கீகாரம் கிடைக்காமல் போய்விடும் அவலத்தை இம்மாந்தர் படைப்பின்வழி ஆசிரியர் சுட்டுகிறார்.
பெண்கள் வயதுக்கு வந்த ஓராண்டிற்குள் திருமணம் செய்து கொடுத்துவிடும் காலகட்டக் கதை இது. அக்காலத்தில் மூன்று வருடங்களாகியும் திருமணம் ஆகாதநிலை, அதற்கானப் பரிகாரம் செய்வது போன்றன சமூகச் சூழலையும், அக்கால நம்பிக்கைகளையும் இப்புதினம் சுட்டிச்செல்கிறது. குறிப்பாக ஐம்பது வயதுடைய ஆண்மகனை வயதில் குறைந்த பெண்ணிற்கு விருப்பமின்றி சூழலின்பேரில் திருமணம் செய்துவைப்பதும் அதனையும் மகிழ்வென எண்ணி ஏற்கும் அறியாமையுடன் இருக்கும் பெண்களையும் இம்மாந்தர் படைப்புவழி எடுத்துக்காட்டும் ஆசிரியர் இதன்வழி பெண்ணுக்கு எதிரான இந்தச் சமூக அவலத்தின் உச்சத்தினை,அதனை அறியாது விரும்பி ஏற்கும் அறியாமையையும் சுட்டிச்செல்கிறார். இதனைக்,“கருக்கும் வெயிலில் உப்பளத்து வெக்கையில் வெந்துதணிந்தவளுக்கு தென்னந்தோப்பின் குளுமை சந்தோஷமாயிருந்தது” (அளம்.ப.193) என்பது அதனையும் விரும்பி ஏற்கும் வடிவாம்பாள் போன்ற பெண்களின் மனநிலையைச் சுட்டுவதாய் உள்ளது.
விருப்பமற்றவாழ்க்கை, அதனையும் விரும்பி ஏற்பது, பொன்னையனின் இறப்பு, மீண்டும் பிறந்தவீட்டிற்கே அனுப்பப்படும் அவலம், பின் வலிப்பு நோயுடைய முத்துச்சாமியுடன் இரண்டாம் திருமணம், அவனின் இறப்பு எனத் தொடர்ந்து துன்பமே வாழ்வென வாழும் வடிவாம்பாள், எத்துன்பம் வந்தபோதும் அதனை விதியென ஏற்று வாழும் சில பெண்களின் அடையாளமாய்ப் படைக்கப்பட்டிருக்கிறார்.
ராசாம்பாள்
ராசாம்பாள் சுந்தராம்பாளின் இரண்டாவது மகளாவாள். சுந்தராம்பாள் மற்றும் வடிவம்பாளைப் போலவே இவளும் பொறுப்பாகவும் சுறுசுறுப்பாகவும் அம்மா சொல்லை மீறி நடவாத பெண்ணாக இருக்கிறாள். குடும்பத்திற்காகப் பல வேலைகளும் செய்கிறாள். வேதப்பனை திருமணம் செய்து கொண்ட ராசாம்பாள் சொந்த அளத்தில் மகிழ்ச்சியோடு வேலை செய்கிறாள். ராசாம்பாளைப் பொறுத்தவரை அவளுக்கு நல்லதொரு வாழ்க்கை அமைந்திருக்கிறது. வீட்டில் இவளின் பேச்சுக்கு மறுப்பேச்சு கிடையாது. “கல்யாணமாயிபோன முப்பது நாளுக்குள்ளயே குடும்பத்தப் புடிச்சுகிட்டா ராசாம்பா”(அளம்.ப.201) என அனைவரும் பாராட்டினர். ஆனால் இவையனைத்தும் ராசாம்பாளுக்கு மூன்றாவது ஆண்குழந்தை பிறந்தவுடன் மாறிப்போனது. வேதப்பனின் நடவடிக்கைகள் மாறிபோயின. சிலநாட்களில் வேறு பெண்ணைத் திருமணம் செய்த வேதப்பனை வெறுத்து அவனோடு வாழக்கூடாது எனத் தாலியைக் கழட்டி உண்டியலில் போட்டுவிடுகிறாள். நான் சொந்த அளத்தை வாங்கி என்பிள்ளைகளை ராசாமாதிரி வளர்ப்பேன் என்று கூறும் ராசாம்பாள் சுயமரியாதை உடைய பெண்களுக்கான மாதிரியாக அமைக்கப்பட்டு்ள்ளார்.
அஞ்சம்மாள்
சுந்தரம்பாளின் மூன்றாவது பெண்குழந்தை அஞ்சம்மாள் ஆவாள். சுப்பையன் கப்பலேறிச் செல்லுகையில் ஒருமாதக் குழந்தையாக இருந்தாள். கருப்பாக இருந்தாலும் களையாக இருப்பாள். வீட்டில் அக்காவின் வாழ்க்கை மாறிப்போன நிலையில் அஞ்சம்மாளின் உழைப்பிலேயே அனைவரும் பிழைத்தார்கள். கடும் உழைப்பாளியாக இருக்கிறாள். சிறுவயதில் தன் குடும்ப கஷ்டத்திற்காகத் தன்னோடு விளையாடும் பூச்சியின் கால்சட்டையை வாங்கிபோட்டுக் கொண்டு சீட்டுக்கூடைத் தூக்கச் செல்கிறாள். “செலவுக்கு காசில்லாம செருமப்படுயே தான்னுமா நா போனங்”(அளம்.ப.127) என்று தன் தாயிடம் கூறுவதிலிருந்து அஞ்சம்மாளின் மனதை அறியமுடிகிறது.
