
6
ரஜீவ் கொலை விடயங்கள் தொடர்பில் இந்தியா மறந்து விட்டாலும், விக்னேஸ்வரன் ஐயாவை சந்திக்க மோடி அவர்கள் மினக்கெட்டு வந்தபோது, விக்னேஸ்வரன் ஐயா நீட்டிப்பிடித்த பிரேமானந்தாஜீயின் விடுவிப்பு கோரிக்கையை மறப்பது சற்றே கடினமானது.
இப்போக்குகள் வடக்கின் நம்பகதன்மை தொடர்பான ஒரு கேள்விக்குறியை எழுப்புவது சகஜமாகின்றது–அதாவது, இவ் ஈழ அரசியல்வாதிகள், உண்மையில், தம் மக்கள் நலனை பிரதிபலிக்கின்றனரா அல்லது பல்வேறு கையூட்டல்களை பெற்று வெறும் உசுப்பேத்தும் நிகழ்ச்சி நிரலில் ஈடுபடுகின்றனரா என்பது இந்தியாவின் கேள்வியானது. இதற்கு ஏற்றாற் போல், முன்னரே குறிப்பிட்ட நேட்டோ அரூஸ் மற்றும் திபாகரன் போன்றோர் முன்வைக்கும் விடயங்கள் மக்கள் சார்பானதாக இல்லாமலும் ஊறு விளைவிப்பதாய் இருப்பதையும் இந்தியா கண்டு கொள்கின்றது.
இவ் வரப்பிரசாதங்கள் மொத்தத்தில், எமது புலம்பெயர் சமூகத்தின் ஒத்தாசையால்தான் நடந்தேறியுள்ளன – அதாவது நாம் வெறும் சந்தேக பேர்வழிகளாக மாறியுள்ளோம் என்பது நிதர்சனமாகின்றது. இப்போக்கினை, மேலும் நிரூபிப்பதாகவே, ராமநாதன் அர்ச்சுனா போன்றோர் தேர்ந்தெடுக்கப்படுவதும் இதற்கு புலம் பெயர் அரசியலின் ஆரவாரமும் உசுப்பேத்தலும் எவ்வாறு களைக்கட்ட உதவின என்பதும் குறிக்கத்தக்கது. இத்தகைய ஓர் குளறுபடியான சூழலில் தான் அர்ச்சுனா மலையகத்துக்கும் இன்று படையெடுக்க எண்ணியுள்ளார் என்ற அவரது அறிவிப்பும் வந்து சேர்கின்றது.
7
மலையகத்தில், புலம் பெயர் அரசியலின் செல்வாக்கானது இன்று பல்வேறு வடிவங்களில் சோபிப்பதாய் உள்ளது. பல்வேறு அமைப்புகளுக்கூடாக, பல்வேறு கலை வடிவங்களுக்கூடாக இவ் அரசியலானது, மலையகத்திலும் தன்னை நிலைநாட்டி கொள்ள பிரயாசை செய்கின்றது. கையூட்டலானது இப்போக்குக்கு அடிப்படை என்பதை தனித்து கூற வேண்டிய அவசியம் இல்லை.
வடக்கு மக்களை உசுப்பேற்றி, உசுப்பேற்றி இன்று ‘சமஷ்டி’ அல்லது ‘சர்வதேச கனவுகளுக்குள்’ அவர்களை ஆழ இருத்திவிட்டு, இன்று ‘மலையக தேசியம்’ குறித்து இவர்கள் குரல் கொடுக்க தெண்டித்திருப்பது வேதனையானதே.
காரணம், இத்தகையோரின் இடையறா முயற்சிகளால்தான் அல்லது தூண்டுதல்களால்தான், இன்று மலையக மக்களின் இன விகிதாசாரம் 2.8 வீதம் என குறைவடைந்துள்ளது. (20.05.2025 மக்கள் கணக்கெடுப்பின் பிரகாரம்).
“101 வருடங்களாய் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி தமிழர்களின் இன அடையாளம், இந்திய தமிழர்கள் என்றே இருந்துள்ளது… 1981-2012 காலப்பகுதியில் ஐந்து லட்சம் இந்திய தமிழர்கள் தங்களை இலங்கை தமிழர்கள் என்றே பதிவு செய்துள்ளனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இப்போது 2024இல் ‘மலையக தமிழர்கள்’ என்ற பதமும் இம்மக்களை அடையாளப்படுத்த இணைக்கப்பட்டுள்ளது” இது பேராசிரியர் ஏ.எஸ்.சந்திரபோசின் அவதானிப்பு. (23.11.2025: வீரகேசரி).
