* ஓவியம் - AI
பொதுவாக ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் வளர்ச்சிக் கூறுகளின் நிலைத்த தன்மைக்கும் உந்து சக்திகளாக பல்வேறு காரணிகள் அறியப்பட்டாலும் அவற்றுள் முதன்மையானது மட்டுமல்ல தவிர்க்க முடியாத சக்தியாகவும் முன்நிற்பது அந்நாட்டின் இளைஞர்களே ஆவர். புதிய சிந்தனைகள், மேம்பட்ட திறன்கள், புதுமைகளை உள்வாங்கும் நிலை, தளராத முயற்சி, வளர்ச்சி நோக்கிய இலக்கு, நவீன உத்திகளைக் கையாளுதல் போன்ற எண்ணற்ற பரிமாணங்கள் இளைஞர்களின் தகுதியையும் தரத்தையும் உயர்த்திப் பிடிப்பதால் அவர்களை விலக்கி வைத்துவிட்டு வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வது இயலாததாகும். அறிவு, ஆற்றல், அனுபவம், துணிவு போன்றவற்றின் அடிப்படையில் வளரும் நாடுகளில் மட்டுமல்ல அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலும் கூட இளைஞர்களின் செயல்பாடுகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுவதால் மாற்றங்களுக்கு வித்திடும் இன்றைய உலகில் இளைஞர்கள் மாற்று சக்திகளாகவும் உருவாகி நிற்கின்றனர்.
19 வயது முதல் 35 வயது வரை உள்ள அனைவருமே இளையோர் தான். அது மட்டுமல்லாமல்; துடிப்புடன், பயம் என்பதே இல்லாமல் பல எதிர்ப்புகளையும் தாண்டி முழு ஆற்றலுடன் எந்த ஒரு செயலையும் செய்து முடிப்பவன் இளைஞன். இத்தகைய மனபலத்தையும் ஆற்றலையும் படைத்த இளைஞன் இன்று தன்னை அறியாமலேயே நாகரிகம், வாழ்க்கை சூழ்நிலை போன்ற காரணங்களால் தன்னையே அழித்து, தன் வாழ்வையே கேள்விக்குறியான ஒன்றாக மாற்றி வருகின்றான்.
இளைஞர்கள் தடுமாறும் சூழல்:
இளம் வயது புதிய மாற்றம் ஏற்படும் காலம், பொதுவாக மன அழுத்தமும், கவலையும் நிறைந்த காலம் என ஐக்கிய நாடுகளின் ஓர் அறிக்கை விவரிக்கிறது. இளைஞர்களால் பொதுவாக மனஅழுத்தத்தையும், கவலையையும் ஆக்கபூர்வமான விதத்தில் சமாளிக்க முடிவதில்லை. அதற்கான அனுபவம் அவர்களிடம் சிறிதும் இருப்பதில்லை. இந்த நேரங்களில் சரியான வழிநடத்துதல் இல்லை என்றால் இளைஞர்கள் எளிதாக தீய வழிதனில் சென்று விடுவார்கள்.
குடும்ப சூழ்நிலை காரணம்:
“பல குழந்தைகள் இருக்கிறார்கள் ஆனால், எல்லாக் குழந்தைகளுக்கும் நல்ல தாயும் தந்தையும் கிடைப்பதில்லை” என்று திருத்தந்தை 23-ம் அருளப்பர் கூறுகிறார். கடந்த 30 – ஆண்டுகளாகத் தோன்றியிருக்கும் குழந்தை வளர்ப்பு முறைகள் கூட இன்று கட்டுப்படுத்த முடியாத இளைஞர்களையே தோற்றுவிக்கிறது என்று டாக்டர் ராபர்ட் ஷா கூறுகிறார்.
தாய், தந்தையிடையே நடக்கும் சண்டைகள் கூட குழந்தைகளை, இளைஞர்களை பாதிக்கிறது. உதாரணமாக அமெரிக்க குழந்தைகளில் 3 பங்குக்கும் அதிகமானோர் 18 வயதினை எட்டுவதற்கு முன்பே பொற்றோரின் விவகாரத்தால் பாதிக்கப்படுகின்றனர் என ஜர்னல் ஆஃப் இன்ஸ்ட்ரக்னல் சைக்காலஜி என்ற பத்திரிகை அறிக்கை செய்கிறது. மேற்கத்திய நாடுகளும் இது போன்ற புள்ளி விவரங்களை வெளியிடுகின்றன. இப்படி பெற்றோரின் கண்காணிப்பு இல்லாமல் வளரும் பிள்ளைகள் பெரும்பாலும் தனிமையை அனுபவிக்கிறார்கள், பிரச்சனையை விலைகொடுத்தே வாங்குகிறார்கள்.
