இலங்கை அரசியல்: முஸ்லீம் இனவாதமும் - இலங்கையில் தேர்தலும் - மன்சூரின் எடுகோள்களை முன்வைத்து ...! - ஜோதிகுமார் -
1
அண்மையில், தமிழ் தேசியத்தை கட்டுவிக்கும் முயற்சிகளில் சிலதாக, இலங்கையின் வடக்கில் நிகழ்ந்த பின்வரும் நிகழ்வுகளைக் குறிப்பிடலாம்:
1. இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்கக் கோரியமை.
2. தமிழர் தேசியத்தைக் கட்டிவளர்க்கும் பொருட்டு சிவில் சமூகத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு யாழ் கூட்டம்.
3. சாந்தனின் மரணச்சடங்கு.
இவற்றுடன் வேறு பல நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தாலும், இவற்றில் சாந்தனின் மரணச்சடங்கானது, தமிழர் தேசியத்தை முன்னெடுக்கும் அதே சமயம் இந்திய எதிர்ப்பு வாதத்தை தூண்டிவிடும் நிகழ்ச்சிநிரலில் ஒன்றாகவும் அமைந்து போனது. ஆனால் இவையாவும், இறுதியில், எந்தளவில் வெற்றியை எய்தின என்பது கேள்விக்குரியாகவே உள்ளது.
காரணம், மேற்படி நிகழ்வுகளில் பங்கேற்ற மக்கள் தொகையை வைத்துப் பார்க்கும் போது, அது, ஒப்பீட்டளவில், அற்ப சொற்பமாகவே இருந்தது என்பது சில ஆய்வாளர்களின் கணிப்பானது. இதனாலோ என்னவோ அண்மைக்காலங்களில் வீறு குறைந்து விட்ட தமிழ் தேசியத்தைப்பற்றிப் பல்வேறு அறிக்கைகள் வெளிவருவதாய் அமைந்திருந்தன. “தமிழ் தேசியத்தின் அடிப்படைகள் ஆட்டங் காண்கின்றன” என புருஷோத்தமன் தங்கமயிலும் (முரசு: 17.03.2024) “நாம் இனவாதத்திற்கு எதிரான போராட்டத்தை துவங்குவதற்கு முன் எமது மக்களுக்கு எதிரான போராட்டத்தை துவங்க வேண்டியுள்ளது.” என யோதிலிங்கமும் எழுதவேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள் எனலாம். விக்னேஸ்வரன் ஐயாவின் வடமாகாணசபை நாட்டியம் முதல் தமிழரசு கட்சியின் தேர்தல் , குருந்தூர் மலை அரசியல் வரை பார்த்து முடித்துவிட்ட தமிழ்மக்கள், தேசிய அரசியல் பொறுத்து ஒரு விமான பார்வையை கொண்டுள்ளார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.