முன்னுரை

நடையில் நின்று உயர் நாயகன் இராமனின் பெருமை குறித்து கூறும் கம்பராமாயணத்தில் அறிவியல் செய்திகளும் கூறப்பட்டுள்ளன. இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், பூச்சியியல், வானவூர்தியியல், மரபியல், வானியல், கணிதவியல், உளவியல் போன்ற பல துறை சார்ந்த கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. அவற்றுள் மருத்துவயியல் சார்ந்த கருத்துக்களை இக்கட்டுரையில் நாம் ஆராய்வோம்.

மருத்துவயியல்

மனிதனுக்கு ஏற்படும் நோய்கள் குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும், நோய்களைத் தீர்க்கும் வழிமுறைகள் குறித்தும்,விளக்கும் இயல் ’மருத்துவயியல்’ ஆகும்.

மருத்துவம் - பொருள்:

மருத்துவம் என்பதற்குக் கழக அகராதி ’ஒருவகை யாழ், வைத்தியம்,மருந்து,பரிகாரம், பிரசவம் பார்க்கும்தொழில்’ ஆகிய பொருள்களைத் தருகிறது.

கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதியானது நோய்க்கான காரணத்தைக் கண்டறிவதற்கும், நோயைக் குணப்படுத்துவதற்கும் முறையான பயிற்சியைக் கொண்டதொழில். பிரசவம் பார்ப்பதற்குச் செய்யும் உதவி, ’பிரசவகால மருத்துவர்’ என்ற மேற்கூறிய பொருளைத் தருகிறது.

மருந்து

உடலுக்கும், உள்ளத்திற்கும் ஏற்படும் நோய்களைத் தடுத்து நீக்கும் பொருளை ’மருந்து’ என்று அழைக்கலாம்.சங்க காலத்தில் மருந்து என்றால் ’தீர்க்கும் பொருள்’ என்று பொருள்.மருந்து என்ற சொல்லிற்கு அமுதம், ஔடதம்,ஒடதம் என்று தமிழ் மொழியகராதி பொருள் தருகிறது.

பிணி, நோய் வேறுபாடு

சங்க இலக்கியங்களில் 'பிணி' என்பதற்கும், 'நோய்' என்பதற்கும் இடையே கருத்து வேறுபாடு நன்கு உணர்த்தப்படுகிறது. நோய் என்பது Pain Suffering என்பனவற்றைக் குறித்து அதன் வழியாக சுகவீனத்தைக் குறிக்கின்றது. பிணி என்பது தான் உண்மையில் ஆங்கிலத்தில் வரும் disease என்பதற்கான தமிழ்ச் சொல்லாகும்.

'நோய்' என்ற சொல் 'உடலை நோகச் செய்தல்' என்ற பொருளில் வழங்குகிறது. மனிதனை நொய்ப்படுத்தலால் அப்பெயர் ஏற்பட்டது என்றும் கூறலாம். 'பிணி' என்ற சொல் ‘உடலைப் பிணித்துக் கொள்ளல்' என்ற பொருளில் வழங்குகிறது.

உடலுக்குச் சிறிய அளவில் துன்பம் வந்தால் 'நோய்' எனவும், பெரிய அளவில் துன்பம் வந்தால் 'பிணி' எனவும் பொருள்படும்.

நோய்:

நோய் பத்து வகைப்படும் என்று பிங்கல நிகண்டு கூறுகிறது.மடங்கல், நீழல்,மடி,அஞர், அழுங்கல்,முடங்கு,பிணி,பையுள்,சூர் ஆகியவை நோயாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.( 8:149)

மருந்தின் வேறு பெயர்:

உறை, குளியம், ஓடதி, ஔடதம், அதிகம், யோகம் ஆகியவை மருந்தின் வேறு பெயர்களாகும். ( பிங்கலம் 9:140)

நிகண்டுகளில் மருத்துவம்

சேந்தன் திவாகரம், பிங்கலநிகண்டு, சூடாமணி நிகண்டுகளில் கூறப்பட்டுள்ள செய்திகளைக் காணலாம்.

சேந்தன் திவாகரம் 4;105)

உயிர்தரும் மூலிகையாகச் சஞ்சீவினி மூலிகைப் பயன்பட்டுள்ளது.

அம்பு, போர்க்கருவிகளால் ஏற்பட்ட காயத்திற்குச் சல்லியகரணி என்ற மருந்து பயன்பட்டுள்ளது.

இரண்டாக வெட்டுப்பட்ட உறுப்பை ஒட்டுவதற்கு சந்தானகரணி என்ற மருந்து பயன்பட்டுள்ளது.(4-103)

உடலில் ஏற்பட்ட காயங்கள் தழும்பு இல்லாமல் ஆறுவதற்குச் சமனியகரணி என்ற மருந்து பயன்பட்டுள்ளது.

பிங்கல நிகண்டு

பிங்கல நிகண்டு மருந்துகளை நான்கு வகையாக வகைப்படுத்துகிறது.

"சல்லியகரணி, சந்தானகரணி,
சமனியகரணி (முதலில் உதித்த)
மிருதசஞ்சீவினி மருந்து நால்வகையே"
(பிங்கல நிகண்டு 9:133)

சூடாமணி நிகண்டு:

மிருதசஞ்சீவினி, அமுது இரண்டும் மூர்ச்சை தீர்த்தே குற்றுயிர் தரும் மருந்து என கூறுகிறது.(4;64)

கம்பராமாயணத்தில் மருத்துவயியல்

கம்பராமாயணத்தில் வறுமைநோய், ஆசைநோய், பிறவி நோய், மனநோய், போர் நோய், சிந்தை நோய், காதல் நோய் , காமநோய், விம்மல் நோய், இன்னல்நோய், பிரிவுநோய், களைப்பு நோய், பசலைநோய் என்று பல நோய்கள் குறித்து கம்பர் குறிப்பிட்டுள்ளார்.

1.வறுமை நோய்:

தாடகை வதம் முடிந்த பிறகு இராமனை தேவர்கள் வாழ்த்தினர். அவர்கள் தம் இருப்பிடங்களுக்குச் சென்ற பிறகு, பிறரால் செய்ய முடியாத தவத்தை உடைய விசுவாமித்திரன், இராம லக்ஷ்மணருடன் தேவர்கள் சொரிந்த பூமாரியாலே வெம்மை நீங்கி குளிர்ச்சி பெற்ற அப்பாலை நிலத்தைக் கடந்தான். அதன் பின்னர் மண்ணுலகத்து வாழும் மக்கள் அடையும் வறுமை என்னும் நோயினைத் தீர்க்கும் மருந்தைப் போன்ற திருவெண்ணைநல்லூரில் வாழும் சடையப்ப வள்ளலுடைய சொல்லைப் போன்ற படைக்கருவிகளை விசுவாமித்திரன், இராமனுக்குக் கொடுத்தான்.

