
ஈழத்து யாழ்ப்பாண மண்ணைக் கதைக்களமாகக் கொண்டு ஈழத்துக் கலைஞர்களால் யாழ் நூலக எரிப்பை நினைவூட்டும் வகையில் 31.05.2025 அன்று ‘தீப்பந்தம் திரைப்படம் திரைக்கு வந்துள்ளது. AML US தயாரிப்பான இத்திரைப்படம் ராஜ் சிவராஜ் அவர்களின் இயக்கத்திலும் பூவன் மதீசனின் திரைக்கதையிலும் சிறப்புப் பெற்றுள்ளது.
அரசியல் படமாக இருந்தாலும் அதனைப் பிரசார நெடியின்றிக் கலைத்துவத்துடன் தர முயன்றுள்ளார்கள். பல்கலைக்கழக அனுமதிக்கான தரப்படுத்தல், யாழ் நூலக எரிப்பு, வைத்தியர் பற்றாக்குறை, 2009 ஆம் ஆண்டு போர் வடுக்கள், எம்மவரே எமக்குத் துரோகிகள், அறிவுச்சோலை, ஆவணப்படுத்தலின் தேவையென பல வரலாற்று நிகழ்வுகளுக்கூடாக திரைக்கதை நகர்ந்து செல்கின்றது.
ஆரம்பத்தில் சிறுவனின் கையில் இருக்கும் புகைப்பட பிரதிச் சுருளின் தொகுப்பு, திரைப்படத்தின் நிறைவுப் பகுதியில் திருப்பு முனையாகக் காட்டப்படுவதும், மாநகரப் பொது நூலகத்தில் இருந்து, சிவப்பு நிற ஆவணத் தொகுப்புடன் வரும் சிவம் ஐயா அதனை மோட்டார் வண்டி பெட்டியில் வைப்பதும் அதனைப் பின் குளிர்சாதனப் பெட்டியில் பேணுவதும், புகழ், சிறுமியிடம் பென்சிலைக் கொடுப்பதும், குறியீடாக வரும் பூனை கிணற்றடியிலும் குளிரிசாதனப் பேட்டியில் இருந்து ஓடுவதும், யாழ் நூலகம் எரிந்த அன்று குழந்தை பிறப்பதுமாக வரும் காட்சிகளினூடாகக் கதைத் தொடர்ச்சியினைக் காண முடிகின்றது. அத்துடன் பல திருப்புமுனைகள உருவாக்கும் வகையில் சிறுசிறு சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இவை கதைக்கருவிற்கு வலுச் சேர்ப்பதாக அமைந்திருக்கின்றன. வரலாற்றை அறிந்தவர்களால் இத்திரைப்படத்துடன் இன்னும் இரசனையுடன் ஊடாட முடியும்.
தமிழருவி சிவகுமாரன் அவர்கள், சிவம் ஐயா எனும் சிவகுமாரன் பாத்திரமேற்றுச் சிறப்பித்துள்ளார். மண்ணின் மகனாக, குடும்பத்துப் பெரியவராக, அறிவுசால் மனிதராகப் பரிணமிக்கும் இவரது நடிப்பில் கண்டிப்பு, கருணை, பிள்ளைகளைப் பேணும் கடமையெனப் பன்முகப் பண்புகளை அவதானிக்கலாம். நிறைவாக, ’இதயச்சந்திரனை வளர்த் த தை விட புகழை வளர்த் ததைப் பெருமையாக நினைக்கிறேன்’ எனும் வசனத்தின் உட்பொருள் அர்த்தம் மிக்கதாக அமைந்திருக்கின்றது. அதுபோன்று பல்கலைக்கழக இளைஞர்களாக நடித்தவர்களுடைய இயல்பான உடையலங்காரம், உடல்மொழி, உரையாடல்கள் யாவும் அப்பாத்திரங்களுக்கு சிறப்புச் சேர்த்துள்ளன. ஏழுமலையாக வருபவர் வித்தியாசமான தோற்றத்துடனும் நட்பின் துரோகத்தின் பிரதிபலிப்பாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். எம்மிடையேயுள்ள நக்கல் கலந்த பேச்சுமொழியையும் யதார்த்தமாக கையாண்டுள்ளார்கள். இவையாவும் அவர்களுடனே எம்மை நெருக்கமாக்கித் திரைப்படத்துடன் ஒன்றிப் போக வைத்துள்ளன. நாம் பழகிய மனிதர்களை அவர்தம் வாழ்வியலை நினைவூட்டிப் பயணிக்க வைத்துள்ளது.
இளைஞர்களுக்கேயுரித்தான ஈழத்துப் பொப்பிசைப் பாடலை ஞாபகமூட்டும் ‘’ஆசை லலித்தா’’ பாடலும் சந்தர்ப்பத்துக்கேற்றது போல அமைந்த ‘’இலட்சிய வானமே விடியாமல் போனதா’’ பாடலும் இரசிக்கக் கூடியதாக இருந்தன. இருள் சூழ்ந்த யாழ்ப்பாணத்தை, இருள் விலகா மங்கலான வெளிச்சத்து யாழ்ப்பாணத்தை பல்வேறு ஒளிச்சேர்க்கையுடன் ஒளிப்பதிவு செய்தமை நன்றாக இருக்கின்றது. எம்மண்ணின் தெருக்களும் மனிதர்களும் யதார்த்தமாக எம் கண்ணிற்குள் வந்து போய்க் கொண்டிருந்தார்கள். தொழில்நுட்பமும் தேடலும் கைக்குள் வசப்படும் காலமிது. எம்மிடையே, எங்களுக்கான தனித்துவமான கதைக் கருக்களும் களங்களும் கலைகளும் ஏராளமாகவுள்ளன, அவை மென்மேலும் வெளிக்கொணர்வதற்குரிய வெளிகள் திறக்கப்படுகின்றன என்பதற்குத் ’தீப்பந்தம்’ நல்லதொரு உதாரணமாகும். திரைப்படத்திற்காக உழைத்த அனைத்துக் கலைஞர்களுக்கும் வாழ்த்துகள்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









