* 'டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்பம் - இரமணிதரன் கந்தையாஇடதுசாரிகளின் பழம் பெரும் தலைவரான, சண்முகதாசனின் நூற்றாண்டு மலர் வீரகத்தி தனபாலசிங்கத்தால் தொகுத்தளிக்கப்பட்டுள்ளது. இதன் கட்டுரைகளில் ஒன்றில், ‘சிறு தீப்பொறியானது பெரும் காட்டுத் தீயை உருவாக்கிவிடும்’ என்ற வரியும் வந்து போகின்றது. ரஷ்யாவின் ‘இஸ்கரா’ (தீப்பொறி) முதல், இந்திய விடுதலை இயக்கத்தின் ‘அக்கினிக் குஞ்சு’ வரை (பாரதி) ‘தீ’, அவ்வவ் காலப்பகுதியில், அவ்வவ் மனிதருக்கு மிக நெருக்கமாய் இருந்துள்ளதுதான். பிரமித்தியூஸ் கூட, நெருப்பை, கடவுள்களுக்கு தெரியாமல் திருடி மக்களுக்கு சேர்ப்பித்தான் என ஐதீகம் கூறுகின்றது. இப்படி அறிவை மனிதர்களுக்கு கொடுக்க, சம்பந்தப்பட்ட மனிதர்கள், கொடுத்த விலையானது அபரிமிதம் என்றாலும், இப்பாரம்பரியம் இன்னும் தொடரவே செய்கின்றது என்பதனையே வீரகத்தி தனபாலசிங்கத்தின் தொகுப்பும் ஒரு வகையில் எமக்கு பறை சாற்றுவதாய் உள்ளது.
‘கோட்பாட்டு விடயங்களில் நான் பத்தாம் பசலியான தூய பிராமணன்தான்’ என பெருமையுறும் சண்முகதாசன் பொறுத்த ஒரு சாதாரண மலையக தொழிலாளியின் கூற்று: ‘கொடுத்த உணவை உண்டு, விரித்த சாக்கினில் அமர்ந்து… (நந்தலாலா கதைகள்:சுந்தரம்)’ நன்றி பெருக்குடன் அம்மனிதனை தன் மனக்கண்ணால் ஒரு கணம் நிறுத்தி பார்க்கும் அம்முதிய தொழிலாளியின் பெரிய கண்கள் பளபளத்தன.
இந்நினைவுகளை எல்லாம் வெவ்வேறு வார்த்தைகளில் தேக்கித்தர முற்பட்டுள்ள வீரகத்தி தனபாலசிங்கத்தின் முயற்சியின் வெற்றிகள் ஒருபுறம் இருக்க, ஒரு நூறு ஆண்டுகளின் பின் இத்தகைய ஒரு நிகழ்வை நினைக்கத் தூண்டிய இச்செய்கையானது, புதிய இளந் தலைமுறையினருக்கு வரப்பிரசாதமாகவே அமைந்து, ஒரு செய்தியை கூறாமலும் விட்டதில்லை எனலாம்.
11
‘அற்பர்கள் வாழும் மண்ணில் சண்முகதாசன் போன்ற மனிதர்கள் பிறப்பபெடுப்பது இனி நடவாத காரியம்… முக்கியமாக, தன்னை சுற்றியுள்ள தோழர்கள், பின்வாங்கிவிட்ட ஒரு நிலையில்… அவர் உறுதியாக நின்றார்… தனக்கு கிடைத்திருக்க கூடிய சௌகரிய வாழ்வின் அத்தனை வசதிகளையும் நிராகரித்து…’ என்ற பொருள்பட தனபாலசிங்கம் அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டிருப்பார்.
மேற்படி கூற்றில் உண்மை இருந்தாலும், ‘இனி அது நடவாத காரியம்’ என அவர் கூற துணிவது சண்ணின் ஆளுமையை எடுத்துரைக்கவே என நாம் கொள்வது தர்மமாகும்.
தனது பல்கலைகழக இறுதி பரீட்சையை எழுதி முடித்த கையோடு இந்த இருபத்தி மூன்று வயது இளைஞன் நேரடியாக கட்சி ஆஃபீசை அணுகி ஒரு 60 ரூபா வேதனத்திற்கு சேவை செய்ய தீர்மானித்து விட்டான். அதிலும் கட்சி தொடங்கி அப்பொழுதே இரண்டு கிழமைகள் முடிந்திருந்தன. இதை ஆற்றிய தனது மகனை துயருடன் விழித்து பார்த்து, எந்த தாயாரையும் போலவே அவரது தாயாரும் வினவ செய்கின்றார்: ‘உனது பிற்காலத்தில் சுகவீனமுற்றால் நீ என்ன செய்வாய்…’. தாய்மாரின் இத்தகைய நெஞ்சை பிளக்கும் சொற்களை தாண்டி வந்தவர்களின் வரலாற்றில் சண்ணுக்கு கணிசமான இடமுண்டு என்கிறது நூல்.
