மற்றவர்களை விட எழுத்தாளர்களிடம் சகமனிதநேயம் அதிகம் இருக்கும் என்று நம்புவதும், அதிகம் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதும்கூட ‘அன்றாடத்தி லிருந்து அதீதம்’ தானோ – தெரியவில்லை. ஆனால், பாழாய்ப்போன மனது அப்படியே எதிர்பார்க்க, நம்ப பழகிவிட்டது. ஒவ்வொரு முறை அந்த எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் பொய்க்கும்போதும் நிறையவே வலிக்கிறது.

மேகங்களின் குரல் – அன்றாடத்திலிருந்து அதீதம் என்ற தலைப்பில் எழுத்தாளர் ஜெயமோகன் ஆனந்தவிகடனில் எழுத ஆரம்பித்திருக்கும் தொடரை இன்னொருவருக்கு வாராவாரம் படித்துக்காட்டிக்கொண்டிருக்கிறேன். இந்த வாரம் 10.06.2026 தேதியிட்ட விகடனில் தொடரின் 4வது அத்தியாயம் இடம்பெறுகிறது.

மருந்துகளை நம்பாமல் ‘ஹீலர்’ போன்றவர்களை நாடிச் செல்வது எத்தனை அபத்தம் எனத் தொடங்கி ‘டன்னிங்-க்ரூகர் விளைவு என்றால் என்ன என்று எடுத்துச்சொல்லி, ‘ஒன்றைப் பற்றி எந்த அளவுக்கு நமக்குக் குறைவாகத் தெரியுமோ அந்த அளவுக்கு அதைப் பற்றிய உறுதியான நம்பிக்கை நமக்கு உருவாகிறது’ என்று அடிக்கோடிட்டுச்சொல்லி, ‘மதம் உருவாக்கும் மூட நம்பிக்கைகள், அதேபோல் பகுத்தறிவாளர்களுக்கும் முற்போக்காளர்களுக் கும் அவர்களின் கொள்கைகள் சார்ந்தும் தலைவர்கள் சார்ந்தும் இதே அளவுக்கு மூர்க்கமான மூடநம்பிக்கை இருப்பதைக் காணலாம்’ என்று கூறும் வரை கட்டுரை தர்க்கபூர்வமானதாக, நேர்மறையாக இருக்கிறது. ஆனால், ‘எந்த அளவுக்கு ஒன்று தெரியாமலிருக்கிறதோ அந்த அளவுக்கு நம்பிக்கை உறுதியாக இருக்கிறது. அறியாமை அளிக்கும் தன்னம்பிக்கை என்று இதைச் சொல்லலாம்’ என்று கூறும் எழுத்தாளர் கட்டுரையின் இறுதிப்பகுதியில் பார்வைக் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் குறித்து எழுதியுள்ளவை கட்டுரையில் அதுவரை அவர் பிறரிடத்தில் உள்ள அறியாமை குறித்து அவர் சுட்டிக்காட்டியிருக் கும் குறைகள் அனைத்தையும் அவருக்கும் உரித்தாக்குகின்றன.

முதலில் கட உபநிடதத்திலிருந்து அவர் எடுத்துச்சொல்லியிருக்கும் பார்வைக் குறைபாடுடையவர்கள் குறித்த உவமையே தேவையற்றது. இந்துமதம் என்றில்லை – எல்லா மதங்களிலுமே , அவற்றின்பாற்பட்ட எல்லா சமூகங்களி லுமே உடற்குறைபாடு என்பது பாவ-புண்ணியங்களோடு தொடர்புடையதாகப் பார்க்கப்பட்டிருக்கிறது. அதிலிருந்து நாம் வெகுதூரம் வந்தாயிற்று. எத்தகைய புனிதப்பிரதியானாலும் சரி, நல்லதை எடுத்துக்கொண்டு வேண்டாததைக் கடந்து போவதுதான் விவேகம். கட உபநிடதத்திலிருந்து மேற்கோள் காட்டவேண்டிய தேவையென்ன?