வரம்புகள் இல்லாதது:
தெளிவான வரம்புகள் இல்லாதது இளம் குற்றவாளிகள் தோன்றுவதற்கு காரணமாக அமையலாம். “தான் கஷ்ட்டப்பட்டதைப் போன்று தன் பிள்ளையும் எந்த கஷ்ட்டத்தையும் அனுபவிக்கக் கூடாது” என்பதற்காக ‘கூடாது’ என்ற வார்த்தைக்கே இடமில்லாமல் எவ்வித வரம்புகளும் வைக்காமல் அளவுக்கு அதிகமாக செல்லம் கொடுத்து இன்று வளர்க்கப்படும் பிள்ளைகள் “‘மற்றவர்களுக்கும் வாழ்க்கையும், உணர்ச்சிகளும், தேவைகளும், விருப்பங்களும் உண்டு என்பதை உணர வாய்ப்பில்லை’ ‘மற்றவர் இடத்தில் தன்னை வைத்து பார்க்கத் தெரியாத எந்த பிள்ளையாலும் அன்பு காட்டவும் முடியாது’”. அது மட்டுமல்லாமல் கண்டிப்பு இல்லாமல் வளர்க்கப்படும் பிள்ளைகள் சுயக்கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வது மிகக் கடினம் என்பதை பெற்றோர்கள் உணருவதில்லை.
இணையமும் இளையோரும்:
பெரும்பாலான இளைஞர்கள் facebook, WhatsApp போன்ற சமூக வலை தளங்களுக்கு அடிமையாக மாறி தன் வாழ்வையே அழித்து வருகிறார்கள். 2004-ம் ஆண்டு துவங்கப்பட்ட facebook என்கிற சமூக வலை தளம் இன்று 800 மில்லியனுக்கும் அதிகமான பயனாளர்களை கொண்டு இயங்கி வருகிறது. இதன் நிறுவனர் Mark Zuckerberg அவர்கள் உரையாற்றுகையில் இந்த சமூக வலை தளத்தின் மூலம் இளைய சமுதாயத்தின் மறுமலர்ச்சியையும், எழுச்சியையும் மிக விரைவில் உலகமெங்கும் காண முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார். ஆனால், இது போன்ற சமூக வலைதளங்களின் வீரியவேர்கள் உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று தன் பாதையை அமைத்துக் கொள்ளும் என்று அன்றைய தினம் யாரும் அறிந்திருக்கவில்லை. நம் இளைஞர் சமுதாயம் அறிவார்ந்த விஷயங்களை பகிர்ந்து கொள்வதில் எந்த தவறும் கிடையாது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல எந்த ஒரு பழக்கமும் நம்மை ஆளாமல் நாம் தான் அதனை ஆள வேண்டும் என்பதை அறியாத இளைஞர்களாய் தன் வாழ்வின் பெரும் பகுதியை facebook, WhatsApp – நண்பர்களுடன் chating செய்வதிலேயே கழித்து விடுகின்றனர். இது இன்றைய இளைஞர்களின் பொழுதுபோக்காகவும் மாறியிருக்கிறது.
ஆடம்பரத்தை நாடும் இளையோர்:
உழைத்து சேர்த்த பொருளை யாருக்கும் செலவிடாமல் சேர்த்து வைக்கத் தெரிந்த தலைமுறை அதை என்ன செய்வது என்று தெரியாது இருந்த நேரத்தில் தான் மேலை நாட்டு கலாச்சாரம் நம் இளையோர் மத்தியில் ஊடுருவ ஆரம்பித்தது. அந்த நேரத்தில் தான் “தான் வாழ பிறரையும் வாழ விட வேண்டும் என்ற சிந்தனையை மறந்து சம்பாதித்த பொருளை நல்ல வழிதனில் செலவழிக்க வேண்டும் என்ற மனதுடன் கூடிய மனிதாபிமானம் இல்லாத” இளைஞர்கள் உருவாக்கப்பட்டனர். ஆடம்பரமாக சுயநலத்துடன் கூடிய வாழ்க்கை வாழ்ந்த இளைஞர்கள் தங்கள் சேமிப்பை இழந்தார்கள்.