இருந்தும் தான் சிறையில் அடைக்கப்பட்ட போது (1971) தன்னை ஒத்த ஜே.வி.பி சகோதரர்கள் தன்னை ‘பால்திகாரயா’ என பெயர் சூட்டி அழைத்ததை எண்ணி அவர் நகைப்பது ஓர் கசந்த நகை முரணாகவே தோன்றுகின்றது. (பக்கம்:33). இது கிட்டத்தட்ட, அம்மை நோய் கண்டு அவஸ்தையுற்று கிடந்த தம் சகோதர இயக்க தோழர்களை சுட்டு வீழ்த்திய அதே மனித வன்மத்திற்கு முகம் கொடுக்க நேர்ந்த ஒரு முதிய தோழரின் அறிவும், கசப்புமே இந்நகைப்பில் உள்ளடங்குவதாக உளது எனவும் நாம் கூறலாம். ஆனால், இது வரலாற்றின் ஒரு விதியாகவே இருக்கின்றது. (குட்டி முதலாளித்துவத்தின் எதிர்வினைகள் - லெனின் சுடப்பட்ட சம்பவம் ஈறாக…).
111
1971இன் அரசியலானது, இந்நாட்டின் பாரிய திருப்பு முனையாக அமைந்தது. சண்ணின் பார்வையில், இவர்கள், கட்சியை உடைத்ததும், பிரிந்து வெளியேறியதும், அவர்களின் ஸ்தாபனத்தை ஸ்தாபித்ததும், பரவலாக்கியதும், பின் எழுச்சியை நடாத்தியதும், இவை அனைத்துமே, ஆதிக்க சக்திகளின் திட்டமிடப்பட்ட தந்ரோபாயங்களின் ஒரு பகுதியே என அவர் தனது இறுதி நாட்களில் கணித்து கொண்டிருந்தார்.
உண்மைத்தான். வடகிழக்கும் சரி. அல்லது மலையகமும் சரி. சண்முகதாசனின் தீண்டாமை இயக்கத்தாலும், செங்கொடி சங்கத்தின் வரலாற்று ஸ்தாபிப்பாலும், இந்நாட்டின் மலைகளையும் வயல் வெளிகளையும் அவர் அதிரச் செய்தார். காங்கிரசுக்கு எதிராகவும் பண்டை யாழ் மேட்டுக்குடி அரசியலுக்கு எதிராகவும் போர் முரசு கொட்டி, கிட்டத்தட்ட அவர் வெற்றி வாகை சூடிய நிலையிலேயே, இவ் இயக்க போக்கு முற்றாக களைந்தெறியப்பட்டு, நிர்மூலமாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை இந்நாட்டின் ஆதிக்க சக்திகள் (அது தெற்காய் இருக்கலாம் அன்றி வட-கிழக்காய் இருக்கலாம்) உணர தலைப்படுகின்றன. (உதாரணமாக, தொலைபேசி ஒட்டுக்கேட்ட விடயம் தொடர்பில் கேட்கப்பட்ட போது, பாராளமன்றத்தில் கருத்து தெரிவித்த அமைச்சர் மேஜர் மொன்டேகு ஜெயவிக்கிரம, ஒட்டுக் கேட்கப்பட்ட தொலைபேசிகளில் இரண்டில் ஒன்று சண்முகதாசனுடையது என்பதை ஏற்றுக்கொண்டதற்கூடு, ஆதிக்க சக்திகள் சண்ணை எப்படி நோக்கின என ஊகிக்கலாம். -பக்கம்:98). இது தொடர்பில், வெளிநாட்டு ஆதிக்க சக்திகளின் தலையீடுகளும் வழிகாட்டல்களும் இலங்கைக்கு உண்டா என்றால், ‘நிச்சயமாய்’ என கூறலாம். (உதாரணமாக, இன்றிருக்கும் அமெரிக்க தூதுவர், சிரித்த முகத்துடன், எப்படி எப்படி வலம் வருகிறார் என்பதை பார்க்கலாம்).
ஆகவே, இலங்கையின் ஆதிக்கம் வலதுசாரிகளிடம் இருப்பது இச்சக்திகளை பொறுத்தவரை பிரதானமாக வேண்டப்படும் ஒன்று. இலங்கையின் ‘அமைவிடமும்’ இதனை தீர்மானிக்கும் பிரதான விடயங்களில் ஒன்றாக இருக்கின்றது.
