நாங்கள் வீட்டை விட்டு வெளியேறும் போது செக்காவ் கூறினார்: ‘நம்ப முடியவில்லை. வாழ்நாள் முழுவதும் சந்தோசத்தைக் கண்டதில்லை என அவர் கூறுவதை!’. ஆனாலும், நான் அதை நம்பத்தான் செய்வேன். நம்ப மறுத்த ஒரு விடயம் உண்டெனில் அது அவர் பிறருக்காக வாழ்ந்தார் எனக் கூறுவதைத்தான். ஏனெனில், மிகுதியாக இருப்பதைத்தான் அவர் பிறருக்குத் தானமாகக் கொடுத்தார். அந்த பிறரையும் அவர் தன் வழியே (?) பயிற்றுவிக்கத் தவறவில்லை. வாசிக்க, நடைபயில, தாவர உணவைப் புசிக்க, கிராமத்து விவசாயிகளின் மேல் அன்பு செலுத்த, முக்கியமாக டால்ஸ்டாயின் மத நம்பிக்கைகளில் ஊறித்திளைக்க, மத சிந்தனையின் தாக்கத்திலேயே மயங்க…’
‘மனிதர்களிடம் இருந்து, தப்பி, விலகி தன்போக்கில் சுதந்திரத்துடன் இருக்க வேண்டுமெனில் அவர்களை எதிலாவது ஈடுபடுத்தி அவர்களைக் கட்டிப்போட்டு வைத்திருப்பது முக்கியமானதாகின்றது. முக்கியமாக ஆழ்ந்து துன்புற்றுத் தனிமையில் வாழும் அந்த புனித மனம் ஆதியும் அந்தமும் அற்ற அந்தச் சக்தி பொறுத்து தனது தீவிர ஆய்வுகளில் ஈடுபட்டிருக்க…’… … …. ….
எனது ‘Lower Depths’ இன் கிழவர் லூக்கா மனிதர்களை விரும்புவது போல படைக்கப்படவில்லை. அவன் மனிதர்களுக்கு மேலாக, பதில்களையே–அவை பல்வேறு வகைப்பட்டதாக இருந்தாலும் - விரும்புவான். மக்களுக்கு எதிராக செயல்பட்ட ஒருவனே அவன். மக்களை அவன் ஆற்றுப்படுத்தினான் என்றால் அவர்களிடம் இருந்து தப்பித்துக் கொள்ளவே. மக்கள் தனது பாதையில் குறுக்கிட்டு விடாமல் இருக்க அவன் கைகொண்ட நடைமுறைகள் இவை.
இந்தத் தனிநபர்களின் அனைத்து தத்துவங்களும், பிச்சையை மக்களிடை வேண்டா வெறுப்புடன் விட்டெறியும் முறைமைத்தான். அவற்றின் அடியில், பின்வரும் முறையீட்டையும், அவலத்தையும் பயனற்ற தன்மையையும் கேட்கலாம்.:
‘என்னைத் தனிமையில் இருக்க விட்டு விடுங்கள். கடவுள் மீதும் அண்டை வீட்டுக்காரன் மீதும் அன்பு செலுத்துங்கள். ஆனாலும், என்னைத் தனியே இருக்க விடுங்கள். கடவுளை கூட நீங்கள் நிந்தனை செய்யவும் செய்யலாம். ஆனால், என்னை விட்டு விடுங்கள். என்னை விட்டு விடுங்கள்…ஏனெனில் நானும் ஒரு மனிதன். நாளை இறக்கப் போகிறவன்…’.