மொத்தத்தில், இம்மக்களின் ஒரு சாரார், தம்மை ‘இலங்கை தமிழர்’ என்று பதிவு செய்கையில் இன்னுமொரு சாரார் தங்களை ‘மலையக மக்கள்’ என பதிவு செய்திருக்கின்றனர். இவ் இருவகையான பதிவுகள் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி தமிழர்களின் இன விகிதாசாரத்தை குறைப்பதில் தலையாய பங்கு வகித்துள்ளது. ‘மலையக மக்கள்’ என பதிவு செய்து கொள்ள உற்சாகப்படுத்தியவர்களின் அரசியலானது, இந்தியாவை கத்தரிப்பதும் ‘மலையக தேசியத்தை’ உயர்த்துவதுமாகவே இருந்திருக்கின்றது என்பதும் அவதானிக்ககூடிய ஒரு உண்மையாக இருக்கின்றது.
இவ்விடயங்கள் இரண்டையும் ஊக்குவிக்கும் செயற்பாடுகள், புலம் பெயர் அரசியலால், நடத்தப்பட்டனவா என்ற ஒரு கேள்வி அவதானத்துக்குரிய ஒன்றே. நிர்வாகத்துறை, சட்டவாக்கத்துறை (பாராளுமன்ற பிரதிநிதித்துவம்), நீதித்துறை மற்றும் காணி, உத்தியயோகம், கல்வி, (பல்கலைகழக நுழைவு உள்ளடங்களாக) அனைத்து நன்மைகளும் இன அடிப்படையிலான விகிதாசாரங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ளன. (கடந்த காலத்திலேனும்). எதிர்காலத்தில், சில வேளைகளில் இவ்விகிதாசாரங்கள், இவ்வடிப்படையில் கேள்விக்குட்படுத்தகூடும். ஆனால், இம்மக்களின் சனத்தொகை, விகிதாசார ரீதியில் குறைவடையும் போது இந் நன்மைகளும் குறைபட கூடும் என எதிர்ப்பார்க்கலாம்.
அதாவது, தகுந்த ‘பிரதியீட்டு வழிமுறைகள்’ இல்லாத ஒரு சூழலில் தான்தோன்றி தனமாக வெறுமனே உசுப்பேத்தப்பட்டு அல்லது பொய்யான வாக்குறுதிகளால் பிழையாக வழிநடத்தப்பட்டு பதிவு செய்தல் நாடகத்தை நடத்துதல் எத்தகைய அடையாள சிக்கல்களை ஈற்றில் கொண்டு வந்து சேர்த்துவிடும் என்பதற்கு இது சான்றாகின்றது. (இது தொடர்பிலும் மனோ கணேசன் போன்றோர் வெகுவாக மௌனம் சாதிப்பதும் அவதானிக்க தக்கதே).
இது போலவே, வடமாகாண சபையின் நிராகரிப்பும், நிதியை மத்திக்கு திருப்பி அனுப்பும் செயற்பாடும் முழுவீச்சில் இடம்பெற்று, வடமாகாண சபையை முற்றும் முழுதாய் வினைத்திறன் அற்ற ஒன்றாய் உலகுக்கு காட்டப்போகின்றேன் என்ற மார்தட்டலுடன்தான், போலி தேசியவாதிகளின் நிகழ்ச்சி நிரல் ஒன்று அரங்கேறியது. இறுதியில் வேட்டியின் மடிப்பு கசங்காமல், நாசூக்காய், வேட்டியின் அடியில் இருந்து சாராய போத்தலை உருவி எடுத்து மேசை மீது வைத்த கதைத்தான் மலையகத்திலும் நிகழ்ந்துள்ளது, எனலாம். இப் பார்வைகளின் ஒட்டு மொத்த விளைபயன்களையே, (கனவு நிலை நாடகங்கள் உண்மை விளைவுகளை கூற) நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் ஜேவிபியின் வெற்றி இதனைப் பிரதிபலிப்பதாக இருக்கின்றது.
