['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப (Google Nano Banana) உதவி: VNG]
தமிழினி ஜெயக்குமாரனின் நினைவு தினம் அக்டோபர் 18. அதனையொட்டி முகநூலில் முன்பு எழுதிய பதிவொன்றினையும், அதற்கு எழுதப்பட்ட எதிர்வினைகள் சிலவற்றையும் அவர் நினைவாக இங்கு பதிவு செய்கின்றேன்.
தமிழினிக்கும் எனக்குமிடையிலான தொடர்பு அரசியல்ரீதியிலானதல்ல. சக எழுத்தாளர்களுக்கிடையிலான தொடர்பு, இணைய இதழ் ஆசிரியருக்கும், எழுத்தாளருக்குமிடையிலான தொடர்பு. உண்மையில் அவருடன் தொடர்பு ஏற்பட்டதற்குக் காரணம் இணையம் மற்றும் முகநூலே. அவரது கணவர் ஜெயக்குமாரன் ஏற்கனவே 'பதிவுகள்' இணைய இதழுக்கு அறிமுகமானவர். அவரது ஆக்கங்கள் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகியிருக்கின்றன. முகநூலிலும் என் நண்பராக இருப்பவர். அவர்தான் தமிழினியின் கணவர் என்னும் விடயமே தமிழினியின் மறைவுக்குப் பின்னர்தான் தெரிய வந்தது.
தமிழினி ரொமிலா ஜெயன் என்னும் பெயரிலும் முகநூலில் கணக்கு வைத்திருந்தார். ஆனால் அது எனக்குத் தெரியாது. எனக்கும் நட்புக்கான அழைப்பு விடுத்திருந்தார். அந்தபெயர் எனக்கு அறிமுகமில்லாததால் நீண்ட காலமாக அந்த நட்பு அழைப்பினை ஏற்பதில் நான் கவனம் செலுத்தவில்லை. பின்னர் அந்தப்பெயரில் சிறுகதையொன்று 'அம்ருதா' (தமிழகம்) சஞ்சிகையில் வெளியான பின்னர்தான் அந்தப்பெயரில் கவனம் செலுத்தினேன். ரொமிலா ஜெயன் சக எழுத்தாளர்களிலொருவர் என்பது விளங்கியதால், அவரது நட்புக்கான அழைப்பினை ஏற்றுக்கொண்டேன். அதன்பின்னர் தமிழினி தனது சொந்தப்பெயரிலேயே முகநூலில் நட்புக்கான அழைப்பு விடுத்திருந்தார். அப்பொழுதும் ரொமிலா ஜெயனும், தமிழினியும் ஒருவரே என்பது தெரிந்திருக்கவில்லை. அவரது மறைவுக்குப் பின்னரே இருவரும் ஒருவரே என்பதும் புரிந்தது.
தமிழினி என்ற பெயரில் முகநூல் அழைப்பு அனுப்பியபோது அவரது முகநூலில் அவர் பாவித்திருந்த படம் என்னை மிகவும் கவர்ந்திருந்தது. பல்வேறு கைகள் இணைந்து நிற்கும் காட்சி அது. பல்வேறு கருத்துள்ளவர்களுடனும் நட்புக்கரம் கோர்த்து, ஒன்றுபட்டுச் செயற்பட அவர் விரும்பியதை வெளிப்படுத்தும் படம் அது. அதனால்தான் அவரது முகநூல் நண்பர்களாகப் பல்வேறு அரசியல் தளங்களில் இயங்கிவர்களும் இணைந்திருக்க முடிந்தது. படத்திலுள்ள கைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். அளவுகளில் வேறுபட்டவை. அவை அனைத்தும் ஒன்றுபட்டு ஆக்கபூர்வமாக இயங்குவதைப்போல், முரண்பட்ட கருத்துள்ளவர்களாலும் ஒன்றுபட்டு , முரண்பாடுகளுக்குள் ஓர் இணக்கம் கண்டு இயங்க முடியும். சமூக ஊடகமான முகநூலில் அவரது செயற்பாடுகள் இதனைத்தான் எமக்குக் கூறி நிற்கின்றன. பல்வேறு அரசியல் தளங்களில் இயங்கியவர்களெல்லாரும் அவருடன் முகநூலில் கைகோர்த்திருந்தார்கள். அனைவருடனும் அவர் நிதானமாக, உணர்ச்சிவசப்படாமல் கருத்துகளைப் பரிமாறியிருக்கின்றார். அதனால்தான் அவரது மறைவு அனைத்துப்பிரிவினரையும் பாதித்திருக்கின்றது.
