கட்டுரையாளர்: முனைவர் ம.சியாமளா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை (சுழற்சி -1), குரு நானக் கல்லுரி (தன்னாட்சி), சென்னை. -


முன்னுரை

நல்ல வாழ்க்கை அமைய வேண்டுமெனில் நாமும் நல்ல செயல்களைச் செய்ய வேண்டும். அந்த வகையில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை அறிவுறுத்த வேண்டி, ஒரு நல்ல நெறிமுறைக்குட்பட்டு பல நல்ல கருத்துக்களை நல்வாழ்விற்காக கூறும் இலக்கியத்தில் வளையாபதியும் ஒன்று. அவை, ஒரு சமண சமயக் வழிகாட்டுதல்களாக எடுத்துரைக்கின்றது. வளையாபதி என்னும் காப்பியம் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது. இந்நூல் நமக்கு முழுமையாகக் கிடைத்திடவில்லை.

வளையாபதி - காலமும் கருத்தும்

வளையாபதி சமண சமயச் சார்புடைய காப்பியம் என்ற கருத்துண்டு, இது சீவக சிந்தாமணி எழுந்த காலத்தில் எழுந்தது என்றும் கூறுவர். இதன் காப்புச் செய்யுள் சிந்தாமணிக் காப்பின் கருத்தை அடியொற்றி அமைத்துள்ளது. மேலும், காப்புச் செய்யுளின் கருத்தைக் கொண்டு வளையாபதி சிந்தாமணிக்கு முற்பட்டது என்பாரும் உண்டு. எவ்வகையாயினும் வளையாபதி எழுந்த காலம் ஆய்வுக்குரியதாகவே அமைகிறது. வளையாபதி சமண சமயம் பற்றியது. இந்நூலை இயற்றியவர் யார் எனத் தெரியவில்லை. செய்யுளின் பண்புகளைக் கொண்டு இதனை இயற்றியவர் புலமைப் பண்புமிக்க நல்லிசைப் புலவர் எனத் திண்ணமாகக் கூறலாம் என சோமசுந்தரனார் தெரிவிக்கிறார். மேலும் அடியார்க்கு நல்லார், இளம்பூரணர் அரும்பதவுரையாசிரியர். பரிமேலழகர் முதலிய உரையாசிரியர் பெருமக்கள் வளையாபதி செய்யுளை மேற்கோளாக எடுத்திருப்பதனாலும் இந்நூல் தமிழ்மரபு மாறாக இயன்றதொரு நல்லிலக்கியம் எனவும் கூறுகிறார்.

இல்வாழ்க்கை நெறி

ஆணும் பெண்ணும் இணைந்து வாழும் இல்வாழ்க்கையில் அன்பின் வழி வாழும் வாழ்வு சிறந்தது என வளையாபதியில் கட்டப்பட்டுள்ளது. இதை வள்ளுவரும், அன்பின் வழியது உயர்நிலை என்றும்,

"தற்காத்து தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்து சோர்விலாள் பெண்” (குறள் 56)

எனக் குறிப்பிட்டுள்ளமையை அறியமுடியும். மனையறம் தெய்வத் தன்மையுடைதாய்ப் பொலிவதற்குக் கற்புடைய மகளிரே காரணமாக இருந்திருக்கின்றனர். இதனை,

"கூட வாற்றவர் நல்லது கூறுங்காற்
பாடு சான்மிகு பத்தினிக் காவதே" (வளையாபதி 4)

என வளையாபதி தெரிவிக்கிறது.

மக்கட்பேறு

இல்வாழ்க்கையினை அடுத்து மக்கட்பேற்றின் அவசியத்தினையும் வளையாபதி கூறுகிறது. மகப்பேறு இல்லாதவருடைய செல்வம்; பொறுமை இல்லாதவருடைய அறிவு; மணம் இல்லாத மாலை; நூல்கள் பல கற்காதவனுடைய புலமை; நல்ல நீர்நிலைகள் இல்லாத நகரம்; இவை அனைத்தும் பயனற்றதாய் வெறுக்கப்பட்டது. இதில் மக்கட்பேற்றின் முக்கியத்துவமும் மக்கட்பேறு பயனுடையது எனக் கூறுவது வள்ளுவரின்,

"மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன்
நன்கல நன்மக்கட் பேறு" (குறள் 60)

என்பதனை நினைவுறுத்துகிறது.