8
ஆனால் இப்படி எல்லாம் கூறுவதற்கூடு, வட-கிழக்கில் அல்லது மலையகத்தில், இன்று சிறுபான்மை இன பிரச்சினை இல்லை என்பதல்ல. உலகம் முழுமையாக, அது சீனாவாக இருக்கலாம் அல்லது ரஷ்யாவாக இருக்கலாம் - இடது சாரிகள் எனப்படுவோர், சிறுபான்மைகளின் பிரச்சினைகள் தொடர்பில் ஆழ்ந்த கரிசனையையும் அக்கறையையும் காட்டி, அவர்களுக்கென தனியான தீர்வு திட்டத்தையும் அக்கறையையும் முன்வைத்தே வந்துள்ளனர். ஆனால், இது, சிறுபான்மைகளின் மத்தியில் இருந்து குறுந்தேசியவாதம் எழுவதையோ அன்றி அவர்களிடையே இருந்து ஆணித்தரமாக ஒரு மேல்தட்டு வர்க்கம் உருவாகுவதையோ ஊக்குவிப்பதாய் இல்லை. எனவே, இந்த வகையில் ஜேவிபியினரின் புதிய அரசியல் வரைபானது, 13ஐ அல்லது இந்தியாவை நிராகரிக்குமானால் அதற்கு பிரதியீடாக அவர்கள் எதனை வைக்க கூடும் என்பது தவிர்க்க முடியாத கேள்வியாகின்றது. இப்பின்னணியிலேயே, எமது அரசியல் தலைமைகளின் சாணக்கியம் நிறைந்த நகர்வுகள் இன்றைய தேவையாக இருக்கின்றது.
9
கிழக்கில் 2371 மில்லியன் ரூபாவை அபிவிருத்தி திட்டங்களுக்காக செலவிடப்போவதாக இந்தியா உள்நோக்கம் கொண்டிருப்பதாய் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன (24.10.2025). ஆனால் இச்செய்தியானது கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்னராகவே ஊடகங்களில் வெளிவந்திருந்த செய்திகள்தாம் (24.12.2024: Deccan Herald). அதாவது, புலம்பெயர் அரசியலால் உந்தப்பட்ட வடக்கு மக்கள் இந்தியாவை நோக்கி கையை விரித்துவிட, இந்தியா, கிழக்கை நோக்கி தன் பார்வையை குவிப்பது இயல்பாகின்றது.
மலையக தலைமைகளும் சரி, வட-கிழக்கின் தலைமைகளும் சரி (முக்கியமாக எமது விக்னேஸ்வரன் ஐயா) இந்தியா சார்பான ஒரு நோக்கு நிலையை நிராகரித்து விட்ட சூழ்நிலையில் இந்தியா, கிழக்கை நோக்கியும், ‘தென்னிலங்கை’ நோக்கியும் தனது நகர்வுகளை மேற்கொள்வது தர்க்கப்பூர்வமாகின்றது. ஆனால், ஒடுக்கப்பட்டுள்ள ஒரு சிறுபான்மை இனம், தான் எழ வேண்டிய சூழ்நிலையில், மேலும் ஒரு பிராந்திய வல்லரசை பகைத்து ஒதுக்கி வைப்பதன் நன்மைத்தான் என்ன எனும் கேள்வி, விரும்பியோ விரும்பாமலோ மேலெழவே செய்கின்றது. இருந்தும், இந்தியாவின் ‘கிழக்கு நோக்கிய பார்வை’ அல்லது ‘தெற்கு நோக்கிய பார்வை’, அல்லது அதன் முழுமையான அக்கறை, இன்னும் ‘உறுதிப்படுத்தபடாததாகவே’ இருக்கின்றது. இந்த இடைவெளியில்தான் தமிழ் மக்களின் அரசியல் தலைமைகள் தமது சாதுர்யமான காய் நகர்த்தல்களை மேற்கொள்ள வேண்டிய கடப்பாடுகளை கொண்டிருக்கின்றார்கள். ஆனால், நடைமுறையில் நாம் காண்பது என்ன? களையாத வேட்டி மடிப்புக்குள் இருந்து சாராய போத்தலை எடுத்து வைப்பதும் பிரேமானந்தஜீயை நீட்டி பிடிப்பதுமான அரசியல்தான் இங்கே தொடர்வதாய் உள்ளது.
