[படகர்களின் ‘கரு ஹரசோது’ சடங்கு]

* கட்டுரையாளர்: முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை. -


செயற்கை நுண்ணறிவின் ஆளுகையில் உலகம் உழலுகின்ற இன்றும் இயற்கைகென்று மாறாத இயல்புண்டு; தரமுண்டு. இதை உயிரிகளால், குறிப்பாக மனிதனால் ஆக்க முடியாது. ஆக்க முயற்சித்தாலும் அதன் தன்மை இயற்கையில் கிளைத்ததுபோல் இராது எனும் கோட்பாடு உயிர்த்திருக்கிறது. இக்கோட்டை நன்னூலாரின் “இயற்கைப் பொருளை இற்றெனக் கிளத்தல்” (நன். சொல். நூ. 404) எனும் சூத்திரத்தோடு ஒப்புநோக்கி மேலும் விளங்கிக்கொள்ளலாம். இயற்கைசார் பயன்பாட்டுநிலையார்ந்து மற்றெல்லா உயிரிகளுக்கு இயற்கையிலேயே விரவியிருந்த சூழலியல் சமநிலைப் பேணலிருந்து பகுத்தறியும் அறிவைக்கொண்ட மனிதன் பெரிதும் விலகியிருந்தான். அவனின் மனமானது விலங்குநிலை மனதிலிருந்து நனவிலிநிலை, நனவுநிலை என்று பரிணாம வளர்ச்சியுற்றது மானுட சமூகத்திற்கு ஏற்றம் தந்தாலும் சூழல்சார்ந்து பெருமளவில் சுயநலத்தையே விளைத்தது எனலாம். ஆனால், தன் வாழ்வியல் தகவமைப்பில் இயற்கையை நன்றாகப் புரிந்துகொண்ட இனக்குழு சமூகங்களிடையே இயற்கை எல்லோருக்குமானது எனும் சூழலியல் சமநிலைக் குறித்த தெளிவும், பிரஞ்ஞையும் மிகுந்திருந்தது. இயற்கையின் துணையின்றி வாழவியலாது எனும் தெளிவிருந்தது. அது அடுத்த தலைமுறைக்கும் செல்லவேண்டுமென்ற அக்கறையிருந்தது எனலாம்.

இயற்கையை உய்த்துணர்ந்து அதை வணங்கவும், வசப்படுத்தவும் இனக்குழு சமூகங்கள் உருவாக்கிய சடங்குகள் சூழல் பன்மியத்தையும், பேணலையுமே பெரிதும் வலியுறுத்துகின்றன. அதிலும், அச்சடங்கியல்சார்ந்த வாய்மொழி வழக்காறுகளின் தலைநோக்கமும் அதுவாகவே இருந்தது எனலாம். அவ்வகையில், நீலகிரியில் வாழ்கின்ற படகர் இனமக்களின் மரபார்ந்த சடங்கான “கரு ஹரசோது” எனும் இறப்புச் சடங்கும் சூழல் சமநிலையை அறிவுறுத்தலையும், பேணுதலையும் அடிப்படையாகக் கொண்டது. இந்தச் சடங்குசார்ந்த புரிதலுக்குப் படகர்கள் குறித்த சிறு அறிமுகம் அடிப்படையானதாகும்.

நீலகிரி குறிஞ்சி நிலமாகும். இங்கு வாழ்ந்துவரும் படகர்கள் யுனெஸ்கோவால் உலகப் பூர்வகுடிகளாக அங்கீகரிக்கப்பட்டவர்கள். இவர்களின் வாழ்வியல் பல்வேறு தனித்த கூறுகளை உள்ளடக்கியது. குறிஞ்சி, முல்லைநில வாழ்வியலோடு பெரிதும் தகவமைந்த இவர்கள் நீலகிரியின் வேளாண்குடிகள் என்றளவில் மட்டும் ஆய்வாளர்களால் சுருக்கப்பட்டவர்கள். ஆனால், சில நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து நீலகிரியின் மலைபுல வேளாண்மையில் தாக்கத்தைச் செலுத்திவரும் இவர்களின் வாழ்வியலில் வேளாண்மை என்பது ஒரு பரிமாணநிலையே. ஆனால், இவர்களின் ஆதி வாழ்வியலானது எருமை மந்தைகளோடு தொடர்புடையது. இதை நிறுவ அவர்களின் தொல்வாழ்வியல் சார்ந்து பல்வேறு கூறுகள் இருந்தாலும் இங்கு, இந்த ஆய்வோடு தொடர்புடைய இரண்டு சான்றுகள் முன்வைக்கப்படுகின்றன. முதலாவது அவர்களின் ‘படகர்’ எனும் பெயர்.