கட உபநிடதத்தில் இப்படி சொல்லப்பட்டிருக்கிறதாம்:

"தங்களை மிகவும் புத்திசாலிகளாகவும், அறிவாளிகளாகவும் நினைத் துக்கொண்டு, அறியாமை என்னும் இருளில் மூழ்கியிருக்கும் மூடர்கள் கண் தெரியாதவர், கண் தெரியாதவர்களை வழிநடத்திச் செல்வது போல, பலவிதமான துன்பங்களுக்கு ஆளாகிச் சுற்றிக் கொண்டிருக்கின்றனர்"

‘கட உபநிடதத்தில் உள்ள இந்த உவமை மிகவும் புகழ்பெற்றது என்றும், அதை பின்னர் மூவாயிரமாண்டுகளில் இந்தியா முழுக்க ஏராளமான நூல்களில் திரும்பத் திரும்பக் காண முடியும்’ என்று சொல்லும் எழுத்தாளர் ‘

"ஆனால், இத்தனை ஆண்டு களில் பார்வைக்குறைபாடுடைய மாற்றுத்திறனாளி கள் எத்தனையோ முன்னேறிவிட்டனர், சாதித்துவிட்டனர் ‘ என்று கட்டுரையின் ஓரிடத்திலும் சொல்லவில்லை.

மேலும், ‘கண் தெரியாத ஒருவர் கண் தெரியாத இன்னொருவரால் எப்படி வழிநடத்தப்பட முடியும்? இருவரும் குழியில் தான் விழுவார்கள்’ என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். நெரிசலான வீதிகளில் தன்னந்தனியாகவும் ஒருவர் முழங்கை மற்றவர் பிடித்துக்கொண்டு இரண்டு மூன்று பேராகவும் பார்வைக் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் தினசரி கல்விசாலைகளுக்கும், பணியிடங் களுக்கும் செல்வதைப் பார்த்ததில்லை போலும்.

மேலும், “கண் தெரியாத ஒருவர் பேசுவது கண் தெரியாத இன்னொரு வருக்கு மிகச் சரியாகப் புரியும். கண் தெரியும் ஒருவர் சொல்வதை கண் தெரியாதவர் கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான் புரிந்துகொள்ள முடியும்”, என்கிறார்.

“இதேதான் எல்லாவற்றிலும். நாம் எளிதாகப்புரிந்துகொள்ளும் ஒன்று நமக்கு அறிவை அளிக்காது. அது நமக்குத் தெரிந்ததை நம்மைப் போன்ற ஒருவர் நம்மிடம் சொவதுதான். நாம் ஒன்றை உண்மையில் அறிய வேண்டுமென்றால் அதை நோக்கி நாம் வளர்ந்தும் விரிந்தும் சென்றடைய வேண்டும்’ என்று தான் சொல்ல விரும்பும் கருத்தைச் சொல்ல தேவையில்லாமல் பார்வையற்றோரை உவமையாக்குகிறார்.

                                                                       - எழுத்தாளர் ஜெயமோகன் -

பார்வைக்குறைபாடுடைய ஒருவர் பேசுவது பார்வை தெரியாத இன்னொருவருக் குக் கச்சிதமாகப் புரியுமாம். அப்படி உறுதியாகச் சொல்ல முடியுமா? இருவரும் வெவ்வேறு மொழிகளில் பேசுபவர்களாக இருந்தால்? பார்வையற்றவருக்கும் பார்வையுள்ளவர்களுக்கும் இடையே நிகழும் உரையாடல்களில் சைகைகள்தான் புரிதலுக்கான இடைவெளிகளை உருவாக்கும். சக மனித மரியாதையுடன் பார்வைக்குறைபாடுடையவர்களிடம் உரையாடும்போது இந்த இடைவெளியை எளிதாகக் கடக்க முடியும்.