எனவேத்தான், 1971 எழுச்சிகளின் அரசியலுக்கு எதிரான விமர்சனங்களை சண் தொடர்ந்து செய்து வந்தாலும், 1971இன் நிகழ்வுகள் பயன்படுத்தப்பட்டு, அவருக்கு எதிரான செயற்பாடுகள் ஆதிக்க சக்திகளால் பிரதானமாக முன்னெடுக்கப்பட்டன.
இவ்வகையில் சண் மாத்திரமல்ல, அவரது இயக்கமே குறி வைக்கப்பட்ட ஒன்றாகியது. 1971 இல்!.
இதன் பிரகாரம் சண்ணும் அவரது தலைமை தோழர்களும் 1971 கிளர்ச்சியின் போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பட்டனர் - இவர்களுக்கும் கிளர்ச்சிக்குமிடையே எவ்வித சம்பந்தமும் இல்லை என அறிந்திருந்தாலும், ஜே.வி.பிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை அவர்கள் முன்வைத்திருந்தாலும்! மலையகத்தில் இவ் அழுத்தமான நடைமுறைகள் கடுமையாக அமுல்படுத்தப்பட்டு, செங்கொடி சங்கத்தின் தலைவர்களான ரொசாரியோ-ராமையா போன்றோர் கைது செய்யப்பட்டு, செங்கொடி சங்கத்தையே ஸ்தம்பித நிலைக்கு தள்ளினர் - தொண்டமானும் அஸீஸ{ம் இணைந்தாற்போல் மகிழ.
ஆனால், இவை அனைத்துமே, ஆதிக்க சக்திகள் கைக்கொண்ட சதி திட்டத்தின் ‘முதற்பாகம்’ மாத்திரமே ஆகின்றது. அதாவது தன்னை சவாலுக்கு உட்படுத்திய ஒரு இடதுசாரி இயக்கத்தை நிர்மூலமாக்குவது இத்திட்டத்தின் முதற்பாகம் எனலாம். (1971 கிளர்ச்சியை பாவித்து).
இக் கைதுகளை தொடர்ந்து அல்லது இவ்வியக்கங்களின் சீர்குலைப்புக்களை தொடர்ந்து ஆதிக்க சக்திகள் தமது இரண்டாம் பாகத்தை கட்டவிழ்த்து விட்டன.
1V
1958இல் சிங்களமே அரச கரும மொழி என்றும், வாகனங்களில் ஸ்ரீ என்ற எழுத்தின் அறிமுகம் கட்டாயமானது எனவும் சட்டங்கள் இயற்றப்பட்டாலும் இவை இந்நாட்டின் அரசியல் சுவாத்தியத்தை முற்றாக திருப்பி, மாற்றியமைக்க போதுமானதாக இருக்கவில்லை, எனலாம்.
மறுபுறத்தில், சண்ணின் வெற்றிகளும் இவற்றையே நிரூபித்தன. போதாதற்கு தெற்காசியாவிலேயே சண்முகதாசன் மாத்திரமே, மாவோவுடன் செங்காவல் படையினரின் அணிவகுப்பை பார்வையிட்டதும் அவர்கள் முன்னிலையில் உரையாற்றியதும் உள்நாட்டு ஆதிக்க சக்திகள் மாத்திரமல்லாது வெளிநாட்டு ஆதிக்க சக்திகளையும் இந்நிகழ்வுகள் திகில் கொள்ள செய்தன.
முன்னர் கூறப்பட்டாற் போல், இலங்கையின் அமைவிடத்தை ஆழ்ந்து நோக்கும் போது, இத்திகிலானது மேலும் உறுதியுற தொடங்கியது.
இத்தகைய ஒரு சூழ்நிலையிலேயே, இனவாதத்தின் ‘இரண்டாம் பாகம்’ இலங்கையில் அரங்கேறியது.
இதன்படி இனி, பல்கலைகழக நுழைவு தேர்வுகள் தரப்படுத்தலை அடிப்படையாக கொண்டதாக இருக்கும் என்பதுடன், காணி சீர்திருத்த சட்டம், நீரையும் நிலத்தையும் திட்டமிட்டு பிரித்தாளும் தன்மை, மாவலி நிர்வாக சட்டம் (1979) போன்றவை அடுத்தடுத்தாக வட-கிழக்கிலும், மலையகத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டு, அதிரடி தாக்கங்களை, நாட்டில் ஏற்படுத்தின. பெருந்தோட்டங்கள் பலவும் இப்போது அரச உடைமையாக மாற்றியமைக்கப்பட்டன. (1972 Land Reform Act: 1975 –Land Reform Amendment Act).