மனித வாழ்வு இன்னும் நெடுநாளைக்கு இப்படித்தான் இருக்கப் போகின்றது… மனிதர்கள், அலைக்கழிக்கப்பட்டும் தொல்லை கொடுக்கப்பட்டும், சித்திரவதைப்படுத்தப்பட்டும், தனிமைப்படுத்தப்பட்டும் இருக்கும்போது இவை அவனது ஆன்மாவின் சக்தியை மெது மெதுவாய் உறிஞ்ச தொடங்குகின்றன…
நான் அதிசயப்பட மாட்டேன் –டால்ஸ்டாய் மீண்டும் சர்ச்சுகளுடன் சினேகம் பூண்டு ஒன்று இணைவாராயின். ஏனெனில் அவரைப் பொறுத்தமட்டில் இதில் ஓர் தர்க்கம் உள்ளடங்குகின்றது. அனைத்து மனிதர்களும் சம அளவில் புறக்கணிக்கத்தக்கவர்களே. பிஷப் உட்பட. இது ஒரு தேர்வு அல்ல. தர்க்கம் சார்ந்த ஒரு நடைமுறை. எனவேதான் என்னைப் பொறுத்தவரை அனைவரையும் மன்னித்து விடுவேன் –என்னை வெறுப்பவர்களைக் கூட. அடிப்படையில் இது ஒரு கிறிஸ்தவ நிலைப்பாடுதான். இதன் அடியில் ஆழமான ஒரு நையாண்டியும் உண்டு. முட்டாள்களுக்கெதிரான, மேதைகளின் பழி தீர்த்தல் இது எனப் பொருள்படுதலும் சரியாகும்...
ஊடகங்கள் இப்போது ‘துறவி’ ஒருவரைக் கட்டி எழுப்புவதில் ஈடுபட்டு அதில் வெற்றியும் கண்டுள்ளன. (மகாத்மாவை போன்று). இது தோற்றுவிக்கப் போகும் தீமைகளை ஒருமுறை எண்ணிப் பாருங்கள். ஒரு வரலாற்று நாயகன் கட்டுவிக்கப்படுகின்றான். மக்கள் அனைவரும் தமது மயக்கம் நீங்கித் தலையை தொங்கப் போடத் தொடங்கியுள்ள இந்த வேளையில், பெரும்பான்மையினரின் ஆன்மா வெறிச்சோடி வெறுமையடைய தொடங்கியுள்ள இந்தச் சூழலில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டோரும் மனச் சோர்வுக்குள் பீடிக்கப்பட்டு தள்ளப்பட்ட ஒரு நிலையில், முக்கியமாக, இத்தனையும் பறித்தெடுக்கப்பட்ட ஆன்மாக்களுக்கு, ஓர் புராணக் கதை தேவைப்படுகின்றது. பசித்த, சூறையாடப்பட்ட ஆன்மாக்கள் இப்போது ஒரு புராணக் கதைக்காக அலைமோதுகின்றன. அதாவது மக்கள் தாங்கள் அடைந்துள்ள வேதனைகளை, துன்பங்களை, வதைகளை, வடுக்களைத் தனிப்பதற்கு இப்படியான ஒரு புராணக் கதை கட்டியெழுப்ப படுகின்றது. இதுவே அவர் விரும்பியதாகின்றது. அவர் ஓர் துறவியாய் அல்லது மகாத்மாவாய் அல்லது பரிசுத்த மனிதராய், மனிதனில் மனிதனாய்த் திகழ இதுவே வேண்டத்தக்கதாகின்றது… இறைவனை இவர் இவருக்காகத் தேடவில்லையாம். ஆனால், பிறருக்காகவாம். ஆகவே, இவர் தனிமையில், தான் தேர்ந்தெடுத்துக் கொண்ட பாலைவனத்தில், அமைதியுடன் தவம் புரியலாம் என்றாகின்றது… இவரது இந்த புதிய பரிசுத்த வேதாகமம் (New Testament) ஒப்பீட்டளவில், இன்றைய சூழலில், மக்களின் வலிகளை தணிக்க, ஏற்றுக் கொள்ளப்பட கூடியதாக இருக்கும் எனக் கூறுவதில் எவ்வித லாபமும் இருப்பதாகப் படவில்லை. கிறிஸ்துவை அவர் மேலும் எளிமையாக்கி உள்ளார். அவரது கிளர்ந்தெழும் அம்சத்தைத் தணித்துள்ளார். அதற்குப் பதிலாக, முழு கீழ்படிதலை அரங்கேற்றியுள்ளார் - முழு முதல் தந்தையின் பெயரால்! ஆகவே, இருக்கும் சூழலில், இருப்பதில் இது சிறந்தது, எனக் கூறுவதும் தவிர்க்க முடியாததாகின்றது.
