
இந்தியத்திரையுலகின் உச்ச நட்சத்திரங்களிலொருவர் நடிகர் திலிப்குமார். இவரது இயற்பெயர் முகமத் யூசுப் கான். 1922இல் இந்தியாவின் ஒருபகுதியாக விளங்கிய பாகிஸ்தானின் பெசாவரில் பிறந்தவர். தனது தொண்ணூற்றியெட்டாவது வயதில் அவர் இன்று காலமானதை இணையச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இவரது திரையுலகப் பங்களிப்புக்காக தாதாசாகேப் பால்கே விருது, இந்திய மத்திய அரசின் பத்மபூஷண், பத்ம விபூஷண் விருதுகளைப் பெற்ற இவர் அதிக தடவைகள் பிலிம் ஃபெயர் விருதுகளையும் பெற்றுள்ளார்.
கங்கா ஜமுனா, மொகல் இ ஆசாம், அந்தாஷ், கங்கா ஜமுனா, மதுமதி என புகழ்பெற்ற திரைப்படங்களில் நடித்த இவர் எம்ஜிஆர் நடிப்பில் வெளியான எங்க வீட்டுப் பிள்ளை திரைப்படத்தின் இந்தி வடிவமான ராம் அவர் ஷயாம் திரைப்படத்திலும் தமிழில் எம்ஜிஆர் நடித்த வேடத்தில் நடித்துள்ளார்.
இந்தித்திரையுலகில் இவருக்கும் , நடிகை மதுபாலாவுக்குமிடையில் நிலவிய காதல் பலரும் அறிந்ததொன்று. ஆனால் இவர் மணம் செய்தது நடிகை சைராபானுவை. இடையில் அஷ்மா ரெகுமான் என்பவரையும் (1981 - 1983) மணந்திருந்தார். அம்மண வாழ்க்கை இரு வருடங்களே நீடித்தது. ஆயினும் இறுதிவரை சைராபானுவே இவருடன் வாழ்ந்து வந்திருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சைராபானு பேட்டியொன்றில் தனது பன்னிரண்டு வயதிலேயே மணந்தால் திலிப்குமாரையே மணப்பதாக உறுதி செய்ததாகக் கூறியிருந்ததையும் இத்தருணத்தில் நினைவு கூர்வதும் பொருத்தமானது. அதே மாதிரி அவர் நடிப்புத்துறையில் இறங்கி நடிகர் திலிப்குமாரின் இதயத்தில் இடம் பிடித்து இறுதிவரை வாழ்ந்திருக்கின்றார். அது அவரது காதலின் உறுதியை வெளிப்படுத்துகின்றது.
பல்வேறு மக்கள் உதவித்திட்டங்களைத் திலிப்குமார் தம்பதி ஆரம்பித்து நடைமுறைப்படுத்தி வந்ததாக அறியப்படுகின்றது.
அவரது நினைவாக அவர் நடிப்பில் உருவான புகழ்பெற்ற திரைப்படப்பாடல்களின் தொகுப்பினை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.
https://www.youtube.com/watch?v=NlBQ67WCsv8



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