ஒரு விக்னேஸ்வரன் போக இன்னுமொரு இளஞ்செழியன் கண்டுப்பிடிக்கப்படுகின்றார். சமூக வலைத்தளங்களின் செய்தியின்படி, தற்போது சாக்கடையாக இருக்கும் தமிழ் அரசியலை பூக்கடையாக மாற்ற போகின்றேன் என அவர் வாக்குறுதி வழங்கி வருவதாக தெரிகின்றது. ஆனால், இவரது இக் கூற்றுக்கு மறுமொழி வழங்கியுள்ள ஒரு அன்பர் பின்வருமாறு கருத்து தெரிவித்துள்ளார்:
“இப்படித்தான் முன்பு ஒருவர், தமிழ் அரசியல் சாக்கடையை பூக்கடையாக மாற்றுவேன் என வந்து, இறுதியில் சாக்கடையை, சாராய கடையாக மாற்றியமைத்ததைத்தான் நாம் பார்த்திருந்தோம்”.
இச் சூழலில்தான் தமிழ் தலைமைகளின் பொறுப்புகள் குறித்து அண்மையில் வெளிவந்துள்ள வீரகத்தி தனபாலசிங்கத்தின் பேட்டி ஒன்று முக்கியமானதாக கருதப்படுகின்றது.
10
வீரகத்தி தனபாலசிங்கம் அவர்களின் பார்வையில் இரண்டு விடயங்கள் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது. ஒன்று, ஜேவிபி அரசை, தோற்கடிப்பதென்றால், எதிர் கட்சிகளான ரணில்-ராஜபக்ஷ - மைத்திரி-சஜித் ஆகியோருக்கு ‘இனவாத அலை’ ஒன்றை இந்நாட்டில் கட்டியெழுப்புவதை விட, வேறு மார்க்கம் கிடையாது. ஏனெனில், இவர்கள், பொருளாதார அடிப்படையில் ஜேவிபியினரை எதிர்க்க முடியாதுள்ளது. காரணம் பொருளாதார ரீதியில் இந்நாட்டை குட்டிசுவராக மாற்றியவர்களே இவர்கள்தாம். எனவேத்தான், ‘இனவாத அலை’ ஒன்றை உருவாக்காமல், இவர்கள் ஆட்சியை கைப்பற்றுவது, என்பது முடியாத காரியமாகின்றது. ஆனால், இந்த இனவாத அலையானது, 1977 அல்லது ஜுலை 83 போன்று, வன் செயல்களின் சாயலை பெறக் கூடுமா என்பதை விலாவாரியாக அவர் சொல்லவில்லை. இருந்தும், ‘இனவாத அலை’ ஒன்றை உருவாக்கியே தீர வேண்டி உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.
இப்பின்னணியிலேயே, அண்மையில் நடந்த நுகேகொட எதிரணி கூட்டத்தையும் (21.11.2025) அதற்கு இரண்டொரு தினங்கள் முன்னதாக இடம்பெற்ற திருகோணமலையின் புத்தர் சிலை விவகாரத்தையும் தனபாலசிங்கம் நோக்குகின்றார் எனலாம்.
திருகோணமலையின் புத்தர் சிலையானது இரவிலேயே வைக்கப்பட்டதாகவும் அடுத்து வந்த தினங்களில் இந்த சிலையை வைத்தவர்களே உடைத்து எறிந்து விட்டு, பழியை, தமிழர்களின் மீது போடும் செயற்திட்டம் இருந்ததாகவும், அதையொட்டியே நுகேகொட கூட்டத்தை வெற்றி பெற செய்யும் வாயப்புக்களை அதிகரித்து கொள்வது தொடர்பிலும் தனபாலசிங்கத்தின் பேட்டி விரிவடைவதாகவே இருந்தது. மேலும் புத்தர் சிலை பிரதேசத்தில் ஞானசாரதேரர் திடீரென தோன்றியதும், இது போலவே புத்தர்சிலை வைக்கப்பட்ட நிலப்பரப்பானது உண்மையில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளருக்கு சொந்தமானது என்ற உண்மையும் அலசப்பட்டது.
சுருக்கமாக கூறினால், தனபாலசிங்கம் சொல்வது சரியென்றால், அடுத்து வரும் காலங்களில் மேலும் பல இனவாத அலைகளை உருவாக்கும் முயற்சிகள் பரந்துபட முயன்று பார்க்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.
