தமிழ்நாட்டில்; நாட்டியம், இசை போன்ற கலைத்துறைகளில் பிரபல்யமாகப் பேசப்படும் ஸ்ரீமதி கலைமாமணி மாலதி டொமினிக் அவர்களின் பெருமுயற்சியில் ‘தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்துடன் இன்டோ பிரிட்டிஷ் நாட்டிய, இசைவிழா அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முனைவர் ருக்மணிதேவி அருண்டேல் கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ்விழாவில் கலைமாமணி பாலமுரளிக் கிருஷ்ணா, இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா, நடிகை கலைமாமணி பி.எஸ்.சச்சு போன்ற தமிழ்நாட்டின் மிகப்பெரும் பிரபல்யக் கலைஞர்களின் வருகை மிகச்சிறப்பாகவே அமைந்திருந்தது. இத்தகைய பெரும் கலைஞர்களின் மத்தியில் இடம் பெற்ற கலைநிகழ்ச்சிகளில் இலங்கையில் கலைக்குடும்பத்தில் பிறந்த ‘நாட்டியக் கலாஜோதி’ செல்வி பார்கவி பரதன் தனது அனுபவம் மிக்க நர்த்தகி போன்ற பாவங்கள், ஜாலங்களால்; இந்தியக் கலைஞர்களின் பெரும் பாராட்டைப் பெற்றிருந்தார். தோற்றப் பொலிவோடு திகழ்ந்த செல்வி பார்கவி பரதன் புஷ்பாஞ்சலியை சங்கீரணசாப்லும், தில்லானாவை மிஸ்ரசாப்லும் தாளக்கட்டுப்பாடோடு வெளிப்படுத்தியவிதம் கலைஞர்களைப் பெரிதும் பரவசத்தில் ஆழ்த்தியிருந்தது. முருகப் பெருமான் மீதான அவர் ஆடிய வர்ணம், அபிநயமும், பாவமும், நடிப்பும் அனுபவம் மிக்கவர் போன்ற உணர்வை ஏற்படுத்தி ரசிகர்களை அனுபவிக்க வைத்தது. இணுவில் மண்ணிற்கு பெருமை தேடித்தந்த பிரம்மஸ்ரீ வீரமணி ஐயர் அவர்கள் இயற்றிய பாடலை ஸ்ரீமதி கிரிஜா ராமசுவாமி அவர்களின் இசையிலும்;;, லண்டனிலிருந்து சென்ற எம். பாலச்சந்தினின் மிருதங்கத்திலும், விநோதினி பரதன் அவர்களின் நட்டுவாங்கத்திலும் அவளின் பாதங்கள் பகிர்ந்துகொண்ட ‘பதத்தின்’ விதம் மக்களை லயிக்க வைத்தது.
செல்வி பார்கவியின் உணர்ச்சிமிக்க வீறான நாட்டியங்களுக்கிடையில் ஸ்ரீமதி விநோதினி பரதனின் மாணவியான, அரங்கேற்றம் கண்டு கொண்ட சிறுமி கிஷ்ணவி விஜயபாலன் ஆடிய ஜதீஸ்வரம், பதம் போன்ற நாட்டிய உருப்படிகள் சிறப்பாகவே இருந்தது.

இக்கலை நிகழ்ச்சியில் ‘ஸ்ரீ பரதநாட்டியாலயா கலை நிறுவனதினரால்’ செல்வி. பார்கவி பரதன் ‘நாட்டியக் கலா சுகணா’ என்ற பட்டம் வழங்கிப் பாராட்டப்பட்டதோடு லண்டன் பாரதீய வித்யா பவன் ஆசிரியர் திரு எம்.பாலச்சந்தர் அவர்களுக்கு ‘மிருதங்க வாத்திய விநோதா’ விருதும், ஆசிரியர் திருமதி சிவசக்தி சிவநேசன் அவர்களுக்கு ‘வைனிகா காயகா நிபுணா’ விருதும் வழங்கிக் கௌரவித்திருந்தமை பாராட்டுக்குரியதாகும்.
21வயதான செல்வி பார்கவி பரதன் குருவும், பெற்ற தாயுமான ஸ்ரீமதி விநோதினி பரதனிடமே நாட்டியத்தைப் பயின்றவர். ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகக் கொண்ட ஸ்ரீமதி விநோதினி பரதன் தனது தாயான ஸ்ரீமதி மகாலக்ஷமி லிங்கநாதபிள்ளையையே முதற்குருவாகக் கொண்டு நாட்டியம், இசை , வயலின் போன்ற கலைகளைப் பயின்றவர். இத்தகைய கலைப்பரம்பரையில் தோன்றிய செல்வி பார்கவி பரதன் நாட்டியத்தாரகையாகத் திகழ்வதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. தற்போது நாட்டிய ஆசிரியையாகச் செயற்பட்டுக்கொண்டிருக்கும் பார்கவியின் கலைப்பயணம் சிறப்போடு தொடரவேண்டுமென வாழ்த்துகின்றோம்.
மேலும் சில நிகழ்வுக் காட்சிகள் ....
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
18.2.2014






பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