அதாவது, இப்போது ‘இனவாதம்’, ‘பெருந்தேசியவாதமாக’ நாட்டில் கட்டமைக்கப்பட்டு நிறுவனமயப்படுத்தபட்டதாகின்றது.
இதற்கு ஏற்றாற் போல், நாட்டின் அரசியல் தலைமைகளும் (தெற்கு மாத்திரமின்றி வட-கிழக்கும்) நாட்டின் சுவாத்தியத்திற்கு ஏற்ப தத்தமது அரசியலை கட்டவிழ்த்துவிட தொடங்கி விட்டன. (இப்போக்குக்கு வெளிநாடுகளின் பங்களிப்பும், கடனுதவிகளும், நன்கொடைகளும், ஆமோதிப்பும், ஆசிர்வாதங்களும், தரப்பட்ட உற்சாகமும் கணிசமானவை என்பது தனித்து கூறப்பட வேண்டிய அவசியமில்லை).
இவற்றை சண்முகதாசன் எவ்வாறு எதிர் கொண்டார் என்பதுவே இப்போதைய எமது வினாவாகின்றது.
V
தனபாலசிங்கம் தொகுத்தளித்துள்ள கட்டுரைகளில் ஒன்றில் ராஜன் பிலிப் அபிப்பிராயப்படுவது போல, 1960களில் சூல் கொண்ட, இயக்க விசைகளில் (Dynamics) ஒன்றான ‘இனவாதமானது’, 1971 காலப்பகுதியை அண்மிக்கும் போது புது வேகம் எடுத்ததாகின்றது.
பல்கலைகழக தரப்படுத்தல் என்றும், காணி-நீர்பிரிப்பு என்றும், காணி சீர்திருத்த சட்டம் என்றும் பல்வேறு போர்வைகளில், உருவாக்கப்பட்டது, ‘தேசியவாதமா’ அன்றி ‘பெருந்தேசியவாதமா’ என்பதை சரியாக வேறுபடுத்த முடியாத வகையில் நாட்டின் அரசியல் சூழல் இப்போது மாற்றியமைக்கப்பட்டது.
ஏனெனில், தேசிய வாதமானது, இலங்கையில் மேற்கிற்கு எதிராக செயற்பட்ட போக்கு என்பதைவிட, உள்நாட்டு சிறுபான்மை இனங்களை நசிக்கும் போக்காகவே சேனாநாயக்க காலம் தொட்டு செயற்பட தொடங்கி இருந்தது. இதுவே, தோற்றுவிக்கப்பட்ட இவ் அரசியலின் கொடூர தன்மையை அம்பலப்படுத்த போதுமானதாகின்றது. இவற்றுக்கு இடதுசாரிகள் எனப்பட்டோரும் பலிகடாவாகியது இவ்வகை அரசியலின் ஆழ ஊடுருவிய தன்மையையே காட்டி நின்றது.
இப்புதிய சூழலுக்கு ஏற்ப 1977, 1983 வன்செயல்களும் கட்டவிழ்க்கப்பட்டன. இதற்கு ஏற்றவாறு தமிழ் இளைஞர்களின் போராட்டமும் மறுபுறத்தில் வெடித்து கிளம்ப ஆரம்பித்தது.
வேறு வார்த்தையில் கூறுவதானால், சண்ணின் அரசியல் இயக்கம், இப்போது இயல்பாகவே பின்தள்ளப்படலாயிற்று.
இதே சூழல், ர~;யா போன்ற நாடுகளில் காணப்பட்ட போது அங்கேயும் செழித்தோங்கிய புரட்சி அலைகளை தடம் புரள செய்ய அல்லது பின் தள்ள ஆதிக்க சக்திகள் பல்வேறு இனவாத நகர்வுகளை இன அடிப்படையில் செய்த போதிலும், இதற்கு எதிரான எதிர்-திட்டங்களை லெனினும் ஸ்டாலினும் வெவ்வேறு கால கட்டங்களில், முன்வைத்ததற்கூடு இனக்குழுமங்கள், அங்கிருந்த பொதுவுடைமை கட்சிகளுடன் தங்களை இனங்காட்ட முற்பட்டமை முற்றிலும் இயல்பானதாகியது.
V1
வாக்குரிமை பறிப்பட்ட, மலையக தொழிலாளர்கள் மத்தியில் புதிய நம்பிக்கைகளையும், புதிய அரசியலையும், புதிய எதிர்பார்ப்புகளையும் விதைத்த சண்முகதாசன்- (பாராளமன்ற வாதங்களை நிராகரித்து) வடகிழக்கு சாதீய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போர்கொடி உயர்த்திய சண்முகதாசன் - இப்போது – மாறிய ஒரு இனவாத சூழலில், எதனை விதைக்க முற்பட்டார் என்பது கேள்வியானது.