பிணியால் அவதியுற்று முணங்கும் ரஷ்ய மக்களின் முணகல்கள் இன்று பூமியை அதிர வைக்கிறது. இவர்களுக்கு ஏதோ ஒன்று கொடுக்கப்பட வேண்டியுள்ளது. ஆனால், ‘போரும் அமைதியும் (War and Peace) போன்ற பல்வேறு படைப்புகளும் இந்த வலிகளை தணிப்பதற்கு உதவுவதாகவும் இல்லை...
என்னைப் பொறுத்தவரை நான் டால்ஸ்டாயை ஒரு துறவியாக (அல்லது மகாத்மாவாக) அழைக்க விரும்பவில்லை. காணவும் விரும்பவில்லை…. அவர் ஒரு பாவம் செய்த மனிதராகவே இருந்துவிட்டு போகட்டும். ஆனால், எமது இதயத்தின் அருகே – தீவினை மிக்க இவ் உலகத்தின் இதயத்தின் அருகே எங்கள் அனைவரினதும் இதயங்களுக்கு அருகே அவர் இருக்கட்டும். புஷ்கினையும் அவரையும் விட அதிகமாக இன்று தேவைப்படுபர்கள், யாருமே எமக்கு இல்லை எனலாம். அத்தனை அன்பு மிக்க வழியில்.
டால்ஸ்டாய் இறந்துவிட்டார்.
நான் வலி பொறுக்க முடியாமல் அழுதேன்.
அவரது சித்திரம் என் கண் முன்னால் தோன்றுகிறது.
அவர் பொறுத்து கதைப்பதற்கு மனம் துடிக்கின்றது.
நதிகளின் ஓரத்தில், அமைதியுடன் கிடக்கும் வழுவழுத்த கற்பாறையைப் போல், அவர் தனது பெட்டியில் கிடத்தப்பட்டிருப்பதை என் மனக் கண்ணால் காண்கின்றேன்.
சூதும் தந்திரமும் நிறைந்த அவரது பற்றற்ற புன்னகை, அவரது தாடிக்குள் புதைந்து அமைதியான முறையில் மறைந்திருக்கின்றது. அவரது கரங்கள், தமது சிரமமான பணிகளை நிறைவேற்றிய பின், இப்போது மிக இறுதியாக மடித்து வைக்கப்பட்டிருக்கின்றன.
அவரது கூர்மையான கண்களும், கணமும் ஓயாமல் அசைவுகளைக் காட்டும் அவரது விரல்களும், அவரது குரலும், அவர் காதலிக்கும் அவரது விவசாயக் கிராமிய மொழியும்-அட, இம்மனிதன், எவை எவற்றை அரவணைக்காமல் விட்டான்-எவ்வளவு மேதையாக திகழ்ந்தாலும்-கூடவே, எவ்வளவு விரோதமான அச்சம் தரக்கூடிய, விசித்திர மனிதனாகவும் தோற்றம் தந்தான் என்பதும் எனது சித்திரத்தில் அடங்குகின்றது. … …
ஒருமுறை…ஒரு கடற்கரையில், பாறைகளின் நடுவே, இவர் தனிமையில் அமர்ந்து கடலை நோக்கியவாறு இருப்பதைக் கண்டேன்…
அவரது தாடி அவரது விரல்களிடையே அகப்பட்டு திணறியது. அலைகள் கூட அவரது காலடியை அன்போடு தொட்டு வணங்கிச் சென்றன. ஓர் பழைய கருங்கல்லை போன்று அவர் தோற்றம் தந்தார். இந்த கல்லுக்குத் திடீரென உயிர் வந்து எழுந்து நின்றது போலவும், இவ் உலகின் அனைத்து உயிரினங்களின் தோன்றல்களையும் அவற்றின் நோக்கங்களையும் ஆழ புரிந்து வைத்திருப்பது போலவும், இந்தக் கடல் கூட அவரது பெரிய ஆன்மாவின் ஓர் சிறு துளியே என்பது போலவும் அலைகளுக்கு அவர் தமது இஷ்டப்படி உத்தரவுகள் பிறப்பிப்பது போலவும் அவை அவருக்கு அடங்குவது போலவும், அவர் திடீரென கரத்தை அசைத்தால் இந்தக் கடல் கட்டுப்பட்டு தனது அலைகளை அசைவின்றி அடக்கி அமைதியாகி விடும் என்பதும் போல் தோன்றியது.