தமிழினி தனது ஆக்கங்களை அனுப்பியபோது அவை பற்றிய எனது கருத்துகளை அவருடன் பகிர்ந்துகொண்டதுடன், 'பதிவுகள்' இணைய இதழிலும் அவற்றைப்பிரசுரித்து 'பதிவுகள்' வாசகர்களுக்கும் அவரது படைப்புகளை அறிமுகப்படுத்தினேன். பதிலுக்கு 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகும் அவரது படைப்புகள் பற்றிய எனது கருத்துகளைத் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு நன்றி தெரிவித்து வந்தார். அவரது மறைவுக்கு முன்னர்கூட எழுத்தாளர் தாமரைச்செல்வி பற்றிய எனது முகநூற் பதிவொன்றுக்கு எதிர்வினையாகத் தனது முகநூல் பக்கத்தில் "அக்காவின் எழுத்துக்களை சிறு வயதிலிருந்தே நான் ஆர்வத்துடனும். ஆசையுடனும் வாசிப்பதுண்டு. வளர்ந்த பின்பும் அக்காவின் வன்னி மண்ணினதும் அதன் மக்களின் இயல்புகளையும் பற்றிய புரிதலை எனக்குள் ஏற்படுத்தியவை அக்காவின் எழுத்துக்கள் தான். அவை பற்றி அருமையான குறிப்பொன்றைத் தந்தமைக்கு சகோதரன் கிரிதரனுக்கு எனது மனமார்ந்த நன்றி." என்று குறிப்பிட்டிருந்தார்.
பிரச்சாரமற்ற, அனுபவத்தின் வெளிப்பாடாக, மானுட நேயம் மிக்கதாக விளங்கிய அவரது எழுத்து என்னைக் கவர்ந்தது. போர்க்களக்காட்சிகளை அவர் விபரித்திருந்த விதம் நெஞ்சைத்தொடுவதாக, இலக்கியச்சிறப்பு மிக்கதாக விளங்கியது கண்டு மகிழ்ச்சியே ஏற்பட்டது.
'மழைக்கால இரவு' என்ற சிறுகதையொன்றில் (இச்சிறுகதை உண்மையில் அவரது சுயசரிதையின் ஒரு பகுதி என்பதை 'ஒரு கூர் வாளின் நிழலில்' என்னும் அவரது சுயசரிதை வெளியானபோதே அறிந்துகொண்டேன் அவர் பாவித்திருந்த கவித்துவம் மிக்க வரிகளை மீள ஒழுங்குபடுத்தி 'யுத்தம்' என்றொரு கவிதையாகப் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியிட்டிருந்தேன். அதற்கு எதிர்வினையாகத் தனது முகநூற் பதிவில் அவர் "அதனை அவர் தனது முகநூலில் குறிப்பிட்டு 'மழைக்கால இரவு’ என்ற தலைப்பில் நான் எழுதிய சிறுகதையிலிருந்து அர்த்தம்பொதிந்த அருமையான கவிதையொன்றினை கிரிதரன் நவரத்னம் யாத்திருக்கிறார்." என்று எழுதியிருந்தார்.
அந்தக் கவிதையினை முழுமையாகக் கீழே தருகின்றேன்.
யுத்தம்!
போரில் ஈடுபட்டு மரித்துப்
போன
இராணுவத்தினரதும், போராளிகளினதும்
சடலங்கள் ஒன்றன் மேலொன்றாக புரண்டு
கிடந்ததை என் கண்களால் கண்டேன்.
பகைமை, விரோதம், கொலைவெறி
இவைகளெதுவுமே
அப்போது அந்த முகங்களில்
தென்படவில்லை.
உயிர் போகும் தருணத்தின்
கடைசி வலி மட்டும்
அந்த முகங்களில் எஞ்சியிருந்தது
கரு மேகங்கள் சூழ்ந்த வானம்
இருள்மூடிக் கிடந்தது.