மறுபுறத்தில், சிறிமா-சாஸ்த்திரி ஒப்பந்தத்தின் கீழ், 1964 முதல் 525,000 மலையக தொழிலாளிகள் அகற்றப்பட்டது போல 1977, 1983 வன்செயல்களின் பின்னர் 2009 காலப்பகுதி வரை கிட்டத்தட்ட 10 லட்சம் வடகிழக்கு தமிழர்களும் இலங்கையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டவர்களாகினர்.
இம்மாறிய சூழலில், தனது வாழ்நாள் முழுவதுமாய், வட-கிழக்கின் வலதுசாரி தமிழ் கட்சிகளுக்கு எதிராக போராடி வந்த சண்முகதாசன் 1983க்கு பின்னதான தனது இறுதி காலப்பகுதியில் (1993 வரை) இலங்கை தமிழர்கள், சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள்தாம் என்ற அபிப்பிராயத்தை கொண்டிருக்க, தலைப்பட்டார். (பக்கம்-94-30).
வேறு வார்த்தையில் கூறுவதானால், போராடும் தமிழ் குழுக்களை அவர் அனுதாபத்துடன் பார்ப்பதாக அவரது அரசியல் இப்போது மாற்றம் பெற்றது.
இவை அனைத்துமே, பொதுவில் இன்றைய அரசியலுக்கான விமர்சனங்களின் அடித்தளமாக அமையக் கூடும் என்பதிலும் சந்தேகமில்லை.
V11
1956, 1971 தேர்தல்களின் போது, இடதுசாரிகள் வெற்றிவாகை சூடியது போலவே 2024இல், தேசிய மக்கள் சக்தியும் (ஜே.வி.பி) ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து பாராளமன்றத்தில் 159 ஆசனங்களை கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. இந்த அடிப்படையிலேயே தற்போதைய அரசு தாபிக்கப்பட்டுள்ளது.
வட-கிழக்கின் அரசியலும், மலையகத்தின் அரசியலும், சிறப்பாக 2009இல் இருந்தே நொடித்து போக அல்லது இக்காலப்பகுதியில், மேற்படி அரசியல் அர்த்தமற்றதாய் வெளிற தொடங்கும் ஓர் பின்னணியில், தேசிய மக்கள் சக்தியின் அலை, மக்களிடை காத்திரமாக வீச தொடங்கி விட்டது எனக் கூறப்பட்டது.
ஜனாதிபதி முறைமையை ரத்து செய்தல், பயங்கரவாத தடை சட்டத்தை ரத்து செய்தல், இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வொன்றை காணுதல் என்பன மக்களிடை எதிர்ப்பார்க்கப்பட்ட சில.
ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன், நேபாள அரசைப் போல், தற்போதைய அரசும் யதார்த்த உலகின் அழுத்தங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டதானது.
கடந்த மூன்று மாதங்களில் மாத்திரம் (ஆகஸ்ட் 2025 வரை) 176.4 கோடி ரூபாய்க்கு இலங்கையின் முறிகள் ஏலமிடப்பட்டதாய் தகவல். (ரணில்-கோட்டா அரசியலைப் போல).
போதாதற்கு உலகம் வேறு, இன்று, அடிப்படையில் மாற தொடங்கியும் விட்டது. (பல்முனை ஒழுங்கை நோக்கி அது புறப்படுவதன் மூலம்).
இது, சீன-ரஷ்ய-இந்திய கூட்டணியின் புதிய தோன்றுகையும் பாகிஸ்தான் அல்லது பங்களாதே~pற்கு ஊடாக மேற்கு வேகம் கொண்டு இயங்க முற்படுவதும் தெற்காசியாவில் இதுவரை காணாத புதிய இழுப்பறிகளை காட்டுவதாயுள்ளது. இதிலும் சிக்க நேர்ந்துள்ள தேசிய மக்கள் சக்தி தனது வாக்குறுதிகளை எல்லாம் ஒருபுறம் தள்ளிவைத்துவிட்டு, இலங்கையின் அமைவிடம் சார்ந்து எழக்கூடிய ஓர் அரசியலில் கால்பதிக்க வேண்டிய சிக்கலான நிலைமைக்கு தள்ளப்படுகின்றது – பழைய அரசுகளை போலவும். (வித்தியாசம்: ரணிலின் அரசு போல் இம் மூன்று சக்திகளிடை அமெரிக்காவை அல்லது மேற்கை தனது மூலைக்கல்லாக தேர்ந்ததற்கு எதிரான மூலைக்கல்லை தேசிய மக்கள் சக்தி தேற வேண்டி இருந்தாலும் பின்பற்றும் அரசியல் என்னவோ இம் மூன்று சக்திகளையும் உள்ளடக்கும் ஓர் இழுபறி அரசியல்தான் என்றாகின்றது).
