எழுத்தாளர் ஶ்ரீரஞ்சனியின் 'ஒன்றே வேறே' தொகுப்பில் உள்ள அனைத்துக் கதைகளையும் வாசித்தேன். அதை ஒட்டியதாக என்னுடைய இந்தக் குறிப்புகள் அமைந்துள்ளன.அவரது கதைகள் பிரதானமாக இரண்டு அம்சங்களில் முக்கியத்துவம் பெறுகின்றன.
1 புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ் மக்கள், அந்தந்த நாடுகளின் சமூக, சட்ட முறைமைகளுடன் இணைந்து வாழ்வதில் எதிர்கொள்கின்ற சவால்களும் சிக்கல்களும். (இங்கு கனடா மையமாகக் கொள்ளப்படுகிறது.)
2 பெண்கள் மீது ஆண்களினால் பாலியல்ரீதியாக மேற்கொள்ளப்படுகின்ற வன்முறைகளும் துன்புறுத்தல்களும்.
புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ் மக்கள், அந்தந்த நாடுகளின் சமூக, சட்ட முறைமைகளுடன் இணைந்து வாழ்வதில் எதிர்கொள்கின்ற சவால்களும் சிக்கல்களும்!
புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ் மக்களில் புதிய தலைமுறையினர் உருவாகியுள்ளனர். இவர்கள் அந்தந்த நாடுகளின் சமூக, சட்ட முறைமைகளுடன் இணைந்து கொள்வதில் பெரியளவிலான சிக்கல்களை எதிர்கொள்ளவில்லை. மாறாக முன்னர் புலம்பெயர்ந்தவர்களும் புதிதாகப் புலம்பெயர்ந்து செல்பவர்களும் நெருக்கடிகளுக்கு உள்ளாகிறார்கள். தலைமுறைகளுக்கு இடையிலான முரண்பட்ட நிலைமைகளும் புதிய சூழலை எதிர்கொள்வதில் அவர்கள் அடைகின்ற சிக்கல்களும் பல கதைகளில் நுணுக்கமாக எடுத்தாளப்பட்டுள்ளன.
ஶ்ரீரஞ்சனி நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளது போன்று அவருடைய நோக்கம் தெளிவானது. புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ் மக்கள் புதிய சூழலைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ற விதத்தில் தம்மை இணக்கப்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற ஆழ்ந்த அக்கறை அவரது கதைகளில் இழைந்துள்ளன. அந்த அக்கறையை அல்லது பணியை அவர் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். முற்றிலும் வேறுபட்ட சூழலிலும் இறுக்கமான பின்புலங்களிலும் வாழ்ந்தவர்கள், புதிய, தளர்வான, வெளிப்படைத் தன்மையும் சமூக சமத்துவத்தன்மையும் கொண்ட சமூக அமைப்பில் வாழ்வது எவ்வளவு சவால்மிக்கதாக இருக்கிறது என்பதை அவருடைய கதைகள் வெளிப்படுத்துகின்றன. இந்த நெருக்கடிகளை எதிர்கொண்டு, அந்த சூழலில் இணங்கி வாழ்தலின் அவசியத்தையும் முறையையும் மென்மையான போதனை முறையில் முன்வைத்திருப்பதில் அவர் வெற்றி பெற்றிருக்கின்றார் . அவருடைய கதைகள் கொண்டுள்ள இந்த அம்சம் புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள் விடயத்தில் முக்கியத்துவமிக்கதாக அமைகிறது.
அதேநேரத்தில், இங்கு (இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில்) வாழ்கின்ற மக்களும், மேற்கத்தைய சமூகங்களின் சமூக மற்றும் சட்ட முறைமைகளை அறிந்து கொள்வதற்கும் அவை பற்றி உரையாடுவதற்குமான ஒரு தளத்தை அவருடைய கதைகள் வழங்கியுள்ளன. இந்த முறைமைகளிலுள்ள சிறந்த அம்சங்களை குறைந்தபட்சம் தனிப்பட்ட முறையில் தமது சொந்த வாழ்வில் பின்பற்றுவதற்கான தூண்டலை இக்கதைகள் சிலருக்கு வழங்கக்கூடும். இந்த வகையில் அவருடைய நோக்கத்தில் அவர் வெற்றியடைந்துள்ளார் என்று மகிழ்வும் பெருமிதமும் அடையலாம்.