இந்த உலகம் எல்லோருக்குமானது. INCLUSIVE EDUCATION, INCLUSIVE GOVERNANCE போன்றவை மேம்பட்ட சமுதாயத்தை நிர்ணயிக்கும் அளவுகோல்கள். SURVIVAL OF THE FITTEST என்று பேசுவது சுலபம். ஆனால், யார் FITTEST என்ற கேள்விக்கான பதில் எப்போதும் ஒன்றாக இருப்பதில்லை.

இன்றுவரை மாற்றுத்திறனாளிகளுக்கான அரசியல், சமூகரீதியான சமத்துவம் எட்டாக்கனியாகவே உள்ளது. அதில், இதுபோன்ற கருத்துகள் – எனக்கு பார்க்குந் திறன் இருப்பதால் நான் மேலானவன் என்ற ‘பாவம்’ அறியாமையில் விளைந்ததே. இன்று மூக்குக்கண்ணாடி போட்டுக்கொண்டிருப்பவர்கள் எல்லோருமே கிட்டப் பார்வை, தூரப்பார்வை, கண்புரை போன்ற கண்சார் குறைபாடுகளுக்கான சிகிச்சையும், மூக்குக்கண்ணாடி போன்றவையும் கண்டுபிடிக்கப்படவில்லையென் றால் பார்க்குந்ந்திறன் குறைந்தவர்கள்தானே.

இன்று பார்வைக்குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் கணினியைத் திறம்படக் கையாள்கிறார்கள். இலக்கியம் படைக்கிறார்கள். ஆசிரியர் தொழிலில் சிறப்பாகப் பணியாற்றிவருகிறார்கள்.

மாற்றுத்திறனாளிகளுக்கான அரசியல்- சமூகஞ்சார் சமத்துவம் இன்றுவரை கிடைக்காத நிலை. சட்டசபையிலோ, பாரளுமன்றத்திலோ அவர்களுக்கான பிரதிநிதித்துவம் அறவேயில்லாத நிலை இதில், லட்சக்கணக்கானோர் படிப்பதாகக் கூறப்படும் ஆனந்தவிகடன் போன்ற வெகுமக்கள் இதழில் இப்படிப்பட்ட கருத்துகள் இடம்பெறுவது பார்வையற்றோர் குறித்த எத்தனை எதிர்மறையான பார்வையை, அணுகுமுறையை ஏற்படுத்தும் என்று சம்பந்தப்பட்டவர்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் பேசும் பகுதி என்று எந்த அச்சு – மின் இதழ்களிலும் தொடர்ந்தரீதியில் ஒதுக்கப்படுவதில்லை. எதுவுமே பேசாமல் கடந்துபோய்விடுவதைவிடக் கொடுமை இப்படி எதிர்மறையான கருத்துகளை போகிற போக்கில் பரப்புவது.

நான் சார்ந்திருக்கும் பார்வையற்றோருக்கான நன்நல அமைப்பான WELFARE FOUNDATION OF THE BLIND இன் முத்திரை வாசகம்: WE NEED EMPATHY; NOT SYMPATHY

திரு.ஜெயமோகனின் மேற்படி ஆனந்தவிகடன் கட்டுரையின் நிறைவுப்பத்தி கீழே தரப்பட்டுள்ளது:

“ஆனால், நம்மவர்கள் ஒரு கட்டத்தில் வளர்ச்சியையும் விரிவையும் நிறுத்தி விடுகிறார்கள். தாங்கள் நிறைந்துவிட்டதாக எண்ணிக்கொள் கிறார்கள். எது தனக்குப் புரிகிறதோ, அதை உண்மை என நினைக்கிறார்கள். அதையே உண்மை என நினைக்கிறார்கள். கட உபநிடதத்தின் அந்தப் பாடலில் உள்ள மூன்று வார்த்தைகள் ஒரு மந்திரம் போன்றவை. ‘அந்தோனைவ நீயமானா யதாந்தா’ -விழி யிழந்தோன் விழியிழந்தோனால் நடத்தப்படுகிறான். அப்படி வழிநடத் தப்படுபவன் அறியாமைக்கே உரிய அபாரமான தன்னம் பிக்கை கொண்டிருக்கிறான். அதை, பிறர் உடைக்க முடியாது. அவனே உள்ளிருந்து உடைத்துக்கொண்டால்தான் உண்டு. அவர்களை அதே பாடல் ‘ஸ்வயம்தீரா’ என்று சொல்கிறது. தன்னைத்தானே அறிஞர்கள் என எண்ணிக்கொள்கிறவர்கள்."

மேற்கண்ட வரிகள் மற்றெல்லோரையும் விட திரு.ஜெயமோகனுக்கு மிகவும் பொருந்துவது என்றே சொல்லத்தோன்றுகிறது.

ஆனந்தவிகடன் அலுவலகத்திற்கு எதிரில் போய் எதிர்ப்புக்குரல் எழுப்பலாமா என்று ஆலோசிக்கப்பட்டபோது பார்வைக்குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளில் ஒருவர் வேண்டாமென்று சொன்னார். “சிந்திக்கத் தெரிந்த மனிதர்களின் மனங்களில் சகமனிதர்களைப் பற்றிய புரிதல் இயல்பாகத் தோன்ற வேண்டும். எழுத்தாளர்கள்கூட குறைந்தபட்ச சகமனிதநேயம், புரிதல் இல்லாமல் இப்படி எழுதுவது மிகுந்த வருத்தமளிக்கிறது”, என்று அவர் சொன்னது மிகவும் உண்மை.

இன்று அரசுக்கல்லூரியில் பிரின்ஸிபலாக இருக்கும் கோ.கண்ணன் ஒரு சிறந்த கவிஞரும் கூட. அவருடைய ஓசைகளின் நிறமாலை கவிதைத்தொகுப்பில் இடம்பெற்ற கவிதை ஒன்று தவிர்க்கமுடியாமல் நினைவுக்கு வருகிறது:

தடயம் - கோ.கண்ணன்

காவியம் பாடி காலம் வென்றனர்
எம் முன்னோர்.
அலட்சியப்படுத்திய
அறிவீலியின்
முகத்திரையைக் கிழித்ததாய்
சொல்லப்பட்டனர்
எம் மூதாதையர்.
எம் ஞான குருவோ எம்
அறிவுத் திறவுகோலுக்காய்
அறுபது ஆண்டு
அகிம்சைப் போர் புரிந்தார்.
அளவில்லா புகழ் கொண்டு
அறிவால் வென்றார்
மூவாசல் கதவுகள் அடைபட்டும்,
எம் மூதாட்டி விரல் வழி உலகளந்தார்;
வினோதங்களின் வினோதமாய்த் திரிந்தார்.
இன்று எம் சோதரர்
இமயத்தில் கால் பதித்து
பனி கண்டத்தே பவனி வருகின்றனர்.
சக மனிதர்க்குச் சமமாய் நாங்களும் அமர்ந்திருக்க
இன்றும் சித்தரிக்கப்படுகிறோம்.
துந்தனா சகித தெருப் பாடகராய்,
திருவோட்டோடு.
காட்சிக் கூடங்களில்
கண்காட்சிப் பொருள் ஆக்கப்படுகையில்
எப்படி
எங்கே
தேடி மீட்பது
எமக்கான உண்மைத் தடயத்தை?

'காசி' பட பாதிப்பால் எழுதப்பட்டது என்று தனது பின்குறிப்பில் தெரிவித்திருக்கிறார் கவிஞர் கோ.கண்ணன்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

* டிஜிட்டல் ஓவியம் - சாட்ஜிபிடி வழி வநகி -


பதிவுகள்

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்