முறிகளை ஏலம் விடும் நடைமுறை தொடங்கியது போலவே மலையகத்தின் வேதன உயர்வும் மறுக்கப்பட்டும் (1750 ரூபாய் மறுப்பு) இனப்பிரச்சினைக்கான தீர்வும் மறுக்கப்படுகின்றது. பெருந்தேசியவாதத்தை இச்சூழலில் பகைப்பது தமக்கு பாதகமாவே அமையும் என்கின்ற அச்சம் தற்போதைய அரசினையும் ஆட்டிப் படைக்காமல் இல்லை. (இதனால் பௌத்த மதத்தின் ஆசார, அனுஸ்டானங்களை இவ்வகையில் முன்னெடுப்பது கடுமையான தேவையாகின்றது).
மறுபுறத்தில், உள்நாட்டு வெளிநாட்டு ஆதிக்க சக்திகளை பொருத்தமட்டில், இதே இனவாத பெருந்தேசியவாதத்தை இந்நாட்டில் கட்டியெழுப்புவதற்கூடாகவே, தமக்கு தோதான வலதுசாரி அரசியல் ஒன்றினை (சக்திகளை) முன்னிறுத்த முடியும் என்று தீர்மானம் கொண்டு அவை இயங்குவதாகவே தெரிகின்றது. (இப்பின்னணியில், தமிழ் புலம் பெயரின் தீவிர அரசியல் முகம் மாத்திரமல்லாமல், இஸ்லாமிய தீவிரவாதத்தையும் முடுக்கி விடுவதில், சர்வதேசத்தின் பங்கு யாது என்ற கேள்வி முக்கியத்துவப்படுகின்றது).
எனவேத்தான் செம்மணி புதைகுழி இன்று நாளாந்தம் தோண்டப்பட்டு, இருபாலாரின் “துருவப்படுத்தும்” அரசியலும் நன்கு வளர்த்தெடுக்கப்படுவதாக உள்ளது. (செம்மணி புதைகுழியானது எவரது ஆட்சி காலத்தில் தோற்றுவிக்கப்பட்டது – அல்லது ரணிலின் ஆட்சி கூட இது தொடர்பில் புரிந்தது யாவை – குறைந்தபட்சம் – ஓர் அர்த்தமுள்ள விசாரணையையாவது முடுக்கி விட்டதா – அல்லது பெயருக்கு வெறுமனே மாரடித்ததா என்பதெல்லாம் சம்பந்தப்பட்ட வினாக்களே ஆகின்றன. ஆனாலும், இக்கேள்விகள் யாவும் வேண்டுமென்றே கேட்கப்படாமல் மறக்கப்படுவதாய் உள்ளது என்பதும் அவதானிக்கத்தக்கதே).
உதாரணமாக, ‘சர்வதேச நீதி வேண்டும்’ என்ற கோரிக்கைகளின் “போலி தன்மையை”, முள்ளிவாய்க்கால் முதல் தினசரி நடந்தேறும் காசா படுகொலைகளின் பின்னணியில் ஆழ உணரக்கூடிய, வட-கிழக்கு அரசியல் தலைமைகள், இதன் போலி தன்மையை அறிந்தே (அல்லது தெரிந்தே) இவ்வாறான கோரிக்கைகளை முன்வைப்பது இயல்பாகின்றது. அதாவது, ‘புதைகுழி அரசியலானது’ இன்று வட-கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு ‘சர்வதேச விசாரணையை’க் கோருவதாக சுருங்கி போனது. (தனி நாட்டுக்கான அல்லது அதிகாரப் பரவலுக்கான அரசியல் சென்று மறைய).
மறுபுறத்தில், தேசிய மக்கள் சக்தியின் அறிவிப்பானது ‘சர்வதேச விசாரணைக்கு ஒருபோதும் இடமில்லை’ என்பதை உறுதியுற கூறுவதாய் உள்ளது. (31.08.2025).
சுருக்கமாக சொன்னால், விடயங்கள் முன்பை போலவே, ‘வாழ வைக்கப்படுகின்றன’ எனலாம். இதற்குள்ளேயே மக்களின் பெரும் துயரமும் அடங்குவதாய் உளது.