"மண்ணவர் வறுமை நோய்க்கு மருந்தான சடையன் வெண்ணெய்
அண்ணல் தன் சொல்லை அன்ன படைக்கலம் அருளினானே"
(வேள்விப் படலம் 399)

2.ஆசை நோய் :

மிதிலைக்காட்சிப் படலத்தில் ஆசையால் வருந்துகின்ற சீதை பட்ட துயரம் குறித்துப் பேசுகிறது. நறுமணம் பொருந்திய மென்மையான சந்தனக் குழம்பை வாரி, சீதையின் மென்மையான முலைகள் மீது தோழிகள் தொடர்ந்து பூசினர். அவ்வாறு பூசப் பூசச் சந்தனக் குழம்பு உலர்ந்து போக, உள்ளம் வெதும்பினாள். அத்தோழியர் விசிறிகளைக் கொண்டு வீசிக்கொண்டே இருக்க, அவள் வெப்பமடைந்தாள். காதல் நோயைத் தீர்க்கும் மருந்து இந்த உலகத்தில் உண்டோ?

" வீச வீச வெம்பினள் மென்முலை
ஆசை நோய்க்கு மருந்தும் உண்டாம் கொலோ"
(மிதிலைக் காட்சிப்படலம் 563)

3.பிறவி நோய் :

வாலி வதைப் படலத்தில் வாலி, இராமனிடம் என் தலைவ, எதையும் ஆராய்ந்து அறிய மாட்டாத குரங்கு என்று என்னை நினைத்து, நாய் போன்ற கடைபட்டவனான எளியேன், உன்னைக் குறித்து சொன்ன சொற்களை மனதில் கொள்ள வேண்டா. வருத்தத்தைச் செய்யும் என் பிறவியாகிய கொடிய நோய்க்கு அரிய மருந்தான ஐயனே, வேண்டியவருக்கு வேண்டிய வரங்களைத் தந்தருளும் வள்ளலே, நான் வேண்டிக் கொள்ளும் ஒன்றைக் கேட்பாயாக என்று திரும்பவும் சொல்லலானான்.

"அரந்தை வெம் பிறவி நோய்க்கும் அருமருந்து அனைய ஐயா
வரம் தரும் வள்ளால் ஒன்று கேள் என மறித்தும் சொல்வான்"
(வாலி வதைப் படலம் 354)

4.மனநோய்:

காட்சிப் படலத்தில் சீதை தான் இருக்கும் இடம் கரையன் அரிக்கவும் அவ்விடத்தை விட்டு எழுந்திடாத சீதை, மெல்லிய இலை உணவு முதலியவற்றை யார் பரிமாற இராமன் உண்பான்? என்று எண்ணி வருந்துவாள். விருந்தினர் வருவதைக் கண்டபோது உபசரிப்பவர் இல்லையே என்று எப்படித் துன்பப்படுவானோ? என்று நினைத்து விம்முவாள். நான் கொண்டுள்ள மனநோய்க்கு மருந்து உண்டோ? என்று எண்ணி மயங்குவாள்.

"மருந்து உண்டுகொல் யான் கொண்ட நோய்க்கு என்று மயங்கும்
இருந்த மாநிலம் செல் அரித்திடவும் ஆண்டு எழாதாள்"
(காட்சிப் படலம் 343)

5.போர் நோய் :

அதிகாயன் வதைப் படலத்தில் வயமத்தனை, இடபன் எதிர்த்துக் கூறும் போது, வெறும் வாயினால் சொல்வதற்கு உரிய வலிமையைக் கொண்டு செயலினால் அந்த வலிமை கொள்ளாமல், பலியை உண்ணும் வாழ்க்கையை உடைய பேய்களைக் கொண்டு இந்தப் போரில் வெற்றி பெறுவதற்காக வந்துள்ள பைத்தியக்காரனே, வல்லவன் போன்ற தோற்றத்தை மட்டும் பெற்று போர் என்னும் நோயினால் தாக்கப்பட்ட பிறகும் அதற்குரிய மருந்தை அறியாத ஒருவனே, உன் வல்லமை யாவும் இழந்து செயலற்றுப் போகப் போகிறாய். இதை நீயும் இன்னும் சிறிது நேரத்தில் காண்பாய் என்று சிறிதும் தளராத இடபன் கூறினான்.

"நோய் கொண்டு மருந்தைச் செய்யா ஒருவ நின் நோன்மை எல்லாம்.
ஓய்கின்றாய் காண்டி என்னாஉரைத்தனன் இடபன் ஒல்கான்"
(அதிகாயன் வதைப்படலம் 1899)

6.சிந்தை நோய் :

திரு அவதாரப் படலத்தில் வேள்வி செய்தால் குறைதீரும் என்று வசிஷ்டன் கூறினான். தசரதனிடம் மன்னவனே நீ வருந்த வேண்டாம், ஏழேழு உலகங்களை உடைய அண்டம் முழுவதையும் காக்க வல்ல புதல்வர்களை அளிக்கக்கூடிய யாகத்தை, நீ குற்றமற்ற முறையில் செய்து முடித்தால் உன் மனதுயரம் மறையும் என்றான்.

"பூதலம் முழுதும் தாங்கும் புதல்வரை அளிக்கும் வேள்வி
தீது அற முயலின் ஐய சிந்தை நோய் தீரும் என்றான்"
(திரு அவதாரப் படலம் 209)

7.காதல் நோய் :

மிதிலைக்காட்சிப் படலத்தில் சீதையின் காதல் குறித்து கூறும்போது காதல் மயக்கம் மிகுதியான போது உள்ளமும், உடம்பும் நூழிலையை ஒத்த தனது நுண்ணிடையைப் போலத் தளரப் பெறுபவளான சீதையினது உள்ளே செல்வதற்கு வழியாக அமைந்த நீண்ட கண்களின் வழியே புகுந்த காதல் நோயானது பாலில் கலந்த பிரை போல முழுவதும் பரவியது.

“கால் உறு கண்வழிப் புகுந்த காதல் நோய்
பால் உறு பிரை எனப் பரந்தது எங்குமே"
(மிதிலைக் காட்சிப்படலம் 525)

8.காம நோய் :

விராதன் வதைப் படலத்தில் இராமன் வினவ, விராதன் தன் வரலாறு கூறுதலில், அறிவை மயங்கும் படி வந்து சேர்ந்த காமம் எனும் நோய் தொடர்ந்ததனால் ஏற்பட்ட குற்றத்தினால் குபேரன் இரக்கம் இல்லாமல் என்னைச் சபித்தான். அச்சாபத்தால் அரக்க மகனானேன் என்று கூறினான் .

"கரக்க வந்த காமநோய்
துறக்க வந்த தோமினால்"
(விராதன் வதைப்படலம் 65)

9.விம்மல் நோய்

இராமன் காடு செல்ல இருக்கிறான் என்பதை அறிந்த அயோத்தி நகர மக்கள், தன்னை விட்டு உயிர்ப் பிரிதல் இல்லாத உயிர்கள் யாவும் பெருமூச்சுடன் உடம்பு பதறி, நிலை குழைந்து வருந்துதலாலும், இயல்பாக அமைந்துள்ள சிறந்த அழகு சிதைந்து போதலாலும், கலங்கச் செய்யும் துன்பம் மிகுதலாலும், முற்றிலும் அழியாத ஐந்து பொறிகளும் கலக்குதலாலும், தசரதனைப் போலவே உயிர் விடுகின்றதை ஒத்திருந்தது.

