2025ம் ஆண்டு ஒரு முடிவுக்கு வருகின்றது. ஆண்டுகள் அல்லது ஆண்டுகளின் இறுதி என்பன,  ஒரு  வசதி கருதி,  ஒரு  சுட்டும் புள்ளியாகவே(Reference Point), தொழிற்படுகின்றது. உலக நிகழ்வுகள் ஆண்டு அல்லது ஆண்டு இறுதி என்ற எல்லைப்படுத்தப்படுவன அல்ல. ஆயினும், 2025ம் ஆண்டின் இறுதி பகுதியை விரும்பியோ விரும்பாமலோ அடைந்துவிட்ட நாம் உலக நடப்புகளை ஒருமுறை திரும்பி பார்ப்பது நன்று. அதிலும், வருட இறுதி குறித்து ஊடகங்களும், உலக தலைவர்களும் மொத்தத்தில் உலகமே கருத்து தெரிவித்து கொண்டிருக்கும் போது.

எமது, அண்மைக்கால உலகில், உற்பத்தி வலைப்பின்னல்களையும், விநியோக வலைப் பின்னல்களையும், சிதைத்து நாசம் செய்வதற்கூடு, தமது ஆதிக்கங்களை உலகில் என்றென்றைக்கும் நிலைநாட்டிக் கொள்ள, சம்பந்தப்பட்ட நாடுகள் முயல்வதாய் உள்ளன. முக்கியமாக, சீன-ரஷ்ய-இந்தியா போன்ற புதிதாய் வளர்ச்சி காணும் பொருளாதாரங்களின் வளர்ச்சிகளை கணக்கில் எடுத்து நோக்கும் போது இவற்றை கட்டுப்படுத்தும் முறைமை, இந்நாடுகளுக்கு தேவையாகின்றது –தத்தமது உலக ஆதிக்கத்தை நிலைநாட்டி கொள்வதென்றால். (Containment Measures). இது தொடர்பிலேயே, 2025ஆம் ஆண்டானது பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்துள்ள ஓர் ஆண்டாகவே திகழ்கின்றது.

2

கொரோனா பெருந்தொற்றானது உற்பத்தி வலையமைப்புகளையும் விநியோக சங்கிலிகளையும் முற்றாக உடைத்தெறிந்து, ஏற்கனவே இருக்கும் ஆதிக்க சக்திகளுக்கு வாய்ப்பளித்து விடும் என்று நம்பப்பட்டது. ஆனால், கொரோனா கிருமிகள் எல்லைகளைக் கடந்தன. இக்கிருமிகளை உருவாக்கிய நாடுகளே தமது நடவடிக்கையால் மூச்சுவிட முடியாமல் திணரும் காட்சிகளை உலகு கண்டது. அமெரிக்காவில் மாத்திரம் இதனால் ஏற்பட்ட இறப்பு 1,219,487 என மதிப்பிடப்பட்டது. சீனாவில், இதன் இறப்பு 5212 என World Meter கூறியது. இன்னுமொரு பதிவின் படி சீனாவின் இறப்புகள் 2022-2023 காலப்பகுதியில் மாத்திரம் 82,000 என கணிப்பிடப்பட்டது  (NLM). (புள்ளிவிபரங்களின் பின்னாலுள்ள அரசியலை ஊகித்து கொள்வது சிறப்பானது).

ஆனாலும், இது போன்ற தரவுகளாலும், சீனத்தின் அபரிமித வளர்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை. சீனத்தின் உணர் கொம்புகள் முழு உலகையும் சுற்றி வளைத்து, துளாவி, அலசி ஆக்கிரமிக்க தொடங்கி விட்டன. கடன் வசதி அல்லது உதவிகரம் அல்லது ராணுவ பலம் - என்ற பல்வேறு அடிப்படைகளில் அதன் ஆதிக்கம் வரலாறு காணாததாக நகர தொடங்கி விட்டது. ஆகவே, கேள்வி இதனை எவ்விதம் கட்டுப்படுத்துவது என்பதாகும்.

3

'ஒருமுனை' உலக ஆதிக்கம் என்பது, உலகில் இருந்து மெல்ல மெல்ல கரைந்து செல்ல, அதனிடத்தில் ஒரு 'பன்முனை' உலகு எனும் ஒழுங்கு மெது மெதுவாக உதயமாக தொடங்கியது. இப்போக்கே, மாறி வரும் ஒரு உலக முகத்தின் 2025 நிகழ்வுகள் என, ஆணித்தரமாக படம் பிடித்து காட்டுவதாய் உள்ளன. இனி, இந் நகர்வுகளை தடுப்பதென்றால், பண்டைய காலனித்துவ ஆட்சி முறைமையை போல சட்டங்களை, முக்கியமாக சர்வதேச சட்டங்கள், ஐ.நா ஏற்பாடுகள் போன்றவற்றை, - மதியாத ஓர் காட்டுமிராண்டி தனமான ஆவேச மிருகம் அவிழ்த்து விடப்பட வேண்டியதாகின்றது. எனவேதான், உக்ரைனிய போரும், பொருளாதார தடைகளும், பிற நாடுகளின் சொத்துக்களை அபகரிக்கும் முறைமைகளும் நடைமுறைக்கு வந்து சேர்வதாய் இருந்தன.