இச்சூழலில், ஜனாதிபதியின் இன்றைய யாழ் விஜயத்தின் போது பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாய் தகவல் வந்து சேர்கின்றது. (01.09.2025).
ஆனால், இவை இனப்பிரச்சினைக்கான தீர்வான அதிகார பரவல் தொடர்பிலோ அன்றி விகிதாசார அடிப்படையில் காணி, நிர்வாக அல்லது நீதித்துறை நியமனங்கள் வழங்கப்படும் என்ற அடிப்படையிலோ செய்யப்படுவதில்லை என்பது தெளிவாகின்றது. சிறுபான்மை அரசியல் தலைவர்களும் இவற்றுக்கான கோரிக்கையை முன்வைப்பதாக தெரியவில்லை. இச்சூழலில் வெறும் அபிவிருத்தி திட்டங்களும், ரணில் போன்றோரின் கைதுகளும் மாத்திரமே மக்களின் எதிர்ப்பார்ப்புகளை அல்லது கோரிக்கைகளை நிவர்த்தி செய்து, அவர்களை கவர்ந்திழுத்து கொள்ள போதுமானவையாக இருக்கும் என தோன்றவில்லை. இருந்தாலும், தேசிய மக்கள் சக்தி இப்படியாகத்தான் நினைப்பதாய் உள்ளது. இது தேசிய மக்கள் சக்தியின் எதிர்காலத்தை அல்லது இந்நாட்டின் எதிர்காலத்தை 1957 அல்லது 1971 காலப்பகுதிகளுக்கு கொண்டு செல்லுமா என்பது கேள்வியாகின்றது.
அதாவது, தேசிய மக்கள் சக்தியின் எதிர்காலம் தொடர்பில் அல்லது முழுநாட்டின் எதிர்காலம் தொடர்பில் பல்வேறு கேள்விகள் இன்று முளைப்பதாகவே உள்ளது எனலாம். இவை அனைத்தும், யதார்த்தத்தை போல, ‘கோட்பாடுகளின்’ முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றனவா என்ற கேள்விக்கு இடம் தருகின்றன.
மறுபுறத்தில், வட-கிழக்கு இயக்கங்களின் தியாகமும் வீரமும் விஞ்சி நின்ற போதிலும் அவர்களை வழிநடத்தக்கூடிய உன்னத கோட்பாடு இருந்ததாக தோன்றவில்லை. ‘முதலில் ஆயுதத்தை தூக்கிவிட்டு பின் அதனை நியாயப்படுத்த ஒரு கோட்பாட்டை தேடியதுதான் அவர்களின் நிலை’ என மன வருத்தத்துடன் சண் கூறியதாக பதிவு. (பக்கம்:24).
சரியான கோட்பாடுகள் அற்ற ஓர் தன்மை, பாரிய இந்திய விடுதலை இயக்கத்துக்கும் நன்கு பொருந்தும். ஒரு வகையில் மலையகத்தின் செல்வாக்கற்ற (அதாவது, இடதுசாரி, சிந்தனைகளின் செல்வாக்கற்ற) மலையக இயக்கங்களுக்கும் இது பொருந்தக் கூடும். இதனாலோ என்னவோ இந்திய விடுதலை இயக்கத்தில் காணப்பட்ட வீரமும் தியாகமும் உயரிய மட்டத்தில் இருந்த போதிலும், கோட்பாடற்ற ஓர் தன்மை, பாரதி கூறுமாற்போல், அது குருத்தாக இருக்கும் போதே கருகத் தொடங்குவதற்கு வழி வகுத்து விட்டது. ஜெயகாந்தன் கூட தனது நாவல்களில் ஒன்றில் ஒரு தூக்குத்தண்டனை கைதி தலையற்ற காந்தி சிலையை சிரு~;டித்தது குறித்து எழுதாமல் இல்லை. இவை யாவும் கோட்பாட்டின் முக்கியத்துவத்தை காட்டுவதாக உள்ளது.
லெனின் பொறுத்து எழுதும் கார்க்கி அவரது துறவு மனநிலையையும் ஆழ்ந்த கோட்பாட்டு தரிசனத்தையும் சுட்டிக்காட்டாமல் இல்லை. வேறு வார்த்தையில் கூறுவோமானால், தியாகமும் வீரமும் மாத்திரமே காட்டாறுகளை கடக்க போதுமானவை அல்ல என்பதாகின்றது. முள்ளிவாய்க்கால் தொடக்கம் 1971இன் எழுச்சி வரை இது ஆழமாக பதிவு செய்யப்பட்டு கிடக்கின்றது. மக்களில் இருந்து அந்நியப்பட்டு நிற்பது அல்லது மக்களுடன் மக்களாய் பிணைந்திருப்பது - இவை நடந்தேறி இருந்தாலும் ஒரு தெளிவான கோட்பாடின்மை – அதாவது யதார்த்த இயங்குவிதிகளை உள்வாங்கக்கூடிய ஒரு கோட்பாட்டின் இருப்பு அவசியமுறுகின்றது. இப்பின்னணியிலேயே சண்ணின் பங்களிப்பும் அவரது பின்னடைவுகளும் மேலே வாதிக்கப்பட்டுள்ளது.