"ஓவு இல் நல் உயிர் உயிர்ப்பினோடு உடல் பதைத்து உலைய
மேவு தொல் அழகு எழில் கெட விம்மல் நோய் விம்ம”.
(நகர் நீங்கு படலம்502)

10.இன்னல் நோய்:

மருத்துவமலைப் படலத்தில் இராமன், அனுமனைப் புகழ்ந்து கூறும் போது, இந்திரஜித் பிரமாஸ்திரத்தை விடுத்த இந்த நாளில் எவரும் இறக்காமல் எம்மோடு இருந்து நீண்ட காலம் வாழுமாறு அருளினாய் .இங்ஙனம் அருளிய நீ, துன்பம் விளைவிக்க கூடிய பிணி ஒன்றையும் அடையாது, இன்பமாக என் ஏவலால் என்றும் வாழ்வாயாக என்று வாழ்த்தி அருளினான் இராமன்.

"ஒன்றும் இன்னல் நோய் உறுகிலாது நீ
என்றும் வாழ்தியால் இனிது என் ஏவலால்"
(மருத்துமலைப் படலம் 2757)

11.பிரிவு நோய் :

கார்காலப் படலத்தில் பொருள் தேடுவதற்காக அயல்நாடு சென்ற தலைவரைப் பிரிந்ததால் உயிர் நீங்கிய உடல் மட்டும் கொண்டுள்ள தலைவியருக்கு, உருண்டு செல்லும் தேர்களின் மீது பிரிந்த தலைவர்களாகிய உயிர்களை மீட்டுக் கொண்டு வந்து சேர்ப்பதால் கார்கால மழைகள், மயக்கத்தைச் செய்யும் அந்தத் தலைவியரின், பிரிவுத் துன்பமாகிய பெரும் பாம்புகள் அழியுமாறு வந்த கருடனைப் போன்று விளங்கின.

" மருள்தரு பிரிவின் நோய் மாசுணம் கெட
கருடனைப் பொருவின கால மாரியே"
(கார்காலப் படலம் 461)

12. களைப்பு நோய்:

களைப்பு நோய் வந்தால் ஓய்வாக இருந்து நன்கு உறங்கி எழுந்தாலே சரியாகிவிடும். இந்திரஜித் அனுப்பிய நாகபாசத்தால் மயங்கி விழுந்த இலட்சுமணன், கருடன் வந்ததால் பிழைத்து எழுந்த செய்தியை அறிந்த அவன் இராவணனிடம் இன்று ஒரு பொழுது களைப்பு நீங்கி நாளை களம் புகுவேன். நான்முகன் படை கொண்டு உனக்கு வெற்றி நல்குவேன் என்றான்.

“இன்று ஒரு பொழுது தாழ்ந்து என் இகழ் பெருஞ் சிரமம் நீக்கிச்
சென்று ஒரு கணத்தில் நாளை நான்முகன் படைத்த தெய்வ
வென்றி வெம்படையினால் உன் மனத்துயர் மீட்பென் என்றான்”
(நாக பாசப் படலம் 2243)

13. பசலைநோய்:

பசலை நோய் காமத்தால் ஏற்படும் நோயாகும். துணையின் பிரிவினால் உடல் வெளிறிப் போவதைக் குறிக்கிறது.

உலாவியற்படலத்தில் இராமன் உலா வருவதைக் கண்ட ஒரு மங்கை வில்லைப் போன்ற புருவத்திலும், நெற்றிலும் வேர்வை தோன்ற, உடம்பு முழுவதும் பசலை நிறம் மிகுதியாகப் பரவ மனம் தளர நின்று இராமன் வருவதைக் கண்டாள். அவளது காதல் மிகுதியால் இராமனுடன் வரும் சேனையைக் காணாமல் இராமன் ஒருவனை மட்டுமே கண்டாள். அதனால் வள்ளலாகிய இராமன் தனித்து வருகிறானோ என்று கூறினாள்.

“வில் தங்கும் புருவம் நெற்றி வெயர் வர பசலை விம்மிச்
சுற்று எங்கும் எறிப்ப உள்ளம் சோர ஓர் தோகை நின்றாள்”
(உலாவியற்படலம் 1022)

கார்காலப் படலத்தில் புகழ் நிரம்பிய நூல் கேள்வியின் பொருட்டு நல்லாசிரியர் இருக்கும் இடத்தை நோக்கி அயல்நாட்டுக்குப் பிரிந்து போன தலைவரால், இனிய பசலை நிறத்தை அடைந்த மாதரைப் போல, பாக்கு வர குலைகள் எல்லாம் தம் நிறம் மெல்ல மெல்ல நீங்கப் பெற்று இகழ முடியாத பொன் நிறத்தைப் பெற்றன.

“சொல் நிறை கேள்வியின் தொடர்ந்த மாந்தரின்
இந் நிறப் பசலை உற்றிருந்த மாதரின்
தன் நிறம் பயப்பய நீங்கித் தள்ள அரும்”
(கார்காலப் படலம் 556)

பதிமூன்று வகையான நோய்கள் குறித்தும் கம்பராமாயணத்தில் கூறப்பட்டுள்ளதை நாம் அறிந்து கொள்ளமுடிகிறது.

நோய் உனக்கு நான்

இராவணன் மந்திரப் படலத்தில் வீடணன், இராவணனுக்கு அறிவுரை கூறும் போது, தீயில் முழுகியவளும் தெய்வத்தன்மை கொண்ட கற்பினையுடைளுமான வேதவதி என்பவள், வாயால் சொல்லிய சொல்லின் விளைவை வாராமல் தடுக்கும் ஆற்றல் நமக்கு உள்ளதோ. அவள் நான் உனக்குத் துன்பத்தை விளைவிப்பவள் ஆவேன் என்று கூறினாள் .அவளே முன்பு பாற்கடலில் தோன்றிய திருமகளின் அம்சமான சீதையாவாள் என்று கூறினான்.

"நோய் உனக்கு யான் என நுவன்றுளாள் அவள்
ஆயவள் சீதை பண்டு அமுதின் தோன்றினாள்"
(இராவணன் மந்திரப் படலம் 92)

உயிரோடு கூடவே தங்குகின்ற கொடிய நோய் :

சூர்ப்பணகைப் படலத்தில் பஞ்சவடியில் இராமனை, சூர்ப்பணகை காணும் போது, இராவணனை வேரோடு அழியும்படி ஒழிக்கப் போகும் வல்லமை உள்ளவள் சூர்ப்பணகை. அவள் உயிர்த் தோன்றிய முற்காலத்தில் அந்த உயிரோடு கூடவேத் தோன்றி, தான் வெளிப்படுவதற்கு உரிய காலத்தை எதிர்பார்த்துக் கொண்டு உயிரோடு கூடவே தங்குகின்ற கொடிய நோயை ஒத்தவள்.