இவையே, அறம் -இவையே தர்மம் என ஊடகங்களும் அவற்றை உலக மக்களுக்கு போதித்தன. (இவ் ஊடகங்களில் அனேகமானவை இதே ஆதிக்க சக்திகளின் கரங்களில் அல்லது வலைப்பின்னல்களில் சிக்கி அவற்றுடன் ஒன்று கலந்த வஸ்துவாக திகழ்கின்றன என்பது வேறு விடயம்). ஆனால், இப்போக்கு உலகின் முகத்தை வெகுவாக மாற்றியது. மக்கள், கூட்டம் கூட்டமாக நாடுக்கு நாடு இடம் பெயர்ந்து அலைய திரிய விடப்பட்டனர். அகதிகளாக அவர்கள் நாடு கடந்தனர். சின்னஞ் சிறுசுகள் குடிபெயரும் ஒரு நடைமுறையில், அலைகடல்களின் மத்தியில் சிக்கி, இறந்து கரைகளில் ஒதுங்குவது சகஜமானது. (இப்படியான ஒரு குழந்தையை, ட்ரம்ப், தனது கோல்ப் மட்டையுடன் பார்ப்பதாக தீட்டப்பட்ட கேலி சித்திரமும் பிரபல்யமானது).

இது போக, காசா போர்முனையை எடுத்துக் கொண்டால்கூட அங்கே தினசரி ஆயிரமாயிரம் குழந்தைகள் கொடூரமாக கொலையிடப்படுவதை உலகு கண்டுகளித்தது. அதிலும், ஐக்கிய நாடுகள் அமைப்பு அல்லது வேறு பல சிறுவர் அமைப்புகள் தாம் சிறுவர் நலன்களை இன்றும் முன்னெடுப்பதாக் கூறி நிற்பதை பார்த்து உலகு மௌனித்தது. இத்தகைய ஒரு பின்னணியில்தான் 2025இல் தெற்கு நாடுகளின் கூட்டும் உறவும் பலப்படுவதாக இருந்தது.

4

2025இல், அமெரிக்காவின் தேசிய கடனானது வரலாறு காணாத அளவில் 38 ட்ரில்லியன் டாலர்களை எட்டிப் பிடித்தது. (அமெரிக்க திறைசேரியின் கணிப்பின் பிரகாரம்). இதேவேளை, சீனத்தின் அல்லதுரஷ்யாவின் அல்லது இந்தியாவின் நிலைமையோ நேரெதிராய் மாறுபட்டதாய் இருந்தது. இந்தியா எனும் தேசத்தின், சாதாரண சராசரி பிரஜையின் வாழ்க்கை வெறுமனே பாதையோரமாய் கிடப்பது சகஜம் என்றாலும், இந்தியாவின் அம்பானி-அதானி போன்ற குழுமங்களின் புதிய எழுச்சியும், இணைந்தாற்போல், இந்தியாவின் மத்திய தர வர்;க்கத்தினரின் பொருளியல் வளர்ச்சிகளும் வரலாறு காணாத முறையில் எகிறி எழுவதாய் இருந்தன.

பொருளியல் ரீதியில் இங்கிலாந்து போன்ற நாடுகளை பின் தள்ளி, இந்திய பொருளாதாரமானது, உலகின் பெரும் பொருளாதாரங்கள் என்ற ரீதியில், ஐந்தாம் இடத்தை 2025இல் கைப்பற்றியது. 2027இல், இந்தியா மூன்றாம் இடத்தை கைப்பற்றிக் கொள்ளும் என்று கருத்து நிலவுகின்றது. இதேவேளை, சீனத்தின் பொருளாதார வளர்ச்சி அபரிமிதமாய் வளர்ந்து, மறுபுறத்தில் உலகை ஆட்டம் காண வைத்துள்ளது.

இப்பின்னணியில் தான், ரஷ்யா முன்னெடுத்த நோர்ட் ஸ்ட்ரீம் (1234KM) எரிகுழாய்களின் திட்டம் முழு ஐரோப்பாவுக்கும், ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என நம்பப்பட்டது. மிக மலிவாக எரிவாயு வினியோகத்தை அது முழு ஐரோப்பாவுக்கும் செய்தால், முழு ஐரோப்பாவுமே, பொருளாதார வளர்ச்சியில் வரலாறு காணாத உச்சத்தை எட்டிப் பிடித்து மக்களையும் வரலாறு காணாத வகையில் முன்னேற்றி விடும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், இப்படியானரஷ்ய-ஐரோப்பிய கூட்டு என்பது அமெரிக்க கம்பனிகளுக்கோ அன்றி சம்பந்தப்பட்ட ஐரோப்பிய கம்பனிகளுக்கோ, இறுதி கணிப்பில், ஊறு விளைவிப்பதாகவே இருக்கும் என முடிவு செய்யப்பட்டது. எனவே 26.09.2022 இல் இக்குழாய்கள் வெடி வைத்து தகர்க்கப்பட்டதுடன் பதினொரு பில்லியன் செலவில் அமைக்கப்பட்ட இத்திட்டம் நிறைவேறாது முடிவுக்கு வந்தது. இவ் வெடிவைப்பு குறித்து ஆய்வு செய்த பலர், தங்கள் காலில் தாங்களே சுட்டுக் கொண்டார்களா என்ற கேள்வியை உலகு கேட்க தவறவில்லை.

ஆனாலும், முதலாளித்துவ போட்டிகளில், இத்தகைய வழிமுறைகள் தவிர்க்க முடியாதவை - இத்தகைய நாசகர செயற்பாடுகள், முதலாளித்துவ உற்பத்தி முறையில் நடந்தேறும் நிகழ்வுகளாக இருப்பன –அவை தங்கள் தங்கள் சொந்த நலனுக்காக வெடி வைத்து தகர்க்கும் செயன்முறை அல்லது இப்படி கால்களில் சுட்டுக் கொள்வது பொது விதியாகின்றது. ஆனால், இது மறுபுறத்தில், உலக நாடுகளிடை புதிய அடி எடுத்து வைப்பை ஆரம்பித்து வைத்து விட்டது எனலாம். சுருக்கமாக கூறினால், உலகின் அரசியல் முகமானது இவ் வெடிவைப்பின் பின்னால், தீவிரமான மாறுதலுக்கு உள்ளாகிறது எனலாம்.