இரண்டாவதாய், தனபாலசிங்கம் கூறுவது, முதலாவதை போலவே, எமது கவனத்தை ஈர்ப்பதாகத்தான் உள்ளது. அதாவது, ஜேவிபி அரசு செய்யும் நற்காரியங்களுக்கான ஆதரவை தமிழ் தலைமைகள் அங்கீகரிக்கவே வேண்டும். இது, ஒப்பீட்டளவில் தேவையுறும் நடவடிக்கை என்பது மாத்திரம் அல்ல. ஆனால், பரந்துபட்ட ஓர் நட்புறவை, இனங்களுக்கிடையே, கட்டி எழுப்புவற்கான, சமிஞ்ஞையை, மாறிய சூழலில், இவை இன்று தருவதாய் இருத்தல் கூடும்.
சுருங்கக் கூறின், எமது தலைமைகள், இவ்விரண்டு விடயங்கள் தொடர்பிலும் புதிய நகர்வுகளை மேற்கொள்ள வேண்டி உள்ளார்கள். ஏனெனில், மாறிய சூழல்கள், மாறிய அரசியலை கோருவதாயுள்ளன–தற்சமயத்துக்கேனும். ஆனால், எமது கணபதி கனகராஜ் தொடக்கம் நேட்டோ அரூஸ் வரை விடயங்களை இதற்கு எதிர்திசையில் பார்ப்பதும் பகிர்ந்தளிப்பதும் எமது அரசியலாகின்றது.
11
மலையகத்தின் முக்கிய கட்சியாக திகழும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸானது, தனக்கு கீழ்படிவுள்ள கணபதி கனகராஜை முடுக்கி விட்டு, தற்போதைய அரசுக்கெதிரான காரசாரமான கட்டுரைகளை எழுத வைத்துள்ளது:
“கடைசி இந்திய தமிழனையும் இலங்கையில் இருந்து விரட்டியடிப்போம் என்று தற்போதைய அரசாங்கத்தின் பிதாமகர் ரோகண விஜயவீர சூளுரதை;திருந்தார்” என்றும் “தேசிய மக்கள் சக்தி இலங்கை தொழிலாளர் காங்கிரசை தேடி வந்ததே தவிர எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தேசிய மக்கள் சக்தியை தேடி போகவில்லை” என்ற பொருள்பட அவர் எழுதிய கட்டுரைகள் எமது கவனத்துக்குரியன. (02.11.2025:வீரகேசரி).
அதாவது தனபாலசிங்கம் அவர்கள் முன்னெடுக்கும் பார்வைக்கு நேர் விரோதமான போர்கொடி தூக்கலை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனது கீழ்படிவுள்ள கணபதி கனகராஜ் ஊடாக செய்வது தெரிகின்றது. மேலும் இக்கட்டுரையானது, தோட்ட தொழிலாளருக்கு வேதன உயர்வு வழங்கப்பட்ட சமயத்திலேயே வெளிவந்துள்ளது என்பதும் அவதானிக்கத்தக்கது. (அதாவது, வேதன உயர்வால், எழும்பக்கூடிய ஜேவிபி அலையை கட்டுப்படுத்துவதும் இதன் ஒரு நோக்கமாக இருக்கலாம்). அண்மையில் வழங்கப்பட்டிருக்கும் மலையக தொழிலாளர்களுக்கான வேதன உயர்வு கொஞ்சநஞ்சம் இருக்க கூடிய காங்கிரஸ் சார்பு நிலையை முற்றாக ஒழித்து விடுமா என்ற இவர்களின் அச்சம் நியாயமானதே. ஆனால், இது ஒரு யதார்த்தமாகவே காணக்கிட்டுகின்றது.