"மேலை நாள் உயிரொடும் பிறந்து தான் விளை
காலம் ஓர்ந்து உடன் உறை கடிய நோய் அனாள்"
(சூர்ப்பணகைப் படலம் 225)

பிறவி நோய்க்கு நீ மருந்து தந்தாய்:

இரணியன்வதைப் படலத்தில் பிரகலாதன், திருமாலை வணங்கும்போது தாயும், தந்தையும் எனக் கூறப்படுகின்ற அன்பின் தகுதியுடனே வந்து நீயே என்னைப் படைத்தாய். நீ வீற்றிருக்கப்பெறும் உள்ளத்தை உடையவன் நான். எனக்கு பிறவி எனும் பிணியைத் தந்த நீயே, அந்தப் பிணிக்கு மருந்தும் ஆவாய் என இவ்வாறு வாயில் வந்த சொற்களைச் சொல்லித் துதித்து பிரகலாதன், திருமாலை வணங்கினான்.

"நோய் தந்தவனே நுழல் தீர்வும் எனா
வாய் தந்தன சொல்லி வணங்கின னால்"
(இரணியன் வதைப் படலம் 242)

மருந்தினை ஒத்திருப்பான்

தசரதச் சக்கரவர்த்தி எல்லோரிடத்தும் அன்புடையமையால், பெற்ற அன்னையை ஒத்திருப்பான். எல்லாத் தன்மைகளையும் தருவதால் தவத்தை ஒத்திருப்பான். தான் முன்னிலையில் நின்று செல்லுவதற்கு உரிய நல்ல கதியில் செலுத்தும் தன்மையால் புதல்வனை ஒத்திருப்பான். யாரேனும் ஒருவர் நோய் போன்ற தீமை உடையவரானால் அத்தீமையைப் போக்கும் மருந்தினை ஒத்திருப்பான். நுட்பமான நூல்களை ஆராயும் தன்மையில் அறிவை ஒத்திருப்பான் .

"நோய் ஒக்கும் என்னின் மருந்து ஒக்கும் நுணங்கு கேள்வி
ஆயப் புகும் கால் அறிவு ஒக்கும் எவர்க்கும் அன்னான்
(அரசியல் படலம் 172)

தெய்வ மருந்து

மருந்து குறித்தும் கம்பராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது. தசரதன் இறந்தவுடன் கோசலை வருந்திப் பலவாறாகப் புலம்பினாள். தனது உந்தி மலரில் வீற்றிருக்கும் பிரம்மனுடன் எல்லா உலகங்களையும் ஈன்றவனான திருமாலைப் பெற்றெடுக்கச் சிறந்த தவம் செய்தவளாகிய கோசலை கணவனை இழந்து, கைக்கு எட்டிய தேவாம்ருதத்தை இழந்தவரைப் போல பெருந்துயர் அடைந்து தனது அரிய மாணிக்கத்தை இழந்த பாம்பைப் போல, வாடி பிரிவறியாத ஆணை இழந்த பெண் அன்றிலைப் போலப் புலம்பத் தொடங்கினாள்.

"மருந்து இழந்தவரின் விம்மி மணி பிரிஅரவின் மாழ்கி
அருந்துணை இழந்த அன்றிற்பெடை என அரற்றலுற்றாள்"
(தைலமாட்டுப்படலம் 586)

நல்ல அமிர்தம் போன்ற மருந்து

மீட்சிப் படலத்தில் பரதனுக்கு, இராமனது மோதிரத்தைக் காண்பித்தான். கண்ணால் பார்த்ததும் அந்த மோதிரம் அங்கு திரண்டுள்ள உலக மக்களுக்கும், இராமனின் தம்பியான பரதனுக்கும் பூட்டப்பட்ட கொடிய விஷத்தை உண்டு இறக்கும் சமயத்தில் இருப்பவருக்கு, ஊட்டப்பட்ட நல்ல அமிர்தத்தைப் போன்று விளங்கியது.

" ஊட்டிய நன் மருந்து ஒத்ததாம் அரோ.
ஈட்டிய உலகுக்கும் இளைய வேந்தருக்கும் "
(மீட்சிப் படலம் 4136)

துன்பத்தைத் தணிவிக்கத்தக்க வல்லமை பெற்ற மருந்து உண்டோ:

சீதையின் அழகைப்பற்றி சூர்ப்பணகை, இராவணனிடம் கூறினாள். காமத்தீயால் வருந்தினான் இராவணன். சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலத்தில் மரங்களும் ,நெருப்பும் ,மலைகளும் குளிர்ச்சி பெறுமாறு வந்து தங்கி இருந்த மெல்லிய பின்புனி காலம், இராவணனை நெருப்பைப் போல எரித்தது என்றால், இளவேனில் காலத்து இயல்பினை எடுத்துச் சொல்ல வேண்டுமோ? வேண்டியதே இல்லை. அதுவும் அவனை எரித்தது. காமம் எனும் விஷத்தை உட்கொண்டவர்கள், அதனால் அனுபவிக்கும் துன்பத்தைத் தணிக்கதக்க வல்லமை பெற்ற மருந்து உள்ளதோ இல்லை .இன்பம், துன்பம் எனும் இரண்டு நிலைகளும் புரத்தே உள்ள பருவநிலையைப் பொறுத்து அமையாமல், அவரது மனதின் நிலையை பொறுத்து அமைவன அல்லவா?

"அன்பு எனும்விடம் உண்டாரை ஆற்றல் ஆம் மருந்தும் உண்டோ
. இன்பமும் துன்பமும் தானும் உள்ளதோடு இயைந்த அன்றே"
(சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் 651)

உயிர் மீளும் மருந்து:

உருக்காட்டு படலத்தில் அனுமன், சீதையிடம் மோதிரத்தைத் தந்தான். சீதைக்கு அவ் அழகிய மோதிரம் பசியால் துன்புற்றவர்கள் பெற்று உண்ணும் அமுதத்தை ஒத்தது. இல்லறத்தை ஏற்றுக் கொண்டவரை அடைந்த விருந்தினரை ஒத்தது என்று சொல்லும்படியாக இருந்தது. இறக்கும் நிலையில் உள்ள உயிர்ப் பிழைப்பதற்குக் காரணமான சஞ்சீவினி என்னும் மருந்தையும் ஒத்தது என்று சொல்லும்படி இருந்தது இச்சிறப்பு பெற்ற இராமனது மோதிரம் ஆனது வாழ்க .

