என் எழுத்துலக அனுபவங்கள் (1) - வ.ந.கிரிதரன் -
- எண்பதுகளில் நியூ யோர்க மாநகரத்து வீதி ஓவியர் என்னைப் பார்த்து வரைந்த பென்சில் ஓவியம். -
நேற்று மலை மெய்நிகர் வழி மூலம் எனது எழுத்துலக அனுபவங்களைப் பற்றி உரையாடும் சந்தர்ப்பம் கிட்டியது. நிகழ்வு சிறப்பாக அமைந்திருந்தது. கனடா (டொராண்டோ, மொன்ரியால்), ஆஸ்திரேலியா, இலங்கை பல்வேறு நாடுகளிலிருந்தும் பலர் கலந்துகொண்டார்கள். இந்நிகழ்வைக் கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் ஒழுங்கமைத்து நடத்தியிருந்தது. அவ்வமைப்புக்கு என் நன்றி. இந்நிகழ்வில் கால எல்லை காராணமாக எழுதி வைத்திருந்த குறிப்புகளின் அடிப்படையில் முழுமையாக உரையாற்றியதாகக் கூற முடியாது. முடிந்தவரையில் என் எழுத்துலக அனுபவங்களை விபரித்திருந்தேன். இந்நிகழ்வைச் சாத்தியமாக்கிய கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்துக்கும், தூண்டுதலாகவிருந்த அதன் முன்னாள் தலைவர் எழுத்தாளர் அகணி சுரேஷ் அவர்களுக்கும் நன்றி.
நிகழ்வின் பின் என் எழுத்துலக அனுபவங்களை ஏன் விரிவாக எழுதக்கூடாது என்று தோன்றியதன் விளைவே இக்கட்டுரைத்தொடர். இத்தொடரை என் எழுத்துலக அனுபவங்கள் பற்றி விளக்குவதற்குரிய ஒரு வாய்ப்பாக நான் பயன்படுத்திக்கொள்ள விரும்புகின்றேன். இத்தொடரில் என் வாழ்க்கைப்பருவத்தின் பல்வேறு காலகட்டங்களைப் பற்றிய அனுபவங்களை, அக்காலகட்டச் சிந்தனைகளை எல்லாம் மனந்திறந்து வெளிப்படுத்தலாம் என்று கருதுகின்றேன்.
பொதுவாகவே நான் எழுத்தாளர்களின் எழுத்துலக அனுபவங்களை, அவர்கள் தம் நனவிடை தோய்தல்களை அறிவதற்கு பெரு விருப்பு மிக்கவன். நீங்களும் அவ்விதமான மனப்போக்கு உள்ளவர்களாகவே இருப்பீர்கள் என்பது என் உறுதியான நம்பிக்கை. நிச்சயம் நீங்கள் இத்தொடரை ஆர்வத்துடன் வாசிப்பீர்கள் என்பதும் அவ்விதமானதொரு நம்பிக்கையே.
எப்பொழுதுமே என் உள்ளத்தில் இருப்பு பற்றிய கேள்விகள் மற்றும் , வர்க்கம், வர்ணம், இனம்,மதம்,மொழி, நாடென்று பல்வேறு பிரிவுகளால் ஏற்படும் மானுடரின் வாழ்வியற் பிரச்சினைகள், அவற்றின் விளைவான சவால்கள், துயரங்கள் எல்லாம் சிந்தையிலேற்படுத்திய பாதிப்புகளுக்குரிய வடிகால்களாக,வெளிப்படுத்தும் சாதனங்களாக எழுத்துகளேயிருந்தன. இருப்பு பற்றிய கேள்விகள், மானுட அக உணர்வுகள் மற்றும் மானுடர் வாழும் சமூக, அரசியல் & பொருளியச் சூழல்களின் பாதிப்புகள் என் எழுத்துகளில் விரவிக் கிடப்பதை நீங்கள் காணலாம். நான் அறிவியலூடு இருப்பு பற்றிய தேடல்களை மேற்கொள்பவன்.