கனடாவில் கோவிலூர் செல்வராஜனின் நூல் வெளியீடு - குரு அரவிந்தன் -
தமிழ் வாசகர்கள் மத்தியில் நன்கு அறியப்பெற்ற எழுத்தாளர் கோவிலூர் செல்வராஜன் அவர்களின் நூல்கள் வெளியீட்டு மற்றும் அறிமுகவிழா சென்ற மே மாதம் 25 ஆம் திகதி 2024 அன்று கனடா ஸ்காபறோ நகரில் உள்ள பைரவி நுண்கலை மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது. கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆதரவில் மேற்படி விழாவிற்கு தற்போதைய தலைவரும் கவிஞருமான அகணி சுரேஸ் அவர்கள் தலைமை தாங்கினார்.
மங்கள விளக்கேற்றியதைத் தொடர்ந்து கனடா தேசியப் பண்ணும், தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பெற்றன. அடுத்து நிர்மலா இரத்தினசபாபதி அவர்களின் வரவேற்புரையும், தொடர்ந்து அகணி சுரேஸ் அவர்களின் தலைமை உரையும் இடம் பெற்றன. அவர் தனது தலைமை உரையில் ‘தமிழ் இலக்கிய வளர்ச்சியில் ஆர்வமும், ஈடுபாடும் கொண்டிருக்கும், இவரைப் போன்ற புலம் பெயர்ந்த படைப்பாளிகளை இனங்கண்டு அவர்களது ஆக்கங்களை வெளிக் கொண்டு வருவதில் கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் என்றும் முன்னின்று செயற்படும்’ என்று குறிப்பிட்டார்.
அடுத்து திரு. சாமி அப்பாத்துரை, திருமதி சுகல்யா ரகுநாதன், திரு அ. தேவதாசன், உதயன் ஆசிரியர் திரு. ஆர். என். லோகேந்திரலிங்கம் ஆகியோரது வாழ்த்துரைகள் இடம் பெற்றன. தொடர்ந்து, ‘நல்லது நடக்கட்டும்;’ என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு திருமதி மேரி கியூரி போல் அவர்களும், ‘கிழக்கிலங்கையின் மறைந்த இலக்கிய ஆளுமைகள்’ என்ற கட்டுரைத் தொகுப்புக்கு திரு. தங்கராசா சிவபாலு அவர்களும், இலக்கியத்தென்றல் ‘பொன்விழா மலருக்கு’ சிந்தனைப் பூக்கள் எஸ். பத்மநாதன் அவர்களும், ‘கொத்துரொட்டி’ சிறுகதைத் தொகுப்பிற்கு எழுத்தாளர் இணைய உபதலைவர் திரு. குரு அரவிந்தனும் நயவுரை வழங்கினர்.