
கிராமத்தில் நடந்த நிகழ்வுகளை பாரதிராஜா படமாக்கியபோது ‘பரவாயில்லை’ என்று மட்டுமே எண்ணினேன். ஆனால், தனுஷ் நடித்த 'இட்லி கடை' படத்தை பார்த்தபோது, அதை ரசிப்பதில் நான் என்னையே மறந்தேன்.
ஆரம்பத்தில், தந்தையின் கனவில் வாழ்வதற்கு மறுத்து வெளியேறும் தனுஷின் செயல் மிகவும் யதார்த்தமானது. இதேபோல, நானும் ஒருகாலத்தில் சீதனம் வாங்க வேண்டும் என்ற தந்தையின் கனவிற்கு எதிராகப் போராடினேன். ஆனால் இங்கே, பாசமுள்ள தந்தை அதை ஏற்றுக்கொள்கிறார். வெளிநாட்டில் வாழ்ந்தாலும் அந்த வாழ்க்கையில் ஒட்டிக்கொள்ளாமல் இருப்பது தனுஷின் உடல் மொழியிலே வெளிப்படுகிறது.உடல் மொழி மூலம் நடிப்பது அவருக்கு கைவந்த கலை. சிவாஜி கணேசனின் உடல் மொழி நாடகத்துக்கானது; தனுஷின் உடல் மொழி சினிமாவுக்கானது.இதிலுள்ள ஒருமுக்கியமான யதார்த்தம் — தமிழ் நாட்டின் கிராமங்களில் பகை ஏற்பட்டால் வீடுகள் எரிப்பதுபோல, மாடு கன்றுகளை கொல்ல முயல்வதும் நிகழ்கிறது.
இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, தனுஷை தாக்க வரும்போது மாட்டுக்கன்றை கொலை செய்ய முயன்ற காட்சி, அந்தக் கிராமிய நிஜத்தின் பிரதிபலிப்பாக இருக்கிறது.கிராமத்தில் யாராவது இறந்ததும், அதே சமயத்தில் குழந்தை பிறந்தாலும் அல்லது மாடு, ஆடு கன்று போட்டாலும்,“இறந்தவர் திரும்பி வந்து விட்டார்” என்று நம்புவார்கள். இதே நம்பிக்கை இங்கு கன்றின் வழியாகப் படிமமாகிறது.இந்த நம்பிக்கையை நான் என் "பண்ணையில் ஒரு மிருகம்: நாவலில் “நீலன்” என்ற காளைக் கன்றாகப் பயன்படுத்தியிருந்தேன்.
நான் தமிழ்நாட்டு கிராமத்தில் சிலகாலம் வாழ்ந்தவன் மட்டும் அல்ல, அந்த கிராமத்தின் கதையை நாவலாக்கி தஞ்சாவூர் பல்கலைக்கழகத்தின் தங்கப்பதக்கம் பெற்றவன்.மகனாக, தந்தையின் கனவுகளில் வாழ மறுத்தாலும், தந்தையின் இறப்பிற்குப் பின் அவர் வாழ்ந்த வாழ்க்கை உன்னதமானதாகத் தோன்றுகிறது. அதற்கான காரணங்கள் பல — கிராமத்து பஞ்சாயத்து நிகழ்வும், கடையில் எழுதிய“அகிம்சை” என்ற வசனமும் முக்கியமானவை.
திரைப்படம் என்பது நாவலைப்போல் சுயமாகச் சம்பவங்களை நடத்த முடியாது; பார்ப்பவர்களுக்கு காரணங்கள் தெளிவாகத் தெரிய வேண்டும். அதேபோல், சம்பவங்களின் பின்விளைவுகளும் காட்டப்பட வேண்டும். இந்தப் படத்தில் வரும் நித்யா மேனனின் பாத்திரத் தேர்வு சிறந்தது. அவருக்கு மாற்றாக தமிழில் வேறு யாரும் பொருந்தியிருக்க முடியாது. உடல் நிறம், எடை, கண்களால் உரையாடும் திறன் — எல்லாமே சிறப்பானது.