இதேபோல், போதைபொருள் விடயத்திலும் இவ் அரசை பிழையாக பொருள்கோடல் செய்து திசை திருப்புவது இப்போக்கின் இன்னுமொரு வாடிக்கையாகின்றது. இலங்கையின் போதை பொருள் வலைபின்னலுக்கு எதிராக, ஜேவிபி அரசு, அதிர் வேட்டைகளை துவங்கி உள்ள சூழ்நிலையில், இவர்கள் இலங்கையில் போதைபொருள் வலைபின்னலை உருவாக்குவதே இந்தியாத்தான் என்று புதுமையான வியாக்கியானத்தை முன்வைத்துள்ளனர். டுபாய் தொடக்கம் நேபாளம் வரை பல்வேறு சம்பந்தப்பட்ட போதை பொருள் தலைவர்களை கைது செய்து இலங்கைக்கு வரிசையாக கொண்டுவந்து சேர்க்கும் இந்நிலையில்தான், இவ்வலை பின்னலுக்கு இந்தியாவே பொறுப்பு என்று கூறமுற்படுவது பொருத்தமற்றதாகின்றது. “கேரள கஞ்சா” என்ற பெயரே, இது இந்தியாவில் இருந்துதான் கொண்டுவரப்படுகின்றது என்பதை குறிக்கவில்லையா என நேட்டோ ஆய்வாளர் அரூஸ், கணபதி கனகராஜின் பார்வையில் கூறுவது வேடிக்கையாகவே இருக்கின்றது. மலையகத்தின் வேதன உயர்வை பொறுக்க மாட்டாதது போல இங்கேயும் போதை பொருளுக்கு எதிரான நகர்வுகளை பொறுக்காது இந்தியாவுக்கு எதிராக அவற்றை திருப்பி விடுவது இவர்களின் வாடிக்கையாகின்றது.
இப்படியாய், தனபாலசிங்கம் ஒரு பார்வை மாற்றத்தை வலியுறுத்தும் வேளை, இதற்கு எதிரான மேற்படி பார்வைகள், மனோ கணேசனில் இருந்து ஜீவன் தொண்டமான வரை நீடிக்கவே செய்கின்றது என்பதையும் நாம் சுட்டிக்காட்டியே ஆக வேண்டும். கடந்த காலங்களில் தோட்ட தொழிலாளருக்கான வேதன உயர்வுக்காய் இவர்கள் மலையகத்தில், ஒரு துரும்பையும் அசைக்க தவறியது மாத்திரமல்ல ஆனால் தோட்ட தொழிலாளியை கசக்கி பிழிந்து சாறெடுக்க இவர்கள் பல்வேறு விதங்களில் உதவினார்கள் என்பதும் வெட்கக் கேடான ஒன்று.
12
அதாவது, எமது அரசியல் தலைமைகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை சந்திப்பதை விட, கனவு நிலைப்பட்ட உசுப்பேத்தல்களில் இருந்து இறங்கி யதார்த்த பூர்வமான அரசியலில் அடியெடுப்பது தேவையானதாகின்றது. ஆனால், மனோ கணேசன் போன்றவர்கள் மன்னாரின் காற்றாலை திட்டத்தை ஒட்டி அங்கே செல்வதும், நுகேகொட கூட்டத்தில் பங்கேற்று முடிந்தபின் நாமலே எமது எதிர்கட்சி தலைவர் என கோசம் போடுவதும் எமது அரசியலாகின்றது. இச்சூழ்நிலையில்தான் ஒரு புதிய அடியெடுப்பு அவசியமாகின்றது.
முடிவுரை:
மேலே கூறப்பட்டுள்ள விடயங்கள் அனைத்தையும் தொகுத்து பார்ப்போமானால், இந்நாட்டில் சிறுபான்மை இனங்கள் இனி எதிர்கொள்ள வேண்டிய சவால்கள், எதிர்காலத்தில் அதிகரிக்கவே செய்யும் என்பது வெளிப்படையாகின்றது. இருந்தும், இத்தகைய ஒரு மோசமான சூழலில், சிறுபான்மை இனங்களின் அரசியல் தலைமைகள், மக்களை வழமைபோல் உசுப்பேற்றுவதும், கனவுகளில் அவர்களை ஆழ புதைப்பதும் ‘சமஷ்டி’ என கோருவதும், புலம்பெயர் அரசியலின் தீவிர இடையறாத தாக்குதல்களுக்கு உள்ளாகுவதும் நாளும் நடந்தேறும் நிகழ்வுகளாகின்றன.