(கோட்பாட்டு ரீதியாக, மேற்கத்தைய சமூக முறைமை, ஜனநாயகம்… என்பவை பற்றிய விமர்சனங்களை நான் கொண்டிருக்கிறேன். தாம் உருவாக்கிய இந்த சமூக, அரசியல் முறைமைகளின் பாதகமான நிலைமைகளில் இருந்து விடுபட முடியாத இக்கட்டான நிலைமைக்குள் மேற்கத்தைய சமூகங்கள் தள்ளப்பட்டுள்ளன என்ற கருத்தை நான் கொண்டுள்ளேன். உதாரணமாக முழுமையான பாலியல் சுதந்திரத்தைக் கொண்டுள்ள அந்த நாடுகளில் இருந்துதான் காதல் தோல்வி பற்றியும் பிரிந்து சென்று விட்ட துணையைப் பற்றியதுமான சோகப் பாடல்கள் மிக அதிகமாக வெளிவருகின்றன. அதேபோன்று மனித உறவுகளை சட்ட விதிகளின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வருதல்… இவை குறித்து இங்கு உரையாட நான் விரும்பவில்லை.)
பெண்கள் மீது ஆண்களினால் பாலியல்ரீதியாக மேற்கொள்ளப்படுகின்ற வன்முறைகளும் துன்புறுத்தல்களும்!
பாலியல் அதிகாரமும் துன்புறுத்தல்களும் குடும்ப வன்முறைகளும் நமது சமூக முறைமைகளில் இயல்பானவை என்று கருதும் அளவுக்கு நடைமுறையிலுள்ளன. இத்தகைய பின்புலத்தில் இருந்து புலம்பெயர்ந்து செல்கின்றவர்கள், தாம் வாழ்கின்ற நாடுகளின் முறைமைகளுக்கேற்ப தம்மை தகவமைப்பதில் நிச்சயமாகவே சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். இந்த சிரமங்களை கதைகள் சிறப்பாக விவரிக்கின்றன. “பூங்காற்று திரும்புமா?” என்ற பாடலிலுள்ள “பாராட்ட, மடியில் வைத்துத் தாலாட்ட, எனக்கொரு தாய்மடி கிடைக்குமா?” என்ற வரிகளில் உள்ளடங்கியுள்ள உணர்வுகளுக்கான வடிகால்கள் அற்ற நிலையில், திகைத்து, தடுமாறுகின்ற மனிதர்களைத் தொகுப்புக் கதைகள் சொல்கின்றன.
ஆதிக்க மனநிலை என்பது எங்கும் எல்லா சமூகங்களிலும் நிறைந்துள்ளன. தனது சொந்த சமூகத்தில் சமத்துவ நிலையை சட்டரீதியாகப் பேண முயற்சிக்கின்ற மேற்கத்தைய சமூகங்கள், பிற நாடுகளை ஆக்கிரமிக்கின்ற அல்லது பிற நாடுகளின் மீது வன்முறைகளைப் பிரயோகிக்கின்ற விடயத்தில் அசிங்கமான முறையில் ஆதிக்க உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. இனம், நிறம், மதம், பண்பாடு, மொழி… என பல்வேறு அடிப்படைகளில் ஆதிகக் மனநிலை வெளிப்படுகிறது.
புலம்பெயர்ந்து வாழ்கின்ற சமூகங்கள் – இங்கு தமிழ்ச் சமூகம் – இத்தகைய ஆதிக்க வெளிப்பாடுகளை வெவ்வேறு தளங்களில் எதிர்கொள்கின்றன. அவற்றுக்கான உணர்வுரீதியான ஆற்றுப்படுத்தல்களுக்கான வழிகள் அற்ற நிலையில், சட்ட வரையறைக்குள் அவர்கள் எளிதாக சிக்கிக் கொள்கிறார்கள். தொகுப்பின் கதைகள் இவற்றை பூடகமாகச் சொல்கின்றன. ஶ்ரீரஞ்சனி இந்த விடயத்தில் உணர்வுபூர்வமாக இருக்கின்றாரா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் கதைகளின் பாத்திரங்கள் இத்தகையோரின் பரிதாப நிலைகளைச் சொல்கின்றன.