நசநச வென்று வெறுக்கும்படியாக
மழை பெய்து கொண்டேயிருந்தது,
இடை வெளியில்லாமல் காது கிழியும்படி
பீரங்கிகள் மீண்டும் முழங்கத் தொடங்கியிருந்தன.
நிணமும் குருதியும் கடைவாயில்
வழிய வழிய
பசியடங்காத பூதம்போல மீண்டும்
பயங்கரமாக வாயைப்
பிளந்து கொண்டது
யுத்தம்.
இது பற்றி தமிழினியின் கணவர் ஜெயக்குமாரன் வெளியிட்ட 'போர்க்காலம் - தோழிகளின் உரையாடல்' என்னும் தமிழினியின் கவிதைத்தொகுதிக்கு எழுதிய 'தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!' என்னும் முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தேன்:
"இக்கவிதை யுத்தத்தின் கோர முகத்தை வெளிப்படுத்தும் அதே சமயத்தில் கவிஞரின் மானுட நேயத்தினையும் வெளிப்படுத்துகிறது. போரில் மரித்துப்போன இராணுவத்தினரின், போராளிகளின் சடலங்கள் ஒன்றின் மேலொன்றாகப் புரண்டு கிடப்பதைக்கவிஞர் பார்க்கின்றார். அச்சமயம் அவருக்கு பகைமை, விரோதம், கொலைவெறி இவைகளெதனையுமே அப்போது அம்முகங்களில் காண முடியவில்லை. உயிர் போகும் தருணத்தின் கடைசி வலியினை மட்டுமே அம்முகங்களில் காண முடிகிறது. சிறிது நேரத்துக்கு முன்பு ஒருவருக்கொருவர் பகைமை உணர்வுடன் மோதி உயிர் விட்டவர்கள் அவர்கள். ஆனால் மடிந்த அவர்தம் முகங்களில் அவை எவற்றையுமே காண முடியவில்லை. இவ்விதம் கூறுவதற்குக் கவிஞரைத்தூண்டிய மானுட நேயம் சிறப்புக்குரியது.
இவ்விதமாகத் தமிழினியின் கவிதைகள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், தவிர்க்க முடியாதவை. தமிழினியின் போராட்ட அனுபவங்களை, ஆழ்ந்த வாசிப்பினை, ஆழமான சிந்தனையினை வெளிப்படுத்தும் கவிதைகளின் முக்கியமான இன்னுமொரு சிறப்பு: அவரோ ஒரு காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் மகளிர் அணியின் அரசியற் பிரிவின் பொறுப்பாளராக விளங்கியவர். அத்துடன் இராணுவத்தாக்குதல்களிலும் பங்கு பற்றியவர். இருந்தும் அவரது கவிதைகள் பிரச்சார வாடையற்று சிறந்து விளங்குகின்றன. யுத்த களத்து நிலைமைகளை விபரிக்கையில், சக போராளிகளின் உளவியலை, போர்ச்செயற்பாடுகளை விபரிக்கையில், பொருத்தமான படிமங்களுடன், சிறப்பான மொழியுடன் அவற்றைப் பிரச்சார வாடையெதுவுமற்று விபரித்திருக்கின்றார். இதனால்தான் அவரது கவிதைகள் இலக்கியச்சிறப்பு மிக்கவையாக விளங்குகின்றன."
இந்த முன்னுரையினைப் 'பதிவுகள்' இணைய இதழில் வாசிக்கலாம்: https://www.geotamil.com/index.php/2021-02-14-02-16-26/3173-2016-02-14-04-56-51
தமிழினியின் 'ஒரு கூர்வாளின் நிழலில்' சுயசரிதை பலத்த வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பினாலும், தமிழர் இலக்கிய உலகில் முக்கியமானதொரு நூலாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளது. இதனது சிங்கள மொழிபெயர்ப்பும் சிங்கள மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளதும் கவனிக்கத்தக்கது. இச்சுயசரிதையில் தான் ஏன் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தலைமையின் கீழ் ஆயுதம் தாங்கிப்போராடப்புறப்பட்டேன் என்பதிலிருந்து , 2009இல் முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர், அதன் பின்னரான அவரது தடுப்புமுகாம் அனுபவங்களின் பின்னர், சிறை வாழ்வின் பின்னர் அவர் தன் கடந்த கால வாழ்க்கையினை மீளாய்வு செய்தது வரை தோன்றிய உணர்வுகளை அவர் விபரித்திருக்கின்றார். அந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது இச்சுயசரிதை. அதே சமயம் தமிழினியின் எழுத்தாற்றல் இப்பிரதியை இலக்கியச்சிறப்புமிக்கதொரு பிரதியாகவும் உருமாற்றியிருக்கின்றது.
