முதல் சந்திப்பு: அவுஸ்திரேலியாவிலிருந்து தமிழிலும் ஆங்கிலத்திலும் புனைவிலக்கியம் படைக்கும் தேவகி கருணாகரன் ! - முருகபூபதி -
நீர்கொழும்பில் முன்னர் தமிழர்கள் வாழ்ந்தார்களா..? என்று இன்றும் கேட்கும் தமிழர்கள் இந்த உலகில் இருக்கிறார்கள். இதுபற்றி ஏற்கனவே நான் தொகுத்து வெளியிட்ட நெய்தல் நூலில் விரிவாக எழுதியிருக்கின்றேன். எனது இந்த முதல் சந்திப்பு தொடரில் இடம்பெறும் எழுத்தாளர் தேவகி கருணாகரனின் பெரிய தந்தையார் சண்முகம் கதிர்வேலு விஜயரத்தினம் ( எஸ். கே. விஜயரத்தினம் ) அவர்கள் 1950 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எங்கள் நீர்கொழும்பூரின் நகரபிதாவாக ( மேயர் ) இருந்தார் எனச்சொன்னால், இக்கால தலைமுறைத் தமிழர்கள் நம்புவார்களா..? அவர் நீர்கொழும்பு கடற்கரை வீதியிலமைந்திருந்த இந்து வாலிபர் சங்க மண்டபத்தில் தலைவராக இருந்தபோதுதான் 1954 ஆம் ஆண்டு விஜயதசமியின் போது எனக்கும் ஏடுதுவக்கி வித்தியாரம்பம் செய்வித்து , விவேகானந்தா வித்தியாலயம் அன்று தொடங்கியது. அவரது தம்பி எஸ். கே. சண்முகமும் புதல்வன் ஜெயம் விஜயரத்தினமும் நீர்கொழும்பு மாநகர சபையில் அந்த மூன்றாம் வட்டாரத்தை பிரதிநிதித்துவம் செய்தவர்கள். 32 தமிழ்க்குழந்தைகளுடன் ஆரம்பமான அந்த வித்தியாலயம்தான் பின்னாளில் அதன் ஸ்தாபகர் விஜயரத்தினம் அவர்களின் பெயரில் வடமேற்கில் இன்றும் ஒரே ஒரு இந்து தமிழ் கல்லூரியாகத் திகழுகின்றது.