சாதாரண மக்களின், வாழ்நிலையை குப்பை மேடுகளில் கடாசி எறிந்து விட்டு, தங்கள் கால்களில் தாமே சுட்டுக் கொள்ளும் ஒரு நடைமுறை உலக நாடுகளில் உதயமாகி விட்டதை போல இதற்கெதிரான விமர்சனமும் உதயமாகாமல் இல்லை. இதன் தொடர்ச்சியாகவே உக்ரைனிய போரும், பொருளாதார தடைகளும், புதிய விரிவிதிப்பு முறைகளும் வந்து சேர்வதாய் இருந்தன. வேறு வார்த்தையில் கூறுவோமானால், புதிய அரசியலானது உலகில் அவிழ்த்துவிடப் படுகின்றது.

உற்பத்தி வலைபின்னல்களை அல்லது விநியோக வலைப்பின்னல்களை சிதைப்பதன் மூலம் தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதே ஒரே வழி அல்லது அசுர வேகத்தில் வளர்ச்சியுறும் வெவ்வேறு நாடுகளின் பொருளாதாரங்கள் தங்களை விஞ்சிடுமோ என அஞ்சி அவற்றை அடக்கி கட்டுப்படுத்தும் ஒரே வழி என்ற கோதாவில், சராசரி மக்களின், பிச்சைக்கார வாழ்வு புறக்கணிக்கப்பட்டு, கம்பனிகளின் ஆதிக்கம் மாத்திரமே உலகில் மிக உறுதியாய் முன்னிறுத்தப்படுவதாயிற்று.

இதுவே, 2025இன் சாராம்சம் எனலாம்.

5

‘பொருளாதார தடைகளும்’, ‘புதிய வரிவிதிப்புகளும்’ நேரடியாக விநியோக அல்லது உற்பத்தி வலைப்பின்னல்களை மேற்கூறியவாறு பாதித்த போதும், மறுபுறத்தில், இவை புதிய கூட்டுக்களை உருவாக்காமல் இல்லை. சீன–ரஷ்ய கூட்டு என்பதுடன், புதிய இந்தியாவின் அல்லது புதிய பிரேசிலின் அல்லது புதிய ஆபிரிக்க நாடுகளின் அல்லது புதிய வெனிசுலாவின் கூட்டுகளும் உலகில் தோன்றுவதாய் அமைந்தது.
2025 முடிவின் போது, இவை, மேலும் துலாம்பாரமாக தெரியக் கூடிய அளவில் வலுப்பெற்று எகிறி வருவதாக இருந்தது.

இந்நிலையில்தான், புதிய வரிவிதிப்பு கொள்கையின் பிரகாரம், இந்தியா 50 சதவீத வரிகளை செலுத்தியாக வேண்டும் என ட்ரம்ப் ஆகஸ்ட் 2025 இல், (அதாவது 2025இன் மத்திய பகுதியில்) ஆணையிட்டார். இதற்கான காரணம் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கள்ளத்தனமாய் எண்ணையை பெறுவதுதான் என அவர் கற்பித்தார். இதனால், இந்தியா, அமெரிக்காவுக்கு பெருமளவில் ஏற்றுமதி செய்யும் புடைவை, மாணிக்க கற்கள், கடல்சார் பொருட்கள் ஆகியவற்றின் வியாபாரத்தை முழு அளவில் பாதிக்கும் எனவும் கூறப்பட்டது. அதாவது, இந்தியாவின் விநியோக-உற்பத்தி வலைப்பின்னல்களை சிதைப்பது அமெரிக்காவின் நோக்கமாகியது. ஆனால், இத்தகைய ஒரு நடைமுறையானது அல்லது வரிவிதிப்பு முறையானது வேறு சில பின்னடைவுகளையும் உலகில் ஏற்படுத்தாமல் இல்லை. இந்தியாவின் நெருக்கமானது, ரஷ்;யாவுடன் என்றும் இல்லாதவாறு தூண்டப்படும் ஒரு நிலைக்கு அது இந்தியாவை கொண்டு வந்து சேர்ப்பதாய் இருந்தது.

இத்தகைய ஒரு  பின்னணியிலேயே, அண்மித்த புட்டினின் இந்திய விஜயமும், இந்தியா ரஷ்;யாவுடன் ஆண்டின் இறுதியில் செய்து கொண்ட ராணுவ-பொருளாதார-வியாபார ஒப்பந்தங்களும் (மொத்தத்தில் 16) நோக்கப்பட வேண்டியதாய் இருந்தன (05.12.2025). இப்படியான, ரஷ்யா-இந்திய உறவுகள், மூலோபாய உறவுகள் (Strategic Partneship) என்ற நிலையிலிருந்து, சலுகை வாய்ந்த சிறப்புரிமை (Priviledged Relationship) என்ற நிலைக்கு மாறி விட்டதாய் புட்டின் உலகுக்கு அறிவித்தார். (04.12.2025 –  from Strategic Partnership to one of Priviledged Relationship). இருந்தும், தனது 50வீத, வரிவிதிப்புகளின் பின், ட்ரம்ப இந்தியாவின் மோடிக்கு, நான்கு தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தி இருந்தார் என கூறப்பட்டது. (26.08.2025). இத்தொலைபேசி அழைப்புக்களானது, புதிய வரிவிதிப்புகளின் பின்னாலும், புட்டினின் இந்திய வருகையின் முன்னரும் நிகழ்ந்த ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், ட்ரம்பின் மேற்படி நான்கு தொலைபேசி அழைப்புக்களையும், மோடி, நிராகரித்து விட்டார் - பதிலளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு, உலக அளவில் பெரும் பேசு பொருளாகியது.