தமிழினியின் கவிதைத்தொகுதிக்கு எழுதிய முன்னுரைக்கு ' 'தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!' என்று தலைப்பிட்டிருந்தேன். இலக்கிய வானில் மட்டுமல்ல, என் வாழ்விலும் அவருடனான தொடர்பு ஒரு மின்னலைப்போல்தான் அமைந்து விட்டது. இவ்வுலகில் அவரது வாழ்வு மின்னலைப்போல் தோன்றி மறைந்தாலும், அச்சிறு கணத்துள் அவர் தான் வாழ்ந்த சமூகத்துக்கு ஒளி வீசித்தான் மறைந்திருக்கின்றார் இருந்தபோதும் சரி, இருக்காதபோதும் சரி.
முகநூல் எதிர்வினைகள் சில:
Jeyan Deva
உங்கள் குறிப்புக்கு மிக்க நன்றி கிரி. தமிழினியின் இலக்கியப் பயணத்தில், சுதந்திரப் பறவையின் பொறுப்பாளராக இருந்த போது, கவிதைகளையும், சிறுகதைகளையும் தாம் எழுதியதாக அவர் கூறியிருந்த போதிலும், தீவிர எழுத்தாளராகத் தன்னை மாற்ற முயற்சித்தது அவர் சிறை மீண்ட பின்னர் தான். எனது இலக்கிய அறிவுக்குட்பட்டு, அவரது கதைகள் மீதான எனது அபிப்பிராயங்களைக் கூறி, அவரைத் தொடர்ந்து எழுதுமாறு ஊக்கப் படுத்தினேன். அதன் பின்னராக, அவரது போராட்ட அனுபவங்களை அவர் பதிவு செய்ய வேண்டும் என நினைத்து அதை ஊக்கப் படுத்தினேன். அதன் விளைவு தான் ஒரு கூர் வாளின் நிழலில். அதைப் பூர்த்தி செய்த பின்னர், கடற்புலி வீராங்கனைகளின் அர்ப்பணிப்பு பற்றிய நூலொன்றை எழுத அவர் திட்டமிட்டிருந்தார். அது நோயால் தடுக்கப் பட்டு விட்டது.
அவருடைய இலக்கிய ஆர்வத்திற்கு வழி சமைத்தவர்களில் கவிஞர் கருணாகரன் முக்கியமானவர் என அவர் சொல்வதுண்டு. சுதந்திரப் பறவை காலத்தில் பல புத்தகங்களைத் தனக்குப் படிக்கத் தந்து தனது இலக்கிய ஆர்வத்தை வளர்த்தவர் கருணா அண்ணா தான் என்றார். சிறை மீண்ட பின்பு ஒரு இலக்கிய ஆளுமையாகப் பரிணமிக்க உதவி ஊக்கப் படுத்தியவர்களில், பேராசிரியர் அ. இராமசாமி, சேரன் உருத்திரமூர்த்தி, ஆகியோருடன், வ.ந. கிரிதரன் பதிவுகள் இணையத்தள ஆசிரியர், எம். பெளசஸர் எதுவரை இணையத்தள ஆசிரியர், சந்திரவதனா செல்வக்குமரன் வதனா அக்கா ஆகியோரைக் குறிப்பிட்டார். தனது ஆக்கங்களை எவ்வித தயக்கமுமின்றி வெளியிட்ட கிரிதரனையும், பெளஸரையும் தனது உண்மையான சகோதரர்களாகவே கருதினார். சேரனின் கவித்திறன் மீதும், இராமசாமி ஐயாவின் பல்துறை அறிவின் மீதும் அளவற்ற மதிப்புக் கொண்டிருந்தார்.