அரசு ஆவணங்களில் ‘படகர்’ என்றும், பேச்சு வழக்கில் ‘படுகர்’ என்றும் வழங்கப்படும் இவர்களின் பெயராக்கமானது ‘பண்டா’ எனும் சொல்லை அடிப்படையாகக் கொண்டமைந்தது எனலாம். அதாவது, ‘பண்டுகா’ எனும் சொல்லே ‘படுகா’ என்று மருவியதாகக் கொள்ளலாம். இந்தப் பெயரின் காரணத்தை நோக்கும்போது, படகர்களின் மொழியான ‘படுகு’ மொழியில் ‘பண்டா’ என்பதற்கு எருமை மந்தை என்று பொருள். அதாவது, எருமை மந்தைகளைப் பேணுதல், உடையவராக இருத்தல் எனும் அடிப்படையில் இவர்கள் இப்பெயர் பெற்றிருப்பது நோக்கத்தக்கது. இவர்தம் வாழ்வியலை ‘பண்டா – பதுக்கு’ எனும் இரண்டு வார்த்தைகளில் அடக்கிவிடலாம். ‘பதுக்கு’ என்பதற்கு படுகு மொழியில் வாழ்க்கை என்று பொருள். அதாவது, எருமை மந்தைப் பேணலே வாழ்க்கை என்பதை இவை உணர்த்துகின்றன. இதை, இவர்களின் மரபார்ந்த சடங்குகள் பலவும் மெய்ப்பிக்கின்றன. அதில் இன்றியமையான ஒன்று “கரு ஹரசோது” எனும் சடங்காகும்.

கரு ஹரசோது 

படகர்களுக்கு உருவ, கோயில் வழிபாடு கிடையாது. அதேபோல, மறுபிறப்பு நம்பிக்கை, ஜோசியம் பார்த்தல் போன்றவைகளும் இல்லை. இவர்களின் மரபார்ந்த வழிபாட்டு முறையானது இயற்கை, மூதாதையர்களை அடியொற்றியே விளங்குகின்றன. நீர்நிலை, அடர்வனம், மலை போன்ற இயற்கைசார் இடங்களும், தம் மூதாதையர் வசித்த வீடுகளுமே இவர்களின் வழிபாட்டிடங்கள். வீடுகளை “மநெ” என்று அழைக்கும் இவர்கள் தம் மூதாதையர்கள் வாழ்ந்த வீடுகளை ‘தெவ்வ மநெ’, ‘தொட்ட மநெ’, ‘ஹெத்தெ மனெ’, ‘முத்துரு மனெ’ என்றழைக்கின்றனர். இன்றும் இவர்களின் விழாக்கள் முழுதும் தம் முன்னோர்கள் மேற்கொண்டுவந்த சடங்குகளாகவே திகழ்கின்றன. இவர்களின் வாழ்க்கை வட்டச் சடங்குகளும் இவர்தம் மூதாதையரோடும், இயற்கையோடும் பின்னிப்பிணைந்தவை.

படகர்கள் இறப்பினைத் தீட்டாகக் கருதுவதில்லை. இவர்களின் மொழிவழக்கில் தீட்டினைக் குறிக்கின்ற சொல்லே கிடையாது என்பது நோக்கத்தக்கது. இறப்புச் சடங்கினை இவர்கள் ஓர் வழிபாட்டினைப் போலவே கொள்கின்றனர். இறப்பினைச் ‘சாவு’ என்றும், உயிரினை ‘உசுரு’, ‘பெரணா’ என்றும், உயிர் நீங்கிய உடலை ‘ஹெணா’, ‘கட்டெ’ என்றும் இவர்கள் வழங்கிவருகின்றனர். இதில் ‘சாவு’, ‘உசுரு’, ‘கட்டெ’ என்ற சொற்கள் இவர்களின் தொல்வழக்காக, சங்கச் சொற்களாக இருந்தாலும், இது பரவலாக எல்லோராலும் பயன்படுத்தப்படுபவையாகத் திகழ்கின்றன. ஆனால், ‘பெரணா’, ‘ஹெணா’ எனும் சொற்கள் இவர்களுக்குரிய தனித்துவமானவைகளாக விளங்குகின்றன. இச்சொற்களை மேம்போக்காகக் காணும்போது பிராணன், பிணம் என்ற சொற்களின் மருஉவாக தெரிந்தாலும், இவை அப்படியல்ல. இவற்றை ஆழமாக ஆராய்ந்தால், இவ்விரு சொற்களும் சூழல் சமநிலையோடு தொடர்புடையன.