V111
சண்ணின் ஏற்புடைமையானது ஒரு முள்ளிவாய்க்கால் அவலத்தை தடுத்திருக்குமா அல்லது இப்போது மலையகத்தில் காணக்கிட்டும் பாரிய தொழிற்சங்க சரிவை தடுத்திருக்குமா என்பதெல்லாம் தர்க்கத்துக்கு உகந்த வினாக்களாகலாம்.
ஆனால், தொண்டமானின் தங்கு தடையற்ற அரசியல் வெற்றியின் (தாத்தாவினதும், பேரனினதும்) பின்னால் சண்ணின் மறைவு அல்லது அவர் சிறைவைக்கப்பட்டமை, அதற்கூடு அவரது இயக்கம் சின்னாப்பின்னமாக்கப்பட்ட உண்மை இருக்கின்றது என்று கூறுதலே முறையானது.
அதாவது சண்ணின் அரசியல் மறைவு, தொண்டமான்களின் வரலாறு காணாத வெற்றிக்கு இட்டு செல்வதாக இருக்கின்றது (நிரந்தரமானவை அல்ல என்றாலும்). செங்கொடி சங்கம் 1970களில் இரண்டாக பிளக்கப்பட்டு புதிய செங்கொடி சங்கம் உருவாக நேர்ந்தாலும், இந்நிகழ்வு, தொண்டமான்களுக்கே வாய்ப்பாகியது. (ராமையாவை, கூட மலையகத்தின் சிவப்பு தொண்டமான் என சித்தரிக்கப்படும் அளவுக்கு, இந்த தர்க்கம் வலிமை பெற்றதாயிற்று).
அதாவது, விதைக்கப்பட்டிருந்த கோட்பாடுகள் இப்போது திரிபட்டும் அல்லது சிதைக்கப்பட்டும் காணப்படுகின்றது. மலையக தொழிற்சங்க இயக்கத்தின் சரிவுக்கு களம் அமைத்த ஏனைய பல முக்கிய கூறுகளில் இதுவும் ஒன்றாகும்.
வீரகத்தி தனபாலசிங்கம் தனது நூலில் சுட்டுவார்: “அற்பர்கள் வாழும் உலகில், சண்முகதாசன் போன்ற மனிதர்கள் மீண்டும் பிறப்பெடுப்பது நடவாத காரியம்” என.
இதனை வேறு வழியில் சண் சிரித்தப்படி எடுத்துரைப்பார்: “கோட்பாடுகள் விடயத்தில் நான் பிராமணன்தான்” என.
உண்மை. சரியான கோட்பாடு ஒன்றை கைப்பற்றலும், கட்சி ஒன்றை ஸ்தாபித்து வளர்த்தெடுப்பதும் பல்வேறு சிரமங்களை உள்ளடக்கிய சமாச்சாரம்தான். இவ்வகையில், சண் என்ற பாத்திரத்தின் ஆற்றலும் அதன் பலவீனமும் இனி வரவிருக்கும் இளம் தலைமுறையினருக்கு ஒரு வரப்பிரசாதமாகவே அமையும். இவற்றை அறிமுகப்படுத்தும் நூலாக வீரகத்தி தனபாலசிங்கம் அவர்கள் சண்ணின் நினைவு மலராக இப்போது தொகுத்தளித்துள்ள இந்த நூல் முக்கியமானது எனலாம். கோட்பாடுகள் இருந்த ஓர் இயக்க போக்கை தனபாலசிங்கம் அவர்கள் கோடிடுகின்றார். வரலாற்றின் ஒரு மைல் கல்லாக திகழக்கூடிய சில வரலாற்று சம்பவங்களின் பின்னால் ஒரு 23 வயது பல்கலைகழக மாணவன் தன் இறுதியாண்டு பரீட்சையை எழுதி முடித்த கையுடன் கட்சி ஆஃபீசில் நிற்கின்றான்: “உனது பிற்காலத்தில் சுகவீனமுற்றால் நீ என்ன செய்வாய்…” – ஒரு வயதான, முதுமை எய்தும் தாயாரின் விழிகளும் பளபளக்கலாம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.