தனிப்பட்ட முறையில் தோல்வி பற்றியும், இழப்புக்கள் பற்றியும் அவர் துவண்டிருந்த போதிலும், (யுகவலி என்ற ஒரு சொற்பதத்தை முகநூலில் ஒரு அன்பர் பயன்படுத்தியிருந்ததைக் குறிப்பிட்டு, உயிர் தப்பிய ஒவ்வொரு போராளியின் மன நிலையையும் அந்தச் சொல் தான் மிகப் பொருத்தமாக விபரிப்பதாக மெச்சினார்). அடுத்த தலைமுறைக்கு நாம் அழுகுரலை விட்டுச் செல்ல முடியாது என்பதில் மிகக் கவனமாக இருந்தார். தனது எழுத்தின் மூலம் இளம் சந்ததிக்கு நம்பிக்கையளிக்க வேண்டும் என்ற மனப்போக்கு அவரிடம் இருந்தது.
Shanthakumar Santhiyapillai
அவர் சார்ந்திருந்த அமைப்பு,அதன் செயற்பாடுகள் தொடர்பாக சமரசம் செய்யமுடியாத அளவு விமர்சனம் உண்டு. அதில் அவருக்கும் பங்குண்டு. 2009 ற்கு பிளன்னர் அவர் சரணடைந்தமை பற்றி யதார்த்தமான தர்க்கரீதியான நியாயமான வாதங்கள் உண்டு. ஆண் பெண் என்ற வேறுபாடுகளுக்கப்பால் அவர் தன்னை சுயவிமர்சனம் செய்துகொண்டமை, தான் சார்ந்திருந்த அமைப்பின் கொடுமைகளை ஏற்றுக்கொண்டமை வரவேற்கப்படுவதுடன் தான் தவறான இடத்தில் இருந்ததை குற்ற உணர்வுடன் ஏற்றுக்கொண்டது அறம் சார்ந்த வெற்றியாகும்.
Ambikaipahan Gulaveerasingam
மனதை நெகிழவைக்கும் பதிவு. இ்த்தகைய திறமைசாலிகளைத் தமிழினம் இழந்து நிற்பது கொடூரம். இவரின் கவித்துவத்தை வெளிக்கொணர்ந்திருப்பது சிறந்த ஒரு செயல்.
Jaya Palan - கவிஞர் வ.ஐ.ச ஜெயபாலன்
தமிழினியை யுத்தகாலத்தில் கிழிநொச்சியில் முதன் முதலில் பார்த்து பேசினேன். கடைசியாக 2006 இல் சில வார்த்தைகள் பேசி இருக்கிறேன். வன்னியில் பொதுவாக 2ம் கட்ட 3ம் கட்ட தலைமகளுள் பலர் நான் இயகத்தை விமர்சிப்பது தொடர்பாக அதிருப்தியில் இருந்தனர். ஒருமுறை முக்கிய போராளியான சாள்ஸ் நான் படுவான் கரையில் இருந்தபோது என்னை சந்திக்க வந்தார். இரண்டு பக்கமும் இரண்டு மிகப் பெரிய ரிவோவரை சொருகியபடி வந்தார். கடும் குரலில் உங்கள் விமர்சனப்போக்கை நான் ஒத்துக்கொள்ளவில்லை. ஆனாலும் தலைவர் “ஜெயபாலன் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர். ஆனபடியால் விமர்சனத்துக்காக அவருக்கு யாரும் எதிர்ப்பு காட்டக்கூடது என்று உத்தவிட்டிருக்கிறார். அதனால்தான் நாங்கள் சகிக்கிறோம் என்று சற்று மிரட்டும் தொனியில் கூறினார். பின் போய்விட்டார். இதுதான் பல 2ம் கட்ட தலைவர்கள் நிலைபாடாக இருந்தது. ஆனால் தனிழினி என்னை ஒரு தோழனாகவே பார்த்தார். இந்த பண்புகளால் தமிழினியியை குமாரி ஜெயவர்த்தனா போன்ற சிங்களவரர்களும் மதித்தார்கள்.