எனினும் பின்னாளில் பூச்சியை மனதார நினைக்கத் தொடங்குகிறாள். அஞ்சம்மாள் பெரிதும் முகம்கொடுத்து பூச்சியிடம் பேசமாட்டாள். இருப்பினும் இருவரின் காதல் இருவீட்டாருக்கும் தெரியவே அஞ்சம்மாளை சுந்தரம்பாள் அடித்துவிடுகிறாள். இதனால் வருந்திய பூச்சி அவளை சமாதானம் செய்து ஊரைவிட்டுப் போய்விடலாம் என அழைக்கிறான். ஆனால், அஞ்சம்மாளோ, “சொல்லாம கொள்ளாம ஓடிப்போற பொண்ணுநான் இல்ல. எங்கம்மா என்ன அப்புடி வளக்கல”(அளம்.ப.272) என்று கூறிவிட்டு அளத்தை நோக்கி குடும்பத்தோடு செல்லத் தொடங்கினாள். இவ்வாறு தன் ஆசைகளைக் குடும்பத்திற்காக விட்டுச்செல்லும் பெண்களும் சமூகத்தில் இருப்பதற்கு உதாரண மாந்தராய் அஞ்சம்மாளைப் படைத்துள்ளார் ஆசிரியர்.
முடிவுரை
உப்பளம் பற்றியும் அங்கு பணிபுரியும் பெண்களின் வாழ்வியலைப் பற்றியும் எழுந்தது ‘அளம்’ புதினம். குறிப்பாக சுந்தரம்பாள், வடிவாம்பாள், ராசாம்பாள் அஞ்சம்மாள் போன்ற நான்கு பெண் மாந்தர் படைப்புகளின் வழியாக பெண்களின் நிலை, அவர்களுக்கு எதிரான சமூகச்சூழல், அவர்களின் உழைப்பு, அதற்கேற்ற உயர்வு இன்மை, தோற்றம், வறுமை அடிப்படையிலான சமூக ஒதுக்குதல்கள், ஆணை மையமிட்டே அமையும் அவர்களின் வாழ்வியல் போன்ற பெண்களின் உடல் மற்றும் உளவியல் ரீதியிலான பிரச்சனைகளை ஆசிரியர் எடுத்துக் காட்டியுள்ளார். இந்நான்கு பெண்மாந்தர் படைப்பு வழியாகப் பெண்களின் மீதான அடக்குமுறையைச் சுட்டுவதோடு அதற்கு எதிராகப் பெண்கள் எதிர்கொள்ள வேண்டிய துணிச்சலான முன்னெடுப்புகளையும் சுட்டிச்செல்கிறார். பெண்ணியம் பேசப்படும் காலத்தில் பெண்கள் மீதான இச்சமூகத்தாக்குதல்களை, தனிமனித அடக்குமுறைகளை, சமூகக் கட்டுப்பாடுகளைப் படம்பிடித்துக் காட்டுவதோடு, பெண்ணின் தனித்துவங்களையும் சுட்டிச்செல்லும் படைப்பாளர் சு.தமிழ்ச்செல்வி புதினப் படைப்புலகில் தனித்த அடையாளம் எனலாம்.
துணைநூற்பட்டியல்
முதன்மைச்சான்று
சு.தமிழ்ச்செல்வி, “அளம்”, நியூசெஞ்சுரிபுக்ஹவுஸ், (பி) லிட், சென்னை. ஐந்தாம்பதிப்பு, ஜூன் 2019.
துணைமைச்சான்றுகள்
இராமலிங்கம்.மா, “நாவல்இலக்கியம்”, தமிழ்ப்புத்தகாலயம், சென்னை, 1972.
சிவத்தம்பி.கா, “நாவலும் வாழ்க்கையும்”, தமிழ்ப்புத்தகாலயம், சென்னை, 1973.
திருஞானசம்பந்தம்.ச, “தொல்காப்பியம் – பொருளதிகாரம் மூலமும் உரையும்”, கதிர்பதிப்பகம், 93, தெற்குவீதி, திருவையாறு. முதற்பதிப்பு, ஜூன் 2020.
பிச்சமூர்த்தி.ந, “தமிழ் இலக்கியக் கொள்கையும் திறனாய்வும்”, சக்தி வெளியீடு, சென்னை, 1980.
மோகன்.இரா, “டாக்டர். மு.வ.வின் நாவல்கள்”, சர்வோதய இலக்கியப் பண்ணை, மதுரை, 1972.
வெள்ளிமலை.க, “வில்லிபாரதம்ஓர்ஆய்வு”, முனைவர்பட்டஆய்வேடு, பூ.சா.கோ.கலை அறிவியல் கல்லூரி, கோவை 14.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