அறமனை காத்தல்

மனைவியைப் பேணல்; நல்விரதம் மேற்கொண்டு வாழுதல், கடமை எனக் கொள்ள வேண்டும் என்பதும் மனைகாக்கும் மனைவியர் பேணப்பட்டனர். அவற்றைத் தன் கடமையென ஆடவர் கொண்டனர் என அறியமுடிகிறது.

வாழ்வியல் கடமைகள்

களவு செய்யாதிருத்தல், உயிர்க் கொலை, பிறரை இகழ்தல், ஆராயாமல் நட்புக் கொள்ளுதல்; பிறர் மனைவியிடம் செல்லுதல்; இவை வெகுவாகக் கண்டிக்கப்பட்டிருக்கிறது. மேலும், பொய் கூறுதல், தீயாரொடு பழகுதல் இவை வெறுக்கப்பட்மையும் அறிய முடிகிறது. இதனை,

"பொய்யன் மின்புறங் கூறன்மின் யாரையும்
வையன் மின்வடி வல்லன சொல்லிநீர்
உய்யன் மின்னுயிர் கொன்றுண்டு வாழுநாள்
செய்யன் மின்சிறி யாரொடு தீயன்மின்" (வளையாபதி 13)

என்பதன் மூலம் அறியலாம்.

விருந்தோம்பல்

உண்டி கொடுத்தலின் உயர்வாகக் குற்றமில்லாத தானப்பொருள்கள் எத்துனையானாலும் அவையெல்லாம் உண்ணும் சோற்றிற்கு நிகராகாது எனக் கூறுவதில், உணவினை பிறர்க்குக் கொடுத்துதவும் உயர் பண்பு கூறப்படுகிறது.

அடக்கம் பேணுதல்

அடக்கம் அமரருள் உய்க்கும் என்ற வள்ளுவனாரின் வாய்மொழி போல் அடக்கம் மனிதனுக்கு அவசியம் என்கிறது வளையாபதி. நாவானது மக்களுக்கு ஆக்கம் தருவது, சொர்க்கம் (துறக்கம்) சொர்க்கம் செலுத்துவது; நாவடக்கம் இல்லையெனில் அது சிறைக்கோட்டம் செல்ல வைப்பது; நாவடக்கமின்மை நரகத்தில் வீழ்த்துவது என்றெல்லாம் தெரிகிறது அடக்கம் பேணுதலை அவசியப்படுத்தியிருக்கிறது வளையாபதி. இவை,

"காக்கப் படுவன விந்திரிய மைந்தினும்
நாக்கல்ல தில்லை நனிபேணு மாறே" (வளையாபதி 10)

இதையே,

'யாகாவா ராயினு நாகக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு" (குறள் 127)

எனும் குறள் தெரிவிக்கிறது.

வளையாபதியில் பொதுமை அறம்

அருளுடைமை

அரிய உயிரினங்களிடத்தில் அருள் செய்ய வேண்டும், நல்லறங்களை நாள்தோறும் மக்களுக்குக் கூறவேண்டும். தீவினைகளை அறவே பின்பற்றக் கூடாது. வஞ்சனை, மிகையாகிய மானம் இவற்றை வெறுத்து ஒதுக்கவேண்டும் என்பன போன்ற அருளாகிய பொதுமை அறத்தினை வளையாபதிச் செய்யுளில் காணமுடிகிறது. மேலும்,

"பொருளைப் பொருளாய் பொதிந்தோம்பல் செல்லா
தருளைப் பொருளா அறம்செய்தல் வேண்டும்" (வளையாபதி 17)

என்பதில் செல்வத்தின் பயன் ஈதல் எனும் அறக்கருத்தை அறியமுடிகிறது. அறநெறி நின்று பொருளீட்டுதலும், பிற உயிர்களுக்குத் தீங்கு நேராவண்ணம் நடந்து கொள்ளுதல் போன்றன, வீடு பேற்றினை அளிக்கக் கூடியது என்பதனையும் தெரிவிக்கிறது. திருட்டு (களவு) கண்டிக்கப்பட்டு, களவு செய்தோர் தண்டிக்கப்பட வேண்டியோர் என்பதனைப் பதிவு செய்திருக்கிறது.