“பேசப்படாத மௌனம்” என்ற கதைக்காக அவர் நிச்சயமாகப் பெருமையடையலாம். தகப்பனால் மகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்ற விடயம் காலம் காலமாக மறைக்கப்பட்டு வந்துள்ளது. எனது ஊரில் ஒரு இளம்பெண் தனது தந்தையால் கர்ப்பமடைந்த பின்னர் அது பற்றி தெரிய வந்த ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதேபோன்று, சகோதரர்கள், சகோதரிகளின் கணவர்கள், நெருங்கிய உறவினர்கள் போன்றவர்களாலும் இளம் பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாகிறார்கள். இங்கு இந்தக் கதையை தன்னிலையில்அவர் எழுதியிருப்பது சிறப்பானது. இன்னொருவருக்கு நடந்த விடயம் என்ற ஒட்டாத நிலை அகன்று, கதையை வாசிக்கின்ற ஒவ்வொருவரும் அதைத் தன்னுடன் இணைத்துப் பார்ப்பதற்கு இந்த கதை சொல்லல் முறை உதவுகிறது. அந்தத் தந்தை ஒரு பாடசாலை அதிபராக இருப்பது கதைக்கு கூடுதல் முக்கியத்துவத்தைக் கொடுக்கிறது. ஒரு மாணவனாகவும் பின்னர் ஆசிரியனாகவும் ஐம்பது வருடங்கள் பாடசாலையுடன் சம்மந்தப்பட்டவன் என்ற வகையில் இக்கதை எனக்கு அனுபவம்சார்ந்த நினைவு மீட்டலாக இருக்கிறது. மாணவனாக இருந்தபோது சக மாணவிகளை பாலியல்ரீதியாக தொந்தரவு செய்த சில ஆசிரியர்களை எதுவும் செய்ய முடியாமல் கோபப்பட்டவனாகவும் பின்னர் ஆசிரியனாக இருந்தபோது, சில அதிபர்கள் மாணவிகள் மீது மேற்கொண்ட இத்தகைய வன்முறைகளை நேரடியாகக் கண்டிக்க முடியாமல் வெம்பியவனாகவும் இருந்திருக்கிறேன். பாடசாலைகளும் கல்வி நிலையங்களும் மாணவிகள் (மாணவர்கள்) மீதான வன்முறைகள் நிகழ்கின்ற முக்கிய இடங்களாக இருக்கின்றன.
அத்துடன், “பாலியல் உறவானது அதில் சம்பந்தப்படுகின்ற ஆண்-பெண் இருவருக்கும் மகிழ்வூட்டுவதாக இருக்கிறது, அவ்வாறு இருக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாக இருக்கிறது. இது குறித்து ஆணும் பெண்ணும் புரிந்து கொள்ள வேண்டும், அத்துடன் இது பற்றி அறிவூட்டப்பட வேண்டும்.
இந்த விடயத்தில் ஶ்ரீரஞ்சனியின் கண்ணோட்டம் பெரும்பாலான பெண்ணியலாளர்களின் கண்ணோட்டத்தில் இருந்து வேறுபடுவதாகக் கருதுகிறேன். பெண்களை – அவர்களின் அங்கங்களை – ஆண்கள் நோக்குவது என்பது, பெண்களை வெறும் போகப் பொருளாகக் கருதுகின்ற ஆணாதிக்க உணர்வின் ஒரு வெளிப்பாடு என பெரும்பாலான பெண்ணியவாதிகள் கருதுகிறார்கள். ஆனால் உயிரியல் அடிப்படையில், ஆண் – பெண் உடல் சார்ந்த வேறுபாடுகள் அவர்களிடையே பாலியல் தூண்டலை ஏற்படுத்துவதற்காக அமைந்துள்ள இயற்கையான உருவாக்கம் எனக் கருதப்படுகிறது. இது பற்றிய முறையான உரையாடலும் அறிவூட்டலும் ஆண்-பெண் பாலியல் உறவை எப்போதும் பரஸ்பர மகிழ்விற்குரியதாக மாற்றும்.
ஶ்ரீரஞ்சனியின் “ஒன்றே வேறே” என்ற கதையிலும் வேறு சில கதைகளிலும் இந்த விடயத்தை பக்குவமாகவும் சிறப்பாகவும் கையாண்டிருப்பதாகக் கருதுகிறேன். இந்த விடயம் தொடர்ச்சியான உரையாடலுக்குட்பட வேண்டும். இனி, அவருடைய எழுத்து தொடர்பான எனது மதிப்பீடுகள் சிலவற்றை முன்வைக்க விரும்புகிறேன்.