மறுபுறத்தில், இம்மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்படக்கூடிய வன்செயல்கள், ஒடுக்குமுறைகள், இனவாத அலைகள் - இவற்றினை பாவித்தே இந்நாட்டின் ஆட்சியை, ஜேவிபியிடம் இருந்து கவிழ்த்து விடலாம் என நம்பும் ஒரு எதிரணியினரும் இங்கே, இப்போது, செயற்படுவதாக தெரிகின்றது. ஆனால், இவ்வித அசைவுகளால் பாதிக்கப்படப் போவது, இந்நாட்டின் சிறுபான்மை இனங்கள் மாத்திரமல்ல. ஆனால் ஜேவிபியினரும் தான்.
இதனாலோ என்னவோ திருமலை புத்தர் சிலை விவகாரத்தை கூட இது ஒரு இனச் சாயல் கொண்ட தவறான புரிதல் என விளக்க முற்படாமல், இதனை ஓர் ‘இனவாதச் சூழ்ச்சி’ என அனுர குமார திசாநாயக்க வர்ணிக்கத் துணிவதில் நியாயம் உண்டெனலாம். ஏனெனில், இதுகாலம் வரை, மறைவில் பதுங்கி கிடந்த, ஞானசார தேரரும், இப்போது, சமயம் பார்த்து திருமலையில் வெளிப்பட்டுள்ளார்.
இதன் மறுதலையாகவே, எதிரணியின் நுகேகொட கூட்டமும் இடம்பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல், அதில் மனோ கணேசனும் கலந்து கொண்டு, நாமலே நமது எதிர்கட்சி தலைவர் என முத்தாய்ப்பு இட்டிருக்கின்றார். (முன்பு இவர் வின்னேஸ்வரன் ஐயாவினை அரசியலுக்கு அழைத்து வந்த காரண கர்த்தா தானே என அறிவித்ததும், பின் அவருடன் மரண ஊசி தொடர்பில் அமெரிக்க படைகளுடன் யாழ் சென்றதும் நினைவில் தட்டலாம்).
தனபாலசிங்கம் அவர்கள், அனுர குமார திசாநாயக்க அவர்கள் 13ஐ அமுல்படுத்துவதாக இருந்தாலும் அவர் சில சிரமங்களை எதிர்பார்க்கலாம் என கூறுவார். காரணம், இத்தகைய ஒரு தருணத்தை எதிர்ப்பார்த்தே, எதிர்க் கட்சியினர், முக்கியமாக ரணில்-ராஜபக்ஷ -மைத்திரி-சஜித் கூட்டம் காத்திருக்க கூடும், என்பார் அவர். இச்சூழ்நிலையில் தனபாலசிங்கம் சரியாக வர்ணிப்பது போல் அனுர குமார திசாநாயக்க ஒரு கைதியாகவே இருக்கலாம் –பெருந்தேசிய வாதத்தின் அல்லது பிக்குகளின் அல்லது இனவாதத்தின் கைதி!!
அப்படியெனில் விடை யாது?
கைதி வெளியே வர வேண்டி உள்ளது. விலங்குகளை உடைத்தேனும் என்பதுவே விதியாகின்றது. ஆனால் கைதி, காலம் கடந்து வெளியே வந்து என்ன பயன்? அண்மையில் நடந்த வெள்ள-மண்சரிவு சீரழிவுகளின் போது, கண்டி போன்ற பல பிரதேசங்களில், நீர்-மின்-தொலைபேசித் துண்டிப்புகள் காணப்பட்டன. மேலும் நிவாரணப் பணிகள், மிக மிக மந்த வேகத்தில் நடந்து முடிந்ததையும் நாம் கண்டோம். இச்சூழ்நிலையில், சஜித் பிரேமதாச அவர்கள், ஆட்சியை தம்மிடம் ஒப்படைக்குமாறு அனுர குமார திசாநாயக்காவைக் கோரினார். வேறு வார்த்தையில் கூறுவதானால், எதிரணியினர், ஒரு சந்தர்ப்பத்தை பார்த்து அதற்காய்க் காத்திருக்கின்றனர். அது இயற்கைச் சீற்றம் அல்லது இனவாத அலை- எதுவாக இருந்தால் என்ன? 'நாகம் புற்றை விட்டுக்கிளம்பி விட்டது போலத்தான்' ஞானசார தேரரும், இப்போது சமயம் பார்த்துத் திருமலையில் வெளிப்பட்டுள்ளார். இந்நிலையில் சிறைக் கைதி விலங்குகளை உடைக்க வேண்டி உள்ளது என்பது நிதர்சனம்.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