Treat என்னும் பெயரில் மது:
மது அருந்துவோரின் சராசரி வயது 13 என்கிறது ஒரு புள்ளி விவரம்.இன்றைக்கு திருமணத்திற்கு மது, இறப்புக்கு மது என இன்றைய இளையோர்கள் தன்னுடைய வாழ்வில் நல்லது அல்லது கெட்டது என எது நடந்தாலும் தானும் மது அருந்தி தன் நண்பர்களுக்கும் Treat (மது) வைப்பது இன்றைக்கு நாகரிகமாக மாறிவிட்டது. Treat என்னும் பெயரில் சின்னதாக அன்றைய தின மகிழ்ச்சியை அனுபவிக்க அல்லது துக்கத்தை மறக்க என அவர்கள் ஆரம்பிக்கும் மது பழக்கமானது நாளை தன் வாழ்வையே அழித்து விடும் என்பதை அறியாத இளைஞர்களாய் பெரும்பாலான இளைஞர்கள் மதுவை தன் வாழ்வின் ஒரு பகுதியாக மாற்றி வருகின்றார்கள்.
உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின் படி: 2 பில்லியன் மக்கள் மது பழக்கம் உடையவர்கள் எனவும், 75 மில்லியனுக்கு மேற்ப்பட்டோர் மது பழக்கத்தால் ஏற்பட்ட உடல் நோய்களால் அவதிப்படுகின்றனர். உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சுமார் 2.5 கோடி பேர் மது காரணமான நோய்களால் இறக்கின்றனர். 15 முதல் 29 வயதுக்கு உட்பட்டோரில் 9% பேரின் இறப்புக்கு மதுவே காரணமாக அமைகிறது. கடந்த 30 ஆண்டுகாலமாக வளர்ந்து வரும் நாடுகளில் குறைந்து வரும் நிலையில் வளரும் நாடுகளில் அது அதிகரித்துக் கொண்டே வருகிறது.
நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்களிப்பு
இளைஞர்களின் பங்களிப்பும் மாறுபட்ட அணுகுமுறையும் நாட்டின் வளர்ச்சிப் போக்கினைத் தீர்மானிப்பதற்குப் பேருதவியாக இருந்ததால் இளைஞர்களின் முன்னேற்றத்திற்கேற்ப நாட்டின் வளர்ச்சி விரைவுபடுத்தப்பட்டது. அந்த வகையில் இளைஞர்கள் நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் வளர்ச்சித் தூதுவர்களாக கருதப்பட்டனர். எதிர்காலம் மட்டுமன்றி நிகழ்காலத் தேவைகளையும் கருத்தில் கொண்டு வளர்ச்சிச் சமத்துவத்தைப் பரவலாக்குவதற்கான செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதன் மூலம் வளர்ச்சிப் பங்காளிகளாகவும் செயல்பட்டு வருகின்றனர்.
அறிவு, ஆற்றல், அனுபவம், துணிவு போன்றவற்றின் அடிப்படையில் வளரும் நாடுகளில் மட்டுமல்ல அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலும் கூட இளைஞர்களின் செயல்பாடுகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுவதால் மாற்றங்களுக்கு வித்திடும் இன்றைய உலகில் இளைஞர்கள் மாற்று சக்திகளாகவும் உருவாகி நிற்கின்றனர்.
உலகில் சில நாடுகள் தான் மக்கள்தொகையில் கணிசமான அளவு இளைஞர்களை வரப்பிரசாதமாகப் பெற்றுள்ளது. எனவே ஒவ்வொரு நாட்டிலும் அங்கு நிலவும் சூழ்நிலைக்கேற்ப அந்நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்களிப்பு இன்றியமையாததாக உள்ளது. பன்முகத் திறன் கொண்ட இவர்கள் அனைத்து துறைகளிலும் சாதித்து வருகின்றனர்.
தகவல் தொழில்நுட்பப் புரட்சியைத் தக்கவாறு பயன்படுத்திக்கொள்ளத் தவறிவிடும் நாடுகள் பின்தங்கிய நாடுகளாகவே இருக்கும் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டது. ஆனால், இன்று அந்நிலை மாறி எந்தவொரு நாடு இளைஞர்களின் ஆற்றலைப் பயன்படுத்தத் தவறுகின்றதோ அல்லது திட்டமிடாமல் தவறான வழிகளில் பயன்படுத்திட முயலுகின்றதோ அது வளர்ந்த நாடுகளின் பட்டியலை எட்டிப் பிடிக்க இயலாது என்பதும் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் பயணிக்க முடியாது என்பதும் வெட்ட வெளிச்சமாகிறது.