இந்தியாவின் இத்தகைய மாற்றமானது, ரஷ்;யாவை, ‘சிறப்புரிமை கொண்ட உறவு’ என வர்ணிக்க வைத்ததோ என்பதும் தெரியாத ஒரு விடயமாகியது. எனினும் மோடி சீனாவுக்கும் தன் விஜயத்தை, (SCOவில் பங்குபற்றும் முகமாக) மேற்கொண்டிருந்த போது, அங்கேயே அவரை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டிருந்ததாக கூறப்பட்டது. அதாவது, நான்கு முறை அழைத்தும், பதிலளிக்காத மனிதர், கொலை செய்யப்படாமல், வேறு எதை செய்வது என்பது கேள்வியானது (01.09.2025). ஆனால், இதனை புட்டின், தடுத்து விட்டதாகவும், சம்பந்தப்பட்ட ஒரு CIA அதிகாரியை,ரஷ்யா ரகசியமாக, பங்களாதே~pல் வைத்து கொன்று தீர்த்து விட்டதாகவும், இதன் காரணமாகவே புட்டின் மோடிக்கு தனது சொந்த காரில் இடம் கொடுத்து அவரை தனிப்பட்ட முறையில் அவரது விடுதியில் இருந்து அழைத்து சென்றார் எனவும் செய்திகள் வெளிவருவதாய் இருந்தன. (Business Today: 18.11.2025). சுருக்கமாக கூறுவதென்றால், உற்பத்தி அல்லது வினியோக வலைப்பின்னல்களை குறிவைத்து தாக்குவது என்பது, இத்தகைய எதிர்விளைவுகளை அவிழ்த்து விட துவங்கியிருந்ததை உலகு கண்டது.

இந்த எதிர் விளைவுகளை ஊகித்ததனாலோ அல்லது எடுக்கப்பட்ட கொலை முயற்சியானது தோல்வி கண்டது என்பதனாலோ என்னவோ, தனது முந்தைய நான்கு அழைப்புக்களையும் அசட்டை செய்த, மோடியை அவரின் பிறந்த நாளன்று வாழ்த்து தெரிவித்ததுடன், இறுதியாக தொடர்பு கொண்டு சொந்தம் பாராட்டிய செய்திகள் இறுதியில் வந்து சேர்வதாய் இருந்தன. (12.12.2025). இந்நடைமுறையின் மொத்த பெறுமானம் யாதாயிருக்க கூடும் என்ற கேள்வி எழாமல் இல்லை. ஏனெனில் அமெரிக்க காங்கிரஸ் ஐந்து தினங்களுக்கு முன்பாக இந்தியாவுக்கான வரிவிதிப்பை குறைத்தாக வேண்டும் என்றதோர் பிரேரணையை கொண்டு வந்துள்ளதாம். இது போலவே, அமெரிக்காவின் 2025க்கான அமெரிக்க கொள்கை திட்டத்தில் இந்தியா முக்கிய பங்காளியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாய் செய்திகள் வெளிவந்தன. (15.12.2025). இது, இந்திய-ரஷ்ய கூட்டை தவிர்க்கும் முகமாக செய்யப்பட்ட ஒன்றாக இருக்கலாமோ என்பதும் கேள்வியானது.

6

சீனாவின் 70ஆம் வருட பிறந்ததின கொண்டாட்டங்களையும், அதன் போது இடம்பெற்ற பிரமிக்கதக்க, அணி வகுப்பையும், பார்வையிட்ட புட்டின், இரு நாடுகளுக்கிடையேயும், அனைத்து துறைகளிலும் உள்ளடங்கியிருக்கும் நெருக்கமும் ஒத்துழைப்பும் வரலாறு காணாத அளவில் இன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளன என்பதை எடுத்து கூறினார். (09.06.2025).

இதனை எதிரொலிக்கும் வகையில் இங்கிலாந்து, தனது செய்மதிகளை,ரஷ்யா கிழமைதோறும் இலக்கு வைத்து இடைமறிக்கின்றது என்று அறிக்கையிட்டது. இங்கிலாந்தின் செய்மதிகளைரஷ்ய செய்மதிகள் பின் தொடர்வதாகவும் (Dog Fight) அவை இங்கிலாந்து செய்மதிகள் அனுப்பக்கூடிய அல்லது பெறக்கூடிய மின் காந்த அலைகளை முற்றாக ஸ்தம்பிதம் செய்வதாகவும் அல்லது உருக்குலைய வைப்பதாகவும் மேலும் முறையிட்டது (13.10.2025).

இது ஒருபுறம் இருக்க, டிசம்பர் 2025இன் முற்பகுதியில்,ரஷ்யா-சீனா இணைந்து ஓர் ஏவுகணை ஒத்திகை பயிற்சியை (Missile Drill)  கூட்டாக நடத்தியது. எட்டு வருடத்தின் பின் இடம்பெற்ற இப்பயிற்சியானது நடந்து முடிந்த பின்னரே உலகுக்கு அறிவிக்கப்பட்டது என்பது முக்கியமானது. (07.12.2025).

மறுபுறத்தில், இதுவரை கிட்டத்தட்ட 187 கோடி டாலர்களை உக்ரைன் போரில் கொட்டி தீர்த்துவிட்ட அமெரிக்கா (இது வெறுமனே 36.7 வீதமே ஆகும். ஐரோப்பிய யூனியன் 49.6 வீதம் செலவழித்து விட்டதாய் பதிவுகள் கூறுகின்றன) தற்போது நிகழ்ந்து வரும்ரஷ்ய-சீன ஒத்துழைப்பால் நிலை தடுமாறுவதாய் தெரிகின்றது.

