
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு. அவர் குற்றமிழைத்திருக்கின்றார். கைது செய்யபப்ட்டுள்ளார். இதற்கு எதிர்வினையாற்றிய தென்னிலங்கை அரசியல்வாதிகள் பலர் ரணில் தன் வீட்டையே தான் படித்த கல்லூரிக்குக் கொடுத்தார். அதன் பெறுமதி 200 கோடி. அதைக்கொடுத்தார். இதைக்கொடுத்தார். பதவிக்குச் சம்பளம் வாங்கவில்லை. முன்னாள் ஜனாதிபதியை சிறு குற்றத்துக்காகக் கைது செய்யக்கூடாது. இப்படி ஆளுக்கு ஆள் கூறுகின்றார்கள்.
இவர்களிடம் ஒரு கேள்வி?
மிகப்பெரும் பணக்காரரும், கொடை வள்ளலுமான ஒருவர் மிகவும் வேகமாகத் தன் வாகனத்தை ஓட்டிச் செல்கின்றார். 40 கிலோமீற்றர்/மணி வேகத்தில் செல்ல வேண்டிய இடத்தில் 100கிலோமீற்றர் / மணி வேகத்தில் செல்கின்றார். அவரைக் காவல் துறையினர் தடுத்து நிறுத்துகின்றனர். அப்பொழுதும் இப்படித்தான் ரணில் 200 கோடி கொடுத்தார்,அவருக்கு அபராதக் கட்டணம் விதித்து 'டிக்கற்'கொடுக்கக்கூடாது என்பீர்களா?
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரம்சிங்க தன் பதவிக்காலத்தில் அரச நிதியைத் துஷ்பிரயோகம் செய்திருக்கின்றார். அவர் தெரியாமல் செய்திருந்தால் , அதை அவர் நிவர்த்தி செய்திருக்கலாம். இவ்வளவு தூரம் வாரிக்கொடுத்தவருக்கு அது இலகுவானது. ஏன் செய்யவில்லை? அவர் இவ்விடயத்தில் தவறிழைக்கவில்லையென்றால் நீதிமன்றத்தில் தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்கும் சந்தர்ப்பம் வாய்த்துள்ளது. நீரூபித்துத் தூய்மையானவராக வெளியே வரட்டும். அதுதான் சரியான நிலைப்பாடாகவிருக்க முடியும்.
இதுவரை காலமும் இலங்கையில் மட்டுமல்ல,இந்தியா போன்ற நாடுகளிலும் அரசியல்வாதிகள் ஊழலில் மூழ்கிக்கிடக்கின்றார்கள். தனிப்பட்ட வாழ்வுக்காக அரசியலைப் பாவிக்கின்றார்கள். நாட்டின் அரசியலமைப்பு, குற்றவியல் சட்டங்களை மீறினால் , அவர்களைச் சட்டம் எவ்விதப் பாரபட்சமுமின்றிக் கையாள வேண்டும். அவ்விதம் நடக்காததால்தான் நாடு சுதந்திரமடைந்ததிலிருந்து இனவாதம் கிளப்பி அரசியல்வாதிகள் சுய இலாபம் அடைந்துகொண்டிருந்தார்கள். இந்நிலை மாற வேண்டுமானால் , சட்டம் தன் கடமையை ம், எவ்வித அழுத்தங்களுமற்றுச் செய்ய வேண்டும். இலங்கை போன்ற நாடுகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டுமானால், நாட்டின் சட்டமானது இலங்கையின் குடிமக்கள் அனைவருக்கும் , எவ்விதப் பாரபட்சமுமின்றி, நீதியாகச் செயற்படுவது அவசியம். அதற்கு இவ்விதமான சட்ட நடவடிக்கைகள் அவசியம்.
இன்று தென்னிலங்கை அரசியல்வாதிகள் அனைவரும் ரணிலின் பின்னால் அணி திரண்டிருக்கின்றார்கள். அதற்குக் காரணம் ரணில் மீது கொண்ட பரிவு அல்ல. நாளை இதே நிலைதான் தமக்கும் ஏற்படப் போகின்ற்து. அதைத்தவிர்ப்பதற்காகத்தான். இதுவரை ஆட்சியிலிருந்த மேற்தட்டு வர்க்கத்தின் கையிலிருந்து முதல் தடவையாக, நாட்டின் பெரும்பான்மை வர்க்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவரின் கையில் ஆட்சி சென்றிருக்கின்றது. அதைத் தாள மாட்டாதவர்கள் இங்கு ஒன்றிணைந்திருக்கின்றார்கள் . ஆனால் மக்கள் இவ்விடயத்தில் தெளிவாக இருப்பார்கள். தம் வர்க்கத்தின் கையில் கிடைத்திருக்கும் ஆட்சியை இழக்க அவர்கள் ஒருபோதும் சந்தர்ப்பம் கொடுக்க மாட்டார்கள்.

*ஓவியம் - AI



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