“பே” என்பது உயிர், ஆதி, மூலம் போன்றவற்றைக் குறிக்கின்ற படுக ஓரெழுத்து பல்பொருள் ஒருமொழியாகும். இதையொட்டியே ‘பெரணா’ எனும் சொல் உருவாகியுள்ளது எனலாம். உயிரின் (பே) இயக்கம் எனும்நிலையில் இது இப்பெயர் பெறுகின்றது. இங்கு உயிரைக் குறிக்கின்ற இச்சொல், இவர்களின் மரபார்ந்த மற்றொரு சடங்காகக் திகழும் “சக்கலாத்தி” எனும் சடங்கின் ஓர் அங்கமாக விளங்கும் “பே இட்டு இடோது” எனும் தம் மூதாதையருக்குப் படையலிடும் நிகழ்வில் மேற்சுட்டிய முப்பொருளையும் குறிக்கின்றது. இயங்கியல் நோக்கில் இச்சொல்லானது ‘எஞ்சி நிற்பது’ எனும் உரிபொருளைக் கொண்டது. இதை, இவர்கள் நீர்பாவிய மோரினைக் குறிக்கும் ‘பேரெ’ எனும் சொல்லோடு ஒப்புநோக்கி மேலும் விளங்கிகொள்ளலாம். அதாவது, பாலிலிருந்து எல்லாவற்றையும் எடுத்தபிறகு எஞ்சி நிற்பது என்றநிலையில் ‘பேரெ’ என்பது பொருள் பெறுவதைப்போல, இயற்கையளித்த வாழ்வில் நிலைத்திருப்பது, எஞ்சிநிற்பது எனும் நிலையில் மேற்சொன்ன மூப்பொருளையும் இச்சொல் ஆள்கிறது.

உயிர்நிலையில் சூழலியல் பொருள் தரித்ததாக ‘பெரணா’ எனும் சொல் விளங்குவதைப்போல உடல்நிலையில் ‘ஹெணா’ எனும் சொல் திகழ்கிறது. அதாவது ‘ஏ’ எனும் படுகுச் சொல்லை அடியொற்றிய இது, உயிர்ப்பில் உடல் தரித்திருந்த ஆறறிவு ஓரறிவாகக் குறைந்து எஞ்சி நிற்பது எனும் பொருள்படுகிறது. இந்த ‘ஏ’ என்பது ஒன்று, உறவு என்னும் பொருள்களைத்தரும் பல்பொருள் ஒருமொழியாக விளங்குகின்றது. மேற்கண்ட இந்த உயிர், உடல்சார்ந்த கூறுகளைச் சூழலியல் சமநிலை நோக்கில் இயக்குவதாக, அவ்வியங்கிலைத் தக்கவைத்திருப்பதாக இந்தக் “கரு ஹரசோது” சடங்கு திகழ்கிறது.

கரு + ஹரசோது என்று பகுபடும் இச்சடங்கின் பெயரானது, இந்தச் சடங்கியல்சார் இயக்கநிலையில் ஒரு பொருளையும், குறியீட்டு நிலையில் பல்பொருள்களையும் தருகிறது. இதில் நிலைமொழியாக நின்ற ‘கரு’ என்பது பல்பொருள் ஒருமொழியாகும். இச்சொல் படுக மொழியில் உயிர், ஆநிரைக் கன்று, மலை போன்ற பொருள்களைத் தருகிறது. இந்தச் சடங்கில் இச்சொல்லானது எருமையின் இளங் கன்றினை முதல் நிலையிலும், உயிர் என்பதை அடுத்த நிலையிலும், மலை என்பதைக் குறியீட்டு நிலையிலும் உணர்த்துகின்றது. அதோடு, ‘ஜன்னிகெ’, ‘கூளி’ போன்ற இச்சடங்கியல் சார்ந்த சொற்களும் நோக்கத்தகுந்தவை. இச்சடங்கின் நோக்கத்தைக் காண்பதற்குமுன்பு அதன் செயல்முறையை அறிந்துகொள்வது அவசியம்.