ஆனால், உக்ரைன் போரானது இன்றையரஷ்ய முகத்தை முற்றாக மாற்றியமைப்பதாய் உள்ளது. மிக அண்மையில், இங்கிலாந்துக்கானரஷ்ய தூதுவரின் கூற்றின்படி, இனி ஒரு உக்ரைன் சமாதான உடன்படிக்கை என்பது வெறுமனே போர்நிறுத்தத்தை உள்ளடக்காது –அது உக்ரைனின் சரணாகதியை உள்ளடக்குவதாய் இருக்கும் என்ற ஓர் அதிர் வெடியை தூக்கி போட்டார். அவரிடம் ட்ரம்பின் 28 அம்சங்கள் அடங்கிய சமாதான ஒப்பந்தம் குறித்து வினவப்பட்ட போது, அது தன் பார்வைக்கு வரவே இல்லை என்று சாதித்தார் மனிதர். (Andrie Kelin:  12.12.2025).

இது போக, சீன, ரஷ்யா இன்று மிக நுணுக்கமான ரகசியம் மிக்க செய்மதிகளை ஏவி வருவதாகவும் அவற்றை ராடர்கள் அல்லது டெலிஸ்கோப்கள் மூலம் கண்காணிப்பது என்பது முடியாத விடயமாகின்றது எனவும் மேலும் அவை கூட்டாக ஒருமித்து செயற்பட்டு பலவற்றிலும் ஈடுபடுவதாகவும் தெரிகின்றது எனவும் மேற்கத்தைய அறிக்கைகள் வெளிவர துவங்கின. (13.12.2025: Breaking Defence).

மேலும், எலன் மாஸ்க் அவர்கள் தமது செய்மதிகளுக்கு ஊறு விளைவிக்கும் விதத்தில் சீனத்து ரொக்கட்டுக்கள் பறப்பதாகவும் மறுபுறத்தில் முறையிட்டார். (09.12.2025).

இவை அனைத்தும், அண்மைக்கால இழுபறிகள் தொடர்வதை மாத்திரம் குறிக்கவில்லை. ஆனால், தெரிந்தோ தெரியாமலோ இவை ஒரு இறுதி கணத்தை நோக்கி பயணிக்கின்றனவா என்பதே கேள்வியானது. ஈற்றில் சாதாரண மக்களே இவ் அதிர்வலைகளை தாங்க வேண்டியவர்களாக இருக்கின்றார்கள் என்பதும் இங்கே கோடிடப்பட வேண்டிய உண்மையாகும்.

இவை அனைத்தும், 2025இன், முற்றான, புதிய வரவுகள்தாம் எனவும் வரையறுக்க முடியாதிருக்கின்றது. ஏனெனில் இவ்வகைரஷ்ய-சீன செய்மதிகள் விண்ணில் ஏற்கனவே இருந்ததும், ராக்கட்டுக்கள் தினசரி ஏவப்பட்டதும் காலந்தோறும் நடந்துவரும் நிகழ்வுகளாகும். ஆனால், இன்றோ நிலைமை மாற தொடங்கியுள்ளது. செய்மதிகளின் நகர்வுகள் வித்தியாசப்படுகின்றன. அவற்றின் நோக்கமும் அசைவும் முந்தைய அசைவுகளுடன் ஒத்துப்போவதில்லை.

இத்தகைய சூழ்நிலையில் வலைப்பின்னல்களை சிதைப்பது, எனும் தனது தீர்மானத்தில் அமெரிக்கா மேற்கொள்ளக் கூடிய புதிய நடைமுறைகள் யாது என நோக்குவது பயன்தரக் கூடியது.

7

மேற்கூறியவாறு, உற்பத்தி அல்லது வினியோக வலைப்பின்னல்களை சிதைத்தெறிந்து, தமக்கு போட்டியாக உருவாகக்கூடிய ஏனைய பொருளாதாரங்களை சீர்குலைப்பதா மேற்கின் நோக்கம் என்ற கேள்வி ஒலிக்க தொடங்கியுள்ள காலக்கட்டத்தில் நாம் வசிக்கின்றோம், என்ற உணர்வு முக்கியமானது.

ஒரு காலத்தில், கொரோனா பெருந்தொற்று இவ்வகையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால், அதன் வலுவின்மையானது நிரூபிக்கப்பட்டபோது, வேறு பல நடவடிக்கைகள் களமிறக்கி விடப்பட்டன. இவற்றிடையே செல்வாக்கு பெற்றது, மேற்குறிப்பிட்ட, பொருளாதார தடையும் உக்ரைனிய போருமே. இத்தகைய ஒரு பின்னணியில்தான், இவ் ஆண்டின் நடுப்பகுதியில், அமெரிக்காவின் ட்ரம்ப், 150 நாடுகளுக்கான புதிய வரிவிதிப்பை ஒருதலைபட்சமாக அறிவித்தார். (17.05.2025).

இவ் வரிவிதிப்பானது, சர்வதேச நடைமுறைகளுக்கு அன்றி சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்களுக்கு முரண்பாடாய் இருந்தாலும், இத்தகைய ஓர் அழுத்தத்தை பிரயோகித்து, நாடுகளை வசப்படுத்தி, தம் வழிக்கு கொணர்ந்து சேரக்கும் இந்நடைமுறையானது ட்ரம்பின் நிர்வாகத்தால் பின்பற்றப்பட்டது. இது, தமது ஆதிக்கத்தை உலகில் நிலைநிறுத்தவும் ஏனைய நாடுகளை அடிபணிய செய்து பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் ஓர் உத்தியாகவும் ட்ரம்ப் நிர்வாகத்தால் பார்க்கப்பட்டது.