எதிர்காலத் தலைமுறையின் தூண்களாகக் கருதப்படும் இளைஞர்கள் சமூகம், மக்கள், நாடு ஆகியவற்றின் மீது அக்கறையுடனும் ஈடுபாட்டுடனும் செயல்பட்டால் சமூகச் சீர்கேடுகள் குறைந்து வளர்ச்சிக்கான நேர்மறைச் சூழல் உருவாகும். இளைஞர்கள் தங்களது தனித் திறன்களை தயக்கமின்றி வெளிப்படுத்தி வளர்ச்சிக்கான சூழலை உருவாக்கிடவும் அதனைத் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான வழிகளில் பாதுகாத்திடவும் சில மேம்பாட்டு நடவடிக்கைகள் அவசியமாகின்றன. அவை:
இளைஞர்களை இலக்கு சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபட வைத்தல்
வளர்ச்சியை முன்னெடுக்கும் சமூக நிகழ்வுகளில் பங்கேற்கச் செய்தல்
மாற்றங்களை முன்னெடுக்கும் கல்வியை வழங்குதல்
சரியான முடிவுகளைப் பின்பற்றிட வலியுறுத்துதல்
பாரபட்சமின்றி செயல்பட அறிவுறுத்துதல்
சுய கட்டுப்பாடு, ஒருங்கிணைந்த செயல்பாடு, புரிந்து செயல்படுதல் போன்ற திறன்களை வளர்த்தல்
சமூகம் மற்றும் வளர்ச்சியின் பரிமாணங்கள் பற்றிய புரிதலை உருவாக்குதல்
புத்தாக்க முயற்சிகளுக்குத் தேவையான களம் அமைத்துத் தருதல்
இன்றைய இளைஞர்களைப் பண்படுத்தும் பணியை குறிப்பிட்ட சிலருக்கு ஒதுக்கிவிட்டு மற்றவர்கள் வேடிக்கை பார்க்க இயலாது. நம் பங்கிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். உலக நாகரிகத்தின் சிகரத்தைத் தொட்ட ரோமானியப் பேரரசின் வீழ்ச்சிக்கான காரணங்களாக இளைஞர்கள் ஆடம்பரங்களிலும் கேளிக்கைகளிலும் மூழ்கி அறிவுசார் சிந்தனைகளையும் உழைப்பையும் இழந்ததுதான் என்று வரலாறு சுட்டுகின்றது. எனவே தற்காலச் சூழலில் இளைஞர் சக்தி எந்த நிலையில் இருக்கின்றது? எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது? என்பதில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்.
நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இளைஞர்கள் தங்களின் தனித் திறன்களை இழந்துவிடாமலும் அல்லது தவறான வழிகளில் பயன்படுத்தி விடாமலும் இருக்கும் வகையில் திறன் மேம்பாடு மற்றும் முறையான கண்காணிப்பு தொடரும் பட்சத்தில் அவர்கள் வளர்ச்சிக்கான மாற்று சக்திகளாக அடையாளம் காணப்பட்டு திறன்மிகு சமூகத்தை உருவாக்க முடியும். அதற்கு அரசுகள், மக்கள், சமூக அமைப்புகள் மற்றும் இளைஞர் மேம்பாட்டு இயக்கங்கள் ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியமாகும்.
இளைஞர்களே! நீங்கள் எதற்காக விளக்கில் விழும் விட்டில் பூச்சிகளாய் உங்கள் வாழ்வையே அழிக்கின்றீர்கள்? நீங்கள் சாதிக்கப் பிறந்தவர்கள். உங்கள் வாழ்க்கை உங்கள் கைகளில், வாழ்வில் வரும் தடுமாற்றம் மாற்றத்தை விளைவிக்கும். பார்க்காது அடி வைக்க இது பூக்கள் நிறைந்த பாதை(உலகம்) அல்ல, மாறாக முட்கள், வலிகள், சோதனைகள் அடங்கிய பாதை. இந்த பாதையை கடக்கும் சக்தி இளைஞர்களே உங்களுக்கு உண்டு. இவ்வுலகில் உங்கள் இலட்சியத்தில் தடுமாற்றம் இல்லாமல் போராடுங்கள் வெற்றி நிச்சயம்.
உசாத்துணைகள்:
Journal of Instructional Psychology
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.