இந்தியக் கலாச்சாரத்தியே முதன்மையான பாரம்பரியக் கலையான பரதநாட்டியம், தென்னிந்திய தமிழ்நாட்டின் தெய்வீகத் தொன்மை கொண்டதும் மிகவும் பிரபலமானதுமாகும். இந்த நாட்டிய வடிவமானது, தெய்வீகத்தோடும் ஆன்மீகத்தோடும் இணைந்து, உடல்சார்ந்த பாவங்களை வெளிக்கொணரும் சாத்வீகமான தூயகலையெனலாம்.
ஆகவே, இந்துசமய, சமண மதங்கள் சார்ந்த ஆழ்ந்த சமயக் கோட்பாடுகளையும், தெய்வ வழிபாடுகள் சார்ந்த தத்துவங்களையும், உள்ளடக்கியே பரதநாட்டியங்கள் யாவையும் வடிவமைக்கப்படுகின்றன. ஆகவே, ஒரு சைவ சமய கோட்பாடுகளையும், சமய ஆசாரத்தையும் பேணிவாழும் குடும்பமொன்றில், என் மதிப்புக்குரிய ஆசிரியரான அமரர் அருணாசலம் அவர்களின் புதல்வியாக உதித்த திருமதி அம்பிகா சிற்சபேசன், சிறுமியாக இருக்கும்போதே இப் புனிதமான கலையில் கவரப்பட்டது ஆச்சரியமானதல்ல. அதோடு, பொறியியல் மேற்கல்வியைத் தொடரும் சந்தர்ப்பம் கிடைத்ததால் அந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தித் பரதநாட்டியக் கல்வியையும் பாரம்பரிய குரு சிஷ்யை முறையில் கற்று அதை முழுதாகக் கற்றுதகைமைசால் நடன வித்தகியாக வெளியேறினார்.
இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து வெவ்வேறு வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் உட்பட வேறு காரணங்களால் வந்து குடியேறிய இந்தியர்களும் நியூசிலாந்திலும் வாழ்கின்றனர். இப்படியான புலம்பெயர்ந்த நாம் மிகவும் இழந்து வருவது எமது உறவுகள் மட்டுமல்லாமல், எமது சமய கலாச்சாரங்களையும் எம் தாய் மொழியையும் அவற்றையொட்டிய இசை இயல் நாடகக் கலைகளையும் தாம். இந்நிலையில் இங்கு வந்து, கணித ஆசிரியப் பணியோடு, பரதக்கலையைத் தமிழர்களுக்கு மட்டுமல்லாமல், மற்றைய பிறமொழிபேசும் தென்னிந்தியர்கள் உட்பட்ட சகல இனத்தினர்க்கும் சென்றடையச் செய்வதற்கும், இந்தக் கலை வழிவழியாகக் தொடரவேண்டும் என்ற பெருநோக்கோடும், தமிழ் நியூசிலாந்து நடனப் பாடசாலையை ஆரம்பித்து, அர்ப்பணிப்புடன் அதன் நிறுவன இயக்குனராகவும் குருவாகவும் நடாத்தி, வெற்றி கண்டிருக்கிறார் அம்பிகா அம்மையார் அவர்கள். கடந்த இருபது வருடங்களாக ஆக்லாந்தில் வெற்றிநடைபோடும் அவரது பாடசாலையும் தொடர்ந்தொலிக்கும் சதங்கை ஒலியும் தாளச் சத்தமும் அதற்கு நற்சான்று பகிர்கின்றன.