வாய்மை அறம்

பொய் கூறாதவர் வாழ்நாளில் துன்பமின்றி இம்மையிலும், மறுமையிலும் இனிது வாழ்வார்கள் என வாய்மையின் வகைமை பற்றிக் கூறப்பட்டுள்ளது. பொய் கூறி வாழும் வாழ்க்கையின் அறிவு கெடுதலும், செல்வம் அழிதலும், இன்னும் பல்வகைத் துன்பங்கள் பெருகுதலும் உண்டாகும் என்கிறது வளையாபதி. அதுபோன்றே, கொல்லாமையும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. பிற உயிர்களைக் கொல்லாமையாகிய அறம் மேற்கொள்பவர்கள் இம்மை, மறுமையில் பயனையே பெறுவார்கள் என்றும் தெரிவிக்கிறது.

நிலையாமை

செல்வம், இளமை இவற்றின் நிலையாமையை எடுத்துரைப்பதில், மனிதனுக்கு அறம் கூறப்பட்டிருக்கிறது. செல்வத்தினை நாம் நிரந்தரமாகப் பேண முடியாது; எப்பொழுதும் நம்மை விட்டு நீங்கும் தன்மையுடையது. எனவே பொருள் பற்றினை ஒழிக்க வேண்டும் என்றும் இளமை நிலையில்லாது, இளமையில் அறம் செய்து வாழ்தல் நலம் பயக்கக் கூடியது என்றும் எடுத்தியம்புகிறது.

மனிதனுக்கு வரும் துன்பத்திலிருந்து விடுவிக்கும் ஆற்றல் இறைவன் ஒருவனுக்கே உண்டு என நாம் உணர வேண்டும். துன்பம் பிறரால் வருவது என்றும்; இன்பம் நம்மால் வந்தது என்றும், மகிழ்ந்து வாழ்வதைக் கைவிட வேண்டும் எனத் தெரிவிப்பதில்,

"யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தரவாரா" (புறம் 192)

என்ற கணியன் பூங்குன்றனாரின் மொழியை மெய்ப்பிப்பதாகவே அமைந்துள்ளது.

முடிவுரை

வளையாபதி நூலெனத் தமிழுக்குக் கிடைக்கப் பெறவில்லை எனினும், உரையாசிரியர்களின் உதாரணச் செய்யுள்கள் வழி சிறந்த அறநூலாகவும், காப்பியமாகவும் திகழ்வதை அறியமுடிகிறது. அன்பின் அவசியம் ஆண் பெண்ணுக்கு உணர்த்தப் பெற்றிருக்கிறது. கற்புடைய மகளிர் போற்றப்பட்டிருக்கின்றனர். மக்கட் பேருடையான் செல்வமே மகத்தானது என்கிறது. பொறுமை, புலமை, நல்விரதம், நற்கடமை போற்றப்பட்டிருக்கிறது. தீமை, திருட்டு கண்டிக்கப்பட்டிருக்கிறது. வாய்மை அறம் போற்றப்பட்டிருக்கிறது. பற்று இழந்தவன் இம்மை,மறுமை பயன் எய்துவான். இறைவழி செல்பவனே புனிதன் எனவும் வளையாபதி சிறப்புறத் தெரிவிக்கிறது.

துணை நின்ற நூல்கள்

பாரதிதாசன், வளையாபதி, பாரி நிலையம், சென்னை.

சத்தியப்பிரியன், எளிய நடையில் வளையாபதி, சுவாசம் பதிப்பகம், சென்னை.

இராமலிங்க பிள்ளை.வெ, திருக்குறள் உரை, பவாணி பதிப்பகம், சென்னை.

பாலசுப்பிரமணியன்.வெ, விசுவநாதன்.அ, புறநானூறு மூலமும் உரையும்,நியு செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

* டிஜிட்டல் ஓவியம் - AI


பதிவுகள்

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்