இவரது நூல்கள்:
1. ஒரு கூர்வாளின் நிழலில் (சுயசரிதை)
2. மழைக்கால இரவு (சிறுகதைகள்)
3. போர்க்காலம் - தமிழினி கவிதைகள்
இவற்றில் 'ஒரு கூர்வாளின் நிழலில்' நூலின் முக்கிய சிறப்புகள்:
1. விடுதலைப்புலி அமைப்பில் இவர் இயங்கியபோது நடைபெற்ற , இவர் பங்குபற்றிய பூநகரிச் சமர் போன்ற யுத்தங்களை இந்நூல் விரிவாக ஆவணப்படுத்துகின்றது. போராளிகளின் இறுதி நேர உணர்வுகளைப் படம் பிடித்துக்காட்டுகின்றது.
2. யுத்தம் முடிவுக்கு வந்ததற்கான காரணங்களை, இயக்க அனுபவங்களை ஆக்கபூர்வமாக விமர்சிக்கின்றது. விடுதலைப்புலிகள் அமைப்பில் முக்கியமாக இயங்கிய ஒருவரின் சுய விமர்சனம் என்னும் வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது.
3. இவரது வாழ்க்கை அனுபவங்களை, எதற்காகப் போராடப் புறப்பட்டார் , இவரது வாழ்க்கை பற்றிய உணர்வுகள் எனப் பலவற்றை விபரிப்பதாலும் முக்கியத்துவம் வாய்ந்தது.
தனது 'ஒரு கூர்வாளின் நிழலில்' நூலில் தமிழினி பெண் விடுதலை பற்றித்தெரிவித்திருந்த கருத்துகள் அந்நூலை வாசிக்கும்போது என் கவனத்தை ஈர்த்தன. அவற்றை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். . குறிப்பாகக்கீழுள்ள சிலவற்றைக் கூறலாம்:
1. :" எனது பாடசாலைக் காலத்தில் விடுதலைப்புலிகள் இயக்கம் தனிப்பெரும் விடுதலை இயக்கமாகப் பெரும் வளர்ச்சியை அடைந்திருந்தது. மகளிர் படையணிகள் கள முனைகளில் வீர, தீரச் சாதனைகளையும் , உயிர் அர்ப்பணிப்புகளையும் நிகழ்த்திக்கொண்டிருந்தார்கள். நான் இயக்கத்தில் இணைந்து கொண்டமைக்குப் பொதுவான போராட்டச்சூழ்நிலைகளே காரணமாக இருந்த போதிலும், ஒரு பெண் என்ற நிலையில் எனது குடும்பத்தினதும், என்னைச்சூழ்ந்திருந்த சமூகத்தினதும், பெண் சார்ந்த கருத்து நிலையை உடைத்து ஒரு புரட்சி செய்யக்கூடிய சந்தர்ப்பமாகவும் அதைக்கருதினேன். நான் இயக்கத்தில் இணைந்த பள்ளிப்பருவத்தில் ஒரு வேகமும், துடிப்பும் என்னிடம் இருந்ததே தவிர , அக்காலகட்டத்தில் இருந்த அரசியல் நிலைமைகள் மற்றும் சமூகம் பற்றிய எவ்விதமான புரிதலும் எனக்கிருக்கவில்லை." ('ஒரு கூர்வாளின் நிழலில்': அத்தியாயம் 5 - ஆயுதப் போராளியான பெண்ணும் மாற்றம் காணாத சமூகமும்', பக்கம் 73)
2. "பெண்கள் ஆயுதப்பயிற்சி பெற்றபோது, அவர்களால் தமது உடல் வலிமையை நிரூபிக்கக்கூடியதாக இருந்த போதிலும், அவர்களுடைய அடிப்படைச்சிந்தனைகளில் எந்தளவுக்கு மாற்றம் ஏற்பட்டிருந்தது என்பது கேள்விக்குரியதாயிருந்தது. குடும்பம் என்ற அமைப்புக்குள்ளிருந்து வெளியே வந்து, இயக்கம் என்ற அமைப்பிற்குள் புகுந்து கொண்ட புலிப்பெண்கள் அனைவருமே புரட்சிகரமான புதிய சிந்தனை மாற்றத்திற்கு உட்பட்டவர்கள் என்று கூறிவிட முடியாது. எவ்வாறு ஒரு கட்டுக்கோப்பான குடும்பப்பெண்ணாக வீட்டில் வளர்க்கப்பட்டோமோ, அதேபோலக் கடினமான இராணுவப் பயிற்சிகளைப்பெற்ற, கட்டுக்கோப்பான மகளிர் படையணிப்போராளிகளாகவே இயக்கத்திலும் வளர்க்கப்பட்டோம். " ('ஒரு கூர்வாளின் நிழலில்': அத்தியாயம் 5 - ஆயுதப் போராளியான பெண்ணும் மாற்றம் காணாத சமூகமும்', பக்கம் 75 & 76)