நியூசிலாந்தில் வேறு இடங்களில் மட்டுமல்லாது, அவுஸ்திரேலியா, செசெல்ஸ் போன்ற இடங்களிலும் அம்பிகா அம்மையாரது மாணவர்கள் சென்னை வருடாந்த மார்கழி இசை நாட்டிய நிகழ்விலும் பங்குபற்றி புகழ் சேகரித்துள்ளார்கள். தமிழ்ச் சமுகத்தினரோடு மட்டும் நின்று விடாமல் பரந்த முறையில் நியூசிலாந்து வாழ் பல்வகைப்பட்ட சமுகங்கள் இணைந்த இந்திய, சீன, பசுபிக், மாவோரி இனங்களால் நடாத்தப்படும் பல்லின கலாச்சார பண்டிகை நிகழ்ச்சிகளில் தன் மாணவர்களைப் பங்கேற்ற வைத்து தமிழையும் அதன் சொத்தான பரதக் கலையின் சிறப்பையும் வெளிக்கொணர்ந்து வருகிறார். தமிழே ஒலியாகவும், இசையாகவும், பாடல்களாகவும், தமிழ் நியூசிலாந்து நடனப்பாடசாலையின் அடிநாதமாகத் திகழ்வதைக் காணலாம். அவரது பாடசாலை மாணவ மாணவிகளின் வருடாந்த நாட்டியச் சிறப்பு நிகழ்ச்சிகள் இலவசமாகப் பலருக்கும் கண்ணுக்கும் காதுக்கும் உளத்துக்கும் விருந்தாக இருப்பதை அடியேனும் பலதடவைகள் சென்று அநுபவித்திருக்கிறேன். அந்த நிகழ்ச்சிகளில் சைவ சமய அடிப்படைத் தத்துவங்களையும் போதனைகளையும் சார்ந்த தெய்வங்களின் ஆன்மீகக் கதைகளை உருவகப்படுத்தி, நாட்டிய உருவில் தயாரித்து பலரும் பயன் பெறச்செய்கிறார். அதேவேளையில் நாட்டியக் கலைக்குள் அடங்கும் இலட்சணங்கள் யாவும் ஒன்றிணைக்கப்பட்டு, மெருகேற்றப்பட்டு,அவரது நிகழ்ச்சிகள் தயாரிக்கப்படுகின்றன. அவ்வகையில் அண்மையில் நடைபெற்ற “கோவிந்தா" என்ற நாட்டிய நாடகம் கண்ணபிரானின் லீலைகளையும், தெய்வீகத் தன்மையையும், அவனது மகாபாரதப் பங்கேற்பையும் அழகுறக் காட்டிச் சபையோர் பாராட்டைப் பெற்றது. இளம் சிறார்கள் முதல் இளம் பருவத்தினர் வரையில் பல மாணவர்களை முறை தவறாமல் பயிற்றுவித்து மேடையேற்றும் ஆசானின் சிரமத்தையும் பெரு வெற்றியையும் வியக்காமல் இருக்கமுடியாது. அவர்களது தரம் கண்டு முன்னேற்றி வல்லுனராகவும் வழிகாட்டிகளாகவும் உயர்த்திவிடும் உயர் பண்பு, எம் தொடர் சந்ததியினர்க்கும் இக்கலை போய்ச்சேரும் வரப்பிரசாதமாக அமைகிறது.
அம்பிகா அம்மையாரின் அருங்கலை தொடரவும் பலமாகக் கைகொடுத்து அதை வளர்க்கவும் அவர் தேடிவைத்துள்ள பெரும்சொத்து, அவரது இரு அருமைப் புதல்வர்களான சகாயனும் , சேயவனுமே. தம் தாயையே குருவாக ஏற்றுப் பயின்று இன்று நாட்டியக் கலைஞர்களாக விளங்கும் அவர்கள் தம் குருவின் நிகழ்ச்சிகளில் முக்கிய பாத்திரப் பங்குகொண்டும் ஒலி, ஒளி மேடை அமைப்பு என்பவற்றைத் திறம்படக் கையாண்டும் புலிக்குப் பிறந்த பிள்ளைகளாக மிளிர்கின்றனர். வெவ்வேறு துறைகளில் பயிற்சிபெற்று உயர்ந்திருப்பினும் தம் தாயாரின் வழியில் பெரு மதிப்புடனும் விவேகத்துடனும் முன்னிற்பது மிகவும் பாராட்டக்கூடியது. அதற்கு எல்லாவற்றிக்கும் மேலாக, குடும்பத் தலைவனாகவும், தமிழ் ஆர்வலராகவும், ஆய்வாளராகவும், சைவசமய நெறிமுறைத் தொண்டுகளை இங்குள்ள சமுகத்தினர்க்கு மனமுவந்து வழங்கும் என் நண்பருமான திரு சிற்சபேசன் இவர்கள் யாவற்றுக்குமே உறுதுணையாக நின்று வழிநடத்துகிறார் என்பது "ஒரு பெண்ணுக்கு முன்னால் ஒரு உண்மையான தலைவனின் உழைப்பு பெருந்துணையளிக்கும்" என்ற ஒரு உண்மையை வெளிப்படுத்துகிறது .
நியூசிலாந்து பல்கலாச்சார கவுன்சிலின் "கலாச்சார சேவையாளர்" விருது, நியூசிலாந்து இந்தியக் கூட்டமைப்பின் "இந்தியக் கலாச்சார தூதுவர்" விருது, தமிழக அரசின் "அயலகத் தமிழ் சாதனையாளர்" விருது, நியூசிலாந்து தெலுங்கு அசோசியேஷனின் "நல்லாசிரியர்" விருது, சென்னை பாரத் கலாச்சார அமைப்பின் "நாட்டிய ஆசிரியர்" விருது போன்ற பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்ற ஸ்ரீமதி அம்பிகா சிற்சபேசன் அம்மையார் தனது கலை வாழ்வையும் அதன் பெறுபேறான கலைத் தொண்டையும் சிறப்புடன் தொடர்ந்து, அவராலும் அவருக்கு இணையாக வளர்ந்துவரும் அவரது புதல்வர்களாலும், பரதநாட்டியக் கலை நியூசிலாந்து மக்களினது வாரிசுகளுக்குப் போய்ச் சேர ஆண்டவனை வேண்டி வாழ்த்துவதில் பெருமையடைகிறேன்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.