"விருந்தும் எனல் ஆகியது வீயும் உயிர் மீளும்
மருந்தும் எனல் ஆகியது வாழி மணி ஆழி"
(உருக்காட்டு படலம் 556)

உயிர் காக்கும் சஞ்சீவினி மருந்து:

அனுமன், சீதையைச் சந்தித்ததைத், திரும்பி வந்து இராமனிடம் கூறும்போது, என் தந்தை போன்றவனே, நான் சொன்ன அடையாளங்கள் அனைத்தையும் தன் அறிவினால் ஆராய்ந்து தெரிந்து, எனது மனதில் வஞ்சகம் இல்லை என்பதை முற்றிலும் அறிந்து, உனது அழகிய மோதிரத்தைக் காட்ட பொருத்தமாக உற்றுப் பார்த்தாள். அந்த மோதிரம் மரணம் நேரும் காலத்தில் உயிரை நிலை நிறுத்திக் காக்கும் சஞ்சீவினி எனும் மருந்தைப் போன்றது என்று கூறினான்.

"முறிவு உற எண்ணி வண்ண மோதிரம் காட்டக் கண்டாள்
இறுதியின் உயிர் தந்து ஈயும் மருந்து ஓத்தது அனையது எந்தாய்"
(திருவடி தொழுத படலம் 1287)

என்று நோய் குறித்தும் மருந்து குறித்தப் பதிவுகளும் கம்பராமாயணத்தில் காணப்படுகின்றன.

சொல்லே மருந்து;

ஒரு சில நேரங்களில் நாம் கூறும் மென்மையான ஆதரவான சொல்லே பாதிக்கப்பட்டவருக்கு நோய் தீர்க்கும் மருந்தாகும்.

அனுமன் சீதையிடம், அவளைப் பிரிந்த பின் பெருஞ்சினம் கொண்ட இராமன் தன் சினத்தை உலகப் பொருள்கள் மீது காட்டாவாறும்பிராட்டியின் பிரிவுத் துயரால் மனம் உடைந்து வருந்தாதவாறும் இலட்சுமணனுடைய சொற்கள் இராமனுக்கு அருமருந்தாய் உதவிக் கொண்டிருக்கும் திறத்தை,

"வேறுற்ற மனத்தவன் இன்ன விம்மல்நோவ
ஆறுற்ற நெஞ்சின் தனது ஆருயிர் ஆயதம்பி
கூறுற்ற சொல்என்று உளகோதறு நன்மருந்தால்
தேறுற்று உயிர்பெற்று இயல்வும் சிலதேறலுற்றான்"
(உருக்காட்டுபடலம் 575)

கண்சிகிச்சை, உறக்கமின்மை, சஞ்சீவினி மருந்து, அறுவைச் சிகிச்சை, கை கால்களைப் பிடித்து விடுதல், வயாநோய் ஒத்தடம் கொடுத்தல், உடல் பதப்படுத்துதல் குறித்தப் பதிவினை கம்பராமாயணத்தில் நாம் காணமுடிகிறது.

1.கண் சிகிச்சை:-

கண் முதலிய நுட்பமான பகுதிகளில் இரும்புத் தூள் புகுந்துவிட்டால் காந்தத்தைக் கொண்டு இக்காலத்தில் சிகிச்சை செய்கின்றனர். இராவணவதம் முடிந்த பிறகு தயரதன் உம்பருலகத்திலிருந்து நில உலகிற்கு வந்து இராமருடன் உரையாடும் பொழுது,

“அன்று கேகயன் மகள் கெண்ட
வரம் எனும் அயில் வேல்
இன்று காறும் என் இதயத்தில்
இடை நின்ற தன்னைக்
கொன்று நீங்கலது இப்பொழுது
அகன்றது உன் குலப்பூண்
மன்றல் ஆகமாம் காந்தமா
மணியின்று வாங்க"
(கம்பராமாயணம் யுத்தகாண்டம் மீட்சிப்படலம் 4009)

அன்று கைகேயி தன் இதயத்தில் பாய்ச்சின வரம் என்னும் கூரிய வேல் இன்று இராமனைத் தழுவியதனால் அவன் மார்பாகிய காந்தம் அதனை வாங்கிவிட்டது என்று கூறுவதில் நவீன சிகிச்சை முறையின் குறிப்பு தெரிகிறது.

2. தூக்கமின்மை:-

உறக்கத்தைப் பற்றி ஷேக்ஸிபியர் கூறும் விளக்கம் மருத்துவ வல்லுனர்கள் ஆய்ந்து கண்ட உண்மையோடு அப்படியே ஒன்றுகிறது.

"Sleep that knilt up that travelled sleeve of care the death of each day's life, sore labours bath blem of hurt minds, great natures second course chief neurisher in life's feast"

தூக்கமில்லாமையால் ஏற்படும் பிரச்சனைகளைக் கூறி அதன் வழியாக உறக்கத்தின் உயர்வையும், சிறப்பையும் குறுந்தொகை, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறியுள்ளது.

உளவியல் பகுப்பாய்வாளர்கள் (Psychoanolysts) 'துஞ்சா நோயினை கூறுகின்றனர். ஆராய்ந்து கண்டுபிடித்த (Insonnia) தூக்கமின்மையை அவர்கள் போக்கிலேயே

“கவலை யாத்த அவல நீளிடைச்

சென்றோர் கொடுமை ஏற்றி துஞ்சா
நோயினும் நோய் ஆகின்றே“
(குறுந்தொகை 224)

கம்பராமாயணத்தில் காட்சிப் படலத்தில் அசோகவனத்தில் அரக்கியர் நடுவே இருந்த சீதை தூக்கம் என்று கண்களை மூடுதலையும், திறத்தலையும் துறந்தாள்.

“துயில் எனக் கண்கள் இமைத் தலும் முகிழ்த் தலும் துறந்தாள்“
(காட்சிப்படலம் 332)

விழித்த கண்ணன்

குகப்படலத்தில் இராமனும், சீதையும் நாணல் புல்லில் படுத்து உறங்கினர். கண் இமைக்காது இலட்சுமணன் நின்று அவர்களைக் காவல் காத்தான்.

“வெம்பி வெந்து அழியா நின்ற நெஞ்சினன் விழித்த கண்ணன்
தம்பி நின்றானை நோக்கி தலைமகன் தன்மை நோக்கி“
(குகப்படலம் 657)

தூக்கமின்றி தவித்தான் இராமன்

சீதையிடம் ஏற்பட்ட பிரிவை இராமனுக்கு உண்டாக்கி தந்த குற்றவாளிகளான அரக்கர்கள் தம் மனதிலே நினைத்தது என்ன என்பதை நாம் அறிந்து தெரியவில்லை ஆனால் அப்பிரிவுத் துயரால் இராமன் என்னும் புண்ணியமூர்த்தியின் கண்களும் இப்போது மூடி உறங்காதவை ஆயின. அதனால் இராமன் கண்கள், வனவாசம் மேற்கொண்ட நாள் முதல் உறங்காமல் இருந்த வலிய தோள்களை உடைய தம்பியான லக்ஷ்மணனின் கண்களை இப்போது ஒத்திருந்தன.

