ஆளுமைகளை அறிந்துகொள்வோம்: எழுத்தாளர் முனியப்பதாசன்! - வ.ந.கிரிதரன் -
எழுத்தாளர் முனியப்பதாசனின் எழுத்துப்பிரவேசம் 1964இல் கலைச்செல்வி சஞ்சிகை நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது 'வெறியும் பலியும்' சிறுகதை முதற்பரிசு பெற்றதுடன் ஆரம்பமாகியது. கடற் தொழிலாளர் சமூகத்தைப் பின்னணியாகக் கொண்டு படைக்கப்பட்ட சிறுகதை. கலைச்செல்வியின் ஆசிரியரும், பதிப்பாளருமான சிற்பி சரவணபவன் எழுத்தாளர்கள் பலரை உருவாக்கியுள்ளார். அவர்களில் இவருமொருவர்.
இவரது இயற்பெயர் தாமோதரம்பிள்ளை சண்முகநாதன். யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர். யாழ் இந்துக் கல்லூரியின் அருகிலிருந்த ஒழுங்கைப்பகுதியில் வாழ்ந்ததாக அறிகின்றேன். இவரது கதைகள் ஈழநாடு, சுதந்திரன், கலைச்செல்வி, விவேகி போன்ற பத்திரிகை, சஞ்சிகைகளில் வெளியாகின. ஈழநாடு ஆசிரியர் ஹரன் இவரது எழுத்தின்பால் பெரு மதிப்பு மிக்கவரென்றும், அவரே இவரது சிறுகதையொன்றை ஆனந்தவிகடனுக்குக் கொண்டு சென்று கொடுத்ததாகவும், அது விகடனில் முத்திரைக்கதையாக வெளியாகியதாகவும் மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர் ஐம்பதுக்கும் குறைவான கதைகள் வரையில் எழுதியுள்ளதாக ஈழநாடு குறிப்பிடுகின்றது. எழுத்தாளர் செங்கை ஆழியான் அவர் இருபது சிறுகதைகளே எழுதியுள்ளதாகக் குறிப்பிடுவார். அவற்றில் சிலவற்றை எழுத்தாளர் செங்கை ஆழியான் சேகரிக்க , எழுத்தாளர் டொமினிக் ஜீவா தனது மல்லிகைப்பந்தல் பிரசுரமாக வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முற்போக்காளரான டொமினிக் ஜீவா அவர்கள் ஆன்மிகப்போக்குள்ளவரான முனியப்பதாசனின் சிறுகதைகளைத் தனது பதிப்பக வெளியீடாக வெளியிட்டுள்ளதும் முக்கியமானது. இத்தொகுதியை நூலகம் எண்ணிம நூலகத்தில் வாசிக்கலாம்.