முதல் சந்திப்பு : அமுதா விழா காணும் கலை, இலக்கிய ஆர்வலரும் அரசியல் ஆய்வாளருமான சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன் - முருகபூபதி -
"உரிமைக்கோ அன்றில் விடுதலைப் போராட்டத்திற்கோ வன்முறை நியாயமானதுதானா..? ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதுதானா…? என்ற வாதம் எப்போழுதுமே காலத்துக்கு காலம் மேலோங்கியிருக்கிறது. அப்படியான போரில் நின்ற ஒருவனை விடுதலை வீரன் என்று ஒரு பக்கம் பார்க்கும் அதே சமயம், அதன் மறுமுனையில் அவனை தீவிரவாதி என்று பட்டம் சூட்டுவது சாதாரணம். இது பிரபல்யமாக தென்னாபிரிக்கா ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் சரித்திரத்தில் காணப்பட்டது. தீவிரவாத குற்றவாளியாக காணப்பட்டு 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர் நெல்சன் மண்டேலா. இந்தத் தீர்ப்பை ஏற்றுக் கொண்டு பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அன்று மௌனம் சாதித்தன. தென்னாபிரிக்க கறுப்பர்களுக்கு அவர் விடுதலை கோரினார் என்பது பிழை என்பதனால் அல்ல, அவரது அரசியல் இயக்கம் தீவிரவாதத்தால் அரசை பணிய வைக்க முயன்றது என்பதனாலேயே.
ஆனால், அதே நெல்சன் மண்டேலா பின்னாளில் ஜனாதிபதியாகத் தோன்றி, தன்னை முன்னர் தடை செய்த எல்லா நாடுகளாலும் ஓர் உன்னத மனிதனாக கௌரவிக்கப் பட்டு அழைக்கப்பட்டார். அந்த அளவில்லாவிட்டாலும் ஒரு வகையில் இவை கியூபாவின் காஸ்ட்ரோவுக்கும் சேகுவேராக்கும் பொருந்தும். அவர்கள் இலங்கை வந்தபொழுது தங்கள் நினைவாக மரங்கள் நாட்டிச் சென்றார்கள். அப்போது அவர்கள், வன் முறையாளராக பார்க்கப்படவில்லை. இந்தப் போராட்டங்கள் எல்லாவற்றிலும் எவ்வளவோ கொடூர சம்பங்கள் இடம் பெற்றன. ஆனால், வழிமுறைகள் நோக்கத்தின் அடிப்படையில் நியாயப்படுத்தப்படுகின்றன என்ற சித்தாந்தம் உண்டு. (End Justifies the means)."
இந்த வரிகள் இடம்பெற்ற அரசியல் ஆக்கம் ஒன்றை முன்னர் எழுதியவர் பற்றித்தான் இந்த முதல் சந்திப்புத் தொடரில் எழுதுகின்றேன். அவர்தான் அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் சிரேஷ்ட சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன். கலை, இலக்கிய ஆர்வலர். அத்துடன் அரசியல் ஆய்வாளர். இம்மாதம் அவருக்கு எண்பது வயது பிறக்கிறது. எம்மால் அன்புடன் என்றென்றும் , 'ரவி அண்ணன்' என அழைக்கப்படும் அவரை வாழ்த்திக்கொண்டே இந்த அங்கத்தை தொடருகின்றேன். தொடக்கத்தில் நான் இங்கு குறிப்பிட்ட வரிகளை தான் எழுதிய , ' இந்தியா - ஜாலியன் வாலாபாக் படுகொலையின் பின்னணியில் வன்முறையும் அகிம்சையும்' ! என்ற கட்டுரையில் ரவி அண்ணன் எழுதியிருந்தார்.