ஆனால், இதன் எதிர் விளைவுகளோ பாரதூரமாய் அமைந்தன. 2025இ;ல், மோடி, ட்ரம்பின் அழைப்பை நான்கு முறை நிராகரித்ததும், தனது கூட்டைரஷ்யா போன்ற நாடுகளுடன் இறுக்கி கொண்டதும், இந்தியா-பாகிஸ்தான் போரில் மிக இறுக்கமான நடைமுறைகளை பின்பற்றியதும், செய்மதி உட்பட தேர்ந்த ஆயுதங்களை போரின் போது பயன்படுத்தியதும்  (S-400) இறுதியில், ட்ரம்ப், இப்போரை நிறுத்தியதாக மார்தட்டியதை முற்றாக நிராகரித்ததும் 2025இன் வரலாறானது.

மறுபுறத்தில், அமெரிக்காவின் மேற்படி ஆதிக்க பேராசையை பிரதிபலித்த அதனது வரிக் கொள்கையை போன்றே, இஸ்ரேலானது அமெரிக்காவின் ஆசிர்வாதத்தோடு மத்திய கிழக்கில் தனது ஆக்கிரமிப்புகளை துவங்கியதை 2025லேயே உலகம் காண நேர்ந்தது.

ஆயிரக்கணக்கான பெண்களையும், சிறுவர்களையும், சிவிலியர்களையும் படுகொலைக்கு இட்டு சென்று இஸ்ரேல் அவர்களை கொன்றொழித்தது. படுகொலை செய்யப்பட்டவர்களில் 50,000க்கும் அதிகமானோர் சிறுவர்கள் என UNICEP கூறியது. (UNICEP : 27.05.2025). 21 மாதங்களாய் நீடித்த இக்கொலை தாக்குதல்களின் போது ஒன்றுமறியாத சிறுவர்களும் பெண்களும் ஹமாஸ் போராளிகள் என எப்படி இஸ்ரேல் கண்டு வரையறுத்தது என்று உலகம் கேள்வி கேட்டது. ஆனால், இவ்வகை எதிர்ப்புக்களை இஸ்ரேலும் பொருட்படுத்தவில்லை. அமெரிக்காவும் பொருட்படுத்தவில்லை. இதுபோலவே ஐக்கிய நாடுகள் சபையும் வாய்மூடி பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால் இத்தாக்குதலை தொடுப்பதற்கு முன்னால் மத்திய கிழக்குக்கான தனது புதிய வரைபடத்தை இஸ்ரேல் வெளியிட்டது என்பதே முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

விஸ்தரிக்கப்பட்ட இஸ்ரேல் (Greater Isrel) என பெயரிடப்பட்ட இவ்வரைபடமானது ஜனவரி 2025 அளவில் வெளியிடப்பட்டது. சிரியாவின் பல பகுதிகளையும், ஈராக், ஜோர்தான், லெபனான் போன்ற பல நாடுகளின் பகுதிகளையும், இவ்வரைபடமானது இஸ்ரேலாக மாத்திரம் உள்ளடக்கியிருக்கவில்லை – மாறாக, எகிப்து, சவுதி அரேபியா ஆகிய முக்கிய நாடுகளின் பெரும் பகுதிகளையும் இஸ்ரேல் இப்புதிய வரைபடத்தில் இணைத்திருந்தது. இவ்வரைபடம் உத்தியோகபூர்வமாக வெளிப்படுத்தும் முன்னரே, அல் ஜசீரா இதனை வெளிப்படுத்தியது என்பதும் குறிக்கத்தக்க ஒன்றாகிறது (12.01.2024-  Al Jazeera).

கிட்டத்தட்ட, அழுத்தங்களை நாடுகளிடை உருவாக்கும் ட்ரம்பின் அதே வரிவிதிப்பு கொள்கையை ஒத்ததாய், நாடுகளின் மீது அழுத்தத்தை தரும் வண்ணம், நீதிக்கும் சர்வதேச சட்டங்களுக்கும் முரணாணதாய், இவ் வரைபட திட்டம் இஸ்ரேலால் முன்னெடுக்கப்பட்டது. இது வெறுமனே ஒரு பிரேரிப்பு அல்ல. ஆனால், நடைமுறையில் பின்பற்றப்பட போகும் ஒரு நிகழ்வு என்ற அச்சுறுத்தலை ஒரு வகையில் விடுப்பதற்காக, அபலைகளான பலஸ்தீனர்கள் மீது தனது தாக்குதல்களை, இஸ்ரேல், சிறு காரணங்களை ஏதுவாக காட்டி தாக்க தொடங்கியது. (இப்படியான இஸ்ரேலின் தாக்குதலானது,ரஷ்யாவை திசைதிருப்பி, அகலக்கால் வைக்கும் திட்டத்தை உள்ளடக்கி இருக்குமா என்பதெல்லாம் கேள்வியே. ஏனெனில், சந்தேக பேர்வழியான துருக்கியும் இத்தாக்குதல் தொடர்பில் வெறும் உசுப்பேற்றும் வாய்ப் பேச்சுகளில் ஈடுபடுவதாய் இருந்தது).

ஆக, இஸ்ரேல்-அமெரிக்கா ஆகியவற்றின் உள்நாட்டுக் கடன் தொல்லைகளும், அரசியலும், பொருளாதார நெருக்கடிகளும் இணைய, இவ்வகை திட்டங்களுக்கு அவை பாதை சமைத்திருக்கலாம், என்றாகிறது. ஆனால், இதற்கு எதிரான ஸ்திரமான நடவடிக்கைகளையும் எதிர் நாடுகள் எடுக்க தொடங்கி விட்டதை 2025இன் இறுதி பகுதி தெளிவுற காட்டவே செய்தது. இவ்விடயங்கள் அனைத்தும், 2025இன் முக்கிய நிகழ்வுகளாக வரையறுக்கப்படலாம். ஆனால், 2026 இன் வெனிசுலா என்ற இடம் உலகின் கவனத்தை அவதானத்துடன் கோருவதாக பரிணமித்துள்ளது.