படகர்கள் எருமையின் கன்றினை ‘கரு’ என்றழைக்கின்றனர். ஆணாயின் ‘கூளி’ என்றும், பெண்ணாயின் ‘ஜன்னிகெ’ என்றும் வழங்குகின்றனர். அதேபோல, வளர்ந்த நிலையிலுள்ள எருமையின் ஆணை இவர்கள் ‘கோணா’ என்றும் பெண்ணை ‘நாகு’ என்றும் அழைக்கின்றனர். எனவே, கன்று நிலையிலுள்ள எருமைகளுக்கு மட்டும், குறிப்பாக இச்சடங்கியல் சார்ந்து மட்டும் இச்சொற்கள் பொருந்துவதாகக் கொள்ளலாம். ஆனால், இன்றைய நிலையில் பசுவின் கன்றுகளையும் இவர்கள் இச்சடங்கார்ந்து இப்பெயரில் அழைப்பதைக் காணலாம். எனவே, இவ்விரு சொற்களும் இச்சடங்கியல் சார்ந்த ஆநிரைகளின் பொதுப்பெயர் என்று துணியலாம்.

இறந்தவரின் சடலத்தை இவர்கள் ‘தொட்ட மநெ’ (தொட்ட – பெரிய (முன்னோர்), மநெ – வீடு) எனும் தம் மூதாதையர்கள் வாழ்ந்த வீட்டின் முற்றத்திலோ, ஊரின் மையத்தில் அமைந்துள்ள இறப்புச் சடங்கினை மேற்கொள்ளும் “அட்டணெ” (அட்டி – எருமைகளை அடைக்கும் இடம், அணெ – எருமைகளை மேய்க்கும் புல்தரை) எனும் பொது இடத்திலோ சூரியன் உதிக்கும் திசைநோக்கி வைத்தப்பின், பெண் இறந்திருந்தால் பெண் கன்றான ‘ஜன்னிகெயை’, ஆண் இறந்திருந்தால் ஆண் கன்றான ‘கூளியை’ அங்கு கூட்டிவந்து இறந்தவரின் வலது கையின் ஆட்காட்டி விரலை அக்கன்றின் மூக்கினுள் திணித்தோ, இறந்தவரின் வலக்கரத்துள் அக்கன்றின் வாலினைத் திணித்தோ இச்சடங்கினை மேற்கொள்கின்றனர். இது இச்சடங்கின் முதல்நிலையாகும்.

அடுத்து ஊரிலுள்ள ஆண்கள் அனைவரும் அச்சடலத்தைச் சூழ, இறந்தவரின் கால்வழியின் முதியவர் தம் பாரம்பரிய உடையான “சீலெ” எனும் மேற்போர்வையைத் தம் இடக்கையின் இடுக்கின்வழியே எடுத்துப் போர்த்தி, சடலத்தின் தலைமாட்டில் நின்று இச்சடங்கார்ந்த சில வாய்மொழி வழக்காறுகளைச் சொல்வார். அப்போது, அவர் தனது வலக்கரத்தின் முன்புறத்தை நீட்டி, ‘செல்க’ என்பதைச் சைகையால் குறிக்கும்விதமாக, கரத்தை முன்னர் அசைத்தவாறே ஒவ்வொரு வாக்கியத்தையும் சொல்வார். அவர் இதை முன்மொழிய, சடலத்தின் கால்பரப்பை மட்டும் விட்டுவிட்டு சூழ்ந்து நிற்கும் மற்றவர்களும் அம்மொழிகளைப் பின்சொல்லியும், உடல்மொழியைச் செய்தும் அதை வழிமொழிகின்றனர். இச்சடங்கின் இந்த வாய்மொழி வழக்காறுகள் இவர்தம் வாழ்வில், இவர்களால் பாவம் என்று கருதப்பட்டவைகளின் பட்டியலாகும். இவர்களின் பண்பாட்டின் செறிவூட்டலாகும். அதாவது, இவையெல்லாம் பாவங்கள், இந்தப் பாவங்களை இந்த ஆன்மா செய்திருந்தால் இந்த எருமையின் சான்றாக அவை நீங்கி, இந்த ஆன்மா தம் முன்னோர்களோடு சேரட்டும் என்பதன் குறியீட்டுச் சொற்களின் கூட்டுத்தொகை இதுவாகும். இச்சடங்கில் இவ்வழக்காறுகளைப் பிறழ்வின்றி தொடர்ந்து மும்முறை கூறவேண்டுமென்பது இவர்களின் மரபு. இது இச்சடங்கின் இரண்டாம் நிலையாகும்.

