
காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ள 'இலங்கைத்தமிழ் நாவல் இலக்கியம்' நூலில் எழுத்தாளர் தேவகாந்தன் புலம்பெயர்ந்தோர் படைப்புகள் பற்றிக் குறிப்பிடுகையில் படைப்புகளை இரண்டு காலகட்டங்களாகப் பிரித்துள்ளார்.
1. மேற்கில் புலம்பெயர்ந்தோர் நாவல்கள் - ஆரம்ப காலம்
2. இரண்டாம் அலையின் முக்கியமான காலம்
ஆரம்ப கால நாவலாசிரியர்களாக ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ('ஒரு கோடை விடுமுறை'), பார்த்திபன் ('வித்தியாசப்படும் வித்தியாசங்கள்', 'ஆண்கள் விற்பனைக்கு'), இ. தியாகலிங்கம் ('நாளை', 'அழிவின் அழைப்பிதழ்') ஆகியோரைக் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாம் அலையின் நாவலாசிரியர்களாக ஷோபா சக்தி ('கொரில்லா, ம், இச்சா), தமிழ்நதி (கானல்வரி), இளங்கோ (மெக்சிகோ), மெலிஞ்சி முத்தன் (;வேருலகு, அத்தாங்கு, உடக்கு),வ.ந.கிரிதரன் (குடிவரவாளன்), பொ.கருணாகரமுர்த்தி (அனந்தியின் டயறி), ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (தில்லையாற்றங்கரையில்), விமல் குழந்தைவேலு (வெள்ளாவி, கசகறணம்), நொயல் நடேசன் (வண்ணாத்திக்குளம், அசோகனின் வைத்தியசாலை), தேவகாந்தனின் (லங்காபுரம், யுத்தத்தின் முதலாம் அதிகாரம், கதாகாலம்,கந்தில்பாவை, நதிமேல் தனித்தலையும் சிறுபுள்) ஆகியோரைக் குறிப்பிட்டிருக்கின்றார்.
எனது குடிவரவாளன் நாவலை பற்றிக் குறிப்பிடுகையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
"1983 இன் இனக்கலவரத்தின்பின் கனடாவில் அகதித் தஞ்சம் கேட்கப் புறப்படும் இளங்கோவுக்கு, அமெரிக்க விமான நிலையத்தில் தொடர் பயணம் தடுக்கப்பட ஓராண்டைக் கழிக்க நேர்கிறது. அவனது அந்தத் தடுப்பு முகாம் அனுபவங்களூடாகப் படைப்பை விரித்திருக்கின்றார் ஆசிரியர். இவ்வகைப்பயணங்கள் அமெரிக்காவில்,கிழக்கு ஜேர்மனியில் ,இத்தாலியில், மெக்சிகோவில் என தடைப்பட்டுப்போக அவ்வனுபவங்களின் மேலாய் நிறைய நூல்கள் தமிழில் எழுந்திருக்கின்றன. ஆயினும் தனது 'மண்ணின் குர'லில் வந்த குறுநாவல்களைப்போலன்றி 'குடிவரவாள'னில் தன் அனுபவங்களைக் கலைத்துவமாக்க அவரெடுத்த முயற்சி நூலின் பக்கங்கள்தோறும் புலனாகின்றது. தடுப்பு முகாம் மண்ணில் ஓர் அகதியின் அனுபவங்களும் வித்தியாசமானவையாகவே பதிவாகியுள்ளன."
இத்தருணத்தில் நான் இங்கு சில விடயங்களைக் கூற வேண்டும். நான் அமெரிக்கா, குடிவரவாளன் என்னும் நாவல்களை எழுதுவதற்கு முக்கிய காரணங்கள்:
1. என் வாழ்வில் நான் அனுபவித்த அனுபவங்களைப் பதிவு செய்ய வேண்டும்.
2. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் புகலிடச் சூழல் அனுபவங்கள் ஆவணப்படுத்தப்பட வேண்டும்
இவ்வடிப்படையிலேயே என் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவங்களை வெளிப்படுத்த 'அமெரிக்கா' எழுதினேன். தாயகம்(கனடா) பத்திரிகையில் அதனை வெளியிட்டார் ஆசிரியர் ஜோர்ஜ்.இ.குருஷேவ். அதற்கு அவருக்கு நன்றி. பின்னர் அதன் முதற்பதிப்பினை ஸ்நேகா பதிப்பகம் மங்கை பதிப்பகத்துடன் இணைந்து வெளியிட்டது. அதன் இரண்டாம் பதிப்பு தனி நூலாக மகுடம் பதிப்பக (இலங்கை) வெளியீடாக வெளியானது. நாவல் குடிவரவாளன் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளியானது.
அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வைத் தொடர்ந்து நியூயார்க்கில் கழிந்த எனது அனுபவங்களை விபரிக்க எழுதியதே 'குடிவரவாளன்' நாவல். இந்நாவலில் விபரிக்கப்பட்டிருக்கும் சம்பவங்களெல்லாம் உண்மைச்சம்பவங்களே. சந்தித்த மனிதர்களெல்லாரும் நான் சந்தித்த மனிதர்களே. அவற்றின் அடிப்படையில் எழுதப்பட்ட புனைவு 'குடிவரவாளன்'. உண்மையில் இந்நாவலை எழுதுகையில் நான் மீண்டும் அக்காலகட்டத்தில் வாழ்ந்திருக்கின்றேன். அக்காலகட்ட நிகழ்வுகளை மீண்டும் அனுபவித்து எழுதியுள்ளேன். இப்பொழுதும் கூட அவ்வப்போது அவ்வுணர்வுகளை மீண்டும் அனுபவிப்பதற்கு இந்நாவலை நானே வாசிப்பதுண்டு. அவ்வகையில் இந்நாவலின் முதல் வாசகன் நானாகத்தானிருப்பேன்.
'அமெரிக்கா'வும் இத்தகைய நாவலே. அதில் வரும் சம்பவங்கள், மனிதர்கள் யாவரும் உண்மையில் நான் சந்தித்தவர்கள். அடைந்த அனுபவங்கள் உண்மையானவை. அவற்றின் அடிப்படையில் புனையப்பட்ட நாவலது. தனது நூலில் என் 'குடிவரவாளன்' நாவல் பற்றி குறிப்பிட்டிருக்கும் தேவகாந்தனுக்கு நன்றி.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