8

வெனிசுலாவை அடையும் கப்பல்கள் அல்லது அங்கிருந்து புறப்படும் கப்பல்கள் இப்போது இருவித தடைகளை எதிர்நோக்குவதாய் இருந்தன. (2025இன் இறுதி மாதத்தில்). ரஷ்யாவுக்கு எதிராக விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளால் (Shadow Fleet) என்ற வகையிலான கப்பல்கள் வெனிசுலாவை அணுகுவது ஏற்கனவே மேற்கால் தடை செய்யப்பட்ட ஒரு விவகாரம். இதனிடை, கடந்த செவ்வாய், ட்ரம்பால் மற்றுமொரு தடையுத்தரவு அதிரடியாக பிறப்பிக்கப்பட்டது. இம்முறை இத்தடை நேரடியாகவே வெனிசுலாவை தாக்குவதாய் அமைந்தது. அதாவது, வெனிசுலாவில் இருந்து எந்த ஒரு எண்ணைக்கப்பல் புறப்படுவதையோ அல்லது வேறொரு எந்த எண்ணை கப்பலும் வெனிசுலாவை நெருங்குவதையோ இந்த ட்ரம்பின் உத்தரவு நேரடியாக தடை செய்வதாய் இருந்தது.

மொத்தத்தில் தனிமைப்படுத்தப்பட்ட, தீண்டத்தகாத ஒரு  நாடாக வெனிசுலா மாறியது. தனது சொந்த எண்ணையை தான் விற்பதற்கு எதிராக இந்த உத்தரவு செயல்பட தொடங்கி விட்டது. இதன் அடிப்படையில், அண்மையில் இரண்டாவது கப்பலை அமெரிக்கா கைப்பற்றியதாக அறிக்கைகள் வெளிவந்தன. (CNN:21.12.2025). இதுவரை, அமெரிக்கா 104 நபர்களை கொன்றுள்ளதாகவும் 29 போதை வஸ்து படகுகளை தாக்கி நாசமாக்கி அழித்துள்ளதாகவும் மார்தட்டுகின்றது. மறுபுறத்தில், வெனிசுலாவின் எண்ணைகளின் பெரும்பகுதியை சீனாவே கொள்வனவு செய்கின்றது எனும் உண்மை குறிக்கத்தக்கது.
இச்சூழ்நிலையில் புட்டின், வெனிசுலாவின் பிரதமரை அழைத்து தனது நாட்டின் ஆதரவை அந்நாட்டுக்கு தெரிவித்திருந்தார்.

இப்படியான ஒரு இக்கட்டான சூழ்நிலையில்தான், ஒரு கம்பியா கொடி தரித்த Hyperion என்ற பெயரிலான கப்பல் கரிபியன் கடலுக்கூடாக வெனிசுலாவிற்குள் நுழைந்து விட்டது என்ற செய்தி வெளியானது. (CNN:20.12.2025).

ரஷ்யாவின், Shadow Fleet என்ற கப்பல் தொகுதியில் ஒன்றாக இனங்காணப்பட்டிருந்த இக்கப்பலுக்கு எதிராக ஏற்கனவே தடையுத்தரவு செயல்படுவதாய் இருந்தது. இருந்தும், இந்த கப்பலின் நுழைகையானது (வெனிசுலாவில்) தாக்குதலுக்கு உள்ளாகாமல் எப்படி தப்பியது–ரஷ்ய அதிபர் புட்டினின் தொலைபேசி உரையாடல் இதற்கு காரணமாக இருக்குமா என்றெல்லாம் சந்தேகங்கள் எழும்ப தொடங்கி இருந்தன.

ஆக மொத்தத்தில், ஒருபுறம், சீனத்தின் நலன். மறுபுறம் ரஷ்யாவின் நலன். இச்சூழ்நிலையில், மூன்றாவது கப்பலையும் குறிவைத்து விட்டோம் என்று ட்ரம்ப் மார்தட்ட தவறவில்லை. (20.12.2025). இவ்வகை, உலகின் நடப்புகள், 2025இன் மிக இறுதி பகுதியில் உக்கிரமுற்று காணப்படுவதை நிகழ்வுகள் படம் பிடித்து காட்டுவதாய் இருந்தன.

9

ரஷ்ய அதிபர் தனது வருட இறுதி உரைகளின் போது, பின்வருவனவற்றை கூறி இருந்தார்:

    நேற்றிருந்தரஷ்ய ராணுவம் இன்று இருப்பதாய் இல்லை. வலிமையும் தற்போதைய போர் நிலவரங்களால் வலிமையாக்கப்பட்டு, புடம்போடப்பட்டு கடினமாக்கப்பட்ட ஒன்றாகவுமே இன்று காணப்படுகின்றது. இது உண்மையாகவும் இருக்கலாம். ஏனெனில் 2022இல் இருந்தரஷ்ய முகம் வேறு வகையானது என்பது உண்மையே.

    இதைவிட முக்கியமாக, இங்கிலாந்தின் பிரதமரை, புட்டின் (ஸ்டாமர்-Starmer) ‘சிறு பன்றி’ (Little Pig) என அண்மையில் சித்தரிக்கவும் தவறவில்லை. போதாதற்கு 1992 இற்கும் 2002 க்கும் இடையில் செய்துக் கொள்ளப்பட்ட பத்துக்கும் அதிகமான ஒப்பந்தங்களை புட்டின் இன்று கிழித்தெறிந்து விட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இங்கிலாந்து, நோர்வே, போலந்து, போர்த்துக்கல், ருமேனியா, பல்கேரியா, டென்மார்க், நெதர்லாந்து, பெல்ஜியம், குரோசியா, செக் குடியரசு ஆகிய பல்வேறு நாடுகளுடனான ஒப்பந்தங்கள் காற்றில் பறக்கவிடப்பட்டதானது. இவை, 2025இன் இறுதி நிகழ்வுகளாகின்றன. (20.12.2025). இவை அனைத்தையும் கூர்ந்து நோக்கும் போது, 2026 ஓர் சாதாரண சூழலை உலகுக்கு வழங்குவதாய் இல்லை எனலாம்.