“எண்ணியது அறிதல் தேற்றாம் இமைத்தில இராமன் என்னும்
புண்ணியன் கண்ணும் வன் தோள் தம்பி கண் போன்ற அன்றே“
(அயோமுகிப் படலம் 1029)

3.மருத்துமலை

மருத்துமலைப் படலத்தில் இந்திரசித் ஏவிய பிரம்மாத்திரத்தால் இராமன், இலட்சுமணன் உள்ளிட்ட அனைவரும் மயங்கிக் கிடப்பதைக் கண்ட சாம்பன், அனுமனிடம் சஞ்சிவி மருந்து இருக்கும் கரியமலைக்குச் செல்லும் முறையைக் கூறினான்.இறந்தவரைப் பிழைக்கச் செய்யும் மருந்து ஒன்றும், உடல் வேறு வேறு பிளவாகப் பிளந்தாலும் ஒட்டும்படி செய்யும் ஒரு மருந்தும், உடம்பில் பதிந்த ஆயுதங்களை வெளிப்படுத்தும் ஒரு மருந்தும், உருவம் சிதைந்து குலைந்துவிட, திரும்பவும் அதே உருவத்தைத்தரத்தக்க உண்மையான ஒரு மருந்தும் உள்ளன. வீரனே அங்கே சென்று அம்மருந்துகளைக் கொண்டு வருக என்று அம்மருந்துகளின் அடையாளங்களையும் உரைத்தான் அறிவில் சிறந்தவனான சாம்பன்.

மருத்துமலை மருத்துவ குணங்கள்

அனுமனிடம் மருத்துவமலையைக் கொணரச் சொன்னபோது அம்மலையின் மருத்துவ குணங்கள் குறித்து சாம்பன் கூறினான். நீ கொணர உள்ள மருத்துவமலையில் உள்ள மருந்து மூலிகைகள்.

1.சஞ்சீவகரணி- இறந்தவர்களைப் பிழைப்பிப்பது

2.சந்தானகரணி- உடம்பு வெவ்வேறு கூறுகளாய்ப் பிரிக்கப் பட்டாலும் பொருந்த செய்வது.

3.சல்லிய கரணி- உடம்புலே புதைந்த படைக்கலன்களை வெளிப்படும் படி செய்வது

4.சாவரணியகரணி- அடையாளம் தெரியாத வண்ணம் உருவழிந்த உடம்பை அதன் இயற்கை உருவம் அடைய செய்வது.

“மாண்டாரை உய்விக்கும் மருந்து ஒன்றும்
மெய் வேறு வகிர்களாகக்
கீண்டாலும் பொருதுவிக்கும் ஒரு மருந்தும்
படைக்கலங்கள் கிளர்ப்பது ஒன்றும்
மீண்டேயும் தவ உருவை அருளுவது ஓர் மெய்ம்
மருந்தும் உள நீ வீர
ஆண்டுஏகி கொணர்தி என அடையாளத்தோடும்
உரைத்தான் அறிவின் மிக்கான்”
(மருத்துமலைப்படலம் 2671)

இத்தகைய மருந்துகள் நான்கும் தேவர்கள் பாற்கடலைக் கடைந்த காலத்தே வெளிப்பட்டவை. அத்தேவர்கள் அம்மருந்துகளின் ஆற்றலை எண்ணிப் பாதுகாப்பாக வைத்தனர்.வேதத்திற்கும் எட்டாத மேலான சோதி வடிவினனான வாமனன் திருமால், திரிவிக்ரமன் இந்த உலகங்கள் மூன்றினையும் தன் இரண்டு திருவடிக்குள் அடக்கி விளங்கிய காலத்தில், நான் வெற்றி முரசு முழக்கியபோது, அந்த மருந்துகளைக் கண்டு வினவினேன். பழமையான முனிவர் அவற்றின் குணங்களை எனக்கு அறிவித்தார் என்றார்.(மருத்துமலைப்படலம் 2672)

மருத்துமலையின் தன்மை

தெய்வத்தன்மை வாய்ந்த மருந்துக்கு அறிகுறி, மேலுலகம் முழுவதும் சூரியனின் ஒளி குறையும்படி ஒளிவிடுவது என்று சாம்பன் கூறியிருந்தான். அனுமனும் சென்று மலையை அடியோடு பெயர்த்தெடுத்து வந்தான். அதற்குள் மயக்கம் தெளிந்து எழுந்த இராமனிடம், மருந்து குறித்து சாம்பன் கூறினான். அம்மருந்தில் ஒன்று உடலில் தைத்த படைகளைப் போக்கக்கூடியது.ஒன்று மூட்டுவாய்களை ஒன்று சேருமாறு பொருத்துவது.ஒன்று பிரிந்த, சிறந்த உயிரை மூட்டுத் தருவது. மற்றொன்று நல்ல உடலை முன்னிருந்தபடியே செய்வது என்று கூறினான்.

“சல்லியம் அகற்றுவது ஒன்று சந்துகள்
புல்லுறப் பொருந்துவது ஒன்று போயின
நல் உயிர் நல்குவது ஒன்று நல் நிறம்
தொல்லையது ஆக்குவது ஒன்று தொல்லையோய்”
(மருத்துமலைப்படலம் 2734)

மருத்துமலையின் காற்றால் அனைவரும் உயிர்பெற்று எழுதல்

வஞ்சக அரக்கர்களின் ஊருக்கு வருவதற்கு மனம் ஒப்பாததால் தெய்வத்தன்மை பொருந்திய அந்த மலை வானிலேயே நின்றது.பிரம்மாத்திரத்தால் கட்டுண்டு இறந்து சுவர்க்கம் சென்றவர்கள் மருந்துக் காற்றுப்பட்டு தம் இறந்த உடலை அசைக்க, உயர்வும், மிக்க வலிமையும், அழகும் பெற்று இயமனையும் வென்று தம் பழைய உருவத்துடன் தோன்றினர்.(மருத்துமலைப்படலம் 2744)

நீண்ட அம்புகள், இலட்சுமணன் உடலிலிருந்து வெளி வந்தன. அங்ஙனம் வந்தமையால், வலி கொண்டு எரிந்த புண்கள் குளிர்ச்சியடைந்தன. உடலிலே செந்நிறமான கண்கள் சுழலத் தொடங்கின. உலகனைத்தும் வணங்கின. இலட்சுமணன் தன்னுணர்வு பெற்றான்.(மருத்துமலைப்படலம் 2746)

4.அறுவைச் சிகிச்சை

ஒருவர் உடலில் கட்டி ஏற்பட்டால் மருத்துவர் அதை வாளால் கீறி அறுத்து கெட்ட இரத்தத்தை நீக்கி, மருந்தினை வைத்துக் கட்டுவர் என்பதை,

"உடலிடைத் தோன்றிற் றொன்றை அறுத்த தன் உதிரம் ஊற்றிச்
சுடலுறச் சுட்டு வேறார் மருந்தினால் துயரம் தீர்வர்"
(கும்பகர்ணன் வதைப்படலம் 1358)

5.கை, கால்களைப் பிடித்து விடுதல்:

கை கால்களை பிடித்து விட்டால் நன்கு தூக்கம் வரும். செல்வர்களுக்குப், பணியாளர்களும், முதியோர்களுக்கு இளையோரும் கால் பிடித்து விடுவர். கணவனுக்கு மனைவி கால் பிடித்து விடுவதும் உண்டு.

