தொடர்: பயிற்சி முகாம்! அத்தியாயம் ஐந்து: பாம்பு, செண்பகச் சமையல்! - கடல்புத்திரன் -
- எழுத்தாளர் கடல்புத்திரனிடம் ஒருமுறை பேச்சுவாக்கில் 'ஏன் நீங்கள் உங்கள் இயக்கப் பயிற்சி முகாம் அனுபவங்களைப் பதிவு செய்யக்கூடாது" என்று கேட்டேன்.எழுதுவதாகக் கூறிச் சிறு நாவலாக எழுதியுள்ளார். பெயர்களை மாற்றியிருக்கின்றாரென்று தெரிகின்றது. இருந்தாலும் தளத்திலியங்கிய அமைப்பின் பயிற்சி முகாமொன்றின் அனுபவங்களைப் பதிவு செய்திருக்கின்றார். அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது. - பதிவுகள்-
அடுத்த நாளும் இதே பயிற்சிகள் தொடர்ந்தன. விரும்பின தோழர்கள் இன்னொரு முறையும் வெற்றிகரமாகச் செய்து முடித்தார்கள். ஆறுதலாகக் குளித்து கொட்டிலினுள் புகுந்தார்கள். அரசியல் அமைப்பில் உறுப்பினர், ஆதரவாளர் என்ற பிரிவுகள் இருக்கின்றன. ஆதரவாளர் அதிக தளர்வுள்ளவர். விலகப் போகிறேன்; வெளிநாடு போகப் போகிறேன், கல்யாணம் முடிக்கப் போகிறேன்...எனக் கதைத்துப் பேசி இலகுவாக வெளியேறி விட முடியும். உறுப்பினர்கள் வெளியேற முடியா விட்டாலும் தீவிரமான விதி முறைகள் அமுலாக்கல்கள் இல்லை. ஆனால் பின்தளப்பயிற்சி பெற்றவர்கள் தளத்தில் பயிற்சி பெற்றவர்களிற்கு இறுக்கம் காணப்படுகின்றது. இந்த இறுக்கத்தால் அரசியலுக்கும், இராணுவத்திற்குமிடையில் மட்டத்தில் ஒருவகை ஏற்றத்தாழ்வுகள் நிலவுகின்றன. இராணுவத்திற்கு உள்ளேயே தண்டனை வழங்கும் முறையும் இருக்கவே செய்கின்றது. ஒரு முறை, "காதல் கடிதம் கொடுத்தார்" என்ற முறைப்பாடு ஒரு தோழருக்கு எதிராகக் கொண்டு வரப்பட மூன்று மாசங்கள் பணியில் ஈடுபட முடியாது என்ற விலத்தலுடன் மொட்டையும் அடிக்கப்பட்டார். இப்படி பல நிகழ்வுகள் ஏ.ஜி.ஏ (A.G.A) பிரிவுகளிலே நிகழ்ந்துள்ளன. காம்பை விட்டு ஓடியதிற்காக கொட்டிலில் முழங்காலிருக்கும் தண்டனையில் இருத்தி விட்டு உடற்பயிற்சிக்குப் போய் விட்டார்கள். இரண்டு,மூன்று மணி நேரம் யாருமே கொட்டிலினுக்குள்ளே வரவில்லை.சமையல் குழு கவனிக்கவும் இல்லை. தவிர கவனிக்கலாமா என்பதும் தெரியாது.
பாரி வந்த போதே பார்த்தான். சிறுவர்கள் கள்ளம் செய்யப் பயந்து அப்படியே இருந்ததினால் ஒருத்தனுக்கு சிராய்ப்பு போல காயமும், மற்றவனுக்கு தோல் உரிந்து இரத்தம் வடிவது போன்ற நிலையிலும் இருந்தன. உடனேயே இருவரையும் எழுப்பி தண்ணீரால் கழுவிப் பார்த்தான். வலியால் அணுங்கவே பாவமாகப் போய் விட்டது. சமையல் குழுவிடம் தேனீர் போட்டுக் கொடுக்கச் சொல்லிப் போட்டு உடற்பயிற்சித் தளத்திற்கு வந்து சிவா ஆசிரியரிடம் தெரிவித்தான். " திரும்ப பிடித்த போது நிறைய பயந்து போய் விட்டார்கள். வாய் இல்லாப் பூச்சிகள். கட்டுப்பாடுகள் இருக்கட்டும் இப்படி மணிக்கணக்கில் தண்டனை கொடுக்க வேண்டுமா? " எனக் கேட்டான். " மறந்தே போய் விட்டேன் " என சிவா தவறை ஒப்புக் கொண்டார். விஜயனையும், செழியனையும் உடனேயே இருவரையும் சைக்கிளிலே ஏற்றிக் கொண்டு இராசைய்யா பரியாரியாரிடம் அனுப்பினான். கட்டுப் போட்டுக் கொண்ட அந்த தோழர்களிடம் எல்லாருக்குமே அன்பு பிறந்து விட்டது. அதுவரையில் விசாரிக்க முடியுமா ? எனத் தெரியாதிருந்த தோழர்கள் முதலில் சாப்பிட விட்டு விட்டு " ஏண்டா ஓடினனீர்கள் ? " எனக் கேட்டார்கள். " அம்மாவைப் பார்க்க " என்று கண்கலங்கக் கூறிய போது எல்லோருமே நெகிழ்வுக்குள்ளாகி விட்டார்கள். முதலில் இவர்களையே பயிற்சிக்கு எடுத்திருக்கக் கூடாது. " டேய் ,இன்னமும் 15 நாள்கள் தானே இருக்கின்றன. பயிற்சி முடிந்த பிறகு தான் போக வேண்டும் " .இனிச் சொல்லி என்ன பிரயோசனம்?. சிவா ஆசிரியர், பிறகு இருவரையும் பயிற்சியில் ஈடுபடுத்தவில்லை. "பார்த்துக் கொண்டிருந்தாலே போதும். புரிந்து கொள்வீர்கள். காயம் முதலில் மாறட்டும், ஈடுபடலாம் " என்றார். அவர்களாகவே முயன்றால்... செய்ய விட்டும் பார்த்துக் கொண்டார்.