3. "பெண்களிடையே சுதந்திரமான ஒரு மனோபாவத்தை வளர்ப்பதற்குரிய தீர்க்கமான கொள்கைத்திட்டங்கள் எவையும் எங்களிடமிருக்கவில்லை. பெண்கள் வீட்டுக்கு வெளியே வந்து ஆயுதமேந்துவதன் மூலம், சமூகத்தையே நாம் மாற்றி விடலாம் எனக்கனவு கண்டோம். ஆனால் உண்மையில் நடந்தது என்னவென்றால், பெண் போராளிகள் ஆயுதமேந்திப் போராடியதால், போர்க்களத்தின் பல வெற்றிகளுக்குக் காரணகர்த்தாக்களாக இருக்க முடிந்ததே தவிர, சமூகத்தில் பெண்கள் சார்ந்த கருத்தமைவில் எவ்விதமான மாற்றங்களையும் எங்களால் ஏற்படுத்திவிட முடியவில்லை. தமிழ் சமூகத்தில் பெண்களின் விடுதலைக்கான பாய்ச்சல் வளர்ச்சியானது ஆயுதப் பெண்களின் பிம்பமாகவே தொடங்கி ஆயுதப் போராட்டத்தின் தோல்வியுடனே அது முடிந்தும் போனது." ('ஒரு கூர்வாளின் நிழலில்': அத்தியாயம் 5 - ஆயுதப் போராளியான பெண்ணும் மாற்றம் காணாத சமூகமும்', பக்கம் 76)
4. "பெண்கள் ஆயுதப் போராட்டத்தில் பங்கெடுப்பதன் மூலமே சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியுமென்று கருத்துகளை நான் கூறியிருக்கிறேன். ஆனாலும், ஆயுதப்போராட்டத்தோடு சமாந்தரமான நிலையில் சமூக மாற்றத்திற்கான வேலைத் திட்டங்களும்முன்னெடுக்கப்பட்டன என்று கூறுவதற்கில்லை." (('ஒரு கூர்வாளின் நிழலில்': அத்தியாயம் 5 - ஆயுதப் போராளியான பெண்ணும் மாற்றம் காணாத சமூகமும்', பக்கம் 77)
5. "அரசியல்துறை மகளிர் பிரிவினுடைய பணிகளாக சமூகத்தில் பெண்ணுரிமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், பெண்களின் வாழ்கைத்தரத்தை மேம்படுத்துவதும், சமூகத்தில் பாதிக்கப்பட்ட பெண்களை இனங்கண்டு அவர்களுக்கான புனர்வாழ்வளிப்பதும், இன்னும் பரந்துபட்ட ரீதியில் சமூக மாற்றத்துக்காக உழைப்பதும், என்பனவாகவே இருந்தன. இதன் அடிப்படையில்தான் அரசியல் மகளிர் பிரிவின் வேலைத்திட்ட அலகுகளும் பிரிக்கப்பட்டிருந்தன. ஆனாலும் நடைமுறையில் சாத்தியமானது என்னவோ இயக்கத்திற்கு புதிய போராளிகளை இணைப்பதும், பெண்களுக்கென குறிப்பிட்ட சில வேலைகளை மாத்திரம் செய்ய முடிந்ததுமேயாகும். ஏனெனில் இயக்கத்தின் முழுக்கவனமும் , மொத்த வளங்களும் யுத்தத்தில் ஈட்டப்பட வேண்டிய வெற்றியை நோக்கியே திருப்பபட்டிருந்தன்" ('ஒரு கூர்வாளின் நிழலில்': அத்தியாயம் 5 - ஆயுதப் போராளியான பெண்ணும் மாற்றம் காணாத சமூகமும்', பக்கம் 77)
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.