மூன்றாவது நிலையாக, இச்சடங்கின் முன்னிலையாக விளங்கும் கன்றினை இறந்தவரின் நினைவாக அவ்வூருக்கு நேர்ந்து விடுவதாகும். இச்சடங்குப் பெயரின் வருமொழியாக நிற்கும் ‘ஹரசோது’ எனும் படுகுச் சொல்லிற்கு வாழ்த்துவது, நேர்ந்து கொடுப்பது எனும் இருபொருள்கள் உண்டு. இச்சடங்கில், நேர்ச்சை என்பது முதன்மையானதாகவும், அடுத்த நிலையில் வாழ்த்துவதும் பொருள்களாக விளங்குகின்றன. அவ்வாறு விடப்பட்ட இந்த எருமைக் கன்றுகள் இறந்தவரின் நினைவாக அவ்வூரில் வாழும். அவை இறக்கும்வரை அவற்றை யாரும் சுய பயன்பாட்டிற்குப் பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு செய்வது பெரும் பாவமென்பதும் இவர்களின் மரபு. இந்த ‘ஜன்னிகெ’ எருமையின் பாலினை ஊரிலுள்ள மற்ற எருமைக் கன்றுகள் எவ்வித தடையுமின்றி குடிக்கும். அதாவது, இயற்கை தந்த உயிர் - உடல், இவையிணைந்த வாழ்க்கை, வாழ்வின் பயன், அவ்வியற்கைக்கு நன்றியாய் ஆன்மா உடலைப் பிரிந்தபிறகும் சூழலுக்குப் பயனுடைய வாழ்வினைத் தருதல், எருமையை வைத்துப் பயன்பெற்ற வாழ்வின் இறுதிப் பயனாய் ஓர் எருமையைச் சூழலியல் சமநிலையாக மற்ற எருமைகளின் பயன்பாட்டிற்குத் தருதல், மறுபிறப்பின்மை போன்ற பல்வேறு கூறுகளை உட்செறித்தாக இச்சடங்கு திகழ்கிறது. இச்சடங்கின் இயங்கியல் மட்டுமல்லாது அதார்ந்த வாய்மொழி வழக்காறுகளும் சூழ்நிலை சமநிலையை வலியுறுத்துபவையே. அறுபதற்கு மேற்பட்ட, பல்வேறு வடிவங்களில் நூற்றிற்கு மேற்பட்ட வாக்கியங்களைக் கொண்ட இச்சடங்கின் வழக்காறுகளில், இவ்வாய்வின் அருமைகருதி சூழல் சமநிலையோடு பெரிதும் தொடர்புடைய, தொல்தன்மை வாய்ந்த “கட்டெ ஒப்பெக கை ஆக்கிதது பாப” எனும் ஒற்றை வழக்காறு மட்டும் இங்கு ஆயப்படுகிறது.