சுக்ரீவன் மதுவுண்ட மயக்கத்தோடு பணிப்பெண்கள் கை, கால்களைப் பிடித்து விட உறங்கிக் கொண்டிருந்தான்.

"இள முலைச்சியர் ஏந்து அடி தை வர
விளை துயிற்கு விருந்து விரும்புவான்”
(கிட்கிந்தைப்படலம் 578)

அயோமுகிப் படலத்தில் மணல்களை பரப்பி அதன் மேலே தளிர்களையும், மலர்களையும் பரப்பி இலட்சுமணனால் அமைக்கப்பட்ட ஒரு படுக்கையில் வீரனாகிய இராமன் அளவற்ற துன்பத்தோடு படுத்துக்கொண்டான். இலட்சுமணன் அவனுடைய மெல்லிய பாதங்களைத் தடவிப் பிடித்தான்.

"எல்லையில் துயரினோடு இருந்து சாய்ந்தனன்
மெல்லடி இளையவன் வருட வீரனே"
(அயோமுகிப் படலம் 1118)

6.வயாநோய்

ஆடவனுடைய உயிரணு காரத்தன்மையுடையது (Alcaline by nature) என்றும், அது பெண்ணின் முட்டையோடு சேரும் போது அதனை நடுநிலையாக்கவே கருவுற்ற பெண்கள் புளிப்பு, உப்பு மற்றும் துவர்ப்புச் சுவையுடைய பொருட்களை விரும்பி உண்கின்றனர் என்று கூறுவர்.

உயிர் ஊக்கிகளின் (Harmones) சேர்க்கையால் வேதியியல் மாறுபாடு பெண்களின் உடலமைப்பிலும், உள்ளத்தின் போக்கிலும் ஏற்படுகிறது என்று இன்றைய மருத்துவ அறிவியல் கூறுகிறது. பெண்ணின் உடற்கூறு அமைப்பு ஆடவனிடமிருந்து வேறுபட்டது என்னும் அறிவியல் உண்மையை அக்காலச் சான்றோர்கள் அறிந்திருந்தனர் என்பது பெறப்படுகிறது.

கருவுற்ற மகளிர்க்கு மாதமான முதல் மூன்று மாதங்களில் மசக்கை அதிகமாக இருக்கும். இந்தக் காலங்களில் குமட்டல், வாந்தி என்பன போன்ற உணர்வுகள் ஏற்படும். இது இலக்கியங்களில் வயாநோய் என்று கூறப்படுகிறது.அப்போது மகளிர் புளிப்புச் சுவையை அதிகமாக விரும்பி புளியங்காய், மாங்காய் போன்றவற்றைப் பெரிதும் விரும்பி உண்பர்.மண்ணையும் விரும்பி உண்பர் என்று புறநானூறு கூறுகிறது. குறுந்தொகை (287:4-5) புறநானூறு (20:14-15) ஐங்குறுநூறு (51) கூறுகிறது.

கம்பராமாயணத்தில் தசரதனுடைய மனைவிகள் மூவரும் கருவுற்றார் பெறும் வயா என்னும் மசக்கை நோயைப் பெற்று, அதனால் உண்டாகும் துன்பத்தை அனுபவித்ததனால், ஒப்பற்ற அழகிய முகங்கள் மட்டுமல்லாமல், அழகு மிக்க உடம்பு முழுவதும் சந்திரனுக்கு ஒப்பாகத் தோன்றும்படி வெளுத்துக் காணப்பட்டனர்.

“தெரிவையர் மூவரும் சிறிது நாள் செலீஇ
மருவிய வயாவொடு வருத்தம் துய்த்தபின்
பொரு அரு திருமுகம் அன்றுப் பொற்பு நீறிடு
உருவமும் மதியமோடு ஒப்பத் தோன்றினார்”
(திருஅவதாரப்படலம் 280)

7.கம்பராமாயணத்தில் உடல் பதப்படுத்துதல்:

இறந்தவர்கள் உடலைக் கெட்டுப் போகாமல் பதப்படுத்திப் பாதுகாக்கும், அறிவியல் முறையும் தமிழர்கள் அன்றே அறிந்துவைத்திருந்தனர். கம்பராமாயணத்தில் இறந்த தசரதனின் உடலைத் தைலத் தோணியிலிட்டுப் பாதுகாத்த செய்தியினை,

“செய்யக்கடவ செயற்கு உரியசிறுவர் ஈண்டையார் அல்லர்
எய்தக் கடவ பொருள் எய்தாது இகவா என்ன இயல்பு எண்ணா
மையற் கொடியாள் மகனீண்டு வந்தால் முடித்தும் மற்றென்னத்
தையற் கடலிற் கிடந்தானைத் தயிலக் கடலின் தலைஉய்த்தான்”
(கம்பராமாயணம் - அயோத்தியாகாண்டம் தைலமாட்டுப் படலம் 598)

என்று தசரதன் உடல் தைலத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த செய்தியினை அறியமுடிகிறது.

செய்வதற்குரிய இறுதிக்கடமைகளைச் செய்வதற்கு உரிமை உடையவரான புதல்வர்கள் இங்கே இருக்கவில்லை. நடக்க வேண்டிய செயல் நடக்காமல் நிற்காது. இப்போது செய்ய வேண்டிய இயல்பான செயல் என்ன? என்று அமைச்சர்கள் ஆலோசித்தனர். "மயக்கும் திறமை பெற்ற, கொடியவளான கைகேயியின் மகன் பரதன் இங்கு வந்து சேர்ந்த பின்பு, ஈமக்கடன் முடிப்போம்" என்று முடிவு செய்தனர். அதனால் மகளிர் என்னும் கடலில் நடுவே இருந்த தசரதனை 'தைலம்' என்னும் கடலில் இட்டனர்.

இறந்தவர்களின் உடலைப் பதப்படுத்தி பாதுகாத்தல் என்பது பழங்காலத்திலேயே பழந்தமிழர் பயன்படுத்தினர் என்பதும், கம்பரும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்ததாலேயே அயோத்தியா காண்டத்தில் ஒரு படலமாக ’தைலமாட்டுப் படலம்' என்று தலைப்பிலேயேக் கொடுத்துள்ளார்.

கேகய நாடு சென்றிருந்த பரதன் திரும்பி வந்து, ஈமச் சடங்குகள் செய்ய 7 நாட்கள் ஆகும் என்பதால் தைலத்திலிட்டு பாதுகாத்தனர்.