பேரானந்தமும் பேரதிர்ச்சியும் என் ஆன்மாவில் வியாபித்து. இந்தப் பேரின்ப நிலையானது என்னைப் பின்வருமாறு யோசிக்க வைத்தது:
‘இம்மனிதன் இவ் உலகில் வாழ்ந்திருக்கும் மட்டும், நான் இந்த உலகில் ஓர் அனாதை இல்லை’.
அவரது ஆழ்ந்த தியானத்தைக் குழப்ப விரும்பாமல் நான் சத்தமின்றி நகர்ந்தேன்.
இப்போது நான் ஓர் அனாதையாக உணர்கின்றேன்.
இவ்வளவு மோசமாக நான் அழுததும் கிடையாது. எழுதும் போது என் கன்னங்களில் கண்ணீர் வழிந்து உருண்டோடி ஓடுகிறது-கசப்புடன்.
அவரைக் காதலித்தேனா நான்? அதுவும் எனக்குத் தெரியாது. ஆனால், அவர் என்றுமே என்னில் ஓர் ஆன்ம தேடலை, ஓர் ஆன்ம சிந்தனையை ஊக்குவிக்கத் தவறவில்லை. இவை, முரண்பட்டவையாக அல்லது பகைமை சார்ந்த உணர்வுகளில் சென்று முடிவடைவதாக இருந்திருக்கலாம். ஆனால் அவை தீவிர தேடல்களை என்னில் தோற்றுவித்தன-அதிலும் முக்கியமாக என் ஆன்மாவில் என்பதே பிரதான விடயமாகும்.
அவர் திடீரென ஒரு கதவின் பின்னால் இருந்து அல்லது ஓர் மூலையின் பின்னால் இருந்து தோன்றி தோற்றம் தரக் கூடும். அத்தோற்றமானது பிரமாண்டமானதாய் இருக்கவும் கூடும். இப்பூமியின் மீது, தனது விரல்களைத் தனது இடைவாரில் சொருகியபடி, சிறிய குறுகிய அடிகளை வேகமாக எடுத்து வைத்து, அவரது தேடும் பார்வையை அனைத்தின் மீதும் வீசி, நொடியில் அவற்றைப் புரிந்து, பின், ‘எப்படி இருக்கின்றாய்’ என அவர் என்னிடம் விசாரிப்பதை நான் பின்வரும் வழியிலேயே புரிந்து வைத்திருந்தேன்:
‘எப்படி இருக்கின்றாய்’: ‘எனக்குப் புரிகிறது. இங்கே போதிய சந்தோசம் எனக்கும், போதிய அர்த்தம் உனக்கும் இல்லை என்பது’.
இருந்தும், ‘எப்படி இருக்கின்றாய்?’ … … …
உண்மைக்குப் புறம்பான, ஏமாற்றும் மாய தோற்றத்தையும் அளிக்ககூடிய இந்த ரஷ்ய ஆன்மாவுக்கு நான் பின்வருமாறு முகமன் கூற முடியும்:
‘லியோ டால்ஸ்டாய் அவர்களே, உங்களது தத்துவ அல்லது மதம் சார்ந்த பார்வைகளை நான் ஏற்பதாக இல்லை. ஆனால் ஒரு கலைஞராக என் ஆழமான மரியாதைகளுடன்…’.
திடீரென, இந்த விவசாய தாடியின் பின்னால் இருந்து, இந்த விவசாய உடையின் பின்னால் இருந்து, ஒரு கோமகன் தோற்றம் கொள்வான். அவன், அச்சொட்டான உயரிய அசைவுகளையும், அபிநயங்களையும், அற்புதமான சொற்களின் தேர்வையும், பேச்சின் தர்க்கத்தையும், சுருக்கத்தையும் உள்ளடக்கிக் கொள்வான். இவை அனைத்துமே எம்மை கொள்ளை கொள்ளச் செய்வதுதான்…
[தொடரும்]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.