பொதுவாக கதைகள் அனைத்திலும் ஒரு ஒத்த தன்மை (அல்லது monotonous) தெரிகிறது. இது எல்லா எழுத்தாளர்களுக்கும் கவிஞர்களுக்கும் உரிய விடயம்தான். ஆனால் இந்த ஒத்த தன்மையைக் கடந்து, ஒவ்வொரு கதையிலும் (கவிதையிலும்) ஒரு தனித்த வேறுபட்ட கதைசொல்லல் முறை வெளிப்படும், வெளிப்பட வேண்டும். ஆனால் கதைசொல்லல் முறையில் இந்த வேறுபட்ட தன்மைகள் மிகக் குறைவாக தெரிகின்றன. ஒவ்வொரு கதையும் ஏற்கனவே வாசித்த கதையைப் போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. இதற்கு, பல கதைகளில் சொல்லப்படுகின்ற விடயங்களில் உள்ள பொதுத்தன்மை காரணமாக இருக்கலாம், அல்லது அவை அனைத்தையும் ஒரே தொகுப்பில் வாசிக்கும்போது அவ்வாறான உணர்வு ஏற்பட்டிருக்கலாம்.
எனினும் இது தவிர்க்கப்பட முடியும் என்று நினைக்கிறேன். சிந்தித்துப் பாருங்கள்.
பெரும்பாலான கதைகள் போதனை முறையில் அமைந்திருப்பது போல தெரிகிறது. அது அவருடைய நோக்கத்துடன் தொடர்புபடுகிறது. புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழர்களிடையே புதிய சூழல்சார்ந்த புரிதலை ஏற்படுத்த வேண்டும் என்ற அந்த நோக்கம், போதனைத் தன்மையை தூக்கலாக வெளிப்படுத்தியிருக்கலாம். ஆனால் இக்கதை சொல்லல் முறை, இலக்கியத்திற்குரிய அழகியல்சார்ந்த உணர்வெழுச்சிக்குப் பதிலாக அறிவியல்பூர்வமான போதனையை வழங்குவதாக அமைந்து விடும். புலம்பெயர்ந்த நாடுகளின் சமூக, சட்ட முறைமைகளுக்குள் எவ்வாறு வாழ்வது என்பது பற்றிய விடயத்தை ஒரு கைநூலாக பதிப்பித்து வெளியிடுவதற்கும் கதையாகச் சொல்வதற்கும் வேறுபாடுகள் இருக்கின்றன. கதைகளில் இவை இரண்டும் கலந்திருப்பதால், சிறுகதைக்குரிய அழகியல் பண்பு குறைந்திருப்பதாக நான் உணர்கிறேன். (இது எனது உணர்வுதான்.)
கதைகள் பலவற்றில் ஆங்காங்கே சினிமாப் பாடல்கள், சினிமா, கவி வரிகள், பண்டைய செய்யுள்கள் போன்றவை காணப்படுகின்றன. இவை குறிப்பிட்ட ஒரு கதாபாத்திரத்தின் பண்புகளின் இயல்பான வெளிப்பாடாக அன்றி, இடைச்செருகல்கள் போன்று தொக்கி நிற்கின்றன. இது கதை ஓட்டத்திற்கு நெருடலாக இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. கதைக்கு ஒரு நிஜத்தன்மையை ஏற்படுத்துவதற்கான ஒரு உத்தியாக இதைக் கொள்ள முடிந்தாலும், பல இடங்களில் கதைசொல்லியின் சொந்த ஆர்வத்தின் வெளிப்பாடாக அமைந்தது போலத் தெரிகிறது.
எழுத்துச் செயற்பாட்டின்போது, சொல்வதற்கு என ஏராளமான விடயங்கள் வந்து குவியும். எனினும் கதைசொல்லியைப் பொறுத்தவரை ஒரு கதையின் கட்டமைப்பும் வாசகர்களின் அறிவும் எப்போதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை. தனக்குள் எழுகின்ற அத்தனை விடயங்களையும் அவர் எழுத்தில் கொண்டு வர முடியாது. தனது ஆர்வங்களை எழுத்தாக்க முடியாது. இங்குதான் அவரின் உழைப்பும் பிரக்ஞையும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
கதைகளிலுள்ள உரையாடல் முறை பற்றியும் சிறிது கூற வேண்டியுள்ளது. பல இடங்களில் தொலைபேசி உரையாடல்கள் ஒத்த தன்மையைக் கொண்டுள்ளன, அதேநேரத்தில் உரையாடல்கள் அளவுக்கதிகமாக நீண்டு விடுகின்றனபோலவும் தெரிகின்றன. எல்லா உரையாடல்களும் யாழ்ப்பாணத் தமிழிலேயே அமைந்திருக்கின்றன – தமிழர் அல்லாத அதிகாரிகளின் உரையாடல்களும் கூட. இது ஒரு செயற்கைத் தன்மையைத் தருகிறது.
