தொடர் நாவல்: பேய்த்தேர்ப் பாகன் (4) - வ.ந.கிரிதரன்-
அத்தியாயம் நான்கு: பக்கத்து வீட்டுப் பெண்!
மறுநாள் நேரத்துடன் எழுந்து விட்டான் மாதவன். அன்று அவன் நாளை எவ்விதம் கழிக்க வேண்டுமென்று சில திட்டங்கள் வைத்திருந்தான். நண்பகல் வரையில் 'ஒன் லை'னில் வேலை தேடுவது. கல்வித் தகமைகளை இணையத்தில் அதிகரிக்க உதவும் பயிற்சிக் காணொளிகளை, கட்டுரைகளை ஆராய்வது எனத் திட்டமிட்டிருந்தான். தகவற் தொழில் நுட்பத்தில் அவனுக்கு இலவசமாகக் கிடைக்கும், அதே சமயம் பலரால் , நிறுவனங்களால் பாவிக்கப்படும் லினக்ஸ் 'ஒபரேட்டிங் சிஸ்டம்' பற்றிய அறிவை வளர்த்துக்கொள்வது எனத் தீர்மானித்திருந்தான். தகவல் தொழில் நுட்பத்துறையைப் பொறுத்தவரையில் ஒரு தொழில் நுட்பம் பற்றிய அறிவும், அனுபவமும் இருந்தால் அவை போதுமானவை அத்துறையில் வேலையொன்றைப் பெறுவதற்கு என்பது அவனது எண்ணம்.
அதே சமயம் அவனுக்கு ஒரு வலைப்பதிவையும் ஆரம்பிக்க வேண்டுமென்பது நீண்ட காலத்து எண்ணம். அது பற்றியும் இன்று முடிவொன்றினை எடுத்து, அதற்கான அத்திவாரத்தை இன்று உருவாக்க வேண்டுமென்றும் ஏற்கனவே தீர்மானித்திருந்தான். தன் பல்வகைப்பட்ட சிந்தனைகளையும் இணையத்தில் பதிவு செய்வதன் மூலம், வாசிப்பவற்றைப்பற்றிய மற்றும் பல்வகைப்பட்ட சொந்த அனுபவங்களையெல்லாம் அவ்வலைப்பதிவில் பதிவு செய்வதன் மூலம் மனப்பாரம் குறையும், சிந்தனைத்தெளிவு பிறக்கும், வாசிக்கும் ஆர்வம் அதிகரிக்கும். எழுத்தாற்றலும் அதிகரிக்கும். ஓர் எழுத்தாளனாவது அவனது முக்கிய எண்ணமாக இருக்கவில்லை. ஆனால் எழுவதுவதில் ஆர்வம் மிக்கவனாக அவனிருந்தான். அவ்வார்வத்துக்கு வடிகாலாக அவனது எழுத்துகள் இருக்குமென்றும் எண்ணிக்கொண்டான்.