சமுத்திரக்கனியின் நடிப்பில் அவர் வெளிப்படுத்தும் பொறாமையும் அசூசையும் — குறிப்பாக கன்றை வெட்ட கத்தியை உயர்த்தும் தருணத்தில் — மிகவும் இயல்பாக மனதில் பதிகிறது.
பாசமுள்ள கிராமத்து தந்தையாக வரும் ராஜ் கீரண் வழக்கம்போல் நம் நினைவில் நிழலாடுவார்.
வில்லனாக வரும்அருண் விஜய் — பணத்தின் மயக்கத்தில் வளரும் நகரத்து இளைஞன். அவரது செயல்கள் அளவுக்கு மீறினாலும், இந்தியாவில் இத்தகைய இளைஞர்கள் யதார்த்தமானவர்களே. பணம் அதிகாரத்தைக் கொடுக்கும்போது ஈகோவும் அதோடு வரும். தற்போதைய அமெரிக்கா அதிபர் , பிரின்ஸ் ஆண்ட்ரூ போன்ற பல உதாரணங்கள் இதற்குச் சாட்சி.
சத்தியராஜின்பாத்திரம் அவருக்கு குறைவானதாக இருந்தாலும், மகனில் முழு பாசத்தைக் கொண்ட தந்தை எனும் உருவகம் சிறப்பாக வெளிப்படுகிறது. மகனை இறுதியில் கன்னத்தில் அறையும் போது, நமக்குத் தெரிகிறது — அது சத்தியராஜ் அல்ல, ஒரு உண்மையான தந்தை.
பார்த்திபனின் பாத்திரமும் அந்த இடத்தில் பொருத்தமாக இருந்தது.
இந்திய சினிமாவில் கிராமியக் கூத்து ஆரம்பத்திலும், நாடக சினிமா சிவாஜி கணேசன் காலத்திலும் இருந்தது.மகேந்திரன் பாரதிராஜா யதார்த்தத்தின் தலைவாசலுக்குகையை பிடித்து அழைத்து சென்றார்கள். செயற்கையான வன்முறை, தொடர்சியற்ற காட்சிகள் கொண்ட தமிழ் சினிமாவில் கிராமத்து யதார்தத்தை பிரதிபலிக்கும் இட்லி கடை, வேர்வை மணம்கொண்ட நெருக்கமான பல்லவன் பஸ்சில் அக்காலத்தில்(1984)நின்று கொண்டு பிரயாணம் செய்யும்போது நம்முகத்தருகே மல்லிகை பூவை தலை நிறைய வைத்த பெண் ஒருவர் திடீரென தோன்றினால் ஏற்படும் உணர்வே எனக்கு இந்த திரைப்படம் பார்க்கும்போது இருந்தது.
எனக்குத் தோன்றிய ஒரே குறை — இந்தப் படத்தின் சண்டைக் காட்சிகள். அவை இயல்பான, ஆத்திரத்திலிருந்து வருவது போல அல்ல; சினிமாவுக்காகவேஉருவாக்கப்பட்ட சண்டைகள் போல இருந்தது.
வெளிநாட்டு காட்சிகள் இந்தியாவிலேயே எடுக்கப்பட்டிருக்க முடியும். தற்போதைய இங்கிலாந்து, அமெரிக்காவில் கோட்-சூட் கலாச்சாரம் குறைந்து விட்டது. ஆஸ்திரேலியாவில் அதை திருமணமோ மரண வீட்டிலோ மட்டும் அணிவார்கள். பாங்காக் போன்ற இடங்களில் ஹோட்டல் வரவேற்பறைகளில் மட்டுமே காணலாம்.
வெள்ளையர்கள் வெளியேறினாலும், இந்திய சினிமா அவர்களை விடுவதில்லை!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