முடிவுரை:

ரஷ்யா, மேற்கினது, பல்வேறு வங்கிகளில் காப்பாக வைத்துள்ள, 200 கோடி டாலருக்கும் அதிகமான பணத்தை கையகப்படுத்தி, அதனை உக்ரைனிய போரில் செலவழிப்போம் என்ற மேற்கின் எச்சரிக்கையானது 2025இல், தொடர்ச்சியாக விடுக்கப்பட்ட ஒன்றாகியது. சட்டத்திற்கு புறம்பான இக்கைப்பற்றுகையானது ஒரு திருடாகும் என ரஷ்ய அதிபர் அறிவித்தது மாத்திரமல்லாமல், அப்படி கைப்பற்றினால், அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துவதாக இருக்கும். மேற்கு அல்லது ஐரோப்பாவின் கம்பனிகளின் சொத்துக்களை, ரஷ்யாவில் முடக்கப்படும் சாத்தியமும் இவற்றில் உள்ளடங்கவே செய்யும் என ரஷ்யா கூறியது.

இதனாலோ என்னவோ, ஐரோப்பிய தலைவர்களை  'Little Pig ’ என புட்டின் அழைத்தது மாத்திரமல்லாமல், அப்படி அழைத்த கையுடன் தனது அதி நவீன ஏவுகணையான Oreshnik ஏவுகணையையும் 360,000 துருப்புக்களை தயார் நிலையில் நேட்டோ நாடுகளின் எல்லையோரமாக, பெலாருஸ் நாட்டில் இருத்தி விட்டார். மேலும் Oreshnik ஏவுகணையானது எட்டே எட்டு நிமிடங்களில் இங்கிலாந்தின் தலைநகரை சாம்பராக்கும் என்றும் அறிக்கை விடுத்தார். அவரது கூற்று:

“அவர்கள் நெருப்புடன் விளையாடுகின்றார்கள். போர் நிகழுமெனில் (ஐரோப்பாவுடன்) அது ஒரு உக்ரைனிய போராக இராது. போர் என தொடங்கி விட்டால் நாம் வித்தியாசமாக இருப்போம். எம்முடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட ஒருவருமே மிஞ்சி இருக்க மாட்டார்கள்” என்பது அவரது கூற்றானது. (02.12.2025: Reuters))

இதேவேளை சீனம் தனது 03 விமானம்தாங்கி கப்பல்களையும் ஒரே சமயத்தில் கடலில் இறக்கி உள்ளதாக மேற்கு நாடுகளின் அறிக்கைகள் கூறுவதாக அமைந்தன. (18.12.2025). கூடவே, குஹாமில் இருந்து 600முஆ தூரத்தில் இருக்கும் வழக்கொழிந்த ஓர் ஓடுபாதையை சீனா சீரமைத்து கொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளியிடப்பட்டன.

இப்பின்னணியிலேயே, சீன-ரஷ்யாவின் நவீன ஏவுகணை பயிற்சிகள் மற்றும் விண்வெளி செய்மதி தொடர்புகள் ஆகிய அனைத்தும் பார்க்கப்பட வேண்டி உள்ளது. விடயம், இவை யாவும் நடந்து முடிந்த ஆண்டாக 2025 திகழ்ந்தது என்பதேயாகும். மறுபுறத்தில் போதை வஸ்துகளை குறிவைக்கின்றோம் என்ற கோதாவில் அமெரிக்கா வெனிசுலாவின் மீது குதிக்க தயாராகி வருகின்றது. கிட்டத்தட்ட 11 விமானம் தாங்கி கப்பல்களையும் 42,000 செய்மதிகளையும் கணக்கற்ற ஏவுகணைகளையும் 38ட்ரில்லியன் டாலர் உள்நாட்டு கடனையும் கொண்டுள்ள அமெரிக்கா சில அதிர் நடவடிக்கைகளை எடுப்பது தவிர்க்க முடியாததாகின்றது.

கஞ்சா மீதான கட்டுப்பாடுகளை, ட்ரம்ப் தளர்த்தியது போன்றே (21.12.2025) அமெரிக்காவின் இன குரோதங்கள் உச்ச நிலையை அடைந்துள்ளன. (இவ் அரசியல் ஜெர்மன், பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு பொருந்தி வருவதாகவே இருக்கின்றது). ஆனால், கஞ்சாவின் மீதுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தி, இல்லையெனில் வலதுசாரி வெள்ளை அரசியல் இயக்கங்களை கறுப்பின மக்களுக்கு எதிராக ஊக்குவித்து மக்களிடை கொடூரமான சண்டைகளை மூட்டி விடுவது மாத்திரம் போதாதாகின்றது. 38 ட்ரில்லியன் டாலர் கடன் வேறு வெனிசுலா எண்ணையை திருடவே ஊக்குவிக்கும்.
ஆனால், இது வெனிசுலா நாடு சம்பந்தப்பட்டது மாத்திரமல்ல. அமெரிக்க-சீன நலன்களும் இங்கே இணைவதாய் இருக்கின்றன.

இவை யாவையும் பார்க்கும் போது 2026 சுமூகமாக விடியும் என எதிர்ப்பார்ப்பது பொருந்தாதது – மனித பகுத்தறிவு சரியாக செயல்படாத விடத்து.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
 
வ.ந.கிரிதரன் பக்கம்
                                                                                             


பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். இது இலாப  நோக்கற்று இயங்கும் இதழ். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. It operates on a not-for-profit basis. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்