படுகு மொழியில் ‘கட்டெ’ என்பது குறிஞ்சி மலரைக் குறிக்கும். ‘ஒப்பெ’ என்பது புதரைக் குறிக்கும். குறிஞ்சியென்பது ஒருவகை புதர்செடியாகும். குறிஞ்சியில் பலவகையான இனங்கள் உண்டு. படகர்கள் பொதுவாகக் குறிஞ்சியை ‘கட்டெ ஊ’ என்றாலும் (‘ஊ’ என்றால் மலர்), இந்த வழக்காறில் வருகின்ற ‘கட்டெ’ என்பது பன்னிரண்டாண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சியைக் குறிக்கின்றது. இந்த நீலக்குறிஞ்சியைக் கொண்டு தம் வயதினைக் கணித்த இவர்கள் இவ்வகைக் குறிஞ்சிச் செடியினை வெட்டியதை, கலைத்ததை (கை ஆக்கிதது – கையை இட்டு கலைத்தது) பெரும் பாவமாகக் கருதுகின்றனர். இந்தவகைக் குறிஞ்சி ஒருமுறை பூத்தபிறகு அதன் விதைகளைத் தக்கவைத்திருக்கும். அதை வெட்டும்போதோ, அதன் இயல்பினைக் குலைக்கும்போதோ அதன் அடுத்த பரிமாணம் குலைகிறது. இது அம்மலருக்கும், அம்மலரினைச் சார்ந்திருக்கும் பல்வேறு உயிரினங்களுக்கும் சூழல், சூழல் சமநிலைச் சீர்கேடாகும். இது ஒருவகையில் உயிரிகளின் ஆரோக்கியம் சார்ந்த ஒன்றாகவும் திகழ்கிறது.

படகர்களிடையே தேன்சார்ந்து ‘ஹெப்பு ஜேனு’ எனும் வழக்காறுண்டு. இது முழுக்க குறிஞ்சியைக் கொண்டு கட்டப்பட்ட தேனைக் குறிப்பது. இது குறுந்தொகை சுட்டும் பெருந்தேனுடன் (குறு. பா.3) தொடர்புடையது. ஆக்க, பயன் குறித்து இத்தகு சிறப்பினை எய்திய இத்தேன்வகை உடல் ஆரோக்கியத்திற்கும், எதிர்ப்புச்சக்தி கூட்டலுக்கும், சில மரபார்ந்த மருத்துவதற்கும் உகந்தது. இப்போது நாம்சந்திந்த பெருந்தொற்றுக் காலம் இத்தேனுண்டு வாழ்ந்த இப்புல மக்களைப் பெருமளவில் பாதிக்காமலிருந்தது நோக்கத்தகுந்ததாகும். சூழலிற்கான அரும் மருந்தையும், அதை தக்கவைக்கும் சூழல் சமநிலை அறிவையும், அறத்தையும் படகர்களின் இந்த வழக்காறு உட்செறித்துள்ளது. அதோடு, இயற்கையின் பயன்பாடானது, சூழலியல் பன்மியமானது எல்லா உயிரிகளுக்கும் சமமானது, அது நீடித்த நிலையான வளர்ச்சியைக் கொண்டுள்ளது; கொண்டிருக்க வேண்டியது எனும் ஆழமான அடிப்படைகளையும் இயற்கையோடு தகவமைந்த படகர்களின் இந்த வாழ்வியல் சடங்கு சுட்டிக்காட்டி, தலைமுறைக் கடத்துகிறது.

துணைநின்றவை

    குறுந்தொகை, நியூ சென்சுரி புக் ஹவுஸ், 2004.

    நன்னூல் சொல்லதிகாரம், மணிவாசகர் பதிப்பகம், 2003.

    டாக்டர் இரா.கு.ஆல்துரை, படகர் தேர் திருப்பத்தி, நெலிகோலு வெளியீட்டகம், நீலகிரி, 2007.

    கோ.சுனில்ஜோகி, நீலகிரி படகர்களின் மரபுசார் பண்பாட்டுப் புழங்கு பொருட்கள், முனைவர் பட்ட ஆய்வேடு, பாரதியார் பல்கலைக்கழகம், 2015.

    முனைவர் கோ.சுனில்ஜோகி, நீலகிரி படகர்களின் சூழலறத்தில் குறிஞ்சி, ஆய்வுக்கட்டுரை, தமிழ்த்தடம் ஆய்விதழ், டிசம்பர் 2022.

    முனைவர் கோ.சுனில்ஜோகி, குறியீட்டியல் நோக்கில் வெள்ளி, ஆய்வுக்கட்டுரை, பதிவுகள் மின்னிதழ், கனடா, 2021.

    திரு. கல்லா கவுடர், வயது 75, ஒரசோலை கிராமம், நேர்காணல்.

மின்னஞ்சல் - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


பதிவுகள்

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்