“சிங்கள மொழி தெரிந்திருந்தால் இந்தளவு பிரச்சினை ஏற்பட்டிருக்காது” என்ற விதத்தில் ஒரு கதையில் (நிழல் ஒன்று) ஒரு பாத்திரம் பேசுகிறது. இது அந்தப் பாத்திரத்தின் உணர்வு மட்டுமல்ல, இந்நாட்டின் அரசியலில் இது ஒரு வழிமுறையாகவே கருதப்பட்டு வந்துள்ளது. ஆனால் நடைமுறையில் இது முற்றிலும் சாத்தியமற்றது என்பதை அனுபவம் உணர்த்தி நிற்கிறது. கிழக்கில் தமிழ் - முஸ்லிம் சமூகங்கள் மத்தியிலும் தெற்கில் சிங்கள – முஸ்லிம் சமூகங்கள் மத்தியிலும் தொடர்ச்சியாக ஆழப்பட்டு வருகின்ற முரண்பாடுகள் இந்தக் கருத்தை அர்த்தமற்றதாக்குகின்றன. (தெற்கில் உள்ள முஸ்லிம்கள் சிங்கள மொழியை சிங்களவர்கள் போன்றே பேசுவார்கள்) இன முரண்பாடுகளைத் தவிர்ப்பதற்கு மொழிகள் காரணமாக அமைவதில்லை, மாறாக பல சந்தர்ப்பங்களில் இன முரண்பாட்டை அதிகரிப்பதற்கே அவை உதவுகின்றன. முகநூலிலும் ஏனைய சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள் என்பவற்றிலும் ஒரே மொழியில் முன்வைக்கப்படுகின்ற கருத்துகளின் வன்மம் இதைத் தெளிவுபடுத்தும்.
சரி, சற்று நீளமாகவே எனது மதிப்பீடு அமைந்து விட்டது. அடிப்படையில் நான் புனைகதை எழுதுபவன் அல்ல. ஆய்வுரீதியான சிந்தனை ஓட்டமே எனக்குள் முதன்மையாக இருக்கிறது. தமிழ் மொழி இலக்கியச் சூழலில் விமர்சனத்துறை மிகப் பலவீனமாக இருக்கிறது என்ற ஆதங்கம் எனக்குள் இருக்கிறது. விமர்சனம் என்பது இங்கு புகழ்தல் என்பதாக மட்டுமே இப்போது மாறியுள்ளது. அது ஒரு எழுத்தாளர் தனது ஆற்றலை, திறமையை, சிறப்பை அவற்றின் பலவீனங்களோடு புரிந்தேற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகளை வழங்குவதில்லை. தான் எழுதியவை எவ்வித குறையுமற்றவை என்ற உணர்வெழுச்சியுடன் ஒவ்வொருவரும் அடுத்த ஆக்கத்திற்குள் நுழைந்து விடுகிறார்கள். தமிழ் மொழி இலக்கியத் தளத்தில் இன்று அவதானிக்கின்ற தேக்க நிலைக்கும் வாசிப்பின் மீதான ஆர்வம் குறைந்துள்ளமைக்கும் எழுத்தின் மீதான முறையான விமர்சனம் இல்லை என்பது ஒரு முக்கியமான காரணம் எனக் கருதகிறேன்.
ஶ்ரீரஞ்சனியின் எழுத்துக்கள் வலுவானவை, கனதியானவை. அவை இன்னும் தொடர்ந்து செல்லக் கூடியவை. அவை தொடர்ச்சியாக புதிய பண்புகளுடன் வெளிப்பட வேண்டும் என்பது மட்டுமே எனது இம்மதிப்பீட்டின் அல்லது விமர்சனத்தின் நோக்கம்.
அனுப்பியவர் - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.