“மண்ணின் மேல் விழுந்து அலறி மாழ்குவான்
அண்ணல் ஆழியான் அவனி காவலான்
எண்ணெய் உண்ட பொன் எழில் கொள்மேனியை
கண்ண நீரினால் கழுவி ஆட்டினான்”
(அயோத்தியாக் காண்டம்-பள்ளியடைப்படலம் 905)

தந்தையின் உடலைக் (7 நாட்கள் கடந்து பின்) கண்டவுடன் தரையில் விழுந்து கதறி அழுத பரதன், பெருமை மிகுந்த ஆணைச்சக்கரத்தை உடையவனாக இந்த உலகத்தை ஆண்ட தயரதனது எண்ணெயில் இடப்பட்ட பொன் போன்ற அழகிய உடம்பைத்தன் கண்ணிலிருந்து பெருகிய நீரால் கழுவி, நீராட்டி னான், என்றே கம்பர் குறிப்பிட்டுள்ளார்.

இதிலிருந்து தைலத்தில் இடப்பட்ட உடலானது 7 நாட்கள் கடந்த பின்பும், அழகு கெடாமல் இருந்தது என்பதும் பெறப்படுகிறது.

இந்திரசித் இறந்தபோது இராவணன் போர்க்களத்திலிருந்து அவனது தலையற்ற உடலை, அழுதுகொண்டே தன் கைகளில் ஏந்தியவாறே அரண்மனைக்குக் கொண்டு வந்தான். என் அன்பு மகனைக் கொன்றவர்களான இராம இலட்சுமணர்களைக் கொன்ற பின்பே, என் மகனுக்கு இறுதிச் சடங்கினைச் செய்வேன், அதுவரை இந்த உடலை தைலத்திலிட்டு பாதுகாத்து வையுங்கள் என்று வீரர்களிடம் கூறுனான்.(இராவணன் சோகப் படலம் 3185)

இதிலிருந்து இறந்த உடலைப் பதப்படுத்திப் பாதுகாத்து வைக்கும் வழக்கம் அன்றே இருந்தது என்பதை நாம் அறிந்து கொள்ளமுடிகிறது.

8.ஒத்தடம் கொடுத்தல்:

அடிபட்ட இடத்தில் ஒத்தடம் கொடுத்தல் என்பதும் மருத்துவத்தில் ஒரு வகையாகும். வீக்கம், இரத்தக்கட்டு, உள்காயம் ஏதேனும் ஏற்பட்டால் அந்த இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் அது குணமாகும். இது ’வேது கொடுத்தல்' என்று அழைப்பர். ஒத்தடம் என்பது துணிக்குள் தவிடு, உப்பு, மாட்டுச்சாணம் ஆகியவற்றால் ஏதாவது ஒன்றை வைத்து மறைத்துக்கட்டி அடுப்பில் சூடேற்றி அடிபட்ட இடத்தல் வைப்பதாகும். சில நேரங்களில் வெந்நீர் ஒத்தடம் கொடுப்பதும் உண்டு.

“தடமுலை வேது கொண்டோற்றியும்“
(கலிங்கத்துப்பரணி- கடைத்திறப்பு)

வீரர்களுடைய மனைவிமார் ஒத்தடம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

கம்பராமாயணத்தில் இந்திரசித் வதைப்படலத்தில் இலட்சுமணன், இந்திரசித்தை வதைத்து அவன் தலையை அங்கதன் தன் கைகளில் எடுத்து வந்து இராமனின் காலடியில் வைத்தான். இளவலின் மார்பு, தோள் இவற்றின் மேல் இரத்தம் படிந்த செந்நிறமுடைய காயங்கள் தன் திருமேனியில் புலப்படத் தன் திருவடிகளில் வணங்கியவனைத் தழுவினான். இராமன், இலட்சுமணன் சுமந்த அம்பறாத்தூணியைக் களைந்துவிட்டுத் தோளையும், மார்பையும் இறுக்கிக் கட்டிய கவசத்தினை ஒட்டிய கயிற்றைஅவிழ்த்து, அக்கவசத்தினை வேகமாக நீக்கி, உடலைத் தாக்கிய அம்புகளின் கூரிய நுனிகள் வெட்டிய புண்களும், வடுக்களும் இல்லாமல் மாறும்படி, இலட்சுமணனைப் பலமுறை அணைத்துப் பொன் போன்ற தன் அழகிய அகன்ற தோள்களாலே ஒற்றடம் கொடுத்துப் போக்கினான்.

“தூக்கிய தூணி வாங்கி தோளோடு மார்பைச் சுற்றி
வீக்கிய கவச பாசம் ஒழித்து அது விரைவின் நீக்கித்
தாக்கிய பகழிக் கூர் வாய் தடிந்த புண் தழும்பும் இன்றிப்
போக்கினன் தழுவிப் பல்கால் பொன் தடந்தோளின் ஒற்றி”
(இந்திரசித் வதைப் படலம் 3124)

முடிவுரை

திருமாலின் அவதாரமான இராமனின் பெருமைகளைக் குறிப்பிடும்போது அதில் அறிவியல் கருத்துக்களையும் ஏற்ற இடங்களில் தேவையான உதாரணங்களுக்காகக் கம்பர் பல செய்திகளை நூல் முழுவதும் பரவலாகக் கூறிச்சென்றுள்ளார். இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், பூச்சியியல், வனவூர்தியியல், மரபியல், வானியல், கணிதவியல், உளவியல் போன்ற துறை சார்ந்த கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன வறுமைநோய்,ஆசைநோய்,பிறவி நோய், மனநோய், போர் நோய், காதல் நோய் , காமநோய்,விம்மல் நோய், சிந்தை நோய் ,இன்னல்நோய், பிரிவுநோய் களைப்பு நோய், பசலைநோய் என்று பல நோய்கள் குறித்து கம்பர் குறிப்பிட்டுள்ளார். கண்சிகிச்சை, உறக்கமின்மை, சஞ்சீவினி மருந்து, அறுவைச் சிகிச்சை, கை கால்களைப் பிடித்து விடுதல், வயாநோய், ஒத்தடம் கொடுத்தல், உடல் பதப்படுத்துதல் போன்ற மருத்துவயியல் சார்ந்த கருத்துக்களை இக்கட்டுரையில் நாம் அறிந்து கொள்ளமுடிகிறது.

துணைநூற்பட்டியல்

1.செல்வம்.கோ,கம்பன் புதையல், சாரு பதிப்பகம், சென்னை 2016.
2.ஞானசந்தரத்தரசு அ.அ., கம்பன் புதிய தேடல், தமிழ்ச்சோலைப் பதிப்பகம், புதுக்கோட்டை, 2012.
3.ஞானசம்பந்தன் அ.ச இராமன் பன்முகநோக்கில், ,சாரு பதிப்பகம், சென்னை,2016.
4.பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி ,2,3,4,5,6,7,8. வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.

மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

* டிஜிட்டல் ஓவியம் - கம்பர் சிலை - கூகுள் நனோ  பனானா


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
 
வ.ந.கிரிதரன் பக்கம்
                                                                                             


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். இது இலாப  நோக்கற்று இயங்கும் இதழ். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. It operates on a not-for-profit basis. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்